Tuesday, April 21, 2015

சாதியமைப்பு ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யுனிஸ்டுகள்

-பி.சம்பத்-
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.
இந்தியாவின் பிரத்யேகத் தன்மை:
ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில் அமல்படுத்துவதன் மூலம் அல்ல.திட்டவட்டமான நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.
இந்த அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும் சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுரண்டல் முறையின் அங்கமாக வருணாசிரமம்:
இந்திய வரலாறு நெடுகிலும் சாதியத்திற்கு ஆதரவான, எதிர்ப்பான பல்வேறு போக்குகள் இருந்துள்ளன. இவை அனைத்தையும் சந்தித்து இன்றளவும் சாதியம் வீரியத்துடன் நீடித்து வருவது பல சமூக ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது. இது குறித்து பிரபல சமூக ஆய்வாளர்களில் ஒருவரான சியாமா சரண்தூபே கூறியதாவது “இந்தியாவில் நிலவும் சாதியமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது”. ஆனாலும் வருணாசிரம அமைப்பும், சாதிய முறையும் வியக்கத்தக்க விதத்தில் தொடர்ந்து உறுதியாக நிலைத்து நிற்கின்றன. எதிர்ப்புகளை சமாளித்து வந்துள்ளன. எல்லா வகையான தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டு எவ்விதத்திலாவது தப்பித்து நீடித்து வந்திருக்கின்றன”. எனவே, இந்தியச் சாதியமைப்புக்கு எதிரான போராட்டம் மிக நுட்பமானதும், கடினமானதுமான ஒன்று என்பதை கடந்த கால அனுபவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
இந்தியச் சாதியமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுவாகவும், திறமையாகவும் நடத்திட அது உருவானதற்கான பின்னணி மற்றும் அடிப்படைகளை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சாதியமைப்பை வேறு எவரையும்விட மார்க்சிய ஆய்வாளர்கள் இயக்கவியல் அடிப்படையில் சரிவர ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் யதார்த்த நிலைமைகளுக்கு பொருந்தி வருவதாக உள்ளன. இந்தியச் சமுதாயத்தில் வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் ஒரு பகுதியாகவே சாதியமைப்பு உருவானது என்பதே இவர்கள் வெளிப்படுத்தும் உண்மை. இது குறித்து தலைசிறந்த மார்க்சிய சமூக ஆய்வாளர் டி.டி.கோசாம்பி கூறுவதாவது:சாதி அமைப்பு என்பது இந்திய உற்பத்தி முறையின் துவக்ககட்டத்தில் வர்க்க அமைப்பாகவே இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.
டி.டி.கோசாம்பியின் ஆய்வை பலப்படுத்தும் வகையில் மார்க்சிய அறிஞர் தோழர் இ.எம்.எஸ் இதுகுறித்து கூறும்போது, “கிரீசில் அடிமை முறை உருவானது போல இந்தியாவில் வேறு ஒரு வடிவத்தில் வர்க்க சமுதாயம் உருவாகியது. அடிமைகள், எஜமானர்கள் என்ற கிரேக்க வர்க்க வேற்றுமைக்குப் பதிலாக இங்கு உருவானது தாசர்கள் (ஆந்திரர்கள்), ஆரியர்கள் என்ற வடிவிலான வருண வேற்றுமைதான். இதுதான் பிற்காலத்தில் நான்கு வருணத்தின் மூலமாக அநேக சாதிகளும், உபசாதிகளும் உள்ள அமைப்பாக மாறியது. பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசிகர்கள் என்ற மூன்று பிரிவுகளைச் சார்ந்த ஆக்கிரமிப்பாளர்களின் சுரண்டலுக்கு இரையாகி அடக்கப்பட்டவர்களாக சூத்திரர்கள் (தாசர்கள்) மாறினர். இதில் மூன்று பிரிவினர் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நான்காவது பிரிவினர் ஆளப்படுவோர். இதுதான் இந்தியாவின் வர்க்க, வருண வேற்றுமையின் முதல் படிவம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் மிகவும் கடினமானதும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தக் கூடியதும், இழிவானது எனக் கருதப்பட்டதுமான பணிகளுக்கு ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்டனர். ஆக இந்தியாவில் சுரண்டல் அமைப்பு முறையின் கவசமாகவே அதனுடன் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டதே வருணாசிரம அமைப்பு என்பதில் ஐயமில்லை.
வருணாசிரமத்திலிருந்து பல்லாயிரம் சாதிகளாக:
வருணாசிரம முறைதான் இந்தியாவில் சாதி அமைப்பு உருவானதன் ஆரம்ப அடிப்படையாகும். துவக்க காலத்தில் இந்திய உற்பத்தி முறையில் நான்குவித உழைப்புப் பிரிவினைகள் இருந்தன. நான்கு வருணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்குவித உழைப்பு பிரிவினையை மேற்கொண்டவர்களாக இருந்தனர். பிராமணர்கள் (வேதம் ஓதுதல்), ஷத்திரியர்கள் (யுத்தம் செய்தல்), வைசியர்கள் (வாணிபம் செய்தல்), சூத்திரர்கள் (உடல் உழைப்பு செய்தல்) என்ற முறையில் வருணாசிரம முறை இருந்தது. பிற்காலத்தில் புதிய உற்பத்திக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஏராளமான உழைப்புப் பிரிவினைகள் உருவாயின. அதன் அடிப்படையில் வருணாசிரம முறையின் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு எண்ணற்ற சாதிகளும், உப சாதிகளும் உருவாயின. இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகளும், உப சாதிகளும் உள்ளன என்றாலும் இதன் ஆரம்பகால அடிப்படை என்பது வேதகால வருணாசிரம முறையேயாகும். இது குறித்தும் தோழர் ஈ.எம்.எஸ். விவரிக்கிறார் படிப்படியாக தொழில்நுணுக்கத்திலும் பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து சூத்திரர்களிலும் அதே போல மேல்சாதி வருணங்களான பிராமணர், ஷத்திரியர், வைசியர், வருணங்களிலும் பல்வேறு கிளைகள் தோன்றி வளர்ந்தன. அடிமை வேலை, போர் முறை, கடவுள் வழிபாடு-சடங்குகள், வாணிபம் முதலிய ஒவ்வொரு படியிலும் ஏராளமான பிரிவுகள் – உப பிரிவுகள் இவ்விதமான தொழில் வேறுபாடுகள் பரவலாகத் தொடங்கியதுடன் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த நான்கு வருணத்தவர்களும் நூற்றுக்கணக்கான சாதிகளாகவும், உபசாதிகளாகவும் மாறினர். இந்திய சமுதாய வளர்ச்சியின் ஒரு பிரத்யேகத்தன்மை இது”.
இங்கு தோழர் இ.எம்.எஸ். தொழில்நுட்பம் குறித்தும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் சாதியமைப்பின் விரிவாக்கம் பற்றியும் குறிப்பிடுகிறார். இதை நாம் வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அடிமை சமுதாய காலத்தில் உருவான வர்ணாசிரம அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமுதாய காலத்தில் பலப்படுத்தப்பட்டு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் பிரிவுகளுடனும் நீடிக்கிறது என்பதாகும். பண்டைய வர்ணாசிரம அமைப்புதான் அதன் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரம் சாதிகளைக் கொண்ட இன்றைய சாதி அமைப்பாக மாறியுள்ளது.
சாதியம் அமல்படுத்தப்பட்ட முறை:
கொடூரமான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட சாதியமைப்பை இந்தியச் சமூகத்தில் நிலைநாட்டவும் அமல்படுத்தவும் ஆளும் வர்க்கத்தினர் பன்முக முயற்சிகளை மேற்கொண்டனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இழிநிலைக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகி வந்த எதிர்ப்பையும், வெறுப்பையும் வெறும் ஒடுக்குமுறைகள் மூலம் மட்டும் முறியடிக்க முடியாது என்பதால் தத்துவார்த்த ரீதியாகவும் மக்களை இதற்கு தயார்படுத்தினர். வருணாசிரம – சாதியமைப்பு கடவுளின் படைப்பு எனவும் அதனை மாற்றமுனைவது கடவுளை நிந்திப்பதாகும் என பரப்பினர். இந்நோக்கத்தோடுதான் வேதங்கள், உபநிஷத்துகள், மனுஷ்மிருதிகள் உருவாக்கப்பட்டன. சாதியமைப்பை நியாயப்படுத்தும் வகையில் புராணங்களும், இதிகாசங்களும் உருவாக்கப்பட்டன. புராணங்களில் வரும் கதைகளும் – பாத்திரங்களும் வர்ணாசிரம வேறுபாட்டை நியாயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. ஆயினும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் கடுமையான போது இத்தகைய தத்து வார்த்த கண்ணோட்டங்களையும் மீறி வருணாசிரம சாதிய முறைக்கு எதிர்ப்பு வரவே செய்தன. அவ்வாறு உருவான எதிர்ப்பையும் கலகங்களையும் அடக்க அவர்கள் மீது கையை வெட்டுவது, காலை வெட்டுவது, மரண தண்டனை, சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட கடும் தண்டனைகளும் அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. வர்ணாசிரம ஒடுக்குமுறைக்கு அடங்க மறுத்தவர்கள் மட்டுமல்ல வர்ணாசிரமத்தையும் வேதங்கள், மனுஷ்மிருதி, புராணங்களையும் மறுத்த விமர்சித்த அக்காலத்திய அறிவுஜீவிகளும் கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மனுஷ்மிருதியில் வர்ணாசிரமத்தை மீறுபவர்களுக்கும் அத்தத்துவங்களை எதிர்ப்பவர்களுக்கும் மேற்கண்ட கடும் தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுஷ்மிருதிதான் அக்காலத்தில் அரசர்களுக்கான அரசியல் சட்டமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆளும் வர்க்கம் – அரசு – அரசியல் கட்சிகள் நிலைபாடு :
இந்தியாவில் சுரண்டல் முறையோடு இணைந்து அதன் ஒரு பகுதியாக உருவான (வருணாசிரம) சாதியமைப்பு பல உருவங்களைக் கடந்து பல்லாயிரம் சாதிகளாக மாறி இன்று உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மோதவிடும் அபாயகரமான பாத்திரத்தை வகிக்கிறது. வரலாறு நெடுகிலும் சுரண்டல் அமைப்பின் கேடயமாகவே சாதியமைப்பு இருந்து வருகிறது. எனவேதான் இதுவரை உள்ள அனைத்து சுரண்டும் வர்க்கங்ககளும் (அடிமை எஜமானர்கள், நிலப்பிரபுக்கள் இன்று முதலாளிகள்) இதனை பாதுகாத்து வந்துள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துணைநிற்கவே செய்துள்ளனர். இன்று அரசியல் சட்டபூர்வமாக ஜனநாயகம், சமத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அரசு நிர்வாகமும், காவல்துறையும் இதனை சரிவர அமல்படுத்தாததால் சாதிய ஒடுக்குமுறைகள் கடந்த கால நிகழ்வுகளாக அல்லாமல் இன்றளவும் தொடர்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் சாதியமைப்பிற்கு எதிராக பசப்பு வார்த்தைகளை பேசி வருகிற போதிலும் அடிப்படையில் அவற்றின் செயல்பாடுகள் சாதிய உணர்வை பாதுகாக்கும் விதத்திலும் பல சந்தர்ப்பங்களில் சாதியமைப்புகளை பயன்படுத்தும் வகையிலுமே அமைந்துள்ளன.
பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும்
இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு உருவான பின்னணி, அதன் வளர்ச்சி, அதை அமல்படுத்த ஆளும் வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் கையாண்ட முறை போன்ற அம்சங்களை வர்க்கப் பின்னணியோடு பரிசீலித்தோம். இத்தகைய அமைப்பை எதிர்த்ததவர்கள் சந்தித்த கொடூரமான ஒடுக்குமுறைகளையும் வரலாற்று ரீதியாக பார்த்தோம்.
ஆக இந்தியச் சமூகத்தில் மிகவும் கடுமையான உடலுழைப்புச் செய்பவர்களும் இழிவான சுகாதாரக்கேடு விளையும் தொழிலைச் செய்பவர்களும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் வைக்கப்பட்டுள்ள சமூக வரலாற்றையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளையும், இழிவுகளையும் இப்பின்னணியில் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகக் கணிசமான பகுதியினர் எவ்வித உடைமையுமின்றி நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது இத் தகைய வளர்ச்சிப் போக்கின் பரிணாம வளர்ச்சியேயன்றி தற்செயலாக ஏற்பட்ட நிகழ்ச்சி போக்கல்ல. இம்மக்கள் தங்கள் மீதான சாதியக் கட்டுமானங்களை மீறும்போது அதற்கு சாதிய சக்திகள் கடும் தண்டனை வழங்குவதைக் கண் கூடாக காண்கிறோம்.
இன்று தமிழகம் உள்ளிட்டு இந்தியா முழு வதும் நாம் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை எதுவென்றால் சாதிய வேறுபாடுகளைக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே மோதலை உருவாக்கும் நடவடிக்கைகளில் சாதிய சக்திகள் இறங்கியிருப்பதும் அதை ஆளும் வர்க்கத்தினரும் அரசும் உரிய முறையில் தடுக்க தவறுவதும்தான். பிற்படுத்தப்பட்ட மக்களில் 70 சதம் பேர் உழைப்பாளிகள். இதேபோல கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களில் 88 சதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள். நகர்ப்புறங்களிலும் இவர்களில் கணிசமானவர்கள் உழைப்பாளிகளே. தமிழக, இந்திய பாட்டாளி வர்க்கத்தின் மிகக் கணிசமான பகுதியினராக பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து உள்ளனர். இவர்களுக்கிடையே மோதல்கள், பிணக்குகளை உருவாக்குவது என்பது உழைக்கும் வர்க்கத்தின ஒற்றுமையை பாதிக்கும் ஆபத்தான அம்சங்களாகும். இந்த ஆபத்தை முறியடிப்பதோடு இதர சாதிப் பிரிவுகளில் உள்ள உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆளும் வர்க்கத்தின் சவாலை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்தின் பரவலான ஒற்றுமையை உருவாக்க வேண்டிய பிரதான கடமை நம்முன் உள்ளது.
கம்யூனிஸ்ட் அணுகுமுறையும் வரலாறும் :
இந்தியாவில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை உருவாக்கி சமுதாய மாற்றத்திற்கான புரட்சி நடத்துவதில் உறுதிபூண்டுள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம். இதற்காக தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பரவலான மக்கள் திரளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இத்தகைய பரவலான மக்களை அணிதிரட்ட வேண்டுமெனில் அதற்கு பிரதான தடைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாதியமைப்பையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதும் முறியடிப்பதும் பிரதான கடமையாகும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதே அதில் பிரதான பங்கு வகித்த கம்யூனிஸ்ட் இயக்கம் “இந்தியாவுக்கு விடுதலை என்றால் அது தலித்துகளுக்கும் விடுதலையாக இருக்க வேண்டும்” என 1928லேயே முழங்கியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் மிகச்சரியாக அக்காலத்திலேயே இணைத்தது. மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டே, தலைவர்கள் பலரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இத்தகைய முழக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் எழுப்பியது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடைபெற்ற அக்காலத்திய பல போராட்டங்கள் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களாகவும் இருந்தன. ஆந்திராவில் நடைபெற்ற தெலிங்கானா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா வயலார் போராட்டம், வங்கத்தில் நடைபெற்ற தெபேகா போராட்டம், மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் என இத்தகைய பல போராட்டங்களை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த தோழர் சிங்காரவேலர் பெரியாரோடு இணைந்தும் தனித்தும் சாதியமைப்புக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்திலும் போராட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும்:
இந்திய விடுதலையில் பிரதான பங்கு வகித்த மற்றொரு இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய பார்வையும், அணுகுமுறையும் இருக்கவில்லை. எனவே கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்த மிகக் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியால் இணைக்க முடியவில்லை. பிற்காலத்தில் இதனை உணர்ந்த காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை கவருவதற்காக தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தினார். ஒரு பகுதி தாழ்த்தப்பட்ட மக்களை அவரால் திரட்டவும் முடிந்தது. எனினும் அது காந்தியின் தனிப்பட்ட முயற்சியாகவும் ஒரு பகுதி காங்கிரஸ் ஊழியர்களை மட்டுமே இணைத்தாகவும் இருந்ததேயொழிய ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பணியாக அமையவில்லை. உண்மை யில் பல காங்கிரஸ் தலைவர்கள் சாதிய அணுகு முறையுடன் செயல்பட்டார்கள் என்பதும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இக்காலத்தில் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கடுமையாக போராடிய வரும் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை தன் தலைமையில் அணிதிரட்டியவருமான டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியை பரவலாக அம்பலப்படுத்தியும் அக்கட்சி முழுவதையும் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுத்த முடியாமல் இருந்த காந்தியை விமர்சித்தும் பரவலான பிரச் சாரம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
சமூக சீர்திருத்த இயக்கத்தின் பாத்திரம்:
இந்தியாவில் சாதியமைப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக சமூக சீர்திருத்த இயக்கங்கள் வகித்த பாத்திரத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கிறது. ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார், ஸ்ரீநாராயண குரு மற்றும் பலருடைய மகத்தான பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே சாதியமைப்பினை அம்பலப்படுத்துவதிலும், கொடூரங்களை தணிப்பதிலும் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான மக்களுக்கு பல நிவாரணங்கள் பெற்றுத் தருவதிலும் சமூக சிர்திருத்த இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்த வரை இன்றைய சமூக அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமே அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கும் முடிவுகட்ட முடியும் எனக் கருதுகிறது. அதேசமயம் சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கு மக்களை தயார்படுத்தவும், ஒன்று படுத்தவும் சாதிய ஒடுக்குமுறைகள் முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என உறுதியாகக் கருதுகிறது. எனவே, கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களிலிருந்து உரிய படிப்பினைகள் பெற்று அதனை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வது அவசியம் என முடிவுக்கு வந்துள்ளது.
விடுதலைக்குப் பிறகும்:
இந்திய விடுதலைக்குப் பிறகும் வர்க்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வர்க்கப் போராட்ட தலைவர்களாக மட்டுமின்றி தீண்டாமை மற்றும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிரான போராட்ட தலைவர்களாகவும் விளங்கினார்கள் என்பது வரலாறு. மேற்கு வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் முன்னெடுத்துச் சென்ற சமூக சீர்திருத்த இயக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுததுச் சென்றது. கேரளாவில் ஏ.கே.ஜி., ஈ.எம்.எஸ் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலய பிரவேசம் உள்ளிட்ட தலித் மக்களின் ஏராளமான உரிமைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். திரிபுராவில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார உரிமைகளுக்காக மகத்தான தியாகங்களைச் செய்த பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. தமிழகத்தின் கீழத்தஞ்சையில் சிறு விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் குத்தகை உரிமை மற்றும் கூலி உயர்வுக்கான வர்க்கப் போராட்டத்துடன் சவுக்கடி, சாணிப்பால் குடிக்க வைப்பது போன்ற சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கம்யூனிஸ்ட்டுகள் இணைத்தே நடத்தினர் என்பதும் இதில் தோழர் சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களின் மகத்தான பாத்திரமும் வீரகாவியமாகும்.
சிபிஐ(எம்) திட்டமும் செயல்பாடும்:
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வர்க்கப் போராட்ட மற்றும் சமூகச் சீர்திருத்த பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுதான் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இப்பாரம்பரியத்தையும் பாதையையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில்தான் கட்சித் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவில் சோசலிச சமுதாயம் நிர்மாணிப்பதை லட்சியமாகக் கொண்டு அதன் முதல் கட்டப்பணியாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்திட பரந்துபட்ட உழைப்பாளி மக்களை அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்கு தடையாக உள்ள அனைத்து அம்சங்களையும் தகர்த்தெறிய விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சாதியமைப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு கட்சித் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பகுதியில் இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு எவ்வாறு வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் பின்னிப்பிணைந்த பகுதியாக உருவானது என்பதை வரலாற்று ரீதியாக பரிசீலித்தோம். இத்தகைய மார்க்சியப் புரிதல் அடிப்படையில் கட்சித் திட்டத்தின் கீழ்க்கண்ட பகுதிகள் அமைந்துள்ளன என்பதைப் பார்க்க முடியும்.
ஒரு சாதி மற்ற சாதியினரை ஒடுக்குவதும் தீண்டாமை அகற்றப்படுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டு தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் பிரத்யகேச் சலுகைகள் வழங்கப்படும். (1964 கட்சித் திட்டம், பாரா 15)
சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு நீண்டதொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமூக முறையிலேயே ஆழமாக வேரோடி விட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம் செய்து கொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறு பாடுகளை வளர்த்து வருகிறது. தலித் மக்களின் மிகப்பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில் சாதிய முறைக்கும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதியமுறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.” (2000-இல் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம், பாரா 5.12)
மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் இந்தியாவில் சாதியமுறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இடைக்காலத்தில் இதனை அமல்படுத்துவதில் சில தொய்வுகள் பலவீனங்கள் ஏற்பட்டபோதிலும் கட்சித் திட் டத்தின் அடிப்படையில் இதனைப் பரிசீலனை செய்து அத்தகைய போராட்டங்களை கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடுகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்பதும் அவர்களின் நலன்கள், உரிமைகளுக்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவதுமான பணிக்கு தொடர்ச்சி யான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
விரிந்து பரந்த ஜனநாயக மேடை:
இப்பின்னணியில்தான் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் ஏராளமான போராட்டங்கள் சமீப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் அதன் செயல்பாடுகள் தலித் மக்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நன்கு அறிவோம். இதேபோல தலித் மக்களின் பரச்சினைகளுக்காக போராடு வதற்கென்றே மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 நவம்பர் 27ல் மேற்கண்ட மாநில அமைப்புகள் அனைத்தும் இணைந்து “தலித் மக்கள் ஒடுக்கமுறை விடுதலை முன்னணி” என்ற அகில இந்திய அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலித்துகள்தான் போராட வேண்டும் என்ற கருத்தை சில அமைப்புகளும் நபர்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தலித்துகளின் பிரச்சனை தேசத்தின் பிரச்சனை, உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனை என்ற அணுகுமுறையோடு ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இப்போராட்டத்தில் இணைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான முயற்சிகளை செய்து வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகள் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலித் மக்கள் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏராளமான தலித் அல்லாத மக்களும் பங்குபெற்றார்கள் என்பதும், அத்தகைய பல போராட்டங்கள் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்த போராட்டங்களாகவும், பல்வேறு நிவாரணங்களைப் பெற்றுத்தந்த போராட்டங்களாகவும் வெற்றிகரமாக அமைந்தன என்பதும் சிறந்த அனுபவங்களாகும்.
தமிழகத்தின் தலையீடுகள் – வெற்றிகள்:
தமிழகத்திலும் அவ்வாறு நடைபெற்ற சமீபத்திய பல போராட்டங்களையும் தலையீடுகளையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். நாலுமூலைக்கிணறு (தூத்துக்குடி) மக்களுக்கு ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு தண் டனை, கொடியன்குளம் காவல்துறை தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை, தென்மாவட் டங்களிலும் பல வட மாவட்டங்களிலும் நடைபெற்ற சாதிய மோதல்களில் மிகவும் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தலையீடுகள் – இதையொட்டி நாம் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, ஒவ்வொரு ஆண்டும் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30ல் நடத்திய பல தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் – அதன் வெற்றிகள், பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டியது, பல கிராமங்களில் தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத்தந்தது. 20 ஆயிரம் அருந்ததியர் மக்களை திரட்டி சென்னையில் நடத்திய பேரணி இதையொட்டி அருந்ததியர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் கிடைத்த 3 சதவிகித உள்ஒதுக்கீடு, கடந்த சில ஆண்டுகளில் 2 முறை சென்னை கோட்டை நோக்கி பல்லாயிரம் பேரைத் திரட்டி நாம் நடத்திய கோட்டை நோக்கிய பேரணி – அதன் தாக்கம், வாச்சாத்தி மலைவாழ் பெண்கள் மற்றும் மக்கள் மீதான வனக்காவலர்களின் வன்கொடுமைத் தாக்குதலை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள், வழக்கினால் கிடைத்த நிவாரணம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை, பரமக்குடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ விசாரணை, தர்மபுரி மாவட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்களின் பாதிப்புக்கு அரசு நஷ்ட ஈடு மற்றும் நமது இயக்கங்களில் சார்பாக பல லட்ச ரூபாய் நிவாரணம் – இப்பிரச்சனையில் நாம் தொடுத்த வழக்கு, சாதி மறுப்பு திருமணங்களையொட்டி நடைபெற்ற பல கௌரவக் கொலைகளில் நமது தலையீடுகள் – வழக்கு – நிவாரணம், தலித் – பழங்குடியினர் உபதிட்ட நிதி ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஒதுக்குவதிலும் பயன்படுத்தவதிலும் கிடைத்த முன்னேற்றம், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மையம், இப்பயிற்சியின் காரணமாக பல நூற்றுக்கணக்கானவர்கள் தேர்வில் வெற்றி பெற்று வேலைநியமனம் பெற்றது, சில வங்கிகள் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உத்தரவை வெளியிட்ட போது அதனை தடுத்து நிறுத்தி முறியடித்தது என எண்ணற்ற நமது தலையீடுகள் மற்றும் போராட்டங்கள் தலித், பழங்குடியின மக்களுக்கு பெரும் பயன் அளிப்பதாக அமைந்தன.
தமிழகத்தில் நமது செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றிகள் காரணமாக தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடி வரும் பல தலித் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், தனி நபர்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து அதன் அங்கமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற போது அதன் மாவட்டக்குழுக்களிலிருந்தும் மேற்கண்ட அமைப்புகளிலிருந்தும் தலைவர்களும் ஊழியர்களுமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டதோடு அதன் இறுதிப் பேரணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடு மென்மேலும் பலமடைந்துள்ளது. ஏராள மான தலையீடுகள் மற்றும் இயக்கங்கள் நடந்த தின் பின்னணியில் 2வது மாநில மாநாடு விருதுநகரில் 2014 மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடும் பெரும் தாக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
முன்னெடுத்துச் செல்வோம்:
ஆக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித் – பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டங்களில் வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்திராத பங்களிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது. பல முதலாளித்துவ கட்சிகள் வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக தங்கள் அமைப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகளின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக தலித்-பழங்குடி மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும் அப்போராட்டங்களில் அனைத்து சாதிகளையும் சார்ந்த உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் வகையிலும் தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதேபோல அகில இந்திய அளவில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி போன்ற விரிந்து பரந்த ஜனநாயக மேடைகளை உருவாக்கியுள்ளது. இப்போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தின் பின்னிப்பிணைந்த பகுதியாக முன்னெடுத்துச் செல்கிறது. தனது 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்கடமையை நிறைவேற்றுவதில் மென்மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் என உறுதி ஏற்கிறது.

நன்றி: மாக்ஸிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் 

No comments: