Sunday, February 02, 2014

எனக்குள் அண்ணன் கொக்குவில் கோபாலின் கடக்க முடியா நினைவுகள்

-கரவைதாசன்-
அண்ண! இது கண்ணீர் அஞ்சலி செலித்தி தீர்க்க கூடிய துயரல்ல, உன் பிரிவுத் துயர்.உனது அர்த்தமுள்ள வாழ்வின் பக்கங்களில் சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்பாக உன்னை  நான் சந்தித்தேன். அதற்கு முன்பாகவே உன்னைப்  பற்றி அறிந்து வைத்திருந்தேன். எல்லோருக்கும் கிட்டும் நாடகம், இலக்கியம், அரசியல் சமூகச்செயற்பாடு, மாயஜாலம் வானொலி இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட உன்னைச்  சந்தித்து பழகும்  அனுபவம் தான் முதலில் எனக்கும் எட்டியிருந்தது.  அதனிடையே, யாழ்பாணத்தின் சராசரித்தமிழர்களில் ஒருவராகத்தான் உன்னையும் எண்ணியிருந்தேன், பின்னாளில் உனது  செயற்பாடுகளை அவதானித்த போதுதான்  வானத்துக்கும் பூமிக்கும் இடையேயான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உன்னை இணைத்துக் கொண்டு பிரக்ஞை பூர்வமாக இயங்கும் உன் சிந்தனைப் போக்கும், துடிப்பும் "அநீதியை எதிர்த்து நிற்பதில் நீயும் நானும் ஒரே மன உறுதி கொண்டவர்கள் என்றால் நீயும் நானும் தோழர்களே " என்ற சேயின் பிரசன்னம் உன்னிடம் தெறிப்புக்கொள்வதைக் கண்டேன்.

முதலில் என்னை நீ தம்பி என அழைத்தாய், பின் தாசர் என்பாய், கேட்டல் எனக்கு நீதான் அயோத்தி தாசர் என்றாய். என் தந்தையைப் பற்றி எனக்கு நீ சொன்னாய் எனது பெரியப்பா உனக்கு உறவு என்றாய். "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்ற வாசகத்தை அப்படியே தலை கீழாக புரட்டிப் போட்டாய். அண்ணன் உடையான் ஆருக்கும் அஞ்சான் என்றுதான் வலம் வந்தேன்.

உன் தோள்களில் இருந்து என் கைகளை நான் உயர்த்தினேன். என் தோள்களில் இருந்து உன் கைகளை நீ உயர்த்தினாய்.

உனது வானொலியில் தேடல் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்புக்கொண்டேன். வானொலிக்கு வான்பதி மலர் செய்தோம், இலங்கையில் வறிய மாணவர்களின் துயர் துடைக்க  எம்மோடொத்த நண்பர்களுடன் சேர்ந்து டன்ரமி அமைப்பு, டன்ரமி அஞ்சல் சஞ்சிகை எனக் கடந்து வந்தோம். சின்ன சின்னதாய் செய்த முயற்சிகளில் தோன்றலில் கற்றலும்  மறைதலில் அனுபவமும் கண்டோம்.

இரத்த வெடிலும், பிணங்களின் குவியலும், பிஞ்சுகளின் விம்மலும், பெண்களின் கதறலும், வேர்கொள்ள முடியாமல் விரட்டி வீழ்த்தப்பட்ட மக்களின் குரலும் கொலைக்களமாகவே மாறிவிட்ட அர்த்தமற்ற  பிறந்த பூமியின் அமைதி வேண்டி உச்சமாக மக்களுக்காய் மறைமுக அரசியல் செய்தோம்.

உன்னிடம் ஒரு ரேஸ்மோடல்  கொண்டாகார் இருந்தது. என்னிடமும் ஒரு நிசான்கார் இருந்தது. அதிலும் ஒரு ஜனநாயகத்தினைப் பேணினாய். மாறி மாறி இந்த ஐரோப்பிய தெருக்களிலெல்லாம் உருண்டு திரிந்தோம். நான், நீ, கந்தசாமிமாமா இன்னும் சிலர், எத்தனை குழுக்களைச் சந்தித்தோம், எத்தனை அரசியல் தலைவர்களைச் சந்தித்தோம்.

இலக்கியச்சந்திப்பு மகாநாடு, குறும்பட விழாக்கள், நூல் அறிமுக விழாக்கள் பல செய்தோம், தமிழ்ச்சேவை வானொலி செய்தோம் இன்னும் பலப்பல........

இப்போ கந்தசாமிமாமாவுக்கு வயசேறிப்போச்சு, நீ மலையேறிப் போனாய், நான் மனம் ஏறிப்போய் நிற்கிறேன். சோகமாகிப் போன சூழலில் நான் எனது கனவுகளில் பயம் கொண்டுள்ளேன், என்பதே உண்மை.

அண்ண, என்னிடம் நீ எதைக் கேட்டாய், நட்புக்காக நடிகவிநோதனுக்கு பொன் விழாச் செய்ய வேண்டும் எனக் கேட்டாய். செய்தோம். அங்கு தான் உன்னை நல்ல மனிதனாகக் கண்டேன். சக கலைஞனை தன்னைப் போல் காணும் உன் நல்ல பண்பினைக்  கண்டேன்.

நான் கோயில், குளம் எல்லாம் பிழை என்றேன். நீ அங்கும் நிற்பாய் என்றாய். "சர்ச்சுக்குள் சவம் சொர்க்கம் சேர்கிறது! மசூதிக்குள் பிணம்புனிதம் ஆகிறது! கோவிலுக்குள் மனித பிண்டம்  தீட்டாகிறது!" என்ற புரிதல் உன்னிடமும் இருந்தது. ஆயினும் வெளியில் நின்று எதுவும் செய்ய முடியாது என்பது உன் வாதம். இந்த  முரண்களுக்கு உள்ளும்  நாம் உறவாகவே இருந்தோம்.

அண்ண, பேதங்கள் நிறைந்த தமிழ்ச் சமூகப் பன்பாட்டுத்தளத்திலே புதிதாய் ஒரு பொறி செய்தாய். உன் பிள்ளைகள் வழி, உன் பேரப்பிள்ளைகள் அவ்வழியே  சுதந்திரக் காற்றினை சுவாசிப்பார்கள். நீ! நடைமுறையில் எதையும் செய்யும் நல்ல மனிதன்.

அண்ண, இனி உன்னை யாரும் காண முடியாது. இனி யாரும் உன்னுடன் பேச முடியாது. ஆயினும் உன் கதைகளுடன் நான் பேசிகொண்டிருப்பேன். உன் செயல்களுடன் நான் பயணித்துக் கொண்டிருப்பேன்.

அண்ண, எனது ஊர்  உனக்கு மிகவும் பிடிக்கும் என்றாய். சங்கானையில் மழை பெய்தால் கன்பொல்லையில்  தடிமன் கட்டும் என்று கதைகதையாச் சொல்வாய். சென்ற ஆண்டு எனது ஊரை நானும் சென்று பார்த்தேன். அங்கு பனம் தோப்பெல்லாம் செல் அடிபட்டு தொப்பிழந்து போய் தனி மரங்களாய் நிற்கின்றன. தப்பிய பனை மரத்தில் நல்ல இளம் சார்வு கொய்து வீசி எறிந்து வழி விடுகிறேன். என் சோதரானே!
உனக்கென் வணக்கம்!

(அமரர் கொக்குவில் கோபாலன் அவர்களின் இறுதி யாத்திரையின்போது 06.01.2014 பகிர்ந்த நினைவுரை )


30வது இலக்கியச்சந்திப்பு டென்மார்க், ஒல்போ நகரில் 19, 20 - 04- 2003 திகதிகளில் நடைபெற்றது.

தமயந்தி, புஷ்பராஜா ஆகியோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சேரன் (கனடா) புகைப்படக் காட்சியை தமது உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து கு. பரராஜசிங்கம் (ஜேர்மனி);, 'இலக்கியச்சந்திப்பின் நோக்கும் அவசியமும்" பற்றிப் பேசினார். இலக்கியச்சந்திப்பின் வரலாற்றையும் அதன் தேவையையும் அவர் விளக்கினார்.

'புகலிடத் தமிழ் எழுத்துக்களின் இன்றைய நிலையும் வெளியும்" பற்றிப் பேசிய கலைச்செல்வன (பிரான்ஸ்);, புகலிடத்தில் பல பத்திரிகைகள் நின்று போனதிற்கான காரணங்களை ஆராய்ந்தார்.

'போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் தாக்கங்கள்" என்னும் நிகழ்வு பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. நிகழ்ச்சியை நடத்திய உளவியலாளர் வீ. சிறிகதிர்காமநாதன் (டென்மார்க்) கேள்விகளுக்கு பல உபயோகமான பதில்களைத் தந்தார். இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

சரவணனின் 'இலங்கைப் பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும்" என்னும் நூல் அறிமுகம் புஷ்பராஜா அவர்களால் செய்யப்பட்டது. இது இலங்கை அரசியலில் பெண்களின் பங்கு பற்றிப் பேசும் ஓரே ஒரு நூல் என்று கருதப்படுகிறது.

கவிஞர் முல்லையூரானின் 'சேலை" சிறுகதைத் தொகுப்பு கி. செல்த்துரையினால் (டென்மார்க்) விமர்சனம் செய்யப்பட்டது. தமது பேச்சில் இவர் பாவித்த ஆணாதிக்க வசனங்கள் சபையில் காரசாரமான உரையாடலை ஏற்படுத்தியது.

சுசீந்திரனின் (ஜேர்மனி) 'தேசிய இனங்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கம்" என்ற உரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுற்றன.

இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள், கரவைதாசனின் 'டென்மார்க்கில் இலக்கிய வெளிப்பாடுகள்" என்னும் உரையுடன் ஆரம்பமாகின.

டென்மார்க் பல்கலைக்கழக மாணவிகளால் வெளியிடப்படும் 'பாலம் அமைப்போம்" என்ற சஞ்சிகை கே. தர்சிகா, எஸ். கஜபாலினி, ஜே. ஏ. கௌசினி ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாவது தலைமுறையினர் புகலிடத்தில் எதிர் நோக்கும் பல பிரச்சனைகள் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டன. . இதைத் தொடர்ந்து செ.சிறிகதிர்காமநாதன் 'புகலிடத்தில் இரண்டாம் தலை முறையினர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் - ஒர் உளவியல் பார்வை" எனும் விடயம் பற்றிப் பேசினார். இதைத் தொடர்ந்து மிகப் பிரயோசனமான விவாதம் நடைபெற்றது.

அசோக் கண்ணமுத்துவின் அசை-2, அடேல் பாலசிங்கத்தின 'சுதந்திர வேட்கை", 'றஸ்மியின் கவிதைகள்" ஆகிய நூல்கள் முறையே கு. பரராஜசிங்கம், சி. புஷ்பராஜா, கலைச்செல்வன் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டன.

இதன் பின்பு எஸ். மதி (டென்மார்க்) தனது உணர்ச்சி மிக்க கவிதைகளை வாசித்தார்.

புகலிடத்தில் தலித்தியம் - வெளிப்பாடு என்னும் விடயம் பற்றி சரவணன் (நோர்வே) உரையாற்றினார். புகலிடத்தில் சாதியத்த்தின் வெளிப்பாடுகள் பற்றி தெளிவாக விபரித்தார். இதைத் தொடர்ந்த விவாதத்துடன் இலக்கியச்சந்திப்பு நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

அடுத்த இலக்கியச்சந்திப்பை ஒல்லாந்தில் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.



1 comment:

vetha (kovaikkavi) said...

மனம் தொடும் பதிவு. கண்கள் குளமானது.
இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவை.
எல்லோர் மனமும் ஆற இறையருள் நிறையட்டும்.
இவர் ( திரு. இராஐகோபாலன்) ஒழுங்க செய்த ஒல்போ கூட்டத்தில்
''நானும் என்கவிதையும்'' தலைப்பில் முதன் முதலில்
நான் மேடையேறிய போது என் தமிழ் கண்டு(கேட்டு)
வியப்படைந்தவர்களை மறக்க முடியாது. அங்கு தான் அமரர்
முல்லையூரான் என்னுள் என் கவிதைப் புத்தக ஆக்கத்திற்குப் பதியம் போட்டார்.
பின்னர் விதையிட்டு மரமானது மறக்க முடியாதவை.
ஒல்போ - திரு இராஐகோபாலனும் இதில் பிணைந்துள்ளார். .
சகோதரர் கரவைதாசனும் டென்மார்க்கில் எனது நூல் வெளியீட்டிற்குக் காரணமானவர்.
இப்பதிவிற்கும் நன்றி. சகோதரர் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரது துணைவி, உறவுகளிற்கும் ஆறுதல் கிடைக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்
3-2-2014.