Saturday, April 03, 2010

லண்டன் உங்களை வரவேற்கிறது

லண்டன் உங்களை வரவேற்கிறது
-கலையரசன்
-

"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்." பாட்டி காலத்து பழமொழியில் வரும் "சீமை" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், என்று எமது தமிழ் வாத்தியார் சொல்லித் தந்திருக்கிறார். அந்தப் பழமொழி எல்லாம் பிரிட்டிஷ் காலனிக் காலத்து சமாச்சாரம் என்று தான் அப்போதெல்லாம் நினைத்திருந்தேன். நானும் ஏதோ விதிவசத்தால் லண்டன் மாநகரில் தங்கியிருந்த காலத்தில், அது இன்றைக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொன்மொழி என்று தெரிந்து கொண்டேன். முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளின் இன்றைய இளந்தலைமுறை லண்டனை தமது தலைநகரமாக வரித்துக் கொண்டு விட்டார்கள். தாய் எந்த மொழி பேசினாலும், சேயின் மொழி ஆங்கிலமாக இருக்கும் காலம் இது. தப்பித் தவறி வேற்று மொழி பேசும் நாட்டில் திரவியம் தேட சென்று தங்கி விட்டவர்களும், "என் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்று கூறிக் கொண்டு இங்கிலாந்து சென்று குடியேறுகிறார்கள்.

அடியேனுக்கு அப்படியொரு பிறவிப் பெரும்பயனைக் கடைத்தேறும் பாக்கியம் பல காலமாக கிட்டவில்லை. அதனால் ஒரு வருத்தமும் இல்லை. இருப்பினும் பாழாய்ப் போன பொருளாதார நெருக்கடியும், அதைத் தொடர்ந்த வேலை இழப்பும், என்னையும் லண்டன் சென்று வேலை தேட உந்தித் தள்ளியது. நானும் தப்பித்தவறி ஐரோப்பிய ஒன்றிய பிரஜை ஆகிவிட்டதால், இன்னொரு ஐரோப்பிய நாட்டில் தொழில் தேடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தமக்கென மொழியை கொண்டிருப்பதால், நெதர்லாந்தை தவிர்த்து இங்கிலாந்து சிறந்த தெரிவாகப் பட்டது. முதலாம் வகுப்பில் இருந்து, இரண்டாம் மொழி என்ற பெயரில் திணிக்கப்பட்ட ஆங்கிலம் உதவலாம், என்று நண்பர்களும் ஆலோசனை கூறினார்கள்.
நான் லண்டன் செல்வது இதுவே முதல் தடவை அல்ல. இருப்பினும் இம்முறை வேலை தேடி "செட்டில்" ஆகி விடும் யோசனை இருந்ததால், அதற்கான தயார் படுத்தல்களுடன் சென்றேன்.

லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே குடியேற்ற இலாகாவின் போலிஸ் கெடுபிடி வழமையை விட அதிகமாக இருந்தது. எனக்கு முன்னால் போன வெள்ளையின பயணிகள் எந்தவித தாமதமும் இன்றி பரிசோதித்து அனுப்பப்பட்டனர். எனது முறை வந்ததும், சுமார் பத்து நிமிடங்கள் காக்க வைத்தனர். எனது நெதர்லாந்து பாஸ்போர்ட்டை பிய்த்து எடுக்காத குறை. அந்த அதிகாரி தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்து விட்டுக் கேட்டாரே ஒரு கேள்வி. "யாழ்ப்பாணத்தில் பிறந்த உனக்கு எவ்வாறு நெதர்லாந்து பாஸ்போர்ட் கிடைத்தது?" என்ன செய்வது? எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும், எமது தோல் நிறத்தைக் கண்டவுடன், திருடனைப் போலப் பார்க்கும் அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு தான் எல்லைகளைக் கடக்க வேண்டியுள்ளது. லண்டன் உங்களை வரவேற்கிறது!

நீண்ட காலமாக பிரிட்டனில் "உலகில் சிறந்த சுதந்திர சமூகம்" இருந்தது. வங்கியில் கணக்குத் திறப்பது என்றாலும் ஒருவரிடம் அடையாள அட்டை கேட்க மாட்டார்கள். ஏனெனில் அது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்குமாம். இதனால் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள், அடையாள அட்டை இல்லாமலே (அல்லது விசா இன்றி) வேலை செய்து பிழைக்க முடிந்தது. சில ஆசாமிகள் இரண்டு, மூன்று வங்கிகளில் கணக்கை திறந்து விட்டு, கணிசமான தொகையை கடனாகப் பெற்று கம்பி நீட்டி விடுவார்கள். "தமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்" என்ற ஒரே காரணத்தால் லண்டன் வந்ததாக கூறிக் கொள்பவர்கள் கூட, சட்டவிரோத செயல்களுக்கு வாய்ப்பு இருப்பதாலேயே வருகின்றனர். இதனால் பலரிடம் கருப்புப்பணம் தாராளமாக புழங்குகின்றது.

ஜனநாயகம், சுதந்திரம் என்றெல்லாம் உலகத்திற்கு பவிசு காட்டப் போக, அதனை குற்றச் செயல் புரிவோர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். பிரிட்டிஷ் அரசு அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஒசாமா பின்லாடன் வடிவில் எதிர்பாராத உதவி கிடைத்தது. 2001 செப்டம்பர் 11 க்குப் பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போதும் "இதெல்லாம் அமெரிக்க சமாச்சாரம், நமக்கு சரிப்பட்டு வராது", என்று யாராவது சொல்லிக் கொண்டிருந்தார்கள். லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு அவர்கள் வாயை அடைத்தது. தனிநபர் சுதந்திரங்கள் மெல்ல மெல்ல கட்டுப்படுத்தப் பட்டன. தற்போதைய லேபர் கட்சி பிரதமர் பிரவுனின் ஆட்சி, கன்சர்வேடிவ் தாட்சரின் கொடுங்கோல் ஆட்சியை நினைவுபடுத்துவதாக வெகுஜன பத்திரிகைகளே புலம்புகின்றன.

பிரிட்டிஷ் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது படிவத்தில் காணப்படும் கேள்விக் கொத்து, அரசு எவ்வளவு கண்காணிப்பாக இருக்கிறது என்பதை தெரிவிக்கும் முதல் படி. "நீங்கள் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்பில் சம்பந்தப் பட்டிருந்தீர்களா?", "பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தீர்களா?" இப்படிப் பல. பிரிட்டிஷ் அரசு அறிவித்த பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவதானித்தால், அவற்றில் முக்கால் வாசி மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்திருக்கும். இங்கிலாந்தில் தெற்காசிய சமூகத்தவர்கள் கல்வியில் சிறந்தவர்கள், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்கள் என்பதெல்லாம் இனிமேலும் சாத்தியப்படுமா தெரியவில்லை. குறிப்பாக தெற்காசிய முஸ்லிம் பிரிட்டிஷ் இளைஞர்கள் விமான சேவை போன்ற துறைகளில் இருந்தால் சந்தேகிக்கப் படுகின்றனர். பிரிட்டிஷ் எயர்வேஸ் வாடிக்கையாளர் சேவையில் வேலைக்கு விண்ணப்பித்த காரணத்தாலேயே, ஒரு பங்களாதேஷ் இளைஞர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார். ஆரம்பப் பாடசாலைகளில் "குட்டிப் பயங்கரவாதிகளை" இனம் காணுவது எப்படி என்று, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது.

இதைப் பற்றி எல்லாம் அக்கறைப்படாமல் உதிரிப் பாட்டாளிகளின் வர்க்கம் ஒன்று லண்டன் செழிப்பின் கீழே இயங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலாக கையில் காசில்லாமல் லண்டன் வரும் எல்லோரும், இந்த அடிமட்ட பொருளாதார இயந்திரத்திற்கு எண்ணை வார்த்திருப்பார்கள். அகதிகள், மாணவர்கள், சட்டவிரோத குடியேறிகள்... இப்படி அவர்களை எந்த வகையில் அடக்கினாலும், அவர்களின் குறிக்கோள் பொருளாதார சுபீட்சத்திற்கு தேவையான பணத்தை தேடுவது. இதனால் முதலாளிகளின், முகவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இலகுவாக ஆட்படுகின்றனர். மணித்தியாலத்திற்கு மூன்று பவுனுக்கும் (அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச கூலி 5.80 பவுன்கள்) தமது உழைப்பை விலை பேசும் வெளிநாட்டுப் பாட்டாளிகளின் படை மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து எப்போதோ திவாலாகி இருக்கும்.

கனவுகளோடு லண்டன் வரும் இளவயதினர், எத்தனை கஷ்டப்பட்டு பவுண்களை சம்பாதிக்கின்றனர், என்பதை ஏற்கனவே பலர் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் உபரி உழைப்பு, எத்தனை பேரின் ஆடம்பரக் கார்களாகவும், சொகுசு பங்களாவாகவும் மாற்றமடைந்துள்ளது, என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்களா தெரியவில்லை. தனது சொந்த இனச் சகோதரர்களின் முதுகில் சவாரி செய்து கொண்டே, "நான் உழைப்பால் உயர்ந்தவன்" என்று மார் தட்டுவோரை லண்டனில் தரிசிக்கலாம். சுரண்டலால் கிடைத்த லாபத்தில் ஒரு பங்கை கோயில் உண்டியலில் போட்டு விட்டு, தர்ம காரியத்திற்கு செலவிட்டதாக அரசிடம் வரிச்சலுகை பெறும் "புண்ணியாத்மாக்கள்" பலர் உண்டு.

உழைப்பால் உலர்ந்த லண்டன் தமிழர்கள்

(லண்டன் உங்களை வரவேற்கிறது! - இரண்டாம் பகுதி)

"Londinium" என்று ரோமர்கள் வைத்த பெயர், இன்று லண்டனாக திரிபடைந்து உலகப் பெரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இங்கிலாந்து என்று அறியப்படும் பிரதேசத்தை கைப்பற்றிய ரோமர்கள், அதை பாதுகாக்க ஜெர்மன் இனக்குழுக்களை குடியேற வைத்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் உருவான பண்டைய ஆங்கிலேய (ஜெர்மன் இனக்குழு ஒன்றின் பெயர்) குடியேற்றங்களில் ஒன்று "ஸ்டேனா" (கல் என்ற அர்த்தம் வரும் பழைய ஆங்கிலச் சொல்.)

இன்று அந்த இடம் ஹீத்ரூ விமான நிலையம் அருகில், லண்டன் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த பகுதியாக உள்ளது. ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனது தற்காலிக வதிவிடமாக அமைந்தது. வெளிநாட்டவர்களால் நிரம்பி வழியும் லண்டன் புறநகர்ப் பகுதிகளைப் போலன்றி, வெள்ளயினத்தவர்களை பெரும்பான்மையாக கொண்டது. அங்கிருந்து சில மைல் தொலைவில் "வின்சர் கோட்டை" அமைந்துள்ளது. இன்று பிரபல சுற்றுலாத் தலமாக இருந்த போதிலும், வின்சர் கோட்டை பெறுமதி மிக்க அரச வம்ச சொத்துகளில் ஒன்று.

நான் குறிப்பிடும் சுற்று வட்டாரத்தில், உலகை மாற்றிய மாபெரும் வரலாற்று நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. பிற நாடுகளைப் போல லண்டனிலும் அரசன் கையில் அனைத்து அதிகாரங்களும் குவிந்திருந்தன. அரசனுக்கு அடுத்ததாக அரசியல் செல்வாக்கு மிக்க நிலப்பிரபுக்கள், அரச அதிகாரத்தில் பங்கு கேட்டு போராடினார்கள். இந்த இரண்டு அதிகார மையங்களும் இறுதியில் "மக்னா கார்ட்டா" என்ற பெயரிலான ஒப்பந்தம் மூலம் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டனர். பிற்காலத்தில் வந்த அரச அமைப்பு சட்டங்களின் முன்னோடியாக, மக்னா கார்ட்டா கருதப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் கைச் சாத்திட்ட இடத்தில் தற்போது ஒரு ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வின்சர் கோட்டை செல்லும் வழியில், அந்த ஹோட்டலில் தங்கி உணவருந்தி விட்டு செல்வது வழக்கம்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில், குறைந்தது இருபது தமிழர்களாவது வேலை செய்கின்றனர். அவர்களோடு ஒரு சில சிங்கள இளைஞர்களும் பணியாற்றுகின்றனர். அனைவரும் ஹோட்டல் அறைகளை சுத்தமாக்குவது, சமையலறையில் பாத்திரங்களை கழுவுவது போன்ற துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைத் தவிர, போலந்து நாட்டுக்காரர்கள் சமையல் உதவியாளராகவும், உணவு உபசாரகர்களாகவும் பணியாற்றுகின்றனர். அவர்கள் எல்லோரும் சந்திக்கும் இடமாக, ஹோட்டலின் மையப் பகுதியான சமையலறை உள்ளது. எனக்கும் அவ்விடத்தில் ஒரு சில நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இருபதுக்குமதிகமான தமிழர்கள் வருடக்கணக்காக வேலை செய்து கொண்டிருப்பதால், அங்கே ஆங்கிலத்துக்கு அடுத்த இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது! ஹோட்டலில் பணி புரியும் வேற்றினத்தவர்களும், தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் சிரத்தையோடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தேமதுரத் தமிழோசை லண்டனிலும் ஒலிக்கின்றது. தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் 18 ல் இருந்து 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வேலை செய்த அனைவரும் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்கள். வேறு எங்கேயும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை என்பதால், ரெஸ்டாரன்ட் வேலை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் அண்மைக்கால போலிஸ் கெடுபிடி காரணமாக, அப்படியானவர்களை வைத்திருக்க தொழில் வழங்குனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை கவரும் மேற்கு ஐரோப்பிய நகரங்களில் உள்ள ஹோட்டல், ரெஸ்டாரன்ட் தொழிற்துறை யாவும் வெளிநாட்டுத் தொழிலாளரின் உழைப்பில் தங்கி இருக்கின்றன. லண்டனும் அதற்கு விதிவிலக்கல்ல. வேலை தேடித்தரும் முகவர்களும் இடைத்தரகர்களாக தொழில் சந்தையில் குதித்துள்ளனர். பிற வணிக நிறுவனங்களைப் போல உணவு விடுதிகளும் தமக்கு தேவையான தொழிலாளருக்கு முகவர்களை நாடுகின்றன. பெரும்பாலும் அந்நாட்டு வெள்ளையர்களே நடத்தும் முகவர் நிலையங்கள் தெற்காசிய சமூகங்களுக்குள் ஊடுருவ முடிவதில்லை. மொழிப்பிரச்சினை, சரியான தொடர்புகள் இன்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அந்தந்த சமூகங்களை சேர்ந்த முகவர்களை நாடுகின்றனர்.

இங்கிலாந்துக்கு புதிதாக வரும் சீனர்களை, சீன உணவுவிடுதிகளில் அடிமை வேலைகளில் ஈடுபடுத்தும் சீன மாபியாக்கள் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் அக்கறை காட்டுகின்றன. மாபியா ஆட்கடத்தல்காரர்கள், சீனாவில் இருந்து கிளம்ப பயணச் செலவுக்கு லட்சக்கணக்கில் கடனாக அள்ளிக் கொடுப்பார். பின்னர் ஏதாவதொரு லண்டன் ரெஸ்டாரன்ட் ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்து, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பி அறவிடுகின்றனர். கிட்டத்தட்ட அதே மாதிரியான நிலையில் இருந்த இந்தியத் தமிழ் இளைஞரை சந்திக்க நேர்ந்தது. அவரின் பிரயாணத்திற்கு ஒழுங்கு செய்த ஆட்கடத்தல்கார கும்பல், ஈஸ்ட்ஹமில் (லண்டன் புறநகர்) தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றில் வேலை எடுத்துக் கொடுத்திருந்தது. ஊரில் வறுமையான பின்னணியில் இருந்து வந்த அந்த நபர், வருடக்கணக்காக வேலை செய்து கடனை அடைக்க வேண்டும். இந்த எழுதாத சட்டத்தை மீறி எங்கே தப்பி ஓடினாலும், எப்படி பிடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும்.

மாபியாக்களைப் போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தா விட்டாலும், அவர்களின் உழைப்பை சட்டபூர்வமாக சுரண்டும் முகவர்களும் இருக்கிறார்கள். அநேகமாக மதிப்பு மிக்க பிரிட்டிஷ் ஹோட்டல், ரெஸ்டாரன்ட் நிர்வாகங்கள் சட்டபூர்வ முகவர்களின் உதவியை நாடுகின்றன. ஒரு தொழிலாளிக்கு இவ்வளவு காசு என்று, மனிதர்களுக்கு விலை பேசுகின்றன. குறைந்த விலைக்கு ஆள் பிடித்து தருவதாக ஒப்பந்தம் செய்யும், தெற்காசிய சமூகத்தை சேர்ந்த முகவர் ஒருவர், தனது இனத்தை சேர்ந்த தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துகின்றார். இதனால் தொழிலாளர் நல காப்புறுதிகளை கட்டாமல் நிறுவனங்கள் மிச்சம் பிடிக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் செலவினம் சம்பளமாக கருதப்படாமல், வெளியாரின் சேவைக்கு வழங்கப்பட்ட விலையாக கருதப்படுவதால், வரிச் சலுகை கிடைக்கிறது.

தொழிலாளர்களை விநியோகம் செய்யும் முகவர் எந்த அளவு குறைந்த டெண்டருக்கு எடுத்திருந்தாலும், ஒரு தலைக்கான விலை, எப்படியும் அடிப்படை சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். வெள்ளையின ஆங்கிலேய முகவர்கள் நடத்தும் நிலையங்களைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. அவர்களுக்கு எப்படியும் சராசரி சம்பள தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே பணம் கிடைக்கிறது. வேலை நேரம், ஓவர் டைம் எல்லாவற்றையும் சரியாக கணித்துக் கொள்கின்றனர். தமது தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ் அல்லது ஆசிய முகவர்கள் அப்படி அல்ல. இவர்கள் தொழிலாளிக்கு ஒரு கணக்கும், ஹோட்டலுக்கு இன்னொரு கணக்கும், அரசாங்கத்திற்கு வேறொரு கணக்கும் காட்டுகின்றனர்.

பிரிட்டனில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளிக்கும் அடிப்படை சம்பளம் ஒன்றை அரசு நிர்ணயித்திருக்கிறது. ஒருவர் என்ன வேலை செய்தாலும், மணித்தியாலம் 5.80 பவுன் கூலி கொடுக்க வேண்டும் என்பது அரசு போட்ட சட்டம். அது கூட ஒரு சராசரி வாழ்க்கை செலவுக்கு தேவையானதை விட குறைவாகவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதலாளி அதற்கு குறைவான சம்பளத்தை பதிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் வெள்ளையின முதலாளிகளே, பெரும்பாலும் ஒப்பந்தப் படி பேசிய கூலியை கொடுக்கின்றனர். தமிழ் தொழிலாளிகளை பணியில் ஈடுபடுத்தும் தமிழ் முதலாளியோ, அல்லது முகவரோ தாமாகவே ஒரு சந்தை விலையை தீர்மானிக்கின்றனர்.

ஒரு மணி நேர உழைப்புக்கு நான்கு பவுன் என்பது, தமிழரின் உழைப்புக்கு தமிழ் முதலாளிகள் நிர்ணயிக்கும் சராசரி விலை. (சில இடங்களில் மூன்று பவுன் கொடுக்கிறார்கள்.) கவனிக்கவும்: சட்டப்படி ஒப்பந்தம் செய்தாலும் அதிலே 5.80 பவுன்கள் என்று தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் கையில் கொடுப்பது 4 பவுன். இதனால் ஒரு அப்பாவி தொழிலாளியின் 1.80 பவுன் பெறுமதியான உழைப்பை திருடுகின்றனர். நான் சென்று பார்த்த ஹோட்டலில் எடுத்த அண்ணளவான கணிப்பின் படி, மாதம் 7500 பவுன்கள் இவ்வாறு ஒரு முகவரின் பைக்குள் செல்கின்றது. விசா இன்றி சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் அதையே சம்பளமாக ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் மாணவர்கள் போன்ற, தொழில் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்வது ஆச்சரியமானது. பலர் இந்த திருட்டை பற்றி தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆயினும் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டமும், போட்டியும் அவர்களின் வாயை மூட வைக்கிறது.

மணித்தியாலம் 4 பவுனுக்கு வேலை செய்வதால், மாத முடிவில் சொற்ப தொகையே சம்பளமாகக் கிடைக்கிறது. (அதைக் கூட மாத முடிவில் கொடுப்பதில்லை. இரண்டாவது மாதமே கிடைக்கிறது.) இதனால் பெரும்பான்மையான தொழிலாளர்கள் "ஓவர் டைம்" வேலை செய்கிறனர். பிரிட்டிஷ் சட்டப்படி, மேலதிக வேலை நேரத்திற்கு உரிமையான பிரத்தியேக கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. (ஆனால் ஹோட்டல் நிர்வாகம் கொடுத்து விடுகின்றது.) நான் அவதானித்த அளவில், ஒரு தொழிலாளி சராசரி ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரம் வேலை செய்கிறார். ஹோட்டல்களில் "ஷிப்ட்" முறை உள்ளதால், அட்டவணைப் படி ஓய்வு நாள் கிடைக்கிறது. ஆனால் கடைகளில் சிப்பந்திகளாக பணியாற்றுபவர்கள் தினசரி வேலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
இலங்கை, இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பலர், காணியை, நகையை அடவு வைத்து கடன் எடுத்து வந்திருப்பார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. கடனை அடைக்க வேண்டுமென்றால், உழைப்புச் சுரண்டலை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். அவர்களின் கையறு நிலையை தமிழ் முதலாளிகளும், முகவர்களும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அப்பாவிகளின் உழைப்பை சுரண்டி, லண்டனில் வசதியான வீடு, மெர்செடெஸ் கார் என்று வாங்கித் தள்ளுகின்றனர். இறுதியில் தமிழ் தொழிலாளர்களின் உழைப்பு உற்பத்தி செய்து குவித்த பணம், பிரிட்டிஷ்காரர்களின் கஜானாவை சென்று நிரப்புகின்றது.


பிரிட்டனில் கடை போட்ட தமிழ்வள்ளல்கள்
-கலையரசன் -

( லண்டன் உங்களை வரவேற்கின்றது! - மூன்றாம் பகுதி)

வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர்.

சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் மூலம் ஈடுகட்டுகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் சலுகையை, தமிழர்கள் பலர் அனுபவிப்பதில்லை. அதற்கான காரணங்களாவன: அரசின் சமூகக் கொடுப்பனவுகளைப் பெற்று தம்மை வசதியற்றவர்களாக காட்டிக் கொள்ள பலர் வெட்கப்படுவது. பாரம்பரிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் படி, கஷ்டம் வரும் நேரம் உறவினர், நம்பர்களின் உதவியில் தங்கியிருத்தல். அரசாங்கத்தின் சமூக நலன்புரி திட்டங்கள் குறித்த அறிவின்மை என்பதாகும்.

அதே நேரம், புதிதாக லண்டன் வருபவர்கள், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காகவோ, அன்றேல் அகதி அந்தஸ்து பெறுவதற்கோ நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படுகிறது. காத்திருக்கும் காலத்தில் கிடைக்கும் தற்காலிக தொழில் அனுமதிப் பத்திரத்தை எடுத்தவுடன் (தற்போது அதை நிறுத்தி விட்டார்கள்) வேலை தேடக் கிளம்பி விடுவார்கள். லண்டன் நகரில் தெரிந்த உறவினர், நண்பர் வீட்டில் தங்கி இருந்து கொண்டு எங்காவது வேலை செய்கின்றனர். அவருக்கு இடம் கொடுக்கும் வீட்டுக்கடன் கட்டுபவர்களும், வாடகை கட்டுவோரும் தமது செலவை பங்கிட்டுக் கொள்கின்றனர்.

சிலநேரம் வேலை செய்யும் இடம் வெகு தூரத்தில் இருக்கலாம். அப்படியான தருணத்தில் வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையில் வதிவிடம் இருப்பது அவசியம். (அதி விரைவு சுரங்க ரயில் பயணமே சில நேரம் இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.) ஹோட்டல், ரெஸ்டாரன்ட் வேலைக்கு தமிழ் தொழிலாளர்களை எடுத்துக் கொடுக்கும் முகவர்கள், தாமே வதிவிடத்தை ஒழுங்கு பண்ணிக் கொடுக்கின்றனர். அப்படியான "தொழிலாளர் விடுதி" ஒன்றை காண நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். நான்கு படுக்கை அறைகளை கொண்ட வீட்டில் 10 பேர் தங்கியிருக்கின்றனர்.

அங்கு வசிப்பவர்கள் குறிப்பிட்ட வீட்டை "அகதி முகாம்" என்று பட்டப் பெயரால் அழைக்கின்றனர். அவர்களை ஹோட்டலுக்கு வேலைக்கு அனுப்பும் முகவருக்கு சொந்தமானது அந்த வீடு. வீட்டில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சொற்ப சம்பளப் பணத்திலேயே வாடகையை கழித்துக் கொள்கிறார். வீட்டை அடமானம் வைத்து வாங்கியிருந்த அந்த முகவர், கூடிய சீக்கிரமே வீட்டுக் கடனை அடைத்து விடும் நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு காரணம், அங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவரிடமும் 200 பவுன்கள் வாடகை அறவிடுகிறார். இன்னொருவனின் உழைப்பில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

புதிதாக பிரிட்டன் வரும் பலருக்கு வேலை வழங்கும் இன்னொரு துறை, தமிழர் கடைகள். புலம்பெயர் மண்ணில் தமிழ் கலாச்சாரத்தை காப்பற்றும் திருப்பணியை சிரமேற்கொண்டு, இந்திய,இலங்கை இறக்குமதிப் பொருட்களுடன் பல கடைகள் காணப்படுகின்றன. லண்டன் வாழ் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு தேவையான மனித உழைப்பையும் அந்த சமூகத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். ஒரு கடையில் ஐந்து பேர் வேலை செய்தால், ஒருவரை மட்டும் சட்டப்படி பதிந்து வைத்திருப்பார்கள். (வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் அரசுக்கு வரி கட்ட வேண்டும்.) முன்னர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினார்கள். (அப்போது தானே விரும்பிய படி சுரண்டலாம்.) தற்போது போலிஸ் கெடுபிடி காரணமாக, மாணவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கும் சட்டப்படி வாரம் 20 மணித்தியாலங்களே வேலை செய்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலதிகமாக வாரம் 30 மணித்தியாலங்களாவது சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர்.

லண்டன் மாநகரத்தின் சில பகுதிகள் குட்டி சென்னை, குட்டி யாழ்ப்பாணம், என்று குறிப்பிடுமளவிற்கு தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். இதனால் தமிழ்க் கடைகளுக்கிடயிலான போட்டி காரணமாக அடிக்கடி மலிவு விற்பனை அறிவிப்புகள் காணப்படும். மலிவு விற்பனையில் குறைக்கப்படும் விலையானது, சட்டவிரோதமாக சுரண்டப்பட்ட கடைச் சிப்பந்திகளின் உழைப்பு என்பதால் வியாபாரிகளுக்கும் கவலையில்லை. இதைவிட மேலதிக விற்பனை வரியில் குளறுபடி செய்வது மட்டுமல்ல, பிற வரி ஏய்ப்புகளுக்கு கணக்கு போட்டுக் கொடுப்பதற்கு தமிழ் கணக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கடைகளுக்கு கணக்கு சரி பார்க்கும் அக்கவுண்டட் ஒருவர் "பணக்கார ஏரியா" எனக் கருதப்படும் லண்டன் வட்டாரமொன்றில் வசிக்கிறார். இவர் தனது சொந்த வீட்டை மட்டுமல்லாது, சின்ன வீட்டு செலவுகளையும் சிறப்பாகவே பராமரித்து வந்துள்ளார். எனக்குத் தெரிந்த வரை, தனது வைப்பாட்டிக்கு மாத்திரம் மாதம் 2000 பவுன் செலவிடும் அளவிற்கு சுரண்டலில் பங்கெடுத்துள்ளார்.

பிரிட்டனில் தமிழ் முதலாளிகள் தமிழ்க் கடைகள் மட்டுமல்ல, "ஆங்கிலக் கடைகளையும்" நடத்தி வருகின்றனர். பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரும் ஒரு நாட்டில், தனியொரு நபர் நடத்தும் சிறு கடைகள் நிலைத்து நிற்க முடிவதில்லை. சிறு வணிக முயற்சிகளை ஆதரிக்கும் அக்கறையும் அரசுக்கு இல்லை. அதிலும் குறிப்பாக நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் எந்தவொரு வர்த்தக முயற்சியும் வீண் விரயமாகும். அப்படியான இடங்களில் நஷ்டத்தில் நடக்கும் கடைகளை, தமிழர்கள் வாங்குகின்றனர். அவற்றில் 4 பவுன் கூலிக்கு தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். அது தான் வெள்ளையின கடை முதலாளிகளுக்கு "தெரியாத வியாபார சூட்சுமம்".

பிரிட்டனில் ஒரு "பெட்டிக்கடை" வைத்திருப்பவர்கள், தம்மை ஒரு பெரிய கம்பனியை நிர்வகிக்கும் தொழில் அதிபர் போல பாவனை செய்து கொள்கின்றனர். வெள்ளையின மேலாதிக்கம் நிலவும் பிரிட்டிஷ் தொழிலகங்களில் வேலை செய்வதை விட, சுய மரியாதையுடன் சொந்தமாக வியாபாரம் செய்வதாக ஒரு கடை முதலாளி தெரிவித்தார். அப்படியானவர்கள் தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளரின் சுய மரியாதை பற்றி சிந்திப்பதில்லை. எடுபிடிகளாக நடத்துவதற்கு வசதியாக, இளம்பராய மாணவர்களை பணியில் அமர்த்துகின்றனர். 4 பவுன் கொடுத்து தினசரி வேலை வாங்குவதால் வெறுத்துப் போன கடைச் சிப்பந்திகள், சில்லறைத் திருட்டுகளையும் கண்டு கொள்வதில்லை. வர்க்க ஒற்றுமையில் இருந்து வெளிப்படும் உணர்வு அது. "எனது முதலாளி திருடுவதை விட அதிகமாக இந்த அற்பர்கள் எடுத்துச் செல்லப் போவதில்லை." என்று நியாயம் கற்பித்தார் எனது நண்பர் ஒருவர்.

உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாழும் வெள்ளையின சிறுவர்கள், வறுமை காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு பவுனும் பெறுமதியில்லாத சாக்லேட், சிப்ஸ் பக்கட் போன்றவற்றை தான் தூக்கிச் செல்கின்றனர். பாடசாலை விடும் நேரம் கூட்டமாக நுழையும் சிறுவர்களே சில்லறைத் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். சில கடை உரிமையாளர்கள் திருட்டு முயற்சிகளை தடுப்பதில் வரம்பு மீறுகின்றனர். (சாக்லேட் திருடிய வெள்ளையின சிறுவனை நிலத்தில் தள்ளி வீழ்த்தி அடிக்கப் போனதாக ஒரு கடை உரிமையாளர் தெரிவித்தார்.) இது சில நேரம் இனங்களுக்கிடையிலான பகை உணர்ச்சியை கிளறி விடுகிறது. மேலும் வேலையற்ற வெள்ளையின மக்கள் மத்தியில், தெற்காசிய சமூகத்தை சேர்ந்தவர்களின் செல்வச் செழிப்பு பொறாமைத் தீயை மூட்டுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில், BNP போன்ற பிரிட்டிஷ் இனவாதக் கட்சிகள் வெள்ளையின உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாக்கு வேட்டையாடுகின்றன.

(தொடரும்)


No comments: