-ரவீந்திரன்.பா-
வரலாறு முக்கியம்
அமைச்சரே !
* * ******************************
குறிப்பு:
29.01.2017 அன்று சூரிச் "வாசிப்பும் உரையாடலும்" நிகழ்ச்சியில்
உரையாடலுக்காக "இரண்டாம் இடம்" நூல் எடுக்கப்பட்டது. தோழர் யோகராஜா
வினால் இந் நூல் இன்னொரு கோணத்தில் விரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து
எல்லோரினதும் உற்சாகமான உரையாடலாக விரிந்தது. அதில் நான் வைத்த கருத்துகளை கொஞ்சம்
விரிவாக செழுமைப்படுத்தி இங்கு பதிவிடுகிறேன்.
மலையாள
எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி
பெயர்த்துள்ளார்
மகாபாரதக்
கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில்
அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள்
மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும்
ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை
“இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது. எல்லோரும் தவறுகளோடும் சரிகளோடும் இயங்குகிற
மனிதத் தளத்தில் அவர்கள் காண்பிக்கப்படுகிறார்கள்.
கிருஸ்ணன்,
கர்ணன், தர்மன், குந்தி... என எல்லோரினது பிம்பங்களும் மனிதக் கட்டமைப்புக்குள்
இறக்கிவைக்கப்படுகிறது.
திரௌபதையின்
துகிலை துச்சாதனன் உரிகிறபோது ஈஸ்ட்மென் கலரில் சீலைகள் படையெடுத்துவந்து அவன்
களைத்து விழுந்ததாய், கிருஸ்ணனின் சீலைவிடலை கண்டு நிம்மதிகொண்ட வாசக மனதுக்கு
மாதவிடாயுடன் இரத்தம் ஒழுக அவளது ஒற்றைச் சீலையை துச்சாதனன் இழுத்துக்கொண்டபோது
ஏமாற்றமாய் இருத்தல் கூடும். சரி..ஒரு விஜய் ஒரு ரஜனி புயலாய் வருவதுபோல் வீமன்
களத்தில் இறங்கமாட்டானா என நாசமாய்ப்போன இன்னொரு மனசு எதிர்பார்க்கவும்கூடும்.
எதுஎப்படியோ கிருஸ்ணனின் புனித பிம்பம் காணாமலே போய்விடுகிறது.