சர்வதேசச் சமூகமும் வரலாறும் விடுதலையும்: சில குறிப்புகள்
-அஸ்வத்தாமா-
அறிமுகம்
இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் ‘சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:
‘மேற்குலகுக்கும் ஐ.நாவிற்கும் ருவாண்டாவில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று படுகொலைகள் தொடங்கிய போதே தெரியும். ஆனால் யாருக்கும் ஆபிரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் உள்ள நாடு பற்றி அக்கறை இல்லை. மூலோபாய ரீதியில் தேவைப்படாத கறுப்பர்களைக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில், ருவாண்டாவில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் நாகரீகமற்ற பழங்குடி இனக் குழுமங்களுக்கிடையிலான சண்டை மட்டுமே”.
இது ருவாண்டாவிற்கு மட்டுமல்ல, இலங்கை உட்பட்ட பல நாடுகளிலும் ‘சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது, இனியும் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதற்கான வரலாற்றின் சாட்சியாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களும் ஆளும் வர்க்கங்களும் சர்வதேசச் சமூகம் பற்றி அதிகமாகவே பேசுவதைக் கேட்கிறோம். தங்களின் அடக்குமுறைகளையும் அராஜகங்களையும் கேள்விக்கு உட்படுத்தாத வரை, சர்வதேசச் சமூகம் பற்றி மகிழ்ச்சி உடையவர்களாகவே ஆளும் வர்க்கத்தினரும் அடக்குமுறையாளர் களும் இருப்பர். அடக்குமுறைகளினதும் ஆதிக்கங்களினதும் ஒட்டு மொத்த வடிவமாக இருக்கும் சர்வதேசச் சமூகம் எனப்படுகின்ற ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் மூலம் அடக்கி ஆளப்படும் மக்களினது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நம்புவது இன்றைய பொதுவான போக்காக இருக்கிறது. அடக்குமுறை அரசு யந்திரத்திற்கு எதிராக மக்களின் போராட்ட சக்தியைப் புதிய போக்கிற்கு ஏற்பக் கட்டி வளர்க்க முடியாத ஜனநாயக இடதுசாரிச் சக்திகளும் சர்வதேசத் தலையீடுகளைத் தத்தம் நிலையில் நின்று வரவேற்பவர்களாகவே இருக்கின்றனர்.
அதேபோல, முரண்பாடுகளை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கி யுத்தங்களைத் திணித்து அதிற் பாதிக்கப்படுவர்களுக்கும், அதே வேளை, அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் மனிதாபிமான ரீதியாக உதவுவதாகக் கூறி உலக மேலாதிக்க சக்திகள் செயலாற்று கின்றன. மேலும், இயற்கை அனர்த்தங்களின் போதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் எனவும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க எனவும் மேலாதிக்கச் சக்திகள் நாடுகளில் தலையிடு கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேசச் சமூகம் என்ற போர்வைக்கு உள்ளிருக்கும் ஏகாதிபத்தியத்தை வரவேற்று உபசரிக்கும் நிலையில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர்.
இதன் பின்ணணியிலேயே விடுதலை பற்றியும் விடுதலைக்கான போராட்டம் பற்றியும் பேச முடிகிறது. விடுதலைப் போராட்டம் தேசிய வாதத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பல சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சர்வதேசச் சமூகத்துடன் ஒட்டி உறவாடுகிறது. அந்நியத் தலையீட்டைக் கூவி அழைக்கிறது. விடுதலைப் போராட்டத்திற்கு குழி பறிக்கிறது. இவை வரலாற்று நோக்கில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் தேசியத்தின் திசைவழியானது வரலாறு பற்றிய புனைவுகளாலும் நம்பிக்கைகளாலுமே கட்டியமைக்கப் படுகிறது. நம்மிடம் வந்து நாம் பழங்காலத்தில் நாகரீகச் சிகரங்களை தொட்டுக் கொண்டு இருந்தோம் என்று யாராவது சொல்லிவிட்டால், நாம் புளகாங்கிதம் அடைகிறோம். நாம் தற்போது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் முன்னேறாமல் பின் தங்கி இருந்திருந்தால் உடனே அதற்கான காரணத்தை குறிப்பிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சதிகாரர்களிடம் நாம் தேட ஆரம்பித்து விடுகிறோம். பெனடிக்ற் அன்டர்சனின் (Benedict Anderson) கற்பனையான சமூகங்கள் (Imagined Communities) என்ற நூல், தற்போதைய நவீன யுகத்தில் புதிதாக நாம் சுவீகரித்த தேசிய விருப்பின் அடிப்படையில் நமது கடந்த காலத்தை கற்பனையில் மீளக் கட்டமைப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறது. உண்மையில் இந்த குறுகிய வாதம் வெறுமனே திரிந்து போன தேசியவாதம் மட்டும் அல்ல. சொல்லப்போனால், மதம், இனம், சாதி என்பது போன்ற ஒரு கற்பனை விசித்திரம் தான். இதுபோன்ற பல்வேறு அடையாளங்கள் கலந்தும் முரண்பட்டும் உள்ளார்ந்து வினை புரிந்தும் இருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க சமூகங்களில் நீண்ட நெடுங்காலமாகத் தமது சார்புநிலைக்கு தகுந்தாற் போல் வரலாற்றை மீளக் கட்டமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.
வரலாற்றின் ஆபத்துக் குறித்து வரலாற்றாசிரியர் இர்ஃபான் ஹபீப் (Irfan Habib) பின்வருமாறு சொல்கிறார்:
‘கடந்த கால மோகம் என்பது ஒரு தனிமனிருக்கு எப்படியோ அது போலத் தான் வரலாறு என்பது நாட்டு மக்களுக்கு என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘சிலரது சதிகாரர்களின் சதி காரணமாய் என்னை நான் உணர்ந்து கொள்வது தவறிவிட்டது’ என எனது மனதுக்குள் முடிவு செய்தால் அது என்னை எங்கு கொண்டுபோய் விடும்? இந்த மாதிரியான தவறான எண்ணங்கள் நான் எனது சக மனிதர்களுடன் சுமுகமான உறவு கொண்டிருப்பதைப் பாதிப்பதோடு மட்டுமன்றிக் கடைசியில் எனக்குள் புதைந்து கிடக்கும் ஊனங்களையும் துகிலுரிந்து காட்டிவிடும். இப்படியாகத் தனி யொருவருக்கு நடப்பதே, கண்டிப்பாகக் கற்பனை வரலாறு தந்த போதையில் மிதக்கும் நாட்டு மக்களுக்கும் நடக்கும். பொய் வரலாறு எவ்வளவுதான் உடனடி, குறுகிய காலப் புகழாரங்களைச் சூட்டிய போதிலும், அது, மக்களுடைய ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து, முன்னேறுவதற்கான அவர்களுடைய திறனை அறுத்து எறிந்து விடும். ஆகவே இந்த மாதிரியான கதையளக்கும் வரலாறுகளை எந்த விதத்திலும் நாம் நியாயப்படுத்தி விடமுடியாது”.
வரலாற்றின் கைதியாக ஒரு சமூகம் இருக்கும்வரை, அச் சமூகம் தனது முன்னேற்றத்திற்கான தடையைத் தானே இட்டுக் கொள்கிறது. இன்றைய நவகொலனித்துவ உலக ஒழுங்கில், தேசியம் பல புதிய வடிவங்களை எடுக்கிறது. எல்லோரும் உலகமயமாகி இருக்கிறோம். ஆனால் எம் நினைவுகளையும் பூர்வீக வீரப்பிரதாபங்களையுஞ் சுமந்தபடி தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றைச் சரியாக விளங்கிக்கொள்ள முடியாதபடி நம் முன்முடிவுகளோடு நாம் கட்டுண்டிருக்கிறோம். உரிமைகட்கான அவாவும் ஜனநாயகத்திற்கான தேவையும் விடுதலைக்கான போராட்டங்களும் வரலாறு முழுவதிலும் நிறைந்து இருக்கிறது. இனிவரும் வரலாற்றிலும் அவ்வாறே இருக்கும். அதனடிப்படையில் விடுதலைக்கான போராட்டங்களில் சர்வதேசச் சமூகம் எவ்வாறு நடந்துகொண் டிருக்கிறது என்பதையும் வரலாற்று நோக்கிலும் போக்கிலும் பார்க்கும் முயற்சியே இக் கட்டுரை.
வரலாற்றுப் பார்வை
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், எல்லா மனிதர்களும் சமமானோராகப் படைக்கப்பட்டவர்கள் என்ற அமெரிக்கக் குடியரசின் கம்பீரமான பிரகடனம், அடுத்து வந்த எண்பது ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான கறுப்பு அமெரிக்கர்களை அடிமைகளாக இருக்கும் படி அரசியல்மைப்புச் சட்டத்தின் மூலம் அனுமதித்ததனாற், பொருளற்றதாகியது. அமெரிக்கப் புரட்சியிலிருந்தும், பிரெஞ்சுப் புரட்சியிலிருந்தும் துவங்கிய பூர்ஷ்வா ஜனநாயகத்திற்கான திட்டம் மூன்று முக்கிய தன்மைகளை உள்ளடக்கியிருந்தது.
1. அரிஸ்டாட்டில் துவங்கி ரூஸோ வரையானவர்களின் மிக முற்போக்குத் தன்மை வாய்ந்த அரசியற் சிந்தனைகளை விட ஜனநாயகம் குறித்த கொள்கை அளவில் மிகக் குறைவான சுருங்கிய பார்வையே அது கொண்டிருந்தது.
2. துவக்க காலத்திலிருந்தே அது பொருளாதாரம் என்பதை ஜனநாயகத்திலிருந்து தனிமைப்படுத்திச், சமத்துவம் என்பதற்கு வெறும் சட்டபூர்வமான விளக்கமளித்துப் மக்களிற் பெரும் பகுதியினரை வாக்களிப்பதிலிருந்து எவ்வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலக்கி வைத்தது. (“மக்களாகிய நாம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனச் சொற்றொடர் ஒரு வெற்றுச்சொற் றொடராகும். அது பெண்களையோ வெள்ளையரல்லாத பூர்வ குடியினரையோ ஆபிரிக்காவை மூலமாகக் கொண்ட அடிமைகளையோ குறிப்பதல்ல).
3. பூர்ஷ்வா அமைப்பு எப்போதுமே தன் சாதனைகளைப் பெருமளவுக்கு மிகைப்படுத்திக் கூறியுள்ளது.
எந்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலம் வரையிலும், பூர்ஷ்வா ஜனநாயகம் முழுமை அடையவில்லை. முடியாட்சி என்பதே அன்றைய நாட்களின் சட்டமாக இருந்தது. ரஷ்யாவிலும் ஜேர்மனியிலும் ஒஸ்ற்ரியாவிலும் ஏகாதிபத்திய முடியாட்சிகள், பிரிட்டனில் அரசியல் சட்ட அமைப்புக்குட்பட்ட முடியாட்சி, ஸ்பெயினிலும் போர்த்துக்கலிலும் அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அமைப்பபைவிடத் தாழ்ந்த முடியாட்சி அமைப்புக்கள் என வேறுவேறு வகைப்பட்ட, ஆனால் முடியாட்சியை மையப்படுத்திய, அரசுகளே இருந்தன. முதலாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய சூழலில் பொல்ஷ்விக் புரட்சி ரஷ்ய முடியாட்சியை அகற்றியது. ஆனால், ஜேர்மனி, இத்தாலி, ஒஸ்ற்ரியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பாரம்பரிய அரசுகள், நிலையான ஜனநாயக அமைப்புகளுக்கு வழிவிடுவதற்கு மாறாக, ஃபாசிசத்திற்கும் ராணுவ சர்வாதிகாரத்துக்கும் வழிவகுத்தன.
மன்னர்களும் ஃபாசிஸவாதிகளும் ராணுவ சர்வாதிகாரிகளும் தராளவாத ஜனநாயகவாதிகளும் மிகத் தீவிரமாக தங்களுக்கிடையே கணக்குத் தீர்த்துக் கொண்டிருந்தபோது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. அதுவும் அவர்களின் முதுகுக்கு பின்னாலேயே ஆளும் அமைப்புகளுக்கு எதிராக எழுந்தவற்றில் நான்கு வகையான சவால்கள் மட்டும் நீண்ட காலத்திற்கு தீர்மானகரமானவையாக விளங்கின.
1. சொத்துடமையாளர்களின் ஆட்சிக்கெதிரான தொழிலாளர், விவசாய இயக்கங்கள்.
2. உலகின் பிற பகுதிகளில் ஐரோப்பிய கொலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள்.
3. ஆணாதிக்க சக்திக்கும் முன்னுரிமைக்கும் எதிராகப் பெண்களின் சமத்துவத்திற்கும் முன்னேற்றத்திற்குமான போராட்டங்கள்.
4. அடிமைத்தனத்திற்கும் இனவெறிக்கும் எதிராக வெள்ளை இனத்தவர்களின் குடியேற்ற நாடுகளான வட அமெரிக்காவிலும் கரிபியன் பகுதியிலும் மையம் கொண்ட உலக அளவிலான போராட்டங்கள்.
ரஷ்யாவின் பொல்ஷ்விக் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அலையலையாக உருவான புரட்சிகள் குறிப்பாக இத்தாலி, ஹங்கேரி மற்றும் ஜேர்மனியில் மிகத் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப் பட்ட பிறகு, நாஜிகளின் மூன்றாம் ரைஹ் (Third Reich) உருவான எல்லையற்ற வெற்றிக் களிப்பில் அதுவே “வரலாற்றின் முடிவு” எனஅறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 1990இல் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா வெற்றிவாகை சூடிய பின்னணியில், மீண்டுமொரு முறை, “வரலாற்றின் முடிவு” என்பது அறிவிக்கப்பட்டது. [மேலதிக தகவல்களுக்கு ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் (Francis Fukuyama) “வரலாற்றின் முடிவு” (The End of History and the Last Man) என்ற நூலை வாசிக்கவும். சீனப் புரட்சிக்குப் பிறகு, 1950களிலும் அல்ஜீரியா முதல் இந்தோசீனம் வரை பல்வேறு இடங்களில் புரட்சிகரமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும் அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்களின் “மூலதனத்தின் பொற்காலம்” துவங்கிவிட்டது என்ற கூற்றும் புகழ்மிக்க அமெரிக்க சமூகவியலாளர்களின் “தத்துவத்தின் முடிவு” என்கிற ஆய்வும் சேர்ந்து மூலதனத்தின் முன்னால் எல்லாத் தத்துவங்களும் பின்வாங்கிவிட்டன என்ற பொருளில் உறுதியான எதிர்ப் புரட்சிப் போக்குக்களாக இருந்ததைக் காணமுடிந்தது. இதனடிப்படையில் மூலதனம் பிரதானமாக்கப்பட்டு அதனடிப்படை யிலே அனைத்தும் வியாக்கியானம் செய்யப்பட்டன.
சர்வதேசச் சமூகம், சோவியத் யூனியனின் சிதைவை 1990கள் நினைவுபடுத்துவது போல, அதே காலகட்டத்தில் தென் ஆபிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்துவதில்லை. வெற்றியடைந்த புரட்சிகளைப் பற்றி அதற்கு நினைவில் நிற்பது அவற்றின் வெற்றிகளல்ல, மாறாக அவை சந்தித்த தோல்விகளே. திறந்த ஒரு புண்ணைப் போல, அவற்றை நினைவில் வைத்திருக்கச் செய்வதில் ஆதிக்கச் சக்திகள் சோர்வதில்லை. எனினும், ஒருவர் வெற்றிகளிடமிருந்தல்லாமல் தோல்விகளிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறார் என்பது முக்கியமானதாகும். முதலில் பொல்ஷ்விக் புரட்சியின் வடிவத்தைப் பின்பற்ற முயன்ற சீனா பிறகு தன்னுடைய சொந்த வழியின் மூலமே வெற்றியடைந்தது. கியூபா சீனாவைப் பின்பற்றாதது போக, லத்தீன் அமெரிக்காவின் கணக்கற்ற புரட்சிக்கான முயற்சிகளில் கியூபா பின்பற்றப்படவில்லை. வெற்றிகரமான புரட்சிகளில் கஷ்டமான ஒரு விஷயம் ஏதெனில் அவற்றைத் திரும்பவும் அதேபோல் நடத்த முடியாது என்பதுதான்.
‘புரட்சிகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென வெளிப்படுகின்றன. 1917ன் அக்டோபர் புரட்சியை ஏப்ரலில் கணித்த லெனினின் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை எங்கிருந்து வந்தன என்பது தெரியாமல் கஸ்ட்ரோவின் கெரில்லாப்படை கியூபாவின் கடற்கரைக்கு வந்து பிறகு ஹவானா நகருக்குள் நுழைந்தன. சீனா அல்லது வியட்நாமைப் போல பல பத்தாண்டுகளில் நிகழ்ந்த புரட்சிகளிலும் இதே விதி பொருந்துகிறது. ஒரு நீண்ட அடைகாக்கும் காலத்திற்குப்பின் அளவுநிலை மாற்றம் குணரிதியாக மாற்றமடையும் போது, ஆளும் வர்க்கங்களின் கோட்டைகள் மிக வேகமாகச் சரிகின்றன என்பதே அந்த விதி. புரட்சிகளாக நடைபெறாத அதே சமயம், மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கங்களாக அவை நடைபெறும் போதும் அவற்றைக் கணிக்க முடிவதில்லை 1950களில் தத்துவத்தின் முடிவு என்ற கோட்பாட்டை உரத்துக் கூவிய அமெரிக்க அறிவுஜீவிகளாகல் ஒரு பத்து வருடக் காலத்திற்குள்ளாகவே, எந்த ஒரு ஏகாதிபத்திய நாடும் சந்தித்திராத வகையில் மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தால் தங்கள் நாடு சூழப்படப் போகிறது என்பதை அறிய முடியவில்லை” எனப் புரட்சிகளின் வரலாற்றுப் போக்கை விளக்குகிறார் அய்ஜாஸ் அஹமட் (Aijaz Ahamad).
இவ்வாறு மாற்றமடைந்த புரட்சிகள் பற்றிய படிப்பினைகளைப் எதிர்ப்புரட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களுமே புரட்சியாளர்களை விடச் சரியாக உள்வாங்கிக்கொண்டனர். மூலதனத்தை அதிலும் குறிப்பாக நிதி மூலதனத்தை மையப்படுத்தியதாக உலக ஒழுங்கு மாறியதோடு சுரண்டலின் வடிவங்களும் ஒடுக்குமுறையின் தோற்றப்பாடுகளும் மாறத் தொடங்கின.
அரசும் நிதி மூலதனமும் – பொது எதிரியின் உருவாக்கம்
அரசு முற்றிலும் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்த தாகிறபோது, சமுதாயத்திற்கு அப்பாற்பட்டதாக உயரே நின்று கொண்டு சமுதாயத்தின் ஒட்டுமொத்த நலன்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிற கட்டமைப்புதான் அரசு என்ற அதன் தோற்றம் கலைகிறது. நிதி மூலதன ஆதிக்கக் காலகட்டத்திற்கே உரிய ஆட்சிகளின் எதேச்சாதிகாரத் தன்மையைக் காணுகிறபோது அரசுக்கு எவ்வித சமுதாய அங்கீகாரமும் தேவைப்படவில்லை என்று சிலர் கருதக்கூடும் சமுதாய அங்கீகாரம் என்பதற்கு ஒரு மாற்றாகத்தான் அரசு செயல்படுகிறது என்றும் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மிகமிக மோசமான ஒரு எதேச்சாதிகார அரசுக்குக் கூட ―ஒரு பாசிச ஆட்சிக்குக் கூட― என்ன தான் அது பயங்கர அடக்குமுறைகளைப் பரவலாகப் பயன்படுத்தினாலும், அதற்குப் பிறகும் சமுதாய அங்கீகாரம் தேவைப்படுகிறது. எதேச்சாதிகாரமும் அடக்குமுறைகளும் ஒருபோதும் சமுதாய அங்கீகாரத்துக்கு மாற்றாக முடியாது. அந்த அங்கீராத்தைப் பெற இப்படிப்பட்ட ஆட்சிகள் வேறு வழியைப் பயன்படுத்த முயல்கின்றன. சமுதாய மொத்தத்திற்கும் ஒரு பொது எதிரியை உருவாக்குவதுதான் அந்த வழி. அந்தப் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில் அரசு ஈடுபட்டிருப்பதாகக் கதை கிளப்பி விடப்படும். பெருமை அல்லது தேச கவுரவம் நிலைநாட்டப்படுதல் எனும் ஏகாதிபத்தியத் திட்டத்தின் பின்னே ஒரு பொது நோக்கத்திற்காகச் சமுதாயம் ஒன்று திரட்டப்படும். அல்லது தேசத்திற்குக் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதி ஒன்றைச் சரிப்படுத்துவது என்ற பெயரில் ஏகாதிபத்தியத் திட்டம் ஒன்று துவக்கப்படும். வேறு சொற்களிற் கூறுவதென்றால், பொருளாதார ஆளுமைக்களத்தில் இழந்த சமுதாய அங்கீகாரத்தை வேறு வகையில் ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யப்படுகிறது. அதற்காக, அடிப்படையில் ஏகாதிபத்தியத்தன்மை வாய்ந்த, இனவாத, அந்நியப் பகைமை கொண்ட ஒரு தேசம் என்பது கட்டப்படுகிறது. அந்தத் தேசம் என்ற கட்டுமானத்தைச் சுற்றி ஒரு பொதுக்கருத்து உருவாக்கப் படுகிறது. அதற்கு ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதே நிதி ஆதாய நோக்கங்கள் தாம் சமுதாயத்தின் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில் அல்லது அந்தப்பொது நோக்கத்தை எட்டுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தோடு பின்னிப் பிணைந்ததாக அரசு இருப்பதும் பரவலாக பயங்கர அடக்குமுறைகள் கட்டவிழ்ந்து விடப்படுவதும் நியாயப் படுத்தப்படுகின்றன. அந்தப் பொதுத் திட்டத்தின் பெயரால் யுத்தம், ஆக்கிரமிப்பு, நாடுகளை வளைத்து இணைத்துக் கொள்வது ஆகிய அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன. எனினும், இவை யாவும் உருவகப்படுத்துவது அரசின் சமுதாய அங்கீகாரத்துக்கான ஒரு மாற்றுத் தேடலைத்தான். இந்த மாற்றுத் தேடல் நிதி மூலதனத்தோடு பின்ணிப்பிணைந்த அரசைத் தக்கவைக்கவும் சுரண்டலைத் தொடரும் வழியாகவும் இருந்தது.
நவீன (முதலாளித்துவக்) காலத்திற்கு முந்தைய அனைத்துச் சமுதாயங்களும் விவசாயச் சமூகங்களாகவே இருந்தன. அவற்றின் உற்பத்தி குறிப்பான பல்வேறு முறைகளதும் நியாயங்களினதும் அடிப்படையில் அமைந்திருந்தது. மாறாக, முதலாளித்துவச் சந்தைச் சமுதாயத்தில் மூலதனத்திலிருந்து அதிகப்படியான லாபம் பெறுவதே பிரதான விதியாக அமைந்துவிட்டது. நவீன முதலாளித்துவ விவசாயம் பெரிய அளவிலான பணக்காரக் குடும்ப விவசாயமாயிருப் பினும், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்தேசிய நிறுவனங்களும் மூன்றாம் உலக விவசாயிகளின் உற்பத்தியின் மீது வலுவான தாக்குதலைத் தொடுத்து வருகின்றன. 2001ஆம் ஆண்டு கட்டார் நாட்டின் டோஹா நகரில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் அதற்கான பச்சை விளக்குக் காட்டப்பட்டது. அத் தாக்குதலுக்குப் பலர் பலியாகின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர், மனிதக் குலத்தின் அரைவாசியான மூன்றாம் உலகின் விவசாயிகளே ஆவர்.
உலக வர்த்தக அமைப்பின் சந்தைப் போட்டிக் கோட்பாட்டை நியாயப்படுத்த ஒரு பெரிய வாதம் முன்வைக்கப்படுகிறது. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்ட வளர்ச்சி, நவீனமான வளமிக்க நகர் சார்ந்த தொழிலமைப்புகளின் துணையோடு நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்குக் கொண்டு சென்றது. அவ்வாறே, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளிலும் அத்தகைய வளர்ச்சி ஏற்படாமல் போகுமா என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாகும்.
மேற்கூறிய முன்மாதிரியை மூன்றாம் உலக நாடுகளில் மீள ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதற்கான இரண்டு முக்கிய காரணிகளை இவ் வாதம் கணக்கில் எடுக்கத் தவறுகிறது. முதலாவதாக, நூற்றைம்பது ஆண்டுகளாக விருத்திபெற்ற ஐரோப்பிய மாதிரி என்பது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வல்ல தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை உருவாக்கியது. இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தின் கீழ், மிகவும் குறைவான வாய்ப்புடைய சந்தைகளில், தங்களின் தொழில் உற்பத்திகள் போட்டியிட, மூன்றாம் உலகின் புதிய தொழில் அமைப்புகள் இந்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்றாக வேண்டும். இரண்டாவதாக இந்த நூற்றைம்பதாண்டுக் கால இடைவெளியில் ஐரோப்பாவில் மக்கள் தொகை குறைந்தது. வளர்முக நாடுகளில் அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை.
உலக வர்த்தக அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பரிந்துரைக்கும் ‘முதலாளித்துவ சந்தையைத் தாராளமயமாக்குவதன் மூலம் நடைபெறும் நவீனமயமாக்கம்’ என்ற ஆலோசனை இரண்டு கூறுகளைக் கொண்டது. இனி, வளர்ந்த நாடுகளைச் சார்ந்த, போட்டியிடும் திறமுடைய நவீன விவசாயிகள் உலக அளவில் உணவு உற்பத்தியில் ஈடுபடுவார்கள். எதிர்காலத்தில், வளரும் நாடுகளின் சில பகுதிகளில் இத்தகையோர் சிலர் உருவாகும் வாய்ப்பு இருக்கலாம். அதே வேளை, தற்போதைய மூன்றாம் உலக நாடுகளின் முன்னூறு கோடி விவசாயிகளிற் பெரும் பகுதியினர் ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு ஏழ்மைக்குட் தள்ளப்படுவர். இறுதியாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவர். அவ்வாறு பலியாவோரைச், சுற்றுச் சூழல் உள்ளிட்டுப், பொருளாதாரரீதியாக ஏழ்மையில் உழற்றுவதே தாராளமயக் கொள்கைகளின் நோக்கமாக உள்ளது. மேற்சொன்ன இரண்டு கூறுகளும் ஒன்றையொன்று ஏற்றுக்கொண்டு ஒன்றோடொன்று மோதிக் கொள்ளாமல் இணைந்து செல்கின்றன.
அடிப்படையில் அரசுக்கும் அடக்குமுறை ஆட்சியாளர்களுக்குத் தேவையானது ஒரு பொது எதிரி. அது அண்டை நாடொன்றாக இருக்கலாம். ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருக்கலாம். அடையாளங் காட்டிப் பெரும்பான்மையினரை அச்சத்திற்குட்படுத்தக்கூடிய ஏதாகவும் இருக்கலாம். அதன் மேற் பழியைப் போட்டுவிட்டுத் தங்கள் மூலதனக் கொள்ளையையும் சுரண்டலையும் எவ்விதத் தடைகளுமற்றுத் தொடர அவர்கட்கு முடிகிறது. கொலனித்துவமும், நவகொலனித்துவமும் அன்று இலகுவாகக் கண்டுகொள்ளப் பட்டன@ எதிர்க்கப் பட்டன. ஆனால், இன்று, உலகமயமாதல் நிகழச்சிநிரலின் கீழ், தேசிய அரசுகளினதும் அரசாங்கங்களினதும் வரவேற்புடனும் மக்களின் ஆதரவுடனும், ‘மனிதாபிமான ஏகாதிபத்தியம்’ தன் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறது. ஜனநாயகத் தன்மையோடு கூடிய சுதந்திரம் பூர்ஷ்வாக்கள் கூறும் சந்தையின் கற்பனையான சுதந்திரம் அல்ல: மாறாகத் தீவிரமான உண்மையான, சமத்துவத்திற்கான ஒடுக்கப் பட்டவர்களின் போராட்டத்தைப் பற்றியதாகும். இது சோசலிசம், தேச விடுதலை ஆகியவற்றுக்கான போராட்டங்களோடு இணையாமல் நீடிக்க முடியாது.
தேசியமும் தேச ஒற்றுமையும்: புதிய யுத்திகள்
“தேசபக்தி என்பது அயோக்கியர்களின் புகலிடம்” என்ற புகழ் பெற்ற கூற்றை இங்கே நினைவூட்டல் தகும். தேசபக்தி ஒரு வலிய யுத்தியாகப் பயன்பட்டுள்ளது. அது மொழியாக, மதமாக, இனமாக எனப் பல்வேறு வடிவங்களில் தேவைக்கேற்றவகையில் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. அதைத் தனது வசதிக்கேற்பச் சர்வதேசச் சமூகம் பயன்படுத்துகிறது. விடுதலைப் போராட்டங் களைத் திசைதவறச் செய்யவும் மக்களிடம் அவற்றுக்குள்ள ஆதரவைக் குறைக்கவுமான யுத்தியாகப் அது பல வழிகளிற் பயன்படுகிறது. மத அடிப்படையில் தேசிய அடையாளத்தை வற்புறுத்திச் சமூகங்களை மேலும் பிளவுபடுத்த அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உதவி வந்துள்ளனர். அதே வேளை, மத அடையாளங்கள் தங்களது சமுதாயங்களில் பெரும்பான்மை அதிகாரத்துக்கும் ஆளும் அதிகார வர்க்க நலன்களுக்கும் மாறாகக் குறுக்கிடாமல் நடவடிக்கை எடுக்கின்றனர். சர்வதேசச் சமூகத்தால் இந்துத்துவ வெறியாட்டம் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியுடனுன் நல்லுறவைப் பேண முடிகிறது. இலங்கையின் சிங்கள பவுத்த வெறி ஒரு பிரச்சினையல்ல. கிறிஸ்துவ மதத்தவருக்கு எதிரான வன்முறை யைத் தூண்டிவிடுகிற ஹெல உறுமயவுடன் கூட நட்புறவு பாராட்ட அதற்கு இயலுமாயுள்ளது. இவற்றில் எதுவுமே தமது நலன்களுக்கு ஆபத்தாயில்லாத வரையில் ஒரு பிரச்சனையில்லை. திபெத்திய லாமா பவுத்தம் இன்று மற்றைய பவுத்தப் பிரிவுகளுக்குச் சமமாகவும் பல நேரங்களில் உயர்வாகவும் சர்வதேசச் சமூகத்தால் மதிக்கப்படுவது தலாய் லாமா என்கிற மதத் தலைவரது ஆன்மிக மேம்பாட்டினால் அல்ல. மாறாகத் தலாய் லாமா என்ற அரசியல்வாதிக்குச் சர்வதேசச் சமூகம் வழங்கும் முக்கியத்துவம் தொடர்பானது. சர்வதேசச் சமூகத்தின் தேவைகட்கு ஏற்ற கருவியாகத் தலாய் லாமா விளங்குவதன் பயனே அது.
இங்கு கவனிக்கத்தக்க விடயமெதுவெனில் எங்கெல்லாம் தேசமும் இனமும் மொழியும் மதமும் புனிதப்படுத்தப்பட்டு அவற்றின் நலன் மனிதரது அடிப்படையான உரிமைகளையும் தேவைகளையும் உணர்வுகளையும் மறுக்கிற அளவுக்குப் போகிறதோ, அங்கு சமூகப் பற்றுக்குப் பதிலாகச் சமூகத்தைச் சின்னாபின்னமாக்கக் கூடிய வெறித்தனம் ஆட்சி செலுத்துகிறது. சர்வதேசச் சமூகம் அதை இயலுமாக்கிறது. இந்த ஆபத்தை வரலாறெங்கும் பார்க்க முடியும். ஜேர்மனியின் தூய ஆரிய அடையாளத்தைக் காப்பதற்காக யூதர்களை அழிக்க வேண்டியிருந்தது. தேசத் துரோகிகளாக அடையாளங்காணப் பட்டவர்களை இலக்கு வைக்க வேண்டியிருந்தது. அதன் பின்பு முழு உலகத்திற்கும் எதிராக ஒரு போரை நடத்த வேண்டி வந்தது. முழு அமெரிக்கக் கண்டமும் அவுஸ்திரேலியாவும் ஸ்பானிய, போர்த்துக் கேய, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஏறத்தாழ முழுமையான இன ஒழிப்பு நடவடிக்கைகட்குட்பட்டன. அத்தனை கொடுமைகளும் தேசங்களின் முடிக்குரிய மன்னர்களதும் மகாராணிகளதும் திருச்சபைகளினதும் பேராலும் அவர்களது பூரண அனுமதியுடனும் ஆசிகளுடனுமே மேற்கொள்ளப்பட்டன. அந்த மரபு அமெரிக்காவாலும் சர்வதேசச் சமூகத்தாலும் இன்று முழு மானிடத்திற்கும் எதிராக முன்னெடுக்கப்படுகிறது. ‘பொது எதிரி” என்ற கருத்தாக்கம் புதிய யுத்திகளினூடு செயற்படுத்தப்படுகிறது. உள்நாட்டில் ஒரு எதிரி இருப்பது எப்போதுமே வசதியானது. இல்லாவிடின் புறத்தே அதைக் கட்டமைக்கும் தேவை எழுகிறது. ஆனால் மதம், மொழி, இனம் என ஏதாவதொன்றைப் பயன்படுத்தி உள்நாட்டிலேயே எதிரியைக் கட்டமைக்கலாம். பொது எதிரியாக்கப்பட்டவர்களிடமிருந்து பெரும் பான்மை மொழி, பெரும்பான்மை மதம், பெரும்பான்மைப் பண்பாடு, பெரும்பான்மையினரின் நலன்கள் என்பனவற்றைப் பாதுகாப்பதை அரசு தனது பணியாகப் பிரகடனப்படுத்திக் கொள்ளுகிறது. அதை விட, இவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிற பெரும்பான்மை நலன்கள் தேசிய நலன்களாகின்றமையால், அவற்றுக்கு எதிரான மிரட்டல்க ளாகக் காணப்படுகிறவை தேசத்திற்கு எதிரான மிரட்டல்களாகின்றன. எனவே, தேசத்தைப் பாதுகாப்பதற்காக மிரட்டல்களுக்கெதிரான கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை உரிமை மறுப்பு முதல் இன ஒழிப்புப்போர் வரை எவ் வடிவையும் எடுக்கலாம்.
நிறைவாக
பாட்டாளி மக்களின் எண்ணிக்கை வளர்ச்சியின் வலிமை அவர்களை ஒன்றுபடுத்துவதை எளிதாக்காமல், ஒரு முரண்நகையாகக், கடினமான பணியாக மாற்றியுள்ளது. மார்க்ஸின் காலத்தில் பாட்டாளிகள் எண்ணிக்கையிற் குறைவாகவும் ஒரு சில நாடுகளின் ஒரு சில நகரங்களில் மட்டுமே நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். இவர்களிற் பெரும்பாலோர் ஒரேமாதிரியான வேலைகளைச் செய்பவர்களாகவும், ஒப்பீட்டளவில் ஒரேமாதிரியான சூழல்களில் வசிப்பவர்களாயும் இருந்தனர். இன்றைய உலகப் பாட்டாளிகளோ, பல தனித்த நாடுகளில், புவியியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறவர்களாயும், கலாசார ரீதியாகப் பன்முகத்தன்மை கொண்டவர்களாயும், மதரீதியாகவும், இனரீதியாகவும் வேறுபடுகிறவர்களாயும், மொழிரீதியாகப் பிளவுபட்டு இருக்கிறவர்களாயும், இன, மதச, சாதி அடுக்குகளாய் வாழ்கிறவர்களாயும், சிக்கலான வேலைப் பிரிவினையைக் கொண்ட பல வேலைகளைச் செய்பவர்களாயும் நவீன உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக மிக அதிகமான எண்ணிக்கையில் பெண்களை உடையவர்களாயும் உள்ளனர். இந்த உலகப் பாட்டாளி வர்க்கத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் ஊதியம், சமூக ஒதுக்கீடு ஆகியவற்றில் வேறுபாடுகளும் சமூகரீதியிலமைந்த பல தவறான முன் நிர்ணயிப்புகளும் ஏராளமாக நிறைந்திருக்கின்றன. இவை இன்று எதிர்நோக்கப்படும் பாரிய சவால்கள்.
தேசிய இன ஒடுக்கல் என்றாலும், வேறெந்தச் சமூக அடையாளத்தின் அடிப்படையிலான ஒடுக்கல் என்றாலும், அது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை என்ற எல்லைக்குள் நின்றுவிட முடியாது. ஏனெனில், இன ஒடுக்கல் அதைவிடப் பாரிய ஒரு சமூக முரண்பாட்டின் வெளிப்பாடு மட்டுமே. தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டங்கள் அதைச் சரியாக அடையாளம் காணத் தவறுகிற போது தம்மை முடிவிற் பலவீனப்படுத்திக் கொள்கின்றன.
தேசிய இனப் பிரச்சினையும் தேசிய இன ஒடுக்கலும் இனங்களிடையி லான பிறவிப் பகையின் விளைவானவையல்ல. அவற்றுக்கு வேறு சமூகப் பரிமாணங்கள் உண்டு. குறிப்பாக, வர்க்கப் பரிமாணம் உண்டு. ஏகாதிபத்தியத்தினதும் மேலாதிக்கவாதிகளதும் நலன்களுக்கு அவற்றுடன் தொடர்பு உண்டு. அதனாலே தான் எந்தத் தேசிய இன விடுதலையும் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக்காத வரை அது முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்லாது. இதை அண்மைக் காலத்தில் ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள், கொசோவோ விடுதலை இயக்கம் போன்றவை மிகவும் தெளிவாக உணர்த்தின. ஏகாதிபத்தியத்தால் நன்கு ஏமாற்றப்பட்ட அவர்களிடமிருந்து கற்க நிறைய உண்டு.
தேசியவாதம் போன்று அல்லது தேசியவாதத்தை விட மோசமாக மதவாத அரசியல் மேலாதிக்க அரசியலாகவும் ஒடுக்குமுறை அரசியலாகவும் சீரழிந்துள்ளதை நாம் காணுகிறோம். தேசிய இன ஒடுக்கலுக்குட்பட்ட சமூகம் ஒன்றினுள் மதவாதம் கிளறிவிடப்படும் போது, விடுதலைப் போராட்டம் பலவீனப்படுகிறது. மதம் என்பது வசதியான ஒரு அரசியற் கருவியே ஒழிய மனித உறவுகளில் தீர்மானகரமான உறுதியான அரசியற் சக்தி அல்ல என்பதை உணர வேண்டும். மக்களின் விடுதலைக்கான அரசியல் எந்த மத அடையாளத்திலிருந்தும் எட்ட நிற்பது அவசியம் மட்டுமல்ல, ஒரு முன் நிபந்தனையும் கூட. அதே வேளை, மத அடிப்படையிலான எந்த ஒடுக்குமுறையையும் எதிர்ப்பதும் மத நம்பிக்கைக்கும் வழிபாட்டுக் குமான சுதந்திரத்தைக் காப்பதும் ஒரு உண்மையான தேசிய விடுதலை இயக்கத்தின் பொறுப்புகளுள் அடங்கும். மத வேறுபாடற்று ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தினதும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களதும் உரிமைக்காகப் போராட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இயலுமாகிறபோது அது பல வழிகளில் வலிமை பெறுகிறது. அதன் மூலம், கண்ணுக்குத் தெரிகிற பேரினவாத ஒடுக்குமுறையாளர்களை விட முக்கியமான எதிரிகளான பின்னாலிருந்து இயக்குகின்ற அந்நிய மேலாதிக்கவாதிகள் பற்றிய தெளிவுடன் செயற்பட இயலுமாகிறது.
சர்வதேசச் சமூகம் தற்போது யுத்தத்தை விற்கிறது. யுத்தங்களை ஊக்குவிக்கிறது. யுத்தங்களை நடத்துகிறது. அதனோடு மனிதாபிமான உதவிகள், மனித உரிமை மீறற் கண்காணிப்பு போன்ற பல்வேறு போர்வைகளில் தேசிய அரசுகளையும், அரசாங்கங்களையும் மிரட்டுகின்றது கட்டுப்படுத்துகின்றது. மக்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து அவற்றின் சந்தை, நுகர்வு, லாபம், இராணுவ ஆதிக்கம் போன்றவற்றை நிலைநாட்டிக் கொள்கிறது. அரசியல் என்பது சமூக அறஞ் சார்ந்த விடயமாக இருந்த காலம் மலையேறி விட்டது. ஆனால் அறம் பிழைப்படுகிறபோது அரசியல் சீரழிகிறது. அதை ஒரு சமூகம் பொறுத்துக் கொள்ளுமாயின் அச் சமூகம் தனது அழிவுக்கான பாதையைத் தானே தேடுகிறது. அழிவுக்கான பாதையிற் பயணப்படத் தொடங்கிய சமூகம் அதற்காக வருந்தத் தொடங்கும் போது அது தனது பாதையிலிருந்து மீள முடியாத தொலைவுக்குச் சென்றிருக்கும். வரலாறு சொல்லும் பாடமும் அதுதான். இது விடுதலைப் போராட்டத்திற்கும் பொருந்தும் என்பதை நாம் மறக்கவியலாது.

No comments:
Post a Comment