Thursday, September 19, 2013

சிவகாமியின் அரிதிலும் அரிதான புலிவாதம்

-வேப்பூர் திருடன்-
டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ்பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன்.
—————————————-
நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த‌ கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை கொண்டவராக இருந்ததினால் விவாதத்தினூடாக விடுதலைப்புலிகள் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
———————————————–

nerpada_(new) by tamildoom

சிவகாமி எந்த கருத்தை வலியுறுத்தி விவாதிக்க விரும்பினாரோ, அந்த நோக்கம் சற்று திசைமாறி சிவகாமி மீதான புலிகள் விமர்சனத்துக்கு அது அகல வழி ஏற்படுத்தியது. சுவார‌ஸ்யம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியே சமூக வலைத்தளங்களில் தமிழ்ச்சாதி விசுவாசிகள் பலரும், ஃபேஸ்புக் போராளிகள் சிலரும் சிவகாமி பேசிய புலிகள் கருத்தைக் கண்டித்து விமர்சித்திருந்தார்கள். இதனை சாக்காக வைத்து சில உள்ளூர் தலித் ஆண் போராளிகளும் கூட “இன்ஸ்டன்ட் எதிர் வினையாற்றியது்”தமிழக தலித் போராட்ட நிகழ்ச்சி நிரலில் மறவாமல் குறிப்பிடத்தக்கது. இவர்களில் சிலர் சிவகாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த‌தோடு மட்டும் நில்லாமல், வெறும் அனிமேஷன் சண்டைக்காட்சி போர்களை சினிமாவில் பார்த்து போரடித்துப்போன‌ அனுபவத்தில் இருப்பதால் திடீரென உணர்ச்சிவசப்பட்டு சிவகாமியின் ஒடுக்கப்பட்ட தலித் ஆளுமையையும், அவரது பாலியல் அடையாளத்தையும் கொச்சைப்படுத்தி கீழ்த்தரமான, கேவலமான கண்ணோட்டங்களில் வசை பாடி ஸ்டண்ட் அடித்திருந்தார்கள். சிவகாமியின் தலித் ஆளுமை மீதான பாலியல் ரீதியிலான, சாதி ரீதியான வசைபாடலை பொறுப்புள்ள சிலர் இரண்டு வரியில் கண்டன உரையாக‌ எழுதி கண்டித்த‌தும் வரவேற்கத்தக்கது. சமகால தமிழக அரசியலில் சிவகாமியை விடக் கேவலமாக புலிகளை பார்ப்பனர்கள் விமர்சித்தபோது இடுப்பு எடுபடாமல் படுத்துக் கிடந்த தமிழ்த்தேசியவாதிகள் முடிந்த வரையிலும் மோதிப்பார்த்து சைலன்டாக சரணடைந்து கிடக்கும் வெறுப்பில் இருக்கும்போது, அதிகாரத்தின் – சாதியாதிக்கத்தின் உச்சாணிக் கொம்பில் இல்லாத சேரியில் களமாடும் சிவகாமியை மட்டும் விட்டு வைப்பார்களா? அவரவருக்கே உரித்தான சமுகப் பொதுப்புத்தி சில்மிஷங்களில் நின்றே சிவகாமியை சீண்டினார்கள்.
மிகவும் பெரிதுபடுத்தப்படாத, பெரிதுபடுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் அற்ற விவாதம் இல்லை என இதனைப் புறக்கணிக்க முடியாது. காரணம், சமீப காலங்களில் தமிழ் அடையாள அரசியலில், விடுதலைப்புலிகள் ஆதரவு, தமிழீழ விடுதலை என்பதன் மீது தலித்துகளின் கண்ணோட்டம் சற்று மாறியிருக்கின்றது. இதன் விளைவாக  இன்றைய தலித்துகளின் முழுநேர உழைப்பையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் தலித் விடுதலைக்கு செலவிட முடியாமல் மடைமாற்றி தமிழ்த்தேசிய அரசியலுக்கான‌ தார்மீக ஆதரவின் அடிப்படையில் சமகால தலித் எழுச்சி பாழடிக்கப்பட்டு, குத்தகை விடப்ப‌ட்டது என்கிற விமர்சனம் தலித் அமைப்புகள் மீதே தலித்துகளால் முன் வைக்கப்பட்டுள்ளன‌. இத்தகைய‌ விடுதலைப்புலிகள் விவகாரங்களில் சமகால தலித்துகளின் அடையாள அரசியல் நிலைப்பாடும், கோட்பாடும் மாறி வரும் சூழலில் சிவகாமி வெளிப்படுத்திய கருத்து ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது.
————————————————————–
உலக அளவில் ஒடுக்கப்படும் தலித் மனித உரிமை மீறல்களையும், சர்வதேச இனக்குழுக்களின் போர் மரபு அரசியலையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய ஆயுத கலாச்சாரத் திணிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்ற, கண்டிக்கின்ற மனித‌ உரிமை செயல்பாட்டாள‌ர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் சிவகாமியின் கருத்தில் முரண்பட பெரிதும் எதுவும் இல்லை. அதையும் கடந்து முரண்பட விரும்பினால் புலிகளைப்பற்றி நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அப்படி ஒரு ஆதாரம் இருந்தால் வெளியரங்கமாக்குங்கள், விவாதிப்போம் என்று தான் அதிக பட்சமாகக் கேட்க முடியும். அதை விட்டு விட்டு அவர் ஒரு தலித் என்பதற்காகவோ, ஒரு பெண் என்பதற்காகவோ ஏற்கனவே இந்திய‌ சாதியச் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள, சாதிய, ஆணாதிக்க பொதுப்புத்தி சில்மிஷங்களில் நின்று எதிர் வினையாற்ற எந்த ஆணுக்கும் உரிமை கிடையாது. இருந்தபோதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளினூடாகப் பயணம் செய்யக்கூடியவராகவும், தற்போதைய தலித் – சாதி மற்றும் ஆணாதிக்க அடையாள‌ அரசியலில் போட்டியிட விரும்பாமல் பால் சார்ந்த‌ முரண் நிலை தலித் அரசியல் களத்தில் செயல்படுபவராக சிவகாமி இருப்பதால் தனது வலைத்தளத்தில் 15.09.2013 அன்று சற்று மெல்லிய குரலில் இவ்வாறு தற்காலிக வருத்தம் தெரிவித்திருந்தார். (Dear All, Thank you for all the feedback you have given me through face book for my statement in Pudhiya Thalaimurai T.V. Channel on the 13th September 2013. They were quite educative. In the absence of concrete evidence I sincerely feel that I should not have spoken like that. I have great regards for all those who have struggled for their equal status in Sri Lanka and lost their lives. Even now I regret for my inability to support their cause in Sri Lanka as I am struggling for a similar cause in Tamil Nadu and India. Therefore I apologize from the bottom of my heart for my statement. Sivakami Palanimuthu).
சிவகாமி தெரிவித்திருந்த வருத்தத்தை ஆமோதிக்கிறவர்களில் ஒருவனாக நான் இருந்தாலும் கூட, புலிகள் குறித்த சிவகாமியின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிறு முரண்பாடு உண்டு. அதே சமயம் பெண்கள் பார்வையில் விடுதலைப் புலிகள் குறித்து அவர் கூறிய கருத்தில் உண்மை இல்லை என்றும் என்னால் மறுக்க முடியாது.      
——————————————————–
ltte_womanநிறவெறிக்கு எதிரான இனக்குழுக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் மிஞ்சிய உயர்வு மதிப்பீடு (பெண்கள் விஷயத்தில்) விடுதலைப்புலிகள் மீது எனக்கு உண்டு. குறிப்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார அதிகாரப்பூர்வ அமைப்பான “பெண்கள் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு மய்யம் – CWDR” மீது அளவுகடந்த மரியாதை உண்டு. இந்த அமைப்பு உருவாக்கமானது யதார்த்தமாக நடந்த ஒன்ற‌ல்ல என்றாலும், ஏதோ ஒரு வகையில் பெண்களால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்ட அல்லது அவர்கள் மீது திணிக்கப்பட்ட அமைப்பு என்று கூட சொல்லலாம். ஆனால் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தமிழ்ப்பகுதிகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினை கூறப்பட வேண்டியது. குறிப்பாக 1983 -களுக்குப் பிறகு வாழ்வாதர கையிருப்பு கட்டமைப்பில் சிறிய அளவிலான சரிவை புலிகள் எதிர் கொண்ட பின்னர் அமைப்பின் போர்க் கட்டமைப்பு மீட்டுருவாக்கதில் சில அதிரடி யுக்திகளைக் கையாண்டனர். திலீபன் மற்றும் கிட்டு மேற்பார்வையில் புலிகள் இயக்கத்துக்கு வலு சேர்க்க “தமிழ் இளம் பெண்கள்” (Tamil Juveniles) சேர்க்கைக்கு ஊக்கமளித்தனர். இயக்கத்துக்கு தேவைப்பட்ட பெண்களைப்பெற‌ தமிழ்க் குடும்பங்கள் நோக்கி அழைப்பும் விடுத்த‌னர். காலப்போக்கில் விடுதலைப் புலிகளில் பெண் புலிகள் உருவான பின்னர் யதார்த்தமாகவும், இயற்கையாகவும் உருவாகும் ஆண் – பெண் புலிகளின் காதல் என்பது அவர்களின் குழுவில் மறுக்கப்பட்டது. அரசல் புரசலாகத் தென்பட்டால் கூடவே கண்டிக்கவும் பட்டது. அதனையும் மீறி காதல் புரிந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்கள். பெண்களிடம் நடந்து கொள்ளும் நன்னடத்தையில் ஒழுக்கக்கட்டுப்பாடு கராறாக விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாட்டை புலிகள் எவ்வாறு பாதுகாத்துப் பின்பற்றினார்கள் என்பதை அப்போதைய டெல்லி சி.என்.என் நிருபர் அனிதா பிரதாப் புலிகளுடனான தன்னுடைய குறுகிய கால பயண வாழ்க்கையின் நேர்காணல் அனுபவத்திலிருந்து பதிவு செய்துள்ளார் (Anitha Prathap “Island of Blood” Viking Penguin, August 2002, pp 107-109 cont). மேன்மை பொங்கும் இக்கருத்தாடலை சர்வதேச அரங்கில் பறைசாற்ற பின்னாளில் இதனை ஒரு திரைப்படமாக எடுக்கவேண்டும் என அற்புதமான திரை இயக்குனர் மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட “கதை வரைபடம்” கூட எதிர்பார்த்த அள‌வில் கைகூடாமல் போனது.
1987 -களுக்குப் பின் எவரும் எதிர்பாராத இந்திய அமைதிப்படை (IPKF)இலங்கை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை (STF) போன்ற படை வீரர்கள் இணைந்து தமிழ்ப்பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்ட பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின் ஒட்டு மொத்த இலங்கை தமிழ்ச் சமுகமே தமிழ்ப்பெண்கள் மீது பரிவு காட்டியது. தங்களின் இயக்கத்தில் கரும்புலிகளாகவும், பெண் புலிகளாகவும் இணைவதைப் பெருமையாகவும், போர்க்குணப் பண்பாடாகவும் மார்தட்டிக் கொண்டார்கள். இவர்களுடன் பட்டும் படாமல் கிறித்துவத் திருச்சபைகளின் பெண்கள் அய்க்கியச் சங்கங்களும், சர்வதேச பெண்கள் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து தமிழ் நிலப்பரப்பின் மீது “மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு”   (Rehabilitation and Resettlement) பணிகளை வளர்ச்சி நோக்கி செயல்படுத்தினார்கள். இதன் பின்னர் ஈழத்திலும், புலிகள் அமைப்பிலும் பெண்களால், பெண்புலிகளால் ஏற்பட்ட குறைந்த பட்ச சமுக மாற்றங்களையும், ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளையும் ஊடகங்கள் வழியாக உலக அரங்கிற்கும் ஒளிபரப்பப்பட்டது.
1990 -களில் முற்போக்கு பேசிய‌ தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நிலவிய பெண்களின் பங்கேற்பு குறித்தும், நிலைப்பாடு குறித்தும் பெண்ணியப் பார்வையில் நேற்மறையாக‌ எழுதத் தொடங்கினார்கள். இவர்களின் எழுத்துக்கள் 1995 -ல் பீஜிங்கில் நடைபெற்ற  நான்காவது சர்வதேச பெண்கள் மாநாடு வரையிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக 1997 -ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பின் அய்.நா உறுப்பு அங்கத்தினராக இருந்த‌ ராதிகா குமாரசாமி இவர்களை “ஆயுதமேந்திய கன்னிகைகள்” (Armed Virgins) என்று வர்ணித்து உலக இனக்குழு விடுதலைக்கான போர்மரபுப் பண்பாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை பெண்புலிகளுக்கு வடிவமைத்துக் கொடுத்தார். இது போன்று அதிக பட்ச நற்பண்புகளை போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்ததை எளிதாகக் கொச்சைப்படுத்திவிட முடியாது.
அந்த வகையில் சிவகாமி புலிகளின் பெண் நன்னடத்தையை (மட்டுமே) கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருப்பதாக தமிழ்ச் சமுகம் உணரும் என்றால் நிச்சயம் அது திறந்த மனதுடன் விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.
———————————
ஆனால், தொலைக்காட்சியில் நிகழ்ந்து கொண்டிருந்த சிவகாமியின் கருத்தை உற்று நோக்கினால் “பாலியல் சார் ஒழுக்கக்கேடான பண்புடைமை” (Outraging Modesty) பற்றிய உதாரணங்களை விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர் களம் கண்ட பெண்களுக்கு எதிரான வன்முறையின் பொது விசாரணைகளில் இருந்தும், அம்பேத்கர் – இராஜாஜிக்கு இடையே நிகழ்ந்த உரையாடலில் இருந்தும் மேற்கோள் காட்டினார். அவ்வளவு தான். அவர் மேற்கோள் காட்டிய‌ இந்தக் கருத்தை ஏற்கலாம்! அல்லது நிராகரிக்கலாம்! யாருடைய மனதையாவது புண்படுத்தியிருக்குமேயானால் அதனை நிரூபணம் செய்து மீள் விவாதத்திற்கு உட்படுத்த கோரிக்கை வைக்கலாம். நீதிமன்ற ஆசுவாசம் கொண்டவராக இருந்தால் தேவையெனில் வழக்கும் தொடுக்கலாம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் இந்த இடத்தில் எதை விவாதித்திருக்க வேண்டும் என்றால் அவர் சுட்டிக்காட்டிய “பாலியல் சார் ஒழுக்கக்கேடான பண்புடைமை” யைத்தான் விவாத்திருக்க வேண்டும். அப்படி விவாத்திருந்தால் விடுதலைப்புலிகளின் கடந்த காலத்தில் மட்டுமல்ல, சமீப காலமாக இந்திய சிவில் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் யாருக்கு? ஏன்? நிகழ்கிறது என விரிவாகப் பேசியிருக்கலாம். குறைந்த பட்சம் அது நம் வீட்டுப் பெண்களுக்காவது பயனளித்திருக்கும். மாறாக‌ பெண்கள் விஷயத்தில் விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த அவரது கருத்தே தவறு என்றோ, பொய் என்றோ, சூழலுக்குப் பொருத்தம் இல்லாதது என்றோ எவரும் இறுதித் தீர்ப்பு எழுத முடியாது. ஆணாதிக்க மனோபவம் திணிக்கப்பட்ட‌ சக பெண்களே கூட இதனை ஒருபக்கச் சார்பு வாதத்திற்கு உட்படுத்தவும் முடியாது. பெண்கள் மீது நிகழும் பாலியல் குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என பெண்களுக்கு எதிரான பெரும்பண்மையான பாலியல் வண்புணர்ச்சி வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பெழுதுவதை கண்டித்து, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆதாரங்கள் கேட்பது நாகரிகமற்றது என பெண்கள் ஆணையங்கள் உட்பட கருத்து கோரிவரும் சூழலில் சிவகாமி தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கேட்டு பெண்கள் குரல் எழுப்பியது சற்று விந்தையாக இருந்தது.
அதாவது,
- சிங்களவர்களே சொல்லாத ஒன்றை சிவகாமி சொல்வதாகவும்
- இஸ்லாமியப் பெண்களே புலிகளை கற்புடைமையோடு போற்றியதாகவும்
- எந்த பெண்களுக்கு நீதி செய்ய முற்பட்டாரோ அந்த பெண்களுக்கே இழைக்கப்பட்ட துரோகமாகவும்
- உமா சங்கருக்கு அடுத்தபடியாக பரபரப்பு விளம்பரப் பிரியராகவும்
- சுவாரஸ்யம் பொங்கப் பேசும் அதிரடிப்பேச்சாளராகவும்
- பச்சமுத்து வகையறாவின் தமிழீழ ஆதரவுக்குக் களங்கம் கற்பிக்க வந்தவராகவும்
சிவகாமி மீது சொல்வாதங்கள் வீசுவது ஏற்புடையதல்ல. யாருடைய பெயரையும் குறிப்பிட்டு விமர்சிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் அப்படித்தான் விமர்சிப்போம். அதையும் தாண்டி முரம் – செருப்பால் அடித்து தமிழ்நாட்டை விட்டே விரட்டுவோம் என்று சூத்திரத்தனமாக அடம் பிடித்தால் இது வெறுமனே சிவகாமி என்கிற ஒரு தனி மனிதர் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகப் பார்க்க முடியாது. மாறாக சமீபகால ஈழ ஆதரவில் தலித்துகள் மேற்கொண்ட தமிழ் அடையாளப் பகுப்பாய்வு விமர்சனத்துக்கான காத்திருந்து நிகழ்த்திய எதிர்வினையாகவே கருத்தில் கொள்ள முடியும். அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நடந்த போர்க்குற்றத்தில் ராஜபக்சேவை விசாரணை செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் ஆர்வலர்கள் போராடுவது எத்தகைய முற்போக்கு உரிமையோ அதைப்போல, அகில உலக அளவில் விடுதலைக்காகப் போராடுகின்ற இனக்குழு சமுகங்களின் போராட்ட உள்கட்டமைப்பில் நிலவும் இருபால் போர்க்குற்றங்கள் மீதும் வெள்ளை அறிக்கை வேண்டும், விசாரணை வேண்டும் என சர்வதேச பெண் உரிமை அமைப்புகளுடன் இணைந்து உக்கிரமாகக் குரல் எழுப்புவதற்கு தலித் பெண்களுக்கும் உரிமை உண்டு. ஒருவேளை அப்படி ஒரு நகர்வு விரைவுச் செயல் திட்டம் சார்ந்து மனித உரிமைக் களத்தில் நகருமேயானால் அது இன்னும் சிக்கலான இடத்தில் புலிகளைக் கொண்டு போய் நிறுத்தும். பிறகு செம்மணி புதை குழி போல தோண்டத் தோண்ட எவரும் எதிர்பாராத சூழல் எதிர் காலத்தில், இப்படியும் ஒரு நிலை உருவாகலாம்.
sivakami_pகாரணம், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் மீதும், அவர்களது அமைப்பின் மீதும் பெண்ணியப் பார்வையில் எழுப்பிய கேள்விகளும், அதன் மீது நிறுவப்பட்ட புலிகள் கட்டமைப்பு ஆணாதிக்கப் பிம்பங்களின் செயல்பாடுகளும் இன்னும் கருத்தளவில் கூட ஏற்கப்படாமல், ஜனநாயக‌ப்போக்கில் பகுப்பாய்வுடன் விமர்சிக்கப்படாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
———————————————-
1970 -களில் திரளாக வன் முழக்கத்துடன் அணிதிரண்ட ஆண் புலிகள் அமைப்பின் குழு அடையாளமானது “நம்ம பையன்கள்” (Our Boys) என்கிற ஆணாதிக்கக் குறியீட்டின் அடையாள அரசியலில் தான் முதலில் தொடங்கியது. ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போல 1992 -களில் புலிகள் குறித்த விமர்சனம் எழுத முற்பட்ட முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரானகுவாத்ரி இஸ்மாயில் புலிகள் அமைப்பை “பையன்கள் என்றைக்கும் பையன்கள் தான்” (Boys will be Boys) என்றே அடையாளப்படுத்தினார். வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பிய ஃப்ரன்ஸ் ஃபனான் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்“விடுதலைப்புலிகளின் சித்தாந்தம் என்பது கண்டிப்பான ஆண் சித்தாந்தம்” (The LTTE Ideology was a strictly Male Ideology) என்றே வரையறை செய்கிறார். இத்தகைய ஆண் அடையாள, வெகுமக்கள் ஆண் திரட்சி இயக்கத்தின் போர் ஈடுபாட்டையும், ஆண்குழு அரசியல் யுக்திகளையும் அதன் மீதான மனித உரிமை மீறல்களையும் 24 ஆண்டுகட்கு முன்பே ஈழத்து மனித உரிமைப் போராளி டாக்டர் ரஜினி ராஜசிங்கம் திரக்மா “மிகு ஆண்மைப்போர்” (Machismo War) என்று பச்சையாக விமர்சித்தார். கடைசியில் அவர் கூட ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார். 1992 -காலக்கட்டத்தில் இலங்கையின் உள்ளூர் உட்பட சர்வதேச அளவில் இயங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு ” புலி ஆணாதிக்கவாதிகளின் செயல் திட்டம்” (A Patriarchal Project of LTTE) என்கிற விமர்சனத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள‌ வேண்டும்.
ஆக, முழுக்க முழுக்க ஆண்களால் வடிவமைக்கப்பட்ட இத்தகைய ஆணாதிக்க போர்க்குழுவில் தமிழ்ப்பெண்கள் ஏன் புலிகளாக சேர்ந்தார்கள்? அன்றைக்கு அதற்கான நெருக்கடி என்ன? என்பதை புலம் பெயர்ந்து நியூசிலாந்தில் வாழும் டாக்டர்.என் மாலதி துண்டு துண்டாக ஆய்வு செய்து எழுதிய‌ தன்னுடைய நூலில் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார் (Dr.N.Malathy, “A Fleeting Moment in my Country” Clarity Press, Atlanta, 2012. pp 79-80 / 106-107 cont). இக்கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள பெரும்பண்மையான குறிப்புகளை இவரது எழுத்துக்களில் இருந்தும், கிறித்துவ திருச்சபைகளின் “அமைதி மற்றும் ஒப்புரவு குழு” (Peace and Reconciliation) அறிக்கைகளில் இருந்தும் தான் பயன்படுத்தியுள்ளேன். சிங்கள ராணுவத்தின் கட்டாயமான பாலியல் வன்கொடுமைக்குப் பயந்தும், வறுமையை, வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் பெண்கள் புலிகள் அமைப்பில் சேர்ந்தார்கள் என்று மாலதி கூறினாலும், படையில் சேராத தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வகையில் புலிகள் சார்பு வாழ் நிலையை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்கள், ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவான‌து  என்பதையே இது அர்த்தப்படுத்துகின்றது. இத்தகைய புலிகள் சார்பு வாழ்நிலையில்“போர்க்கைம்பெண்களும்” (War Widows) உள்ளடங்குவர். மறுவாழ்வு உதவி கிடைக்காத இவர்களில் சிலர் எப்படி தாக்குப்பிடித்து வாழ்ந்தார்கள் என்பனவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், ஒரு சராசரி மனித வாழ்நிலையை கொண்டிருந்த, சமூக பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையைப் புலிகள் மறைமுகமாகக் கொண்டிருந்தார்கள் என்பதிலிருந்தும் சிவகாமியின் விமர்சனம் இன்னொரு தளத்தில் விரிவாக‌ நீள்கிறது.
ஆனால் இவற்றுக்கு அப்பாலும் சொல்ல மறந்த கதைகள் வன்னிக்காடுகளில் நிசப்தமாக இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
கட்டாய ஆள்சேர்ப்பு (Forced Recruitment) நடவடிக்கைகளில் புலிகள் களம் இறங்கியபோது வன்னி பகுதிகளில் நுழைந்து தமிழ்ப்பெண்களை இராணுவத்துக்கு அழைத்தார்கள். வர மறுத்துவர்களை எவர் அனுமதியும் பெறாமல் இரு சக்கர வாகனத்தில் (வெள்ளை வேன் போல) முன் பக்கம் ஒருவரும், பின் பக்கம் ஒருவரும் அமர்ந்து கொள்ள தூக்கிய பெண்ணை நடுவில் உட்கார வைத்து தப்பித்து விடாமல் அழைத்துச் செல்லப்பட்டதும், குளித்துக் கொண்டிருந்த பெண்களை கடத்திச் சென்றதும், வர மறுத்தவர்களை சக அமைப்பினர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதும் வன்னி மக்களின் கண்களில் இருந்தும், கிறித்துவ பஞ்சமர்களின் அனுபவங்களில் இருந்தும் இன்னும் அகலாதவை. இந்த பயத்தின் காரணமாகவே 15 – 16 வயது நிரம்பிய இளம்பெண்களை உடனடித் திருமணம் செய்து, கழுத்தில் தொங்கும் தாலியைக் காட்டியும் பெண்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். சிலர் அந்தந்த திருச்சபைகளின் ஆயர்களிடம் முறையிட்டு காப்பகங்களிலும், மடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளார்கள். வன்னி பகுதிகளில் மட்டும் நிலவிய இது போன்ற தமிழ்ப்பெண்கள் அனுபவம் இதுவரை வெளியில் பேசப்படாதது தான்.
1989 செப்டம்பர் 21 – ல் கண்மூடித்தனமாக‌ கொல்லப்பட்ட டாக்டர். ரஜினி ராஜசிங்கம் திரக்மாவின் மரணம், அவரின் நெருங்கிய தோழி சாந்தியின் வாக்கு மூலம், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற பாரதியின் மரணம், செல்வியின் வெளியேற்றம், மரியாதைக்குரிய தோழர் மதிவதினியின் திருமணம் ஆகியவற்றுக்குப் பின்னால் இருண்டு கிடக்கும் உண்மைகள் விரிவாகத் தோண்டி விசாரணை செய்து பார்த்தால் புலிகளின் இனக்குழு இராணுவ மரபின் போர்ப்புனிதம் எதுவரையிலானது என்பது இன்னும் கூடுதலாக‌ புலப்படும்.
—————————————–
ஆண்களே, சக ஆண்களுக்காக, ஆண்களால் தீர்மானித்துக் கட்டப்படும் இயக்கமும், போர் மரபுக்குழுவும் ஆணாதிக்க ரீதியாக வெளிப்படும்போது இந்த நிலை தான் இறுதி நிலை அல்லது இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டாக வேண்டும். ஜனநாயக ரீதியாக, சட்டத்தின் ஆட்சியாக, இறையாண்மைக் கூடமாக நம் கண் முன்னே இருக்கின்ற இந்த சிவில் சமுகத்தில் எண்ணற்ற பாலியல் சுரண்டல்களும், குற்றங்களும் மலிந்து கிடக்கின்றன. அதனை உண்மை கண்டறிவதிலும், தீர்வு காணுவதிலும் மிகப்பெரிய வசதி வாய்ப்புகள் இருந்தும் இடை விடாமல் போராடிக் கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்கையில் குறைந்த பட்ச ஜனநாயக ஓர்மை இல்லாத அகில உலக போர்மரபுக் குழுக்களிடமும், அவை உருவாக்கும் இராணுவ முகாம்களிலும் இதைவிட “பாலியல் சுரண்டலற்ற நீதிசார் இறையாண்மை ஜனநாயகம்” (Ruin of War Democrazy) அப்படி என்ன இருந்து விட்டது. இருந்து விடப்போகிறது என்று தெரியவில்லை.
அளவு கடந்த கட்டுப்பாடுகளும், புலி ஒழுக்க விதிகளும் பேசப்பட்ட காலத்தில் தான் கருணாவுக்கு இலண்டனில் சொர்க்கபுரி சொகுசு பங்களா வாங்கப்பட்டது. இன்றைக்கு வேண்டுமானால் அவரை எட்டப்பன் என விம‌ர்சிக்க‌லாம். புலிகளை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் என்பதற்காக மட்டும் சில நாடுகளில் தடை செய்து விடவில்லை. பணம் சார்ந்த, சொத்துக் குவிப்பு, மணி லாண்டரி, ஆயுத பேரம், குட்டித் தீவு சொகுசு வாழ்க்கை என்கிற நாடுகளுக்கிடையேயான உள்நாட்டு அரசியல் பிரச்சனையாகவும் அது நீடித்தது. இது தொடர்பாக ஸ்வீடன் போன்ற நாடுகள் வழக்குகளும் தொடுத்திருக்கின்றன.
புலிகளுக்கிடையே காதல் கூடாது, திருமணம் கூடாது என்று கட்டளையிட்ட பிரபாகரன் அவர்களே விதிவிலக்காக காதல் புரிந்தார், திருமணம் செய்து கொண்டார். வேறெவருக்கும் வழங்க முடியாத இத்தகைய விதிவிலக்கின் ஜனநாயக அறம் புலிகளிடமும், பிரபாகரனிடமும் தென்பட்ட‌து தனக்கு நெருடலாக இருந்தது என அடேல் பாலசிங்கம் தன்னுடைய அனுபவத்திலிருந்து பதிவு செய்கிறார். காரணம் பிரபாகரனும், மதிவதினியும் சந்தித்து காதல் கொள்ளும்  இடம் பாலசிங்கத்தின் வீடுகளிலும் நிகழ்ந்துள்ளது. (Adele Balasingham “The will to Freedom: An Inside view of Tamil Resistance” Fairmax Publishing Ltd, New Edition 2003, Mitcham).
ஆக, போர்மரபை விரும்பாத அகில உலக பெண் மனித உரிமைப் போராளிகள் சொல்லும்“சுருள்பெறும் வன்முறை” (Spiral of Binding the Violence) என்பதில் சக மக்களே கொல்லப்படுவது, தாக்கப்படுவது என்பதையும் கடந்து சமுக பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, வசியப்படுத்தப்பட்ட, தன் பக்கம் இழுத்துக் கட்டப்பட்ட, தன்னைச் சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட‌ அனைத்திலும் உள்ள‌ பாலியல் சுரண்டல்களும் இத்தகைய போர்க்குற்றங்களில் உள்ளடங்கும் என்பதை பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் அய்.நா மன்றமே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
 இதுவரையிலும் பரவலாகப் பேசப்பட்ட, எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த சாதாரண மனித உரிமைப் பார்வையில் இப்படியான விமர்சனக் கண்ணோட்டத்தை புலிகளைக் கொச்சைப் படுத்துவதற்காக எவரும் முன்வைக்கவில்லை. அப்படி எளிதாக எவரும் அவர்களை கொச்சைப்படுத்தி விட முடியாது. ஆனால் மனித உயிர் இழப்பீடுகளைக் கொண்டு இயங்கும் ஆயுத‌பாணி போராட்ட மரபில் சாதித்தது என்ன? என்று கடந்தகால துன்பியல் சம்பவங்களை அசை போட்டால் உலகின் எங்கோயோ ஒரு மூலையில் உள்ள பெண்கள் எழுப்பும் இத்தகைய விமர்சனங்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனெனில், ஆயுதம் ஏந்திய எந்த ஒரு இயக்கமும், இனக்குழு இராணுவமும் தங்களுக்கான தேசிய விடுதலைப் போராட்டங்களை எப்படி பெறுவது என சக பெண்களை கலந்தாலோசித்து, அவர்களின் இறுதி முடிவை ஏற்று போர் மரபுப்பண்பாட்டைக் கட்டமைப்பதில்லை. இந்த முடிவுக்கு உயிர் உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதும் கேள்விக்குறி தான். பொதுவாக போரினால் ஏற்படும் இழப்புகளில் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும், குழந்தைகளும் தான் உள்ளடங்குவர் என்பதை நன்கறிவோம். போர் மரபை ஆதரிப்பவர்கள் தலித் இயக்கங்கள் போல அறிவித்து விட்டு பிறகு பெண்களுக்கு அழைப்பு விடுத்து ஆலோசனை கேட்பார்கள். ஒத்துழைக்க மறுத்தால் எதிர்வினையாற்ற எந்த போர் அறமும் விதிவிலக்கல்ல. மிகவும் கனத்த இதயத்தோடு சொல்கிறேன். எந்த பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று  இதுகாறும் களத்தில் போராடினோமோ அந்த பெண்களை இன்றைக்கு இலங்கை ஆண்களிடமும், இலங்கை இராணுவ ஆண்குறிகளிடமும் கையளித்தது தான் ஆண் விடுதலைப்புலிகளின் போர் தந்திர‌ ஒழுக்கக்கட்டுப்பாடான “தமிழ்ப்பெண் புனிதம் போற்றுதலா” என்பதையும் சிந்திக்க வேண்டும். அதன் விளைவு இன்றைக்கு என்ன ஆனது என்றால் பெரும்பாலான இலங்கை தமிழ்ப் பெண்கள் நிறைமாத கர்ப்பினிகளாகவும், பாலியல் தொழிலாள‌ர்களாகவும் ஆக்கப்பட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சில பெண்கள் கருத்த‌டையும் செய்யப்பட்டனர். இந்த நிலையை தமிழ்ப் பெண்களுக்கு உருவாக்கிக் கொடுக்கத்தான் புலிகள் போராடினார்களா? ஒப்பிட்டுப் பார்த்தால் சிவகாமி சுட்டிக்காட்டியதைவிட மிகக்கேவலமான பெண் அறம் இது. அமெரிக்க ஏகாதிதிபத்தியத்தை எதிர்த்து முற்போக்கு பொதுவுடைமை பேசிய‌ அல்ஜீரியா, கியூபாவில் கூட இப்படியான‌ யுக்தி சாத்தியமாகவில்லை.
பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை அறுதியிட்டு அறிந்து கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள‌ முடியாத இடவெளி “புலிப்பாச உறவு” தான் இங்கத்திய தமிழ்ச்சாதிகளின் ஒரு பக்க சார் முற்போக்கு மனோபவம். மற்றபடி மேற்கண்ட “புலிகள் VS பெண்கள்” விமர்சனம் உருவான காலத்தில் இதே மெரினாவில் சுண்டல் கொரித்துக் கொண்டிருந்தோம். பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடக்கூடாது என்கிற ஒற்றை நோக்கத்துக்காக இன்றைக்கு எப்படி காங்கிரஸ் கட்சியை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றோமோ அதுபோல இலங்கத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரே இயக்கமாக விடுதலைப்புலிகளை தவிர்க்க இயலாத மாற்று சக்தியாக தமிழ் அடையாள அரசியலில் ஏற்றுக் கொள்ள‌ வைக்கப்பட்டோம்.   இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது ஏகோபித்த ஏற்புடைமை அல்ல. இன்று பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதையும், இனக்குழு போர் மரபு இனி தொடராது என்பதையும், புலிகள்  மீதான நேர் – எதிர் மறை விமர்சனங்களையும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தைப் போன்று இங்கத்திய தமிழ்ச்சாதிகளால் ஏற்றுப்போக முடியவில்லை என்பது சிவகாமி கருத்தில் கட்டவிழ்கிறது. இதனைக் கடந்தும் அதே பாணி விடுதலை யுக்தியை அணிதிரட்டி விடுதலைக்காகப் போராடி வெற்றி காணலாம் என நினைத்தால் இப்போது வரையிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் என்ன நிகழ்ந்ததோ அது தான் எதிர்காலத்திலும் சாத்தியமாகும்.
எங்கெல்லாம் வெகு பெண்கள் திரள் கொண்ட, அவர்களின் வழிகாட்டுதலைக் கொண்ட, தலைமையை ஏற்ற இயக்கங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றதோ அங்கு எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும் மேற்கண்ட விமர்சனங்கள் அரிதிலும் அரிது. சமகாலத்தில் தெற்காசிய நாடுகளில் எழுச்சியடைந்துள்ள இனக்குழு பாதுகாப்பு இயக்கங்கள், பாரம்பரிய நாடோடி அமைப்புகள்,  நர்மதா பாதுகாப்பு இயக்கம் போன்ற சுற்றுச் சூழல் இயக்கங்கள், ஆதிவாசி மக்கள் இயக்கம், இயற்கைவளப் பாதுகாப்பு இயக்கம், தற்போதைய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட இயக்கம் போன்ற இயக்கங்களின் குறைந்த பட்ச ஜனநாயக இருப்பு நிலையை தக்க வைக்க முடிந்த இடம் தான் நமக்கு தொடர்ந்து போராட‌ நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.
——————————————–
Sivakami insuledதமிழீழ விடுதலைப்புலிகள் பெண்களை நேர்மறையாக பாவித்தார்கள் என்றாலும் போரைத் தூக்கி நிறுத்தும் தங்களின் போர்மரபில் பெண்களை பாலியல் சார்ந்து எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்கிற “புலிப்புனிதம் போற்றும் புதிரை” சிவகாமி இன்று லேசாக உடைத்திருக்கிறார்.
- இந்திய ஆட்சிப்பணியில் இருந்துகொண்டே ஒடுக்கப்பட்ட தலித் விடுதலைக்காக தனது அலுவலகத்தை திறம்பட நடத்தி களமாடிய‌வர் சிவகாமி அய்.ஏ.எஸ். 
- ஆதி திராவிட நலத்துறையில் சாதி பற்றிய வெளிப்படையான உரையாடலைத் தொடங்கி வைத்து “தலித்” என்கிற வார்த்தையை அரசு கோப்புகளில், ஆவணங்களில் பதிவு செய்தவர்.
- சாஸ்திரிய மயமாக உலவிய உலகத் தமிழாராய்ச்சி மன்றங்களில் தலித் இலக்கிய விவாதங்களை அறிமுகப்படுத்தியவர்.
- தீண்டப்படும் சாதிகளால் தலித்துகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட “பஞ்சமி நில மீட்பு” உட்பட நிலவுரிமை இயக்கமாக்கியவர். 
- அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிந்தைய தலித் எழுச்சியில் உருவான வன்கொடுமைகளில் தலித் பெண்கள் மீதான வன்கொடுமைகளை அம்பலப்படுத்தி பல்வேறு பொதுவிசாரணைகளில் அரசு பயங்கரவாதத்தைத் தோலுரித்தவர்.
- சுற்றுலாத்துறையில் இருந்தபோது புனிதத்தலம் உட்பட சுற்றுலா மய்யங்களாக இருக்கின்ற இடங்களில் பெண்கள் மீது திணிக்கப்பட்ட விபச்சார சுரண்டலை வெளிப்படையாகப் பேசி தீர்வு காண முயற்சித்தவர்.
- தலித் மாண‌விகள் அயல்நாடுகளில் உயர்கல்வி படிக்க வழி திறந்து, தலித் பெண்களின் அதிகாரப்பகிர்வையும், முடிவெடுத்தலையும் ஆண்சார்பு இல்லாமல் “தலித் அப்னா பஞ்சாயத்து” அமைத்து கொடுத்தவர்.
- ஆணாதிக்கக் கட்டமைப்பில் தலித் ஆண்கள் ஒன்றும் புனிதமாகப் போற்றப்படக்கூடியவர்கள் அல்லர் என்பதை தலித் பெண்ணிய இலக்கியமாக வடிவமைத்தவர்.
இந்த சிவகாமி தான் இலங்கையில் இருக்கும் தமிழ்ப்பெண்கள் மீதான புலிகளின் பாலியல் பிரச்சனையையும் புழுதி கிளப்பியிருக்கிறார். 
எனினும், வடிவத்தால் அல்லாமல் “பறச்சி, தேவடியா, நடத்தை கெட்டவ, அந்த மாதிரி ஆளு, அரவாணி அவ, எவ அவ, வரலாறு தெரியாம அய்.ஏ.எஸ் ஆனவ என வக்கிரக்கேவலமாக வார்த்தைகளால் புணர்ந்த சூத்திர தமிழ்ச்சாதிகளின் நடவடிக்கைகளைக் காணும்போது, என் உயிரிலும் மேலான‌ எங்களின் தொப்புள்கொடி உறவான‌ ஈழத்தமிழ் புலிகள் மீதும் பெண்கள் விஷயத்தில் மரியாதை கலந்த பலத்த சந்தேகம் திரும்பியுள்ளது. இது ஒரு பக்கம் கிடக்கட்டும். தமிழ்ச்சாதி சூத்திரர்களுக்கு வேண்டுமானால் சிவகாமி யார் என தெரியாமல் இருக்கலாம். இளவரசன் இறுதி ஊர்வலத்தில் சிவகாமி காட்டிய துணிச்சலைக் காட்ட வக்கற்ற, சந்தர்ப்பவாத, ஃபேஸ்புக் தலித் போராளிகளாகிப் போனவர்களால் எப்படி கண்மூடித்தனமாக சிவகாமியை எதிர்க்கவும், வசைபாடவும் முடிந்தது என்கிற இடத்தில் தான் புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் போன்ற‌ மரணமற்ற‌ சிலைகளைக் கூட சந்தர்ப்பவாத – பிழைப்புவாதத்துக்கு கூட்டிக் கொடுத்து விட்டோமோ என்கிற ஏக்கம் மேலோங்குகிறது.
நண்பர்களே! இந்த குறிப்புகளை பகிர்ந்து கொள்வதன் நோக்கமே சாதி ஒழிப்பை முன் நிறுத்தும் தலித் மனித உரிமைப் பார்வையில், பெண்ணியப்பார்வையில் புலிகள் பற்றிய புனித பிம்பங்களை கட்டுடைப்பது தான். மற்றபடி நான் மட்டுமல்ல எவரும் ஒரு தலித் பெண் என்பதற்காக வக்காலத்து வாங்கும் நிலையில் சிவகாமி ஒருபோதும் வீழ்ந்து போகக் கூடியவர் அல்ல. தலித் விடுதலைக்கான போராட்டக்களத்தில் எதிர்காலத்தில் அப்படி அவரை எவரும் தரம் தாழ்த்தி வீழ்த்திவிட முடியாது. by ANBUSELVAM.
நன்றி : வேப்பூர் திருடன் 

No comments: