Thursday, February 20, 2014

லெனின் எம். சிவம் அவர்களின் A GUN & A RING


-ந.சுசீந்திரன்- 

லெனின் எம். சிவம் அவர்களின் திரைப்படம் A GUN & A RING 17.02.2014 அன்று ஜெர்மனியில் பெர்லினில் திரையிடப்பட்டது. நல்ல திரைப்படங்களின் தரத்தில், இந்திய வணிக, வெகுஜன சினிமாக்களின் பாதிப்பு பெருமளவு இல்லாமல், தமிழ் வெகுஜனங்களுக்கு என்று இல்லாமல் உலகப்பொதுப் பார்வையாளரை நினைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது இத் திரைப்படம். 2013 இல் சீனாவின் சங்காய் சர்வதேச 16 ஆவது திரைப்பட விழாவிலும் அதே ஆண்டு கனடாவின் மொன்றியல் சர்வதேச 37 ஆவது திரைப்பட விழாவிலும் காட்சிக்காகத் தேர்வுசெய்யப்பட்டதுடன் 2013 ஆண்டின் கோல்டன் கோப்பிலட் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 

மிகக் குறைவான நிதி ஆதாரங்களுடன் அதேவேளை தொழில் நுட்பரீதியில் நிறைவாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும், அனேகமாக புகலிடத்தில் வாழும் ஈழத் தமிழர்களையே நடிக்க வைத்திருப்பதும், ஆர்ப்பாட்டம் இல்லாத கனேடிய நிலைக்களன்களும், காட்சிகளும் இயக்குனர் லெனின் எம். சிவம் அவர்களுக்கு பாரிய சவாலை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதையும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வந்து விடுவார் என்று நாம் நம்பிக்கை கொள்ளவும் முடிகின்றது. 




திரையரங்கில் இருந்த சுமார் 200க்கும் அதிகமான பன்மொழிப் பார்வையாளர்கள் இயக்குனருக்கும் திரைப்படத்தில் நடித்த பெர்லினைச் சேர்ந்த தேனுகா காந்தராசா அவர்களுக்கும் பாராட்டுக்களையே குவித்தனர். நீண்ட காலம் கொடூரமான போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மனிதர்களில், போராடப்புறப்பட்ட இளைஞர், யுவதிகளில் ஏற்பட்டிருக்கும் அகநுணுக்கமான மனப்பாதிப்புகளும் மனப்பிறழ்வுகளும் நலம் பெறுவதற்கான எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் சமூகமும் அவர்களும் தனித்து விடப்பட்டிருக்கும் அவல நிலை இங்கே சொல்லப்படுகின்றது. தமிழர்களிடத்தில் வேரூன்றியிருக்கும் மறைபொருட் பாசாங்குகள் மற்றும் பொறுப்பான காரியமாற்றும் தனிமனித விருப்பு வெறுப்புக்கள் எப்படிச் சமூகத்தினைப் பாதிக்கின்றது என்பதுவும், சும்மா பேச்சளவில் எமது பிள்ளைகளின் மீது பாதுகாப்பு, கவனம் என்று சொன்னாலும் அது பிள்ளைகள் மீதான கண்காணிப்புக்கும், பலவகைத் திணிப்புக்குமாக இருக்கின்றதே அன்றி அவர்களது சுயபாதுகாப்பு, சுயசிந்தனை, உளவளர்ச்சி போன்றவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதையும், சிறுவர் துஸ்பிரயோகம் போன்றவற்றில் எமது சமூகத்தின் கவலையீனம், போன்றவற்றையும் இக் திரைக்கதை எமக்கு உணர்த்துகின்றது. புதிய சூழலுக்கும், புதிய காலத்திற்கும் தம்மைத் தயார்ப்படுத்தாத முதலாவது தலைமுறைக்கும் இத் தலைமுறையின் இவ்வாறான நடத்தைக்கான தாற்பரியமும் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயங்களும் புரியாத இரண்டாம் தலைமுறைக்குமான பரஸ்பர உறவுகளுக்குப் பதிலாக வெறுப்பின் உச்சாமே விஞ்சிநிற்கும் குடும்பங்களாகவே புகலிட சமூகம் இருப்பதையும் இத் திரைப்படம் நன்றாகவே உணர்த்திச் செல்கின்றது. 
புலிகள் அல்லாத விடுதலை இயங்களில் நடைபெற்ற உட்கொலைகளும் அவற்றின் கொடூரமான பிந்திய காலப் பின்விளைவுகளும் சொல்லப்படுகின்றன. இலங்கைத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினைப் புரிந்து கொள்வதற்குப் புகலிடத்தில் இருக்கும் ஈழத்தமிழர்களை விட அதையொத்த போரும் சிறுபான்மை இனங்கள் என்பதால் இன அழிப்பும் நடைபெற்ற, அதனை இரத்தமும் சதையுமாக பௌதீக ரீதியா அனுபவித்த பூமிப் பந்தின் வேறொரு மூலையின் முற்றிலும் அன்னியமான மனிதர்களால் புரிந்து கொள்ளமுடிகின்றது என்ற யதார்த்தமும் அதனோடு இணைந்து வரும் துணிவான இறுதிக்கட்டமும் முடிவும் உண்மையில் பாராட்டுக்குரியவை. ஈழத்தமிழர்களின் புகலிட இரண்டாம் தலைமுறையினர் தமிழ்ச் சமூகத்தின் போலி, முரண் மற்றும் மாயை அறங்களையும் எதிரும் புதிருமான வழக்கங்களையும் கேள்விக்குள்ளாகின்றனர், அதில் இருந்து மீறிவிடத் துணிகின்றனர் என்பதும் ஒருபால் ஈர்ப்புப் போன்றவறையும் பாசாங்கில்லாது எடுத்துக்கொள்ள நம் சமூகம் பக்குவப்பட வேண்டும் என்பதும் திரைப்படத்தில் கொண்டுவரப்படுகின்றது. நிறையத் தனிமனிதர்களின் கதைகளும் அவர்தம் விதிகளும் சம நிகழ்வுகளாகக் காட்டப்பட்டு அவர்களின் அனைத்துக் கதைகளையும் ஒன்றுடன் ஒன்று பின்னி அவற்றை ஓர் புள்ளியில் குவித்து படத்தை இயக்கியிருப்பதும் ஆங்காங்கே பார்வையாளனின் ஆவலைத்தூண்டி கமறாவின் பகுதிக் காட்சிகளை மட்டும் முன்னும் பின்னுமாகக் கோத்திருக்கும் உத்தியும் மெச்சத் தக்கதாகவே இருக்கின்றது. 

No comments: