Wednesday, April 23, 2014

முதலாளித்துவம் ஒரு பேய்க்கதை

அருந்ததி ராய்

தமிழாக்கம்: அந்திவண்ணன்

விலை ரூ.30 – மகஇக – திருச்சிக் கிளை வெளியீடு
அருந்ததி ராய் ஆங்கிலத்தில் எழுதி பெரும் வரவேற்பு பெற்ற இக்கட்டுரை மூலத்தின் சுவையும், பொருளும் குன்றாமல் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டு திருச்சி மக்கள் கலை இலக்கியக் கழக வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இதே கட்டுரையை வேறு இரு பதிப்பகங்களும் வெளியிட்டிருந்தாலும் அவற்றை விட இந்த மொழிபெயர்ப்பு தரமானது என்பதை வாசகர்கள் ஒப்பிட்டு அறியலாம்.
நூலிலிருந்து சில பகுதிகள்:
மண்டேலா முதல் ராக்பெல்லர் வரை, அன்னா ஹசாரே முதல் வேதாந்தா வரை… கார்ப்பரேட் நற்செய்தியின் இந்தப் புனிதப் பேராயர்கள் இனி எத்தனை காலம்தான் நமது எதிர்ப்பை எல்லாம் விலை பேசி வீழ்த்துவார்கள்?
இது தங்குமிடமா அல்லது இல்லமா? புதிய இந்தியாவின் கோவிலா அல்லது அதன் பேய்கள் உறையும் கிடங்கா? மர்மத்தையும், அரவமற்ற அச்சுறுத்தலையும் உமிழ்ந்தபடி, மும்பையின் அல்டமாண்ட் சாலையில் ஆன்டிலாவின் வருகை நிகழ்ந்த தருணம் முதல் எதுவும் முன்பு போல் இல்லை. “ இதோ வந்து விட்டோம், இதுதான் அது. நம் புதிய மன்னருக்கு உங்கள் மரியாதையைச் செலுத்துங்கள்” என்றார் என்னை அங்கு அழைத்துச் சென்ற நண்பர்.
ஆன்டிலா, இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானது. இருபத்தி ஏழு அடுக்கு மாடிகள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், ஒன்பது மின் தூக்கிகள் (லிஃப்டுகள்), தொங்கு தோட்டங்கள், நடன அரங்குகள், சீதோஷண அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கார்களை நிறுத்துவதற்கு மட்டும் ஆறு தளங்கள், பராமரிக்க அறுநூறு சிப்பந்திகள் என நீளுகின்ற, இதுகாறும் எவரும் கட்டியிராத ஊதாரிச் செலவினம் கொண்ட இந்தக் குடியிருப்பு பற்றி நான் ஏற்கெனவே படித்திருந்தேன். எனினும், இதோ என் கண்ணெதிரே 27 மாடிகள் உயரத்திற்கு உலோக வலையின் மீது ஒட்டப்பட்டு நெட்டுக்குத்தாக நிமிர்ந்து நிற்கும் புல்வெளியை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. அதில் திட்டுத்திட்டாய் புற்கள் உலர்ந்திருந்தன, கச்சிதமான செவ்வகங்களாக சில துண்டுகள் உதிர்ந்தும் இருந்தன. ‘புல்லுக்கும் ஆங்கே பொசியும்’ என்ற கொள்கை வேலை செய்யவில்லை எனப் பளிச்சென்று தெரிகிறது! (முதலாளிகளிடமிருந்து செல்வம் மெல்லக் கசிந்து கீழிறங்கி மக்களுக்கு வந்து சேரும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் வாக்குறுதியை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.)
மேலிருந்து கீழே பொசியவில்லையே தவிர, வெள்ளம் கீழிருந்து மேல் நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அதனால்தான் நூற்று இருபது கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், நூறே நூறு பணக்காரர்கள் மட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரான சொத்தை வைத்திருக்க முடிகின்றது.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், நெட்டுக்குத்தான புல்வெளி அமைத்தும், ஆன்டிலாவில் அம்பானி குடும்பத்தினர் ஏன் குடியேறவில்லை என்றுதான் ஊரெங்கும் (நியூயார்க் டைம்ஸ் வரையில்) பேசிக் கொள்கிறார்கள். அல்லது பேசிக் கொண்டார்கள். பேய்கள், துரதிர்ஷ்டம், வாஸ்து, ஃபெங் சுயி என மக்கள் ஏதேதோ கிசுகிசுக்கிறார்கள். ஒருவேளை இது கார்ல் மார்க்ஸின் குற்றமாகவும் இருக்கலாம். (நாசமாய்ப்போன அந்த மனிதனின் சாபம்!) முதலாளித்துவமானது, “மாயவித்தை புரிந்தாற்போல பிரம்மாண்டமான பொருளுற்பத்திச் சாதனங்களையும், பரிவர்த்தனைச் சாதனங்களையும் தோற்றுவித்து விட்டு, பாதாள உலகிலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற் போன மந்திரவாதியின் நிலையில் இருப்பதாக” அவர் கூறினாரே.
இந்தியாவில், ஐ.எம்.எஃப்-க்குப் பிந்திய புதிய “சீர்திருத்த வகை” நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முப்பது கோடி பேர்களும், சந்தை என்ற பெயரால் அழைக்கப்படுபவர்களுமாகிய நாம், பாதாள உலகத்தின் ஆவிகளுடன்தான் அக்கம் பக்கமாக வாழ்ந்து வருகிறோம். பேய்களாய் அலறுகின்ற செத்துப் போன ஆறுகள், வாய் பிளந்து கிடக்கும் வறண்ட கிணறுகள், மழிக்கப்பட்ட மலைகள், அம்மணமாக்கப்பட்ட காடுகள்; கடன்காரர்களால் விரட்டப்பட்டு கயிற்றிலே தஞ்சம் புகுந்த இரண்டரை லட்சம் விவசாயிகளின் ஆவிகள், நமக்கு வழியமைத்துக் கொடுப்பதற்காக ஏழைகளாய், ஏதிலிகளாய் ஆக்கப்பட்டு இருபது ரூபாய்க்கும் குறைந்த தொகையில் ஒரு நாளை நகர்த்தும் எண்பது கோடி நடை பிணங்கள் என பலப்பல கீழுலக ஆவிகளுடன்தான் நாம் அக்கம் பக்கமாய் வாழ்ந்து வருகிறோம்.
0000
மேல் நோக்கிப் பாயும் இந்த வெள்ளம், எல்லாச் செல்வங்களையும் நமது குபேரர்கள் காலூன்றிச் சுழன்றாடும் ஓர் ஊசிமுனையில் குவிக்க, கீழே ஜனநாயகத்தின் நிறுவனங்களான நீதிமன்றங்கள், நாடாளுமன்றம் மட்டுமின்றி ஊடகங்கள் மீதும் பணம் ஆழிப் பேரலையென மோதி ஊடறுத்துச் செல்கிறது; உரிய முறையில் இயங்குவதற்கான அவற்றின் ஆற்றலை முடக்குகிறது. தேர்தலின் திருவிழாச் சூழல் எந்த அளவுக்குக் களைகட்டி காதைக் கிழிக்கிறதோ அந்த அளவுக்கு, இங்கே ஜனநாயகம் இருக்கிறதென்ற நம்பிக்கை நமக்குக் குறைகிறது.
0000
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் முதல் எதிரியாக இருந்த பாசிஸ்டுகளின் இடத்திற்கு கம்யூனிஸ்டுகள் வந்த பின் பனிப்போரைத் திறம்பட நடத்தப் பொருத்தமான புதிய வகை நிறுவனங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க இராணுவத்துக்கு ஆயுத ஆராய்ச்சிப் பணிகள் செய்வதற்கான வல்லுநர் குழுவான ‘ரேண்ட்’ ( RAND – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்புக்கு ஃபோர்டு நிதியளித்தது. “சுதந்திர தேசங்களில் ஊடுறுவி சீர்குலைக்க கம்யூனிஸ்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளை முறியடிக்க” வேண்டி ஃபோர்டு அறக்கட்டளை 1952-ல் ‘குடியரசுக்கான நிதியம்’ ஒன்றை நிறுவியது. பின்னாளில் இந்த நிதியம் ‘ஜனநாயக அமைப்புகள் பற்றிய ஆய்வு மையமாக’ உருமாறியது. மெக்கார்த்தேயிசத்தின் அத்துமீறல்களைத் தவிர்த்து சாதுரியமாகப் பனிப்போரை நடத்துவது இம்மையத்தின் பணியாக இருந்தது. கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு நிதியளிப்பது, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களுக்குக் கொடையளிப்பது, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது எனக் கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் ஃபோர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை இந்த ஆடியின் வழியாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
0000
சமூக அறிவியல் மற்றும் கலைத் துறைகளுக்கு ஏராளமான நிதி வழங்குவோர் கார்ப்பரேட் அறக்கட்டளைகளே. ‘வளர்ச்சித்திட்ட ஆய்வுகள்’, ‘சமூகக் குழுக்கள் பற்றிய ஆய்வுகள்”, “பண்பாட்டு ஆய்வுகள்’, “நடத்தை அறிவியல்கள்‘ மற்றும் “மனித உரிமைகள்” எனப் பலப்பல துறைகளில் ஆய்வுகளைத் தொடங்கி அதற்குக் கொடை அளிப்பதும், ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதும் இந்த அறக்கட்டளைகளே. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களின் வருகைக்காகக் கதவை அகலத் திறந்தவுடன், மூன்றாம் உலக மேட்டுக்குடியினரின் பிள்ளைகள் லட்சக்கணக்கில் வெள்ளமென உள்ளே பாய்ந்தார்கள். கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தன் ஒரு பிள்ளையையாவது அமெரிக்காவில் படிக்க வைக்காத மேல்தட்டு, நடுத்தர வர்க்க குடும்பத்தைக் காண்பது அரிது. இவர்கள் மத்தியிலிருந்து நல்ல அறிஞர்கள், கல்வியாளர்கள் மட்டும் வருவதில்லை. பிரதமர்களும், நிதி அமைச்சர்களும், பொருளியலாளர்களும், கார்ப்பரேட் வழக்கறிஞர்களும், வங்கியாளர்களும், அதிகாரிகளும் வருகிறார்கள். இவர்கள் தமது நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்குத் திறந்து விடவும் ஆவன செய்கிறார்கள்.
0000
கட்டுமான மறுசீரமைப்பு (Structural Adjustment) நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் திணிக்கத் தொடங்கி, பொதுச் சுகாதாரம், கல்வி, குழந்தை பராமரிப்பு, மனிதவள மேம்பாடு போன்றவற்றுக்கு செய்து வந்த செலவை வெட்டிச் சுருக்குமாறு அரசுகளின் கையை முறுக்கத் தொடங்கியதுமே அரசு சாரா அமைப்புகள் நுழையத் தொடங்கின. அனைத்தும் தனியார்மயம் என்பது அனைத்தும் என்.ஜி.ஓ மயம் என்றும் பொருள் கொள்ளத் தக்கதாக ஆயிற்று.
0000
உலக மூலதனம் பாய்கின்ற பாதைகள் அனைத்திலும் மைய நரம்பு மண்டலத்தின் முடிச்சுக்கள் போல இந்த என்.ஜி.ஓக்கள் அமர்ந்திருக்கிறார்கள். செய்தி அனுப்புவோராக, சேகரிப்போராக, அதிர்வுத் தாங்கிகளாக, இப்பாதையில் ஏற்படும் ஒரு சிறிய துடிப்பைப் பற்றியும் எச்சரிப்போராக, அதே சமயம் தமக்கு இடமளித்த நாடுகளின் அரசுகளுக்கு எரிச்சலூட்டக் கூடாது என்பதில் கவனம் நிறைந்தவர்களாக, என்.ஜி.ஓக்கள் பணி செய்கிறார்கள்.
0000
கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுறுவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை நிதியால் வருடிக் கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பாலின அரசியல், சமூக முன்னேற்றம் போன்ற சொல்லாடல்களுக்குள் அவர்களை அழைத்துச் சென்றனர்.
நீதி என்ற உன்னதக் கருத்தாக்கத்தை மனித உரிமைகள் எனும் தொழிலாக மாற்றியமைத்தது என்பது கருத்தியல் தளத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு கவிழ்ப்பு நடவடிக்கையாகும். இக்கவிழ்ப்பு நடவடிக்கையில் என்.ஜி.ஓ-க்களும், அறக்கட்டளைகளும் மிக முக்கியப் பாத்திரம் ஆற்றியுள்ளனர். மனித உரிமைகள் என்ற குறுகிய பார்வை ஒரு பிரச்சினையின் விரிந்த பரிமாணத்தைப் பார்க்க விடாமல் தடுத்து, அதனைக் குறிப்பிட்ட அட்டூழியம் குறித்த ஆய்வாக மட்டும் மாற்றுவதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையுமே – உதாரணமாக, மாவோயிஸ்டுகளையும் இந்திய அரசையும், அல்லது இஸ்ரேலிய ராணுவத்தையும் ஹமாஸையும் – மனித உரிமையை மீறியவர்களாகக் கண்டனம் செய்ய வாய்ப்பளிக்கிறது.
0000
முதலாளித்துவம் நெருக்கடியில் இருக்கிறது. ‘புல்லுக்கும் ஆங்கே பொசியும்’ என்ற கோட்பாடு தோற்று விட்டது. வெள்ளத்தின் மேல் நோக்கிய பாய்ச்சலும் தள்ளாடுகிறது. சர்வதேச நிதித்துறை நெருக்கடி இந்தியாவை நெருங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி வீதம் திடீரெனச் சரிந்து 6.9% ஆகியிருக்கிறது. அந்நிய முதலீடோ வெளியேறுகிறது. மாபெரும் சர்வதேச தொழிற்கழகங்களெல்லாம் எங்கே முதலீடு செய்வதெனத் தெரியாமல், நிதித்துறை நெருக்கடி எப்படித் திரும்பும் என்று ஊகிக்கவும் முடியாமல், முகவாயைக் கையில் வைத்தபடி, பெரும் பணக்குவியல்களின் மீது அமர்ந்திருக்கிறார்கள். சர்வதேச முதலாளித்துவம் என்ற பிரமாண்டத் தேரில் புரையோடியிருப்பது ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு விரிசல்.
முதலாளித்துவத்திற்கு உண்மையிலேயே சவக்குழி தோண்ட இருப்பவர்கள், தாம் உருவாக்கிய மருட்காட்சியில் தாமே மயங்கி, தமது சித்தாந்தத்தையே விசுவாசமாக மாற்றிக்கொண்டு விட்ட முதலாளித்துவத்தின் புனிதப் பேராயர்களாகவே கூட அமையக்கூடும்.
________________________

புத்தகம் கிடைக்கும் இடங்கள்

  1. 23.01.2013 வரை
    கீழைக்காற்று கடை எண்: 551-552
    36வது சென்னை புத்தகக் காட்சி,
    ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை
  2. முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
    கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
    தொலைபேசி – 044-2841 2367
  3. புதிய கலாச்சாரம்
    16, முல்லைநகர் வணிக வளாகம்,
    2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
    சென்னை – 600083
    தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி: வினவு 

No comments: