-அ.மார்க்ஸ்-
சாக்கடைக் குழாய்க்குள்ளிருந்த பெருச்சாளி ஒன்றை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொன்றதைப் போல் கர்னல் கடாஃபியை கலகப் படையினர் கொன்று போட்டுள்ளனர். அமெரிக்கத் தலைமையில் இயங்கும் ‘நேடோ’ படைகளின் உதவியோடு இது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு செத்த நாயைப்போல அவர் உடல் இழுத்துச் செல்லப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டதையும், சதாம் உசேன் அல்லது சீசெஸ்கு வீழ்த்தப்பட்டபோது மக்கள் "மகிழ்ச்சி அடைந்த" காட்சிகள் எவ்வாறு காட்டப்பட்டனவோ அதேபோல இன்று கடாஃபியின் கொலையை மக்கள் கொண்டாடடியதையும் ஊடகங்களில் பார்த்தோம்.
அராபிய வசந்தம் எனச் சொல்லப்படும்
சமீபத்திய அரபு மற்றும் வடக்கு ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகளில் லிபிய எழுச்சி சற்று வித்தியாசமானது. 42 ஆண்டுகள் சர்வ அதிகாரங்களுடனும் ஆட்சி புரிந்த இச் சர்வாதிகாரி ஒரு இரத்த விளாறான போரில் கொல்லப்பட்டது என்ற அம்சம் தவிர, இந்த வித்தியாசத்திற்கு வேறு இரு பரிமாணங்கள் உண்டு. துனீசியா ஆகட்டும், எகிப்தாகட்டும் இந்த நாட்டுச் சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்பட்டதில், அந்நியத் தலையீடு, குறிப்பாக மேற்குலகத் தலையீடு கிடையாது. லிபியாவிலுங்கூட கிளர்ச்சிக்காரர்கள் தொடக்கத்தில் மேற்குலகத் தலையீட்டை எதிர்த்தனர். ஆனால் விரைவில் மேற்குலக நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் பணிய நேரிட்டது. ஐ. நா பாதுகாப்பு அவையின் ஒப்புதலோடு முதலில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கத் தலைமையில் நேட்டோ படைகள் களம் இறங்கின. கடாஃபி கொல்லப்பட்டது கூட நேடோ படைகளின் உதவியோடுதான் நடந்துள்ளது. தனது சொந்த ஊரில் தஞ்சம் புகுந்திருந்த கடாஃபியும் அவரது விசுவாசிகளும் சென்று கொண்டிருந்த ‘கன்வாய்’ நேடோ விமானங்களால் தாக்கப்பட்டுப் படுகாயமுற்று ஒரு சிமென்ட் வடிநீர்க் குழாயில் ஒளிந்திருந்த போதுதான் கிள்ர்ச்சியாளர்களால் அவர்கள் கொல்லப்படுள்ளனர்.
காலங்காலமாகத் தன் கட்டுக்குள் இருந்த அரபு நாடுகள், மக்களின் தன்னெழுச்சியான போரட்டங்களின் ஊடாகக் கைநழுவிப் போனதால் கலக்கமுற்றிருந்த அமெரிக்காவும் இதர மேற்குலக நாடுகளும் இந்தத் தலையீட்டினூடாக மீண்டும் தம் அதிகாரத்தை நிறுவியுள்ளன. சர்வாதிகாரங்களுக்கு எதிரான மக்களின் ஜனநாயக வேட்கையையும், தன்னெழுச்சியையும் அவை திருடிக்கொண்டன. இவ்வகையில் இன்று லிபியாவை மட்டும் தேர்வு செய்து தலையிட்ட வகையில் அரபுலக எழுச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் அவை வெற்றி பெற்றுள்ளன.
மற்ற அரபுலக எழுச்சிகளிலிருந்து லிபியா வேறுபட்ட இன்னொரு புள்ளியும் உண்டு. இங்கு மட்டுந்தான் ஒரு குறிப்பிட்ட அளவு சர்வாதிகாரிக்கு விசுவாசமான மக்களும் களத்தில் இறங்கி போராட்டக்காரர்களுடன் மோதினர். மேற்கத்திய இராணுவ உதவி இருந்தும் கூட கடாஃபியை வீழ்த்துவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டதற்கு இதுவே காரணம். முஸ்லிம் நாடுகளின் பிரச்சினைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல. ஒரு நாட்டில் ஷியா, சன்னி என்கிற வேறுபாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கலாம். இன்னொரு முஸ்லிம் நாட்டில் வேறு வகையான முரண் மேலுக்கு வரலாம். லிபியாவைப் பொருத்தமட்டில் குலமரபு விசுவாசம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சி லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காஸியிலிருந்தே கிளம்பியது. பெங்காஸியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னர் இத்ரிசின் ஆட்சியைக் கவிழ்த்தே அதிகாரத்தைக் கைப்பற்றினார் அன்று இருபத்தியேழே வயதாகியிருந்த கர்னல் கடாஃபி. கடாஃபி மேற்கேயுள்ள சிர்டே பகுதியைச் சேர்ந்த கதாத்ஃபா என்கிற பழங்குடியைச் சேர்ந்தவர். இந்தப் பழங்குடியைச் சேர்ந்தவர்களுக்கே பெரிய அளவில் அதிகாரங்களையும், பதவிகளையும் கொடுத்துத் தன்னை சுற்றி கவசம் அமைத்திருந்தார் கடாஃபி. இவர்கள்தான் கடைசிவரைக்கும் அவருக்கு விசுவாசமக இருந்து அவரைக் காக்க முனைந்தவர்கள்.
முற்றிலும் ஜனநாயகமற்ற கொடுங்கோல் ஆட்சியை நடத்திய கடாஃபி இதற்கெதிரான எல்லா எதிர்ப்புகளையும் மிகக் கொடுமையாய் ஒடுக்கினார். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டார்கள். சிறையிலடைக்கப் பட்டார்கள். 1996ம் ஆண்டு அபு சலீம் சிறையிலிருந்த 1200 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட செய்தி அவர்களின் குடும்பத்திற்கும் தெரிவிக்கப் படாததால் பல ஆண்டு காலம் நெருங்கிய உறவினர்கள் மதந்தோறும் சிறைக்கு வந்து பார்க்க முடியாமல் ஏமார்ந்து திரும்பிய சோகக் கதையை புலம் பெயர்ந்து வாழ்கிற லிபிய எழுத்தாளர் முஹம்மத் மெஸ்ராதி குறிப்பிடுகிறார்.
இன்னொரு பக்கம் லிபியாவில் குவிந்துள்ள மாபெரும் எண்ணை வளம் குறித்த உணர்வையும் பெருமிதத்தையும் மக்கள் மத்தியில் உருவாக்கிய கடாஃபி அதை பிற முஸ்லிம் அரசுகளைப்போல் மேற்கு நாடுகள் கையகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கவில்லை. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடன் அவரது உறவு 2002 வரை கடும் மோதல் தன்மையுடனேயே இருந்தது. எண்ணை வளத்தால் வந்த வருமானத்தைக் கொண்டு லிபியாவில் கல்வி, மருத்துவம் மற்றும் அகக்கட்டுமானங்கள் பெரிய அளவில் வளர்க்கப்பட்டன. வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டன. பெரிய அளவு அந்நியச் செலாவணியாகக் கையிருப்பில் வைக்கப்பட்டதன் விளைவாக, மேற்குலக நாடுகள் லிபியாவின் மீது விதித்த பொருளாதாரத் தடைகள் பயனற்றுப்போயின. தவிரவும் லிபியாவிலிருந்து குழாய்கள் வழியாகப் பாய்கிற எண்ணையை ஒருசில நாட்கள் நிறுத்தி வைத்தால் மேற்குலகப் பொருளாதாரமே ஆட்டங்கண்டு விடும் என்கிற நிலையையும் கடாஃபி ஏற்படுத்தினார்.
இதன் விளைவாகவே 80களில் அமெரிக்கப் படைகளை பெர்லினில் தாக்கியபோதும், ‘பான் அம்’ விமானத்தை லாகெர்பீயில் வீழ்த்தி 270 பேர்களைக் கடாஃபி கொன்றபோதும் ரொனால்ட் ரீகனால் “வெறி நாய்” என்று திட்டவும், அவர் வீட்டின் மீது விமானத்திலிருந்து குண்டுகள் வீசவுந்தான் முடிந்ததே ஒழிய பெரிய அளவு தாக்குதல் எதையும் செய்ய இயலவில்லை. 1999க்குப் பின் மாறியுள்ள உலகச் சூழலை கடாஃபி மட்டுமின்றி மேற்குலகத் தலைவர்களும் புரிந்து கொண்டதால் பரஸ்பரம் நெருக்கமாயினர். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் அணுகுண்டு செய்யக்கூடிய லிபிய நாட்டுச் சாத்தியங்களை கடாஃபி அழித்துக் கொண்டார். ஒசாமா பின் லேடனை ஒழித்துக் கட்டுவதிலும் லிபியா ஒத்துழைக்க இசைவளித்தது.
எல்லாச் சர்வாதிகாரிகளையும் போலவே கடாஃபியும் குடும்ப ஆட்சியையும், ஏராளமான சொத்துக் குவிப்பையும் ஏற்படுத்திக் கொண்டார். அவரது அரசியல் வாரிசாக முன்நிறுத்தப்பட்டவரும், “கடைசிக் குண்டு இருக்கும் வரை கிளர்ச்சியாளர்களச் சுடுவேன்” என்று இரண்டு மாதங்களுக்கு முன் சூளுரைத்தவருமான கடாஃபியின் மகன் சைஃப் அல் இஸ்லாம் இன்று புதிய ஆட்சியாளர்களால் தேடப்படுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன் லண்டனில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்த இவருக்கு தந்தை கடாஃபி மெற்கு லண்டனில் ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார். அதன் விலை 10 மில்லியன் பவுண்ட். சாகும்போது கடாஃபியின் கையிலிருந்தது ஒரு தங்கத் துப்பாக்கி எனச் சொல்லப்படுகிறது. கடாஃபியுடன் சுட்டுக் கொல்லப்பட இன்னொரு மகன் முடாஸிம் லிபியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர். நேடோ குண்டு வீச்சில் சென்ற ஏப்ரல் 30 அன்று தனது மூன்று பிள்ளைகளுடன் கொல்லப்பட்ட இன்னொரு மகனின் பெயர் சைஃப் அல் அராப். மற்ற பிள்ளைகள் இன்று தப்பி ஓடியுள்ளனர்.
அமெரிக்காவும் நேட்டோவும் ஐ. நா பாதுகாப்பு அவையும் லிபியாவின் மீதான இந்தத் தாக்குதலை “மனிதாபிமானத் தலையீடு” என்கிறார்கள். அதாவது கடாஃபியின் படைகளால் மக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான தலையீடாம். இதே நேரத்தில் சிரியாவிலும் யேமனிலும் பதவி விலக மறுக்கும் சர்வாதிகாரிகள் அஸ்ஸாத்தும் சாலிஹும் கிளர்ச்சியாளர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் ராஜபக்சேயின் படைகள் தமிழர்களைக் கொன்றன. இதிலெல்லாம் மனிதாபிமானத் தலையீட்டைச் செய்வதற்கு இவர்களுக்கு மனம் இருக்கவில்லை.
இவர்களால் கொல்லப்பட்ட சர்வாதிகாரிகள் அது சதாம் உசேனாக இருக்கட்டும் அல்லது கர்னல் கடாஃபியாக இருக்கட்டும் அவர்களுக்கு ஆதரவாக நின்று, உள் நாட்டு எதிர்ப்புகள் குறித்த உளவுத் தகவல்களை எல்லாம் தந்து உதவியவர்கள்தான் அமெரிக்காவும் இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளும். யாருக்கு எதிராக நேற்று உளவுத் தகவல்களை எல்லாம் தந்து உதவினார்களோ இன்று அவர்களுக்கு ஆதரவாக நின்று முன்பு உதவியவர்களைக் கொல்லுகிறார்கள். அவர்களது அகராதியில் எதிரியும் நண்பர்களும் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப எல்லாம் மாறும்.
கடாஃபிக்குப் பிறகு லிபியாவில் உருவாகப் போகும் ஆட்சி எப்படி இருக்கும்? நிச்சயமாக அது ஈராக்கிலும் ஆஃப்கானிலும் உருவாக்கப்பட்டுள்ள பொம்மை அரசுகளாகத்தான் இருக்கும். அதன் அரசியலை மட்டுமல்ல எண்ணை வளத்தின் பயன்பாட்டையும் தீர்மானிக்கப் போவது ஒபாமாவும், சர்கோசியும், கேமரூனாகவுந்தான் இருக்கப்போகிறார்கள்.
கடாஃபியைக் கொன்றது லிபியக் கிளர்ச்சியாளர்களாக இருக்கலாம். ஆனால் வென்றதென்னவோ அமெரிக்கர்களும் மேற்கு ஐரோபியர்களும்தான்.
1 comment:
சரியாக சொன்னீங்க சார்
இன்னைக்கு ஐநா சொல்லுது,
கடாபி ஐ கொன்றது போர் குற்றமே ...அப்படின்னா உண்மையிலேயே கடாபிய கொன்னது நேட்டோ படைகள் தானே
அப்போ நேட்டோ படைகள் மீது ஐநா நடவடிக்கை எடுக்குமா ??
மேற்குலகின் கைப்பாவை தானே ஐநா .
டம்மி ஐநா , இருந்தால் என்ன , போனால் என்ன !!??
....
Post a Comment