என் .சரவணன்
தோழர் நிர்மல் ரஞ்சித்தை 11 வருடங்களுக்குப் பின் நான் மீண்டும் நேரில் சந்தித்தது, கொழும்பில் ஊடக ஒழுக்கக்கோவை பற்றி கடந்த ஜூலை 17 அன்று நடந்த மாநாட்டில். அப்போது தான் இலக்கிய சந்திப்புக்கு யாழ்ப்பாணம் செல்வதாக என்னிடம் தெரிவித்தார். ஒரு காலத்தில் ஜே.வி.பி செயற்பாட்டளராக இருந்து பின்னர் 90களில் X-group எனும் பெயரில் இயங்கி வந்த அணியில் செயற்பட்டு வந்தார்... சிங்கள சூழலில், அமைப்பியல்வாதம், நவ-மாக்சியம், பின்நவீனத்துவம் போன்றவற்றை அறிமுகம் செய்து அதன்வாயிலாக பலத்த விவாதங்களையும், புதிய அரசியல் பார்வைகளையும், மொழிப்பிரயோகங்களையும், எழுத்து நடைகளையும் கொணர்ந்ததில் இந்த X-Group க்கு முக்கிய பங்குண்டு. பின்னர் அந்த குழு உடைந்து வெவ்வேறு அணிகளானார்கள். சரிநிகர் காலத்தில் எங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
அவரது கட்டுரைகளையும், பெட்டிகையும் பிரசுரித்திக்கிறோம். அப்போது கூட சமாதான பேச்சுவார்த்தை, அதிகாரப்பகிர்வு என்பவற்றிற்கு எதிராக நலின் டி சில்வா பேசும் கருத்துக்களுடன் தர்கிக்க மேடைகளில் அழைக்கப்படும் பேச்சாளராக இருந்தவர் நிர்மல். பேரினவாதத்தை புலமைத்துவ அறிவோடு நிறுவ முயல்பவர்களுக்கு புலமைத்துவ அறிவோடு தென்னிலங்கை சிங்கள பேரினவாத சக்திகளுக்கு தக்க பதிலளிப்பதில் வல்லவரும் நிர்மல் தான் என்பது என் கருத்து. குறிப்பாக சொல்வதென்றால் "சமூக விஞ்ஞானிகள் சங்கம்" (SSA - Social scientist association) த்தில் குமாரி ஜெயவர்தன, ஜயதேவ உயன்கொட போன்றோருடன் பல வருடங்களாக இயங்கி வருபவர். அவர்கள் வெளியிடும் "ப்ரவாத" சஞ்சிகையில் இலங்கையின் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் உருவாக்கம், அதன் அமைப்பு, செயல் என்பன குறித்து நிர்மாலின் பல கட்டுரைகளை காணலாம்.
கொழும்பு பல்கலைகழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார். சென்ற வருடம் இலங்கையை கலக்கிய பல்கலைக்கழக ஆசிரியர்களில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி, இலங்கையில் முதற் தடவையாக நீண்ட காலமாக நடந்த அந்த போராட்டத்தை விடாப்பிடியான போராட்டத்தை கொண்டு நடத்தியதில் நிர்மலின் பங்கு அதிகமானது. பல்கலைகழக ஆசிரியர்களில் சம்மேளனத்தின் Federation of University Teachers’ Association (FUTA) தலைவராக இருக்கிறார். தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் கவனிக்கத் தவறிய தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவரும் சிங்கள செயற்பாட்டாளர்களில் முக்கியமானவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி.
அவர் தற்போது சிங்களபௌத்த பேரினவாதத்தை கோட்பாட்டாக்கம் செய்வதில் கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக முக்கிய பங்காற்றி வரும் நளின் டி சில்வா வுக்கு தக்க பதில் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார் சிங்கள முற்போக்காளரான தோழர் நிர்மால் ரஞ்சித். நளின் டி சில்வாவின் ஒவ்வொரு குறிப்புக்கும் தர்க்கபூர்வமாக உடைக்க தொடங்கியிருக்கும் தோழர் நிர்மல் ரஞ்சித்தின் முதல் பாகம் இது. தமிழில் இது கட்டாயமாக மொழிபெயர்க்கப்படவேண்டியவை.
No comments:
Post a Comment