வீடு, காணி, சம்பள உரிமைகளை வென்றெடுக்க பலமான தொழிற்சங்கத்தைக் கட்டுவோம்.
மக்கள் தொழிலாளர் சங்க மே தின அறைகூவல்
மக்கள் தொழிலாளர் சங்க மே தின அறைகூவல்
மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டமும் கருத்தரங்கும் வீடு காணி சம்பள உரிமைகளை வெற்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் காலை 10 மணி முதல் இடம்பெற உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டுள்ளார்.
மேதினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எட்டு மணித்தியாலம் மட்டுமே வேலை நேரம் என்ற உரிமையை வென்றெடுத்த தொழிலாளர் போராட்ட மேதினத்தை நினைவூட்டும் இவ்வேளையில் அவ்வுரிமையை இழந்து விட்ட நாம் இன்று பல மணிநேரம் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறோம். ஆரம்பத்தில் காடு வெட்டி மேடு திருத்தி பெருந்தோட்டங்களை அமைத்து பிரிட்டிஷ் கம்பனிகளுக்கு உழைத்த கொடுத்த பரம்பரைகள் இன்றில்லை. பின்னர் அரச நிறுவனங்களுக்கும் உழைத்து கொடுத்த பரம்பரைகள் போய், இன்று பெருந்தோட்ட பல்தேசிய கம்பனிகளுக்கும் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கும் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது பரம்பரையான வர்க்க அடையாளம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பதாகின்ற அதே வேளை எமது அதிகப் பெரும்பான்மையினரின் இன அடையாளம் மலையகத் தமிழர்களே.
இந்த இரண்டு அடையாளங்களையும் சுமந்த வண்ணம் 200 வருடங்களுக்கு மேல் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்து வரும் நாம், எமது உழைப்பை சுதந்திரமாக விற்று வாழக்;கைச் செலவிற்கேற்ற சம்பளத்தை பெற முடிவதில்லை. பெருந்தோட்டக் கம்பனிகள் மட்டுமன்றி அவற்றுடன் சமரசம் செய்து கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள தொழிற்சங்கங்களும் மாதச் சம்பளம் வேண்டும் என்பதை பேச்சுக்குகூட எடுப்பதில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள தெளிவில்லாத சம்பளத்திட்டம் எம்மீது திணிக்கப்பட்டுள்ளது. இன்று பிரிட்டிஷ் காலத்தை விட எமது உழைப்பு வௌ;வேறு வழிகளில் சுரண்டப்படுகிறது. வேலை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருந்தததாவது;
புதியவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை. அவ்வாறு வேலைக்கு அமர்த்துபவர்களையும் நிரந்தர சேவைக்கு உட்படுத்தாமல் கைக்காசு ஊழியர்களாக நீண்ட நாட்கள் தொடர்ந்து வைத்திருக்கும் நிலை தொடர்கிறது.
எமக்கென்று சொந்த வீடு இல்லை; சொந்தமாய் ஒரு துண்டு நிலமும் இல்லை. வசிக்கின்ற லயன் அறைகளில் இருந்தும் இரட்டை விடுதிகளில் (கோட்டஸ்) இருந்தும் அச்சுறுத்தல்கள் மூலமும் நீதி மன்றங்களின் உத்தரவின் மூலமும் வெளியேற்றப்படும் அவல நிலை அதிகரித்துச் செல்கிறது. எனினும் சில தொழிற்சங்கங்கள் இந்திய அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாக கூறி தங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்ள முனைகின்றன.
தோட்டப் பிரதேசங்களோ, லயன்களோ, இரட்டை விடுதிகளோ உள்ளுராட்சி, மாகாண சபை, மத்திய அரசாங்க நிர்வாகத்துக்குள் அடக்கப்படவில்லை. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளான கிராம, நகர குடியிருப்புகளில் தோட்டக் குடியிருப்புகள் உள்ளடக்கப்படவில்லை. அதனால் பாதை, நீர் மின்சாரம் போன்ற உட்கட்டமைப்புகளை பெற்றுக் கொள்ளும் உரிமை எமக்கு இல்லை. அபிவிருத்தி திட்டங்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமையுமில்லை. மத்திய அரசின் சுகாதார சேவையை பெற்றுக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம்.
உள்ளுராட்சி, மாகாண சபைகள், பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களித்து விட்டு நாம் வெறும் பார்வையாளர்களாக இருந்து வருகின்றோம். எமக்கென்று தன்னதிகார அலகுகளை பெற்றுக் கொள்ளும் உரிமையும் இல்லை.
இந்நிலையில் எமக்கு வீடு, நீர், விறகு என்பன இலவசமாக கொடுக்கப்படுவதாகவும் நாம் வசதியாக இருப்பதாகவும் பிரசாரம் செய்யப்படுகிறது. நாமோ அவல வாழ்கை வாழ்ந்து வருகின்றோம்.
அதிக பெரும்பான்மையான தமிழ்மொழி பேசும் எமக்கு தாய் மொழியில் எமது நாளாந்த அலுவல்களை செய்து கொள்ளும் உரிமை மறுக்கப்படுகிறது. இன ரீதியான பாகுபாடுகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றோம்.
இவ்வாறான பாதிப்புகளிலிருந்து எம்மை விடுவித்துக் கொண்டு உரிமை உள்ளவர்களாக வாழ, சுய நல, சந்தர்ப்பவாத நோக்கமற்ற பலமான தொழிற்சங்கத்தை கட்டியெழுப்ப இவ்வருட மேதினத்தில் உறுதி கொள்வோம். இன, மத பேதங்கள் கடந்து பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஏனைய பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுடனும் ஏனைய துறைசார் தொழிற்சங்கங்களுடனும் கைகோர்ப்போம்.
No comments:
Post a Comment