இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பாரளுமன்றத்தேர்தல் முறை-எம். ஏ . அச்சிமுகமட் - 1978 ஆம் ஆண்டின் இரண் டாம் குடியரசு யாப்பின் கீழ் பாராளுமன்ற பொதுத் தேர்தலானது விகிதாசார பட்டியல் முறையின் அடிப்படையில் நடைபெறுகின்றது. யாப்பின் 95 வது சரத்தின் முதலாம் பிரிவு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு தேர்தல் மாவட்டங்களைப் பிரிக்கும் எனவும், 96 வது சரத்து இலங்கையை 20க்கு குறையாமலும், 24க்கு மேற்படாததுமான தேர்தல் மாவட்டங் களாகப் பிரித்து அம்மாவட்டங்களுக்குரிய பெயரைச் சூட்டுதல் வேண்டும் எனவும் கூறுகின்றது. 1980 களின் ஆரம்பப்பகுதியில் இருந்து இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்கள் 22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய நிர்வாக மாவட் டங்கள் இணைக்கப்பட்டு யாழ் தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இணைக்கப்பட்டு வன்னித்தேர்தல் மாவட்டமாக ஆக்கப்பட்டுள்ளது. 98 வது சரத்தின் முதலாம் பிரிவு பாராளுமன்றம் 225 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எனவும், இவர்களுள் 196 உறுப்பினர்கள் 22 தேர்தல் மாவ ட்டங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர் எனவும், இவர்களுள் 36 உறுப்பினர்கள் ஒரு மாகாணத்துக்கு நான்கு பேர் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் பிரித்தளிக்கப்படுவர். ஒவ்வொரு மாகாணத்திலுமுள்ள சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் குறைந்தது ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளும் வகையில் இது பகிர்ந்தளிக்கப்படுகிறது. எஞ்சிய 166 உறுப்பினர்களும் மாவட்டங்களில் வாக்காளர்களது விகிதாசாரத்துக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளிக்கப்படும். இதற்காக முழு இலங்கையினது மொத்த வாக்காளர் தொகையை 160 இனால் பிரிப்பதன் ஊடாக தேசிய கோட்டாத் தொகை அல்லது தகைமை பெறு தொகை பெற்றுக்கொள்ளப்படும். அத்தொகையி னால் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங் களினதும் மெத்த வாக்காளர் தொகையை வகுப்பதன் ஊடாக மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய கோட்டாத் தொகை = பதிவு செய்யப்பட்ட இலங்கையின் மொத்த வாக்காளர் தொகை (தகைமை பெறு தொகை) 160 மாவட்டத்துக்குரிய ஆசனம் = மாவட்டத்தின் மொத்த வாக்காளர் தொகை தேசிய கோட்டாத் தொகை இவ்வெண்ணிக்கையோடு மாகாணத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 04 ஆசனங்களில் மாவட்டத்துக்குரிய ஆசனத்தையும் சேர்க்கும் போது கிடைக்கப்பெறுகின்ற ஆசனங்களின் எண்ணிக்கையே அம்மாவட்டத்துக்குரிய மொத்த ஆசனத்தொகையாகும். மீதமாக உள்ள 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் ஊடாக நிரப்பீடு செய்யப்படுவர். விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் யாரும் தனித்துப் போட்டியிட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சி ஒன்றின் மூலம் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றின் மூலமே போட்டியிட முடியும். வேட்பு மனுக்களை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் பெயர்ப் பட்டியல் ஒன்றின் மூலமே தாக்கல் செய்தல் வேண்டும். குறித்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு மூன்றைச் சேர்த்து வரும் எண்ணிக்கையைக் கொண்ட பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படுதல் வேண்டும். இதை முன்னுரிமைப்பட்டியல் என அழைப்பர். அவ்வேட்புமனு மாவட் டத்தின் தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட கட்சியின் செயலாளரினால் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பிரதிநிதியினால் கையளிக்கப்படுதல் வேண்டும். ஒரு சுயேட்சைக் குழுவின் பட்டியல் ஒரு சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்டு அக்குழுவின் தலைவரால் கையளிக்கப்பட வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் கட்சிகளினதும் சுயேட்சைக்குழுக்களினதும் பட்டியலில் உள்ள பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக் களினதும் ஒவ்வொரு வேட்பாளர்க ளுக்குமான இலக்கங்கள் வழங்கப்படும். இம்முறையில் வாக்காளர் ஒருவர் வாக்களிப்பின் போது முதன் முதலில் தான் விரும்பும் கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் சின்னத்திற்கு எதிரே புள்ளடி இடுதல் வேண்டும். அதன் பின்னர் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலிலுள்ள மூன்று வேட்பாளர்களுக்கு தனது மூன்று விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்க வேண்டும். வெட்டுப்புள்ளி :- எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலாவது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் போட்டியில் இருந்து நீக்கப்படும். அதை வெட்டுப்புள்ளி என அழைப்பர். இயைவான வாக்கு:- ஒரு தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் இருந்து வெட்டுப்புள்ளி வாக்குகளை கழித்ததன் பின்வருகின்ற மீதமாகவுள்ள வாக்குத் தொகையே இயைவான வாக்கு என அழைக்கப்படுகின்றது. போனஸ் ஆசனம்:- தேர்தல் மாவட்டம் ஒன்றில் போட்டியிடும் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களில் எந்தக் கட்சி அல்லது சுயேட்சைக் குழு அம்மாவட்டத்தில் அதிக வாக்கைப் பெறுகின்றதோ அக்கட்சிக்கு அல்லது குழுவிற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் வழங்கப்படும். அதை போனஸ் ஆசனம் என அழைப்பர். இப் போனஸ் ஆசனம் அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையிலிருந்தே வழங்கப்படும். விழைதொகை அல்லது கோட்டாத் தொகை:- தேர்தல் மாவட்டம் ஒன்றில் அளிக்கப்பட்ட செல்லுபடியான மொத்த வாக்குகளிலிருந்து வெட்டுப்புள்ளி வாக்குகள் கழிக்கப்பட்டு பெறப்படுகின்ற இயைவான வாக்குத் தொகையை அம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்படவேண்டிய உறுப்பினர் தொகையில் போனஸ் ஆசனத்தை கழித்துவரும் தொகையினால் பிரிப்பதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற தொகை விழை தொகை எனப்படும். இதை பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான ஆகக்குறைந்த வாக்குத் தொகை எனவும் கூறலாம். இவ்வாக்குத்தொகையினால் அம்மாவட்டத்தில் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தாம் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குத் தொகையோடு வகுப்பதன் மூலம்கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் உரிய ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் யார் என்பது அக்கட்சியின் அல்லது குழுவின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அதாவது கூடிய விருப்பு வாக்கைக் கொண்டிருப்பவர்கள் வரிசைப்படி தெரிவு செய்யப்படுவர். உறுப்பினர் பதவி வெற்றிடமாகின்ற போது அப்பட்டியலில் விருப்புவாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ளவர் உறுப்பினராக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்படுவார். தேசியப்பட்டியல்:- 1978 ஆம் ஆண்டு யாப்பின் 14 வது திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் தேசியப் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் 29 பெயர்கள் அடங்கிய தேசியப்பட்டியலை தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். அகில இலங்கை ரீதியாக அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குத் தொகையினை மொத்தத் தேசியப்பட்டியல் தொகையினால் வகுப்பதன் மூலம் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்குரிய வாக்குத் தொகை பெறப்படும். இவ்வாக்குத் தொகையினால் கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் அகில இலங்கை ரீதியாக தாம் பெற்ற மொத்தவாக்குத் தொகையுடன் வகுப்பதன் மூலம் கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்குமுரிய தேசியப் பட்டியல் ஆசன எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாசனங்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையாளர், கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் குறிப்பிட்டு அவ்விடத்துக்கு நியமனம் பெற இருப்பவர்களின் பெயர்களை சிபார்சு செய்யுமாறு கேட்டுக்கொள்வார். இவர்களால் சிபார்சு செய்யப்படுகின்றவர்களே தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். தேசியப்பட்டியலில் பெயரில்லாதவர்களுக்கும் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கும் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டு முறைகளும் உண்டு. நன்றி: தினகரன்
|
No comments:
Post a Comment