Friday, September 06, 2013

மரணத்தில் நேசித்தவர்களே சீவியத்திலும் மறவாதிருங்கள்

-லீனா மணிமேகலை-
 

யாழ்ப்பாணத்தில் ஜூலை 20, 21 தேதிகளில் நடைபெற்ற41 வது இலக்கிய சந்திப்பை பற்றிய குறிப்புகளை எழுதும் இந்த தருணத்தில், ”நாங்கள் எல்லா தரப்புகளாலும் விசாரிக்கப்பட்டவர்கள்” என்ற ஐயா சோ.பதம்நாதனின் சொற்கள் தான் நினைவில் மோதுகின்றன. 

சிங்களப் பேரினவாதமும், ராணுவவாதத்தை மட்டுமே நம்பிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களும் குற்றவாளிகளெனவும், துரோகிகளெனவும் வேட்டையாடியது போக இன்னும் மிச்சமிருக்கும் கலைஞர்கள் உண்மைகளை இரத்தப்பலியென எழுத்தில் கழுவிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு சாட்சியாக நிற்கும் புலம் பெயர்ந்த படைப்பாளர்களின் இயக்கமான “இலக்கிய சந்திப்பு” மூன்று தசாப்தங்களைக் கடந்து புலத்தின் கரை சேர, வரலாறு சற்று நெகிழ்ந்து நிற்கிறது. 

தேசியம் குறித்த இலக்கிய சந்திப்பின் அரங்கில் பேசிய யதீந்திரா, அல்ஜீரிய சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபனானின் “தேசியம் என்பது ஒரு வெற்றுக்கூடு” என்ற கூற்றை முன்வைத்து, எப்படி தேசியம் அடிப்படைவாதிகளின் வசமிருந்தால், அவர்களுக்கு சேவை செய்யும், அது இடதுசாரிகள் வசமிருந்தால்,இடதுசாரி முகம் காட்டும், அதுவே பயங்கரவாதிகள் வசமிருந்தால் பயங்கர முகம் காட்டும் என தேசியத்தின் பண்பை நாடி பிடித்துக் காட்டினார். இன்று ஈழத்தில் தமிழ்த்தேசியம், ஐக்கிய இலங்கையில் அதிகாரப் பகிர்வு என்ற ஆரம்பகால மிதவாத தேசிய அரசியலுக்கே திரும்பியிருப்பதின் நெருக்குவாரங்களினூடே கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள் தங்கள் பற்றுக்கோள்களைக் குறித்த விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.


இன்று கொத்துக்குண்டுகள் விழவில்லையென்றாலும்,சிங்களப் பெருந்தேசியம் வடக்கின் ஒவ்வொரு அரைமைலுக்கும் தன் படையணியை நிறுத்தி மக்களை சோற்றுக்கு மட்டுமே வாய்திறக்க அனுமதி கொடுத்து வைத்திருக்கின்றது. சிங்கள காலனியாதிக்கம் - குடியேற்றம், புத்த விகாரங்கள்,தாண்டி கல்வி கலாசார தளங்களிலும் ஒருவித மூர்க்கத்துடன் நடந்துக்கொண்டிருக்கிறது. குண்டுகள் துளைத்த வீடுகளையும், காயம்பட்ட பனைகளையும் தென்னைகளையும் விளாத்திமரங்களையும், இன்னும் பிணச்சூட்டில் கொதித்துக்கொண்டிருக்கும் காணிகளையும், உடலில் தங்கிவிட்ட ஷெல்துண்டுகளால் உயிர் பிரிந்தும் பிரியாமல் நடமாடிக்கொண்டிருக்கும் சனங்களையும், சல்லடையாய் நிற்கும் பள்ளிகளையும், காணாமற் போனவர்களுக்காக காத்திருக்கும் நிலப்பாவாடைகளையும், அம்பாரம் அம்பாரமாய நகரும் துயரம்போல ஓடிக்கொண்டிருக்கும் நதிகளையும், அலையற்றுப்போன கடலையும் மீறி ”பகை மறப்பையும், கற்றுக்கொள்ள வேண்டியப் பாடங்களையும்” குறித்து படைப்பாளிகள் பேச விழைந்தது, கவிஞர் கருணாகரனின் கவிதையைப்போல “நடந்து வந்த பாதை நம் காலடியிலேயே முடிந்தது போ” என்ற உணர்வையே தந்தது. ஆனாலும் நம்பிக்கைகளைக் கேட்கின்றது காலம். கடும் சவாலானாலும் படைப்பாளிகள் காலத்தோடு சில பேரங்களை நடத்த தான் வேண்டியிருக்கின்றது. 

எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் புனரமைக்கப்பட்டபோது, அன்றைய நாளில் மேயராக இருந்தவர் தலித் என்பதால், அவர் முன்னிலையில் நூலகம் திறப்பு விழா காண்பது தடுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் “சாதி” பற்றிய அரங்கில் நினைவுகூறப்பட்டது. 

யாழ்ப்பாணமும் சாதியமைப்பும் பற்றிய பேசிய தெணியானும், மட்டக்கிளப்பின் சாதியத்தைக் குறித்து விவரித்த குமாரசாமி சண்முகமும், கல்வியில் சாதி ஒடுக்குமுறை நடைமுறைகளை விவாதித்த ஏ.சீ ஜோர்ஜும், சாதிக்கு எதிரான சனநாயக செயற்பாடுகளை டானியல் காலத்திலிருந்து இன்றுவரை பட்டியலிட்ட சீனியர் குணநாயகமும், மொத்தத்தில் நினைவுகூறல்கள் எந்த காப்புறுதிகளையும் தரவல்லவையா என்ற கேள்வியையே எழுப்பினார்கள் இனஒடுக்குமுறைக்கு எதிரான போர், அடைகாத்துக்கொண்டிருந்த சாதிய ஒடுக்குமுறை இன்று குஞ்சுப் பொரித்துக்கொண்டிருக்கிறது என்று அவதானித்த ஐயா தெணியான், விடுதலைப்புலிகளின் அரசியல் விளக்க ஏடு சாதியை பேசக்கூடாது என்று சொன்னதே தவிர சாதிஒழிப்பை முன்னெடுக்கவில்லை என்ற காட்டமான விமர்சனத்தை வைத்தார். தமிழனுக்கு ஈழம் கிடைத்தாலும்,கரையார் தோணி/ வமலர் மத்து/துலுக்கர் தொப்பி/வேதியர் பூநூல்/ காராளர் கலப்பை/வண்ணார் கல்/வேடுவர் வில்லம்பு/வாணிபர் செக்கு/ முற்குகர் எழுத்தாணி/கடையற் கூடை/ கோவிலார் கமல் மலர் /வேந்தர் செங்கோல்/ பண்டாரப்பிள்ளை கைப்பிரம்பு/ வள்ளுவர் மேளம் /திமிலர் பால்முட்டி/ குயவன் குடம் / சேணியர் நூலச்சி /தட்டார் குறடு / அமலர் தேர்க்கொடி/சாணார் குத்து / அம்பட்டர் கத்திரிக்கோல் / செட்டி தராசு (உதவி திரு.கு.சண்முகம்),என குடிவகுப்புகளுக்குரிய குலவிருதுகளைப் பாடியபடி தான் இருப்பான் போலும்.ஆலயப்பிரவேசம், விவாக மறுப்பு போன்ற ஆரம்பபடிநிலையிலேயே சென்றுக்கொண்டிருந்த விவாதநேரமும், இலக்கிய சந்திப்பின் பெரும்பாலான இண்டெலக்சுவல்கள் பெரியாரையும் அம்பேத்காரையும், ஏன் “தலித்” என்ற சொல்லாடலையும் கூட ஏதோ இந்திய இறக்குமதி போன்ற அசூயையுடன் அணுகியதும், சாதி ஒழிப்புக்கான சிந்தனைமட்டமும், வேலைத்திட்டங்களும் இலங்கையில் வெறும் ஆரம்ப படிநிலையிலேயே இருப்பதை உணர்த்தியது. ஆனால், “உங்க ஊரு மாதிரி இங்கே இளவரசன்கள் கொல்லப்பட மாட்டார்கள்” என்ற செய்தி எனக்கு அவசரமாக சொல்லப்பட்டது. பிரதானமாயிருக்கும் இனமுரண் சூழலில் பதுங்கியிருக்கும் சாதிமுரண், இரைதேட புறப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை என்னால் அரங்கின் கால மட்டறுப்பால் அங்கு பதிவு செய்ய முடியவில்லை. 

இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளராய் அழைக்கப்பட்ட லிவிங் ஸ்மைல் வித்யா, தாங்கள் தேசமிருந்தும் பாலின அகதிகளாக வாழ்வதைப் பற்றி உரையாற்றியது, “திருநங்கைகள்” தங்கள் அடையாளத்தைக்கூட வெளிப்படையாக சொல்லிவிட முடியாத யாழ்ப்பாண சூழலை உலுக்கிப் போட்டது.”திருநங்கைகளின் அடிப்படை வாழ்வு, உடல்,பாலியல் விழைவுகள், அடையாள அரசியல்” என அரங்கிற்குப்பின்னான விவாதக்களத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும், வித்யா சொன்ன பதில்களும்,படைப்பாளிகளிடையே நிலவும் பாலியல் சிறுபான்மையினர் குறித்த அறிதல் போதாமைகளை இட்டு நிரப்பியது. சந்திப்பிற்கு சென்று வந்த அனுபவங்களை“ஆண்களான நீங்கள்ஏன் புடவை கட்டி நிற்கிறீர்கள் என அவமானப்படுத்தி 5திருநங்கைகளை பேருந்து நிலையத்தில் சுட்டுக்கொன்ற ஒரு தேசத்தில்பெண் தன்மையோடு இருந்ததால் ஏளனப்படுத்தி இயக்கத்தில் சேர்க்க மறுத்த ஒரு தேசத்தில் திருநங்கைகளை குறித்த புரிதலை இயன்ற மட்டில் செய்வது எனது தார்மீக கடமை”என்று முகநூலில் வித்யா பதிவிட, சர்ச்சைகள் கொடி கட்டி பறந்தன. யதீந்திரா சொன்னதுபோல தேசியம் என்ற வெற்றுக்கூடு அப்போது கலாசாரக் காவலர்களிடம் அகப்பட்டுக்கொண்டது. 

“சீமைக்கு போறமுன்னு / சிணுங்காத எம்மவளே /கடல்தாண்டி போறமுனு /கலங்காதடி ராசாத்தி /சிங்களவன் ஊர்போயி /சீக்கிரமா வாருமடி/ ” போன்ற மலையக நாட்டார் பாடல் வடிவங்கள் தான் மலையக இலக்கியத்தின் தோற்றுவாய் என்ற தன் ஆய்வுரையை வாசித்த மல்லியப்பு சந்தி திலகர்,” ‘நீ பார்த்து சலிக்காத/பொருளென்ன’ என்று நீர்/ எனைக் கேட்டால்/ நான் சொல்லும் பதிலிது தான்/ குளிர்மேகம் வாடியிடும் நக்கிள்ஸின் தொடர்கள் தான்/ நான் பார்த்து சலிக்காத பொருள்” என்பேன் நான்” என நீளும் அரு.சிவானந்தனின், 70 களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஒட்டுமொத்த மலையக மக்களின் அழுகுரலாக ஒலிக்கும் “சென்றுவருகிறேன் ஜென்மபூமியே” என்ற கவிதையிலிருந்து தொடங்குகிறது புலம்பெயர் இலக்கியம் என்றார். லெனின் மதிவானத்தின் “ஊற்றுக்களும் ஓட்டங்களும்” திறனாய்வு நூலையும் பேராசிரியர் செ.யேசுராசாவின் கட்டுரைகளையும் சான்றாக முன்வைத்து, மீனாட்சியம்மையை ஈழத்தின் முதல் பெண் கவிஞரெனவும் முன்னிறுத்தினார் திலகர். சிவரமணி தொடங்கி சர்மிளா செய்யித் வரையிலான ஈழப்பெண் படைப்பு வரலாற்றைக் கட்டுடைத்து, “பெண்கள் சொல்லும் சேதிகளைப்” பேசிய சித்ரலேகா மெளனகுரு, ஈழத்தில் துவக்கு தூக்க அனுமதிக்கப்பட்ட பெண்கள் எப்படி அரசியல் விமர்சனம், பாலியல் மதம் போன்ற “விலக்கப்பட்ட” பொருள் குறித்து கவிதைகள் எழுத அனுமதிக்கப்படுவதில்லை என்பதை விவாதித்தார். யுத்த நெருக்குவாரங்களிடையே ”கொலை அரசியல்” விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ”பாலியல் வன்முறை” அரசியல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு கிருஷாந்தி, கோணேஸ்வரிகள் என ஒன்றிரண்டு கவிதைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. சிங்களப் பேரினவாதம், இந்திய அமைதிப்படை, இயக்கப் பூசல்கள் என எல்லா அதிகாரமும் பெண்ணின் உடலை வன்முறைக்கானக் களனாகப் பயன்படுத்தியிருப்பதைப் புள்ளிவிவரங்களால் கணித்துவிடவோ, விசாரணை செய்துவிடவோ முடியாதென்பதே சொல்லப்படாத சேதி. 

”அசன்பே சரித்திரம்” ஒரு முஸ்லிமால் எழுதப்பட்டதால், ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றின் முதல் புதினமாக அங்கீகரிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றதா என்று வினவினார் முஸ்லீம் தேசிய இலக்கியம் பற்றிப் பேசிய நவாஸ் செளபி. தொடர்ந்து “முஸ்லீம் பண்பாட்டுருவாக்கங்களும், அண்மைக்கால நெருக்கடிகளும்” என்ற விவாதப்புள்ளியில், இத்ரீஸுடன் இணைந்த அரங்கம், சிங்களப் பேரினவாத அரசாங்கம் பொதுபலசேனா(Bodhu Bala Sena) போன்ற அமைப்புகளின் மூலம் இஸ்லாமிய சமூகத்தை தொடர்ந்து அச்சுறுத்தியும் தாக்கியும் வருவதை கண்டனம் செய்தது.இனங்களுக்கிடையே வேற்றுமைகளைக் களைந்து சமரச நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடங்கப்பட்டால் சிங்கள பெரும்பான்மை தமிழர்களிடம் மன்னிப்புக் கோருவதோடு, தமிழர்கள் இஸ்லாமிய சமூகத்திடமும் மன்னிப்பு கோரவேண்டிய வரலாற்றுத் தேவையை அவை ஆமோதித்தது. அரசியல் மற்றும் கலாசார அலகுகளுடன் இன்று உருப்பெற்றிருக்கும் முஸ்லீம் தேசியம் ஈழப்படைப்பிலக்கியத்திலும் தனித்துவத்தைப் பெற்றிருக்கிறது. 

பன்மைத்துவத்தை மிக சிரத்தையுடன் நிரல்படுத்திய41வது இலக்கிய சந்திப்பு, சிங்கள நாவலாசிரியர் லியனகே அமரகீர்த்தியையும், வரலாற்றாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிறியையும் அழைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. சிங்களப்புனைவிலக்கியத்தில் தமிழ் கதாபாத்திரங்கள் பற்றி பேசிய அமரகீர்த்தி,சிங்களப் படைப்பாளிகளிடையே தென்படும் குற்றவுணர்வென்பது மிக மெல்லியது எனவும்,காதலைப் பகிரத் தயாராக இருக்கும் அவர்கள் தேசத்தைப் பகிரத் தயாராய் இல்லை என்ற விமர்சனத்தை வைத்தார். சிங்களப் பொதுமக்களை ராணுவ இலக்குகளாக மாற்றிய புலிகளின் தன்மோகத் தமிழ்தேசியம், சுதந்திரவாத சிங்களப் படைப்பாளிகளையும் எதிர்நிலையில் நிறுத்திவிட்டதெனவும் பதிவு செய்தார். சிங்களப் பெருந்தேசியத்தின் வரலாற்றின் மீது ஆழமான விமர்சனப் பார்வையை வைத்த நிர்மால், இன்று அதன் ஆகக்கோரவடிவமாக உருப்பெற்றிருக்கும் ராஜபக்சேவை வீழ்த்துவது தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல், சிங்களப் பெரும்பான்மையினருக்கும் அத்தியாவசியமானது என்று பேசினார். சந்திப்பு நடந்த சில வாரங்களில் சிங்களப் பகுதியில் ரப்பர் கையுறை தொழிற்சாலையால் மாசுபடும் நன்னீர்நிலைகளைக்காப்பாற்றக்கோரியும் சுத்தமான குடிநீர் கோரியும் போராடிய வெலிவேரியா மக்கள்மீதுஇராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர்கள்வரை கொல்லப்பட்டார்கள். வடக்குக்கிழக்கில் மட்டுமல்ல முழு இலங்கையிலும் இராணுவநீக்கம் அவசியம் என்ற நிர்மாலின்கருத்தையே இந்நிகழ்வு உணர்த்துகிறது. இனவாத துப்பாக்கிகளின் அதிகாரத்திற்கெதிராக சிங்கள மக்களும், தமிழர்-முஸ்லீம் –மலையகத் தமிழர் சிறுபான்மையினரும் அணிதிரள்வதை காலம் நிர்ப்பந்திக்கும்.  

ஷோபாசக்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்ட,பன்னிரெண்டு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட எழுபத்தியைந்துக்கும் மேலான பனுவல்களைத் தொகுத்திருக்கும் குவர்னிகா – 41வது இலக்கிய சந்திப்பு மலர், கருணாகரன், தமயந்தி, பானுபாரதி, நவீன் குழுவினரின் அயரா உழைப்பால் சாத்தியப்பட்டு,கருப்பு பிரதி வெளியீடாக வந்திருக்கிறது. சுல்பிகா,சுமதி ரூபன், அசுரா, தேவதாசன், ராகவன், ஸ்ராலின்,விஜி, நிர்மலா என்று ஐரோப்பிவிலிருந்தும் கனடாவிலிருந்தும் வந்திருந்த படைப்பாளிகளும் செயற்பாட்டாளர்களும் இலக்கிய சந்திப்பு என்ற இயக்கம் மிகக்கடுமையான தணிக்கைச் சூழலையும் கடந்து, உயிர்ப்பலிகளையும் தாண்டி இன்று யாழ்ப்பாணத்தில் 41வது பதிப்பாக உரையாடல் களம் பெற்றிருப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை உளநெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக்கொண்டனர். ரியாஸ் குரானா, சுமதி சிவமோகன், குணேஸ்வரன், லெனின் மதிவாணம், சிராஜ் மசூர்,சோமேசசுந்தரி, தேவகெளரி, அஷ்ரஃபா நூர்தீன், விஜயலட்சுமி, ஞானசக்தி நடராசா,துஷியந்தினி, என்று கிழக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், மலையகத்திலிருந்தும் இலக்கிய சந்திப்பில் பங்குகொண்ட ஒவ்வொருவரும், சந்திப்பை நெறிப்படுத்திய கருணாகரனும், ஒருங்கிணைப்பில் உதவிய திருவரங்கன், அகல்யா என்ற இளைய தலைமுறையினரும், சிவில்சமூகம் மேலெழும்புவதையே வருங்காலத்திற்கான நம்பிக்கையாக மீண்டும் மீண்டும் வெவ்வேறு சொற்களின் மூலம், வாக்கியங்களின் மூலம், கருத்துக்களின் மூலம் முன்வைத்தனர். 

கலை-இலக்கிய-பெண்ணிய- ஊடக –பண்பாட்டு – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அனைத்து தரப்புகளாலும் வஞ்சிக்கப்பட்டு, அனாதரவாய் சந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் சனத்திற்கு நீதியைப் பெற்றுத்தரும் பொறுப்பை ஏற்கவேண்டிய அவசியத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த 41வது இலக்கிய சந்திப்பு அறிவித்திருக்கிறது.

நன்றி:தீராநதி, பிறத்தியாள்

No comments: