Saturday, March 27, 2010

வட்டுக்கோட்டைத் தீர்மானம்



வட்டுக்கோட்டைத் தீர்மானமும் பாலி நாட்டுக் கோழிச்சண்டையும்

- ராகவன்-

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான பொதுசன வாக்கெடுப்பு என்று ஐரோப்பிய வட அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர் குழுக்கள் பந்தயம் கட்டுகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கே ஏகோபித்த ஆதரவு தமிழ் மக்களிடம் இருப்பதாகவும் 99. 9 விழுக்காடு வாக்காளர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாகவும் தமிழர் ஊடகங்கள் தற்பெருமை கொண்டாடுகின்றனர். நாடு கடந்த தமிழ் ஈழம் பற்றிய கனவுகளுக்கும் அதனை முன்னெடுக்கும் வெளிநாட்டுத் தமிழ்க் கனவான்களுக்கும் நம்மிடையே குறைச்சலில்லை.

அதே சமயம் இலங்கை வாழ் தமிழர் இது வரை அடி வாங்கியது போதாதென்று இந்த வெளிநாட்டுத் தமிழர் தமக்கு மேலும் அடி வாங்கித் தரவே முயல்கின்றனர் என எண்ணுகின்றனர். சமீபத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக அல்லது குறைந்த பட்சம் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகத் தமது வாக்குகளை நல்கியிருப்பின் சிறியவன் சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது தோழர் விக்கிரமபாகு கருணாரட்ணாவிற்கோதான் தமது வாக்குகளை அளித்திருப்பர். ஆனால் நடந்தது வேறு. தமிழரின் பெரும்பாலான வாக்குகள் சரத் பொன்சேகாவிற்கும் மகிந்தவிற்கும்தான் போடப்பட்டிருக்கின்றன. வட்டுக்கோட்டைத் தொகுதியிலேயே பதினோராயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை சரத்தும் நாலாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை மகிந்தவும் பெற்ற அதேவேளை, சிவாஜிலிங்கம் ஐநூறு வாக்குகளைப் பெற, விக்கிரமபாகு கருணாரட்ணா இருநூறுக்கும் குறைவான வாக்குகளையே பெற்றார்.


தமிழ் மக்கள் பெரும்பாலும் வாக்குகளைப் போடவில்லை. தமது தேர்தல் பகிஸ்கரிப்பைக் காட்டினார்கள் என்று முணுமுணுப்பது காதில் கேட்கிறது. ஆனால் இது மிகச் சிக்கலான விடயம்.

உதாரணத்திற்கு, யாழ்ப்பாண மாவட்ட மக்களின் வாக்காளர் எண்ணிக்கை பற்றிய ஒரு மதிப்பீட்டைச் செய்யும்போது பல்வேறு தரவுகளைக் கவனத்திலெடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் 81 காலப்பகுதியிலான வாக்காளர் பட்டியலே பயன்படுத்தப்படுகிறது. யுத்தத்தில் இடம் பெயர்ந்தோர், இறந்தோர் அனைவரது பெயரும் பட்டியலில் இருப்பதோடு புதிதாக 18 வயதை அடைந்து வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதே நடைமுறை.

ஒருபுறம், முக்கியமாக யாழ் மாவட்டத்தில் வாக்காளரின் எண்ணிக்கை ஏழரை இலட்சம் என கூறப்பட்டது. இதில் 25.66 வீதம் மக்களே வாக்களித்தார்களென்றும் எனவே பெரும்பாலானவர்கள் வாக்களிக்கவில்லை எனவும் ஒரு வாதம் வைக்கப்பட்டது. 2004 பொதுத்தேர்தலில் 6 லட்சத்துக்கு மேல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குரிமை பெற்றவர்கள் இருந்தபோதும் புலிகள் தமிழ்த்தேசிய கூட்டு முன்னணிக்கு ஆதரவு வழங்கியபோதும் 50 வீத மக்களே வாக்களித்திருந்தனர். 2007 க்கான சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி யாழ் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேலானவர்கள் மூன்று இலட்சத்து எழுபதினாயிரம் அளவிலென தெரிவிக்கப்பட்டது. 2004 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வாக்களித்தவர்கள் தொகை 305259. 2004 இல் புலிகள் உட்பட அனைத்து கட்சிகளும் மக்களை வாக்களிக்க தூண்டின. எனவே 721359 வாக்காளர்கள் யாழ் மாவட்டத்தில் இருப்பதென்பது நம்பத்தகாதது. வாக்காளர் பட்டியலானது 1981ன் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. இடம் பெயர்ந்தோர், புலம் பெயர்ந்தோர் அனைவரும் அப்பட்டியலில் அடங்குவர். இந்தப்பின்னணியில் 4 இலட்சத்திற்கும் குறைவான வாக்காளர்களே யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம். இதன் அடிப்படையில் கடந்த தேர்தலில் 50 விழுக்காடு மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் மிகப்பெரும்பான்மையான வாக்குகளை சரத்திற்கும் மகிந்தவிற்குமே அளித்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் வெளிநாடு வாழ் தமிழ் கனவான்களின் அரசியல் விருப்புகளிற்கும் இலங்கை வாழ் தமிழரின் அரசியல் விருப்புகளிற்கும் இடையே அடிப்படை முரண்பாடு காணப்படுகிறது. இந்த முரண்பாடானது இன்று நேற்றல்ல. 80களிலேயே தொடங்கிவிட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த அ. அமிர்தலிங்கம் லண்டனுக்கு ஜுன் 82ல் வந்தபோது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் 200 பேரளவில் அவரை சந்தித்தனர். அதற்கு முன்னதாகப் பொங்கல் தினத்தன்று 14.01.82இல் நாடுகடந்த தமிழீழப் பிரகடனத்தை அமெரிக்காவில் நிறைவேற்றி அதனை இலங்கையிலும் பிரகடனப்படுத்துமாறு அமிர்தலிங்கத்தை வற்புறுத்தினர். அமிர்தலிங்கம் சொன்னார்: "தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பின் வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தண்டிக்கப்படுவார்கள்" வருகை தந்திருந்த பிரதிநிதிகள் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பு நீங்களே எனக் கேட்க அவர் சொன்னார்... "அனைத்து மக்களும் அழிந்து போனபின் வரும் விடுதலையால் எப்பயனும் இல்லை; நல்வாழ்வை அனுபவிக்க அங்கு யாரும் இருக்க மாட்டர்கள்".

"வங்காள தேசம் விடுதலை பெற்றது என அனைவரும் சிலாகிக்கிறோம் 35 லட்சம் பேர் இறந்து தான் வங்காள தேசம் விடுதலை பெற்றது . நாமோ 35 லட்சம் மட்டுமே" என்று அ. அமிர்தலிங்கம் சொன்னபோது, "ஜே. ஆரிடம் போய் அவனது முகத்திற்ற்கு நேரே சொல் நீ நரகத்துக்குப் போவாய்" என்று அமிர்தலிங்கத்தை நோக்கிக் கூச்சலிட்டார் தமிழீழப் பிரகடனத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வைகுந்தவாசன். அதற்கு அமிர்தலிங்கம் "தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தினால் நரகத்துக்கு போகப்போவது ஜே ஆர் அல்ல, தமிழ் மக்களே" என்றார். அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனத்தை அன்றும் இன்றும் கேட்டிருந்தால் இன்று நமது உரிமைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடங்கிப்போயிருக்காது.


இன்று வெளிநாட்டில் இருக்கும் பிரமுகர்களும் கனவான்களும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாடுகடந்த தமிழீழத்தையும் கொண்டாடுவது இலங்கை வாழ் தமிழர்களின் அக்கறையாலல்ல. மாறாகத் தமது சுய கவுரவம், இரத்த வேட்கை ஆகியவற்றால்தான். விடுதலைப் புலிகள் இராணுவ வெற்றிகளை அடையும்போது இவர்களின் சுய கெளரவமும் சமூக அந்தஸ்தும் உச்சநிலையில் நின்றது. வெளிநாட்டவர் ஒருவர், நீங்கள் இலங்கையரா என்றும் பின்னர் தமிழரா என்றும், பின்னர் புலியா என்றும் கேட்கும்போது உச்சி குளிர்ந்து தலை ஆட்டியவர்களுக்கு இன்று சோதனைக் காலம். தங்கள் சுயகெளரவம், அந்தஸ்து போய்விட்டதே என்று அவர்கள் முறுகித் திரிகிறார்கள்.

பாலி நாட்டுக் கோழிச்சண்டை பற்றி மானிடவியலாளர் கிளிபேட் கீட்ஸ் எழுதிய ஆக்கத்தை நீண்டகாலத்துக்கு முன் படித்திருந்தேன். வெளிநாட்டவர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானப் பந்தயத்திற்கும் பாலி நாட்டுக் கோழிப் பந்தயத்திற்கும் தொடர்பிருப்பதாக எனக்குப்பட்டது. மீண்டுமொருமுறை அந்த ஆக்கத்தைப் படித்தபோது ஆச்சரியத்துக்குரிய ஒற்றுமை உறுதியானது. பாலி நாட்டில் கோழிச் சண்டைக்கும் பந்தயத்திற்கும் தடை. ஆனாலும் ஊர்ப்புறங்களில் கோழிச்சண்டையும் பந்தயமும் வெளிப்படையான இரகசியம். கோழிச்சண்டையின் வெற்றி தோல்வியை நடுவரே தீர்மானிப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. நடுவரை எவரும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. தவறான தீர்ப்பெனினும் அவரை விமர்சனம் செய்வதில்லை. சண்டைக்கோழியை வளர்ப்பவர்கள் அதனை சதா தடவிக்கொண்டும் அதன் மேல் தீராக் கவனமும் காதலும் கொண்டிருப்பர். கோழிச்சண்டையின் தார்ப்பரியம்: கோழியின் உரிமையாளரின் கோழி மேலான அளவுகடந்த அர்ப்பணிப்பு மட்டுமல்ல; அது ஆண்மையின் சின்னமும் கூட. மிருகங்களின் மேலான அளவு கடந்த வெறுப்பு. இந்த குருதிப்போர் மனிதனின் ஆக்க சக்தியான ஆண்மை எழுச்சிக்கும் அழிவு சக்தியான மிருகவியலுக்குமான யுத்தம். தர்மம், அதர்மம், மனிதன், மிருகம், தன்முனைப்பு இவை அனைத்தும் கலந்த எழுச்சியில் வெறுப்பு, வன்முறை, குரூரம் கொலையென கோழிச்சண்டை அரங்கேறுகிறது.

மையப் பந்தயம்: கூட்டாகவும் அமைதியாகவும் கோழிகளின் உரிமையாளர்கள் இருவரும் அவர்களது ஆதரவாளர்களும் ஒழுங்கமைப்பது.

பக்கப் பந்தயம்: அக்கறையற்ற பார்வையாளர்கள்


பந்தயம் கட்டுவது பணத்துக்காகவல்ல. அது சமூக அந்தஸ்து பெருமை . ஆனாலும் ஒரு கோழியின் மேல் அதிக பந்தயம் பிடிக்கும்போது அதிகமான பணம் சேர்வதும் ஒரு சமூக அந்தஸ்தை தருகிறது. தனது ஊர்க் கோழிக்கெதிராகவோ அல்லது தனது சொந்தக்காரரின் கோழிக்கெதிராகவோ யாரும் பந்தயம் கட்டுவதில்லை

கோழிச்சண்டை நடத்துவது சமூக உணர்வை கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ அல்ல. இரத்தம், இறக்கை, கூட்டம், பணம் ஆகியவற்றின் கூட்டை மேடையேற்றிக் காட்டுவதே இது. இக்கோழிச்சண்டையானது பாலி மக்கள் தங்களது கதையைத் தங்களுக்கே சொல்வதென்கிறார் கீட்ஸ்.


வட்டுக்கோட்டைத் தீர்மானமும் பொதுசன வாக்கெடுப்பும் பாலி நாட்டுக் கோழிச்சண்டை போல் தான். தமது சுய கெளரவமும், ஆண்மையை இழந்துவிட்டோமோ என்ற அச்சத்தில் தமது ஆண்மையை மேடையேற்றுவது. தமது கதையைத் தமக்கே சொல்லி அதனை மேடையேற்றிச் சுய இன்பம் அடைவது. இது ஒரு மேடை நாடகம். இலங்கைவாழ் தமிழர் இதுபற்றி அக்கறைப்படப்போவதுமில்லை அல்லது உலகம் இவர்களது கூத்துகளைக் கண்டு தமிழீழம் பெற்றுக் கொடுக்கப் போவதுமில்லை.

நன்றி : புகலி

No comments: