Tuesday, March 30, 2010

கட்டுரை


ஆண்கள் -பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல்
-அம்ருதா-

இருண்ட கர்ப்பக்கிரகங்களுள் இருள்நிறத்திலான பெண் தெய்வங்கள் கருணைபொலிய, பொழிய காலகாலமாக அமர்ந்திருக்கிறார்கள். ‘ஆணும் பெண்ணும் சகவுயிர்கள்’ என்று, கைதட்டலைக் கறக்கும்விதமாக குரலுயர்த்தி மேடைகளில் முழங்கும்போது, பார்வையாளர்கள் பழக்கம் காரணமாக உணர்ச்சிவசப்பட்டு கைதட்டுகிறார்கள். பட்டிமன்றங்களோவெனில் ‘பெண்களே குடும்பத்தைக் கட்டிக்காக்கிறார்கள்’என்ற பெருந்தன்மைத் தீர்ப்பளித்து நிறைவுறுகின்றன. ‘இட ஒதுக்கீடு’ இன்னபிற சொற்கள் அரசியல் வட்டாரங்களில் அடிக்கடி புழங்கிக்கொண்டே இருக்கின்றன.இருந்தபோதிலும் பெண்கள் இன்னமும் இரண்டாம் பாலினமாக நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பெண்ணாகப் பிறந்ததை ஒரு துருப்புச்சீட்டாக, பிழைப்பின் கருவியாக, ஏமாற்றும் தொழிலின் மூலதனமாகப் பயன்படுத்தும் ஒரு சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது அந்தந்த நபர்களின் தனிப்பட்ட குணாதிசயம் சார்ந்ததாகும். அத்தகையோர் ஆணாகப் பிறந்திருந்தாலும் அவ்விதமே நடந்துகொண்டிருப்பர். சமுதாயத்தின் பாரபட்சங்களால், அடக்குமுறைகளால், ஓரவஞ்சனையால், ஒழுக்கவிதிகளால் உண்மையிலும் உண்மையாக பாதிக்கப்பட்ட-பாதிக்கப்பட்டுவரும் பெருவாரியான பெண்களைக் குறிக்கவே ‘பெண்’என்ற சொல் இந்தப் பத்தியில் பிரயோகிக்கப்படுகிறது.

சொத்துரிமையைக் கையகப்படுத்த விரும்பிய ஆண்களால், தாய்வழிச் சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, பிறந்த குடும்ப அமைப்பிலிருந்து பெண்ணின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டதாக வரலாறு சொல்கிறது. குடும்பம் ‘அருளிய’ தாய், மனைவி என்ற தெய்வீகப் பீடங்களில் புளகாங்கிதத்தோடு அமர்ந்து சுயத்தினை இழந்துபோன பெண்களின் வரலாறு பரிதாபகரமானது. அவ்வாறான அடிமைச்சுகவாசிகளது மனதின் அடியாழத்துள்ளும் விடுதலைக்கான வேட்கை நிலத்தடி நீராக இருக்கக்கூடும். பழக்கப்பட்ட கூண்டுச்சுகம் விரும்பும் கிளிகளுக்கு வானம் சிறகெட்டாத தூரமே. ஆனால், ‘நானும் நீயும் ஒன்றாகவே படைக்கப்பட்டோம்… உனக்குரியவை அனைத்தும் எனக்குரியவையே’என்று பேசப் புறப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணற்றவை.

ஒரு குடும்பத்தில் வளரும் பெண்பிள்ளை மனைவி, தாய் எனும் உருமாற்றங்களுக்குத் தயார்ப்படுத்தப்படுகிறாள். சிமொன் தி பொவார் சொன்னதுபோல, “பெண்கள் பிறப்பதில்லை… அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்” ஆனால், ஆண்பிள்ளை திருமணத்தின் முன்னும் பின்னும் ‘ஆணாக’வே நிலைத்திருக்கிறான்.குடும்பம், கலாச்சாரம், மதம் போன்ற கிடுக்கிப்பிடிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு பொதுவெளிக்கு வரும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகள் விசித்திரமானவை.கலாச்சாரத்தின் பெயரால், மதத்தின் பெயரால் மிகச் சாதாரணமாக ஒரு பெண்ணைக் குற்றஞ்சாட்டமுடிகிறது. அவளுடைய நடத்தையை, உடையை, சிந்தனையை, எழுத்தை, பேச்சை கேள்விகேட்க முடிகிறது. ‘நீ இந்தச் சமுதாயத்திற்குரிய பெண்ணல்ல’என்று ஒதுக்கிவைப்பதன் வழியாக, மனவுளைச்சலையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தி, அவளுடைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க வைக்கவும் முடிந்திருக்கிறது. பெண் கவிஞர்கள்‘ஆபாசமான சொற்களைப் பிரயோகித்து ஆபாசமான கவிதைகளை எழுதுகிறார்கள்’என்றொரு குற்றச்சாட்டை, அதன் ஆழம் புரியாமல் போகிறபோக்கில் பேசுகிறவர்களைப் பார்த்திருக்கிறோம். ‘கவிதை ஒன்றை எழுதிவிட்டு ஆங்காங்கே சில கெட்டவார்த்தைகளைச் செருகிவிடுவார்களாயிருக்கும்’என்று அண்மையில் ஒருவர் சலித்துக்கொண்டார். வார்த்தைகளுள் கெட்ட வார்த்தை எது? நல்ல வார்த்தை எது? கெட்ட வார்த்தைக்கான வரைவிலக்கணந்தான் என்ன? என்ற கேள்விகளைப் பற்றி இன்னொரு நாள் பேசலாம். (அப்படியொருநாள் வரவே போவதில்லை என்பதே உண்மை) தன்னுடைய உடலை, உணர்வுகளை, தன்னுடைய படைப்புகளில் வெளிக்கொணர ‘அவளே’தகுதியுடையவள் என்பதை இப்படிப் பேசுகிறவர்கள் உணர்வதில்லை. ஒரு படைப்பின் கருவாக்கமும் உருவாக்கமும் எவர் மனதில் நிகழ்கிறதோ அவரே சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். ‘ஆகச்சிறந்த படைப்பாளி’ என்று வியக்கப்படுகிற கடவுளுக்கு (அப்படி ஒருவர் இருந்தால் - ஒருத்தி என்று சொல்வது வழக்கமில்லையே…) மயிலையும் -காட்டெருமையையும், மலரையும் - முள்ளையும் படைக்க முடியுமெனில், ‘அவளுக்கு’ மட்டும் அவ்வுரிமை கிடையாதா? வலிந்து திணித்தலற்று இயல்பாக முகிழ்த்து வருகின்ற படைப்பினுள் கெட்டவார்த்தை என்று சமூகத்தினால் சுட்டப்படுகிற ஒன்று இருக்குமாயின், அது கேலிக்குரியதோ கேள்விக்குரியதோ அன்று.
ஆறாத காயத்தைப் பிரித்துப்பார்க்கும்போது அதிலிருந்து குருதி கொப்பளித்துப் பாய்வதுபோல, இதுநாள்வரை கிடைக்காத சந்தர்ப்பம் கிடைக்கும்போது காலங்காலமாக அடக்கிவைக்கப்பட்ட உணர்வுகள் எழுத்தாக, பேச்சாகப் பீறிடுகின்றன। பாசாங்கற்ற கண்ணீர்,கோபம்,காமம் தன்னியல்போடு எழுத்தில் வெளிப்படும்போது, அது கவனிக்கப்படுகிறது. மாற்றாக, சில தன்துருத்திகளும் விளம்பரமோகிகளும் அதை மடைமாற்றி, பொதுவெளியில் இயங்குகிற அத்தனை பெண்கள்மீதான வெறுப்பாகத் திசைதிருப்பிவிடுவது துர்ப்பாக்கியமானது.

‘சில பெண்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள்; இப்படியான எழுத்துக்கள் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன’ என்று கூச்சலிடுபவர்களிடம் கேட்பதற்கென்று ஒரு கேள்வியுண்டு. நீங்கள் சொல்கிற சமுதாயம் உண்மையில் நீங்கள் சொல்கிற ஒழுக்க விழுமியங்களோடு இயங்கிக்கொண்டிருப்பதாக நீங்கள் நெஞ்சறிய நம்புகிறீர்களா? அவ்வாறெனில் எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் நமது சமூகத்தில் குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தில் பரவியிருக்கக் காரணந்தான் என்ன?

‘முலைகள்’என்ற தலைப்பை ஒரு கவிதைத் தொகுப்பிற்குச் சூட்டிய காரணத்தால் அளவிறந்த விமர்சனங்களுக்கு ஆளானவர் கவிஞர் குட்டி ரேவதி। அதே தலைப்பை ஒரு ஆண் சூட்டியிருந்தால் இத்தனை சர்ச்சைகள், இருட்டடிப்பு, ஓரங்கட்டல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கும் பல கவிஞர்களின் (ஆண்) கவிதைகளிலும் கதைகளிலும் பல ‘யோனிகள்’வருகின்றன. பல நூறு ‘முலைகள்’இடம்பெறுகின்றன. கலவிக் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. அண்மையில் வா.மு.கோமுவின் புத்தகம் ஒன்றைக் குறித்து உயிர்மை வெளியீட்டு விழாவில் விமர்சித்துப் பேசிய எழுத்தாளர் முருகேச பாண்டியன் “இதைப் படித்தபோது இங்கேயுள்ள பெண்களில் பலர் பாவாடை நாடாவைக் கழற்றிக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதான சித்திரம் தோன்றிமறைந்தது”என்றார். ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’என்ற நாவலை ஒரு பெண் எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்துக்கொண்டபோது, சமூகத்தின் பாரபட்சம் சீற்றமளிப்பதாக இருந்தது.

பெண்களைப் பற்றி அவதூறு பேசுவது என்பது தமது பிறப்புரிமைகளுள் முக்கியமானதொன்று எனச் சில ஆண்கள் (குறித்துக்கொள்ளவும் சில ஆண்கள்) நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இவள் ‘சீதை’எனவும், இவள் ‘பரத்தை’எனவும் முத்திரை குத்தவும் தாங்கள் உரித்துடையவர்கள் என்பது அவர்களது எண்ணமாயிருக்கிறது. ஒருவனின் உதடுகளால் வேசியென முன்மொழியப்படுமொரு பெண், அவளைத் தொடரும் கலாச்சாரக் கண்களனைத்தாலும் வேசியாகவே வழிமொழியப்படுகிறாள். அவர்களது கீழ்மனம் விதம்விதமான கற்பனைச்சரடுகளை இழுத்துவிட்டுக்கொண்டேயிருக்கிறது. ‘விடுதியில் அழகிகள் கைது’என்று மொண்ணையாகச் செய்தி வெளியிடுகிற ஊடகங்களுக்கும், ‘அவள் ஒரு தேவடியாள்’என்று, கூடிக் குடித்துவிட்டுப் பேசுகிற ஆண்களுக்கும் வேறுபாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. விபச்சாரம் என்பது ஒரு பெண்ணால் தனியாக நிகழ்த்தப்படுவதில்லை. அப்படியானால், அங்கே அந்தப் பெண்களோடு கலவியிருந்த ‘அழகன்கள்’செய்திகளிலிருந்து மறைந்துபோவது எப்படி? பொதுப்புத்தி சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற சாதாரண சமூகத்தினரைக் காட்டிலும், இலக்கியமும் தத்துவமும் இன்னபிறவும் படித்து அறிவுஜீவிகள் என்று தம்மை அறிவித்துக்கொண்டிருக்கும் சிலர் அவதூறுகளைப் பரப்புவதன் வழியாக அதிகப்பட்ச வன்முறையைப் பெண்கள்மீது செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். பொதுவெளியில் இயங்கும் பெண்களைப் பற்றிய கட்டுக்கதைகளைச் செவியுறும்போது மனசு துணுக்குறுகிறது. உறுதியும் தெளிவுமற்ற பெண்களை அத்தகைய அவதூறுகள் மீண்டும் வீட்டுக்குள் விரட்டிப் புண்ணியம் கட்டிக்கொள்கின்றன.

பெண்ணை, குடும்ப அமைப்பு தாயும் மனைவியுமாக்கி முடக்குகிறது.கலாச்சாரம் பதிவிரதையாக்கிப் பதுக்குகிறது. இலக்கியம் கண்ணகி என்கிறது. கணவன் பிறபெண்ணுடன் கலவி முடித்துத் திரும்பிவரும்போது அவனது கால்களைக் கழுவி ஏற்றுக்கொள் எனக் கற்பிக்கிறது. இதிகாசம் சீதையாக்குகிறது. கணவன் கீறிய கோட்டைத் தாண்டினால் ‘ஐயோ ஐயோ என்று போவாய்’ என்கிறது. செவியுறும், வாசிக்கும், பார்க்கும், அனுபவிக்கும் எல்லாமும் மனிதனின் ஆறறிவைச் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. பாரபட்சங்களும் தளைகளும் நிறைந்த இந்தக் குடும்ப அமைப்பின், சமூகத்தின் அடிப்படைப் பிறழ்வுகள் குறித்து முதலில் கேள்விகள் எழுப்பக் கற்றுக்கொள்வோம். அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகளிலாவது நமது ஆறாவது அறிவு ஓரவஞ்சனைகளற்று இயங்கவாரம்பிக்குமென பிரார்த்திப்போமாக!
நன்றி :தமிழ்நதி

Monday, March 29, 2010

என் கொத்து ரொட்டி ஆசை


என் கொத்து ரொட்டி ஆசையும் நோர்வேஜியர்களிடம் கேட்ட மன்னிப்பும்
-
என் .சரவணன் -
நேற்று ஒஸ்லோவிலுள்ள தமிழ் உணவுக்கடையொன்றில் நண்பர் ஒருவருடன்சந்திப்பொன்றை செய்யவேண்டியிருந்தது. உரையாடலை ரோல்ஸ் உடன் தேனீர்அருந்திக்கொண்டே செய்தோம். கடையைவிட்டு புறப்படுகையில்கொத்துரொட்டி அறிவித்தலை பார்த்துவிட்டேன். கொத்து ரொட்டி சாப்பிட்டுநீண்ட நாட்களாகிவிட்டது. சாப்பிட ஆசையாக இருந்தது. இரவு உணவுக்குவாங்கிச்செல்லலாமே என நினைத்துக்கொண்டு 65 குரோணர்களுக்கு கொத்துரொட்டியை வாங்கிவிட்டேன். அவர் ரெஜிபோம் பெட்டியொன்றில் போட்டு ஒருபையில் தந்தார்.


5 நிமிட நடையில் ஒஸ்லோ மத்திய பஸ் நிலையத்திற்குச் சென்று பஸ்ஸில் ஏறும் வரைக்கும் ஒன்றும் பிரச்சினையில்லை. வழமையாக நான் தெரிவு செய்யும் நடுப்பகுதி ஆசனமொன்றில் அமர்ந்தது தான் தாமதம் கொத்துரொட்டியின் மணம் பரவ ஆரம்பத்திருந்தது. இவ்வகையான மணம் எப்படிப்பட்ட வெறுப்பினை வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கும் என்பதை நான் அறிவேன்.


பயணிகள் அதிகரிக்கத் தொடங்கினர். உள்ளுக்குள் நுழைந்த சில வினாடிகளில் அவர்கள் மூக்கை சரிசெய்துகொண்டு ஆசனங்களில் அமர்ந்தனர். சிலர் எங்கிருந்து இந்த மணம் வருகிறது எனத் தேடினர்.


எனக்கு இருப்புகொள்ளவில்லை. மணம் அதிகம் வெளியேறாமல் இருக்க எனது பையை இருக சுற்றி மூடினேன். கையில் இருந்த சில சஞ்சிகைகளை எடுத்து மேலே வைத்து பொத்திக்கொள்ள முயற்சித்தும் தோற்றுப்போனேன்.
பஸ் பயனித்துக்கொணடிருந்தது. ஒவ்வொரு தரிப்புகளிலும் நிறுத்தியபோது திறந்த கதவுகள் சிறிது காற்றை உள்ளே இழுத்துக்கொண்டது. உள்ளே இருந்த மணம் ஓரளவு வெளியேற சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஏறிய சிலர் எனது ஆசனத்தைக் கடந்து போனார்கள். அருகிலுள்ள ஆசனம் வெறுமையாகவே இருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் இருமத் தொடங்கினார்கள். இருமுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. நான் எனது ஆசனத்தில் சிலைபோல செய்வதறியாது தர்மசங்கடத்துடன் இருந்தேன்.


10 நிமிடத்திற்குப் பின், பஸ்ஸை விட்டு இறங்கி அடுத்த பஸ்ஸில் பிரயாணம் செய்தால் என்ன எனத் தோன்றியது. குறைந்தபட்சம் இதிலிருந்து நிம்மதியாக பயணிப்பார்கள் என்று தோன்றியது. ஒவ்வொரு தரிப்பிலும் பயணிகள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள். சரி... இன்னும் ஓரு 10 நிமிடம் தானே... சமாளிக்கப்பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். ஆனாலும் என்னை முழுமையாக சமாதானப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒரு நடுத்தர வயதுடைய பெண் பின் ஆசனத்திலிருந்து என்னை கடந்து சென்று பஸ்ஸின் முன் பகுதிக்குச் சென்று ஒரு ஆசனத்தைக் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டார். தொடர்ந்து சில இருமல் சத்தம் கேட்டபடி இருந்தது. மூக்கை சரிசெய்பவர்களையும் சாடையாக கவனித்துக்கொண்டேன். இன்னுமொரு முதிர்ந்த பெண் ஒருவர் என்னைக் கடந்து முன் பகுதியில் இன்னொரு ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.


என் ஆசனம் தொடர்ந்தும் வெறுமையாகவே இருந்தது.


ஒரு பஸ் தரிப்பில் ஏறிய ஒரு இளம் மாணவி 3 பைகளுடன் என் அருகில் வந்து அமர்ந்தார். "ஐயோ.... ஏம்மா வேற இட் கெடக்கலியா..." என்றிருந்தது. அந்த மாணவியும் ஒரு சில வினாடிகளில் மூக்கை சரி செய்தகொண்டதில் எனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.


என்னுடைய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆசனத்தை விட்டு எழும்பிய நான். ஒரு கையை மேற்பிடியில் பிடித்துக்கொண்டு மறு கையில் கொத்துரொட்டி பையை பிடித்துக்கொண்டு நோர்வேஜியர்களை நோக்கிக் கதைக்கத் தொடங்கினேன்.


"...என் கையில் இருப்பது உணவுதான். ஒரு இந்தியவகை உணவு. இதன் மணம் இவ்வளவு அசெளகரியங்களை உங்களுக்கு கொடுக்கும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இனி இந்த காரியத்தை இன்னொருமுறை செய்யமாட்டேன். அசெளகரியத்துக்கு தயவுசெய்து மன்னியுங்கள்...." என்றேன். பஸ்ஸில் இருந்தவர்களில் சிலர் பரிதாபமாகப் பார்த்தார்கள்... சிலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். என் தரிப்பிடம் வந்ததும் வேகமாக இறங்கி வீட்டை நோக்கி நடந்தேன்...


இரவு 10 மணியாகியும் மேசையின் மீதிருந்த கொத்துரொட்டியில் கைவைக்கவில்லை. இலங்கையில் இருக்கும் அம்மாவை தொலைபேசியில் அழைத்து ஏற்பட்ட கஸ்டத்தை பகிர்ந்து கொண்டதன் பின்னர் தான், கிடைத்த ஆறுதலில் கொத்துரொட்டி பொதியை திறந்தேன்.

கொத்துரொட்டி உண்மையில் நன்றாகத் தான் இருந்தது.

Saturday, March 27, 2010

வட்டுக்கோட்டைத் தீர்மானம்



வட்டுக்கோட்டைத் தீர்மானமும் பாலி நாட்டுக் கோழிச்சண்டையும்

- ராகவன்-

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான பொதுசன வாக்கெடுப்பு என்று ஐரோப்பிய வட அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழர் குழுக்கள் பந்தயம் கட்டுகின்றனர். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கே ஏகோபித்த ஆதரவு தமிழ் மக்களிடம் இருப்பதாகவும் 99. 9 விழுக்காடு வாக்காளர்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததாகவும் தமிழர் ஊடகங்கள் தற்பெருமை கொண்டாடுகின்றனர். நாடு கடந்த தமிழ் ஈழம் பற்றிய கனவுகளுக்கும் அதனை முன்னெடுக்கும் வெளிநாட்டுத் தமிழ்க் கனவான்களுக்கும் நம்மிடையே குறைச்சலில்லை.

அதே சமயம் இலங்கை வாழ் தமிழர் இது வரை அடி வாங்கியது போதாதென்று இந்த வெளிநாட்டுத் தமிழர் தமக்கு மேலும் அடி வாங்கித் தரவே முயல்கின்றனர் என எண்ணுகின்றனர். சமீபத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாக அல்லது குறைந்த பட்சம் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகத் தமது வாக்குகளை நல்கியிருப்பின் சிறியவன் சிவாஜிலிங்கத்திற்கோ அல்லது தோழர் விக்கிரமபாகு கருணாரட்ணாவிற்கோதான் தமது வாக்குகளை அளித்திருப்பர். ஆனால் நடந்தது வேறு. தமிழரின் பெரும்பாலான வாக்குகள் சரத் பொன்சேகாவிற்கும் மகிந்தவிற்கும்தான் போடப்பட்டிருக்கின்றன. வட்டுக்கோட்டைத் தொகுதியிலேயே பதினோராயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை சரத்தும் நாலாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை மகிந்தவும் பெற்ற அதேவேளை, சிவாஜிலிங்கம் ஐநூறு வாக்குகளைப் பெற, விக்கிரமபாகு கருணாரட்ணா இருநூறுக்கும் குறைவான வாக்குகளையே பெற்றார்.


தமிழ் மக்கள் பெரும்பாலும் வாக்குகளைப் போடவில்லை. தமது தேர்தல் பகிஸ்கரிப்பைக் காட்டினார்கள் என்று முணுமுணுப்பது காதில் கேட்கிறது. ஆனால் இது மிகச் சிக்கலான விடயம்.

உதாரணத்திற்கு, யாழ்ப்பாண மாவட்ட மக்களின் வாக்காளர் எண்ணிக்கை பற்றிய ஒரு மதிப்பீட்டைச் செய்யும்போது பல்வேறு தரவுகளைக் கவனத்திலெடுக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் 81 காலப்பகுதியிலான வாக்காளர் பட்டியலே பயன்படுத்தப்படுகிறது. யுத்தத்தில் இடம் பெயர்ந்தோர், இறந்தோர் அனைவரது பெயரும் பட்டியலில் இருப்பதோடு புதிதாக 18 வயதை அடைந்து வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதே நடைமுறை.

ஒருபுறம், முக்கியமாக யாழ் மாவட்டத்தில் வாக்காளரின் எண்ணிக்கை ஏழரை இலட்சம் என கூறப்பட்டது. இதில் 25.66 வீதம் மக்களே வாக்களித்தார்களென்றும் எனவே பெரும்பாலானவர்கள் வாக்களிக்கவில்லை எனவும் ஒரு வாதம் வைக்கப்பட்டது. 2004 பொதுத்தேர்தலில் 6 லட்சத்துக்கு மேல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குரிமை பெற்றவர்கள் இருந்தபோதும் புலிகள் தமிழ்த்தேசிய கூட்டு முன்னணிக்கு ஆதரவு வழங்கியபோதும் 50 வீத மக்களே வாக்களித்திருந்தனர். 2007 க்கான சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி யாழ் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேலானவர்கள் மூன்று இலட்சத்து எழுபதினாயிரம் அளவிலென தெரிவிக்கப்பட்டது. 2004 தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வாக்களித்தவர்கள் தொகை 305259. 2004 இல் புலிகள் உட்பட அனைத்து கட்சிகளும் மக்களை வாக்களிக்க தூண்டின. எனவே 721359 வாக்காளர்கள் யாழ் மாவட்டத்தில் இருப்பதென்பது நம்பத்தகாதது. வாக்காளர் பட்டியலானது 1981ன் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. இடம் பெயர்ந்தோர், புலம் பெயர்ந்தோர் அனைவரும் அப்பட்டியலில் அடங்குவர். இந்தப்பின்னணியில் 4 இலட்சத்திற்கும் குறைவான வாக்காளர்களே யாழ் மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம். இதன் அடிப்படையில் கடந்த தேர்தலில் 50 விழுக்காடு மக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களித்திருக்கிறார்கள். அதுவும் மிகப்பெரும்பான்மையான வாக்குகளை சரத்திற்கும் மகிந்தவிற்குமே அளித்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் வெளிநாடு வாழ் தமிழ் கனவான்களின் அரசியல் விருப்புகளிற்கும் இலங்கை வாழ் தமிழரின் அரசியல் விருப்புகளிற்கும் இடையே அடிப்படை முரண்பாடு காணப்படுகிறது. இந்த முரண்பாடானது இன்று நேற்றல்ல. 80களிலேயே தொடங்கிவிட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்னெடுத்த அ. அமிர்தலிங்கம் லண்டனுக்கு ஜுன் 82ல் வந்தபோது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் 200 பேரளவில் அவரை சந்தித்தனர். அதற்கு முன்னதாகப் பொங்கல் தினத்தன்று 14.01.82இல் நாடுகடந்த தமிழீழப் பிரகடனத்தை அமெரிக்காவில் நிறைவேற்றி அதனை இலங்கையிலும் பிரகடனப்படுத்துமாறு அமிர்தலிங்கத்தை வற்புறுத்தினர். அமிர்தலிங்கம் சொன்னார்: "தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பின் வட கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாகத் தண்டிக்கப்படுவார்கள்" வருகை தந்திருந்த பிரதிநிதிகள் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்குப் பொறுப்பு நீங்களே எனக் கேட்க அவர் சொன்னார்... "அனைத்து மக்களும் அழிந்து போனபின் வரும் விடுதலையால் எப்பயனும் இல்லை; நல்வாழ்வை அனுபவிக்க அங்கு யாரும் இருக்க மாட்டர்கள்".

"வங்காள தேசம் விடுதலை பெற்றது என அனைவரும் சிலாகிக்கிறோம் 35 லட்சம் பேர் இறந்து தான் வங்காள தேசம் விடுதலை பெற்றது . நாமோ 35 லட்சம் மட்டுமே" என்று அ. அமிர்தலிங்கம் சொன்னபோது, "ஜே. ஆரிடம் போய் அவனது முகத்திற்ற்கு நேரே சொல் நீ நரகத்துக்குப் போவாய்" என்று அமிர்தலிங்கத்தை நோக்கிக் கூச்சலிட்டார் தமிழீழப் பிரகடனத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வைகுந்தவாசன். அதற்கு அமிர்தலிங்கம் "தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தினால் நரகத்துக்கு போகப்போவது ஜே ஆர் அல்ல, தமிழ் மக்களே" என்றார். அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் தீர்க்கதரிசனத்தை அன்றும் இன்றும் கேட்டிருந்தால் இன்று நமது உரிமைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடங்கிப்போயிருக்காது.


இன்று வெளிநாட்டில் இருக்கும் பிரமுகர்களும் கனவான்களும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் நாடுகடந்த தமிழீழத்தையும் கொண்டாடுவது இலங்கை வாழ் தமிழர்களின் அக்கறையாலல்ல. மாறாகத் தமது சுய கவுரவம், இரத்த வேட்கை ஆகியவற்றால்தான். விடுதலைப் புலிகள் இராணுவ வெற்றிகளை அடையும்போது இவர்களின் சுய கெளரவமும் சமூக அந்தஸ்தும் உச்சநிலையில் நின்றது. வெளிநாட்டவர் ஒருவர், நீங்கள் இலங்கையரா என்றும் பின்னர் தமிழரா என்றும், பின்னர் புலியா என்றும் கேட்கும்போது உச்சி குளிர்ந்து தலை ஆட்டியவர்களுக்கு இன்று சோதனைக் காலம். தங்கள் சுயகெளரவம், அந்தஸ்து போய்விட்டதே என்று அவர்கள் முறுகித் திரிகிறார்கள்.

பாலி நாட்டுக் கோழிச்சண்டை பற்றி மானிடவியலாளர் கிளிபேட் கீட்ஸ் எழுதிய ஆக்கத்தை நீண்டகாலத்துக்கு முன் படித்திருந்தேன். வெளிநாட்டவர்களின் வட்டுக்கோட்டைத் தீர்மானப் பந்தயத்திற்கும் பாலி நாட்டுக் கோழிப் பந்தயத்திற்கும் தொடர்பிருப்பதாக எனக்குப்பட்டது. மீண்டுமொருமுறை அந்த ஆக்கத்தைப் படித்தபோது ஆச்சரியத்துக்குரிய ஒற்றுமை உறுதியானது. பாலி நாட்டில் கோழிச் சண்டைக்கும் பந்தயத்திற்கும் தடை. ஆனாலும் ஊர்ப்புறங்களில் கோழிச்சண்டையும் பந்தயமும் வெளிப்படையான இரகசியம். கோழிச்சண்டையின் வெற்றி தோல்வியை நடுவரே தீர்மானிப்பார். நடுவரின் தீர்ப்பே இறுதியானது. நடுவரை எவரும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. தவறான தீர்ப்பெனினும் அவரை விமர்சனம் செய்வதில்லை. சண்டைக்கோழியை வளர்ப்பவர்கள் அதனை சதா தடவிக்கொண்டும் அதன் மேல் தீராக் கவனமும் காதலும் கொண்டிருப்பர். கோழிச்சண்டையின் தார்ப்பரியம்: கோழியின் உரிமையாளரின் கோழி மேலான அளவுகடந்த அர்ப்பணிப்பு மட்டுமல்ல; அது ஆண்மையின் சின்னமும் கூட. மிருகங்களின் மேலான அளவு கடந்த வெறுப்பு. இந்த குருதிப்போர் மனிதனின் ஆக்க சக்தியான ஆண்மை எழுச்சிக்கும் அழிவு சக்தியான மிருகவியலுக்குமான யுத்தம். தர்மம், அதர்மம், மனிதன், மிருகம், தன்முனைப்பு இவை அனைத்தும் கலந்த எழுச்சியில் வெறுப்பு, வன்முறை, குரூரம் கொலையென கோழிச்சண்டை அரங்கேறுகிறது.

மையப் பந்தயம்: கூட்டாகவும் அமைதியாகவும் கோழிகளின் உரிமையாளர்கள் இருவரும் அவர்களது ஆதரவாளர்களும் ஒழுங்கமைப்பது.

பக்கப் பந்தயம்: அக்கறையற்ற பார்வையாளர்கள்


பந்தயம் கட்டுவது பணத்துக்காகவல்ல. அது சமூக அந்தஸ்து பெருமை . ஆனாலும் ஒரு கோழியின் மேல் அதிக பந்தயம் பிடிக்கும்போது அதிகமான பணம் சேர்வதும் ஒரு சமூக அந்தஸ்தை தருகிறது. தனது ஊர்க் கோழிக்கெதிராகவோ அல்லது தனது சொந்தக்காரரின் கோழிக்கெதிராகவோ யாரும் பந்தயம் கட்டுவதில்லை

கோழிச்சண்டை நடத்துவது சமூக உணர்வை கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ அல்ல. இரத்தம், இறக்கை, கூட்டம், பணம் ஆகியவற்றின் கூட்டை மேடையேற்றிக் காட்டுவதே இது. இக்கோழிச்சண்டையானது பாலி மக்கள் தங்களது கதையைத் தங்களுக்கே சொல்வதென்கிறார் கீட்ஸ்.


வட்டுக்கோட்டைத் தீர்மானமும் பொதுசன வாக்கெடுப்பும் பாலி நாட்டுக் கோழிச்சண்டை போல் தான். தமது சுய கெளரவமும், ஆண்மையை இழந்துவிட்டோமோ என்ற அச்சத்தில் தமது ஆண்மையை மேடையேற்றுவது. தமது கதையைத் தமக்கே சொல்லி அதனை மேடையேற்றிச் சுய இன்பம் அடைவது. இது ஒரு மேடை நாடகம். இலங்கைவாழ் தமிழர் இதுபற்றி அக்கறைப்படப்போவதுமில்லை அல்லது உலகம் இவர்களது கூத்துகளைக் கண்டு தமிழீழம் பெற்றுக் கொடுக்கப் போவதுமில்லை.

நன்றி : புகலி

Wednesday, March 24, 2010

Campaign for Repeal the Prevention of Terrorism Act (PTA) and end gross violations of rights in Sri Lanka!!


There is no longer any reason for the Prevention of Terrorism Act in Sri Lanka; on the contrary, there are many compelling reasons as to why it should immediately be repealed. It was the existence of the LTTE and its ruthless violence that the government used to justify the promulgation and maintenance of the PTA. Now, by the very admission of the government this threat has ceased to exist.
Even at a time of grave danger the PTA was too draconian and many of the provisions in the act could not have been justified. This has been pointed out by local legal opinion, local human rights groups and governments around the world, as well as international human rights agencies and several United Nations agencies and experts.
After the defeat of the LTTE the government said that elements associated with it could remain, and that some new elements may emerge; yet every country faces this possibility all the time. If this reasoning is used to suspend the operation of a normal legal system then this would need to apply everywhere, forever. Terrorism – even war – is always possible, but if people are willing to abandon their freedoms and their normal legal rights to preempt these possibilities, draconian law will reign indefinitely.
As long as the PTA remains in operation there is reason to suspect that it is being used by the government for political advantage, as an instrument to perpetuate its own power. Complaints of oppression by the opposition and other dissenting voices will have legitimate weight.
The Act has effectively aided the destruction of the normal rule of law within Sri Lanka and undermined the independence of its judiciary; indeed litigants, lawyers and even the judges may have started to forget what a strong, functioning legal system is like. To maintain the PTA is to continue destroying what is left. The disadvantages far outweigh the advantage that the the government spokesperson may claim that it has.
An enduring PTA will continue to place the Criminal Investigation Division and the Terrorism Investigation Division beyond the control of the law, with no checks or balances against its abuse of power. Tales of torture being used, charges being fabricated and deaths occurring in places of detention are heard constantly, yet while the PTA exists there is no way to even investigate such allegations, let alone avoid them.
Sri Lanka’s policing system has collapsed; this is now a fact acknowledged by all. Yet no reform process can be set in motion, and under the protection of the PTA Sri Lanka's police force will continue to degenerate, its people given no option but to live under its oppression, corruption and arbitrary violence.
What this means is that literally hundreds of thousands of people will suffer without any legal recourse, and large numbers will continue to live outside the protection of the law. The entire population will be affected.
It is time for everyone in Sri Lanka and beyond to earnestly request the immediate repeal of the Prevention of Terrorism Act by the Sri Lankan government. The judiciary must no longer be undermined by those with extraordinary power, the rule of law must be revived and all people must be given its protection.

Tamil:
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை வாபஸ் பெற்று பாரிய அளவில்
நிகழும் உரிமை மீறல்களுக்கு முற்றுப் புள்ளி இடவும்!!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினைத் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. மாறாக அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதற்கு பல மறுக்க முடியாத காரணங்கள் உள்ளன.
நான்கு மாதங்களிற்கு முன்னர் LTTE யினரை தோற்கடித்து விட்டதாக அரசு பிரகடனப்படுத்தியது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரகடனப்படுத்தி அதனை நடைமுறையில் வைத்திருந்ததை, LTTE யினர் நிலை கொண்டிருந்து ஈவு இரக்கமற்ற வன்முறையில் ஈடுபட்டதைக் காரணம் காட்டி அரசு நியாயப்படுத்தியது. தற்சமயம் அரசின் கூற்றிற்கமையவே அவ்வகையான வன்முறைக்கான அச்சுறுத்தல் ஓய்ந்து விட்டது. ஆகவே தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த எக்காரணமும் இல்லை.

LTTE யினர் ஏற்படுத்திய பாரிய அச்சுறுத்தலின் பின்னணியில் கூட, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகள் கொடூரமானவை எனக் கருதப்பட்டது. குறிப்பிட்ட வகையிலான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் கூட இச்சட்டத்தின் விதப்புரைகள் நியாயப்படுத்தக் கூடியதாக இருந்ததில்லை. இது இவ்வகையிலானது என்பதை உள்ளூர் சட்ட வல்லுனர்களின் கருத்தும், உள்ளூர் மனித உரிமைகள் ஆர்வலர்களின் குழுக்களும், உலகின் பல்வேறு அரசுகளும், பல ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் முகவர் அமைப்புக்களும், நிபுணர்களும், மற்றும் பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன. ஆகவே இச்சட்டத்தை நியாயப்படுத்துவதற்கான காரணம் அற்றுப் போயுள்ளமையால் இக்கொடூரச் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருக்க எந்தவொரு அடிப்படையுமில்லை.
LTTE யுடன் தொடர்புள்ள பலரும் அவ்வகையிலான சில புதிய அமைப்புக்களை உருவாக்கலாம் எனக் காரணம் காட்டி குறித்த சட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்துகின்றார்கள். இவ்வகையான நிலைமை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் எல்லா நாடுகளும் எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாகும். இக்காரணத்தின் அடிப்படையில் சாதாரண சட்ட ஒழுங்கு முறைக்கு அமைய செயற்படுவதை இடை நிறுத்த இதனைக் காரணமாகக் கொள்வதெனில் எல்லா நாடுகளும் எல்லாச் சமயங்களிலும் இவ்வகையான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவையேற்படும். பயங்கரவாத அமைப்புக்கள் மாத்திரமன்று உலக யுத்தங்கள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வகையிலான ஒரு வாய்ப்பு உள்ளது என்று கூறி மக்கள் தங்கள் சுதந்திரங்களை இழந்து சாதாரண சட்ட ஒழுங்குகளிற்கமைய செயற்படுவதையும் இழக்க நேரிடுமாயின் குறித்த வகையிலான கொடூர சட்டங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியாது போகும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடாந்து நடைமுறையில் இருக்குமேயானால் அதில் இருந்து அரசியல் அனுகூலங்களைத் தாம் பெறுவதற்காகவே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசு நடைமுறையில் வைத்திருக்கின்றது என்று குற்றம் சுமத்தவும், நியாயப்படுத்தக்கூடிய ஐயம் ஏற்படவும் இடமளிக்கின்றது. தனது அதிகாரத்தை செலுத்த பயங்காரவாத தடுப்புச் சட்டத்தை அரசு ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என அனுமானிக்க இடமளிக்கின்றது.

எதிர்கட்சியில் உள்ளவர்களும் அரசின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டவர்களும் ஆளும் கட்சி தன் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு, மாற்றுக் கருத்துக்களை அடக்கிவைக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றது என்று கூறுவது உண்மையாகின்றது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக நாட்டினுள் வழமையான சட்டத்தின் ஆதிக்கத்திற்கு அமைவான செயற்பாடுகளை அழிக்கவும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தவும் இடமளித்தது. அதன் விளைவாக வழமையான சட்டத்தின் ஆதிக்கத்திற்கு அமைவான ஒழுங்கு முறைகள் எவ்வகையிலானது என்பதனை வழக்காளிகளும், சட்டத்தரணிகளும், நீதிபதிகளும் கூட மறக்க ஆரம்பித்து இருப்பார்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம் எல்லாப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் சட்டத்தின் ஆதிக்கமும், நீதித்துறையின் சுயாதீனத் தன்மையும் பாரிய அளவில் பாதிப்புற்றுள்ளன. தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நடைமுறையில் வைத்திருப்பது என்பது அதன் பாதகமான விளைவுகளை தொடரவிடுவதற்கு ஒத்ததாகும். ஆகவே அரசின் பேச்சாளர் கூறும் சிறு அனுகூலங்களைக்காட்டிலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதனால் ஏற்படும் பிரதிகூலங்களும், பாரிய பாதகமான விளைவுகளும் அதிகமானவை.
தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பது குற்றவியல் புலனாய்வுப் பிரிவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவும் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அமைப்புக்களாகிவிடும். இவ்வமைப்புக்களுக்கு பெருமளவு அதிகாரங்களை பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் அளித்துள்ளமையால் அவைகள் தமக்குள்ள அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்த செயல்வலுவுள்ள எந்த வழியுமே இல்லை. அவர்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், வேண்டுமென்றே அவர்கள் மரணிக்கச் செய்யப்படுவதாகவும் அடிக்கடி கேள்விப்படும் விடயமாகும். எனவே பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை இவ்வகையான நிகழ்வுகளைத் தவிர்த்துக் கொள்ள வழி இல்லாதுபோய்விடுவது மாத்திரமன்றி இவை தொடர்பான புகார்களைக் கூட புலனாய்வு செய்ய முடியாத நிலை உள்ளது.
இலங்கையில் பொலிஸ் ஒழுங்கு முறைகள் செயலற்றுப் போயுள்ளன என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு விடயமாகும். இவ்வமைப்பை புனரமைப்புச் செய்வதற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ள காலம் வரை நடைமுறைப்படுத்த முடியாத ஒரு விடயமாகும். அப்படியெனின் பாரதூரமான அளவிற்கு செயலற்றுப் போயிருக்கும் பொலிஸ் ஒழுங்கு முறை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து கொண்டேபோகும். அதன் விளைவாக மக்கள் அடக்கு முறைக்குட்பட்டும் ஊழல் மோசடிகள் மத்தியில் நியாயப்படுத்த முடியாத செயல்கள் மத்தியிலும் வாழ நேரிடும்.
இவை எல்லாவற்றின் விளைவு ஆயிரக்கணக்கானோர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளினால் பாதிப்புற்ற நிலையில், அதற்கு சட்டத்தினால் எந்த நிவாரணமும் பெற முடியாத நிலை ஏற்படும். அதன் பொருள் யாதெனில் பெருமளவிலான மக்கள் சட்டத்தின் பாதுகாப்பு அற்ற நிலையில் வாழ நேரும் என்பதே. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினால் ஏற்படும் தாக்கம் இந்நாட்டு மக்கள் எல்லோரது வாழ்விற்கும் மேற்கூறப்பட்ட பாதகங்களை ஏற்படுத்தும்.
ஆகவே இலங்கை வாழ் மக்கள் யாவரும் அதன் வெளியில் வாழும் இலங்கையரோ அல்லது ஏனையோரோ பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்திடம் அழுத்தமான வேண்டுகோள் விட வேண்டும். மேலும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள அதி விசேட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் நீதித்துறையினை வலுவிழக்கச் செய்து சாதாரண சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நீதித்துறையினர் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வழி வகைகளை செய்து உதவுவதற்கு இச்சட்டம் முட்டுக்கட்டையாகவுள்ளது.

உத்தேசக் கடிதம்

நெடுநாட்களாக இலங்கை மக்கள் அனுபவித்து வரும் பாரியளவிலான துன்பங்களை மிகுந்த கவலையுடன் நான் அவதானித்து வந்துள்ளேன். LTTE யினரை தோற்கடித்துவிட்டதாக அரசு பிரகடனப்படுத்தியதும் இந்நாட்டின் எல்லா மக்களுக்கும் சமாதானம் ஏற்படும் என்றும், அவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்புக் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தேன். தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதன் மூலம் இவ் எதிர்பார்ப்பில் ஏமாற்றம் அடைந்தேன். மக்களின் உரிமைகள் மறுத்து குறித்த கொடூர பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத முறையில் நடைமுறைப்படுத்தி மக்களைத் தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு விடயமாகும். மேலும் சட்டத்தின் ஆதிக்கத்தை நியாயப்படுத்தக் கூடியவகையில் நடைமுறைப்படுத்துவதற்கான கோட்பாடுகளிற்கும் முரணானவையாகும். இவ்வகையிலான கொடூரச் சட்டத்தின் கீழ் வாழ்வது என்பது நரக வாழ்க்கைக்கு ஒத்ததாகும். இச்சட்டங்களினால் விசேடமாக பாதிப்புற்றோர் உளர். அவர்கள் எந்த வகையிலான மனிதாபிமான முறையிலான பராமரிப்பினையோ சட்டப் பாதுகாப்பையோ பெற முடியாத நிலையில் உள்ளனர்.
ஆகவே இந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் பாரிய துன்பத்தில் இருந்து உடனடியாக அவர்களை மீட்டு எடுத்து நாட்டின் சாதாரண சட்டத்தின் செயற்பாட்டை மீள ஏற்படுத்தி சட்டத்தின் பாதுகாப்பை அவர்களுக்கு அளிக்கக் கூடிய வகையில் நீதித்துறைக்கு அதிகாரத்தை வழங்கி ஒரு ஜனநாயகத்தின் கீழ் அத்துறையினரிடம் இருந்து எதிர்பார்க்கும் பொறுப்பை நிறைவேற்ற இடமளிக்குமாறு ஸ்ரீலங்கா அரசிடம் வேண்டுகின்றேன்.


The Petition

Dear Mr. President Rajapakse,

I have long been watching the tremendous suffering of the people in Sri Lanka with great anxiety.

When the government declared the defeat of the LTTE, I hoped that those within Sri Lanka's border would regain the protection of the law, and a sense of peace. Yet this hope has been betrayed by the continued operation of the Prevention of Terrorism Act. There is no longer justification for the PTA, and all it currently achieves is the large-scale deprivation of civilians' rights and the arbitrary use of draconian laws. These leave huge numbers of Sri Lankans without the right to demand humane treatment or legal protection - they lack logic or reason, they are against all principles of equality before the law and for many, they have made Sri Lanka a living hell.

I therefore urge the Sri Lankan government to immediately remove this cause of extreme suffering by restoring the rule of law and leaving the judiciary to its work. The judiciary must no longer be undermined by those with arbitrary, extraordinary power, the rule of law must be revived and all people must be given its protection, as is expected within a democracy.


Yours sincerely,

[fullname]
[location]


to support this petition:

Labels:PTA


டென்மார்க்கிலிருந்து வெளிவந்துள்ள இனி சஞ்சிகை
-அலைகள் விமர்சனக்குழு-

வெகு தூரம் சறுகலான பாதையில் போய்விட்ட புலம் பெயர் சமூகத்தை மறித்து ஞாபங்களை பரிமாறும் ஒரு சஞ்சிகை. வேண்டிப் படியுங்கள்

புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் மிகவும் சிரமமான பணிகள் இரண்டு ஒன்று பத்திரிகை நடாத்துவது அடுத்தது மாதாந்த சஞ்சிகைகள் நடாத்துவது. இவைகளை நடாத்தினாலும் வாசகர்களை படிக்க வைப்பது அதைவிட பெரும் கடினமான காரியம். திருப்பத் திருப்ப முதலாவது படியிலேயே ஏறுவதும் குதிப்பதுமாக இருக்க வேண்டும், இரண்டாவது படிக்கு போவது இயலாத காரியம். பல ஊடகங்கள் இரண்டாவது படிக்குப் போக பயந்து கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆனா, ஆவன்னா பாடம் படிப்பித்துக் கொண்டிருக்கின்றன. இந்த யதார்த்த நிலையில் காத்திரமாக எதையோ செய்ய வேண்டுமென்ற ஆவல்களும் சிலரிடம் இருந்துவருதையும் மறுக்க முடியாது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வெளிவந்திருப்பது இனி என்ற இதழாகும். தமிழர்கள் இனியாவது ஆனா ஆவன்னா பாடத்தை விட்டு இனா ஈயன்னாவிற்குள் போக வேண்டுமென்பது இந்தச் சஞ்சிகையின் விருப்பமாக இருக்கிறது.

டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்துவரும் இலக்கியகர்த்தாவும் கவிஞருமான ரீ. சத்தியதாஸ் மற்றும் கேர்னிங் நகரில் வாழ்ந்துவரும் மார்க்சிய சிந்தனையாளர் எம்.எஸ். கந்தசாமி ஆகிய இருவரையும் ஆசிரியராகக் கொண்டு, ஒவியர் அமிர்தலிங்கத்தின் அட்டைப்படத்துடன் டேனிஸ், தமிழ் சமூக கலாச்சார இதழாக இது வெளி வந்துள்ளது. இந் நூலில் எஸ்.கோத்தாரி, கலையரசன், வி.ரி.இளங்கோவன், எஸ்.சந்திரபோஸ், சி.சிவசேகரம், சி.கா.செந்திவேல் , அரவிந்தன் சரவணன், கரவைதாசன், ஆதவன் தீட்சண்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.


நூலில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விடயமாக ஈழத்தின் பிரபல எழுத்தாளர் கே.டானியலின் வாழ்க்கை, கருத்தியல்கள் பற்றிய விடயங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. கே. டானியலை தமிழகத்தில் பேசப்படுவதுபோல ஒரு தலித்தியவாதி என்ற கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது. அவர் மார்க்சிய சோசலிச சிந்தனைகளின் வழி சமுதாயத்தை நடாத்த முயன்ற போராளி என்று வாதிடுகிறது. இந்தியாவிற்குள் தலித்தியம் கண்டுள்ள சறுகல்களுக்குள் கே.டானியலும் அடிபட்டுப் போய்விடாதிருக்கும் வகையாக அவர் வாழ்வின் நிதர்சனங்களை பேசுகிறது. எனக்கு ஓர் அரசியல் பாதை உண்டு அதற்கு உந்துதலாகவே எனது படைப்புக்களை தருகிறேன் என்ற டானியலின் கருத்து, அவர் பொதுவுடைமைக்கட்சியூடாகவே பயணித்தவர் என்று வாதிட உதவியாக உள்ளது. கே. டானியலின் பஞ்சமர்கள் தொடர்பான நாவல்களில் அவர் வைத்த கருத்துக்களும் நூலில் மறுவாசிப்பிற்குள்ளாகிறது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாண சமுதாய ஒடுக்கு முறைகளுக்குள்ளால் நின்று கே.டானியலின் படைப்புக்களை வாசித்தால் ஏற்படும் கோபத்தையும், போர்க்குணத்தையும் தாங்கும் பலமுள்ள சித்தாந்த அமைப்பென எதுவும் இருக்குமா என்பது மனதை வாட்டும் முக்கிய கேள்வி. பஞ்சமர்களில் அவர் சுட்டிக்காட்டும் கொடுமைகளை இடி தாங்கி போலத் தாங்கினால் மார்க்சியம், பொதுவுடமை, ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் உட்பட அனைத்துக் கட்டமைப்புக்களுமே தவிடுபொடியாகும் என்பதே நிதர்சனமாகும். சாதியம் எந்தக் கட்டமைப்புக்குள்ளும் அடங்காத நாசகார செயல் என்ற எண்ணத்தையே நூல் ஏற்படுத்துகிறது.

இதே நூலில் 2001 ம் ஆண்டு ஆபிரிக்காவின் டர்பன் நகரில் கூடப்பட்ட இனவெறிக்கு எதிரான உச்சி மாநாடு பற்றிய செய்திகளை கலையரசன் எழுதியுள்ளார். இந்த மாநாடானது பங்கேற்ற 166 நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளையும் எதிரணிக்கு தள்ளியது என்று குறிப்பிடுகிறார். நிறவெறியில் வளர்ந்த அமெரிக்கா, இன, மத வெறியில் வளர்ந்த இஸ்ரேல், சாதி வெறியில் வளர்ந்த இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் பெரும் சங்கடத்தை சந்தித்தன. எல்லோரும்தான் கொலை செய்கிறார்கள். கொலை செய்தவன் எதிரியா நண்பனா என்பதைப் பொறுத்தே நீதி வழங்கப்படுகிறது என்ற தகவலை இக்கட்டுரை பதிவு செய்கிறது.


தீண்டாமை மனித உரிமையை மீறவும், வன்முறையை தூண்டவும் வழி செய்கிறது. மனித குலத்திற்கு விரேதமானது சாதிப்பாகுபாடு, இவற்றைத் தடுக்க போராடினால் அவர்கள் மீது கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஏவப்படும் என்று மாநாட்டு தீர்மானம் வரையறை செய்ததை சுட்டிக் காட்டுகிறது. இன்று புலம் பெயர் சமுதாயத்தில் வெள்ளைக்காரியை மண முடித்தால் ஏற்கும் சாதியம், அதேபோல தாழ்ந்த சமுதாயத்தில் உள்ள தன் தமிழ் இனத்தை ஏற்க மறுக்கிறது. கொழும்பில் உள்ள சிங்களத்தியை மணமுடித்தபோது மகிழ்ந்த யாழ்ப்பாண சாதியம், அதே நபர் சிங்களத்தி இறக்க ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்தமைக்காக சாவுக்கும் வேண்டாமென தலைமுழுகி முருங்கையிலை கஞ்சி காய்ச்சியதாகக் கூறும் கே.டானியலின் கதையையும் சுட்டிக் காட்டுகிறது. சாதியத்திற்கு எதிரான போராட்டம் தொடர வேண்டிய போராட்டமென இன்னொரு கட்டுரையில் கலாநிதி. சி. சிவசேகரம் வாதிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சி.கா. செந்திவேலின் 1966 ஒக்டோபர் 21 எழுச்சியின் வரலாற்று முக்கியம் என்ற மறு பதிவு இடம் பெறுகிறது. இதில் கே.டானியல் மற்றும் எஸ்.ரி.என் நாகரத்தினம் போன்றோரின் பங்களிப்பும் சுட்டிக்காட்டப்படுகிறது. இவைதவிர இராணுவத்தை கொண்டாடும் தேசம் என்ற வடக்கின் இன்றைய நிலைகள், மார்க்ச் பிராய்ட் இருவருடைய சிந்தனை வேறுபாடுகள், கவிதைகள், டேனிஸ் பொதுவுடமைவாதிகள் பற்றிய தகவல்களும் நூலில் விரவியுள்ளன.

புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் தமிழினம் போகும் சறுகல் பாதையில் இந்தச் சஞ்சிகை அவர்களுக்கு சில உண்மைகளை எடுத்துரைக்கத் துடிக்கிறது. ஆனால் வரலாற்றை மறந்து வெகு தொலைவில் போய்விட்ட புலம் பெயர் தமிழினம் இதை எவ்வாறு புரியப்போகிறது என்பது முக்கிய கேள்வியாகும். ஓநாய்களின் கூட்டத்தில் வாழ்ந்த சிங்கமொன்று தனது முகத்தைக் காணும்வரை ஓநாய்போலவே ஊளையிட்டு திரிந்ததென ஒரு கதை உண்டு. என்றாவது அது தனது முகத்தை குளத்தில் பார்க்கும் பிடரி சிலிர்த்து எழும்பும் என்ற தளராத எண்ணத்துடன் இதன் ஆசிரியர் குழுவினர் பாடுபட்டுள்ளனர்.

வாசிப்புக்கலை அருகிவரும் சூழலில் இளையோரை சென்றடையுமாறு இதன் தயாரிப்புக்கள் செதுக்கப்பட வேண்டும். அழகு, பணம், அதிகாரம் ஆகிய மூன்றுக்கும் சாதியம் என்ற பேய் தலை வணங்குவதையும், கூனிக்குறுகி சமரசம் காண்பதையும், தலித்தியம் பிழைப்புவாதமாகப் போனது ஏன் என்பதையும் பிரித்தறிந்து மேலும் புதிய கோணத்தில் எடுத்துரைக்க வேண்டும். அதேவேளை கே.டானியல் போன்றோரின் நினைவுகளுக்கு அப்பால் இதற்கான நவீன வேலைத்திட்டம், அதன் வரைபு போன்றவற்றை உருவாக்கும் ஆய்வுகளையும் வரும் இதழ்களில் சேர்ப்பது அவசியம். இனி என்ற சஞ்சிகை நல்லதோர் முயற்சி.. பணி தொடர வேண்டும்.

நன்றி: அலைகள்


Friday, March 12, 2010

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திட்கு தெரிவு செய்யபட்டால் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் சுயேட்சையாக போட்டியிடுகின்றது. அச்சுயேட்சைக் குழுவின் பிரச்சாரப் பிரிவு. தோழர் தெணியான் தலைமையிலே செயல்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பார
ளுமன்றதேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திட்கு தெரிவு செய்யபட்டால் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேவேளை சிறுபான்மைத் தமிழரின் இனப்பிரச்சினை முன்வைக்கப்படும் என தோழர் தெணியான் ஐரோப்பிய தமிழ் வானொலி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது செய்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஒடுக்கபட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதேவேளை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகட்சிகள் சிறுபான்மை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் எனவும் அந்த நிலமை தற்போதைக்கு இல்லை எனவும் இதனால் தான் ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளையும் அவர்களின் நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரளுமன்றதேர்தலில் சுயேட்சை குழுவாக போட்டியிடுகிறது என தோழர் தெணியான் ஐரோப்பிய தமிழ் வானொலி ஒன்றில் நடைபெற்றஅரசியல் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலின் போது புலிகளின் பலத்துடன் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று நான்கு அணிகளாக பிளவுபட்டு இத்தேர்தலில் போட்டியிடும் போது சிறுபான்பை தமிழர்கள் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதன் மூலம் தமிழ்மக்களின் வாக்குகள் பிரிக்கபட்டு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் சிதைக்கபடுகிறது என்ற குற்றசாற்றை அவர் நிராகரித்தார்.

ஒடுக்கபட்ட மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் தமிழ்மக்களின் ஒற்றுமைபற்றி பேசுவது தங்களின் பாராளுமன்ற கதிரைகளை பாதுகாத்து கொள்ளுவதற்காகவேதான் என தெரிவித்த தோழர் தெணியான் இவர்களிடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமால் தமிழர்கள் தமிழ் தேசியத்திற்க்காக வாக்களிக்க வேண்டும் என கேட்பது தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் ஓரு நடவடிக்கை எனவும் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு முற்போக்கு அரசியல்வாதி எம்மை அணுகி பாரளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு எமக்கு எம்முடன் எந்தவிதமான தொடர்பையும் அவர் மேற்கொள்ளவில்லை. அதன் பிறகு தான் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை பாரளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் பிறகு கூட இடதுசாரி செயல்பாட்டாளர்களோ அல்லது முற்போக்கு சிந்தனையாளர்களோ எங்களை அணுகவில்லை.

அதனுடைய தாக்கம் தான் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை பாரளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவது என முடிவினை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Thursday, March 11, 2010

கொள்ளையிட்டுஅரசாங்கம் நடத்தும் நாடு (கலந்துரையாடல்)

("வாழ்க்கைப்பயணம்" வலைப்பூ ஆசிரியருடனான அரசியல் கலந்துரையாடல். விக்னேஷ்வரனும், நண்பர்களும் தொடுத்த வினாக் கனிகளும், அவற்றிற்கான கலையகம் கலையரசனின் பதில்களும்.)


1) சமீபத்திய உலக அரசியல் மக்கள் மத்தியில் மிகப் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்தி இருக்கிறதென்பதை மறுக்க இயலாது. புரிந்தும் புரியாமலும் கூட மக்கள் அதில் உழன்று போய் இருப்பதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

எத்தகைய மக்கள் என்பது இங்கே பார்க்கப்பட வேண்டும். மக்கள் எல்லோரும் ஒன்றல்ல. பல வகையினர். அவர்களது அரசியல் சார்புத்தன்மையும் வேறுபடுகின்றது. உலக அரசியலில் சாதகமான பக்கத்திலும்,
பாதகமான பக்கத்தில் மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். பாதிக்கப்படும் தரப்பை சேர்ந்த மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இயற்கை. அதற்கு அவர்களது எதிர்பார்ப்புகள் கைகூடி வராமையும் ஒரு காரணம். குறிப்பாக பனிப்போரின் முடிவில் இருந்து புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. எதிர்க்க ஆளில்லாத ஒரேயொரு வல்லரசாக அமெரிக்கா அறிவிக்கப்பட்ட போது, பலர் அதை தேவதூதனின் நற்செய்தியாக புரிந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் சாமானிய மக்களின் கருத்தியலை தீர்மானிப்பது, அந்நாட்டின் படித்த மத்தியதர வர்க்கம். அவர்களது வர்க்க அடிப்படையில் இருந்து கணித்து, அமெரிக்கா பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது என தீர்மானித்தார்கள். ஆனால் அமெரிக்கா தனது சுயநலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கின்றது என காலந்தாழ்த்தி புரிந்து கொண்டார்கள். மக்கள் அதில் உழல்வது மக்களின் தவறல்ல. அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆளும் வர்க்கம் சர்வதேச மூலதனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம்.

2) குறிப்பிட்ட மதத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல், குறிப்பிட்ட இனத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரசியல் என இவ்விரண்டிற்கும் உள்ள பாகுபாடுகளை பற்றிய உங்கள் பார்வை?

இரண்டுமே மக்களின் குழுவாத உணர்வுகளை தட்டி எழுப்பி அரசியல் ஆதாயம் தேடுகின்றன. பாகுபாடுகள் எனப் பார்க்கும் போது, மதம் என்பது உலகளாவிய நிறுவனமயப்பட்ட சித்தாந்தம். இனம் என்பது குறிப்பிட்ட பிரதேசத்திற்குரிய பண்டைய இனக் குழும சமுதாயத்தின் தொடர்ச்சி. இந்த அடிப்படையில் இருந்தே அவர்கள் முன்னெடுக்கும் அரசியலும் வேறுபடுகின்றது. நவீன உலகில், தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி காரணமாக, "மத சர்வதேசியம்", "இன சர்வதேசியம்" என்று பரணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட பிரதேசத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்கள், அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதைப் பொறுத்து, இத்தகைய அரசியல் இயக்கங்கள் எழுச்சியுறுகின்றன. இன அரசியல் பேசுவோருக்கு தமது இன அடையாளம் முக்கியம். மதம் இரண்டாம் பட்சம் தான். அதே போல, மத அரசியலில் மத அடையாளம் அனைத்தையும் மேவிநிற்கிறது. ஏற்கனவே வழிபாட்டுத் ஸ்தலங்கள் மக்களை நிறுவனமயப்படுத்தி வைத்துள்ளமை, மத அரசியலுக்கு சாதகமானது. இன அரசியல் அதற்கு மாறாக வழமையான அரசியல் செயல்பாடுகள், ஊடகங்கள் மூலம் மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது.

3) ஜனநாயகத்தைப் போற்றி புகழ்ந்து மார்தட்டிக் கொள்ளும் நிலைபாடுகள் பற்றி?

ஜனநாயகம் என்பதன் அர்த்தம் மக்கள் ஆட்சி என்பதாகும். அதாவது மக்கள் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக பங்கெடுப்பது. வாக்குப் போடுவது ஏன் என்று தெரியாத வாக்காளர் இருப்பதற்குப் பெயர் ஜனநாயகமல்ல. மன்னர் காலத்தில், மக்களிடம் எந்த அதிகாரமும் இருக்கவில்லை. கடவுளுக்கு கட்டுப்படுவதைப் போல, மக்கள் மன்னனின அதிகாரத்தை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டார்கள். பிற்காலத்தில் மன்னனை அகற்றி விட்டு, மக்களின் பெயரால் குடியரசு முறை வந்தது. இருப்பினும் ஜனநாயகம் என்பது தேர்தலில் கட்சிக்கு வாக்குப் போடும் முறை என்பதோடு மட்டுப்படுத்தப்பட்டது. இது பிரதிநிதித்துவ ஜனநாயகம். அதாவது ஒரு பிரதிநிதி (அல்லது கட்சி) மக்களின் குறையை அதிகார தளத்தில் பேசித் தீர்க்க முனைவார். அது சரி, ஆசிய நாடுகளில் ஏன் ஜனநாயகம் சரியாக செயல்படுவதில்லை? அதற்கு காரணம், ஆசிய நாடுகளின் மக்கள் இன்னமும் சாதி, இன, மத, தனிநபர் வழிபாடு போன்ற குழுவாத சிந்தனையில் இருந்து விடுபடவில்லை. அரசியல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த வேறுபாடுகளை மேலும் விரிவுபடுத்தவே பார்க்கின்றனர். இதனால் ஆதாயம் பெற்றவர்கள் ஜனநாயகத்தை போற்றிப் புகழத் தானே செய்வார்கள்? இங்கே எந்த அரசியல் அலகு யாருக்கு நன்மை பயக்கின்றது எனப் பார்ப்பது அவசியம். ஈராக்கில் சதாம் காலத்தில் ஆதாயம் பெற்றவர்கள், இப்போதும் சதாமின் சர்வாதிகாரத்தை போற்றுகின்றனர்.

4) பழுதடைந்த ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக நீங்கள் எடுத்துரைக்க விரும்புவது?

இதற்குப் பதில் முந்திய கேள்வியிலேயே வந்து விட்டது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுவது ஜனநாயகமல்ல. நவீனமயப்பட்ட இனக்குழுவாதம். இந்த நாடுகள் சமுதாய மாற்றத்தின் ஊடாக தாமே ஜனநாயகத்தை கண்டறிந்திருக்க வேண்டும். மாறாக அவசர அவசரமாக காலானியாதிக்கவாதிகளால் திணிக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று மேற்கத்திய பாணி நிர்வாகத்தை ஏற்றுமதி செய்வதையே முக்கியமாக கருதினார்கள். அவர்கள் இப்போதும் "ஜனநாயக வளர்ச்சியடையாத " நாடுகள் ஆட்சி நடத்துவது எப்படி என்று இப்போதும் ஆலோசகர்களை அனுப்பி கற்றுக் கொடுக்கிறார்கள். அல்லாவிட்டால் நாமே அவர்களது பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்றுக் கொண்டு வருகிறோம். இதை நான் பழுதடைந்த ஜனநாயகம் என அழைக்க விரும்பவில்லை. ஜனநாயகம் அதன் ஆரம்பக்கட்டத்தில் சிறுபிள்ளைக் கோளாறுகளுடன் உள்ளது.

5) மார்க்ஸிசம் மற்றும் சோஷலிசம் பற்றிய இன்றய மக்களின் புரிதல்கள் பிசகிக் கிடக்கின்றன. போர் புரிவதிலும், எதிர் தீர்மானங்களின் வழியிலும் மட்டுமே தீர்வுக்கு வழி நாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களே போற்றிப் புகழப் படுகிறார்கள். இம்மாற்றத்தின் காரணம் எதனால் வந்திருக்கக்கூடும்?

மக்களின் புரிதல்கள் எப்போதும் பிசகித் தான் கிடக்கின்றன. அதற்குக் காரணம் சாதி, இனம், மதம் போன்ற உணர்வுகளைக் கொண்டு அரசியல் நடத்தும் ஆதிக்கவாதிகள், அல்லது ஊடகங்களை கையில் வைத்திருக்கும் முதலாளிகள். மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தங்களது இருப்பிற்கு ஆபத்து என கருதுகிறார்கள். போர் என்பது வன்முறை கொண்டு சாதிக்க நினைக்கும் அரசியல். பேசித் தீர்க்க முடியாத விஷயத்தை போராடித் தீர்க்கும் போது புகழப்படுவது இயற்கை. இருப்பினும் யாரின் நலன்களுக்காக யுத்தம் நடத்தப்படுகின்றது? போரினால் நன்மையடைபவர்கள் யார்? போர் நடப்பதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்கள் போற்ற மாட்டார்கள். மறுபக்கம் போரினால் லாபமடைந்தவர்கள் நிறையைப் பேர். பணவருவாயை ஈட்டித் தருவதால் அவர்கள் போரை தொடர்ந்து நடத்த விரும்பலாம்.

6) போர் நிறுத்தம் வேண்டி குளிரூட்டியின் பக்கத்தில் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தவரை இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்க செய்கிறார்களே. இது ஒரு தனிமனிதனின் 'ஜனநாயக' வீரியத்தை குறிக்கிறதா?

இல்லை, வாக்காளருக்கு வேறு தெரிவுகள் கிட்டவில்லை என்பதைக் காட்டுகின்றது. காலங்காலமாக பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் நான் முன்பு குறிப்பிட்டது போல, இந்திய ஜனநாயகத்தில் தனிநபர் வழிபாடு, சாதியம், இனவாதம், மூலதனம் இவற்றின் செல்வாக்கு அதிகம்.

7) அல்கயிதா பற்றிய உங்களின் பார்வை வாசகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அல்கயிதா சம்பந்தமாக எல்லோரும் அறியப்பட்ட எழுதாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தோடு அது முற்றிலும் முரணாக இருந்தது. புத்தகச் சந்தையில் பேசப்பட்ட அந்த புத்தகத்தை பலரும் விரும்பி இருக்கிறார்கள். மக்கள் அவர்களுக்கு தோதாகவே அரசியல் பார்வையை விரும்புகிறார்கள் என இதை சொல்ல முடியுமா?

ஆவிகள் இருக்கின்றன என்று நம்புகிறவர்கள் இருப்பதால் தான் ஆவிகளின் அட்டகாசம் பற்றிய நூல்களும் சந்தையில் விற்பனையாகின்றன. அல்கைதா இல்லை. ஆனால் இருக்கென்று நம்புகிறவர்கள் அதிகம். இதனால் தான் எனது கட்டுரை ஒன்றிற்கு "அல்கைதா என்ற ஆவி" என்று தலைப்பிட்டேன். ஏற்கனவே ஊடகங்கள் செய்தியாக வழங்கிய அல்கைதா பற்றிய கதைகளை தொகுத்து எழுத்தாளர்கள் புத்தகமாக வெளியிடுகின்றனர். மக்களால் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தை புத்தகமாக்கி சந்தைக்கு கொண்டுவர நினைக்கும் அளவிற்கு, தகவல்களின் உண்மைத் தன்மை அலசப்படுவதில்லை. அல்லது அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லைப் போல தெரிகின்றது.

8) உலக அமைதிக்காக போராடுகிறோம் என சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?

உலகம் அணுவாயுதப் போரின் விளிம்பில் இருந்த காலத்தில் சமாதான இயக்கம் தோன்றியது. மதம் போதிக்கும் அனைத்து ஜீவராசிகளுடனும் அன்பு காட்டும் தத்துவம், உலக அமைதிக்கான அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ளது. போர் வேண்டாம், அனைத்துப் பிரச்சினையையும் அன்பு காட்டுவதன் மூலம் தீர்க்கலாம் என்பது ஒரு உயரிய நோக்கம் தான். ஆயினும் உழைப்புச் சுரண்டலால் உருவாக்கப்பட்ட உலகில் தோன்றும் முரண்பாடுகளை இவர்கள் பார்ப்பதில்லை. மதங்களை, இனங்களை பிரித்து வைப்பதால் ஆதாயமடையும் நபர்கள், எந்தவொரு அமைதி இயக்கத்தையும் எதிரிகளாகவே பார்ப்பார்கள்.

9) வினவு பக்கத்தில் நீங்கள் எழுதுவது குறித்து நீங்கள் இன்ன சாரரை சேர்ந்தவர் என முத்திரையிடப்பட்டு எதிர்வினைகளை சந்திக்க நேர்ந்ததா?

சில நேரம் இருக்கலாம். எதிர்வினைகளை எதிர்பார்த்து அல்லது எதிர்பார்க்காமல் கட்டுரை எழுத முடியாது. நான் வினவில் மட்டும் எழுதவில்லை. உயிர்நிழல், உன்னதம் போன்ற சிற்றிதழ்களிலும் எழுதி வருகிறேன். வேறு சில இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் எனது கட்டுரைகளை பிரசுரித்துள்ளன. இவையெல்லாம் அரசியல் தளத்தில் ஒன்றுக்கொன்று முரணானவை. அந்தந்த அரசியல் பின்னணியை கொண்டவர்களுக்கு, அது சம்பந்தமான கட்டுரை பிடிக்கின்றது. அதே நேரம் அவர்களின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் போது விரும்பமாட்டார்கள். "இன்னொரு அ.மார்க்ஸ் உருவாகிறார்." "தாலிபான் ஆதரவாளர்" என்றெல்லாம் கூட முத்திரை குத்தினார்கள்.

10) எல்லோரையும் எல்லோராலும் திருப்தி அடையச் செய்து விட முடியாது. சில விடயங்களை பேசும் போது நியாயம் அற்ற பெரும்பான்மை கருத்தைக் கொண்டிருப்போர், நியாயம் உள்ள சிறுபான்மையினரை சிறுமைபடுத்தவும், சமுதாய துரோகி எனவும் அடையாளப் படுத்திவிடுகிறார்கள். இது ஊடகங்களின் போக்கினால் எற்பட்ட ஒன்றா?

நான் அப்படி கருதவில்லை. இது மனிதனின் கூடப்பிறந்த குணம். ஒவ்வொருவரும் தங்களது கருத்தை நியாயம் என்று தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட அரசியல் கருத்துகளை கொண்டவர்கள் ஒன்று சேரும் போது, எதிர்க்கருத்து கூறுபவர்களை துரோகி என்று ஒதுக்குகின்றனர். அவர்கள் தங்களது குழுவை மட்டுமே முழு சமுதாயமாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். யாருடைய கை ஓங்குகிறதோ, சமுதாயத்தில் யார் பலமாக இருக்கின்றனரோ, அவர்களின் கருத்து பொதுக் கருத்தாக மாறி விடுகின்றது. ஊடகம் என்பது யாரின் கையில் இருக்கிறதோ அவரின் ஊதுகுழலாக மாறிவிடுவதைப் பார்க்கலாம்.

11) இன்றைய நிலையில் இணைய தளம் மாற்று ஊடகமாக அமைந்திருக்கிறதென்பதை மறுக்க இயலாது. இதன் வீச்சு மக்களின் அரசியல் சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் தகுந்த ஒன்றுதானா?

பெரும்பான்மை மக்கள் தகவல் அறிவதற்காக இன்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளையே நம்பி இருக்கின்றனர். இணையத்தளத்தை ஊடகமாக பாவிப்பது ஓரளவு படித்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். வேறோருவிதமாக சொன்னால், மத்தியதர வர்க்கத்தின் எண்ணவோட்டத்தை இணையம் பிரதிபலிக்கின்றது. இவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் மிகக் குறைவு. 5% இருந்தாலே அபூர்வம். இணையத்தில் பலரது வரவேற்பை பெற்று அமர்க்களமாக முன்வைக்கப்படும் எதிர்வுகூறல்கள் பின்னர் பொய்த்துப் போவதை அனுபவத்தில் கண்டு கொள்ளலாம். இவர்களது இணைய உலகம், பெரும்பான்மை மக்களின் நிஜ உலகில் இருந்து அந்நியப்பட்டிருப்பதே இதற்கு காரணம். சனத்தொகையில் முக்கால்வாசிப்பேர் இணையத்தை பயன்படுத்தும் மேலை நாடுகளில் அது ஓரளவு மாற்றத்தை கொண்டு வரலாம். இருப்பினும் அங்கேயும் ஏற்கனவே அறிமுகமான வெகுஜன ஊடக கலாச்சாரம் ஆட்டிப்படைக்கின்றது. நாம் நேரில் காணும் சமுதாயத்தின் கண்ணாடியாகத் தான் இணையமும் அமைந்துள்ளது.

12) ஒஸ்திரியோடொவிஸ்க்கிய் போன்ற நாவல்கள் புரட்சிகளைப் பற்றிய பார்வையை மக்களிடம் எடுத்துரைக்க பங்காற்றியவற்றுள் ஒன்று. தற்சமயம் அது அவ்வளவாக பேசப்படும் ஒன்றல்லாமல் போய்விட்டது. அது ஏன்?

ஒரு காலம் இருந்தது. சோவியத் ஒன்றியம் என்ற வல்லரசின் செல்வாக்கு காரணமாக பல்வேறு மூன்றாம் உலக நாடுகளிலும் சோஷலிசக் கருத்துகள் பரவியிருந்தன. பல நாடுகளில் வெகுஜன அரசியல்வாதிகள் சோஷலிசம் பேசினார்கள். உதாரணத்திற்கு, இந்தியாவில் நேரு. அந்தக்காலங்களில் சோவியத் தனது நட்புனாடுகளில் புரட்சிகர நாவல்களை பரப்ப முடிந்தது. இன்று காலம் மாறிவிட்டது. அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றும் நாடுகள் அதிகரித்து வருகின்றன. அரசு எவ்வழியோ, குடிமக்களும் மாறி விட்டார்கள்.

13) உங்களைக் கவர்ந்த அரசியல் புத்தகங்கள் அல்லது நிச்சயம் படிக்க வேண்டியவற்றுள் எதை குறிப்பிடுவீர்கள்?

மார்க்சிம் கார்கி எழுதிய "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்". ஒரு மனிதன் தனது சொந்த அனுபவங்களில் இருந்து எவ்வளவு விஷயத்தை கற்றுக் கொள்ளலாம் எனக் கூறும் அவரது சுயசரிதை. லாஹிர சாங்கிருத்தையர் எழுதிய "வால்காவில் இருந்து கங்கை வரை". மனித இனம் எவ்வாறு தோன்றி பரிணமித்தது என்பதை சுவையாக கதை போல சொல்லியிருக்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நாவல்களை சிறுவயதில் வாசித்திருந்த போதிலும், இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

14) கடற் கொள்ளையிட்டு அரசாங்கம் நடத்தும் நாடுகளென சிங்கபூர் போன்றவற்றை நீங்கள் குறிப்பிட்டு எழுதியது சர்ச்சயை ஏற்படுத்திய ஒன்று. இது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். உங்கள் நிலைபாடு என்ன?

உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை என்ற ஒன்று எங்காவது இருக்கிறதா? ஒவ்வொரு பணக்கார நாட்டிற்கும் இருண்ட பக்கம் ஒன்றுண்டு. சாதாரண கிரிமினல் குறுக்கு வழயில் பணம் சம்பாதித்து சமூகத்தில் பெரும்புள்ளியாக வருவது போலத் தான் நாடுகளும். மேன் நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் தமது கசப்பான கடந்த காலத்தை மறைப்பது இயற்கை தானே? இதிலே சிங்கப்பூர் மட்டும் விதிவிலக்கா?

15) மலேசியாவில் வெகுண்டெழுந்த ஹிண்ட்டிராஃப் இயக்கம் தற்சமயம் ஒரு அரசியல் கட்சியென மாறிவிட்டிருக்கிறது. அதற்குள் சில பிரிவினைகள் வேறு. இவ்வியகத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை மறுக்க இயலாது. நெடுநாளைய அரசியல் மாற்றத்துக்கு இது போன்ற இயக்கங்களின் நடவடிக்கை சரியான ஒன்றென கருதுகிறீர்களா?

பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் இந்திய வம்சாவழியினரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசு மலாய் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் இனப் பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த கோரிக்கைகள் நியாயமானவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, மலாய் பெரும்பான்மையினர் அரசு பக்கம் நிற்பதை மறுக்க முடியாது. (அரசு வழங்கும் சலுகைகள் முக்கிய காரணம்) இதிலே கவனிக்கப்பட வேண்டியது, பெரும்பான்மை மக்களிடையே எமக்கான ஆதரவு சக்திகளை திரட்டிக் கொள்வது முக்கியம். ஹிண்ட்ராப் அப்படியான செயல் திட்டம் வைத்திருந்ததா? இவர்களது ஆரம்ப கட்ட போராட்டமே பிரிட்டிஷ் தூதுவராலயத்தை நோக்கியதாக, பிரிட்டிஷ் அரசிடம் நஷ்ட ஈடு கோருவதாகத் தான் அமைந்திருந்தது. தங்கள் கோரிக்கைக்கு கனவான்களின் தேசமான பிரிட்டன் செவி கொடுக்கும் என்ற வெகுளித்தனம் தான் காரணம். அது தான் போகட்டும், பெயரிலேயே "இந்து" அடையாளத்தை புகுத்தியதன் மூலம், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த இந்திய வம்சாவளியினரை எட்டி நிற்க வைத்தார்கள். ஹிண்ட்ராப் அறிக்கையில் பிற மலேசிய சிறுபான்மை மக்களான சீனர்கள், மற்றும் சாராவாக் பிரதேசத்தில் வாழும் பழங்குடியினருடன் ஒன்றிணைந்த போராட்டம் பற்றிய குறிப்புகள் இல்லை. இந்தியவம்சாவளி சமூகத்தின் பொதுப் பிரச்சினை, இந்து மதத்தின் பிரச்சினையாக திசைதிருப்பி விடப்பட்டது. தனது அதிகாரத்தை நிலை நிறுத்த, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரித்து வரும் அரசின் நோக்கமும் அது தான்.

16) பொருளாதார நிவர்த்திக்காக வளர்ச்சியடைந்த நாடுகள் பல திட்டங்களில் முன்னோக்கியிருக்கும் இவ்வேளையில் அவற்றிக்கு பலிக் கடாவாக மூன்றாம் உலக நாடுகள் சில பாதிப்படைவதை அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் உணராமல் தான் இருக்கிறார்களோ?

அரசியல் தலைவர்களில் பல பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். சாமானிய மக்களுக்கு சிக்கலான விஷயமெல்லாம் அவர்களுக்கு நன்றாகவே புரியும். இதிலே கவனிக்கப்பட வேண்டியது, அரசியல் என்பது என்ன தான் பொதுநலம் சார்ந்த துறையாக இருப்பினும், அதை நடத்துபவர்கள் தமது சுயநலம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். சனத்தொகையில் அரைவாசி வறுமையில் உழன்றாலும் தனது குடும்பம் நன்றாக வாழ்கிறது என்று திருப்திப்படும் தலைவர்களே அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இந்தப் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடியவர்கள், உயர்கல்வி கற்கும் வாய்ப்பை பெற்ற நடுத்தர வர்க்கம். அவர்களுக்கும் அதிகம் உடலுழைப்பைக் கோராத தொழில், அதற்கேற்ற ஊதியம் போன்றன கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாய் திறக்க மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் சாதாரண குப்பனும், சுப்பனும், ஆண்டவரின் சாபத்திற்கு ஆளாகி விட்டோமா, என்று தான் புரிந்து கொள்வார்கள்.

17) ஒரு பக்க பார்வையைக் கொண்ட உலக அரசியலை பின் நவீனதுவம் மறுக்கிறது. பல திறப்பட்ட சிந்தனைகளையும் மாற்றுக் கருத்தையும் அது ஆதரிப்பதாக இருப்பதால் ஒரு நிலை கலாச்சார பிடியில் இருப்பவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போகும் நிலை அல்லது கலாச்சார குழப்பம் ஏற்பட்டிருப்பதாக கருதுகிறீர்களா?

இருண்ட காலம், மீளுயிர்ப்புக் காலம், நவீன காலம் என்று மக்களின் பண்பாடு சார்ந்த வளர்ச்சியை வகைப்படுத்துகிறார்கள். அந்த வகையில் இப்போது நடப்பது பின் நவீனத்துவக் காலம். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சித்தாந்தம் தேடி தவித்துக் கொண்டிருந்த புத்திஜீவிகள் பின் நவீனத்துவ கருத்தியலை தோற்றுவித்தார்கள். கலாச்சாரக் குழப்பம் ஏற்பட்டதாக ஒரு மாயை நிலவியது உண்மை தான். ஆனால் பின் நவீனத்துவமே ஒரு கலாச்சாரமாகிப் போனதைக் காண்கிறேன். எப்போதும் உலக வரலாற்றில் குறிப்பிட்ட சில காலம் வெற்றிடம் ஏற்படும். முன்பு இருந்த ஆதிக்க கலாச்சாரத்திற்கும், பின்னர் வரப்போகும் புதிய கலாச்சாரத்திற்கும் இடையில் தோன்றும் சிறிது கால இடைவெளியில் பல திறப்பட்ட சிந்தனையையும் ஏற்றுக் கொள்ளும் கலாச்சாரம் நிலவும்.

18) ஏகப்பட்ட சமரசங்களுக்கிடையே தன்னை அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தகுதியாக்கிக் கொண்டார். உலக மக்களுக்கு இவரிடம் இருக்கும் எதிர்ப்பார்ப்புகள் அதிகமான ஒன்றே. தனி மனிதராக ஒபாமா விரும்பினாலும் அவர் இருக்கும் அமைப்பின் செல்வாக்கை மீறி அவர் செயல்படுவது சாத்தியம் தானா?

அவர் எதை சாதிக்க விரும்பினார்? ஒபாமா வருவதற்கு முன்னரே அதிகார மட்டத்தில் சில மாற்றங்கள் தேவை என உணரப்பட்டது. அதற்கேற்ற ஆளாக ஒபாமா தெரிவு செய்யப்பட்டார். ஜனாதிபதியாக யார் வந்தாலும், அரச இயந்திரம் எப்போதும் போல இயங்கிக் கொண்டு தான் இருக்கும். கொள்கை வகுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளை மக்கள் தெரிவு செய்வதில்லை. உலக மக்களின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஊடகங்கள் கிளப்பி விட்ட வெப்பத்தின் வெளிப்பாடு.

19) இன்றய அரசியலில் உணவு தட்டுப்பாடு சம்பந்தமான வாதங்கள் அதிகமாகவே இருக்கிறது. மக்களின் 'லிவிங் கோஸ்ட்' அதிகமாகியிருக்கும் அதே வேலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மந்தகர நிலையில் இருக்கிறதே?

பல நாடுகளில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், சில நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தன. அதே போல உணவுத் தட்டுபாடு நிலவுவது, உணவு உற்பத்தி, விநியோகத் துறையில் முதலீடு செய்திருக்கலாம் நிறுவனங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகின்றது. எப்போதும் லாபத்தை குறிக்கோளாக கொண்ட வர்த்தக நிறுவனங்கள், மக்கள் நலன் குறித்து சிந்திப்பதில்லை. பண வீக்கத்தால் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளது. இருப்பினும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் என்ன விலை கொடுத்தேனும் வாங்கியாக வேண்டும். அதே நேரம் பன்முகப் பட்ட நுகர்வுப் பொருளாதாரம் பாதிக்கப்படுவது உண்மை தான். ஆனால் தற்போது நடப்பது பொருளாதார மறுசீரமைப்பு. இதன் விளைவுகளை சில வருடங்கள் கழித்து உணரலாம்.

20) புத்தகம் ஒன்று எழுதி வருவதாக அறிகிறேன். அதைப் பற்றிய மோலோட்ட தகவல்களை அல்லது எதை சார்ந்தது என்பதையோ குறிப்பிட முடியுமா?

ஐரோப்பிய அகதி வாழ்வின் அவலங்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போர் காரணமாக, ஒரு அகதி எவ்வாறு புலம்பெயர நிர்ப்பந்திக்கப்படுகிறார். ஐரோப்பிய நாடொன்றில் அடைக்கலம் கோரும் வரை இடையறாத பயணத்தில் ஏற்படும் இன்னல்கள். புகலிடம் கோரிய நாட்டில் அதிகாரிகளின் திமிரான மெத்தனப் போக்கு. ஐரோப்பிய அரசுகளின் உள் நோக்கம் கொண்ட அகதி அரசியல். இவை போன்ற பல தகவல்களை விரிவாக வழங்க முயற்சித்துள்ளேன். இந்த நூலில் குறிப்பிடப்படும் பல சம்பவங்கள் சொந்த அனுபவத்தினூடாக பெறப்பட்டவை. நூல் வெளிவந்த பின்னர், அதனை பிற மொழிகளில் மொழிபெயர்க்க சில நண்பர்கள் விரும்புகின்றனர். இதை விட நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளையும் நூலாக வெளியிட இரண்டு பதிப்பகங்கள் முன்வந்துள்ளன. அனேகமாக மூன்று நூல்களையும் அடுத்த வருட தொடக்கத்தில் சந்தையில் வாங்கலாம்.

21) இந்தியா வல்லரசாகுமா?

அயலில் இருக்கும் குட்டி நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா எப்போதும் வல்லரசு தான். அமெரிக்காவின் நிழலின் கீழ் பிராந்திய வல்லரசாக இருக்கின்றது. இதைத் தவிர உலக வல்லரசாவது நடக்கக் கூடிய விஷயமல்ல. அணு குண்டு வைத்திருப்பதற்காக ஒரு நாடு வல்லரசாகி விடுமானால், பாகிஸ்தான், வட-கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் வல்லரசுகள் தான்.

22) நீங்கள் பார்த்து வியந்த நாடு?

என்னைக் கவர்ந்த நாடு எகிப்து. ஆப்பிரிக்கக் கண்டத்தில், ஐந்தாயிரம் ஆண்டிற்கு முந்திய நாகரீகம் இன்றைக்கும் சிதைவுறாமல் பார்த்து வியக்கும் வண்ணம் நிலைத்து நிற்கின்றது. இன்றும் புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

23) வலையில் எழுதும் கட்டுரைகளுக்கு மாட்டி விடுவதற்கென்றே சில கேள்விகள் கேட்கப்படும் போது கோபப் பட்டதுண்டா?

ஒன்றுமே தெரியாதவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்கலாம். ஆனால் சில பேர் புரிந்தாலும் புரியாத மாதிரி பிடிவாதமாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எரிச்சலூட்டுகின்றனர். இது வலையில் வருபவர்கள் மட்டுமல்ல, சில நண்பர்கள், உறவினர்கள் கூட அப்படி நடந்து கொள்ளகின்றனர்.

24) வளர்ந்த நாடுகளின் இன்றய பொருளாதார வளர்ச்சி திட்டத்தில் மூன்றாம் உலக நாடு ஒன்றும் அதீத வளர்ச்சியடையும் என குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த நாடாக இருக்கக் கூடும்?

எந்த நாட்டையும் குறிப்பிட்டு எதிர்வு கூற விரும்பவில்லை. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா, ஆப்பிரிக்காவில் லிபியா, ஆசியாவில் சீனா ஆகிய நாடுகள் தற்போது உள்ள உலக பொருளாதார ஒழுங்கிற்கு நிகரான மாற்றுத் திட்டங்களை முன்வைத்து, செயல்படுத்தி வருகின்றன. அனேகமாக எல்லோரும் டாலர் வீழ்ச்சியடையும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றிருக்கும் உலகம் நாளை இருக்கப் போவதில்லை.

25) மூன்றாம் உலக யுத்தம் பற்றிய உங்கள் பார்வை?

முதலில் உலக யுத்தம் என்றால் என்ன? ஐரோப்பிய நாடுகள் அதிகாரப் போட்டிக்காக அணி பிரிந்து போரிட்டார்கள். பின்னர் போரினால் ஆன பயன் எதுவுமில்லை என்று உணர்ந்து, ஒன்று சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை அமைத்தார்கள். ஐரோப்பியர்கள் போரின்றி சமாதானமாக வாழ்வதால், அதை உலக சமாதானமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அவர்கள் தங்களது போர்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மூன்றாம் உலக யுத்தம் எப்போதோ தொடங்கி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் தான் அவற்றை ஒன்று சேர்த்துப் பார்த்து புரிந்து கொள்வதில்லை.

(குறிப்பு: இது ஒரு மறுபதிவு.)

Tuesday, March 09, 2010


நவீன இலச்சியப் பெண்ணியவாதி மார்லின் பிரெஞ் அவர்கள் இறப்பெய்தினார்.
-கரவைதாசன்-
(இனி இதழ் ஐந்திலிருந்து )
1929 - 2009

இலச்சிய நவீனப் பெண்ணியவாதி மார்லின் பிரெஞ் அவர்கள் தனது 79வது வயதில் ஒரு சனிப்பொழுதில் மாரடைப்பால் மான்காட்டன் நகரில் அமைந்திருந்த தனது இல்லத்தில் இறப்பெய்தினார். எல்லா ஆண்களுமே தமது கண்களாலும் அவர்களால் எழுதிவைக்கப்பட்ட சட்டத்தினாலும் அதனால் கொண்ட அதிகாரத்துவத்தினலும் வன்புணர்ச்சியாளர்களே (The War against Women 1992) என பிரகடனப்படுத்திய இவரது வைரம் பாய்ந்த இதயம் தனது துடிப்பினை நிறுத்திக்கொண்டது. தொடர்ச்சியான புகைப்பிடிக்கும் பழக்கத்தினைக் கொண்ட இவர் தனது 61வது வயதிலிருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தபோதும் உலகமயமாகிப்போயிருக்கும் ஆணாதிக்க கலாசாரத்திற்கெதிராக தனது 79வது வயதிலும் சித்த சுவாதினமான நிலையில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வந்தார்.

Monday, March 08, 2010


சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது.

காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.

அரசுகளும், மத நிறுவனங்களும் வளர்ச்சியடைந்த பின்னர் நிலை மாறியது. எங்கும் ஆண்களின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது. பெண்ணினம் அடிமைப்படுத்தப்பட்டது, அனைத்து சட்டங்களும் கருத்தியல்களும் ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டன. அரசியல், சமுதாய, பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் விலக்கி வைக்கப் பட்டனர். பெண்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். இத்தடைகளை மீறி சிலர் உயர் நிலையை அடைந்தாலும் அவர்கள் விதிவிலக்குகளே. மனித இனத்தின் சரிபாதியான பெண்கள் இரண்டாந்திர குடிமக்கள் ஆக்கப்பட்டனர். இப்படியாக பல நூற்றாண்டுகள் கடந்தன.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவிய நிலவுடமை சமூக அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் புதிய கடல்வழி கண்டுபிடிப்புகளாலும் மாற்றம் அடைந்தது. புதிய உற்பத்தி முறையுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் தேவைபட்ட அதிக மனித உழைப்பை ஈடுகட்டவும், உழைப்புச் சுரண்டலின் மூலம் முதலாளிகளின் லாபத்தை அதிகரித்துக்கொள்ளும் பொருட்டும் தொழில்துறை உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு புறத்தில் இச்சுரண்டல் பெண்களுக்கு எதிராக இருந்தாலும் அன்றைய இறுகிய சமூக அமைப்பில் ஒரு தளர்ச்சியை/நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனைகளால் 15,16,17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன, மனித உரிமைகள் பற்றிய சிந்தனை எழுச்சிப்பெற்றது.

பெண்களும் தம் தாழ்நிலைக்கு எதிராக, உரிமைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தனர். கி.பி.1789ல் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற உரிமை முழக்கங்களுடன் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், வெர்செயில்ஸ் ஆகிய நகரங்களில் பெண்கள் கிளர்ச்சியில் இறங்கினர். இந்தப் போராட்டமானது லூயி மன்னரின் அரசாட்சியையே முடிவுக்குக் கொண்டு வந்தது. அமெரிக்க சுதந்திரப் போரிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தனர். ஆனாலும், பெண்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனினும் இப்போராட்டம் பல நாடுகளில் உள்ள பெண்களுக்கும் நம்பிக்கையையும் உரிமை வேட்கையையும் விதைத்தது.

மேரி வோல்ஸ்டன் கிராப்ட்(1759-1797) என்ற பெண்ணுரிமைப் போராளி எழுதிய The Vindication Of the Rights of Women என்னும் புத்தகமும் ஜான் ஸ்டூவர்ட் மில்(1806-1873) என்னும் ஆங்கிலேய சிந்தனையாளர் எழுதிய The Subjection of Women என்னும் புத்தகமும் பெண்ணிய சிந்தனையில் புதிய அலையை உருவாக்கின.

தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக விழிப்புற்ற பெண்களால் இத்தாலி, அமெரிக்கா, பிரஷ்யா, கிரீஸ், ஆஸ்திரியா, டென்மார்க் என பல நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன. பிரஷ்யவில் பெண்களின் முழக்கத்தை கண்டு அஞ்சிய அரசன் 1848, மார்ச் 19ஆம் தேதியன்று பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் அரசவை ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு பிதிநிதித்துவம் தரவும் ஒப்புக்கொண்டான். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

1840ஆம் ஆண்டு லண்டன் மாநகரில் அகில உலக அடிமை ஒழிப்பு மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் உறுப்பினர்களாக பெண்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் வெகுண்டெழுந்த பெண்ணுரிமை போராளிகள் 1848ல் நியூயார்க்கில் உள்ள செனீகா ஃபால்ஸ் என்னும் ஊரில் நடந்த மாநாட்டில் பெண்களின் உரிமை பிரகடனத்தை (Declaration of the Rights of Women) வெளியிட்டனர். இது பெண்ணுரிமை போராட்டங்களில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

அதில் ‘ஆண்களும் பெண்களும் இயற்கையில் சமமானவர்களாகவே படைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மாற்றமுடியாத உரிமைகளைக் கடவுளின் மூலம் பெற்றுள்ளனர். இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுதந்திரத்திற்கும், மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுபவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது..... இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுபவித்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகிறது.....பெண்ணின் வாழ்வெல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும். பெண் ஓட்டுரிமை பெறவேண்டும். மனித சம உரிமை எல்லா இன மக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புகளும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பெண் ஆணுக்கு சமமான உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கிறோம். இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்கு பெற வேண்டுமெனத் தீர்மானிக்கின்றோம்.’ என பிரகடனம் செய்தனர்.

1857ல் பருத்தி நூற்பாலைகளிலும், ஆடை உற்பத்தியிலும் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், மோசமான பணிச் சூழல், மிகக்குறைந்த கூலி, தொழில் உரிமையாளர்களின் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் அரசாங்கத்தால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் 1908ல் குறைந்த வேலை நேரம், நியாயமான கூலி, வாக்குரிமை ஆகியவற்றைக் கேட்டு மீண்டும் பெண்களின் போராட்டம் வெடித்தது. இது உலகமெங்கும் பெண்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் 1910ல் ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் பிரிவு தலைவரான கிளார ஜெட்கின் தலைமையில் கூடிய பெண்கள் மாநாடு சர்வதேச மகளிர் அமைப்பைத் தோற்றுவித்தது. பெண்களுக்கு வாழ்வின் எல்லா தளத்திலும் சம உரிமைகள், பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை உலகத்தின் செவியில் ஓங்கி ஒலித்திடவும் தமது உரிமைகள் குறித்து பெண்களுக்கு நாடு, தேச எல்லைகள் கடந்து விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவும் தமது ஒற்றுமையை காட்டும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் போராளிகள் மனதில் உதித்தது.

அதன் விளைவாக 1911, மார்ச் 19ஆம் தேதியன்று ஜெர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ரஷியாவில் 1913ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் கூடிய சர்வதேச மகளிர் பிரதிநிதிகள், ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதியன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

1917ல் மகளிர் தினத்தன்று ரஷிய ஜார் மன்னனுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் தமது வாக்குரிமைக்காகவும், உணவுக்காகவும் போராட்டத்தில் இறங்கினர் 90,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும். இதில் வெற்றியும் பெற்றனர். இந்தப் போராட்டமே ரஷிய புரட்சிக்கு ஆரம்பமாகும். அடுத்த எட்டு மாதங்களில் ரஷிய புரட்சி வெற்றி பெற்றது. புதிதாக மலர்ந்த சோசலிஷ சோவியத் யூனியனில் பெண்களுக்கு முழுமையான வாக்குரிமை அளிக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது.

பல அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படிப் படியாக வாக்குரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.

உலகமெங்கும் தொடர்ந்து நடந்தப் போராட்டங்களின் பயனால் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது உரிமைகளை மீட்க ஆரம்பித்துள்ளனர்.

மேற்கத்திய கல்வியின் விளைவாக இந்திய சமூகத்திலும் பெரும் விழிப்புணர்வு எற்பட்டது. ராஜாராம் மோகன் ராய், கேசவ சந்திர சென், மகாதேவ கோவிந்த ரானடே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், மகாத்மா பூலே முத்துலட்சுமி ரெட்டி போன்ற பல சிந்தனையாளர்களும் இந்திய பெண்களின் விடுதலைக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். காந்தியடிகளும் பெண்களின் பங்கேற்பை பெரிதும் வலியுறுத்தியுள்ளார். அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளைப் பெற சட்டரீதியான அங்கீகாரத்துக்காகப் போராடினார் அண்ணல் அம்பேத்கர். முழுமையான பெண் விடுதலைக்கு இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறன தந்தை பெரியாரின் சிந்தனைகளும் போராட்டங்களும்.

பெண்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சம உரிமையை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்து விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட்டது. 1960களில் எழுச்சி பெற்ற தீவிர பெண்ணிய சிந்தனைகளும் பெண்களுக்கான உரிமை போராட்டங்களுக்கு உத்வேகமளித்து வருகிறது.

பெண்களின் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உலக அளவில் பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் அளவு மொத்த மதிப்பில் 2 % க்கும் குறைவு; கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு பத்து லட்சம்; இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் பிறந்தால் 450 பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றன; தலித் பெண்களில் எழுத்தறிவு பெற்றோர் வெறும் 7 % மட்டுமே; உலகம் முழுவதும் வீட்டிலிருக்கும் அதாவது சும்மா தமது வீட்டு வேலைகளை செய்யும் பெண்களின் பணியின் மதிப்பு அதாவது ஆண்டுக்கு 11 ட்ரில்லியன் டாலர்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி என்ன? நாம் பெண்கள் முன்னேற்றத்தில் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்பதுதான்.

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - தந்தை பெரியார்

பெண்ணியத்திற்காக இம்மானுவல்
நன்றி : பெண்ணியம்