இலங்கையிலிருந்து sms மூலம் வந்த அவரது இழப்பு குறித்த செய்தி ஒரு கனம் அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்திவிட்டது. பேராசிரியரின் இழப்பு தமிழ் சமூகத்துக்கும் புலமைசார் சமூகத்துக்கும் ஒரு பேரிழப்பு.
சரிநிகரில் நான் இணைந்த போது எனக்கு வயது 18. குறிப்பிட்ட ஒரு கட்டுரைக்கென அவரிடம் பேட்டி எடுப்பதற்காக தொலைபேசியில் “சிவதம்பியுடன் கதைக்க முடியுமா” என்று கேட்டேன். அப்போது இந்த அடைமொழியுடன் அழைப்பதை, அண்ணா, அக்கா என்று எவரையும் அழைப்பதை பொதுவாக தவிர்த்து தோழர் என்றோ பெயர் கூறியோ அழைக்க தொடங்கியிருந்தேன். அவரை அப்படி பெயர் கூறி அழைத்ததற்காக பின்னர் மிகவும் வெட்கப்படிருக்கின்றேன். குறுகியிருக்கிறேன்.
அதன் பின்னர் ஊடக வேலைகளுக்காக அவருடன் அவ்வப்போது தொடர்புகளை தொடர்ந்தோம். அவரது நூல்களை ஒரு தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். இலக்கிய கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் என அவர் மீதிருந்த மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்திருந்தது. சில கூட்டங்களில் ஒன்றாக உரையாற்றும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன. கொழும்பு பல்கலைகழகத்தில் ஊடகத்துறை கற்ற போது அவரது விரிவுரை நாட்களை தவற விடுவதில்லை. எப்போதுமே அவரிடமிருந்து புதிய கோணம், புதிய வெளிச்சம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
90களின் நடுப்பகுதியில் அவரோடு சேர்ந்து ஒரு கல்வி வட்டம் ஒன்றை ஆரம்பித்தோம். தோழர்கள் மதுசூதனன், ஜோதிலிங்கம், ஜீவா, சோ.தேவராஜா மற்றும் சில இரு பெண் தோழர்களும் அதில் இருந்தனர். சிவத்தம்பி சேருக்கு இருந்த உடல் உபாதைகள் காரணமாக கொழும்பிலிருந்த அவரது வீட்டிலேயே இந்த சந்திப்பை தொடர்ந்து செய்து வந்தோம். தத்துவம், இலக்கியம், அரசியல் என சமூக விஞ்ஞானம் குறித்து சிறந்த விவாதங்களை செய்து வந்தோம். எல்லோரும் குறிப்பெடுத்தோம். அடுத்த சந்திப்புக்கான தலைப்பையும் தயாரிப்புக்கான குறிப்புகளையும் எடுத்து விட்டு கிளம்புவோம். அவருக்கு தொடர்ந்து வரும் தொலைபேசி அழைப்புகள் தான் எங்கள் பிரதான எதிரி. “...இவருக்கு ஏதாவது நடந்தால் அது பெரிய இழப்படா...” என்று சோதிலிங்கம் வாத்தி அடிக்கடி கூறுவார்.
எமக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்களையும் மதித்து ஏற்ரறுக்கொள்ளக்கூடியவர். அருந்ததியன் என்கிற பெயரில் நான் எழுதிவந்த பத்தி தொடர்பில் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தது. ஆனாலும் அருந்ததியர்கள் குறித்து நான் செய்யத் தொடங்கிய ஆய்வுப் பணிகளுக்கு நிறைய ஆலோசனைகள் வழங்கினார்.
நான் நாட்டை விட்டு கிளம்பும் போது “அங்க போய் என்னடாப்பா செய்யபோறாய்... உனக்கு இங்க நிறைய வேலை இருக்கு...” என்று அன்பு அதிருப்தியை வெளியிட்டார். எனது முந்நாள் துணைவியும் பேராசிரியரும் உறவுகாரர்களாக இருந்ததால் “அவளை கூட்டிகிட்டு இங்க வந்திரடா... என்றார்...” நான் அனுபவிக்கக் கூடிய தனிப்பட்ட சிக்கல்களை அவர் உணர்ந்திருந்ததால் நோர்வேயிலிருந்து தொலைபேசியில் உரையாடும்போதேல்லாம் ஆறுதல் கூறினார். எனது முன்னாள் துணைவியின் தரப்பில் “அவர் எங்களுக்கு இந்த வழியில் தான் சொந்தம்... அவங்கள நாங்கள் சேர்த்துக்கொள்ளுறது இல்ல..” என்று வெள்ளாளத்திமிரில் கூறுவதை பல தடவைகள் கேட்டிருக்கிறேன். ஆனால் பேராசிரியரோ அப்பாவித்தனமாக ஒவ்வொரு தடவையும் இலங்கை சென்று சந்திக்கும்போதும் அவர்களை அன்புடன் நலன் விசாரித்ததாக கூறசொல்வார். சாதி ரீதியில் அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் பெரிதாக எங்கும் பதியப்படா விட்டாலும். பலரும் அது குறித்து அறிவர்.
என்னுடைய இரு நூல் வெளியீட்டு விழாவையும் அவரது தலைமையில் தான் கொழும்பில் நடத்தினேன்.
புலமைத்துவ திமிர் இல்லாது அனைவருடனும் அன்புடன் பழகிய ஒரு மகத்தான அறிஞர் அவர். அவருடன் பழகிய பலரும் இதனை அறிவார்கள். அவரது ஆய்வுகளும் எழுத்துக்களும் காலத்தால் அளிக்கமுடியாதவை. அவரது இழப்பு உலக தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு. அவரை இறுதியாக வழியனுப்ப அருகில் இல்லையே என்கிற ஏக்கத்துடன், அவரது குடும்பத்தினருடனும் ஏனைய அனைத்து நண்பர்களுடனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment