Sunday, December 05, 2010

நிகழ்வு

எங்கள் முற்றத்து நிலவு
-ஜனரஞ்சன் -



எங்கள் முற்றத்தினிலே தெரிகின்ற நிலவு எங்களது  தான் ஆயினும் நிலவு  எல்லோருக்கும் பொதுவானது.   இதன்  வெளிப்பாடாக வரும்  உணர்வும்  நிகழ்வும்   பொதுமைப்படல்  வேண்டும் என்ற உண்மையை குறித்து  நிற்கிறது . தமிழ்மொழி   பற்றி  எல்லோருக்கும்     பொதுவான  அபிப்பிராயம்   இருக்கக்கூடும். தமிழ் கலாசாரம் எப்போதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. இச் சர்ச்சைகளை கடந்து   ஒரு இடுகுறி அடையாளமாக தமிழ்  கலாச்சாரக்  கழகம் வயனும் சூழலும் என்பதனைக்  கொள்வோமாயின். அதனால்  நடாத்தப்பட்ட   ஒளிவிழா ஒற்றைச் சொல்லில் சொல்வதானால் சிறப்பாக நடந்தது. குறித்த நேரத்தில் விழாவினை ஒழுங்கு செய்தவர்கள் தொடக்கி இருந்தார்கள். தலைவர் திரு .பொ.பிரேமதுரை  அவர்களின்  வரவேற்பு ரையுடன் முப்பதொரு சிறார்களின்  தீப ஆராதனையுடன் விழா தொடங்கப்பட்டிருந்தது. திரு.பிரான்சிஸ்  அவர்களின் கருத்துரையும் கேட்கக் கிடைத்தது. நடனம் நாடகம் சினிமா பாடல்களுக்கு அபிநயம் வீணை  இசை  என  நிகழ்ச்சி  நிரல்  அமைந்திருந்தன. ஒன்றுக்கு இரண்டு மூன்று வேலையென்று   அலுத்து அலைக்கழிக்கும் நாட்களில்  ஓர் பொழுதினை நண்பர்களை கண்டு பேசவும் எங்கள் சிறுவர்களின் சிறு சிறு குறும்புகளில் சொக்கிக் களிக்கவும் நல்ல  பொழுதாக  அமைந்திருந்தது   மகிழ்ச்சியே. குறிப்பாக அண்மையில் அம்பிகா சுரேஷ் அவர்களால் நெறிப்படுத்தப்படும் நாடகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். 100 நாடகங்களை மேடைஏற்றிய ஜாம்பவான் கி.சே.துரை, பூமி போன்ற பிரமாண்டமான நாடகங்களை தந்த க.ஆதவன், நாடகமே வாழ்வாகக் கொண்ட நடிகவிநோதன் த.யோகராஜா இன்னும் நாடக உலகில் அகலக் கால்பதித்தவர்கள் பலர் டென்மார்க்கில் வாழ்ந்து  வருகிறார்கள். இந்த வரிசையில் அம்பிகா அவர்களின் வருகை ஓர் ஆரோக்கியமான வருகையாக அமைவதற்கான தெறிப்பு அவரது நெறியாள்கையில் தெரிகிறது. ஒளிவிழாவில்  பாலன் ஜேசுவின் வருகையினை குறிக்கின்ற ஒரு சிறிய நாடகம்தான். கதைவசனம் ஜெனிற்றா பிரேம்துரை எழுதியிருந்தார், இசை ரகு,  ஒப்பனை அம்பிகாவும் நண்பர்களும். பொருத்தமான பின்னணி இசைக் கோர்வை காட்சிகளை இயல்பாக்கி இருந்தது. மேடை ஒளி அமைப்பில் இவர்கள் கவனம் எடுத்திருக்க வேண்டும் . மற்றையது ஓரங்க அரங்கில்  பல்வேறு கதைப்புலன்களை ஒன்றுபடுத்தி  காட்சியினை அமைத்திருந்தால் இன்னும் நேர்த்தியாக அமைந்திருக்கும் . இனிவரும் காலங்களில் இச்சீரினை எதிர்பார்க்கிறேன் .இருந்தபோதும் நாடகக் குழுவினருக்கு ஒரு சபாஸ் .தொடர்ச்சியாகச் சொல்வதானால்     நேர்த்தியான  ஒழுங்கமைப்பிலும்  நெறிப்படுத்தலிலும்  விழா   இனிந்தே     நடந்து  நிறைவு    பெற்றது. பங்கு  பற்றிய  மழலைகள்  எல்லாம் படு சுட்டிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ........

No comments: