-கலைச்செல்வன் -றிக்ஸ்சிஅமிர்தம்-
நந்தா என் நிலா – தட்சிணாமுர்த்தி சுவாமிகள், சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படாதவர், ராஜாவின் குரு. ஒரு மனிதனின் தோற்றத்துக்கும் அவனின் மேதாவித்தனத்துக்கும் ச...ம்பந்தமில்லையென்பதற்கு இன்னொரு உதாரணம். தமிழ் இசையில் பல புதுமைகளை செய்து அதை இன்னொரு பரிமாணத்துக்கு இட்டுச்சென்றவர் இளையராஜா. அவரின் இசைக்கு கோடிக்கணக்கானவர்கள் ரசிகர்கள். இவர்களில் இசை தெரிந்தவர் தெரியாதோர் என எல்லோருமே அடங்குகிறார்கள். அதுதான் ஒரு நல்ல இசையமைப்பாளனின் வெற்றி. ஆனால் கோடிக்கனக்கானவர்களை தனது இசையால் கட்டிப்போடும் இசைஞானி, இசையைப் பற்றித்தெரிந்து அதற்காகவே தம்மை அர்ப்பணித்த பலரின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் அவர்களின் மேல் மிகுந்த மரியாதை கொண்டுள்ளவர். இசைஞானியைக் கவர்ந்த இசை மேதைகள் உலகில் வாழ்ந்து, காலம் கடந்தும் வாழும் பல இசைப்பொக்கிஷங்களை விட்டுச்சென்ற பாச், பீதோவன், மொசார்ட் போன்றவர்களுடன் இந்திய மேதைகளும் அடங்குகின்றார்கள். தென் இந்திய இசை மேதைகளில் மெல்லிசை மன்னர்கள் , பாலமுரளி கிருஷ்ணா போன்றோருடன் இன்னொருவரிடம் ராஜாவுக்கு அதீத மரியாதையும் ஒருவிதமான பக்தியும் உண்டு என்பதை அவரைப்பற்றிய தேடல்களின் போது நான் அறிகிறேன். அவர் தட்சிணாமுர்த்தி சுவாமிகள் இசைஞானியால் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்படும் ஒருவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள். கேரளத்தில் பிறந்த இவர் மலையாளத்தில் பலநூறுக்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். சென்ற ஆகஸ்ட் டில் திகதி தனது 94 வயதில் இறந்துபோன இவரை ஒரு இசைமேதை என்று இசையை நன்கு தெரிந்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.. லீலா. ஜேசுதாஸ், சுசீலாம்மா போன்றவர்கள் மட்டுமல்லாமல் இசைஞானியும் இவரை தனது குருவென்பதில் பெருமை கொள்வதை பலமுறை பார்த்திருக்கின்றேன். மிகவும் எளிமையானவராகக் காணப்படும் இவரை சுவாமி என்று அழைப்பதற்கான காரணம் அவரின் சமூகமா, அல்லது இடையில் சாமியாராகி அவர் காசிக்கு சென்று சிறிதுகாலம் வாழ்ந்த்வர் என்று கூறப்படுவதாலா அல்லது இசையில் அவருக்கிருந்த அதீத புலமை காரணமாகவா ?? யானறியேன். இவரின் உதவியாளராக இருந்தவரளில் ஒருவரின் பெயர் சேகர் . இவர் ஏ.ஆர்.ர்ஹ்மானின் தந்தை. இவரைப்பற்றிப் படிக்கப்படிக்க தலை சுற்றுகின்றது. ஒருமுறை ஒரு தொலைக்காட்சி உரையாடலில் தட்சிணாமுர்த்தி சுவாமிகளிடம் ஒரு காட்ச்சியை சொன்னால் மெட்டுக்களை மழையைப்போல பொழியும் அதீத மேதாவித்தனம் இருந்ததென்றும் அவரைப்போல ஒரு இசை மேதை இனிமேல் உலகில் பிறக்கமுடியாது என்றும் கூறினார் ராஜா. தங்களது வீட்டில் நடைபெறும் நவராத்திரி விழாவில் இவரின் பாடல் இடம்பெறுவது கட்டாயம் எனவும் ராஜாவே கூறிக் கேட்டுள்ளேன். ராஜா தனித்து இசையமைப்பாளராகு முன்னர் சுவாமியிடம் சில வேளைகளில் கலைஞராக இருந்துள்ளார். இசையுலகிற்குள் புகுந்து தனியிசையமைப்பாளராக வெற்றியடைந்த பின்னர்கூட சுவாமியின் வேண்டுகோளிற்காக அவரின் பாடல் ஒன்றின் பதிவின் போது அந்தப்பாடலுக்குகாங்கோ வாசித்துள்ளார். இந்தச் செய்தி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ராஜாவுக்கு சுவாமியின் மேலுள்ள மரியாதையைக் காட்டுகின்றது. அந்தச்சம்பவத்தைப்பற்றி பல வருடங்களுக்கு முன்னர் ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார், அந்தப்பேட்டியை இளையராஜவைப்பற்றிய மினித் தொடர் ஒன்றில் ராஜா வேலாயுதம் என்பவர் இணையத்தில் பதிந்திருக்கிறார். அவருக்கு நன்றியைத்தெரிவித்துக்கொண்டு அதை மீள் பதிவிடுகின்றேன் : இந்தச் சம்பவம் பற்றி இளையராஜா சொன்னது… நான் சொன்னது போலவே அவரது படத்திற்கு காம்போ வாசிக்கப் போனேன். படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளராக என்னை உணர்ந்தவர்களுக்கு நான் உதவியாளர் நிலையில் காம்போ வாசிக்க வந்தது அதிர்ச்சியாக இருந்தது போலும், அங்கிருந்த எல்லோரும் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ஸ்டுடியோவில் வேலை செய்வோருக்கும், ஷுட்டிங் ஃப்ளோருக்கு வந்தவர்களுக்கும், பக்கத்து ஸ்டுடியோவிற்கு ரெக்கார்டிங் வந்தவர்களுக்கு தகவல் பரவ, என்னை வேடிக்கை பார்க்க வந்துவிட்டார்கள். நான் காம்போ வாசித்த நான்கு நாட்களும் இந்த வேடிக்கை தொடர்ந்தது. இப்படி வேடிக்கை பார்த்துப்போனவர்களில் ஒருவரான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இன்று என்னைப்பார்த்தால் கூட இந்தச் சம்பவம் பற்றி வியந்து பேசுவார். சுவாமிக்கு என் மீது பிரியம் அதிகமாகிவிட்டது. இத்தனை பெயர் வாங்கியிருந்தாலும் இன்னும் இந்தப் பையன் பெரியவர்களை மதிக்கும் பண்போடு இருக்கிறானே என்று ஆச்சர்யப்பட்டு ஜி.கே.வி அவர்களிடம் கூறி தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நான் சினிமாத்துறையில் காலெடுத்து வைத்த நேரத்திலேயே சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களின் சங்கீதம் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. - சில படங்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் அவரிடம் இசை பயிலவேண்டும் என்ற எனக்குள் இருந்த ஆசையை அவரிடம் வெளிப்படுத்தினேன். நாளையிலிருந்தே பாடம் தொடங்கலாம் என்றார். அடுத்த நாளே பூ, பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலைபாக்கு தட்டுடன் மயிலாப்பூரில் உள்ள அவரின் வீட்டுற்கு சென்றேன். அவர் சொல்லித்தரும் பாடத்தை குறித்துக்கொள்ள ஒரு நோட்டும் கொண்டு சென்றிருந்தேன். சரளி வரிசையில் இருந்து பாடத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ ஏதோ ஒரு கீர்த்தனையைத் தொடங்கிவிட்டார். நோட்டுப்புத்தகத்திற்கு வேலையில்லாமல் போனது. அவர் பாடினார், அதையே என்னை திரும்ப பாடச்சொன்னார். அவர் பாடிய மாதிரி வரவில்லை. சரி செய்தார், மறுபடியும் பாடினேன். அவர் மாதிரி வரவே இல்லை. அன்றைய பாடம் இப்படியே முடிந்தது. அன்று மட்டும் அல்ல, ஒரு சில மாதம் இப்படியே போனது. அவர் பாடியதில் நூற்றில் ஒரு பங்குகூட எனக்கு வரவில்லை என்பது தெரிந்து போனது. என்றாலும் அவர் பாடுவதும் நான் பாடிப்பார்ப்பதுமாக ஆறு மாதங்கள் ஓடிப்போனது. படங்களுக்கு இசையமைக்கும் வேலை கொஞ்சம் அதிகமானதால் அவரிடம் தொடர்ந்து இசை பயிலமுடியாமல் போனது. படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தாலும் உனக்கு நேரம் கிடைக்கும்போது வந்தாலும் நான் சொல்லித்தரக் காத்திருக்கிறேன் என்றார். இந்த அளவிற்கு என்மீது அவர் அன்பு வைத்திருக்கிறாரே என்று வியந்துபோனேன். இளையராஜா அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்று பார்த்தால் அதற்கென்றே ஒரு தனி வலைதளம் போடலாம். அதுமட்டுமல்லாமல் யுவன் பவதாரிணி போன்றவர்களையும் கங்கை அமரனின் வாரிசுகளையும் சுவாமியிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள அனுப்பியிருக்கிறார். அவர்கள் சுவாமியிடம் சங்கீதம் கற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ தங்களின் பிள்ளைகளிற்கு சுவாமியின் ஆசீர்வாதம் இருக்கவேண்டும் என்ற நப்பாசையே காரணம் என்று ஒருமுறை கேரளத் தொலைக்காட்சியில் கூறியுள்ளார் கங்கை அமரன் மலயாளத்தில் மிகப்பிரபலமான தட்சிணாமூர்த்தி சுவாமிகள் தமிழில் இசையமைத்த படங்கள் மிகச்சிலவே. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி.அவற்றுள் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகின்றது என்ற படத்தில் இடம்பெற்ற நல்ல மனம் வாழ்க ..நாடு போற்ற வாழ்க.. என்ற பாட்டும் நந்தா என் நிலாவில் இடம்பெற்ற ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்.. என்றபாட்டும் நந்தா என் நிலா.. என்ற பாட்டும் அருமையான பட்டுக்குள். தமிழில் மிகச் சில பாடல்களே அவரின் இசையில் வந்திருந்தாலும் அவற்றுள் மிகவும் புதுமையான இசையை நான் உணர்கின்றேன். இவரின் பாடல்களிலே நந்தா என் நிலா என்ற பாட்டு 70களின் கடைசிப்பகுதியில் வெளிவந்தி. எஸ்.பி.பி. பாடியுள்ள மிகச் சிறந்த பாடல்களை வகைப்படுத்தினால் அவற்றுள் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டிய பாட்டிது. இது மது வந்தி ராகத்தில் போடப்பட்ட பாடல். காதல் உணர்வுகளுக்கு ஏற்ற ராகம். கேட்கும் போது சாதாரனமாகத் தோன்றும் இந்தப்பாட்டின் உள்ளே ஏகப்பட்ட சங்கதிகளை சுவாமி கொட்டி வைத்துள்ளார். பாலுவைக் கேட்கவா வேண்டும் கரும்பு தின்னக் கூலியா என்பதைப்போல சும்மா பிச்சு உதறியிருக்கிறார். இந்தப்பாட்டின் Composition ற்குள்ளே சங்கதிகள் கொட்டிக்கிடப்பதும் அதை பாலு தனித்துவமாகப்பாடியதும் மட்டும்தான் இதன் விஷேடமல்ல.. இந்தப் பாட்டை எழுதியவரின் தமிழ்ப் புலமையையும் அவர் தமிழைக் கையாண்டவிதமும் அதிசயிக்க வைக்கின்றது. இணையங்களில் பல மணிநேரத் தேடலின் பின் ஓரிடத்தில் அவரின் பெயர் கவிஞர்.இரா பழனிச்சாமி என்றுள்ளது ஆனால் கொஞ்சநாளைக்கு முன்னைய எனது பதிவொன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்த அண்ணன் திரு விக்கி அவர்கள் அந்தப்பாடலை தமிழ்த்துறைப்பேராசிரியர் ஒருவர் எழுதியாகக் குறிப்பிட்டிருந்ததைப்போலொரு நினைவு..ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழ்ப்பாடல்களிலே நீளம் கூடிய பல்லவியைக் கொண்டது இந்தப்பாட்டென்று சிலர் குறிப்பிட்டுள்ளார்கள் எனக்கும் அது உண்மை போலத்தான் தெரிகின்றது . பல்லவியைப் பாருங்கள் : நந்தா என் நிலா நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா விழி நீயாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல் பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில் மின்னி வரும் சிலையே மோகனக் கலையே வண்ண வண்ண மொழியில் வானவரமுதே ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா நந்தா நீ.என் நிலா…. இந்தப்பல்லவியிலே ஒரு விடயத்தக் கவனித்துப்பாருங்கள் ஒவ்வொரு வரிகளைத் திருப்பிப் போட்டாலும் ஒரே அர்த்தம் வருவதற்கு ஏற்ப பாடலாசிரியரால தமிழ் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. “விழி நீயாடும் விழி/ மொழி தேனாடும் மொழி/ குழல் பூவாடும் குழல்/ எழில் நீயாடும் எழில்” மேலே உள்ள வரிகளை திருப்பிப் போட்டாலும் அர்த்தம் ஒன்றேதான். இனி சரனத்தைச் சொல்லவா வேண்டும் . அதில் மெட்டும்,மெட்டுக்கேற்ற தமிழும், தமிழை அழகாக்கும் பாலுவின் அதி அற்புதமான சங்கதிகளும் என்னைப் பித்தாக்குகின்றன. இந்தப்பாட்டு 77 இல் வெளிவந்துள்ளது.அந்தக் காலகட்டத்தில் இளைஞனான பாலு காதலியை நினைத்து உருகி உருகிப்பாடும் காதலனாகவே மாறிப்பாடுவதை கேட்கும் போது உணரலாம். இந்தப்பாட்டின் எங்கும் சங்கதி..எதிலும் சங்கதி..பல்லவியின் இறுதியில் கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா.. என்று பாலு பாடும் பாணியிருக்கிறதே ஆஹா அதைக் கேட்கும் போது ஒரு காதலன் காதலியின் பாதம் பணிந்து கெஞ்சும் உணர்வை ஏர்படுத்துகின்றார்.. சே..எப்படிப்பட்ட பாடகர் இந்தக் குண்டர்.. இவரைத் தவிர்த்து இந்த வார்த்தைகளை இப்படி வேறொருவர் அனுபவித்துப்பாடியிருப்பார் என்று சத்தியமாக என்னால் எண்ண முடியவில்லை. அதே போலத்தான் சரணங்களும் முதலாவது சரணத்தின் முதல் வார்த்தைகளைப் பாருங்கள் : ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே (2 ) அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே நந்தா நீ என்… இதிலே 1:30 நிமிடத்திலிருந்து முதலாவது வரிகளான ஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே ..என்பதை இரண்டுமுறை பாடுகின்றார் பாலு. அவர் இரண்டுமுறை பாடுகின்ற விதங்களும் முற்றிலும் வேறு வேறானவை..அதிலும் ஆயிழை..யா…க என்று தமிழில் வைக்கும் சங்கதி என் தாய் மொழிக்குக் கொடுக்கும் அழகிருக்கிறதே.. ஆஹா அது அந்த மொழியைப் பேசும் என்னைப் பெருமை கொள்ள வைக்கின்றது. அடுத்து இதேபோன்றே சரணத்தின் இறுதியில் அருந்ததி போலே பிறந்து வந்தாயே… என்பதில் குழைந்த படி இன்னொரு சங்கதி, இவற்றையெல்லாம் எப்படி எழுதுவது உணர்ந்து ரசித்துக் கிறங்கத்தான் முடியும். சபாஷ் பாலு. இரண்டாவது சரணத்திலும் ஏகப்பட்ட விளையாட்டுக்கள் செய்யப்பட்டுள்ளது. ஆகமம் கண்ட சீதையும் இன்று ராகவன் நானென்று திரும்பி வந்தாளோ - 2 மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் போகத்திலாட இறங்கி வந்தாளோ நந்தா … மேலுள்ள இரண்டாம் சரணத்தின் முதல் வரியில் திரும்பி வந்தாளோ.. எனும் போது வந்தா…ளோ என்று பாலு குழிகிறாரா, கென்சுகிறாரா, உன்மத்தமா, அதீத மகிழ்ச்சியில் ஏற்படும் உணர்வா.. மயக்கமா, கிறக்கமா.. என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத ஒரு உணர்ச்சியைக் குரலில் தவழவிடும் பாலுவுக்கு இந்தத் தமிழ் சமுதாயமும் இசை ரசிகர்களும் இன்னும் நூற்றாண்டுகளுக்குக் கடமைப்பட்டுள்லோம். இந்தப்பாட்டில் சுவாமிகளின் மேதாவித்தனத்தை பல்லவி சரணம் இடையிசை என்பவற்றில் பார்க்கிறேன். சரணத்தைக் கேட்கும் போது கஸல் பாடல்களுக்கான தாளக்கட்டுமாதித்தெரிகின்றது ஆனால் இடையிசையில் மாறி வேறெங்கோ கொண்டு செல்கின்றது. இதே பாணியிலான Composition ஐ இசைஞானியின் பல பாடல்களில் கேட்டு வியந்துள்ளேன், . தனது குருவிடம் கற்றுக் கொண்ட உண்மையான சீடரை அதில் நான் காண்கின்றேன். இந்தப்பாடலுக்கு முன்பும் பின்பும் பாலு பல பாடல்களைப் பாடிவிட்டார் .. இன்னும் பாடுவார். ஆனால் இது அவரின் இசை வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த ஒரு கிரீடம். சில தினங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கரில் ஒரு போட்டியாளர் இந்தப் பாடலைப் பாடினார். உண்மையில் இதிலுள்ள சூட்சுமங்கள், தமிழின் அர்த்தம், சங்கதிகளைப் புரிந்து கொண்டு மிக நன்றாகவே பாடினார். நடுவராக வந்திருந்த மனோ எழுந்து சென்று கட்டியணைத்துப்பாராட்டினார். இன்னொரு நடுவரான ஸ்ரீராம் பார்த்தசாரதி, விஜய் பிரசாத், கார்த்திக் போன்றவர்களும் நல்லாகவே அவரைப்பாராட்டினார்கள், அது செய்யவேண்டியது மிக மகிழ்ச்சி. ஆனால் அங்கே நடுவராக இருந்த ஒருவர் கூட இப்படியொரு அதிஅற்புதமான பாடலை உருவாக்கிய தட்சிணாமூர்த்தி சுவாமிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதைப்பார்த்தபோது எனக்கு என்னமோ போலிருந்தது. ஒருவேளை அந்த மேதையின் எளிமையும், அமைதியும் அவரை பெரிதாகப் பிரபலப்படுத்தவில்லையோ ??? போலியும் பகட்டும், இரண்டொரு ஆங்கில வார்த்தைகளையும் உச்சரிக்கும் போலிகளை பிரமாண்டப்படுத்துகின்ற அளவுக்கு மேதைகளை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோமா ??
No comments:
Post a Comment