-பிரேம்-
திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் என்ற இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பில் தீராநதி மாத இதழில் தொடராக வெளிவந்தவை. ஒரு பொருள் பற்றியோ அல்லது பல்வேறு பொருள் சார்ந்தோ சில எழுத்தாளர்கள் எழுதுவதை ஒரு பொதுத்தலைப்பின் கீழ் ஒவ்வொரு இதழிலும் வெளியிடுவது அந்த இதழில் உள்ள நடைமுறை. முன்பு 2007-இல் தீராநதியில் ‘இருண்மைகள் இடைவெளிகள் மௌனங்கள்’ என்ற தலைப்பில் தொடராகச் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். கவிஞர் கடற்கரை கேட்டுக் கொண்டதன் பேரில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரைகள் பின்நவீனத்துவ அரசியல் சார்ந்த உரையாடல்களாக அமைந்தன. தமிழில் அதுவரை முழுமையாக விவாதிக்கப்படாத பல்வேறு கோட்பாட்டுச் சிக்கல்கள் பற்றிய தொடக்க கட்ட உரையாடலாக அமைந்த அக்கட்டுரைகளைத் திட்டமிட்டபடி தொடர இயலாத சூழல் ஏற்பட்டது.
மீண்டும் 2011, செப்டம்பர் மாத தீராநதி இதழுக்கு எழுதிய ஒரு கட்டுரை இத்தொடருக்கான தொடக்கமாக அமைந்தது. திரைப்படத்தை முன் வைத்து நம் காலத்திய சமூக-அரசியல் உளவியல் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாக இத்தொடர் அமையும் என நான் தெரிவித்திருந்தேன். திரைப்படங்களை முன்வைத்து நம் காலத்திற்கான சில கோட்பாட்டுச் சிக்கல்களைப் பேச இந்தப் பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது.
தமிழில் திரைப்படங்கள் பற்றிய கோட்பாடுகள் சார்ந்த ஆய்வுகள், வாசிப்புகள் இல்லை. திரைப்பட வரலாறு, திரைப்படத் தொழில்நுட்பம் பற்றிய அறிமுக நூல்கள் சில மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
தமிழில் திரைப்படம் பற்றிய எழுத்துக்கள் என்பன கதைசொல்வது அல்லது ஆவணப் படுத்துவது என்ற வகையில் அமைந்துள்ளன. இவை அடிப்படை வாசிப்புக்கு உரியவை. அதற்கு மாறாக ஒரு மரபும் உண்டு ‘உலக சினிமாவைத் தமிழர்களின் குருதியில் கலந்துவிட வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கத்துடன் திரைப்பட விழாக்களில் பார்த்த அல்லது பார்க்காத படங்களைப் பற்றிக் கதைச் சுருக்கக் கையேடுகளை வைத்து எழுதி அப்படங்களைப் பார்க்க வாய்ப்பில்லாதவர்களை அசர வைத்துவிடுவது. ஒளிஒலிப்பேழைகள் குறுமின்தட்டுகள், இணையத்தளங்கள் என விரிவடைந்த திரைப்பட நுகர்வு இந்த வகையான கதைக்கட்டும் முறைகளை கேலிக்குரியனவாக மாற்றியிருக்கின்றன. ஆனாலும் தமிழின் முதல் பேசும்படத்தில் பயன்பட்ட ஒலிவாங்கி, முதல் திரையரங்கத்தில் இருந்த திரைப்படுத்தும் கருவி, முதல் நடிகர் அணிந்திருந்த மோதிரம் என்பன பற்றியெல்லாம் ‘மேலைநாட்டு’ அறிஞர்களின் வழிநின்று அரிதான ஆய்வுகள் தொடர்ந்து நடந்தபடியுள்ளன. உலகத் திரைப்படக்காரா்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி உள்ளுர் திரைப்படக்காரர்களை வியக்கவைக்க இலக்கிய மொத்த விற்பனைக்காரர்கள் எழுதும் ஆன்மிக எழுத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. இவற்றிலிருந்து விலகிய கருத்தியல் செயல்பாடாக இக்கட்டுரைகள் அமையும் என்பதால் ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பை அளித்தேன்.
நான்கு குறிப்புகளை மனதில் கொண்டு ‘விலகும் திரைகள்’ என்ற தலைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ்த் திரைப்படங்களின் பொதுவான தன்மையாக உள்ள வரலாற்றிலிருந்து, பண்பாட்டியல் மெய்மைகளிலிருந்து, அறிவுரு வாக்கத்திலிருந்து விலகுதல் என்பதில் உள்ள முதல் விலகுதல். கடந்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட மிகச்சில படங்கள் தமிழ்த்திரையின் தேய்வழக்கு, ஒற்றைக் கதையாடல் முறை, மறுசுழற்சிக் காட்சித்தன்மை என்பதிலிருந்து விலகிச் சில சமூக உளவியல் கூறுகளையும் பண்பாட்டுத் தடயங்களையும் தமிழ்ச் சமூகத்தின் துன்பியல் களங்களையும் பதிவு செய்ய முயற்சிப்பதில் உள்ள இரண்டாவது விலகுதல். திரைப்படம் பற்றிய அறிவைத் தருவதாகக் கூறிக்கொண்டு சில இலக்கிய முகவர்கள் தமிழில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆய்வு முறையற்ற வழிபாட்டு மன்றங்களின் மயக்கமூட்டும் திரைகளை விலக்குதல் என்பது மூன்றாவது விலகுதல்.தமிழின் கோட்பாடுகள் குறித்த சொல்லாடல்களை மறைத்துள்ள பொதுச்சொல்லாடல் திரைகளை விலக்கும் முயற்சி நான்காவது விலகுதல்.திட்டம் பெரியது, ஆனால் களமோ சிறியது. ஒவ்வொரு கட்டுரை வெளிவந்த பின்னும் நண்பர்கள் சொன்ன கருத்து ‘தமிழில் முற்றிலும் புதிய அணுகுமுறை என்பதால் இன்னும் கூடுதல் விளக்கம் தேவை’. பொதுக்கருத்து கொண்ட திரைப்பட வாசிப்புக்கு ‘விளங்காத திரையாக’ இக்கட்டுரைகள் தோற்றம்தர பல காரணங்கள் இருந்தன. முதல் காரணம் திரைப்படம் குறித்த பேச்சு அல்ல இது, திரை அரசியல் பற்றிய உரையாடல், அரசியல் உளவியல் பற்றிய மறு ஆய்வு. கடவுள் பற்றிய ஆய்வுக்கும் ஒரு பக்திப் பாடலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இது. தமிழின் நவீன கதைசொல்லிகள் சிலர் திட்டமிட்டு உருவாக்கி வைத்துள்ள ஞானஒளியின் பெருக்கத்தில் இக்கட்டுரைகள் இருட்டைத் தேக்கி வைத்துக் கொண்டவையாக தோற்றம் தருவது இயல்பானது. ஆனால் பின்காலனிய, பின்நவீனத்துவ ஆர்வமும் வாசிப்பும் உள்ள பல நண்பர்கள் இக்கட்டுரைகளை முன்வைத்து உரையாடல்களைத் தொடர்ந்தனர்.
2.
தமிழில் சில ஊடகங்கள், பதிப்பகங்கள் இணைந்து சில எழுத்தாளா்களைத் தோ்ந்தெடுத்து அறிவாளிகள், ஆய்வுத்திறன் கொண்டவா்கள், பெரும் படைப்பாளிகள் என்ற உருத் தோற்றத்தைத் திட்டமிட்டு பரப்பிக் கருத்தியல் பங்குச்சந்தை ஒன்றை உருவாக்கி உள்ளன. இந்த ஊடக ஒலிபரப்பிகள் உலக சினிமா முதல் உள்ளுர் ஆன்மீகம் வரை அனைத்தைப் பற்றியும் முன் தயாரிப்பு செய்யப்பட்ட கருத்துகளை மிகப்புதிய சிந்தனை முறைபோல ஓசையெழுப்பிக் கொண்டே இருக்கின்றனா். அறிவுமறுக்கும் பொதுக்கருத்தை உருவாக்க முனைகிற ஊடக-இலக்கிய உற்பத்திக் கூடங்களுக்கு இவா்கள் பலமடங்கு லாபத்தைப் பெருக்கித் தருவார்கள். உலகச் சந்தையும், பன்னாட்டு முதலீடுகளும் அனைத்துவகை அறிவையும் தன்வசமாக்குதல், பின் செயலிழக்க வைத்தல் என்பதற்கென தனித்துறையை உருவாக்கியுள்ளன. மார்க்ஸியம் தொடங்கி பெண்ணியம், தலித்தியம், உலக சினிமா, உலக இலக்கியங்கள் எது பற்றியும் புதிய கருத்துக்களை’ பரப்புவதற்கான மொத்த விற்பனையாளர்களையும் சில்லரை விற்பனையாளர்களையும் இவர்கள் உருவாக்குகிறார்கள். ஊடகங்கள் இவர்களை தொடர்ந்து உருப்பெருக்கிக் கொண்டே இருக்கும். தமிழின் அறிவுத்துறையில் இந்த ஊடக உருப்பெருக்கம் நம்மைப் பல வகையில் பாதித்தபடி உள்ளது. இந்த ஊடக உருவங்கள் தொடர்ந்து சொல்லும் எதுவும் தமிழக வரலாற்றில் அழியா இடம் பெற்றதாகிவிடும். அறிவுமறுக்கும் பெருங்கதையாடல் ஊடகங்கள் என்ன சொல்கின்றனவோ அவற்றையே நவீன சிந்தனை, நான்லீனியர் எழுத்து, இந்திய ஞான மரபு, புனித தேசியம் என ஏதாவது ஒரு வெள்ளித் தாளில் பொதிந்து விற்பனைக்கு வைக்க இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ உருவாக்கித் தந்த எதிர் அறிவு மரபு இது.
தமிழில் எதை எழுதினாலும் படிக்கச் சிலர் இருப்பார்கள், அவற்றைச் சரிபார்க்கவோ ஒப்பிட்டுக் கேள்வி கேட்கவோ யாரும் இல்லை என்ற கெடுநம்பிக்கையே இவர்களை இயக்கும் சக்தி. “எங்களுக்கு இரண்டு கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள், உங்கள் மாற்றுச் சிந்தனைகளை ஏற்க இருநூறு பேர்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்களே உலகை ஆளும் தகுதி கொண்டவர்கள்” என்ற இறுமாப்பை தமிழ் சினிமாக்காரா்களிடம் பார்க்க முடியும். தமிழ்த் திரையும் புதிய கதைக்காரா்களும் இணையும் தளம் இது. அறிவுத் திரிபுகளுக்கான சதித்திட்டங்கள் இந்தத் தளத்தில் செயல்வேகம் பெறுகின்றன. மாற்றுச் சிந்தனைகள், மாறுபட்ட அணுகுமுறைகள், விடுதலைக் கருத்தியல் சார்ந்து சிந்திக்கவும் எழுதவும் தொடங்கும் ஒருவா் இந்தப் பல்நோக்கு அங்காடிகளின் படிக்கட்டுகளில் இடறிவிழாமல் இருக்க பயிற்சியும் முனைப்பும் தேவைப்படுகிறது. கருத்தியல் சந்தைப் பொருளாதாரமும் பண்பாட்டியல் மூலதனத் திட்டங்களும் தொடுக்கும் தாக்குதலை எதிர்கொண்டு மீளுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இக்கட்டுரைகள். இவை ‘தீராநதி’ இதழில் தொடராக வெளிவருவதற்கான முரண்சூழலை உருவாக்கித் தந்ததும்கூட உலகமயமான சந்தைப் பொருளாதாரம், பன்னாட்டு பொதுக்களம் போன்ற சிக்கலான நிலைகள்தான்.
3.
அரசியல், தத்துவம், கலை, இலக்கியம் என்பவற்றைக் கற்பது முன்திட்டமிடப்படாத பெரும் அலைச்சல் கொண்ட ஒரு தேடுதலாக எனக்கு இருந்துள்ளது. ஒரு இலக்கியப் படைப்பாளியாக மட்டும் இருக்க விருப்பம் கொண்டிருந்த எனக்குக் கல்விப்புலங்கள் அனைத்தும் அறிவு ஒடுக்கும் தன்மை கொண்டவை படைப்பாற்றலை அழிப்பவை என்ற எண்ணம் உண்டு. ஆனால் எனது அரசியல் ஈடுபாடுகள் அறிவுப்புலங்கள் பலவற்றை ஊன்றிக் கற்க வேண்டிய தேவையை உருவாக்கின. ஆங்கிலக் கல்வி இல்லாத எனக்கு அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்க வேண்டிய நிலையை உருவாக்கி, பின் ஆங்கிலத்தில் கற்பிக்கவும் மொழிபெயர்க்கவும் உரியவனாக்கியிருப்பது காலத்தின் முரண்நகைதான். நாடகம், திரைப்படம் என்ற இரு துறைகளை நான் இந்த பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தெளிவாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயிற்சி முறையுடன் ஒரு மாணவனாக இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டேன். எங்கிருந்து தொடங்கி எந்தெந்தச் சிந்தனைப் பள்ளிகள் ஊடாக இத்துறைகளைக் கற்பது என்பதும் எந்தெந்த நூல்களை, கோட்பாட்டுப் புலங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இத்துறைகளில் விரிவாகப் பட்டியலிடப்பட்டிருப்பது எனக்குப் பயனுடையதாக இருந்தது.
உலக அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதிகளும் உலக அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களும் ஒரு நேர்க்கோட்டு முறையில் காலவரிசைப்படுத்தப்பட்டு கற்பதற்கேற்ப நமக்குக் கிடைக்கின்றன. செவ்வியல் சார்ந்தும் மாற்று மரபுகள் சார்ந்தும் இந்த அறிவுத்துறைகள் பலவகையான பார்வைகளை, அணுகுமுறைகளைத் தம் இயல்களாக இணைத்துக் கொண்டுள்ளன. இதன் காரணமாக நாடகம், திரைப்படம் என்ற இரு துறைகளைப் பற்றி எழுதுவதானது தொடர் உரையாடல் ஒன்றில் நம்மை இணைத்துக் கொள்ளும் செயலாக இருக்கும். ஒரு தொழில்நுட்பப் பயிற்சியின் பின்புலத்துடன் இந்த உரையாடலில் யாரும் பங்கெடுத்துக் கொள்ள இயலும். ஆனால் இவற்றை அரசியல்படுத்தவும் கோட்பாட்டு வகையில் இடப்படுத்தவும் முயற்சிக்கும்போது திரைப்படம், நாடகம் மட்டுமின்றி நிகழ்கலை வடிவங்கள் பற்றிய ஆய்வறிவுகள் அனைத்தும் பன்மையான அறிவுப்புலங்களுடன் உறவுடைய கலப்பான அணுமுறைகளைக் கொண்டவை என்பது நமக்குப் புரியவரும். திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்தப் பன்புலத் தன்மை கூடுதலாகத் தேவைப்படுகிறது.
இந்தப் பின்புலத்தில் திரைப்பட வாசிப்பை பின்நவீனத்துவம் கோட்பாட்டு உரையாடல்களின் பகுதியாக ஏற்றுக் கொள்கிறது. பேச்சு தொடங்கி, பெரும் கட்டுமானங்கள், நகர அமைப்புகள் வரை அனைத்தையும் குறியியல் செயலாகவும், கதையாடல் களமாகவும் (Narrative Domain) அடையாளப்படுத்துகிறது பின் நவீனத்துவ பொருளுரைப்பு முறை. பிரதிகளை, கதையாடலை, வாழ்வை,வரலாற்றை வாசிப்பது, உடலை மனதை பொருள்படுத்துவது என அனைத்தையும் இடையீட்டுப் பிரதிச் செயல்பாடுகளாக (Intertextual function) விளக்கும் பின்நவீனத்துவ அணுகுமுறை வாசிப்புச் செயல்பாட்டை அரசியல் செயல்பாட்டின் பகுதியாக விரிவுபடுத்தி அதனை வாழ்வுச் செயல்பாடுகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது. இந்தக் கட்டுரைகள் குறியியல், பின்நவீன வாசிப்பு முறைகளைக் கொண்டிருந்தாலும் பன்மை நவீனத்துவம் என்ற அணுகுமுறையை நோக்கி நகர்கின்றவை.
திரைப்படம் கதை சொல்வதோ, தோற்ற மெய்மைகளை தொகுத்துத் தருவதோ, மாய வினோதக் காட்சிகளை உருவாக்கிக் காட்டுவதோ மட்டும் அல்ல. அது பொருளுரைத்து, கோட்பாட்டாக்கம் செய்யும் ஒரு எடுத்துரைப்பு, பலவிதமான அறிவுருவாக்க முறைகளில் ஒன்று என்பதைப் புரிந்து கொண்ட தளத்தில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன. அத்துடன் “ஒரு திரைப்படம் அதனளவில் தன்னை விளக்கிக் கொள்வதில்லை அதற்கு முன்னும் பின்னும் அமையும் மொழி ஊடான, குறியமைவுகள் வழியான பொருளுரைப்புகளால்தான் அது தன்னை விளக்கிக் கொள்கிறது”. “திரைப்படத்தை பொருளுடையதாக்குவது திரைப்படம் பற்றிய பேச்சுருவாக்கம்தான்” என்ற ரொலான் பார்த், ஷீல் தெலஸ் வழிவந்த கருதுகோள் இக்கட்டுரைகளின் அடிப்படைகளில் ஒன்று.
தமிழில் உலகத் திரைப்படங்கள் பற்றி எழுதுவது என்றால் அப்படங்களைப் பார்க்காத, பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கதையைச் சொல்வது அல்லது யார் அவற்றைப் பார்க்கப் போகிறார்கள் என்ற தெம்புடன் கதைவிடுவது என்று ஒரு பொதுவழக்கு உருவாகியுள்ளது. இதனைத் தவிர்த்து தமிழ்-இந்தியச் சூழல் சார்ந்த படங்களை மட்டும் வாசிக்கவென இக்கட்டுரைகளை அமைத்துக் கொண்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக ஓடியலைந்து பார்த்த பல இயக்குநர்களின் திரைப்படங்கள் முழுத்தொகுப்புகளாக இன்று பார்க்கக் கிடைப்பதால் அவை பற்றிய மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட நிலையில் இக்கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். உலகத் திரைப்படம் என ஒன்றும் இல்லை என்பதைத்தான் இந்த இயக்குநர்கள் எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அவா்கள் தம் மொழியில், தம் சமூகம் பற்றி, தம் அரசியல் சார்ந்து தம் திரைப்படங்களைப் புனைந்திருக்கிறார்கள். அது அவர்கள் திரைப்படம், அதில் நாம் இல்லை. நம் திரைப்படம் வேறு. அது என்னவாக உள்ளது? அது என்னவாக இருக்க வேண்டும் அல்லது இருக்க முடியும்? எனப்பல கேள்விகளுடன் இந்தக் கட்டுரைகளை நான் எழுதத் தொடங்கினேன். தமிழில் பேசும் ஒரு திரைப்படம் என்பதால் அது தமிழ்ச் சமூகங்கள் அனைத்திற்குமான திரைப்படமாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்ற எளிய உண்மை இக்கட்டுரைகள் வழியாகப் புரியவந்தது. அதே போல தமிழில் எழுதப்பட்டுள்ளதால் இக்கட்டுரைகள் தமிழில் வாசிக்கப் பயின்ற அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. இதனை எழுதுவது வாசிப்பது இரண்டுமே இருவகை இணக்கமுள்ள அரசியல் செயல்பாடுகள்.
4.
இக்கட்டுரைகளை எழுதுவதற்கு முன் நான் பதிவு செய்திருந்த ஒருகுறிப்பை இங்கு தருவது வாசிப்பிற்கான ஒரு முன்புலமாகஅமையக்கூடும்.
குறியீட்டுச் செயல்பாடும் திரைப்படமும்:
திரையில் தோன்றி நினைவில் படியும் உருவங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது நாம் உடல் பற்றிய குறியீட்டுச் செயல்பாடுகளில் ஒன்றைப் பற்றிப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். மனிதவுடல் மட்டுமல்ல எந்த ஒரு பருப்பொருளும் வேறு எந்த ஒன்றுக்கும் குறியீட்டுப் பதிலியாக இருப்பதில்லை. ஆனால் குறியீட்டுத் தன்மை கொள்ளாத ஒன்றை மனித அறிதலும் அனுபவமும் தமது உலகில் அனுமதிப்பதில்லை. அறிவும் அனுபவமும் முதலில் அனைத்தையும் குறியீடாகப் பொருள்கொள்வதிலும் பொருள்படுத்துவதிலும் தொடங்கிப் பின் அனைத்து வகைக் குறியீடுகளும் தம்மைத் தாம் குறிப்பு செய்து அதனூடான பொருள் மாறுபாட்டு நாடகங்களை நிகழ்த்திச் செல்கின்றன. அவை வேறுவகைப் பொருளை, அா்த்தங்களைக் கண்டு சொல்கின்றனவோ அா்த்தங்களைக் கொண்டுவந்து தருகின்றனவோ அல்ல என்பதை உணர்த்தி முற்றுப்பெறுகின்றன.
இதனை பௌத்தம் நிப்பாண (நிர்வாண) என்றும் சூன்யா என்று சொல்ல முயற்சித்தது. பின்நவீனத்துவம் இதனை முடிவற்ற குறியீட்டுச் செயல்பாடு என்று விளக்கிக் காட்டியது. பன்மை நவீனத்துவத்தின் வழி இதனை குறியீட்டுப் பொருள் பற்றிய குறியீட்டுப் பெருக்கம் எனவும், குறியீடு கடந்த குறியீடுகளின் பெருக்கம் எனவும் சொல்லலாம். வாழ்தல் என்பதைக் குறியீடுகளுடனான ஓயாத விளையாட்டு என்று சொன்னால் சாதல் என்பது குறியீட்டாக்கத்தின் முடிவு என்று கொள்ள முடியும். ஆனால் குறிகளும் குறியீட்டுத் தொகுதிகளும் ஒரு தனிமனிதரின் பிறப்புக்கு முன்பே இங்கு இருந்து அவரைச் சூழ்ந்து கொள்வதுடன் அவருக்குப் பின்னும் இங்கு இருந்து அவர் இருந்ததைப் பற்றியும் அவர் இல்லாமல் போனதைப் பற்றியும் வேறொரு காலத்தில் சொல்லிக்கொண்டிருப்பவையாக இருக்கின்றன.
நம் உடல் எதனையும் குறிப்பிட்டுக் காட்டவோ, வேறொன்றைக் குறிப்புணர்த்தவோ, வேறொன்றின் நிழலாகவோ, மற்றதின் பதிலியாகவோ இங்கு இருந்துகொண்டில்லை என்பதை உணர்ந்து கொள்ளும்பொழுது ஏற்படும் ஒரு அச்சமூட்டும் வெறுமையைக் கடக்கவும் கையாளவும் நம்மை பழக்கித் தருபவை பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, கலை-இலக்கியம் என்ற கட்டுமானங்கள். ஒரு வகையில் நம் வாழ்தலைப்பற்றிய, இருத்தலைப்பற்றிய பொருள்படுத்துதல், பொருள்கூறுதல் என்பதைவிட நாம் இல்லாமல்போகும் நிலைபற்றிய அச்சத்தைக் கையாள, தன்வயமாக்கிக்கொள்ள நம்மைப் பழக்கித் தருபவையே மனித குறியமைப்புச் செயல்பாடுகள்.
சமயங்கள் ஒவ்வொன்றும் இதனைக் கையாளும் வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும் கடவுள் மற்றும் மற்றொரு உலகம் என்ற உருவக நிலைகளால் இந்த இன்மை உணர்வை உருமாற்றித் தருகின்றன. இறைமையுடன் இணைதல் தொடங்கி இறையுலகில் ஒரு உருவமாய்க் கலந்துவிடுதல் மற்றும் இறையின் நெருக்கத்தில் இணைபிரியாமல் இருத்தல் வரை வெவ்வேறு உருவகத் தன்மைகள் சமயம் சார்ந்த உளவியலாக அமைந்துவிடுகின்றன. இவை ஒருவகையில் மனித உளவியலில் எதிர்காலம் சார்ந்த இன்மை பற்றிய மனஅழுத்தம் என்பதை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது நாம் இல்லாமல் போகும் ஒரு காலம் பற்றிய உளவியல் அழுத்தம். இந்த ‘இன்மை நிலையின் தொடர் இருப்பு’ (perpetual presence of postulated absence) என்பது மொழியிலக்கணத்தின் வழி முழுமையாக விளக்க முடியாத ஒரு திருகல் நிலை, அதே சமயம் மொழிவழி அமைந்த காலம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுநிலை.
‘இறைவனும் இல்லை இறந்தவர் பிறவார் அறனோ டென்னை?’(மணிமேகலை) என்ற மறுத்துரைக்கும் லோகாயதக் கேள்வியும் ‘நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே’ (திருவாசகம்)என்ற முழுமையான ஒப்படைப்பும் வரலாற்றில் இணையாக அமைந்த புரிதல்கள். இவை இரண்டிற்குமே அடிப்படையாக அமைந்த குறியீட்டு நிலையான இருத்தல் பற்றிய கேள்விகளும் அழுத்தங்களுமே முடிவு காணமுடியாத மனிதப் புனைவுகளின் பெருக்கத்திற்குக் காரணமாக அமைகின்றவை.
இந்தக் குறியீட்டு நிலையிலான இருத்தலை மரணத்திற்கும் இன்மைநிலைக்கும் அப்பால் வைத்துக் கையாள்பவை சமயச் சொல்லாடல்கள். இதே குறியீட்டுநிலை இருத்தலை வாழ்வுடனும், உடலாய் இருத்தல் என்பதுடன் இணைத்து உளவியல் தளத்தில் கையாள்பவை கலையும் இலக்கியமும். சமயம், சடங்கு சார்ந்து அமைந்த இலக்கியங்கள்கூட மனித உடல்-வாழ்வு நாடகத்தன்மையின் வழியாகவே தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன. விரகபக்தி, நாயகி-நாயக பாவம் போன்று வடிங்களின் வழி அமைந்த புலன் தன்மையையும், காவிய புராணிகக் கதைவழி அமைந்த நெடும் கதைக்கூறல்களும் உடலையே தொடா்ந்து குறியீட்டாக்கம் செய்கின்றன.
உடல்சார் இருத்தலும் உடல்சார் வாழ்தலும் பற்றிய அனைத்துக் கேள்விகளையும் அரசியல் மற்றும் வரலாற்றின் தளத்தில் வைத்துப் பேசும் போதும் நாம் தவிர்க்க முடியாமல் குறியீட்டுநிலை இருத்தலைப் பற்றியே பேசுகிறோம். இதனை இன்னொரு வகையில் விளக்கும்போது நம் உடல்சார் இருத்தலுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் நமது குறியீட்டு நிலைக்கும் உள்ளது. உடல்சார் இருப்பு எப்போது தனிமனித நிலை கடந்து சமூகம், இனம் என்ற குழுநிலை அடைகிறதோ அப்போதே அது குறியீட்டு நிலையை பெற்றுக்கொள்கிறது. இதனை உருவாக்கித்தரும், இதன் உருவாக்கக் கூறுகளை அடையாளம் காட்டித்தரும் இயந்திரமாகச் செயல்படுகின்றவையே அவ்வக்கால கலைவடிவங்கள்.
‘உடல் என்பது எதன் குறியீடு’ என்ற கேள்வியைச் சற்றே ஒத்திவைத்துவிட்டு உடல் என்பதை எத்தனை வகைக் குறியீட்டுச் செயல்களாகப் பெருக்கலாம் என்றும் உடல்நிலை கடந்த எத்தனை வகை குறியீட்டு நிலைகளை நாம் நிகழ்த்திப் பார்க்கலாம் என்றும் சொல்லித்தருபவை கலை-இலக்கியச் செயல்பாடுகள். இந்தக் குறியீட்டு நிலை பற்றிய உணா்தலோ, அறிதலோ, பிரக்ஞையோ இல்லாத கலை-இலக்கிச்செயல்பாடுகள் எந்த ஒரு சமூகத்திற்கும் அடையாளம் சார்ந்த பெரும் சிதைவுகளையும் இன இருப்பு சார்ந்த கொடுங்கேடுகளையும் கொண்டுவந்து சேர்க்கின்றன.
தன் சமூகத்திற்கான பொதுஅறம் எது, தன்னை இயக்கும் அழகியல் எது, தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கான உளவியல் கட்டமைப்பு எது என்பதை அறியமுடியாத தன்மை கொண்ட சமூக மனிதர்கள் உருவாகக் குறியீட்டு நிலை அழிந்த பொது உளவியல் காரணமாகிறது. இதனைத் தமிழ்த்திரை எவ்வாறு உருவாக்கி வருகிறது, இதற்கான காட்சிநிலை உத்திகளை அது எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பதைப் பற்றியும் சில திரைப்படங்கள் இந்தக் குறியீட்டுநிலைச் சிக்கலை எவ்வாறு கையாண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் விவாதிக்க வேண்டியுள்ளது.
( இக்கட்டுரைகளில் தரப்பட்டுள்ள நூல் குறிப்புகள் நவீன மொழி மொழிக் கழகம் (Modern Language Association:2009) பரிந்துரைத்துள்ள முறையில் அமைக்கப்பட்டுள்ளன.)
நன்றி:பன்மெய்
No comments:
Post a Comment