Saturday, October 22, 2011

ச.தமிழ்ச்செல்வனுடன் நேர்காணல்


‘‘எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட்''  -ச.தமிழ்ச்செல்வன்-

 நேர்கண்டவர் : பேராச்சி கண்ணன்

ச.தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர். தற்போது மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருளும் ஒளியும், அரசியல் எனக்கு பிடிக்கும் உட்பட முப்பது நூல்களை வெளியிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் இவர், தமிழகம் முழுவதும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருப்பவர். தமுஎகச மற்றும் இடதுசாரிகளின் பங்களிப்புகள், முற்போக்கு எழுத்து உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பேராச்சி கண்ணனிடம் தெளிவாகப் பதிலளிக்கிறார்
தமிழின் நம்பிக்கை அளிக்கும் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானவர் நீங்கள். பிறகு முற்றிலும் களச்செயல்பாட்டாளராக மாறிவிட்டீர்கள். ஏன் இந்தத் தேர்வு?
எல்லா மனிதர்களுக்குமே புறச்சூழல் தான் அகத்தூண்டுதலைத் தீர்மானிக் கிறது. என்னுடைய வாழ்க்கையில் புறச்சூழல் தூண்டுதல்தான் எழுதக் காரணமானது. எழுத்து முக்கியம்தான். ஆனால் அதைவிட களப்பணி முக்கியமானதாக இருக்கிறது.
இது ஒரே நாளில் எடுத்த முடிவல்ல. எழுதிக் கொண்டே களப்பணி செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் களப்பணியே அதிகமாகிவிட்டது. படைப்பாளியின் நோக்கம் மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதுதான். நாம் பார்த்த கண்டடைந்த வாழ்வனுபவங் களை சகமனிதர்களுக்குச் சொல்வது தானே எழுத்து. இருந்தும் கதை வழியாகச் சொல்வதைவிட, நேரடியாகச் சொல்வது உடனடி தேவை என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. மேலும் சுதந்தரத்திற்குப் பிறகு நடந்த மாபெரும் பண்பாட்டு இயக்கம் அறிவொளி இயக்கம். அப்படிப்பட்ட மக்கள் இயக்கம் அழைக்கும்போது வீட்டில் சும்மா இருக்கமுடியாது. அதனால் களப்பணிக்கு வந்தேன். இப்போது நேரமின்மையால் எழுத முடியவில்லை. ஆனால் நான்கு இரவுகள் கிடைத்தால் போதும் ஒரு சிறுகதை எழுதிவிடுவேன்.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் போனதில் வருத்தம் உண்டா?
கதை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் ஒவ்வொரு நாளும் எனக்குள் இருக்கிறது. நாம் யார் என்ற அடையாளம் இருக்கிறது. எனக்கு சிறுகதை எழுத்தாளர் என்ற அடையாளம் உள்ளது. ஆனால் நேரம் தான் போதுமானதாக இல்லை. இப்போது நிறைய பேர் எழுத வந்துள்ளனர். இது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம். ஆனால் மின்னணு ஊடகம் வந்த பிறகு மக்களின் வாசிப்புத்திறன் குறைந்துள்ளது. நல்ல நூல்களை வாசிக்கும் வாசகர்கள் குறைந்துவிட்டனர். இப்போது மேலோட்டமாக வாசிக்கும் மனநிலை வாசகர்களிடையே உள்ளது. இது ரிமோட் கண்ட்ரோல் மனநிலை. சுவாரசியமான சேனல் பார்க்கலாம்; இல்லையெனில் மாற்றிவிடலாம். ஆனால் அதேநிலையில் புத்தகங்களையும் மேற்கொள்ள முடியாது. உள்ளே போனால் படித்து தான் ஆகவேண்டும். அதற்கான காலம் எடுத்துதான் வாசிக்கவேண்டும். மேலும் தற்போது வெகுஜன இதழ்களில்கூட கதைக்கான இடம் என்பது இல்லாமல் போய்விட்டது. சில இதழ்களில் ஒரு பக்க கதை மட்டும் போடுகின்றனர். காரணம் சந்தையில் மதிப்பு இல்லை என்பதுதான். சீக்கிரம் சலிப்படைவது என்பது இன்றைய காலத்தின் மனநிலையாக இருக்கிறது.

ஒரு கலாச்சார இயக்கமாக தமுஎகசவின் செயல்பாடுகள், தமிழகத்துக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் பற்றிக் கூறுங்களேன்?
தமிழ்நாட்டில் ஏழே கால் கோடி பேர் உள்ளனர். அதில் சில லட்சம் பேர்களைத் தொடுபவர்களாக நாங்கள் இருக்கிறோம். தமுஎகச தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சி. அந்தந்த நேரத்தில் மனச்சாட்சி என்ன பேசுமோ அதை எழுத்தாளர்கள் பேச வேண்டும். எழுத்தாளர்கள் என்ன பேசவேண்டும் என்பதை தமுஎகச சொல்லிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக விவசாயிகள் தற்கொலைகள் நடக்கும்போது, அதைப் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்கிறோம். எந்த ஊடகமும் சாதாரண விவசாயிகள் பற்றியோ, தொழிலாளிகள் பற்றியோ பேசுவதில்லை. முதல் பக்கத்தில் அவர்களைப் பற்றிய முக்கியமான செய்திகூட போடுவதில்லை. நாங்கள் மக்களின் மனச்சாட்சியாக இருந்து அதைப்பற்றி பேசுகிறோம். அன்று 35 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 21 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்தளவு வளர்ச்சி உள்ளது. பங்களிப்பைப் பொறுத்தவரை கலை இலக்கிய இரவு என்ற பண்பாட்டுத் திருவிழாவை நடத்து கிறோம். அதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் திறன் வாய்ந்தவர்களை அந்த மேடையில் ஏற்றுவோம். அடுத்து தெரு சினிமா இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளோம். நல்ல திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றை தெருக்களில் போட்டுக் காண்பிப்பது. இதன் மூலம் மக்களின் சினிமா ரசனையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அடுத்து நாட்டுப்புற ஆய்வுகள் இயக்கம் தொடங்கி யுள்ளோம். 1960&ல் ஜீவானந்தம் தலைமையில் பேராசிரியர் நா.வானமாமலை பொறுப்பில் நாட்டுப்புற இலக்கியங்களை, கலைகளை தொகுத்து வளர்த்தெடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அதில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. இவை எத்தனையோ மாவட்டங்களில் தொகுக்கப்படாமல் உள்ளன. விடுகதை, சொலவடை, நாட்டுப்புறக் கதைகள், பொருட்கள் சார்ந்த பண்பாடு என நிறைய பிரிவுகள் உள்ளன. இதில் எப்படி ஆய்வு செய்வது, தொகுப்பது என்பது பற்றி பயிற்சி கொடுத்துள்ளோம். அடுத்து உள்ளூர் வரலாறு எழுத பயிற்சி கொடுக்கிறோம். இதையெல்லாம் தமுஎகசவால் மட்டுமே செய்யமுடியும். நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியம் கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதற்கு தமுஎகசவின் போராட்டம்தான் காரணம்.

கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமாய் பயணம் செய்து இருக்கிறீர்கள். தமிழகம் எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?
தமிழகத்தில் இளைஞர்கள், இளம் பெண்கள் யாரும் சொந்த ஊர்களில் இல்லை. ஏனெனில் பிழைப்பிற்கு இங்கே வழியில்லை. பிழைப்புத் தேடி இடம் பெயர்ந்து அலைகின்றனர். நான் பார்த்த பெரிய துயரம் இது. அடுத்த துயரம் அழிக்கமுடியாத சாதிய உணர்வு. அது மக்களிடையே இறுகிப் போய் உள்ளது. சிறுபான்மையினராக இருக்கும் மக்களான அருந்ததியினர், அரவாணிகள் எல்லோரும் தங்கள் குரலை வலுவாக உயர்த்தி வெளிவந்துள்ளனர். மாற்றுத்திறனாளி கள் இன்று ஒருங்கிணைந்துள்ளனர். ஒடுக்கப்பட்ட அனைவரும் இன்று வெளிவந்துள்ளனர். அடுத்து அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கம் குறைந்துவிட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த முறையில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற, அறிவில்லாத நாற்கர சாலைகள் வந்துள்ளன. இதனால் கிராமங்கள் துண்டாகிக் கிடக்கின்றன. இதில் சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அடுத்து தமிழகத்தில் குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. தொழிலாளிகள், படைப்பாளிகள், இளைஞர்கள் என அனைவரும் போதைக்கு அடிமையாகியுள்ளனர். ஏனெனில் பிரச்னைகள் அதிகமாகி விட்டன. பிரச்னைகளைச் சமாளிக்க தெரியாமல் அல்லாடுகின்றனர். பொருளாதாரப் பிரச்னைகளை பண்பாட்டுத் தளத்தில் வைத்துத் தீர்க்க முயற்சி செய்கின்றனர். இதனால் அதிலிருந்து தப்பிக்க போதைக்கு அடிமையாவதும், கோவிலுக்குச் செல்வதும், சினிமாவிற்குச் சென்று மகிழ்ச்சியாக இருப்பதும் அதிகரித்துள்ளது.

அறிவொளி இயக்கத்தில் உங்கள் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
 அறிவொளி இயக்கம்தான் கல்வி என்பது முக்கியம் என்பதை மக்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக உணர்த்திய இயக்கம். அறிவொளி இயக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் படிக்காதவர்கள். முதியோர் கல்வி என்பது வேறு. அறிவொளி இயக்கம் என்பது வேறு. நாங்கள் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்த்து நடத்தினோம். ஏனெனில் இவர்கள்தான் நாளைய பெற்றோர். இவர்கள் படிக்கமுடியவில்லை என்றாலும் அவர்களது குழந்தைகளின் கல்வியை உணர்த்தினோம். இதனால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகமானது. பள்ளிகளின் தேவையும் அதிகமானது. கல்வி குறித்து மக்களிடையே அக்கறை ஏற்பட்டது. பள்ளிகள் ஏன் இப்படி இருக்கின்றன என்ற கேள்வியையும் மக்களிடையே எழச் செய்தது. கல்விக்காக இன்று வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்கள் வந்ததற்கு அறிவொளி இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம். இதனால் அரசும் பல திட்டங்களை வகுத்தது. தமிழகம் முழுவதும் கல்வி சம்பந்தமான நிறைய மாற்றங்கள் வந்தன.
தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களுக்கு இருந்த செல்வாக்கு இப்போது இல்லாமல் போய்விட்டதே... என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
இடதுசாரி இயக்கங்கள் இன்று நிறையவே வளர்ந்துள்ளார்கள். ஆனால் மற்ற கட்சிகள் அதைவிட வேகமாக வளர்ந்துள்ளன. காரணம் இடதுசாரிகள் உண்மையான, அடிப்படையான பொருளாதார மாற்றத்திற்குப் போராடி வந்தனர். ஆனால் மக்கள் பண்பாட்டு ரீதியாகப் பேசுபவர்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டு ரீதியான விஷயங்களில் இடதுசாரிகள் கவனம் செலுத்தினால்தான் வேகமாக முன்னேறமுடியும். திராவிட இயக்கம் மொழி சார்ந்து பேசி வளர்ந்தது. இன்று தலித் அமைப்புகள் ஓரளவு வளர்ந்துள்ளன. ஆனால் எந்த அமைப்பும் தலித் மக்களுக்கு நிலம் தேவை என்று பேசவில்லை. நிலம் கிடைத்தால்தான் முன்னேற முடியும் என்பது அடிப்படை உண்மை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்களுக்கு நிலம் வேண்டி போராடி வரும் ஒரே கட்சி இடதுசாரி இயக்கம் தான். ஆனால் தலித் மக்கள் தலித் அமைப்புகளுக்குப் பின்னால்தான் சென்றனர். காரணம் அன்றாடம் அவர்கள் அனுபவிக்கிற ஒடுக்குமுறையை அந்தக் குரல் வெளிப்படுத்தியது. அவர்கள் பொருளாதாரத்தைப் பேசவில்லை; உணர்ச்சிகளை மட்டுமே பேசினர். உணர்ச்சிகரமான மக்களாக இந்திய மக்கள் இருப்பதால் உண்மையான அரசியலைப் பேசும் இடதுசாரிகள் வளரவில்லை. இப்போதுதான் அவர்கள் பண்பாட்டுத் துறையில் கவனம் செலுத் தத் தொடங்கியுள்ளனர். சாதிய பிரச்னை யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை ஏற்படுத்தியுள்ளோம். உத்தபுரம் ஆரம்பித்து இதுவரை 25 சாதிய சுவர்களை இடித்துள்ளோம். கலை இலக்கியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதனால் எதிர்காலத்தில் இடதுசாரிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

அரசு விருதுகள் தேர்வுக்குழுவில் இடதுசாரிகள் இருந்துகொண்டு அமைப்பு சார்ந்த சராசரியான எழுத்தாளர்களுக்கு விருதுகளைத் தருகிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?
தேர்வுக்குழுவின் தகுதியைப் பொறுத்து விருதுகள் வழங்கப்படுகின்றன. பெயரை மட்டும் அறிவிக்காமல் எதற்காக கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையான விளக்கத்தோடு அறிவிக்கவேண்டும். அப்போதுதான் கேள்வி எழுப்ப முடியும். தமுஎகச ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிறது. எங்கள் அமைப்பு சார்ந்து யாருக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததில்லை. இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் கொடுத்ததில்லை. தமுஎகசவில் இருந்து முதல் முறையாக சாகித்ய அகாதெமி வாங்கியது மேலாண்மை பொன்னுச்சாமி மட்டும்தான்.
உ.ரா. வரதராஜனின் தற்கொலையை முன்வைத்து உங்கள் கட்சி ஒழுக்க வாதப் பிடியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது பற்றி?
அவர் தற்கொலை செய்துகொண்டது ரொம்ப தவறான முடிவு. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் முக்கியமான வழிகாட்டி. எனக்கு அந்தச் சம்பவம் மனரீதியாக அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் செய்த தவறு உறுதியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியில் நடவடிக்கை என்பது திருந்துவதற்கு அளிக்கும் ஒரு வாய்ப்பு. அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இருந்த பொறுப்பில் இருந்து அடுத்தகட்ட பொறுப்பிற்குப் போட்டனர். அதனைச் சரி செய்து திருத்திக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும். இதுமாதிரி நிறைய உதாரணங்கள் உள்ளன. சில விஷயங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் வந்தோம். என்னுடைய நலனை பொதுநலன் மற்றும் கட்சியின் நலனிற்கு உட்படுத்துவேன். கட்சியின் நலனை மக்களின் நலனிற்கு உட்படுத்துவேன் என எழுதி கையெழுத்திட்டுதான் வந்துள்ளோம். இதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. சும்மா கட்சியைத் திட்டுவதற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை நாங்கள் ஒழுக்கரீதியாகப் பார்க்கவில்லை. இருந்தும் மக்கள் எங்களை எப்படி பார்க்கிறார்கள்? என்பது முக்கியம். மக்களிடையே கம்யூனிஸ்ட் பற்றி எதிர்பார்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் இப்படி இருக்கலாமா? என்றுதான் நினைப்பார்கள். எந்த மக்களுடன் வேலை செய்கிறோமோ அங்கே கம்யூனிஸ்ட் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழவேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பொதுநலன்தான் முக்கியம் என்று இருக்கவேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் என்பவன்தான் வாழும் காலத்தில் மனித குலம் சேகரித்து வைத்துள்ள அத்தனை அறிவையும் உள்வாங்கவேண்டும். அறிவாளியாக, படைத்தளபதியாக இருக்கவேண்டும். உலகத்திலேயே மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சபலம், சலனம் இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். சுயஒழுக்கத்தை அவனே உருவாக்க வேண்டும். விமர்சனம், சுயவிமர்சனம் என்பதை கறாராக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். சுற்றி நடப்பதை, இருப்பவர்களை, சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும். தன்னையும் சுயவிமர்சனப்படுத்திக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டாக வாழ்வது என்பது மனரீதியான விஷயம். மிகப்பெரிய ஞானிகளால் கூட ஒரு சரியான கம்யூனிஸ்ட் தோழரின் மனஇடத்திற்குப் போக முடியாது. எந்த ஆன்மிகவாதியாலும் தொட முடியாத எல்லையில் நிற்பவன் கம்யூனிஸ்ட். இவன் அடைகிற மனஉளைச்சல் யாரும் அடையமுடியாது. அடுத்தவர்களுக்காக அடி, உதை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை என்று நினைப்பவர்களும் அவர்கள் தான்.

இராணுவப் பணி உங்கள் ஆளுமையில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிக் கூறுங்கள்?
நான் இராணுவத்திற்குப் போகும்போது காந்தியவாதியாகப் போனேன். அந்த வாழ்க்கை என்னை மார்க்சியவாதியாக மாற்றியது. இந்த நாட்டின் சொத்து களை, மக்களைப் பாதுகாக்க தேச எல்லையில் இருந்து பணியாற்றுகிறோம். ஆனால் உண்மையில் கோடிக்கணக் கான மக்கள் சொத்தோ சுகமோ இல்லாமல்தான் வாழ்கின்றனர். பிறகு யார் சொத்தைப் பாதுகாக்க தேச எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. தேசம் என்பது மக்கள்; எல்லையல்ல. மக்களின் நல்வாழ்வு தான் தேசம். எல்லோருக்கும் நல்வாழ்வு கிடைக்க மக்களோடு இருந்துதான் போராட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் ஐந்தரை ஆண்டு பணியை முடித்துக்கொண்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

தாத்தா தொடங்கி சகோதரர்கள் வரை நாடகம், எழுத்து என்ற தொடர்பைக் கொண்ட குடும்பம் உங்களுடையது. உங்களுக்கும் கோணங்கிக்கும் முருகபூபதிக்கும் படைப்புரீதியாக உரையாடல்கள் நடக்குமா?
இதில் எங்கள் அப்பாவை விட்டுவிட்டீர்கள். அவரும் எழுத்தாளர் தான். இரண்டு நாவல், ஒரு சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். எல்லோருமே இலக்கியத் தொடர்பு உள்ள ஆட்கள் தான். இப்போது வீட்டில் நான்கு எழுத்தாளர்கள் உள்ளோம். நாங்கள் நாலு பேருமே நாலு திசையில் இருக்கிறோம். அவரவர் பாணியில் மக்களை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறோம்.

கோணங்கியின் கதைகள் புரியவில்லை என்று சொல்லப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
புரியாத தன்மை இருக்கிறது. ஆனால் அதுமட்டும்தான் இலக்கியம் என்று கோணங்கியின் எழுத்துகளை மட்டுமே படிப்பவர்கள் ஐநூறு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்து முறை புரிகிறது; பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு அதில் விமர்சனம் இருக்கிறது. அப்படி எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஓரளவு வாசிப்புள்ள மக்களுக்காவது அந்த எழுத்து புரிய வேண்டும். ஆனால் அவர்கள் (கோணங்கியும் முருகபூபதியும்)எது இலக்கியம் என்று நினைக்கிறார்களோ அப்படி எழுதுகிறார்கள். அதை சாதாரணமாக எழுதவில்லை. அதில் கடுமையான உழைப்பும் இருக்கிறது.அது அவர்களின் சுதந்திரம்.

இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழகப் பின்னணியில் இடதுசாரிகளின் தேவையும் பங்களிப்பும் என்ன?
இடதுசாரிகள் இல்லை என்றால் மக்களை நூறு சதவிகிதம் அடிமையாக்கிவிடுவார்கள். ஒரு கட்டம் வரை குட்ட குட்ட குனிந்துகொண்டேதான் இருப்பார்கள் மக்கள். சுதந்தர காற்று தமிழகத்தில் இருப்பதற்கு கம்யூனிஸ்ட் மட்டும்தான் காரணம். இன்று வேலை செய்யும் அத்தனை பேருக்கும் சங்கம் என்ற ஒன்றை வைத்து குரலை உண்டாக் கியது கம்யூனிஸ்ட் கட்சிதான். இல்லை யென்றால் குரலே இல்லாமல் இந்தச் சமூகம் அடிமையாகியிருக்கும்

நன்றி: த சண்டே இந்தியன் இதழ் (அக் 30,2011 இதழ்)

No comments: