Thursday, August 04, 2011

சிங்கை இளங்கோவன் நேர்காணல்

கேள்வி: கவிதையில் தொடங்கிய உங்கள் பயணம் நாடகத்துறையில் வீரியம் கண்டுள்ளது. நிச்சயம் இஃது அபூர்வமானது. எழுதுவதற்கும் இயக்குவதற்குமான பரிணாமத்தைப் பற்றி கூறுங்கள்.
பதில்: இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. கவிதைக்கும் நாடகத்திற்கும் எப்போதுமே நெருக்கம் அதிகம். மரபுக் கவிதைகளில் தொடங்கி மரபை மீறிய கவிதைகளில் தொடர்ந்து வரும்போதே நான் வானொலிக்கும் மேடைக்கும் நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்தேன். கவிதையையும் புனைகதையையும் கடந்து விடயங்களை அதிக வீச்சுடன், உடனுக்குடன் வெளிப்படுத்தும் ஆற்றல் நாடக வடிவத்துக்கு இருப்பதைக் கண்டுகொண்டேன். அதிலும் நான் ஏற்கெனவே மாணவப் பருவத்தில் சிங்கப்பூர் வானொலியில் பி. கிருஷ்ணனின் (புதுமைதாசன்) தயாரிப்பில் உருவான மாணவர் மேடை நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதைகளையும் கதைப்பாடல்களையும் (Lord Byron, Samuel Taylor Coleridge, Matthew Arnold) தமிழில் நாடகமாக்கி இருந்ததால், அந்த அனுபவம் நல்ல எழுத்துப் பயிற்சியாக அமைந்தது. 1975 செப்டெம்பரில், பழைய டிராமா சென்டரில் (Drama Centre, Fort Canning) ஆங்கிலக் கவிஞன் பைரனின் சில்லோனின் கைதி (Prisoner of Chillon) என்னும் கவிதையை இருபது நிமிட மேடை நாடகமாக்கி, அதை ஒரு மசாலா தமிழ் ஆடல் பாடல் கலைநிழ்ச்சியில் ஓர் அங்கமாக, காலஞ்சென்ற உதுமான் கனியை இயக்கி நடிக்கவைத்தேன். அதுவே என் முதல் மேடை நாடகம். இலக்கிய வரலாற்றைப் பாருங்கள். மிகச்சிறந்த கவிஞர்களே நாடகாசிரியர்களாய்ப் பரிணமித்துள்ளார்கள். சில உதாரணங்கள்: காளிதாசன், ஷேக்ஸ்பியர் (Shakespeare), பிரெக்ட் (Brecht), லோர்கா (Lorca) போன்ற கலைஞர்கள். கவிதைக்கு உயிரூட்டுவதில் உள்ள அர்த்த இறுக்கமும் சொற்சுருக்கமும் சார்ந்த அணுகுமுறைகள் நாடக வசன உருவாக்கத்துக்கு மிகவும் கைக்கொடுக்கின்றன எனலாம். என் அனுபவத்தில், ஒரு கவிதை எழுதுவதைவிட ஒரு நாடகத்தைப் படைப்பதென்பது இன்னும் கொடூரமான கலாவேதனை தரக்கூடியது. பொதுவாக நாடக அரங்கேற்றத்தில் இரு கலைஞர்களின் பங்கு இருக்கும். நாடகத்தை எழுதுபவர் ஒருவராகவும், நாடகத்தை இயக்குபவர் வேறொருவராகவும் இருப்பர். எழுத்தாளரின் நாடகப் பிரதியிலிருந்து (Text) புதிய ஆட்டப் பிரதியை (Performance Text) உருவாக்கும் நாடக இயக்குனர், நாடக ஒத்திகையின்போது எழுத்தாளரை அறவே அனுமதிக்கவேமாட்டார். அப்படி வலிந்து நாடக எழுத்தாளர் உள்ளே அமர்ந்தால், அவரது பிரதி கண்முன்னால் கட்டுடைப்புக்குள்ளாவதைக் காணச் சகிக்காமல் அவர் தற்கொலை செய்துகொள்ளக்கூடும்.
மேற்கில், பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நாடக எழுத்தாளரே நாடகத்தின் இயக்கத்தையும் கவனித்துக்கொண்டார். பிறகு, இயக்குனர் என்ற கலைஞரின் வருகையால் உலக நாடக அரங்கின் போக்கே மாறிப்போனது. இயக்குனரின் குரல் ஓங்க, எழுத்தாளர் பேசாமல் ஒதுங்கிக்கொள்ளவேண்டிய சூழல் உருவானது. அதே சமயத்தில், ஒரே நாடகப் பிரதி, பல்வேறு இயக்குனர்களின் பார்வையில் விதவிதமான அவதாரங்கள் எடுக்க ஆரம்பித்தன. எழுத்தாளருக்கும் இயக்குனருக்கும் இடையே நடக்கும் போர் இன்னும் தொடர்கின்றது. சேமுவல் பெக்கெட் (Samuel Becket) , தன் நாடகங்கள் எப்படி எந்த ஒரு சிறு மாற்றமும் இல்லாமல் இயக்கப்படவேண்டும் என்று இயக்குனருக்கான கட்டளைகளை ஒவ்வொரு நாடகப் பிரதியிலும் எழுதிவைத்துச் சென்றுள்ளார். அதை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்சனை எனக்குக் கிடையாது. என் நாடகப் பிரதியை நான் உருவாக்கும்போதே அதன் அனைத்துப் பரிமாணங்களையும் உள்வாங்கி ஆட்டப் பிரதியாகவே தயாரித்துவிடுகிறேன். என் படைப்பாக்கத் திறனையும் மீறி, நான் பெற்றிருக்கும் நாடக இயக்க அனுபவம், ஆஸ்திரேலியாவிலும், இலண்டனிலும், ஸ்பெயினிலும் நாடக இயக்கத்துக்காகப் பெற்ற இளங்கலை, முதுகலைப் பட்டங்களும் முறையான பயிற்சிகளும் இதற்கு உதவுகின்றன. நடிகர்களைத் தவிர யாரையும் நம்பி நான் என் நாடகத்தை அரங்கேற்றுவதில்லை. ஒலி ஒளி அமைப்பு, அரங்க அமைப்புச் சார்ந்த தொழில் நுட்பங்களைப் பெரும்பாலும் நானே கவனித்துக்கொள்வதால் பணச்செலவும் நேரமும் மிச்சம். என் படைப்புகளை நான் கலை இயக்குனராக இருக்கும் ‘அக்கினிக் கூத்து’ குழுவே அரங்கேற்றுவதால் வேறு எந்த அமைப்பையும் அண்டி வாய்ப்புக்குச் சலாம் போட வேண்டிய அவலமும் இல்லை. என் நடிகர்களில் பெரும்பாலோர் நான் நாடக விரிவுரையாளராக இருந்தபோது என்னால் பயிற்றுவிக்கப்பட்டு ஆங்கில நாடகத்துறையில் டிப்ளோமா வாங்கியவர்கள். ஆகையால், அவர்களை இயக்குவது மிக எளிது. நான் எதிர்பார்ப்பதை மிகச் சுலபமாகக் கிரகித்துக்கொண்டு நடிக்கிறார்கள்.

கேள்வி: இவை அனைத்தும் நாடகத்தின் புறச் செயற்பாடுகள். இவற்றுக்கும் அப்பால் எழுதுவதற்கும் இயக்குவதற்குமான பரிணாமம் குறித்துக் கூறுங்கள்.
பதில்: எங்கோ, என் கண்முன்னோ, என்னைச் சுற்றியோ நிகழ்பவை, நான் உணர்வாலும் அறிவாலும் தெரிந்தும் புரிந்தும் கொள்பவை அனைத்தும் என்னைப் பாதிக்கும்போது என்னுள் ஏற்படும் சலனங்கள், கேள்விகள், தர்க்கங்கள், அறச்சீற்றங்கள் ஒரு தீப்பொறியாய் உருண்டு திரண்டு எரியும். அப்போது அதன் உள்ளடக்கத்தைப் பொருத்து அதன் நாடக உருவத்தைத் தீர்மானித்துக் கொள்வதோடு, காட்சிகளையும் மனத்தில் அசைபோட்டுச் செப்பனிட்டு முழு வடிவமும் தயாரானவுடன் எழுத ஆரம்பிக்கிறேன். ஆற்றொழுக்காகவும் எழுத முடியாது. எழுதும்போதே மனம் இயங்கவும் செய்வதால் அடித்துத் திருத்தி பரமபதம் விளையாடி ஜெயிக்கவேண்டும். உண்மையில் நாடக இயக்கம் என்றால் என்ன என்று யாரும் யாருக்கும் கற்றுத்தர முடியாது. உலக இயக்குனர்களின் அணுகுமுறைகளையும் கோட்பாடுகளையும் பற்றிய விமர்சனக் கருத்துப் பரிமாற்றங்களும், மேற்கத்திய கிழக்கத்திய நாடக ஆய்வுகளும் பல தரிசனங்களைத் தரலாம். ஆனால், ஒருவரின் தனிப்பட்ட கலைத் திறனே அவரை இயக்குனராக்குகிறது. அதனால், மூளையைக் கலங்கடிக்கும் நாடக இயக்கத்தைவிட, வெறும் உடல்மொழி ஆக்கத்தில் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய நடிப்புத் துறையையே பலரும் தேர்ந்தெடுக்கிறார்கள். நாடக இயக்கத்தில் பட்டம் பெற்றும், பலருக்கு அவர்களின் கல்வியறிவும் பயிற்சியும் அரங்கத்தில் உதவாமல் தோற்றுப்போவது வாடிக்கை. லௌகீக வாழ்வின் உரசல்களிலும் நெரிசல்களிலும் தளர்ந்துபோனாலும், எந்த அதிகாரத்திடமும் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல் இருக்கும் ஒரு படைப்பாளிக்குள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவனைக் கலைஞனாக்கி, அவன் கலாசிருஷ்டிக்கு உன்னதம் சேர்க்கின்றது.
கேள்வி: ஆஸ்திரேலியாவில் இளங்கலை படித்த போது அகஸ்தோ போவாலை (Augusto Boal) சந்தித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
பதில்: இந்நூற்றாண்டின் மாபெரும் கலைஞர் அகஸ்தோ போவால். நோபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவர் கடந்த வருடம் மே மாதம் இரண்டாம் தேதி காலமானது மிகப்பெரிய இழப்பு. ஒடுக்கும் அதிகாரவர்க்கத்தினை எதிர்க்க அவர் உருவாக்கிய ஒடுக்கப்பட்டோர்க்கான (Theatre of the Oppressed) அரங்கு இன்று பல நாடுகளில் தீவிரமாக இயங்கிவருகிறது. இன்று பரவலாக அறியப்படும் வீதி நாடகம் (Street Theatre), கல்விசார் நாடகம் (Theatre-in-Education) போன்ற நாடக வகைகள் அவருடைய பயிற்சி முறைகளை அடியொற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கு மார்க்சிச சித்தாந்தத்தில் வேர்கொண்டுள்ளதால் பல நாடுகள் அவருடைய நாடக வடிவத்துக்குத் தடைவிதித்துள்ளன. இதில் ஆசியான் நாடுகள் அனைத்தும் அடக்கம் என்றாலும் சிங்கப்பூரில் தற்போது அரசியல் கலக்காமல், சர்ச்சை இல்லாத சமூகக் குடும்பப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட கருவைக்கொண்ட ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கின் ஒரு முக்கியக் கூறான Forum Theatre வடிவத்துக்கு அனுமதி உண்டு. அனுமதியும் நாடக எழுத்துவடிவத்தின் தணிக்கைக்குப் பின்னரே கிடைக்கும். இது வெட்கக்கேடு. அரசாங்கத்திடம் நிதி வாங்கிக்கொண்டு ஒரு சீன நாடகக் குழுவும், ஓர் ஆங்கில நாடகக் குழுவும் இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளன. சத்தியமாக ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கு எழுத்துப்பூர்வமான மரபார்ந்த நாடக அரங்குக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கில் பார்வையாளர்களே நடிகர்களாக மாறி சமூகப் பிரச்சனைகளை விவாதித்து விழிப்புணர்வு பெறுவார்கள். ஜோக்கர் (Joker) என்னும் சூத்ரதாரியின் மேற்பார்வையில் ஒருசில முறையான நடிப்புப் பயிற்சி பெற்ற நடிகர்கள் ஒரு காட்சியை நடித்துக் காட்டுவார்கள். அந்தப் பிரச்சனைக்கான தீர்வைப் பார்வையாளர்களில் யார் வேண்டுமானாலும் முன்வந்து மீண்டும் நடித்துக் காட்டலாம் அல்லது நடிகர்களை நடிக்கச் சொல்லலாம். இந்நிலையில் பிரச்சனையின் பன்முகம் ஆழமாக அலசப்படுகிறது. காட்சிக்குச் சம்பிரதாயமான வசன எழுத்துப்படிவம் எதுவும் கிடையாது. அவர்கள் பிரச்சனையைக் கையாண்டவிதம் சரியில்லை என்று கருதும் பார்வையாளர் முன்வைக்கும் கருத்துக்கேற்ப நடிகர்கள் அதே காட்சியை வேறுவிதமாக நடித்துக் காட்டுவர். இப்படியே அரங்கில் பார்வையாளர்களின் குறுக்கீடுக்கேற்ப பிரச்சனையின் முகம் மாறும். ஜோக்கர் அரங்கின் நிலைமை கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வார். முடிவில் பார்வையாளர்கள் வெறுமனே நாடகம் பார்த்து இரசித்து மறந்து வீட்டுக்குப் போகாமல் சமூக மாற்றத்தைக் கொண்டுவருபவர்களாய்ச் சக்தி பெற்று மாறுகிறார்கள். இந்தச் சுதந்திரம் எழுத்துப் பிரதி உள்ள நாடகத்தில் கிடையாது. ஒவ்வொரு ஜனநாயக விரோத அரசாங்கமும் அஞ்சும் வடிவம் இது.
அகஸ்தோ போவாலின் கூற்றுப்படி ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கு என்பது புரட்சிக்கான ஒத்திகை ஆகும். 1995-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அகஸ்தோ போவால் Brisbane வந்திருந்தார். அவரிடம் நேரடிப் பயிற்சி பெறுவதற்காக ஆஸ்திரேலியா முழுதும் இருந்து வந்த விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது பேர்களில் நானும் ஒருவன், அதிலும் ஒரே தமிழன். பயிற்சி முகாம் கிரிப்பித்ஸ் (Griffiths) பல்கலைக்கழகத்தில் நடந்தது. முழுச் செலவையும் நான் பயின்ற மேற்கு ஆஸ்திரேலியா நிகழ்கலை அகாடமி (Western Australian Academy of Performing Arts) ஏற்றுக்கொண்டது. நான் என் மானசீக குருவிடமே வித்தையைக் கற்றுத் தெளிந்தேன். அந்தக் கலைஞனின் ஆளுமையும் எளிமையும் என்னை ஆட்கொண்டன. பயிற்சி நேரம் போக அவருடன் அளவளாவியது, ஒரு ஞானவேள்வியில் குளித்து எழுந்த அனுபூதியானது. பிரேசிலில் (Brazil), Rio de Janerio -வில் அவர் தோற்றுவித்த ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்குடன் சேர்ந்து, ஒடுக்கப்பட்ட சேரிவாழ் மக்களுடன் பணியாற்ற அழைத்தார். அதற்கு முன் போர்த்துக்கீசிய மொழியைக் கற்றுக்கொள்ளச் சொன்னார். பெர்த்துக்குத் (Perth) திரும்பியதும், போர்த்துக்கீசிய மொழியைக் கற்கத் தொடங்கியபோது, இலண்டன் மிட்டல்செக்ஸ் (Middlesex) பல்கலைக்கழகத்தில் உலகில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துலக இயக்குனர் துறையின் (International Directing Programme) முதுகலைப் பட்டப்படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வாழ்க்கை மாறிப் போனது. இலண்டனுக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்த எரிச்சலடையவைக்கும், வருத்தமளிக்கும் தமிழ் வெளியை விட்டு எட்டிப் போயிருப்பேன். என்னால் ஒடுக்கப்பட்டோர்க்கான அரங்கை ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூரில் நிலைநிறுத்த முடியாமல் போனாலும், இன்று அகஸ்தோ போவாலின் கையெழுத்தைச் சுமந்த அவரது நூல்களும் அவரோடும் அவர் மனைவியோடும் நான் எடுத்துக்கொண்ட படமும் விலைமதிப்பில்லாப் பொக்கிஷங்களாய் என் நூலகத்தில் வீற்றிருக்கின்றன. ஒவ்வொரு காத்திரமான படைப்பும் எப்பொழுதும் வெடிக்கக் காத்திருக்கும் புரட்சியின் வித்து என்பதை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: தன்னளவிற்குச் சர்ச்சைக்குரியவரை நினைத்துப் பார்க்கும்போது சாரு நிவேதிதாவிற்கு அகஸ்தோ போவல்தான் ஞாபகத்திற்கு வருகிறார். தென் அமெரிக்காவையே கரைத்துக் குடித்திருக்கும் சாரு உங்களை அறியாமல் இருக்கமாட்டார். இத்தகையத் தமிழகத்து உதாசீனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்?
பதில்: சாரு அகஸ்டோ போவாலைச் சந்தித்திருக்கமாட்டார். நான் நேரடிப் பயிற்சி பெற்றவன். அகஸ்டோ போவால் சாருவின் நினைவிற்கு வருவது அவரது தனி உரிமை. நான் சாருவின் எழுத்துகளை விரும்பிப் படிக்கிறேன்; மிகவும் இரசிக்கிறேன். அவரது பன்னாட்டு இலக்கிய இரசனை குறித்த கருத்துகளோடு ஒத்துப்போகிறேன் (அவ்வப்போது அவர் தெரிந்தோ தெரியாமலோ அடிக்கும் ‘பல்டி’களைத் தவிர). முக்கால்வாசி தமிழ்நாட்டுத் தமிழ் எழுத்தாளனின் சமரசமிக்கத் தொடைநடுங்கி வாழ்க்கைக்கும், அவன் இல்லாத மசிரைத் தூக்கிக்கொண்டு கிறுக்கித்தள்ளி ‘நானே ராஜா, என் குசுவே மந்திரி’ என்று ஸ்கலிதம் அடையும் அவனது எழுத்துக்கும் இடையே உள்ள அருவருக்கத்தக்க அதலபாதாளத்தைப் பற்றிய சாருவின் பார்வையோடும் உடன்பாடுதான். சாருவுக்காக நான் வக்காலத்து வாங்கவில்லை. முதலில், சாருவுக்கு என்னைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அவர் படைப்புலகம் மட்டுமே பரிச்சயம். தென் அமெரிக்க இலக்கியங்களை மட்டுமல்ல, ஏனைய உலக இலக்கியங்களை நானும் அளவோடு கரைக்காமல் விழுங்கியிருக்கிறேன். ஒருவரின் வாசிப்புக்கு நிறைய உழைப்புத் தேவை. சரியான வாசிப்பு நம் இலக்கியப் பரப்பையும் பார்வையையும் விரிவாக்கும். நாம் இதுநாள்வரை எழுதியது எல்லாம் எழுத்தா என்று நம்மையே குடைந்து கூனிக்குறுகச் செய்யும். தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் அருட்பார்வையில்தான் இலக்கிய மோட்சமே கிடைக்கும் என்று இன்னும் நம்பிக்கொண்டு அவர்களின் எழுத்துகளையும் சொல்லாடல்களையும் நகலெடுத்துக் கவிதை, சிறுகதை என்று வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் சிங்கப்பூர், மலேசியக் குதநக்கிகள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அவர்கள்தான் உதாசீனத்தைத் தாங்கமுடியாமல் மலஜலம் கழிக்கமுடியாமல் அவதிப்படக்கூடும்.
ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 1989 முதல் சிங்கப்பூர் அரசின் இலக்கிய விருந்தினர்களாய்த் தமிழகத்திலிருந்து வந்த கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி (காலஞ்சென்ற), செ.ரவீந்திரன், அசோகமித்திரன், கா.சிவத்தம்பி, ஞானக்கூத்தன், ஜெயகாந்தன், எஸ். பொன்னுத்துரை, பிரபஞ்சன், அம்பை, நீல பத்மநாபன் ஆகியோர் நண்பர்கள்தான். நல்லவேளையாக நான் இவர்களில் யாருக்கும் தொண்டனாகி என்னைப்பற்றி தமிழ்நாடு இதழ்களில் எழுதுங்கள் என்று சாஷ்டாங்கமாய்க் காலில் விழவில்லை. அப்படி என் தன்மானத்தை அன்றே ஏலம் விட்டிருந்தால், எனக்கும் மானங்கெட்ட மந்திகள் ஆளும் தமிழ்நாட்டில் மாலையும் மரியாதையும் தங்கத்தாலான கெளபீனமும் தாராளமாய்க் கிடைத்திருக்கும். சுந்தர ராமசாமி, சிங்கப்பூர் இலக்கியத்தைப் பற்றி அன்றைய காலச்சுவட்டில் எழுதக்கேட்டும் என்னால் வாய்கூசாமல் திட்டத்தான் முடியும் என்பதால் எழுதவில்லை. நான் அறியாமலேயே என் நாடகங்களைப் பற்றி பல இலக்கிய ஆய்வரங்குகளில் ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தவர் முனைவர் செ.ரவீந்திரன் என்பது கூட காலங்கடந்தே தெரியவந்தது. கூத்துப்பட்டறை ஒரு தொழில் முறை அமைப்பாகிவிட்டதாலும், அதன் நிர்வாகிகள் சமூகத்தின் பெரியமனிதர்கள் ஆனதாலும், அங்கு என் சர்ச்சைக்குரிய நாடகங்களை அரங்கேற்றுவது பண்பல்ல. 2003-இல் ஊடாடி நூல் வெளியீட்டின் போது, ஒரு நூற்றாண்டு கால மலேசியா சிங்கப்பூர்த் தலித்துகளைப் பற்றிய அந்நூல் தமிழகத் தலித்துகளுக்கு எதிரானது என்று திருமாவளவன், ரவிக்குமார், டாக்டர் குணசேகரன் சார்ந்த கும்பல், அடியாட்கள் அனுப்புவோம் என்று கூத்துப்பட்டறையைத் தொலைபேசியில் மிரட்டியதால், நிகழ்ச்சியைப் பாதுகாவலர்களோடு ஹோட்டலில் நடத்தவேண்டியிருந்தது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் தாரகமந்திரமாயக் கொண்ட தமிழகத்தில், நான் சந்தித்த, பழகிய பல இலக்கியவாதிகள் இன்றும் அரசியல் கழைகூத்தாடிகளின் குறட்டைச் சத்தத்திற்கு கூட ஆடாமல் அசையாமல், கலகக்கார முகமூடியணிந்து கரவொலிக்காக அந்தரநடை நடந்துகொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. ஏப்ரல் 1999 -இல், சிங்கப்பூர் சீன எழுத்தாளர் கழகமும், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மையமும் இணைந்து ஏற்பாடு செய்த நான்கின இலக்கியப் பயணத்தில் பங்கேற்று சீனாவின் ஐந்து நகரங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை வாசித்த அனுபவத்துக்கு முன் தமிழகத் தரிசனங்கள் துச்சம். எனவே, கீர்த்தனாரம்பத்தில் சொல்லியதுபோல், தமிழ்நாட்டு உதாசீனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே கூடாது. எனக்கு எதிர்பார்ப்பும் இல்லை. ஏமாற்றமும் இல்லை.
கேள்வி: உரத்துச் சிந்திக்கும்போது நாடக அமைப்பில் கலையுணர்வு பாதிக்கப்படும் ஆபத்தை எப்படி எதிர்க்கொள்கிறீர்?
பதில்: இதை ஓர் அதிவேக ஃபெர்ராரி (Ferrari) காரை மலைச்சிகரத்தை நோக்கி வளைந்து செல்லும் சாலையில் ஓட்டுவதற்கு ஒப்பிடலாம். உரத்த சிந்தனை என்பது முரட்டுக் குதிரை போல் திமிறும். அடக்காவிட்டால், கலைப் படைப்புப் பிரச்சார நெடியால் நாறிப்போய்விடும். நாடக அமைப்பில் தேவை இல்லாத சொற்கள், வாக்கியங்கள் வரக்கூடாது. அவை எவ்வளவு அழகாக இருந்தாலும் இரக்கமில்லாமல் நிராகரிக்கப்படவேண்டும். நாடகப் பிரதி, கவிதை புனைகதையைப்போல் வெறும் வாசிப்புக்காக மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அது பன்முகம்கொண்ட சீரிய ஆட்டப் பிரதியாகவும் மாறவேண்டியுள்ளது. அப்போது எவ்வித உரத்த சிந்தனையும், நாடகீயத் தன்மையோடுதான் சொல்லப்படவேண்டும். ஒரு செய்தியையோ தகவலையோ தெரிவிக்கும் நடிகர், வசனத்தை இயக்குனரின் உதவியோடு கட்டுடைத்து ஜீரணித்து, அதற்குத் தன் உடல்மொழியாலும், உச்சரிப்பாலும் உரமேற்றி வெளிப்படுத்தவேண்டி இருக்கின்றது. இதை நடிகர் உணர்வோடு வழங்கும்போது, பின்னணியில் ஓலி, ஒளி அமைப்பு, மேடை வடிவமைப்பு, இசை, உடை முக அலங்காரம், மேடையில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கவனத்தில்கொண்டே அசைகிறார், பேசுகிறார், பல்வேறு மனநிலைகளைக் காட்டி அசத்துகிறார். நடிகரின் நடிப்புக்கான தேவை நாடக வடிவத்துக்கேற்பவும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, ஒரு நேரடியான யதார்த்த பாணி நாடகத்தில் நடிப்பதற்கும், பின் நவீனத்துவ நாடகத்தில் நடிப்பதற்கும் வேற்றுமைகள் அதிகம். யதார்த்த பாணி நாடகத்தில் இரு பாத்திரங்கள் உரையாடுவதை நாம் சற்று இலகுவாகப் புரிந்துகொள்ளும் வசதி இருக்கிறது. இந்த நேர்க்கோட்டு கதைசொல்லும் பாணி பின் நவீனத்துவ அல்லது அபத்த நாடகங்களில் அறவே இல்லாததால், பார்வையாளரின் புரிதலுக்கு அதிக வேலை இருக்கலாம். ஒரு நடிகர் அரங்கில் நம் முன் சுழன்றுகொண்டே இருக்கையில், முன்பே பதிவு செய்யப்பட்ட அவரின் பெரிய முகம் அகன்ற திரையில் தோன்றி நம்மைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்கலாம்; திட்டித் தீர்க்கலாம். கண்முன் உயிருள்ள நடிகரும் திரையில் காட்டப்படும் அதே நடிகரின் பிம்பமும் ஒருசேர நம்மை அலைக்கழிக்கும் அனுபவம் வித்தியாசமானது. இன்று நவீன தொழில் நுட்பம் நாடகத்தின் போக்கையே திசை திருப்பி பார்வையாளரை இரசனை மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. இதனால், இயக்குனருக்கு அதிக வேலை இருக்கிறது. என்னுடைய நாடகங்களில் நான் எதையும் பிரச்சாரம் செய்வதில்லை. கனமான விடயங்களைக்கூட கலை நேர்த்தியோடு வெளிப்படுத்துவதில் கவனமாக இருப்பதால், கலையுணர்வு பாதிக்கப்படும் ஆபத்தில்லை. நாடகம் எடுத்துக்கொண்ட பிரச்சினையையோ முரண்பாட்டையோ பார்வையாளர்களின் புரிதலுக்கே விட்டுவிடுகிறேன். நான் என் படைப்பில், எந்தப் பிரச்சினைக்கும் எந்தத் தீர்வும் சொல்வதில்லை. அது என் வேலையுமில்லை. நாடகம் விழிப்புணர்வூட்டலாம். உலகத்தை மாற்றமுடியாது.
கேள்வி: அதிகாரத்திற்கெதிரான சிங்கையில் செயல்படும் மாற்று அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி விளக்கவும்? அவர்களோடு உங்கள் உறவு எத்தகையது?
பதில்: நாட்டை ஆளும் நபும்சக (Eunuchs) அதிகார மையம் மாற்றுகுரலை நாசுக்காக நசுக்குவதில் மும்முமரமாய் இருக்கிறது. அப்படி அதிகாரத்திற்கெதிராக உரத்து குரல்கொடுக்க சிங்கையில் செயல்படும் எந்த அமைப்பும் கிடையாது. அப்படி ஓர் அமைப்பைத் தொடங்கினால், அதற்குச் சட்டப்படி பதிவுசெய்யவேண்டு, Registrar of Societies-இல் பதிவு செய்தாலும் அனுமதி கிடைக்காது. சிங்கப்பூரில் அதிகாரத்தை நோக்கி உண்மை பேசவேண்டுமானால் (Speaking truth to power) அரசியல் கட்சி ஆரம்பித்துத் திடீரென வரும் பொது தேர்தலுக்காகக் காத்திருக்கவேண்டும். தேர்தல் வருவதற்குள் தனி தொகுதிகள், குழு தொகுதிகளாக மாற்றியமைக்கப்படும் (gerrymandering), எதிர்கட்சிகள் தேர்தலில் நான்கினத்தையும் பிரதிநிதிக்கும் உறுப்பினர்களை நிறுத்தமுடியாமல் போய்விடும். ஆளுங்கட்சி வாக்களிப்பே இல்லாமல் வெற்றிவாகை சூடிவிடும். இப்படியே சிங்கப்பூரில் ஜனநாயக உரிமையான வாக்களிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் குடிமக்கள் செம்மறியாட்டு மந்தைகள் போல் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நகைச்சுவை நாடகம் சர்வாதிகாரத்துக்கான மேல்பூச்சு. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பட்டம்பதவி பெற்ற ஒத்து ஊதிகளே வெறும் 66.6 விழுக்காட்டு ஆதரவோடு நாடாளுவது நல்ல தமாஷ்.
மக்களின் நெறிக்கப்பட்ட ஜனநாயக குரல்வளையை நீவிவிட கலை அமைப்புகள் வாயிலாக எதிர்ப்பைத் தெரிவித்தால், தேசியக் கலை மன்றத்தின் கலைப்படைப்புகளுக்கான மானியம் அறவே கிடைக்காது. நாளேடுகள் உங்கள் படைப்பை இருட்டடிப்புச் செய்துவிட, பார்வையாளர்கள் வரமாட்டார்கள். வெறுத்துப்போய் நீங்களே ஒதுங்கி, அப்படி ஒரு கலைஞன் இருந்தானா என்று அரசாங்கத்திடம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து பிச்சை வாங்கிக்கொண்டு அடக்கி வாசித்து வாலாட்டும் ஏனைய கலை நாய்கள் கேலி பேசும். எந்த அமைப்புகளோடும் எனக்கு உறவும் கிடையாது. உறவு வைத்துக்கொள்வதே ஆபத்து. ஹிட்லரின் நாசி ஜெர்மனி, ஸ்டாலினின் ரஷ்யா காலத்தில் காட்டிக்கொடுத்து ஜீவித்த ஒட்டுண்ணிகளுக்கும் சிங்கப்பூர் கலை நிறுவனங்களை நடத்தி வயிற்றைக் கழுவும் philistines-களுக்கும் ஒரேமுகந்தான். சொந்த பணத்தை முதலீடு செய்து ஆளும் அதிகார வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ள விரைகளும் கிடையாது. ‘கொட்டை தூக்கி வாழ்வதைவிட கட்டை தூக்கி சாகலாம்’ என்று அதிகார மையத்தை எதிர்த்தோர் எல்லாம் பொம்மலாட்ட சட்ட நடவடிக்கைகளால் திவாலாகியும், நாட்டை விட்டோடியும் வாழ்வதும் மடிவதும் வரலாறு. அதனால்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே கட்சிக்கு ஓட்டுப்போட்டு அடிமைகளாய்ச் சூடு சொரணையற்று நடைபிணங்களாய் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்கப்பூர் எனும் சிவப்புப் புள்ளி, பொருளாதரத்தில் பாராட்டுக்களைக் குவிக்கும் முதல் உலக நாடு. ஆனால் கருத்துச் சுதந்திரத்திலும், மனித உரிமையிலும், பத்திரிகைச் சுதந்திரத்திலும், ஒரு மிகச் சிறந்த மூன்றாம் உலக நாடு – ஜனநாயக சுடுகாடு. இந்த போலீஸ் ஸ்டேட் (Police State)-ல், எனது படைப்புகளுக்காக நான் கண்காணிக்கப்படுவது எனக்குத் தெரியும். எனக்குப் பின்னால் எந்தக் கும்பலும் கிடையாது. அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. நான் தனி மனிதன். கவிஞன், நாடகக் கலைஞன். என் ஆங்கில, தமிழ்ப் படைப்புகளில் ஒடுக்கப்படும் முகமற்ற குரலற்ற நான்கின விளிம்பு மனிதர்களின் பிரச்சனைகளை முன்வைத்து அதிகாரத்தைப் பகடி செய்கிறேன். அவ்வப்போது அரசாங்கத்தின் மடி நாய்களான உள்நாட்டுப் பத்திரிகைகளுக்குச் சர்ச்சைக்குரிய நாடகங்களை எழுதி அரங்கேற்றுவதால் செய்திக்குத் தீனி தருகிறேன். சிங்கப்பூரில் அரங்கேறும் மற்ற நாடக குழுக்களுக்கு ஆங்கில தேசிய நாளேடுகளில் சுலபமாய்க் கிடைக்கும் அறிமுக செய்தியோ விமர்சனமோ எதுவும் என் நாடகங்களுக்குக் கிடைக்காது. நாடகத்துக்கான படங்களையும் தகவலையும் நானே அனுப்பிவைத்தாலும், எதுவும் வெளிவராது. கருணையுள்ள சிந்திக்கத்தெரிந்த சில கலை நிருபர்கள் என் மேல் உள்ள மதிப்பினால் தொலைபேசியில் பேட்டிகண்டு எழுதினாலும், அதை நிர்வாகம் தடைசெய்துவிடும். பத்திரிகையில் செய்தி வராததால் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் வலைப்பக்கஙகளில்தான் என் நாடகங்கள் விளம்பரம் ஆகின்றன.
இவ்வளவு தண்டனைகளும் போதாதென்று, அரசாங்க தணிக்கைக் குழுவின் வெட்டியான்கள், என் நாடகங்கள் சர்ச்சைக்குரியவை என்பதால், அவற்றில் ஒரு சொல்லைக்கூட வெட்டாமல் அல்லது மாற்றவும் சொல்லாமல் ஒரே அடியாய் நாடகத்தைப்பார்க்க 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அனுமதி என்னும் விதியையும் சூடுபோட்டுவிடுவார்கள். இதனால் இளையதலைமுறை பார்வையாளர்கள் 19 வயதான பிறகே என் நாடகங்களைப் பார்க்கமுடியும். ஆனால், அவர்கள், என் நாடக நூல்களை (ஏற்கனவே மும்முறை தமிழில் ஒரு தணிக்கை வெட்டுமில்லாமல் அரங்கேறியிருந்தாலும் ஆங்கிலத்திலும் மலாயிலும் அரங்கேறும்போது அக்டோபர் 2000 -இல் தடைசெய்யப்பட்ட தலாக், ஆகஸ்ட் 2006 -இல் ஒரு தணிக்கை வெட்டுமில்லாமல் அனுமதி வழங்கப்பட்டும் நாடகம் அரங்கேறுவதற்கு முதல்நாள் தடைசெய்யப்பட்ட Smegma, பொது நூலகங்கிலும் மூன்றே மூன்று சிறிய ஆங்கில புத்தகக்கடைகளிலும் பார்க்கமுடியும். நாடகத்துக்கு தடை ஆனால் நாடகத்தின் வசனங்களைக் கொண்ட புத்தகத்துக்கு தடை இல்லை. ஏனென்றால், புத்தகத்துக்கு தடை விதிக்க அதை அரசாங்கம் Gazette பண்ணவேண்டும். ஒரு சிறுபான்மையின் படைப்பாளிக்கு அந்த முக்கியத்துவத்தைக் கொடுத்துப் பிரபலப்படுத்த அதிகார மையத்துக்கு மனமில்லை. சிங்கப்பூரில் இலக்கியப் படைப்புகள் தடைசெய்யப்பட்ட ஒரே எழுத்தாளன் என்றாலும், என் நாடகங்களை பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலத்தில் ஆய்வுசெய்து இளங்கலைப்பட்டம் பெறுகிறார்கள் என்றாலும், இன்னும் தொடர்ந்து இலக்கிய ஏவுகணைகளைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும் எனக்கு, அதிகார மையத்துடனான இந்தச் சமர் சுவாரசியமாய் இருக்கிறது.
கேள்வி: தாங்கள் கவிதை எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் தங்கள் கவிதைகள் வீரியம் மிக்கதாகவும் அதிகாரத்துக்கு எதிரான தீவிர குரலாகவும் இருந்துள்ளது. இதைச் சக கவிஞர்களும் வாசகர்களும் எவ்வாறு எதிர்கொண்டனர்?
பதில்: கிண்டலா? என் கவிதைகள் எப்பொழுதுமே வீரியம் மிக்கதாகவும், அதிகாரத்துக்கு எதிரான தீவிர குரலாகவும் இருந்தே வந்துள்ளன. 1988-க்குப் பிறகு நான் கவிதை நூல்கள் எதையும் வெளியிடவில்லையே தவிர கவிதைகள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். தொகுக்கவில்லை; பிரசுரிப்பதிலும் ஆர்வமில்லை. அவ்வப்போது தேசியத் தொகுப்புகளில் கவிதைகள் ஆங்கிலத்திலும் தமிழும் இடம்பெற்றே வந்துள்ளன. ஆனால் 1996-இல் இருந்து வரிசையாகப் பதினொறு நாடகத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இன்னும் இரண்டு தொகுப்புகள் வெளிவர உள்ளன. சக கவிஞர்கள், வாசகர்கள் என்றால் என் கவிதைகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் சீன, மலாய், தமிழரல்லாத இந்தியப் படைப்பாளிகளைத்தான் சுட்டவேண்டும். அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரே இருமொழிக் கவிஞன் நான். சிங்கப்பூரின் தமிழ் இலக்கியக் மாவறைக்கும் கபோதிகளைப் பற்றி நான் என்றுமே அலட்டிகொள்வதில்லை. அவர்கள் பரமார்த்த குருவின் சீடர்கள் ஆகையால், என் கவிதைகள், அதிலும் குறிப்பாக 1984-ல் வெளிவந்த மௌனவதம் தொகுப்பில் உள்ளவை 1988-ல் தமிழ்ச் சமூகத்தையும் தமிழ் அன்னையையும் கற்பழித்துவிட்டதாகக் கதறிக் கதறி உள்துறை இலாகாவுக்கும் எல்லா அமைச்சுகளுக்கும் மொட்டைக்கடுதாசி போட்டே சுய காயடிப்புக்குள்ளாகி வரிசையாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். மௌனவதமும் தடைசெய்யப்படவில்லை. எனக்கு மௌனவதம் ஒரு பெரிய படைப்பாகத் தெரியவில்லை. காலமும் கடந்துவிட்டது. ஆனால், எனக்கெதிராகக் கையொப்பமிட்ட அனைவரின் பெயரும் நன்றாக ஞாபகமிருக்கிறது. மண்டையைப் போட்டவர்கள் தவிர இன்னும் உயிரோடு இருப்பவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கின்றது. நாறிடும் பீத்தொட்டிகள் / நம்மவர் / நான் நீயென்று முகர்வதில் வல்லவர் (கிஷ்கிந்தை) என்று இருபத்தேழு வருடங்களுக்கு முன் எழுதியது இன்றும் நிஜமாயிருப்பது மட்டுமே அதிசயம். வாழ்க வளர்க.
கேள்வி: மலேசியாவில் தங்கள் இலக்கியம் படைத்தக் காலச்சூழலை நினைவுகூர இயலுமா?
பதில்: 1973-இல் இருந்தே சுயமாய் யாப்பிலக்கணம் கற்று மரபுக் கவிதைகள் எழுதிகொண்டிருந்தேன். தமிழ் நேசன், தமிழ் மலர், தமிழ் முரசு பத்திரிகைகளுக்கு அனுப்பிய கவிதைகள் எதுவும் பிரசுரமாகவில்லை. 1974-இல் முதல் மரபுக் கவிதை ஜூன் மாத தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் வெளிவந்தது. ஆசிரியப்பாவினம் என்று ஞாபகம். கள்ள சம்சு குடித்து இறந்துகொண்டிருந்த தோட்டப்புறத் தமிழர்களுக்கு உபதேசம். அதுவும் சிங்கப்பூரில் இருந்து அறிவுரை சொல்கிறாயா என்று அப்பாவிடம் வாங்கிய அடி உதைக்குப் பஞ்சமில்லை. தமிழில் கவிதை எழுதக்கூடாது என்ற அப்பாவின் ஆணையையும் மீறி நான் தொடர்ந்து எழுதினேன். நிறைய மரபுக் கவிதைகள், தமிழ் நேசனிலும், தமிழ் மலரிலும், தமிழ் முரசிலும் பிரசுரமாயின. சிங்கப்பூரில் இருந்து வெளிவந்த திரை ஒளி என்னும் சினிமா மாத இதழிலும் கவிதைகளும், ‘ஒரு நம்பிக்கை தூக்கில் தொங்குகிறது’ என்னும் சிறுகதையும் அச்சேறின. திரை ஒளி மலேசியாவிலும் விற்பனை ஆனது. திங்கட்கிழமை தோறும் வெளிவந்த தமிழ் முரசின் மாணவர் மணி மன்றப் பகுதிக்கும் கவிதைகள் எழுதியதோடு ஒரு வாராந்திர சிறுவர் மாயாஜாலத் தொடர்கதையும் எழுதிவந்தேன். மாணவர் மணி மன்றத்துக்குக் கோலாலம்பூரில் இருந்து சுகுமார் என்ற தன் இயற்பெயரில் அக்கினியும் மரபுக் கவிதை எழுதிக்கொண்டிருந்தார். இருவரின் கவிதைகளும் பல சமயங்களில் ஒரே வாரத்தில் இடம்பெற்றன. இதற்கிடையில், திடீரெனத் தமிழ் முரசின் கோலாலம்பூர் அலுவலகம் மூடப்பட்டது. என் தொடர்கதையின் வரவேண்டிய பகுதிகள் பின்னர் வரவேயில்லை. சிங்கப்பூர்த் தமிழ் முரசு அலுவலகத்தில் விசாரித்ததில், கையை விரித்துவிட்டார்கள். பிரதி எடுத்து வைக்காததால் பிரசுரமானவற்றைத் தவிர போனது போனதுதான்.
நான் ஆங்கிலத்திலும் கவிதை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டதால், மரபுக் கவிதைகளின் மேல் இருந்த ஈர்ப்புக் குறைய ஆரம்பித்தது. தமிழ்நாட்டு வானம்பாடி வட்டத்தின் கவிதைகளின் பாதிப்பில் புதுக்கவிதைகள் எழுதி அனுப்பினால் எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை. அது மரபுக் கவிஞர்களின் காலம். இலக்கணத்தை மீறி கவிதை கிவிதை என்று எழுதினால் அறம்பாடியே தொலைத்துக்கட்டிவிடுவர்கள். அப்போது தமிழ் மலரில் ஆத்மாவின் சிலிர்ப்பு என்ற தலைப்பில் கலீல் கிப்ரான் வகை வசன கவிதைத் தொடர் ஒன்று அக்கினி என்ற பெயரில் வரத்தொடங்கியது. நானும் எனது புதுக்கவிதைகளை அனுப்பிவைத்தேன். அவை மறுவாரமே பிரசுரமாயின. இக்கரையில் நானும் அக்கரையில் அக்கினியும் பல மரபுக்கவிச் சிங்கங்களின் சாபங்களைப் பெற்றுக்கொண்டோம். நட்புப் பாராட்டி அக்கினியின் முதல் கடிதம் வந்தது. புதுக்கவிதை எழுதியதால் தமிழ் முரசில் என் மரபுக் கவிதைகளையும் ஓரங்கட்டினார்கள். போங்கடா என்று மலருக்கே எழுதினேன். அக்கினியும் நானும் நேருக்குநேர் சந்திக்கவில்லை என்றாலும், வாராவாரம் கடிதப் பரிமாற்றம் செய்துகொள்வோம். புதுக்கவிதையை முன்னெடுத்துச் செல்வது பற்றி விவாதிப்போம்; நட்பு வளர்ந்தது. தமிழ் மலர் போராட்டத்தில் இழுத்து மூடப்பட்டது. வானம்பாடி வார இதழ் பிறந்தது.
1978-ல் கோலாலம்பூர் சென்று வானம்பாடி அலுவலகத்தில் அக்கினியைச் சந்தித்தேன். இராஜகுமாரன், ஆதி குமணன், பிரசன்னா என்ற புனைபெயரில் கவிதை எழுதிக்கொண்டிருந்த பிரான்சிஸ் சில்வன், தம்பின் தியாகு என்று ஒரு புதிய நட்பு வட்டம் உருவானது. அன்று முதல் வானம்பாடி இலக்கியத் தாய்வீடு போலானது. வருடத்தில் மூன்று முறை வானம்பாடியில் இருப்பேன். குறைந்தது ஒரு வாரமாவது அங்கே தங்குவேன். வானம்பாடியில்தான் என் கவிதைகள் அதிகம் வெளிவந்தன. வானம்பாடியில் இன்றைய நயனம் ஆசிரியர் இராஜகுமாரனுடன் உலக இலக்கியம் பற்றிக் கலந்துரையாடிய பொழுதுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. 1979-ல் இராஜகுமாரனின் சாசனம் பகுதியில்தான் என் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. RTM-ல் பைரோஜி நாராயணனைச் சந்தித்து நூலைக் கொடுத்தேன். அவர் மறு வாரம் இளஞ்செல்வனின் புதுக்கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பேச இருந்தார். கூலிம் வெளியீட்டு விழாவுக்கு அக்கினியும் நானும் சென்றடைவதற்குள் விழா முடிவடைந்திருந்தது. இளஞ்செல்வனின் இல்லத்தில் சீ.முத்துசாமி அறிமுகமானார். அவரது ‘இரைகள்’ சிறுகதைத் தொகுப்பின் பத்துப் பிரதிகளைச் சிங்கப்பூர் இலக்கியக்கள எழுத்தாளர்களுக்காகப் பெற்றுக்கொண்டேன். நா. கோவிந்தசாமியின் இலக்கியக் கள அமைப்பில் சாணி மாடாயிருந்த சிலருக்கு இரைகளைக் கொடுத்து முத்துசாமியை அவமானப்படுத்த விரும்பாததால், அப்பிரதிகள் என்னிடமே இருக்கின்றன.
வானம்பாடி நிர்வாகம் மாறியதால் அனைவரும் குமணனை ஆசிரியராகக் கொண்ட நாளிதழுக்குச் சென்று விட, என் பங்களிப்பு மெல்ல மெல்ல நின்றுபோனது. 1980/81 என்று நினைக்கிறேன். கோ.முனியாண்டி சிங்கப்பூருக்கு வந்தார். ஓரிரு மாதங்கள் தங்கி இருந்தார். நிறைய பேசினோம். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டுவர முடிவெடுத்தோம். அது இன்றளவும் நிறைவேறவில்லை. பிறகு அக்கினியின் கனா மகுடங்கள் கவிதைத் தொகுப்புக்குதான் என் உதவிக்கரம் நீண்டது. இறுதியாக 1983-ல் ஆகஸ்ட் மாதம் அக்கினியோடு ஆயர் தாவாருக்கு கோ.முனியாண்டியைக் காண வந்தேன். 1984-க்குப் பின் மலேசியாவுக்கும் எனக்கும் இருந்த இலக்கியத் தொடர்புகள் முற்றிலும் அறுந்து போயின. வாழ்க்கைப் பிரச்சனைகளின் அழுத்தத்தில், இலக்கியம் மரத்துப்போனது. இருந்தும், 1984-ல் மௌனவதம் நூல் வெளிவந்து மறுபடியும் இராஜகுமாரனின் சாசனம் வழி அறிமுகமானது. 1987-ல் நவம்பர் மாதம், நான் அரசாங்கத்தில் இலக்கியம், நாடகம் மற்றும் ஆசியான் கலாசாரப் பரிமாற்றத்துக்காக கலாச்சார அதிகாரியாகப் பதவியேற்ற நேரம், மூன்றாவது தென் கிழக்காசிய எழுத்தாளர் மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்துக் கலந்துகொள்ள இளஞ்செல்வன் சிங்கப்பூர் வந்தார். ஒரு வார நிகழ்வில் மிக நெருக்கமானோம். சிறந்த மலேசியத் தமிழ் புதுக்கவிதைகளை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்க்க, அவற்றைத் தமிழிலும், மலாய் மொழியிலும் இணைத்து அவர் வெளியிடுவதென்றும் தீர்மானித்தோம். நான் மீண்டும் இலக்கியத்துக்கு வந்தேன். நயனம் வார இதழுக்கு, யாகம் என்ற தலைப்பில் இலக்கிய அறிமுகத் தொடர் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். சிதைக்கப்பட்டு வெளியான அதன் சாரம் நயனத்துக்கு அனர்த்தமாகப் பட்டதாலோ என்னவோ இராஜகுமாரனும் அமைதிகாக்க நானும் நிறுத்திக்கொண்டேன்.
1988ல் டிசம்பர் மாதம் நவீன இலக்கியச் சிந்தனையின் புதுக்கவிதைப் போட்டிக்கு நீதிபதியாக இருக்கவும், கட்டுரை படிக்கவும் இளஞ்செல்வன் கேட்டுக்கொண்டதால், கூலிம் வந்தேன். போட்டிக்கு வந்த புதுக்கவிதைகளில், ஒரே ஒரு கவிதைக்கு மட்டும் தரம் இருந்ததால் அதற்கு மட்டும் பரிசளிக்கப்பட்டது. புதுக்கவிதைக்குத் தாத்தா மேத்தா என்ற பூஞ்சையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது. கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறு, நீள் முடியுடனும் தாடியுடனும் கட்டுரை சமர்ப்பித்ததோடு, பேசாமல் அடக்கிக்கொண்டு உட்காராமல் இளஞ்செல்வனின் முன் அனுமதியோடு மௌனவதம் தொகுப்பில் உள்ள ‘நீயும் புஜ்ஜீக்கவிஞனா?’ கவிதையை மேடையில் வாசித்ததில் ஏறத்தாழ நிகழ்ச்சி ஆர்ப்பாட்டமாக முடிந்தது. இளஞ்செல்வன், இரகசியமாக என் காதுகளில் ‘இதுக்குத் தான்யா உங்களை வரச் சொன்னேன்’, என்று கிசுகிசுத்தவாறே வயிறுவலிக்கச் சிரித்தார். அக்கினி, கோ. முனியாண்டி, பிறை துரை முனியாண்டி, அருள்தாசன், ஸ்ரீரஜினி, ரெ. கார்த்திகேசு போன்றோர் நினைவுக்கு வருகிறார்கள். மறு வாரம் சிங்கப்பூர் ரவுடி என்று மயில் வார இதழில் எனக்குப் பெரிய கார்ட்டூன் போட்டு இலக்கியத் தாதாவாக்கி இருந்தார்கள். நயனத்தில், வெகு நாகரீகமாக நல்ல படங்களைப் போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன். அந்த வேடிக்கையான நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் மௌனம். நான் ஆங்கிலக் கவிதைகளிலும் நாடகத் துறையிலும் மும்முரமானேன். பங்களாதேஷ், பிலிப்பின்ஸ், ஆஸ்திரெலியா என்று இலக்கிய மாநாடுகளுக்கும் கவிதை விழாக்களுக்கும் செல்ல ஆரம்பித்ததால், தமிழ் வட்டங்கள் அன்னியமாகிப்போயின. தமிழில் சாணி மிதித்ததுபோதும் என்றும் முடிவுசெய்தேன். 1990-ல் ஜூன் மாதம் சிங்கப்பூரைப் பிரதிநிதித்துத் தேவான் பாஹாசா (Dewan Bahasa dan Pustaka) ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது அனைத்துலக கவிதை விழாவில் கலந்துகொள்ள கோலாலம்பூர் வந்தேன். தமிழிலும், ஆங்கிலத்திலும், மலாய் மொழியிலும் கவிதை வாசித்தேன். பத்திரிகையாளர் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தும் ஒரு தமிழ் நிருபர் கூட வரவில்லை. மலாய் எழுத்தாளர் அன்வார் ரிதுவான் (Anwar Ridhwan) கேலியாகச் சிரித்தார். அந்த மாபெரும் கவிதை விழாவோடு மலேசியாவுடனான தமிழ் இலக்கிய உறவுகளைத் துண்டித்துக்கொண்டேன். இளஞ்செல்வனின் அகால மரணம் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. அவரைச் சந்தித்திருக்கலாமே என்ற வலி இன்னும் இருக்கிறது. எல்லாம் ஒரு கனாக்காலம் போல் பனிமூட்டமாய்த் தழுவுகின்றன. சில சுகானுபவங்கள். சில நம்பிக்கைத் துரோகங்கள். மன்னிக்கலாம், மறக்கவே கூடாது என்று இலக்கியப் போராளியாய் என் பயணம் தொடர்கிறது.
கேள்வி: மலேசியாவிலும் சிங்கையிலும் இலக்கியத் தொடர்பும் கலைத்தொடர்பும் உள்ள தாங்கள், இவ்விரு நாடுகளின் படைப்பாக்கங்களை எவ்வாறு கணிக்கிறீர்கள்?
பதில்: முதலில் மலேசிய இலக்கியத்தைப் பார்வையிட விரும்புகிறேன். 1977 -இல், டிசம்பர் மாதம், 1 – 3, கோலாலம்பூரில் நடந்தேறிய கபேனா (GAPENA) மாநாட்டில், தலைவர் இஸ்மாயில் ஹீசேன் (Tan Sri Ismail Hussein) சொன்னதை மலேசிய எழுத்தாளர்கள் பலர் மறந்திருக்கலாம். பல்லின ஆசியான் எழுத்தாளர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில், அவர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். மலேசியாவின் தேசிய மொழியான மலாய் மொழியில் எழுதப்படும் படைப்பே மலேசிய இலக்கியமாய்க் கருதப்படும் என்று ஆங்கில, சீன, தமிழ் இலக்கியவாதிகளுக்கு ஆணி அடித்தார். அன்றுமுதல் இன்றுவரை அந்த ஆணி பிடுங்கப்படவேயில்லை. தேவான் பஹாசா பூமி புத்தராக்களின் மலாய் இலக்கிய வளர்ச்சியை மட்டுமே அங்கீகரிக்கும் அதே வேளை, தேசிய மொழியில் இலக்கியம் படைக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கும் நிறைய சலுகைகளை அள்ளி வழங்கத் தவறுவதில்லை.
மத ரீதியாக முஸ்லிம் அல்லாத, மலாய் மொழியில் எழுதும் தமிழ், சீன எழுத்தாளர்களை அஃது ஒரு சிறப்புப் பிரிவின் கீழ் ஒன்றிணைத்து ஊக்குவித்து வருகின்றது. தேசிய மொழியில் கவிதை, சிறுகதை படைத்துவரும் சீனர் லிம் சுவீ டின் (Lim Siew Tin) படைப்புகளைத் தேவான் பஹாசா 1985 முதல் பதிப்பித்து வருகிறது. 1979 ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்தில் வழங்கப்படும் உயரிய தென்கிழக்காசிய இலக்கிய விருதை மலேசிய மலாய் இலக்கியவாதிகள், அதிலும் மலாய் முஸ்லீம்கள் மட்டுமே பெற முடியும் என்றிருக்கும்போது, 2000 ஆம் ஆண்டின் விருதைப் பெற்றார் சீன வம்சாவளியினரான லிம். இவ்விருது எக்காரணத்தை முன்னிட்டும், மலேசியாவின் மற்ற மொழி எழுத்தாளர்களுக்கு வழந்கப்படமாட்டாது என்பது அரசியல் விதி.
சரி, தமிழ் உதாரணத்திற்கு வருவோம். மலாய் மொழியே தன் தாய்மொழி என்று கூறும் தமிழர், மலாய் மொழியில் எழுதும் மலேசிய இளம் தலைமுறை தமிழர்களுக்காக 1999-இல் தோற்றுவிக்கப்பட்ட ‘காவியன்’ (Kavyan) இலக்கிய அமைப்பின் தலைவர், மலாய் மொழியில் சிறுகதைகள், நாவல்கள், சிறுவர்களுக்கான கதைகள் எழுதி, நூல்கள் வெளியிட்டிருக்கும் மலேசியரான உதய சங்கர். இவர் 2004 -இல், பிப்ரவரி 11 -ஆம் தேதி What Tamil Writers? என்று New Straits Times ஆங்கிலப் பத்திரிக்கையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை விமர்சித்ததும், அதற்கு ரெ.கார்த்திகேசு A Tamil Writer Talks Back என்று 25-ஆம் தேதி பதிலளித்ததும், இரண்டும் தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு தமிழ் நாளேட்டில் வெளிவந்ததும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். உதய சங்கரின் படைப்புகளையும் தேவான் பஹாசா வெளியிட்டிருக்கிறது. நாளை மலாய் மொழி எழுத்தாளராகக் கொண்டாடப்படும் இவருக்கும் தென்கிழக்காசிய இலக்கிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்தோனேசிய, இலக்கியத்தோடு ஒப்பிடும்போது, மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், ப்ரூணையிலும், படைக்கப்படும் மலாய் இலக்கியம் மிகச் சராசரித் தன்மை கொண்டது என்பதை ‘மலாய்க்கார பாசிச-தேசிய வெறி’ இல்லாத நடுநிலையான ஆய்வுத்தரவுகள் நிரூபிக்கின்றன என்பது ஒருபுறமிருக்க, சில கேள்விகள் எழுகின்றன.
மலேசியாவில் ‘காபீர்கள்’ பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் சம வாழ்க்கையைப் பற்றி தத்தம் கதைகளில் துணிச்சலாக எதையும் ஆராயமுடியுமா, அல்லது மேலும் கீழும் பொத்திக்கொண்டு மலாய் அதிகாரம் வீசியெறியும் எச்சில் துண்டுகளுக்குச் சாமரம் வீசி முக்காடு போடுகிறார்களா? மலேசியத் தமிழ் வாழ்க்கையின் அவலங்களையும், முடிச்சுகளையும் மலாய்மொழிப் பரண்மேல் ஆரோகணித்திருக்கும் இவர்கள் மெய்யாலுமே ஆழமாகக் காட்டுகிறார்களா அல்லது வரட்டுக் கற்பனாவாத சாயம் அடிக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஆழிப்பேரலையை உருவாக்கினாலும் பரவாயில்லை, சாட்டையைச் சொடுக்கவேண்டிய கடமை, துப்புக்கெட்ட எழுத்தாளர்க் கழகத்தைவிட நேர்மையான மலேசியத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கின்றது. இது மாதிரியான கேள்விகளை நான், 1990 -இல், காலஞ்சென்ற மலேசியத் தேசியக் கவிஞர் உஸ்மான் அவாங்கிடம் (Usman Awang), அவருடைய வீட்டில் கவிதை வாசித்தபோது எழுப்பினேன். அந்த மனிதாபிமானி, புன்முறுவலோடு, நாம் கவிதை பாடுவோம், அரசியல் பேசவேண்டாம் என்றார். அதே கேள்விகளை, எழுத்தாளர் அன்வார் ரித்வானிடம் (Anwar Ridhwan) கேட்டபோது, கொஞ்சம் நெளிந்தார், பின் தரமான மலேசியத் தமிழ் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்தால் அவற்றை மலாய் மொழியில் கொண்டுவரலாம் என்று புன்னகைத்தார். நல்ல மனிதர்தான். ஆனால், அன்வார் இப்ராஹிமின் அரசியல் வீழ்ச்சியோடு தேவான் பஹாசாவில் உயர் பதவிகள் வகித்த என் இலக்கிய நண்பர்கள் அனைவரும் இடம்பெயர்ந்தனர். தேசிய நாடகக் கலைஞர் சக்கரியா அரிப்பின் (Zakkaria Ariffin) மலாயில் மொழிபெயர்த்துத் தேவான் பஹாசா வெளியிடவிருந்த என் சர்ச்சைக்குரிய தலாக் (TALAQ) நாடகப் பிரதி, சிங்கப்பூர் அதிகார மையத்தின் இரகசியக் கூக்குரலினால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்ததையும் மீறி நிறுத்தப்பட்டது. பொதுவாகவே மலாய் எழுத்தாளர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயம். அதனால், உருவாகும் தாழ்வு மனப்பான்மையை மூடிமறைக்க ஆங்கிலத்தில் உரையாட மாட்டார்கள். ஆங்கிலத்தில் பேசினால் ஆமாம் இல்லை என்ற ஒற்றைப்பதங்களோடு ஓடிப்போய்விடுவார்கள். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை அவர்கள் உபயோகிக்கும் அத்தனை கலைச்சொற்களும் ஆங்கிலத்தில் இருந்து கடன் வாங்கியவை. எனக்கு மலாய் மொழி தெரியும். அதனால், நான் சந்தித்த மலேசிய மலாய் இலக்கியவாதிகளோடு அவர்களின் மொழியிலேயே உரையாடி வந்துள்ளேன்.
நம் தமிழர்களைப் போலவே அவர்களும் வெள்ளைக்காரன் சொன்னதே வேதவாக்கு என்று சொல்லக் கூச்சப்படுவதே இல்லை. சில மலாய் எழுத்தாளர்கள், இருமொழித் திறனோடு மலாயிலும் ஆங்கிலத்திலும் நல்ல படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். நாடறிந்த கவிஞர், கல்வியாளர், இலக்கிய ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முஹம்மது ஹாஜி சாலே (Muhammad Haji Salleh), இருமொழிகளிலும் எழுதுவதை நிறுத்திவிட்டு, அதிகாரவர்க்கத்தின் பொற்காசுகளுக்காக மலாயில் மட்டுமே தற்போது எழுதுகிறார். நாங்கள் இருவரும் 1997 -இல், தாய்லாந்து பாங்காக்கில் தென்கிழக்காசிய இலக்கிய விருது பெற்றோம். சாலே பென் ஜோநெட் (Salleh Ben Joned) சர்ச்சைக்குரிய இருமொழிக் கவிஞர். மலாய் இலக்கிய ஆஷாட பூதிகளின் கல்வீச்சுக்கு அதிகம் ஆளான இவர், தற்போது ஆங்கிலத்திலேயே கவனம் செலுத்துகிறார். இன்றைய மலாய் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் சர்ச்சைக்குரிய கவிஞர், சிறுகதை நாவலாசிரியர் மலாயில் எழுதும் பைசால் தெஹ்ராணி. அவருடைய படைப்புலகம் இதுவரை நிறுவப்பட்ட மலாய் வரலாறு, மதம், கலாச்சாரம், புராதனம், மாந்திரீகம் என்று அனைத்தையும் நக்கலோடு மீளுருவாக்கம் செய்வதோடு மரபின்மைந்தர்களைச் சஞ்சலப்படுத்துகிறது.
மலாய் இலக்கியவாதிகள் உதாசீனப்படுத்தும் மலேசிய ஆங்கில இலக்கியத்தைப் பற்றியும் சொல்லவேண்டும். ஆங்கில இலக்கியவாதிகளில் பெரும்பான்மையோர் கோலாலம்பூரையும் அதன் புற நகர்ப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மலேசியாவின் இலக்கியத்தை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிருப்பது ஆங்கில இலக்கியம்தான். தோட்டத் தமிழ் பள்ளியில் படித்து, மலாயாப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய இணைப் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற கே.எஸ். மணியம் (K.S.Maniam) என்னும் பெயர் தமிழ் வட்டாரங்களுக்கு அன்னியோன்னியமானதல்ல. 1942-இல், பீடோங்கில் பிறந்து, தற்போது சுபாங்கில் வாழும் மணியத்தின் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், (The Return, In A Far Country, Between Lines) மலேசியாவுக்கு வெளியே அனைத்துலகப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அவர் படைப்புகளைப் பல வெளிநாட்டினர் முனைவர் பட்டங்களுக்காக ஆய்வு செய்து வருகின்றனர். அவருக்கு, 2000-ஆம் ஆண்டின் ராஜா ராவ் (Raja Rao) விருது வழங்கப்பட்டது. நம்மிடையே, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மகா கலைஞனை, மலேசியாவும் மதிக்கவில்லை, இலக்கியக்கூலிக்கு மாரடிக்கும் மடத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரியவில்லை. அதுபற்றி அவருக்கும் கவலையில்லை.
மலாக்காவில் வறுமையான குடும்பத்தில் பிறந்த பேராசிரியர் ஷேர்லி லிம் (Shirley Lim), 1980 -ஆம் ஆண்டு காமன்வெல்த் கவிதைப் பரிசைப் (Commonwealth Poetry Prize) பெற்ற முதல் ஆசியர், முதல் பெண்மணி. கவிதை, புனைகதை, இலக்கிய விமர்சனம் என்று தென்கிழக்காசிய இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த ஷேர்லி லிம், மலேசியக் குடியுரிமையைக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டுத் தற்போது வாழ்வது அமெரிக்காவில். மலேசியாவில் பிறந்து பெட்டாலிங் ஜெயாவில் வளர்ந்த பெத் யாப் (Beth Yap), சிறுகதை, நாவலாசிரியர். அவர் எழுதிய நாவலுக்கு 1993-ஆம் ஆண்டின் விக்டோரியா பிரேமியர் விருது (Victoria Premier Award) ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்டது. தற்போது பெத் யாப் வாழ்வது சிட்னியில். தைவானில் பிறந்து, மலேசியாவில் வளர்ந்து, தற்போது இலண்டனில் வாழும் டாஷ் ஆவ் (Tash Aw) 2005 -ஆம் ஆண்டின் காமன்வெல்த் எழுத்தாளர் விருதைத் தனது முதல் நாவலுக்குப் பெற்றார் (The Harmony Silk Factory). அதே நாவலுக்கு அந்த ஆண்டின் வித்பிரேத் புத்தகப் பரிசையும் (Whitbread Book Award) தட்டிச் சென்றார். மலேசிய இலக்கியத்தை உலகெங்கும் கொண்டு செல்லும் இவர்களின் நிழலைக்கூட மலேசிய மலாய் இலக்கியம் எட்டிப்பார்க்க முடியாது.
கேள்வி : சிங்கையில் இலக்கிய நிலை என்ன?
பதில்: சிங்கப்பூர் இலக்கியம் என்பது ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் எழுதப்படுவது. சிங்கப்பூரின் நிகழ் கலை மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், கலைத்துறை உயர் கல்விக்கும் மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஆண்டுதோறும் பெரிய நிதி வழங்கப்படுகிறது. கலைகளின் மூலம் காசு சேர்ப்பதே பெரும்பான்மை சீன ஆதிக்க அரசின் கொள்கை. ஆதலால், சமூக விழிப்புணர்வு என்னும் சொல் கெட்ட வார்த்தையாகிவிட்டது. மலேசியாவைப்போல் வெளிப்படையான இன மொழிப் பாரபட்சம் கிடையாது என்றாலும், சிறுபான்மை மலாய் தமிழ் எழுத்தாளர்கள் இயல்பாகவே கோழைகள் என்பதால் அவர்களுக்கு அல்வா தர வாய்ப்பும் வசதிகளும் தயங்காமல் செய்துகொடுக்கப்படுகின்றன. சிறந்த கூஜா தூக்கிகள் அரசாங்கத்தின் கலை மேலாண்மைக் குழுக்களில் தீவட்டித் தடியர்களாய் அமர்ந்து கலைகளைக் கண்காணிக்கிறார்கள். நான்கினமும் பலன் பெற்றாலும், மதம், இனம், அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகள் போன்றவற்றை விமர்சிக்கும் படைப்புகளுக்கு ஒரு காசும் கிடைக்காது. அப்படிப்பட்ட படைப்புகள் புனிதமான தணிக்கைக் குழுவால் தடைசெய்யப்படலாம். எனவே, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எல்லோரும், எதுக்கு வம்பென்று நன்றாக உண்டு கொழுத்து, ஜாலியாக உலாத்தி ஒருவரை ஒருவர் சொறிந்துகொண்டு அம்மாடி இது போன்ற அரசாங்கம் உலகத்திலேயே இல்லை என்று, மெய்க்கீர்த்திகளாய் அவதாரமெடுத்து அரசாங்கத்துக்குத் துதிபாடி சகல சௌபாக்கியங்களோடு விருதுகள் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். சிங்கப்பூர் ஒரு நுகர்வுக் கலாச்சார தேசம். மலேசியாவிலாவது மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கிறது, இங்கே மாற்றுக்கருத்து கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறது. எழுத்தாளன் என்ன எழுதவேண்டும் என்று அரசியல்வாதிகளே சொல்லித்தருவார்கள். இதனால், சிங்கப்பூர் இலக்கியம், தென்கிழக்காசியாவில் குதக்காற்றுக்கு இணையாகப் பெருமையாகப் பேசப்படுகிறது.
நான் சொல்வது சுரீரெனச் சுடலாம். நான்கு மொழிகளுக்கும் கலைநிர்வாகியாய் இருந்திருப்பதால் உள்ளேயும் வெளியேயும் பல்லிளிக்கும் காரணிகளை யாமறிவோம். சிங்கப்பூர் எழுத்தாளர்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய விதிவிலக்குகள் உண்டு. ஆங்கில எழுத்தாளர்களில் இலக்கிய முன்னோடியும் கல்வியாளருமான ஆளுங்கட்சியின் ஆஸ்தான கவிஞராகக் கருதப்படும் எட்வின் தம்பு (Emeritus Professor Edwin Thumboo), காலஞ்சென்ற சிறுகதை-நாவலாசிரியர் டாக்டர் கோபால் பரதம் (Dr Gopal Baratham), 1986-இல் ஒடுக்கும் சிங்கப்பூரை உதறி கனடா, வான்கூவரில் குடியேறி இவ்வருடம் ஜனவரியில் காலமான கவிஞர்-நாவலாசிரியர்-நாடகாசிரியர் டாக்டர் கோ போ செங் (Dr Goh Poh Seng), கவிதாயினி டாக்டர் லீ ஸ¥ பெங் (Dr Lee Tzu Pheng), ஆளும் சர்வாதிகாரத்தை விமர்சித்து நாட்டின் முன்னாள் பிரதமரின் மிரட்டலுக்கு உள்ளான பெருமதிப்பிற்குரிய சிறுகதை-நாவலாசிரியர் டாக்டர் கேத்தெரின் லிம் (Dr Catherine Lim), 1997-இல் ஆள்வோரின் ஒடுக்குமுறை அரசியல் பிடிக்காமல் குடியுரிமையை எறிந்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்ட கவிஞர் டாக்டர் போய் கிம் ச்செங் (Dr Boey Kim Cheng), காலஞ்சென்ற அரசியல்வாதி ஜே பி ஜெயரத்னத்தின் (J B Jeyaretnam) மகனான சிறுகதை நாவலாசிரியர் பிலிப் ஜெயரத்னம் (Philip Jeyaretnam), சிங்கப்பூர் கவிதையையும் கவிஞர்களையும் உலகெங்கும் அறிமுகப்படுத்தும் கவிஞர் அல்வின் பாங் (Alvin Pang), ஆங்கிலத்தில் கவிதை, சிறுகதை, நாடகமும், மலாயில் நாடகமும் எழுதி என்னைப் போலவே அதிகார வர்க்கத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் – ‘சிங்கப்பூர், நீ என் நாடல்ல கவிதை புகழ்’ (Singapore, you are not my country) அல்பியான் சாட் (Alfian Sa’at) ஆகியோர் சிங்கப்பூர் இலக்கியத்தை உலக அரங்கில் பதிந்தவர்கள்.
சீன இலக்கியவாதிகள் அமைதியானவர்கள். அவர்களில் போராளிகளைக் காண்பது அரிது. பெரும்பான்மை சமூகத்தின் அங்கத்தினராய் இருப்பதால், எல்லாச் சலுகைகளையும் முதல் தர குடிமக்களாய்க் சுகிப்பதால் (மலேசிய பூமி புத்ராக்களைப்போல்) நாட்டுக்கே உரித்தான வாழ்வின் நுண்ணரசியலையும், தந்திரமான ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மையினரின் பிரச்சனைகளையும் தொட பயந்து, அவர்கள் பாட்டுக்கு மென்மையான படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் வெளிப்பாட்டுத் தளங்கள், சீனாவிலும், ஹாங்காங்கிலும், தைவானிலும், மலேசியாவிலும் விரிந்து கிடக்கின்றன. 1939 -இல் சீனாவின் ஹெபெய் (Hebei) மாவட்டத்தில் பிறந்து, சிங்கப்பூருக்குத் தன் பத்தாவது வயதில் வந்து, 2002 -இல் செப்டம்பர் மாதம் காலஞ்சென்ற நண்பர்: இருமொழி (சீன-ஆங்கில) நாடகாசிரியர், இயக்குனர், நாடகப் பயிற்சியாளர், சிங்கப்பூர் நாடக முன்னோடி குவோ பாவ் கூன் (Kuo Pao Kun) சீனர்களில் வித்தியாசமானவர்; சர்ச்சைக்குரியவர், அனைத்துச் சிங்கப்பூர்க் கலைஞர்களின் மரியாதைக்குரியவர். நான்கின நான்குமொழி பரீட்சார்த்த நாடக முயற்சிகளுக்கும் ஆதரவு நல்கியவர். 1976-இல் உள்துறை இலாகாவினால் (Internal Security Department) மார்க்சிஸ்ட் (Marxist) புரட்சியாளர் என்ற குற்றச்சாட்டில் கைதாகி நான்கு வருடங்கள் ஏழு மாதங்கள் தனிமைச் சிறைவாசம் அனுபவித்தவர். அரசாங்கம் 1989 -இல் அவருக்குக் கலாச்சார விருது (Cultural Medallion) கொடுத்துப் பாவத்துக்குக் கழுவாய் தேடிக்கொண்டது. அவரது தலைசிறந்த மூன்று நாடகங்களை நான் தமிழில் மறுஉருவாக்கம் செய்து அரங்கேற்றி இருக்கிறேன். 1990 -இல், அவர் தோற்றுவித்த சப்ஸ்டேஷன் (The Substation) என்னும் சிற்றரங்கில்தான் இன்றுவரை என் தமிழ், ஆங்கில நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. அவரது மறைவுக்குப்பின், அவரிடம் பயிற்சி பெற்றவர்களில் யாரும் இன்னும் அவர் பெயர் சொல்லுமளவுக்கு வளரவில்லை. பிரதானமாக, கோக் ஹெங் லியுன் (Kok Heng Leun) என்ற நாடக இயக்குனரும், லி சி (Li Xie) என்ற பெண் நடிகர்-இயக்குனர்-நாடக எழுத்தாளரும் சில பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நாடக குழு டிராமா பொக்ஸ் (drama box) அரசாங்கத்தின் உதவித் தொகை பெரும் முன்னனிக் குழுக்களில் ஒன்றானதால் இயல்பாக அடக்கியே வாசிக்கிறார்கள்.
சிங்கப்பூரில், மலாய் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்போதுமே இஸ்லாமிய மதக் காப்பாளர்களின் எல்லைக் கோடுகளைத் தாண்டி வளர முடியாது. மலாய்ச் சமூகத்தின் பிரச்சனைகளை அல்பியான் சாட்டும், நானும் படம்பிடித்த கோணங்களைக் கூட அவர்கள் யோசிக்கமாட்டார்கள். காலஞ்சென்ற முன்னோடிக் கவிஞர் மசூரி பின் சாலிக்குன் (Masuri bin Salikun) அரசின் அங்கீகாரத்துக்கென்றே அலைந்தவர். பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை எழுதியவர். (இப்படிப்பட்ட குற்றச்செயல்களைச் சிங்கப்பூரின் தமிழ் மரபுக்கவிஞர்கள் மட்டுமே செய்துவந்தார்கள்.) அவர் இலக்கிய சட்டாம்பிள்ளையாய் அதிகாரம் செலுத்தினார். 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி, தன் வீட்டில், தொலைக்காட்சி நேர்காணலுக்கு இலக்கியப் பிரதாபங்களை அளந்துகொண்டிருந்தபோதே மாரடைப்பில் மறைந்தார். அவருடைய சமகால படைப்பாளி சிறுகதை-நாவலாசிரியர் -கவிஞர் சுராத்மான் மார்க்காசான் (Suratman Markasan), மசூரியைவிட மனோபலமுள்ள படைப்பாளி. மலேசிய இந்தோனேசிய இலக்கியவாதிகளால் மதிக்கப்படுபவர். அரசுக்கோ, செம்மறியாட்டு மலாய் அரசியல்வாதிகளுக்கோ கூழைக்கும்பிடு போடாததாலும் மசூரியின் நயவஞ்சகத்தாலும் நியாயமான வாய்ப்புகளை இழந்தார். இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார். இவர்களைவிட இளையவர், கட்டடக் கலைத்துறையில் பட்டம் வாங்கிய சிறுகதை-நாவலாசிரியர் கவிஞர் ஈசா கமாரி (Isa Kamari). தற்சமயம் இவர் காட்டில் விருது மழை. அரசின் செல்லப்பிள்ளை. மூத்த மலாய் எழுத்தாளர்களைவிட இவரிடம் சரக்கிருந்தாலும் மசூரியின் காலி இடத்தை இவர் நிரப்பும் அரசியல் முடிச்சு அவிழ்கின்றது. இவரது இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஒரு நாவல் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர்களின் எழுத்துகளை, இவர்களைப்போலவே மலாய்க்காரரான அல்பியான் சாட்டின் எழுத்துகளோடு ஒப்பிடுவது பாவம், பரிதாபம். அல்பியான் சமரசங்களுக்கு அப்பாற்பட்டவர். இவர்களோ, சுமாரான, வம்புகளை விரும்பாத, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய் இருக்க எழுதும் கண்ணியமானவர்கள். அல்பியான் சாட்டை அடியொற்றி, இருமொழித் திறனுள்ள ஒரு புதிய மலாய் இளைய தலைமுறை கவிதை, புனைகதை, நாடகம் எழுத வந்திருப்பது மலாய்ச் சமூகத்தின் மேய்ப்பர்களை பீதியுறச் செய்துள்ளது. இளரத்தம் கலகக்கார எழுத்தென்று அறைகூவினாலும் மலாய் மொழி இலக்கியத்தை மதவல்லுனர்களும் உள்துறை அதிகாரிகளும் விசனத்தோடு மோப்பம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றி முரசறைய பெரிதாய் ஒன்றுமில்லை. தொண்ணூற்றைந்து விழுக்காடு மரபார்ந்த, காலாவதியான, பாடாவதியான, அறநெறி தைலம் தடவி ஒழுக்கம் ஓம்புவதை பிரச்சாரம் பண்ணும் உலகளாவிய உருவ உள்ளடக்க முதிர்ச்சியோ கலை நயமோ அற்ற படைப்புகள். அவற்றை, அட்சரசுத்தமாக மொண்ணைத்தனத்துக்காகவே முனைவர் பட்டம் வாங்கிய கரப்பான்கள் அடிமசுரு துடிக்க தூசிதட்டி எடுத்து ஆய்ந்து இலக்கியம் இருக்கின்றது என்று ஆண்டாண்டு கரமைதுனம் செய்துகொண்டு மோட்சமடைவது வெள்ளிடைமலை. தமிழ்நாட்டில் இருந்து வந்து இறங்கி இருக்கும் பொருளாதாரக் கூலிகளின் கழிவுகளைச் சிங்கப்பூர் இலக்கியம் என்ற தாளிகைக்குச் சேர்க்கமுடியாது. காசு சேர்ந்ததும் மூட்டைமுடிச்சுகளோடு ஓடிப்போகும் இந்த அகதிகளையும் அவர்களின் கக்கல்களையும் சிங்கப்பூர்க் கக்கூஸ் எழுத்தாளர் அமைப்புகள் கூட்டம் சேர்க்கப் பயன்படுத்திக்கொள்வது இயல்பே. குறைந்துவரும் சீன பிறப்புவிகிதத்தை மறைமுகமாய் உயர்த்துவதற்காய், உயரும் மலாய்க் குடிமக்களின் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காய்ச் சிங்கப்பூர்ப் பிரஜைகளுக்குப் பாதகமாய்ப் பின்கதவுகளைத் திறந்துவிட்டுச் சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் படித்த படிக்காத மூன்றாந்தர அடிமாட்டுக் கூலிகளை இறக்குமதி செய்துவரும் கேடுகெட்ட அரசு, நாளையே புதிய குடியேறிகளின் வாரிசுகள் கட்டாய இராணுவத் தேசியச் சேவை செய்தால்தான் குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டதிருத்தம் செய்தால், அனைத்துச் சுரண்டல் சொறி நாய்களும் ஓடிவிடும். தேசியச் சேவைக்குப் பயந்து மலேசியாவிலும் வெளிநாட்டிலும் தம் குஞ்சுகளைப் படிக்க வைத்திருக்கும் கழுதைகளுந்தான்.
சிங்கப்பூரில் பிறந்து, வாழ்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு இரண்டாண்டுகளைத் தியாகம் செய்து மேலும் பத்தாண்டுகளை சேமப்படைச் சேவைக்காக அர்ப்பணிக்கும் சிங்கப்பூர்க் குடிமக்களுக்கு முறையாகக் கிடைக்கவேண்டிய சலுகைகளுக்கு (இலக்கியம் உட்பட) இந்தக் கழிசடைகளும் போட்டிபோடுவது துர்நாற்றம் வீசும் தொழுநோய்க் கைகள் ஆரத் தழுவ வருவதுபோல் இருக்கின்றது. இந்த ஜென்மங்களுக்கு இலக்கிய மாமாவேலை பார்க்கும் சிங்கப்பூரர்கள் இருக்கும்வரை சிங்கப்பூர்த் தீவு தென்கிழக்காசியாவில் விபச்சாரத் தெருவாகவே அடையாளம் காணப்படும். மிச்சமிருக்கும் ஐந்து விழுக்காட்டுக்குள் வரும் சிங்கப்பூர் எழுத்தாளர்களில், மூத்த தலைமுறையினரான புனைகதையாசிரியர்கள் புதுமைதாசன், மா.இளங்கண்ணன், இராம கண்ணபிரான், (காலஞ்சென்ற நா.கோவிந்தசாமி) முதலியோர் அடங்குவர். இவர்கள் உருவம் உள்ளடக்கம் இரண்டிலும் ஒரு தொடர்ச்சியான மரபை அடியொற்றி எழுதுபவர்கள். தற்போது முதுமை இவர்களின் பங்களிப்பைக் குறைத்துவிட்டது. மொரிசீயஸ் தீவு, தமிழ் நாட்டு கிராமம் ,இரண்டாம் உலகப் போருக்கு முந்தய சிங்கப்பூர், அன்றைய சிராங்கூன் தமிழ் வட்டார வாழ்க்கை, தமிழ் புத்தகக் கடை, என்ற பல்வேறு அனுபவ தரிட்சனங்களை உள்ளடக்கிய நாவல் தவத்தை, இலக்கியக் கட்டுரைகளையே அதிகம் தந்து கொண்டிருக்கும் இராம கண்ணபிரான் இனியாவது கலைத்தால் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு துளி மோட்சம் கிடைக்கலாம். இவர்களுக்கப்பால், நம்பிக்கையூட்டும் அடுத்த தலைமுறைப் படைப்பாளி, தற்கால உலக இலக்கியப்போக்குகள் அறிந்து வித்தியாசமாய்க் கவிதை சிறுகதை எழுதிவரும் கவிதாயினி லதா. கடந்த இருபது வருடங்களில் எத்தனையோ இலக்கியப் பயிலரங்குகளும், போட்டிகளும், எழுத்தாளர் விழாக்களும் நடந்து முடிந்துவிட்டன. ஆனால், மலேசிய இளந்தலைமுறை இலக்கியவாதிகளைப்போல், இங்கேயே பிறந்து வளர்ந்து தமிழில் எழுத ஒரு தமிழ் படைப்பாளி இன்னும் உருவாகவில்லை. தமிழை வெறுப்போடு மட்டமாகப் பார்க்கும் ஒரு தலைமுறை மட்டும் நம் தமிழாசிரியர்களின் (கடந்த 15 வருடங்களாய் வந்துபோகும் தமிழ்நாட்டு இறக்குமதிகளும் சேர்த்து) சேவையால் உருவாகிவிட்டது என்று கூறினால் அது தவறோ? சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைப் பற்றி நினைத்தாலே உள்ளம் உருகுதையா. ஹா… ஹா… ஹா…
கேள்வி: பொதுவாகத் தமிழகத்திலிருந்து சிங்கை வந்து இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை விமர்சிக்கிறீர்கள். ஒரு வேளை இவர்களும் இல்லாமல் போனால் சிங்கையில் தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சி இருக்குமா?
பதில்: அதிகார மையம் இலக்கியம் வளர்க்க வழங்கி இருக்கும் ஏராளமான வசதிகளை, இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்று உறிஞ்சிப்பெருத்து நாளையே ஓடிப்போகும் இந்த வந்தேறிகளின், தமிழ்நாட்டில் சாதாரணமாகவே கவனிப்பற்றுப் போகத்தக்க தயிர்ச்சாத, மசால் வடை, புளியோதரை, சைவ பிரியணி, வார்ப்புகளால் சிங்கப்பூர் இலக்கியம் ஒன்றும் வளரப்போவதில்லை. அப்படி வளரவேண்டும் என்று இங்கு யாரும் முட்டிக்கொள்ளவும் இல்லை. 1819 -இல் Stamford Raffles உருவாக்கிய சிங்கப்பூர் இன்றுவரைக்கும் விபச்சார விடுதிதான், சூதாட்ட மையந்தான். 9.8.1965-ல் மலேசியாவிலிருந்து விரட்டப்பட்ட சிங்கப்பூர் ஒரு நாடல்ல. இன்று சீனாவின் இன்னொரு மாநிலமாகத் தோற்றமளிக்கும் சிங்கப்பூர் என்றுமே தார்மீகத்தை அனுசரிக்கும் நாடாக முடியாதக் கற்பிதம். இதில் தீவிர சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஏதோ ஒன்று தப்பித்தவறி நான்கு மொழிகளிலும் உருவாகியே வந்துள்ளது. ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் உள்ள இளம் தலைமுறை வளர்ச்சி, தமிழில் இல்லாமல் போனதற்குக் கூறுகெட்ட மறை கலன்ற தமிழ்க் கல்விமுறையின் இலக்கியப் பாடத்திட்டமும், நவ அடிமைகளைப் பெற்றுத்தள்ளும் தமிழ் ஆசிரியர்ப் பயிற்சிக் குட்டைகளும், அதில் ஊறிய இலக்கிய விமர்சன முனைவர் மட்டைகளும் இலக்கியம் வளர்க்கிறோம் என்று செருப்பு மாட்டியும் நோபெல் பரிசு வாங்கத்தக்க புதிய ஊர்க்கூலிகளின் கவிக்கிறுக்கல்களுக்குக் கவிப்பாடையிலும் கவிச்சாக்கடையிலும் பிச்சைக்காசு விட்டெரியும் உள்ளூர் மடையர்களும் பொறுப்பு. சிங்கையின் தமிழ் இலக்கியத்தை முன்னெடுக்க முயன்ற நா.கோவிந்தசாமி தன் கல்விக் கழகப் பயிற்சி வகுப்புகளில் ஹைஹை என்று சிறுகதைக்குத் தட்டிக்கொடுத்த தமிழ் ஆசிரியர்களும், 1980-களின் இறுதியில் எழுதவந்த வாசகர் வட்டத்தின் இளையர்களான ரெ.பாண்டியன் (சிறுகதை), இராஜ சேகர் (கவிதை), இராஜா ராம் (சிறுகதை) எங்கே போனார்கள்? சிங்கப்பூர் வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைகளின் நெருக்கடியால் நிர்ப்பந்தத்தால் தானுண்டு தான் குடும்பமுண்டு என்று அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். சிங்கப்பூரில் யாரும் முழுநேர இலக்கிய வாதியாய் இருக்க முடியாது. வீட்டில் தோசை வார்த்துக்கொண்டு சிங்கப்பூரைப் பற்றி தவறான கண்ணோட்டத்தையும் தகவல்களையும் அரைவேக்காட்டுப் படைப்புகளில் பேதிக்குப் போகும் மாமிகளைத் தவிர அதிலும் தமிழில் முதுகெலும்புள்ள படைப்பாளியாய் இருபதென்பது தற்கொலைக்குச் சமம். இதில் தமிழை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் பல்லக்குத்தூக்கிகள் ஒரு பக்கம், பாடத்திட்டத்தில் தமிழ் இல்லாவிட்டால் நிம்மதி என்று வளரும் இளம் தலைமுறை மறு பக்கம். அரசியல் சதுரங்கத்தில் தமிழுக்கும் தமிழருக்கும் கெக்களித்தவாரே கோடித்துணி விட்டெறியும் அதிகார மையம் இரண்டுக்கும் மேலே. இந்த இலட்சணத்தில் சிங்கப்பூரில் தமிழ் இலக்கியம் தொடர்ந்தால் என்ன தொடராவிட்டால் என்ன? நாளையே சிறுபான்மைத் தமிழ் மொழி அதிகாரப்பூர்வ அந்தஸ்தை இழந்து ஹிந்தி மொழி அரியணை ஏறினாலும் ஆச்சரியமில்லை. அதற்கான அரசியல் வியாபார நாடகங்கள் மெதுவாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழ் என்றால் என்ன என்று கேட்கும், ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் இளைய தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் இனிமேல் தமிழனின் தலைவலிகளைப் பற்றி எழுதினாலும் எழுதலாம். கால்மேல் கால் போட்டுக்கொண்டு காரித்துப்பினாலும் துப்பலாம். தமிழில் எழுத யாரும் இல்லையே என்று யாரும் ஒப்பாரிவைக்கப் போவதில்லை. தலையாட்டி தம்பிரான்களைத் தவிர.
கேள்வி: இளம் தலைமுறைத் தமிழ் இளைஞர்கள் இலக்கியத்தில் நாட்டம் காட்டுகின்றனரா? அவர்களிடம் தமிழ் சார்ந்த கலையார்வம் உண்டாக? உங்களின் பங்களிப்பு என்ன?
பதில்: தேசியப் பல்கலைக்கழகத்தின் கலைகள் மையம் 1990 -இல் இருந்து கல்வி அமைச்சின் Gifted Education பிரிவோடு நடத்திவரும் Creative Arts Programme (CAP), தேசியக் கலை மன்றம் 2000 -இல் தொடங்கிய Mentor Access Project (MAP), இரண்டும் நாளைய எழுத்தாளர்களை உருவாக்கும் முகாந்திரமாய் ஆரம்பிக்கப்பட்டவை. இவற்றில் தமிழ் இளைய தலைமுறையினர் பங்கேற்பது மிகவும் குறைவு. அப்படி அவர்கள் கலந்து கொண்டாலும் சிறுகதையும் கவிதையும் எழுதுவது எப்படி என்று பயிற்சி கொடுக்க ஏற்பாட்டாளர்களால் கொண்டுவரப்படும் காலாவதியான மூத்திரத் தமிழ் எழுத்தாளர்கள் கொடுக்கும் இம்சையால் புறமுதுகு காட்டி ஓடிவிடுகிறார்கள். கடந்த பத்து வருடங்களில் இவற்றில் உருவாகிய இளம் படைப்பாளிகள் இன்று சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர்களாக ஏனைய மூன்று மொழிகளிலும் எழுதி வருகின்றனர். நான் CAP தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே ஆங்கிலத்தில் கவிதை, நாடகம் ஒரே ஒரு முறை தமிழில் கவிதை என்று பயிற்சி அளித்திருக்கிறேன். என்னிடம் ஆங்கிலத்தில் கவிதை பயிற்சி பெற்ற வேற்று இனத்தவர் சிலர் இன்று குறிப்பிடத்தக்கக் கவிஞர்களாக எழுதிக்கொண்டிருக்கின்றனர். பலமுறை உயர்நிலை பள்ளிகளில் தமிழில் கவிதை, நாடகப் பயிலரங்குகள் நடத்த அணுகியபோது அங்கிருக்கும் மரபூக்கிய தமிழ் ஆசிரிய வேதாளங்கள் சீனப் பள்ளி முதல்வர்களிடம் ‘நான் மாணவர்களை மூளை சலவை செய்துக் கெடுத்து வெகுஜன விரோதிகாளாக்கி விடுவேன்’ என்று வத்தி வைத்ததால் கதவுகள் மூடப்பட்டன. இழப்பு எனக்கில்லை. என் தலைக்கு மேலே சர்ச்சைக்குரிய படைப்பாளி என்ற சக்கரம் சுற்றுவதால், முன்புபோல் இல்லாமல் தற்போது ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து கூட அழைப்பில்லை. இந்தச் சில்லரை குருபீடங்களை எதிர்ப்பார்த்து நான் எழுதிக்கொண்டிருக்கவில்லை. நானே குருவின்றி வித்தையைக் கற்றவன்.
கேள்வி: பொதுவாகவே சிங்கையில் தாங்கள் சர்ச்சைக்குரியவாராக அடையாளம் காட்டப்படுவதன் காரணம் என்ன? இவ்வடையாளம் தாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதா?
பதில்: நான் என்ன சர்ச்சையை விறைத்த குறியாக வைத்துக்கொண்டு அலைகின்றேனா? சிங்கப்பூரில் கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் நான் எந்த அடையாளத்தையும் விரும்புவதில்லை,விரும்பி ஏற்றுக்கொண்டதும் இல்லை. அப்படி இங்குள்ள சிந்தனை காயடிக்கப்பட்ட தமிழ் ஜிங்குஜக்குகளின் குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி ஏற்றுக்கொண்டிருந்தால், நானும் எழுத்துச் செங்கல், தமிழ் வேல், வில், கம்பு, ஏவல், கூவல், தேனீ, யோனி, ஏறல், தூறல் என்று தமிழன்னையிடம் கோவணம் வாங்கிக் கட்டிக்கொண்டு மேடைதோறும் எனக்கும் தமிழ் வரும் என்று தமிழ் வாழ்த்துப் பாடி வேட்டி தூக்கிக் காட்டி புல்லரித்துப்போயிருப்பேன். நல்ல வேளையாக, நான் கற்ற கல்வி, தமிழ் இலக்கியத்தைக் கடந்த வாசிப்பு, இருமொழி எழுத்துப் பயிற்சி, பெற்ற தொழில்முறை வாழ்க்கை அனுபவங்கள், சந்தித்த கலைஞர்கள், தனித்திருக்கும் துணிச்சல், எல்லாம் என்னைத் தற்காலத் தமிழ் இலக்கியம் எனும் கருந்துளையில் (black hole) இருந்து காப்பாற்றி இருக்கின்றன.
சிறுபான்மைத் தமிழனாக இருந்தாலும், என் படைப்புகள் சுயதணிக்கை இல்லாமல் அதிகார மையத்தை நோக்கி உண்மையைப் பேசுவதால், நிறுவன அமைப்புகளின் மரபார்ந்த கருத்தியல்களை, விழுமியங்களை நிர்-நிர்மாணம் செய்து நகைப்பதால், எதையும் கேள்விக்குள்ளாக்குவதால் என்னைச் சர்ச்சைக்குரியவராகச் சிங்கப்பூரின் ஜனநாயக விரோத ஆங்கிலப் பத்திரிகைகளும் அரசின் கலாலோசைனக் குழுக்களில் வீற்றிருக்கும் மலப்புழுக்களும் சாவதானமாக முத்திரை குத்திவருகிறார்கள். இதனாலேயே நான், கெஞ்சினாலும், கொஞ்சினாலும் நட்புப் பாராட்டி வரும் ஆங்கிலப் பத்திரிகை நிருபர்களுக்கு நேர்காணல் வழங்குவதில்லை. சொன்ன கருத்தைத் திரித்துப்போட்டுச் சர்ச்சையைக் கிளப்புவதே அவர்கள் வேலை. 2008 -இல், நியூஸ்வீக் இதழின் தலைமை நிருபர் George Wehrfritz ஹாங்காங்கில் இருந்து பறந்துவந்து சிங்கப்பூரின் சர்ச்சைக்குரிய ஆங்கில நாடகக் கலைஞர்களைப் பேட்டி எடுத்தார். மற்ற நான்கு பேரைக் குழுவாகவும், என்னைத் தனியாகவும் சந்தித்தார். சிங்கப்பூரில் நாடகத் தணிக்கை, தடை, கலைகளில் அரசின் குறுக்கீடு, கருத்துச் சுதந்திரம், அரசியல் என்று நேர்காணல் நீண்டது. இறுதியில், ஆகஸ்ட் 11- ஆம் தேதி வெளியான இதழில் என் நேருரை மட்டும் கத்தரிக்கப் பட்டிருந்தது. என் கருத்துகள் சிங்கப்பூரைத் தென்கிழக்காசியாவில் மிகப்பெரிய கலைகளின் மையமாக உருவாக்க மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருப்பதாய்த் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் ஸ்தாபனத்தையும் நடப்புகளையும் அம்பலப்படுத்தியதால், பரிகசித்ததால், அமெரிக்க வெள்ளைக்காரக் குழு ஆடிப்போய் தணிக்கை செய்துவிட்டுச் சிங்கப்பூர்ப் பிரதிநிதி Sonia Kolesnikov-Jessop மூலம் ஈமெயிலில் பூடகமாக மன்னிப்புக் கேட்டது. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சோனியா சொல்ல மறுத்தாலும், ஏதோ ஓர் அரசாங்க நாய் போடவேண்டாம் என்று காலில் விழாக் குறையாய் மன்றாடிக் கேட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். வெளியான கட்டுரையில், Alfian Sa’at மட்டும் என் தலாக் (TALAQ) நாடகத் தடை பற்றிக் குறிப்பிட்டிருந்தார். நான் இதுபோன்ற கோமாளித்தனங்களை ஏற்கனவே நம் தமிழ் விதூஷகர்களிடம் பார்த்திருப்பதால் பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அன்று முதல் நேர்காணல் என்று வரும் எந்த வெளிநாட்டு வெள்ளைக்கார நாயையும் அண்டவிடுவதில்லை. நேர்காணல் வெளிவரும் என்று உறுதிமொழி எழுதிக்கொடுத்தால் அன்றிப் பதில் கொடுப்பதில்லை. பாருங்கள், நான் உண்டு என் எழுத்துண்டு என்று இருந்தாலும், சர்ச்சை வீட்டுக்கதவைத் தட்டுகின்றது.
நான் ஒன்றும் தீப்பந்தம் ஏந்தி இந்த நாட்டைக் கொளுத்தப்போவதில்லை; குண்டுமழை பொழிந்து முட்டாள்களை வதம் செய்யப்போவதில்லை; அரசியலில் நுழைந்து ஆட்சியைக் கவிழ்க்கப் போவதில்லை; எனக்குப் பதவியோ பணபலமோ சீடர்களோ கிடையாது என்பதை தினமும் என் கைத்தொலைபேசி, வீட்டுத் தொலைபேசி, கணினி, நாடகம் அரங்கேறும் இடம் அனைத்தையும், வாங்கும் சம்பளத்துக்குப் பாதகமில்லாமல் 24-மணி நேரமும் ஒட்டுக் கேட்கும் கண்காணிக்கும் உள்துறை இலாகா அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும், அரசாங்கத்துக்கும் நன்றாகவே தெரியும் என்று எனக்கும் தெரியும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு கலைஞனை வாழவிடாத எந்த நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. சிறுபான்மை இனக் கலைஞனை நசுக்குவதால் நாட்டின் கலை மேம்பாட்டு முயற்சிகளுக்குதான் இழுக்கு. ஸ்தாபன மையத்தைச் சிதறடிக்கும் மற்றமைத்தன்மை உரையாடல்களை நாடகங்களாகவும் கவிதைகளாகவும் கொடுப்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. இந்நாட்டில் என் இருப்புக்கூட அதிகாரத்துக்கும் எனக்குமிடையே அரங்கேறும் ஒருவித நுண்ணரசியல்தான். “In a time of universal deceit, telling the truth is a revolutionary act – George Orwell.” 2005 -இல் ஆகஸ்ட் மாத உயிர்மை இதழுக்கு அளித்த நேர்காணலில் முடிவாகக் கூறியதை மறுபடியும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். “கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் நீண்டகாலமாகத் தனிமையில் நடந்து கொண்டிருக்கிறேன். இந்த அபாயகரமான பயணம் எனக்குச் சந்தோஷங்களைக் கொடுத்தாலும் பொருளாதார ரீதியில் நான் பல இழப்புக்களைச் சந்திக்கவேண்டியுள்ளது. அதற்காக எந்தக் கொம்பனிடமோ, குப்பனிடமோ, சுப்பனிடமோ, அதிகாரத்திடமோ நான் கையேந்தியதில்லை, சமரச இரசம் காய்ச்சிப் பருகியதில்லை. ஒவ்வொரு நாளும் ஆன்மீக ரீதியில் நான் வலிமை பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆனமீகம் மதம் சார்ந்ததல்ல. என்னுடைய கவிதை – நாடகம் இரண்டைத் தவிர எனக்கு வேறு மதமில்லை. கடவுள் கச்சடா எதுவுமில்லை. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?”
கேள்வி: பொதுவாக உங்கள் நாடகங்களை வெளிநாடுகளில் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? குறிப்பாகத் தமிழகத்தில்?
பதில்: 1994 -1995 வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் நான் எழுதி இயக்கி அரங்கேறிய நாடகங்களைப் பற்றிச் சொல்கிறேன். ‘You Are Here’ எனும் வெள்ளை இனவாதம் பற்றிய Theatre-in-Education நாடகம் பெர்த்தில் (Perth) உள்ள பத்து வெவ்வேறு வெள்ளை, பழங்குடிக் கல்விக்கூடங்களில் அரங்கேற்றப்பட்டது. நான் காதுகேளாதோர் சமூகத்தோடு இணைந்து தோற்றுவித்த Fingerpainters என்ற குழுவுக்காக THE CHAIR எனும் நாடகத்தை ஊமைப்பயிற்சிக் கலைஞர்களை வைத்து மேடையேற்றி அந்தக் குழுவுக்கு முறையான நிர்வாகத்தை அமைத்து மாநிலத்தின் கலை மானியத் தொகையும் பெற உதவினேன். மற்றும் ஆஸ்திரேலிய நகர வாழ்க்கையின் சிதைவைக் காட்டும் நாய்கள் (DOGS) எனும் மிகையதார்த்த நாடகம், உயிர்பெறும் மரப்பாச்சியின் மூலம் சமூக அரசியலை நக்கலடிக்கும் PUPPET etc. எனும் பின்நவீனத்துவ நாடகம். 1996-இல், ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனில் (Cape Town) உள்ள The Hearts and Eyes Theatre Collective எனும் புகழ்பெற்ற நாடகக் குழு, என் அனுமதி பெற்று நாய்கள் (DOGS) நாடகத்தை Grahamstown தேசியக் கலை விழாவில் தென்னாப்பிரிக்க வாழ்வைப் படம்பிடிக்க வசனங்களைச் சிறிது மாற்றி இயக்கி நடித்து அரங்கேற்றினர்.
1997-இல், மே மாதம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், இரத்தக்கறை படிந்த ஸ்பானிய வரலாற்றை அல்-ஹம்ப்ராவில் (Al-Hambra in Granada) வாழ்ந்த ஓர் அலியின் ஆவியும் பந்து விளையாடும் இரு சூனியக்காரிகளும் மறுபரிசீலனை செய்யும் இரத்தம் (SANGRE) எனும் பின்நவீனத்துவ நாடகத்தை மொழிபெயர்ப்பாளர் உதவியோடு ஸ்பானிய மொழியில் உருவாக்கி, இரு ஸ்பானிய நடனமணிகளையும், கொலம்பியாவில் (Colombia) இருந்த வந்த ஒரு நடிகரையும், மேலும் ஓர் உயிருள்ள முயல் குட்டியையும் இயக்கி நடிக்கவைத்தேன். நாடகத்தின் இறுதிக்காட்சியில், சிவப்புநிறச் சாயத்தொட்டியில் முங்கி எடுக்கப்பட்ட முயல் குட்டி மேடையெங்கும் விரிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் குதித்துப்போய் செந்நிற வர்ணச் சுவடுகளை உருவாக்கும்போது பார்வையாளர்கள் இரு குழுக்களாய்ப் பிரிந்து கத்தி சிறு கலவரமே வெடித்தது. சில பெண்கள் அழத்தொடங்கினர். ஆண்கள் ஸ்பானிய மொழியில் திட்டினர். ஒன்றும் புரியவில்லை. எனக்கு உவப்பான ஸ்பானிய மொழியில் திட்டியதால் உவகை பொங்கியது. என் ஸ்பானிய பேராசிரியர், நாடகத்தின் வீச்சைப்பற்றி ஒரு பிரசங்கமே நடத்தி பார்வையாளர்களை அடக்கினார். முயலைக் குளிப்பாட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தோம். நான் எழுதிய ஒரே ஸ்பானிய நாடகத்தை இன்னும் பதிப்பிக்கவில்லை. இலண்டனில் உள்ள Yellow Earth Theatre என்னும் பிரபல நாடகக்குழு, நாய்கள் (DOGS) நாடகத்தை 2007-இல், அக்டோபர் மாதம் 9 -13 வரை, இன்னொரு தென்கொரிய எழுத்தாளரின் நாடகத்தோடு சேர்த்து அரங்கேற்றியது. அந்த நாடாக விழாவுக்குத் தென்கொரியத் தூதரகம் நிதியுதவி செய்தது. சிங்கப்பூர்த் தூதரகத்தை அவர்கள் அணுகியபோது, என் நாடகம் என்றதும் கதவைச் சாத்திவிட்டர்கள் என்று மலேசிய ஈப்போவைப் பூர்வீகமாகக்கொண்ட நாடக இயக்குனர் க்வாங் லோக் (Kwong Loke) தெரிவித்தார். அதே வாரம், அதே தெருவில் வேறு அரங்கில், சிங்கப்பூர்க் கலை விழா என்ற பெயரில் வெள்ளைக்காரர்களை ஈர்க்க ஒரு கும்தலக்கடிகும்மா நிகழ்ச்சி சிங்கப்பூரின் உயரமான மாஜி பிரதமர் தலைமை தாங்க நடந்தேறியது. நாய்கள் நாடகம் நிறைய சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. ஒரு சிங்கப்பூரர் உலகின் ஏதாவது ஒரு மூலையில் குசுவிட்டால் கூட The Straits Times – இன் முதல் பக்கத்தில் வண்ணப் படம்பிடித்துப் போடும், எனக்கு நன்கு அறிமுகமான சிங்கப்பூரின் ஆங்கிலப் பத்திரிகை பெண் நாடக நிருபர், நாய்கள் பற்றிய தகவல்களை இலண்டனில் இருந்து பெற்றும், அதுபற்றி எதுவும் எழுதவில்லை. கேட்டதற்குப் பக்கம் போதவில்லை என்று மூடிமறைத்தார். கேவலமாக அரசாங்கத்துக்குக் குண்டி கழுவும் பத்திரிகை. அதில் கழுத்தில் நாய்ச் சங்கிலியோடு ஊளையிடும் நிருபர்கள். பத்திரிகா தர்மத்துக்கே அவமானம். Welcome to Singapore. ஆங்கிலச் சூழலிலேயே இப்படிக் கிழிகிறதென்றால், தமிழ்ச் சூழல்? தமிழினத் தலைவர் கருணாநிதியின் குடும்ப தர்பார் நடக்கும் தமிழகத்தில், என் நாடகங்களை அரங்கேற்றும் தைரியம், 1989-இல் இருந்தே எனக்கு ஒரு தந்தையைப்போல் மிக நெருக்கமாய் இருந்துவரும் நாடகக் கலைஞர் கலைமாமணி ந. முத்துசாமியின் கூத்துப்பட்டறைக்கே இல்லாதபோது, வேறு எந்த அமைப்பு முன்வரும் என்று எதிர்பார்க்கமுடியும்? அதிலும் கனிமொழி வேறு கூத்துப்பட்டறையின் Board of Trustees -இல் ஒருவராக இருக்கும்போது? கவுண்டமணி சொன்னதுபோல், அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. ஒன்னும் கண்டுகொள்ளக்கூடாது. வேறு தமிழக நாடக அனுபவங்கள் என்றால் சிங்கப்பூர் கலை விழாவில் 1990-ல் புரிசை கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்தையும் 1998-ல் கூத்துப்பட்டறை குழுவினரின் நவீன நாடகங்களையும் அரங்கேற்ற உழைத்திருக்கிறேன். டிசம்பர் 2002-ல் சென்னை (Stella Maris College)ல் Women In Asia : Issues and Concerns மாநாட்டில் பேராளராகக் கலந்து கொண்டதோடு மாணவிகளுக்கு ஒரு நாடகப் பயிலறங்கும் நடத்தியிருக்கிறேன். ஆகஸ்ட் 2002-ல் Maxmuller Bhavan சென்னையில் எனது Flush நூல் வெளியீட்டோடு நாடகத்தின் காணொலியும் இடம்பெற்றது. சென்னையில் முக்கியான இலக்கியவாதிகளும் விமர்சகர்களும் இதழாளர்களும் வந்திருந்தனர். நாடகம் அவர்களின் மனதில் இருந்து வந்த சிஙக்ப்பூர் என்ற பிம்பத்தை உடைத்தது.
கேள்வி: கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் தவிர்த்துத் தாங்கள் இரண்டு சிறுகதைகளும் எழுதியுள்ளதாக அறிகிறோம். அதில் தொடர்ச்சியாகத் தங்கள் கவனம் செல்லாதது ஏன்?
பதில்: இரண்டு சிறுகதைகளல்ல. 27 சிறுகதைகள். திரை ஒளி சினிமா இதழில் வெளிவந்த “ஒரு நம்பிக்கை தூக்கில் தொங்குகிறது” – நகல் பிரதி இல்லை. 1975 -ல் இருந்து தமிழ் மலருக்கு அனுப்பிய 19 கதைகளும் அம்போ என்று போய்விட்டன. நானும் நகல் பிரதி வைத்துக் கொள்ளவில்லை. தமிழ் மலர் சிங்கப்பூரில் இருந்த போது அங்கே ஓடும்பிள்ளையாய் இருந்த காலஞ்சென்ற மரபுக் கவிஞர் பரணனிடம் கொடுத்த ஒரு சிறுகதையை அவர் ஆசிரியரிடம் ஒப்படைக்காமல் குடிபோதையில் கழிப்பறைத் தாளுக்குப் பயன்படுத்தி இருக்கலாம். அதற்கும் நகல் இல்லை. ‘வெள்ளிக்கிழமை காத்திருந்தவன்’ என்ற மலேசிய தோட்டப்புறப் பேய்க்கதை 1975 தமிழ் மலரில் வெளிவந்தது. மஞ்சள் பூத்துப்போன பக்கம் இருக்கின்றது. 1977 -இல் மனோரதங்களின் பாதையில் ஒரு நிர்மலப்பூ என்று தமிழ் மலரில் வெளிவந்த ஒரு கற்பனாவாத மசாலாக் கதைக்கு நகல் இல்லை. ஆனால், காலஞ்சென்ற நா. கோவிந்தசாமியின் 1977 இலக்கியக்களத் தொகுப்பில் இருக்கிறது. சிறுகதை வடிவ சோதனை செய்து தீவிரமாய் எழுதிய கதைகள் பழைய கோப்புகளில் கிடக்கலாம்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய புகை ஏணி (Smoke Ladder), அறிமுகமில்லாக் கண்ணாடிகளில் ஏதேச்சையாக (In Unknown Mirrors) என்ற இரு சிறுகதைகளும் 1990 -இல் சிங்கப்பூர்ப் புனைகதைத் தொகுப்பில் (The Fiction of Singapore – Anthology of ASEAN Literatures) இடம்பெற்றன. முதலில், 1992 சிங்கா கலை சஞ்சிகையில் ஆங்கிலத்தில் சிறுகதையாய் வந்த FLUSH தான், பிறகு 2001-ல் சிங்கப்பூரின் சீன இனவாதப் பிரச்சினையைப் போட்டுடைத்த என் முக்கியமான நாடகமாய்ப் புதுவடிவம் பெற்றது. உண்மையில் FLUSH, The Straits Times பத்திரிகையின் கலைப்பகுதி ஆசிரியர் கவிஞர் Koh Buck Song வருட இறுதி சிறப்புச் சிறுகதைப் பகுதியில் வெளியிடக் கேட்டுக்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. ஆனால் இறுதியில், மற்ற எழுத்தாளர்களின் கதைகள் மட்டுமே பிரசுரமாயின. கடைசி நேரத்தில் அவர் எவ்வளவோ போராடிப் பார்த்தும், சர்ச்சையைக் கிளப்பும் என்று என் கதை நீக்கப்பட்டது. இந்த FLUSH சிறுகதையை நான் கலந்துகொண்ட சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலிய இலக்கிய மாநாடுகளிலும், விழாக்களிலும் வாசித்திருக்கிறேன். வாசித்து முடித்ததும், விருந்துநேரத்தில் யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். சீனாவில் இருந்து வந்த சீனர்கள் மட்டும் பேசுவார்கள்; விவாதிப்பார்கள். இவ்வளவுக்கும், சிங்கப்பூரின் சீன இனவாதத்தை இலக்கியத்தில் அம்பலமாக்கிய, அதுவும் சிறுபான்மைத் தமிழன் ஒருவன் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கதை. இத்தனை வருடங்களுக்குப் பின் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகுதைய்யா. சிறுகதையில் எனக்கு ஆர்வம் குறைந்தது. வெறும் மௌனவாசிப்புக்கான சிறுகதையை விட ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கும் அதிரடி நாடக அரங்கின் பனிமுக எரிமலை வீச்சு என்னைக் கவர்ந்தது. சிறுகதை அடக்கமான கைத்துப்பாக்கி என்றால் நாடகம் AK47. நான் AK47-னைத் தேர்ந்தெடுத்தேன்.
கேள்வி: சிறுகதையைக் கைத்துப்பாக்கியாகவும், நாடகத்தை AK 47-னாகவும் ஒப்பிடும் தொடர்ச்சியில் சினிமாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நாடகத்தைக் காட்டிலும் சினிமாவின் அடைவு விஸ்தாரமானது அல்லவா? ரித்விக் கடக் போன்றோர் நாடகம் மூலம் தொடங்கினாலும் பின்னர் சினிமா இயக்கத்தைத் தேர்ந்து கொண்டது பற்றி உங்கள் எண்ணம் என்ன? நீங்கள் ஒரு பயிற்சிபெற்ற Cameraman என்று அறிகிறோம். நாடக இயக்கத்தின் நீட்சியாக நீங்கள் சினிமாவை எப்படி அணுகுகிறீர்கள்? சினிமா தொடர்பான உங்கள் முயற்சிகள் அல்லது மனத்தடைகள் பற்றிக் கூறுங்கள்.
பதில்: சினிமாவைப் Bazooka-வோடு ஒப்பிடுவேன். நான் முறையாக ஒளிப்பதிவுத் துறையில் பயிற்சி பெற்றவன். 1980 -இல் இருந்து 1981-வரை சிங்கப்பூர்த் தொலைக்காட்சி நிலையத்தில் நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒளிப்பதிவாளரின் மிகக் கடுமையான ஆறுமாத நேரடிப் பயிற்சிக்குப் பிறகு அவர் வைத்த தேர்விலும் தேறி தொலைக்காட்சியின் செய்திப்பிரிவுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் முதல் முதலாக ஒளிப்பதிவு செய்தது ஒரு மரணத்தை. ஓர் அதிகாலை மழையில், சிங்கப்பூர் இராணுவக் கனரகவாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி அதிலிருந்த பல இராணுவத்தினர் தூக்கியெறியப்பட, ஒருவர் மட்டும் சாலையோரத்தில் நாட்டுக்காக உயிர்விட்டார். மழையில் நனைந்துகொண்டே உடலின் பக்கத்தில் அமர்ந்து படம்பிடித்தது மறக்கமுடியாத அனுபவம். செய்திப் பிரிவில் இருந்த என்னைத் தமிழ்ப் பிரிவுக்கு மாற்ற முயன்றனர். நான் ஆங்கிலப் பகுதிக்கு வேலை செய்து என் திறனை வளர்த்துக்கொள்ள முடிவு செய்திருந்தேன். மற்ற சராசரி ஒளிப்பதிவாளர்களைவிட என் அடிப்படைக் கல்வித்தரம் உயர்ந்தது என்பதால் ஆங்கில நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். மேலதிகாரியிடம் எவ்வளவோ கேட்டும், தமிழ்ப் பிரிவு உன்னைக் கேட்கிறது, நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கையை விரித்துவிட்டதால், பீயைத் தின்பதற்கு ஒப்பான தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களுக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கும் வெளிப்புற ஒளிப்பதிவாளனாய் இருப்பதை விட நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவதே மேல் என்று இராஜினாமாக் கடிதத்தை நீட்டினேன்.
நான் தொலைக்காட்சி நிலையத்தில் சேர்வதற்கு முன்பே, உலகத் திரைப்படங்களைப் பற்றிய ஆழமான வாசிப்பு எனக்கிருந்தது. அதோடு Singapore Film Society -இல் நான் அங்கத்தினன். சத்யஜித் ரே, ரித்விக் கட்டக், ஷ்யாம் பெனேகல், மிருனாள் சென் போன்ற இந்தியத் திரைப்பட ஜாம்பவான்களையும் சேர்த்து, Sergei Eisenstein, Akira Kurosawa, Luis Bunuel, Ingmar Bergman, Federico Fellini, Bertolucci, Pasolini, Orson Welles, Godard, Roman Polanski, Ousmane Sembene, என்று (அடுக்கிக்கொண்டே போகலாம்) அனைவரின் படங்களையும், ஆப்ரிக்க, இலத்தின் அமெரிக்க இயக்குனர்களின் படங்களையும் சுவாசித்தவன் நான். எனக்குக் கிடைத்த அனுபவத்தோடும் ஒளிப்பதிவாளர் சான்றிதழோடும், American Film Institute, London International Film Institute, பின்னர், இந்தியாவில் Pune Film Institute, கடைசியில் சென்னை அடையாறு Film Institute என்று பணச்செலவைக் கருதி இறங்கி இறங்கி முயற்சி செய்தும், தந்தையார் ஒரு சல்லிக்காசு கொடுக்கமாட்டேன், சினிமாக் கூத்தாடி ஆவதென்றால் வீட்டைவிட்டு வெளியே போ என்று என் கனவுகளைச் சுட்டுத் தள்ளிவிட்டார். இன்று சிங்கப்பூரில் ஆரம்பக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட மானியத் தொகை அன்று அறவே கிடையாது, அன்றோடு என் திரைப்பட ஒளிப்பதிவாளர் பின் இயக்குனர் ஆகும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மேடை நிகழ்கலைக்கு மாறிவிட்டேன்.
நான் முழுமையாக 16mm film -இல் பயிற்சி பெற்றவன். 1981 -இல் வீடியோ காமெராக்கள் சந்தையில் வெளிவந்தன. நான் பகுதிநேர வீடியோ ஒளிப்பாதிவாளராகச் சுமார் ஏழு வருடங்கள் குறிப்பாகச் சீன மரணச் சடங்குகள் (சீனர்கள் துரதிர்ஷ்டம் என்று படம்பிடிக்கமாட்டார்கள் – புதைகுழியில் போட்டு மூடும் வரை ஒளிப்பதிவு செய்தால் நல்ல தொகை), பொதுவான சமூக நிகழ்வுகள், நான்கின திருமணங்கள், தொழிற்சாலை விளக்கப் படங்கள், என்று என் ஒளிப்பதிவு அரிப்பைத் தீர்த்துக்கொண்டேன். அன்று இன்றைய தொழில்நுட்பங்கள் அதிகம் இல்லாவிட்டாலும், காட்சிகளைப் பதிவு செய்யும் போதே அவற்றை mental editing செய்து பதிவுசெய்யும் திறமை பெற்றிருந்ததால், வேலை எனக்குச் சுலபமாக இருந்தது. தற்போதைய சிங்கப்பூர் அதிபரின் ஒரே மகளின் திருமண சடங்கையும் அன்று ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். என் பணிகள் மாறவும், வீடியோ தொழிலை விட்டுவிட்டேன். இன்று குறும்படம் முதல் திரைப்படம் வரை எடுக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும், பண முதலீட்டையும் யோசிக்க வேண்டி உள்ளது. யாரும் அழைத்தால், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று ஒத்துழைக்கும் ஆர்வம் இருக்கிறது. 1998 -இல், Tiger’s Whip என்னும் சிங்கப்பூரில் தயாராகித் தோல்வியடைந்த ஆங்கிலப் படத்திலும் இந்திய யோகியாக ஒரு Cameo Role பண்ணியிருக்கிறேன். நாடக எழுத்து இயக்கம் என்பது திரைப்படத்தைவிட அதிக சிரமமானது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் பரப்பளவும், சொல்முறை உத்திகளும் நாடகத்தைவிட திரைப்படத்துக்கே அதிகம் என்பதை மறுக்கமுடியாது.
இன்று பல நாடக இயக்குனர்கள் ஆட்டப்பிரதியோடு குறும்படக் காட்சிகளையும் நாடகத்தின் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்கிறார்கள். இதில் எழுத்துத் திறமை இல்லாமலும், கற்பனை வறட்சியாலும் படக்காட்சிகளை நாடக அரங்கில் காட்டுபவர்களே அதிகம். மின்சார வெட்டு வந்தால், ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட நடிகர்கள் நாடகத்தைக் காப்பாற்ற முடியும். ஆனால், வெறும் மின்சாரத்தை நம்பிய தொழில் நுட்ப ஜோடனைகள் ஏமாற்றிவிடும். என் தடைசெய்யப்பட்ட தலாக் நாடகத்தை, Shabana Azmi-யையோ, Nandita Dass-சையோ கதாநாயகியாய் நடிக்கவைத்துத் திரைப்படமாக எடுக்க ஒருவர் ஆர்வம் காட்டினார். வியாபாரிகளிடம் திரைக்கதையில் சமரசம் செய்துகொண்டு கதையை விற்க விருப்பமில்லாததால், மறுத்துவிட்டேன். என்னுடைய நாடகங்களில், திரைப்படமாகவேண்டிய பல கதைகள் இருக்கின்றன. நான் என் நாடகங்களை ஒரு திரைப்படத்தை இயக்குவதுபோலவே இயக்கி அரங்கேற்றிவருகிறேன். இன்றும் விடாமல் தென்கொரிய, ஈரானிய, பிலிப்பினோ, ஐரோப்பிய, ஆப்ரிக்க தீவிர சினிமாவை இரசித்து உத்வேகம் பெறுகிறேன். இரண்டரை மணி நேரம் மூளையைக் கழற்றிவைத்துவிட்டு எப்படி இரசனையை வளர்த்துக்கொள்வது என்ற ஜெகஜால வித்தையைக் கற்றுக்கொள்ள மட்டும் தமிழ்ப்படங்கள் பார்க்கிறேன்.
கேள்வி: இதைத் தவிர்த்துத் தாங்கள் இசைப் பாடலாசிரியராகவும் இருந்துள்ளீர்கள். அது குறித்துக் கூறுங்கள்?
பதில்: அண்மையில் வெளிவந்த ஜக்குபாய் படத்தின் இசை அமைப்பாளர் ரபி இசையமைத்துச் சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல பாடல்களை இயற்றியவன் நான். 1991-இல் தமிழின் முதல் RAP பாடலான ஜோஜோ முனியாண்டி பாடல், காமாசோமா மாமா என்னும் RAP, புயலுக்கென்ன பூட்டு நெருப்புக்கென்ன தீட்டு – RAP, மந்திரம் வச்சாளே மச்சமுள்ள கண்ணாலே. தொடர்கதையா சிறுகதையா, விண்ணை ஆளும் சங்கீதம், கருப்பாயீ கருப்பாயீ எங்கப்போறே, கண்ணே ரோஜாப்பூவிலே தூளியிடவா, சோகம் பூத்திருக்கும் பாதை, போன்றவை நான் எழுதியவை. ரபி வெளியிட்டிருக்கும் Breakthro’ Karupayee இசைவட்டுகளில் என் பாடல்கள் உண்டு. ஆனால், இதுவரை எவரிடமும் காப்புரிமையை விட்டுக்கொடுக்க எந்தக் கையெழுத்தும் போடவில்லை, ஒரு காசும் வாங்கியதில்லை. சிங்கப்பூரின் மதுபானக்கூடங்களிலும், வானொலியிலும் (வேண்டுமென்றே என் பெயர் சொல்லப்படாமல்) ஒலிக்கும் என் பாடல்களின் காப்புரிமை என்வசம்தான் இருக்கிறது. ரபியின் காப்புரிமை இசைக்கு மட்டுமே. Intellectual Property என்றால் என்னவென்று பேந்த பேந்த விழிக்கும் காட்டுமிராண்டிகள் பாட்டைக்கேட்டுத் தொலைந்துபோகட்டும் என்று நானும் கடந்த 20 வருடங்களாகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டேன்.
கேள்வி: உங்கள் கவிதையிலும் நாடகத்திலும் உள்ள தீவிரத்தன்மை உங்களின் இசைப்பாடல்களில் காணமுடிவதில்லையே? (உங்களின் பெரும்பாலானபாடல்களைச் செவிமடுத்துள்ளதால் கேட்கிறேன்.)
பதில்: என் இசைப் பாடல்களுக்கும், ஆத்மார்த்தமான என் இலக்கியத் தீவிரத்தன்மைக்கும் தொடர்பில்லை. Rap பாடல்கள் மட்டுமே விதிவிலக்கு. மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல இசை வியாபாரியான ரபி என்னும் இசை அமைப்பாளருக்காக இயற்றப்பட்ட வெறும் கற்பனாவாதக் கூளங்கள். இதற்கும், எதையும் நியாயப்படுத்தவேண்டிய அவசியமில்லாத ஒரு கொதிப்பேற்றும் பின்னணி உண்டு. எனக்கு உலக இசையில் அதிக நாட்டமுண்டு. 1975 -ல் மறைந்த குழல் இசைக் கலைஞர் சிங்கப்பூர்க் கர்ணனைச் சந்தித்தேன். மலையாளியான அவர் அப்போது உள்ளூர்த் தமிழ் இசைப்பாடல் வட்டுகளை வெளியிட்டிருந்தார். அவ்வப்போது அத்திப்பூத்தாற்போல் மலேசிய சிங்கப்பூர் வானொலியில் ‘மூங்கிலென்னும் குழலினிலே’, ஜேம்ஸ் போண்ட் மற்றும் சீன இசையைக் காப்பியடித்த ‘அன்றில் இருந்து இன்று வரை ஆண்டவன் நேரில் வந்ததில்லை’ போன்ற பாடல்கள் ஒளிபரப்பாகும். அப்பாடல்களை எழுதியவர் பானுதாசன் என்று ஞாபகம். ஒருவகையில் முன்னோடியான கர்ணனைச் சந்தித்தபோது என் மரபுக் கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. நான் எப்போதும் கையோடு தூக்கிக்கொண்டு அலையும் என் மரபுக் கவிதை நோட்டுப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தார். நான் அவருக்குப் பாடல் எழுத விரும்பினேன். அவர் எனக்குக் குழல் வாசிக்கக் கற்றுக்கொடுத்துத் தன் சீடனாக்க விரும்பினார். மீண்டும் சந்திக்க ஏற்பாடானது. ஆனால், என் தந்தையார் இந்த முயற்சிக்கும் தடைவிதித்ததால் உலகம் ஒரு குழல் கலைஞனை இழந்தது.
பின்னர், 1982-இல் இருந்து 1984 வரை இளங்குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளியில் சமூகநல அதிகாரியாக வேலை பார்த்தபோது சக அதிகாரியும் பிரிய நண்பருமான அந்தோணி மார்ட்டின் ஹோகனிடம் கித்தார் வாசிக்கக் கற்றுக்கொண்டேன். கித்தார் மீட்டி ஆங்கிலப் பாடல்களைப் பாடுவது என் பொழுதுபோக்கானது. 1985 -இல் கீழ்நீதிமன்றத்துக்குப் பணிபுரியும் Probation Officer -ஆகப் போனதோடு கித்தார் வாசிப்புக்கும் முழுக்கு. இருப்பினும், 1982 -இல் அமெரிக்காவில் Grandmaster Flash and the Furious Five வெளியிட்ட The Message எனும் hip-hop rap பாடல் என்னை மிகவும் பாதித்தது. ஒடுக்கப்பட்ட அமெரிக்க கறுப்பினத்துக்காகக் குரலெழுப்பிய அந்தப் பாடல் rap இசையின் முன்னோடியானது. நான் ஏற்கெனவே 1970-களில் இருந்து இங்கிலாந்தின் Pink Floyd இசைக்குழுவின் Psychedelic, Progressive, Sonic Experimental, Philosophic Rock இசைப்பாடல்களின் தீவிர இரசிகன். அக்குழுவின் பாடாலசிரியர் Roger Waters அற்புதமான கவிஞர். Another Brick in the Wall என்னும் இசைப்பாடலை மறக்கமுடியாது. 1980 -இல் தென்னாப்பிரிக்க அரசாங்கம் அந்த ஆல்பத்துக்கும் பாடலுக்கும் தடை விதித்தது. அந்தப் பாடலின் தாக்கத்தில் தான் என்னுடைய The Brick எனும் அரசியல் அங்கத நாடகம் 1991-இல் அரங்கேறியது. அமெரிக்க rap குழுவான Public Enemy, Bob Marley, நைஜீரிய இசைக்கலைஞரும் புரட்சிவாதியுமான Fela Kuti போன்ற பலரும் என்னை ஆட்கொண்டவர்கள்.
1991-இல் ரபியை சந்தித்தபோது ரபி சிங்கப்பூர்த் தொலைக்காட்சியின் நீர்த்துப்போன தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத் தன் வசந்தம் குழுவினரோடு வாசித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார். அவரிடம், தமிழ்ச் சினிமாப் பாடல்களின் இறுக்கமான ஆதிக்கத்தை உடைத்துத் தென்கிழக்காசியாவில் தமிழ் இசைப்பாடல்களுக்கென்று ஒரு தனி அடையாளத்தை மலாய் (M. Nasir), சீன ஆங்கில இசைத்துறைகள் போல் உருவாக்குவோம் என்று திட்டமிட்டேன். அவரும் ஆமோதித்தார். அதனால், என் rap பாடல்களும் உருவாகின. இடையிடையே கொஞ்சம் கவிதாபூர்வமான காதல் பாடல்களையும் எழுதித்தருமாறு வேண்டிக்கொண்டார். அவர் ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பாடுபவர். மலாய் இரண்டாம் மொழியாய்ப் படித்தவர். ஆனால், நான் எதிர்பார்த்ததுபோல் அவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் rap பாடல்களில் அக்கறை காட்டவில்லை. சர்ச்சைக்குரிய கவிஞனோடு இணைந்து பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் வெறும் தொழில்முறைக் கூத்தாடியாகவே இருக்க விரும்பினார். தொலைக்காட்சியின் தேவைகளுக்கு ஏற்ப வித்தியாசமான உணர்வுப் பாடல்களை எழுதுவேன் என்று எதிர்பார்த்தார். எனக்குப் பெருத்த ஏமாற்றம். எனது தலாக் நாடகத் தடையின் பிறகு, வேறு ஒரு முஸ்லிமைக் கொண்டு மசாலாப் பாட்டெழுதிகொண்டார். அறவே ஒதுங்கிவிட்டார். அதனால், கடந்த 11 வருடங்களாகத் தொடர்பைத் துண்டித்துக்கொண்டேன். இன்று உள்ளூர்ப் பாடல், மண்ணின் மைந்தர்களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் தமிழ்க்கொலை, கருத்துக்கொலையோடு ஒளியேறும் பாடல்களைச் செவிமடுக்கும்போது, அந்தக் காலத்தில் நாங்கள் எவ்வளவோ பரவாயில்லை. இருந்தாலும், ஒரு துறையில் ஏற்பட்ட தோல்வியின் இரணம் இன்னும் ஆறாமல் வலிக்கின்றது. நான் இசைப் பாடல்களுக்குக் காசுவாங்காமல் எழுதியதுதான் ஒரே மனநிறைவு. இதற்கெல்லாம் கழுவாய் தேடுவதுபோல் செப்டம்பர் 2004-ல் நான் ஆங்கிலத்தில் எழுதிய நிழல் பிடிப்பவன் – Shadow Catcher என்ற நீளமான Rap பாடல் Belgium நாட்டைச் சேர்ந்த Dr. Robert Casteels இசையில் சிங்கப்பூரின் முன்னணி ஆங்கில Rap பாடகர் Sheikh Haikel பாட Nanyang Academy Of Fine Arts Chorus-ன் நூறு குழுப்பாடகர்களின் பின்னனியோடு அரங்கேறியது. Dr. Robert Casteels 2005-ல் வெளியிட்ட இசைவட்டிலும் இடம்பெற்றது.
கேள்வி: மலேசியாவைப் பொருத்தவரை மீடியொகர் எழுத்தாளர்களே மலேசிய எழுத்தாளர்களாக அடையாளம் காட்டப்படுகின்றனர். சிங்கையின் நிலை என்ன?
பதில்: எங்கெங்குக் காணினும் பாரதி சொன்ன சக்தி இல்லை, மீடியோக்ரிட்டியே ஆளுகின்றது. மௌடீகத்தை மூச்சிலும் பேச்சிலும் சுமந்துகொண்டு வாந்திபேதியோடு இலக்கியத்தை விசிட்டிங் கார்டாய்ப் பயன்படுத்திக்கொண்டு சோரம் போய்க்கொண்டிருக்கும் மலேசிய சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு அடையாளம் மீடியோக்ரிட்டி என்ற சராசரித்தனம். இதில் எழுத்தில் சூளுரைத்துவிட்டு “ஐயோ நாளைக்கு வேலை போய்விடுமே, விருது கிடைக்காதே! யாராவது எழுதிப்போட்டு இசாவில் கம்பி எண்ண வேண்டுமே,” என்ற நடுக்கத்தில் அதிகார மையத்துக்கு உடனே குரங்குகளைப்போல் புட்டந்தூக்கிக் காட்டி “ஏறிக்க மவராசா ஏறிக்க… நல்ல அடிச்சுக்க… இராமனுக்குப் பெருசா… இராவணனுக்குப் பெருசா… மாதவிக்கு மாதவிலக்கு… கண்ணகிக்கு என்ன கணக்குன்னு கவியரங்கம்…. இலக்கிய மாநாடு…. பட்டிமன்றம்…. போட்டிகீட்டி எல்லாம் ஏற்பாடு செய்திருக்கோம்… அவாளும் இவாளும் வந்து தலைமை தாங்கணும்…” என்று அங்கப்பிரதட்சணம் செய்யும் காக்கைகளை வெளுக்கவே முடியாது. நீங்கள் மலேசியப் பெயர் பட்டியல் கொடுக்கவில்லை என்றாலும் எழுத்தாளர் கழகங்களிலிருந்து நாளேடுகள், வார மாத இதழ்கள்,வலைமனைகள் வரை நீளும் பிரகிருதிகளை நானறிவேன். சிங்கையின் நிலை என்ன என்று முதலிலேயே பட்டியலிட்டுவிட்டேன். தேவாங்குகளுக்கு எதற்குத் தீவிர இலக்கியத் திவ்யதரிசனம். பாலத்துக்கு இருபுறமும் பரதமாடுவது புழுக்கைகள்தான்.
கேள்வி: மலேசிய இலக்கியத்தைப் பொருத்தவரை நீங்கள் முக்கியமாகக் கருதும் எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் பிரதிகள் குறித்தும் சொல்லுங்கள்?
பதில்: 1997 டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி, மீண்டும் இந்தோனேசியாவில் மேடானுக்குத் திரும்பாமலேயே எங்கோ மதுரையில் ஓர் ஆம்புலன்ஸ் வண்டியில் அனாதையாய் இறந்துபோன கலைஞன் ப. சிங்காரத்தின் கடலுக்கு அப்பால்(1950 ), புயலில் ஒரு தோணி (1962) படைப்புகளைப்போல் பிரம்மிக்க வைக்காவிட்டாலும், வடிவத்திலும், கலை நயத்திலும், சொல்ல எடுத்துக்கொண்ட பிரச்சனையிலும், என் “இன்றைய” எதிர்பார்ப்புக்குள் வராமல் போனாலும், படித்தவை, இரசித்தவை, தேர்ந்து படிக்கச் சொல்பவை :- மறைந்த கவிஞர் கா. பெருமாளின் துயரப் பாதை, மலபார் குமாரின் செம்மண்ணும் நீல மலர்களும், ஐ. இளவழகின் இலட்சியப் பயணம், மறைந்த சா. ஆ. அன்பானந்தனின் மரவள்ளிக்கிழங்கு, ஆர். சண்முகத்தின் சயாம் மரண ரயில், மறைந்த நண்பர் இளஞ்செல்வனின் சிறுகதைகள், இராஜகுமாரனின் சிறுகதைகள், தொடர்ந்து எழுதாமற்போன அரு. சு.ஜீவானந்தத்தின் சிறுகதைகள், இந்துமதவாதியாகிவிட்ட நாகப்பனின் கோணல் ஆறு சிறுகதைகள், அ. ரெங்கசாமியின் லங்காட் நதிக்கரை, ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகள், இதுவரை குறிப்பிட்டோர்க்கான என் இரசனை அளவுகோலைத் தாண்டி, மா. சண்முக சிவாவின் சிறுகதைகள், கோ. முனியாண்டியின் கவனமாகத் தொகுக்கப்படவேண்டிய கவிதைகளும் சிறுகதைகளும், மலேசியாவுக்கு வெளியே ஆங்கில வடிவத்தில் பயணிக்காமல் இன்னும் தமிழ் இலக்கியத்தில் கம்பு சுழற்றிக்கொண்டிருக்கும் கலைஞன் சீ. முத்துசாமியின் மண்புழுக்கள் குறுநாவலும், சிறுகதைகளும். இளம் தலைமுறை எழுத்தாளர்களில் இன்னும் எதிர்பார்க்க வைப்பவை, நம்பிக்கை அளிக்கும் நவீனின் கவிதைகள், இசையில் ஒன்றிவிட்ட அகிலனின் கவிதைகள், ப. அ. சிவத்தின் கவிதைகள், வியக்கவைக்கும் தனித்துவமிக்க மஹாத்மனின் கதைகள், சு. யுவராஜனின் சிறுகதைகள், கே. பாலமுருகனின் சிறுகதைகள். இவ்வரிசைகள் எந்த நேரத்திலும் மாறலாம். இதில் ஏன் ஒரு பெண் படைப்பாளியும் இல்லை என்று கேட்கவேண்டாம். மீசை வைத்த ஆண்களே, நாளை வேலை போய்விடுமே, அடியாட்கள் வீட்டுக்கதவைத் தட்டுவார்களே, ISA (Internal Security Act)-இல் அடைத்துவிடுவார்களே என்று தயக்கத்தோடு எழுதிவரும் சூழலில், அவர்களின் இலக்கியத் தற்காப்புணர்வு சார்ந்த பயங்கள் தற்சமயத்துக்கு நியாயமானவைதான். ஆபத்திலாத தன்னுணர்வு படைப்புகள் தற்காலிகமானவையாகவும் இருக்கலாம். காத்திருப்பதில் தவறில்லை. ஒரு படைப்பாளியின் முக்கியத்துவத்தை, அதிகார மையத்திடம் குளிர்காய்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குக் கோவிந்தாக்கொள்ளி போடக் காத்திருக்கும் எழுத்தாளர் சங்கமோ, பத்துப்பேரைப் பன்னாடைகள் என்று திட்டித் தீர்த்து பொன்னாடை போர்த்தி அரிய விலை கொடுத்து நூல்வாங்கி புளகாங்கிதமடையவைக்கும் போலி அரசியல்வாதிகளோ, பட்டம் பதவிக்காகத் தன் வீட்டுப் பெண்களைக்கூடத் தயங்காமல் காசுக்காகவும் பென்ஸ் காருக்காகவும் விற்கத் தயாராய் இருக்கும் தமிழ்ப் பத்திரிகையாசிரியனோ முத்திரைக் குத்த முடியாது. தன்னம்பிக்கையும், தன்மானமும், மனசாட்சியும், அறச்சீற்றமும் கொண்டு மௌனக்கலாச்சாரத்தை உடைக்கும் விழிப்புணர்வுள்ள படைப்பாளனின் படைப்பே காலங்கடந்தாலும் அதை உறுதிப்படுத்தும். மலேசியாவில் அதிகபட்ச ஒடுக்குமுறைக்குள்ளாகிவரும் சிறுபான்மைத் தமிழினத்திலிருந்து எழுதவந்திருக்கும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள், இதுநாள்வரை ஜனரஞ்சக சூடுபோட்டுக்கொண்டு இலக்கியப் புலிகளாய் உலாவந்த சொறிப் பூனைகளின் கக்கல்களில் கால் வைக்காமல், சும்மா தலையில் அடித்துக்கொண்டு போய்விடாமல், பிசிறில்லாத, கூர்மையான படைப்புகளால் தம் விளிம்புநிலை சமுதாயத்தின் நசுக்கப்படும் வரலாற்றையும், சோதனைகளையும், வேதனைகளையும் ஆவணப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: தொடர்ச்சியாக நீங்கள் மலேசிய எழுத்துப் போக்கை அவதானித்து வருகிறீர்கள்? இன்றைய இளம் தலைமுறையினரின் இலக்கியப்போக்கை நீங்கள் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டு இலக்கியவாதிகளின் ஓட்டை வான்குடை விரிப்புக்குள் தொங்கிக்கொண்டிருக்கும் ஒட்டடைகள் புத்திலக்கியவாதிகள் என்று கோஷம் போட்டுக்கொண்டிருக்க, இலக்கியத்தை வாழ்க்கையின் ஆயுதமாய் ஏந்தி முன்னெடுத்துச் செல்லும் போராளிகள் காயகல்பம் தேடும் சித்தர்களைப்போல் சிந்தித்துக்கொண்டு செயலாற்றுகின்றனர். தமிழ்நாட்டின் சுயநலம்பிடித்த சுயமோகி இலக்கியச்சூழலை நிராகரித்து எதிர்வினையாற்றிவரும் கைக்கட்டி நிற்காத புலம்பெயர் ஈழ இலக்கியவாதிகளைப்போல் இந்த இளம் போராளிகள் சமூக புனிதர்களின் காட்டுக்கூச்சலுக்கு மத்தியிலும் ஒரு தனித்துவமிக்க மலேசியத் தமிழ் புத்திலக்கியத்துக்கு அடித்தளமிடுவதை அவதானிக்கிறேன். பலே பாண்டியா. ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.
கேள்வி: உங்களுக்கு ஏற்பட்ட ஏற்படுகின்றபொருளாதார இழப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
பதில்: ஒரு ஜென் (Zen) துறவியின் புன்முறுவலோடு.
கேள்வி: மலேசியாவில் எழுதும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
பதில்:எழுத்திலும் வாழ்க்கையிலும் முதுகெலும்பை மடித்துவைத்துவிட்டுச் சமரசம் பண்ணிக்கொள்ளாமல் உண்மையாய் அறச்சீற்றத்தோடு இருந்தாலே போதும், உருப்படலாம்.
நன்றி: வல்லினம் 

No comments: