Sunday, July 31, 2011

குண்டலினி யோகா

 யோகமும் குண்டலினியும்
-ராஜ சங்கர் -
 யோக முறைகள் இப்போது கூவிக்கூவி விற்கப்படுவதால் எதுக்கும் எதுக்கும்
சம்பந்தமின்னு நிறைய பேருக்கு தெரியலை. சரி, நமக்கு தெரிஞ்சத சொல்லி
வைப்பமேன்னு இந்த பதிவு.

ஒருத்தர் குண்டலினி யோகத்தில் சேர்ந்தது என்கிறார். இன்னொருவர், இல்லை  என்கிறார். மூன்றாவது ஆள் யோகம் பழகினாலே குண்டலனி எழும் அதுனால தகுந்த குரு
இல்லாம செய்யக்கூடாது என்கிறார். இதெல்லாம் எந்த அளவு உண்மை என பார்க்கலாம்.


யோக முறை என்பது முதலில் தோன்றிய ஆறு தரிசனங்களில் இரண்டாவதாக வருகிறது. இது
தனியாக இருந்தது, பின்பு முதல் தரிசனமான சாங்கியத்துடன் சேர்ந்து சாங்கிய யோகம்
எனவும் அழைக்கப்பட்டது. இந்த யோக முறைகளை முதலில் தொகுத்தவர் பதஞ்சலி முனிவர்.
இவர் தொகுத்தார் என்றே சொல்லப்படுவதால் அவருக்கு முன்னரே இந்த முறைகள் இருந்தன
என்றாகிறது. பதஞ்சலி யோக சூத்திரத்தில் முக்கியமானவை எட்டு அங்கங்கள் உடைய யோக
முறையும், சமாதி நிலைகளும். நடுவே யோகத்தில் வெற்றியடைந்தால் என்ன எல்லாம்
செய்ய முடியும் என விளக்குகிறார்.

எட்டு அங்கங்கள் எனப்படுவை, இயமம், நியமம், ஆசனம், பிராணாயமம், பிரத்யாகாரம்,
தாரணை, தியானம், சமாதி. இங்கே குண்டலினி பற்றியோ அவற்றை எழுப்புவது பற்றியோ
பதஞ்சலி ஏதும் சொல்லவில்லை. அடுத்து உபநிடங்களிலோ அல்லது பின்பு யோக விளக்கமாக
வந்த கீதையிலோ குண்டலினி பத்தி ஏதும் இருக்காது. கீதைக்கு விளக்கம்
சொல்றதுக்குள்ள நம்மாளுங்க திக்கு திணறி போறதுக்கு இதுவே காரணம். ஆசனம் என்பதை
கீதையும், பதஞ்சல யோக சூத்திரமும் உறுதியாக அல்லது சுகமாக அமர என்று தான்
சொல்லியிருக்கின்றன. தியானம் பண்ணும்போது பத்மாசனத்தில் உட்காரவேண்டும் என
சொல்லவில்லை. ஆக இதிலே யோகம் இருக்கிறது ஆனால் குண்டலினி பத்தியோ அல்லது இன்று
இருக்கும் முறைகள் பத்தியோ ஏதும் சொல்லப்படவில்லை.

ஆனால் இன்றோ ஒவ்வொருவரும் முத்திரைகள், ஆசனங்கள் என நிறைய சொல்லுகிறார்கள்,
அவற்றையும் யோகம் என்கிறார்கள். பதஞ்சலி படம் போட்டு இதையும் செய்கிறார்கள்.
இது எப்படி? இதற்காக விடை அவைகளும் ஒருவிதமான யோக முறை, அவை ஹத யோகம் என
பொதுவாக அழைக்கப்படும். இந்த ஹத யோகத்தில் தான் கிரியைகள், முத்திரைகள்,
சுத்திகள், ஆசனங்கள் என எல்லாம் உண்டு. இத சொல்லும் நூல்கள் மூன்று, அவை, ஹத
யோக பிரதீபிகை, சிவ சம்ஹிதை, கிரந்த சம்ஹிதை. இவைகளை தொகுப்பு நூல்கள் என்றே
சொல்ல முடியும் ஏனெனில் இந்த முத்திரைகள், கிரியைகள் எல்லாம் தந்திர நூல்களில்
இருந்து வருகின்றன.

தந்திர நூல்களான, மஹாநிர்வாண தந்திரம், லக்‌ஷ்மீ தந்திரம், குலார்வண தந்திரம்
போன்றவற்றிலே இந்த தத்துவங்கள் விரிவாக உண்டு. கோயிலை இறைவனின் உடம்பாக
சொல்லும் ஆகமங்களிலும் இது உண்டு என சொல்லப்படுகிறது. முழு ஆகமங்களை படிக்கும்
பாக்கியம் இதுவரை கிடைக்காததால் அவை பற்றி ஏதும் சொல்ல இயலவில்லை. இதிலே
இன்னொன்றும் சொல்லப்படவேண்டும், உடலை நோயின்றி பேணுதல் என்பது பதஞ்சலி யோக
சூத்திரத்தில் உண்டு. இவற்றை அதில் இருந்து கருத்தை எடுத்து செயல்முறையை
மட்டும் விரிவாக எழுதியதாகவும் சொல்லலாம்.

இப்போ மேலே சொன்ன குண்டலனிய எழுப்பினா பிரச்சின என்ற விஷயத்துக்கு வருவோம்.
அந்த பிரச்சினைகள் எல்லாம் மேற்கண்ட ஹதயோக முறைகளை முறைதவறி செய்தால் வரும்.
ஏனென்றால் ஹதயோக முறைகள் பாதி உடல் மருத்துவம், பாதி மன மருத்துவம் என்ற வகையை
சார்ந்தவை. உடலை சுத்தப்படுத்துதல், நோய் நொடி வராமல் காத்துக்கொள்ளுதல், மனதை
உடல் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்துதல், மூலிகைகள் உபயோகப்படுத்துதல்
போன்றவையே இந்த ஹதயோக முறைகள். இவைகள் பற்றி விரிவாக பின்னர் எழுதுகின்றேன்.
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் சொல்வதை போல உடம்பை சரியாக
வைத்திருந்து இறைவனை அடைய செய்யும் ஒரு முறை தான் ஹத யோகம். இந்த முறைகளை
சரியான குரு இல்லாமல் கடைபிடித்தால் நோய் வருவது நிச்சயம்.

சரி, இந்த முறைகளில் எங்கே குண்டலினி வருகிறது என்று பார்த்தால் எங்கேயும்
இல்லை தான். சிற்சில முத்திரைகள், கிரியைகள் குண்டலினி எழும்ப உதவும் என்று
சொன்னாலும் உண்மையில் அவைகள் அப்படி ஏதும் செய்வதில்லை. என்னமோ குண்டலினி
என்பது நாலு தட்டு தட்டினா எந்திரிச்சிடும் என இருக்கும் விளக்கங்களை
பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

தியானம், தாரணை, சமாதி என்று சொல்லப்படுவையும் குண்டலினி என்பது எழுந்தால்
வரும் என சொல்லப்படுவதும் ஒருவகையில் தவறான விளக்கமே. குண்டலினி என்பது சக்தியை
ஒரு உருவாக உருவகிப்பது. புரிந்து கொள்ள கடினமாகவும் எளிதில் அடைய இயலாதாகவும்
இருப்பது இந்த குண்டலினி. இதை விளக்குவது என்பது இயலாத காரியம், அனுபவித்தே
உணரவேண்டும். தியானம் என்பது எவ்வாறு அனுபவித்து உணரப்படுகிறதோ அது போல். கூடவே
சரியை, கிரியை என்பதன் விளக்கம் எல்லாம் ஒவ்வொரு முறைக்கும் வேறு படும்.
தந்தரத்தில் சரியை என்பதின் பொருளுக்கும் சைவ சித்தாந்ததில் சரியையின்
பொருளுக்கும் வேறுபாடு உண்டு. ஆக பெயர் ஒன்றாக இருப்பதனால் மட்டும் வேறு வேறு
தத்துவங்கள் ஒன்றாக இருக்காது.

சரி, இப்போது அடுத்த கேள்விக்கு வருவோம். பதஞ்சல யோக முறைகளுக்கும் ஹத யோக
முறைகளுக்கும் வேறுபாடு உண்டு, அப்படியானால் ஹத யோகம் சரியா, தவறா? என்னுடைய
கருத்து சரியே. பதஞ்சலியின் யோக முறைகளை எல்லோராலும் கடைபிடிக்க முடியாது.
அப்படி முடியாதவர்கள் ஹத யோக முறைகளை கடைபிடித்து உடலையும் மனதையும் உறுதி
செய்து பின்பு மற்ற யோக முறைகளை கைக்கொள்ளலாம். இந்த ஹத யோக முறைகளை சித்தர்
பாடல்களிலும் பார்க்க முடியும் என்பதால் இம்முறைகளை தவறு என்றோ கடைபிடிக்க
கூடாது என்றோ ஒதுக்குவது தவறு. சரியாக கடை பிடித்தால் இவை குறைந்த காலத்தில்
நல்ல பலனை அளிக்கும்.

விரும்புவோர் கீழ்கண்ட விக்கி சுட்டிகளை பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Hatha_yoga
http://en.wikipedia.org/wiki/Yoga
http://en.wikipedia.org/wiki/Hatha_Yoga_Pradipika
http://en.wikipedia.org/wiki/Shiva_Samhita
http://en.wikipedia.org/wiki/Gheranda_Samhita

No comments: