-ந.
இரவீந்திரன்-
மனித சமூகம் பெற்று வந்த வளர்ச்சிச் செல்நெறியின்
வெளிப்பாடாக உற்பத்தியானது கலை. அதன் எழுத்து வடிவமாய்ப் பரிணமித்த இலக்கியம்
குறித்து பல்வேறு கோட்பாடுகள் உண்டு. மனிதப்படைப்பு என்பதைக் கடந்து உள்ளொளி
வாயிலாகக் கடவுள் வெளிப்படுத்தும் கொடையெனக் கொள்வோரும் உளர். மனுக்குலம்
எதிர்நோக்கிய பிரச்சனைகளை மக்கள் போராட்டங்கள் வாயிலாக தீர்க்கும் மார்க்கம்
கண்டறியப்பட்டபோது, அத்தகைய
இயங் காற்றல்களின் செயல்திறன் கலை - இலக்கியத்தின் பேசு பொருளான போது, இவை அருள் கொடைகளல்ல
சமூகம் உற்பத்திசெய்கின்ற இன்னொரு வடிவமே எனக்கண்டறிய இயலுமாயிற்று.
சமூக மாற்றத்துக்கான அந்த இயங்காற்றலில் பங்கேற்று
அதனைக் கோட்பாட்டுருவாக்கம் செய்த மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும்
ஏங்கெல்சும் இலக்கியம் குறித்தோ அதனைத் திறனாய்வு செய்யும் முறையியல்கள் பற்றியோ
தனியாக எழுதி வைக்கவில்லை. எரியும் பிரச்சனையாகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள்
எழுச்சிகொண்டு இயங்கிய அனுபவங்கள் சார்ந்த எழுத்தாக்கங்களே அவர்களது
முழுமைப்பணியாக இருந்தன. அத்தகைய எழுத்துகளில் வெளிப்பட்ட கருத்துகள் பின்னால்
தொடர்ந்த மார்க்சியச் சிந்தனையாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தன. கலை -
இலக்கிய - சமூக விஞ்ஞான நூல்களைக் கற்றுத்தேறி மார்க்சிய இலக்கியத் திறனாய்வை
அறிவதென்பதை விட, மார்க்சையும்
ஏங்கெல்சையும் போன்றே சமூக மாற்றப் போராட்டங்களில் இணைந்து இயங்கியவாறே ஏனைய
மார்க்சியச் சிந்தனையாளர்களும் மார்க்சியத்தையும் அதன் இலக்கியக்கோட்பாடுகளையும்
செழுமைப்படுத்தினர்.
அந்த வகையில் பிளெக்கனோவ், லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின், மார்க்சிம்கோர்க்கி, பெஞ்சமின், ப்ரெக்ட், லூகாக்ஸ், அல்தூசர், ஜோர்ஜ் தாம்சன், ரேமன்ட் வில்லியம்ஸ், பியோமா ஷே, கிறிஸ்டோபர் காட்வெல், லூசியன் கோல்ட்மான்
ஆகியோரின் பங்களிப்புகள் கவனிப்புக்குரியன. இன்னும் லூசூன், மாஒசேதுங், கோசிமின், பிடெல் காஸ்ட்ரோ என
இந்தப்பட்டியல் மிக நீளமானது என்ற போதிலும் மேற்குறித்த செயற்பாட்டாளர்களும்
சிந்தனையாளர்களும் முன்வைத்த இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகளை அடியொற்றியுங்கூட
அடிப்படைத் தெளிவை எட்ட இயலும் என்பது மெய். அத்தகைய ஒரு முயற்சி டெரி ஈகிள்டன்
அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'மார்க்சியமும்
இலக்கியத் திறனாய்வும்' என்ற
டெரி ஈகிள்டனின் நூல் இலக்கியத் திறனாய்வு குறித்த மார்க்சியர்களின் கருத்தாடல்களை
அலசும் போக்கில் மார்க்சியத்தில் மேலும் தெளிவுபெற இயலும் என்பதையும்
எடுத்துக்காட்டுகின்றது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் முன்னெடுத்த
மார்க்சியத் திறனாய்வு வகுப்புகளின் பேறானதே இந்நூல், ஆயினும், வெறும் கல்விப்புலச்
செயற்பாடு என்பதைக் கடந்து சமூக மாற்றக்கருவியாக இந்தச் சிந்தனைப்போக்கு அமைவதற்கு
பங்கம் ஏற்படாதவகையில் நூல் அமைய வேண்டும் என்பதில் அவர் கூடுதல் கவனம்
செலுத்தியுள்ளார். 'கோட்பாடுகளைப்
புரிந்துகொள்வது என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மேலும் ஆழமாகப்
புரிந்து கொள்வதேயாகும். அத்தகைய புரிதல் நமது விடுதலைக்குப் பங்களிக்கிறது. அந்த
நம்பிக்கையுடன் தான் நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்' என்று நூலின்
முன்னுரையில் டெரிஈகிள்டன் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சியம் இன்னமும் முதன்மைக் கருத்தியல் என்ற நிலை
நிலவிய 1976 ஆம் ஆண்டில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த முதன்மை நிலை
தளர்வடைந்து மேற்குலக வரலாறு ஒரு திருப்பத்தைச் சந்தித்துக்கொண்டு பிற்போக்குக்
காலகட்டம் தலை தூக்கும் சூழலில் அதனை உணர்ந்து கொள்ளாமல்,
1970களின்
நடுப்பகுதிவரை நீடித்த புரட்சிகர சிந்தனைகளின் நொதிப்பிலிருந்தே இந்நூலினை
எழுதியிருப்பதாக 2002ம் ஆண்டின் புதிய பதிப்புக்கான முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்
டெரிஈகிள்டன். இந்த உணர்நிலை கவனிப்புக்குரியதாகும். இன்றுள்ள சூழலில்
ஆக்கப்பட்டிருப்பின் அதன் வடிவம், தொனி என்பன வேறு வகையில்
அமைந்திருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, சோவியத்யூனியன்
வீழ்ச்சியடைந்து தகர்ந்து போய்விடும் என்பதற்கான அடையாளம் எதுவும் அன்று
உணரப்பட்டதில்லை. மாறாக, பல
தவறுகளுடன் முன்னேறுவதான தோற்றமே நிலவியது. அத்தகைய தவறுகளின் பல அடிப்படைகளை நூலாசிரியர்
ஸ்டாலினியத்தில் காண்கிறார். ஸ்டாலினியத்துக்கு எதிரான கடும் விமர்சனம் வாயிலாக
இலக்கியத்திறனாய்வு பரந்துபட்ட மக்களை வென்றெடுக்கும் வண்ணம் மார்க்சிய அணியினால்
எவ்வாறு முன்னெடுக்கப்படலாம் என்பதனைக் கண்டடைவது டெரிஈகிள்டனின் நோக்கமாக
அமைவதைக் காண்கிறோம். கட்சி நலனுக்கானதாயே இலக்கியம் அமைய வேண்டும் என 1928இல் ஸ்டாலின் தலைமையில்
கட்சி பிறப்பித்த ஆணையும், 1934இல் இலக்கிய மாநாட்டின் வாயிலாக ஸ்டாலின் - மார்க்சிம் கோர்க்கி
ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட சோசலிச யதார்த்த வாதமும் பெரும் சேதங்களை ஏற்படுத்தின.
அத்தகைய அரசியல் பணியை மறுக்காத அதேவேளை, முற்போக்கு
இலக்கியத்தின் பரந்துபட்ட பல்வேறு தளங்களை அனுமதிக்கத்தவறியமை ஏற்படுத்திய
பாதகங்களை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.
இவ்வகையில் ஸ்டாலினியத்தின் ஒரு முனைவாதத் தவறை
எடுத்துக்காட்டும் போது மறுபக்கத்துக்கான இன்னொரு ஒருமுனைவாதத் தவறை ஏற்புடைமையோடு
டெரிஈகிள்டன் எடுத்துக்காட்டுவது நெருடலானது. இலக்கியத்தின் அரசியல் பணிபற்றி
தவிர்க்கவியலாத சூழலில் வசன அளவில் ட்ரொட்ஸ்கி உச்சாடனம் பண்ணிய போதிலும் அவர்
முன்வைப்பது மார்க்சிய அழகியலுக்குரியதல்ல் சமூக இருப்பிலிருந்து பிரிக்கப்பட்ட
வர்க்க சமூக நியதிகள் வளர்த்த அழகியலையே ட்ரொட்ஸ்கி பேசுகிறார். டெரி ஈகிள்டன்
முன்வைக்கும் தர்க்கங்கள் மார்க்சிய அழகியலைக் கண்டறிய உதவுவனவாக அமைந்த போதிலும்
இவற்றுக்கு அப்பால் ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடு பிற்போக்கானது என்பதை வரலாறு
எடுத்துக்காட்டியுள்ளது.
ஸ்டாலின் இலக்கியத்துக்கான பன்மைத்தன்மையைக் காணத்தவறி
அரசியல் பணிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்தமை தவறெனினும், அதனை அன்றைய வரலாற்றுச்
சூழலிலிருந்து பிரித்தெடுத்து நோக்க இயலாது. கோர்க்கியின் 'தாய்' நாவல் வெறும் பிரசாரமாக
இருப்பதாக பிளெக்கனோவ் கூறியமையை லெனின் கண்டித்திருப்பது கவனிப்புக்குரியது.
இதனை எடுத்துக்காட்டும் றூலாசிரியர் 'ஒரு வெளிப்படையான
வர்க்கச் சார்பு இலக்கியம் தேவை என்று கூறும் லெனின் ஷஒரு பெரும் சமூக ஜனநாயக
எந்திரத்தின் பற்சக்கரங்களாகவும் மறையாணிகளாகவும் இலக்கியம் மாற வேண்டும்| என்று அறைகூவல் விடுக்கிறார்' என்பதையும்
சுட்டிக்காட்டத்தவறவில்லை (ப.53)
ஆயினும் கட்சி இலக்கியம் என்பதில் லெனின் பெரிதும்
வலியுறுத்துவது நாவல்கள் அல்ல, கட்சிக்கான கொள்கை சார்ந்த
எழுத்துக்கள் என்று அடுத்த பந்தியிலேயே மாறுபடவும் செய்கிறார் டெரிஈகிள்டன்.
நாவல்களிலும் கட்சி இலக்கியத்தேவையை வலியுறுத்தியவாறேதான் ஏனைய வடிவங்களையும்
லெனின் கோருகிறார் என்பதை இந்நூலின் வழியும் காண்கிறோம். ஆக்க இலக்கியம் கட்சி
இலக்கியத்தைக் கடந்து பல தளங்களில் அமைவதை மார்க்சியம் வலியுறுத்துகிறது
எனக்காட்டுவதற்காக இதனை மறுக்க அவசியமில்லை.
சமூக நோக்கில் பிற்போக்காளராய் உள்ளவர்களது படைப்புகள்
அவர்களது நோக்கத்தையும் மீறி மார்க்சியர்களது ஏற்புக்குரியதாக இடமுண்டு. 'கத்தோலிக்க சமயம்
சார்ந்த, மேட்டுக்குடி
நியதிகள் சார்ந்த பாகுபாட்டுச் சிந்தனைகள் இருந்தபோதிலும், பால்சாக் தனது சொந்த
வரலாற்றின் முக்கிய இயக்கங்கள் குறித்த ஒரு ஆழமான, கற்பனைத்திறனோடு கூடிய
புரிதலைக் கொண்டிருந்தார். தனது சொந்த கலைக் கண்ணோட்டங்களின் வலிமையால் அவர் தனது
அரசியல் கண்ணோட்டங்களுடன் முரண்படுகிற பரிவுகள் கொண்டவராக இருக்கும்படி
கட்டாயப்படுத்தப்படுவதை அவருடைய நாவல்கள் காட்டுகின்றன. ஷஉண்மை நிலைமையை ஆழமாக
உள்வாங்கிக்கொண்டவர்| என்று
அவரைப்பற்றி மார்க்ஸ் ஷமூலதனம்| நூலில் குறிப்பிடுகிறார்......
பால்சாக் மேற்பரப்பில் மேட்டுக்குடி நியதிகளின் ஆதரவாளராக இருக்கிறார், ஆனால் தனது இலக்கிய
ஆக்கத்தின் ஆழத்தில் தனது கசப்பான அரசியல் எதிரிகளான குடியரசுவாதிகள் மீது ஒழிவு
மறைவற்ற மரியாதையை வெளிப்படுத்துகிறார். ஒரு படைப்பின் அகநிலை நோக்கத்திற்கும்
புறநிலைப்பொருள் விளக்கத்திற்கும் இடையேயான இந்த தனிவேறுபாடு, இந்த ஷமுரண்பாட்டு விதி| டால்ஸ்டாய் பற்றிய
வெனினின் எழுத்திலும், வால்டர்
ஸ்காட் பற்றிய லூகாக்ஸ் எழுத்திலும் எதிரொலிக்கிறது' என்ற டெரிஈகிள்டன்
கருத்து மனங்கொள்ளத்தக்கது.
மார்க்சிய அழகியல் பற்றி ட்ரொட்ஸ்கியைத் துணைக்கு
அழைப்பதில் விமர்சனமற்று இருப்பதும், ஸ்டாலின் தவறை
வரலாற்றிலிருந்து பிரித்தெடுத்து அணுகுவதிலும் அவரது விருப்பையும் மீறி
கல்விப்புலத் தளத்துக்குரியதாக அவரது எழுத்து மட்டுப்பட்டுப் போனபோதிலும், ஒட்டுமொத்தமாக
டெரிஈகிள்டனின் நூல் மார்க்சியத்தையும் இலக்கியத் திறனாய்வையும் புரிந்து
கொள்வதற்கு பெரும் பங்களிப்பு நல்கியுள்ளது என்பது தெளிவு.
முடிந்த முடிவுகளை வலியுறுத்துவதை விட மார்க்சியச்
சிந்தனையாளர்களது மாறுபட்ட கருத்துகளை விவாதப்பாணியில் வளர்த்தெடுத்து
சுயசிந்தனைத்தர்க்க நிலையில் வாசகர் உட்செரிக்க ஏற்றதாக விடயங்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன. இயற்பண்புவாதம் - யதார்த்த வாதம் என்பன குறித்த தெளிவை அடைய
இடமுள்ளது. பட்டறிவின் எண்ணப்பதிவாக உண்மை அறிவு இருப்பதில்லை. புறநிலை யதார்த்தத்தின்
ஒரு ஆழமான - விரிவான பிரதிபலிப்பாக அறிவு உள்ளது. இப்பிரதிபலிப்பு
படைப்பாற்றலுடனான தலையீட்டை உட்படுத்தியதாகும். அனுபவம் கலையாகும் போது கலைஞரால்
பெறும் மாற்றம் கவனிப்புக்குரியது. யதார்த்தவாத எழுத்தில் இருப்பிலுள்ள அனைத்தும்
அப்படியே காட்டப்படுவதில்லை; காட்டப்படாத பகுதிகளும், முன்னேறும் வரலாற்று
அம்சம் கூடுதலாக ஊடுருவிப் பார்க்கப்படுவதும், இலக்கியகர்த்தாவால்
மாற்றிப்புனையப்படும் உழைப்பும் சேர்ந்தே யதார்த்தவாத எழுத்தாக்கம் அமைகிறது.
இந்த விமர்சனக்குறிப்பை எழுதும் போதுங்கூட பழக்க
தோசத்தில் வரும் ஷபடைப்பு| ஷபடைப்பாளி| என்பதைப் பெரும்
சிரமத்துடன் தவிர்க்க வேண்டியுள்ளது. வெறுமையிலிருந்து எதுவும் படைக்கப்படவில்லை
என்பதற்கு ஆசிரியர் கொடுத்த அழுத்தம் இந்த எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இலக்கியம் என்பது அடிப்படையில் உற்பத்திப்பொருள், பதிப்பாளருடன் எழுத்தாளரது
உறவு என்பன ஞ}லில்
தெளிவுபடுத்தப்படுகிறது. இறுதி இயலில் இதனை வலியுறுத்துகிறபோது வெறும்
வறட்டுவாதமாகிவிடாத எச்சரிக்கையுணர்வும் வெளிப்படுகிறது. இலக்கியமும் வரலாறும், உருவம் - உள்ளடக்கம், எழுத்தாளரும்
கடப்பாடும், எழுத்தாளரே
உற்பத்தியாளராக எனும் தலைப்புகளில் அமைந்துள்ள 94 பக்கங்கள் கொண்ட
இச்சிறு நூல் மார்க்சியமும் திறனாய்வும் குறித்த அடிப்படைகளை அறியப் பேருதவி
புரிகிறது.
எழுத்தாக்கத்தை வரலாற்றில் வைத்து நோக்குதல், படைப்போடு ஒன்றிப்போதல்
என்பதாயன்றிச் சிந்தனைத்திறனை வளர்ப்பதோடான உணர்நிலையாக எழுத்தாக்கத்தை அணுகுதல், மெய்மறக்கும் அழகியலாய்
அன்றி செயற்பூர்வமான அழகுணர்வு, எழுத்தாளர் ஒரு உற்பத்தியாளர் -
தொழிலாளி எனும் கருத்தாக்கம் என்பவற்றை தெளிவுறுத்தும் 'மார்க்சியமும்
இலக்கியத்திறனாய்வும்' எனும்
இந்நூல் அ. குமரேசன் மொழியாக்கத்தில் இலகுவான தமிழில் தரப்பட்டுள்ளது. சமூக அக்கறை
கொண்ட ஒவ்வொரு எழுத்தாளரும் படித்தாக வேண்டிய நூல் இது என்பது மிகையுரையல்ல.
No comments:
Post a Comment