தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். "சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?" உண்மை தான். அவன் தான் "மோட்டுச் சிங்களவன்" ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா? தமிழ் இனவாதிகள் சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இனக் கலவரங்களை தூண்டி விட்ட சக்திகள், தமிழர்கள் சிங்களவர்களை விட தாழ்ந்த சாதி என்ற கருத்தை விதைத்தன. தமிழர் தீண்டத் தகாத சாதி என்ற கருத்துப் பட, "பறத் தெமலோ" என்று கோஷமிட்டு கொண்டு தான் அடித்தார்கள், கொன்றார்கள். சிங்கள இனவெறியால் பாதிக்கப்பட்ட "பறத் தமிழர்கள்" அகதி முகாமிலும் தமக்குள்ளே சாதி பார்த்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
தமிழ் தேசியம் தோன்றுவதற்கு முந்திய காலங்களில், தமிழர்கள் சாதிப் பிரச்சினைகளை மறைக்கும் வலுவற்று இருந்தனர். அதற்கு மாறாக சிங்கள தேசியம், தனக்குள்ளே இருந்த சாதிப் பாகுபாட்டை வெளித் தெரியா வண்ணம் பூசி மெழுகியது. (பௌத்த மதம் சாதியத்தை எதிர்ப்பது முக்கிய காரணம்.) இருந்தாலும் சிங்களவர்களிடையே அவ்வப்போது எழும் சாதிப் பிரச்சினைகள் குறித்து, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதித்து வந்தன. இன்றைக்கும் அது தான் நிலைமை. உண்மையில் இனப்பிரச்சினை கூட, இலங்கையின் ஆதிக்க சாதிக்குள் (வெள்ளாளர்+கொவிகம) எழுந்த முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும். சிங்கள- தமிழ் இன முரண்பாடுகள் வெடிக்க முன்னர், சாதிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. அவர்களுக்கு இடையே திருமண பந்தங்கள் கூட ஏற்பட்டிருந்தன.
தமிழர்கள் மத்தியில் ஆதிக்க சாதியாக இருக்கும் வெள்ளாளர்கள் அரசியல்-பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கி வந்துள்ளனர். அதே போல, சிங்களவர்கள் மத்தியில் ஆதிக்க சாதியான கொவிகம இன்று வரை இலங்கையின் அரசியல்- பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றனர். சிங்கள மொழியில் "கம" என்றால் ஊர், அல்லது வயல் என்று அர்த்தப் படும். தமிழில் கூட கமம் என்ற சொல் வழக்கில் உள்ளது. வெள்ளாள- கொவிகம ஆதிக்கம் இலங்கையின் சரித்திரத்தை தனக்கேற்றவாறு எழுதி வந்துள்ளது. இந்து பார்ப்பனீய பாரம்பரியத்தில் சூத்திரர்களாக கருதப்படும் விவசாய சமூகம், இலங்கையில் உயர் சாதியினராக தலையெடுத்தது. "கௌதம புத்தரின் தந்தை ஒரு கமக்காரன்" என்பது பௌத்த- சிங்கள புளுகுகளில் ஒன்று. இலங்கையை ஆண்ட தலை சிறந்த மன்னராக கருதப்படும் பராக்கிரமபாகு ஒரு "வெள்ளாளர்" என்கிறது சிங்கள-கொவிகம கற்பிதம். (மகாவம்சம், பராக்கிரமபாகு சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர் என்று கூறுகின்றது.) இன்றும் கூட அரசியல் தலைவர்கள் தாம் "வெள்ளாளரின் (கமக்காரர்களின்) மேம்பாட்டுக்கு ஆதரவானவர்களாக" காட்டிக் கொள்கின்றனர். அண்மைய உதாரணம், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏர் பூட்டி உழுத காட்சி. தமிழர்கள் மத்தியிலும் அது போன்ற பிரச்சாரங்கள் சர்வசாதாரணம். "கந்தன் நல்ல கமக்காரன்" போன்ற சாதிய முன்னேற்ற பாடங்கள், ஆரம்ப பாடசாலை தமிழ் பாடப் புத்தகத்தில் போதிக்கப் படுகின்றன.
வெள்ளாள- கொவிகம சாதியினர், தமிழ், சிங்கள சமூகங்கள் மத்தியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று காணப் படுகின்றனர். ஆரம்பத்தில் மதம், மொழி போன்ற கூறுகளும், பிற்காலத்தில் இனப் பிரச்சினையும் அந்தப் பிரிவினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இரு துருவங்களான ஆதிக்க சாதியினர், தத்தமது சமூகங்களில் தலித் சாதியினரின் எழுச்சியை அடக்குவதில் ஒரே மாதிரி செயற்பட்டுள்ளனர். நம் கண் முன்னாலே நடந்துள்ள சமீபத்திய உதாரணங்கள்: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம். வடக்கில் EPRLF என்ற இயக்கத்தில் அதிகளவு தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழ் வாலிபர்கள் இணைந்திருந்தனர். அதனால் அந்த இயக்கத்தினை "ஈழப் பள்ளர் புரட்சிகர முன்னணி" என்று உயர் சாதியினர் பரிகசித்தனர். ஆதிக்க சாதியினரின் "நல்ல காலம்", அது போன்ற இயக்கங்கள் காலப்போக்கில் நிலைத்து நிற்கவில்லை. தெற்கில் ஜே.வி.பி. யில் சிங்கள தலித் சாதியினர் அதிகளவில் சேர்ந்திருந்தனர். அரசு ஜே.வி.பி. கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி அடக்குவதற்கு சாதிய பாகுபாடும் ஒரு காரணம். 1988 - 1991 க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் குறைந்தது அறுபதாயிரம் சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்கள். அதனால் தான் அவர்களை கொன்று குவிப்பதில் அரசுக்கு எந்த விட சங்கடமும் இருக்கவில்லை.
வெள்ளாள- கொவிகம சாதியினரின் ஆதிக்கம், காலனிய காலத்தில் தோன்றியது. காலனிய எஜமான்களின் தயவால் வளம் பெற்றது. அதனால், இன்றும் கூட தமிழ், சிங்கள ஆளும் வர்க்கங்கள் குறிப்பாக பிரிட்டிஷ் காலனிய எஜமானுக்கு விசுவாசமாக உள்ளனர். காலனியாதிக்க ஐரோப்பியர்கள் இவர்களை எவ்வளவு தான் அலட்சியப் படுத்தினாலும், இன்று வரை இராஜ தந்திர உறவுகளை பேணிப் பாதுகாக்க விரும்புகின்றனர். தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் காலனிய விசுவாசம் மட்டும் மாறாமல் அப்படியே உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமிழினப் படுகொலைக்கு ஆதரவளித்தார்கள் என்று திட்டித் தீர்க்கும் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் பங்களிப்பு குறித்து பேச மாட்டார்கள். மேற்குலக நாடுகள் புலிகளை வளர்க்கின்றன என்று கூப்பாடு போடும் சிங்களவர்கள், அந்த நாடுகளுடனான உறவுகளை துண்டிக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியம் எங்கேயும், எப்போதும் ஒரே மாதிரி நடந்து கொள்ளவில்லை. அடிமைகளை சங்கிலியால் பிணைத்து உழைப்பை சுரண்டுவது ஒரு வகை. அடிமை உணர்வை மூளைக்குள் செலுத்தி உழைப்பை சுரண்டுவது இன்னொரு வகை. இலங்கையை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் இரண்டாவது வகையை சிறந்தது எனக் கண்டார்கள்.
"கள்ளர், மறவர், அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்." என்றொரு ஈழத் தமிழ்ப் பழமொழி உண்டு. காலனிய ஆட்சிக் காலத்தில் வெள்ளாளர் என்பது ஒரு வர்க்கமாகவே இருந்தது. அவர்கள் பின்னர் சாதியாக பரிணாம வளர்ச்சி அடைவதை காலனிய ஆட்சியாளர்கள் எதிர்க்கவில்லை. மாறாக அது தமது காலனிய நிர்வாகத்திற்கு அனுகூலமாக இருக்கும் எனக் கருதினார்கள். போர்த்துக்கேயர்கள் ஆண்ட காலத்தில் பணம் வாங்கிக் கொண்டு "டொன்" என்ற பட்டம் கொடுத்து வந்தார்கள். பணம் படைத்த தமிழர்களும், சிங்களவர்களும் அன்று டொன் பட்டம் பெறுவதை மதிப்பாக கருதினார்கள். அதனை உள்ளூர் பாமர மக்களுக்கு காட்டிப் பெருமைப் பட்டனர். ஒல்லாந்தர் காலத்தில் "வெள்" என்ற பட்டம் கொடுக்கும் வழக்கம் தோன்றியது. "வெள்" பட்டம் வாங்கியவர்கள் உயர்சாதி வெள்ளாளர்கள் ஆனார்கள். ஒல்லாந்தர்களுக்கு அது ஒரு மேலதிக வருமானம்.
"பறங்கிகள் 'டொன்' பட்டம் விற்றது போலவே, ஒல்லாந்தருஞ் சனங்களின் சாதி எதிர்ப்பை அறிந்து, பனங் கொடுத்தவர்களை 'வெள்' அல்லது 'மடப்பம்' என்று தோம்பிற் பதிந்தனர்." (யாழ்ப்பாணச் சரித்திரம், சே. இராசநாயகம்)
இருப்பினும் 19 ம் நூற்றாண்டு வரையில், வெள்ளாளர் என்ற சாதியை பற்றிய குறிப்புகள் இலங்கை சரித்திரத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாகப் பொறுப்பேற்ற முதலியார்களும், வெள்ளாளர்களும் தம்மை ஸ்தாபனமயப் படுத்திக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களிலும், சிங்களப் பிரதேசங்களிலும் இது ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக நடைபெற்றது. சிங்களப் பகுதிகளில் பௌத்த மத மறுமலர்ச்சி ஏற்பட்டதைப் போல, தமிழ்ப் பகுதிகளில் சைவ மத மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவத்தையும் சாதியையும் வளர்த்தவர்களில் ஆறுமுக நாவலர் முக்கியமானவர். ஆறுமுக நாவலர் ஒரு பக்கத்தில் வெள்ளாள சாதியினர் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகளில் கல்வி கற்பதை ஊக்குவித்தார். மறு பக்கத்தில் தனது சமூகத்தினர் மத்தியில் சைவ மத கோட்பாடுகளை போதித்தார். ஆறுமுக நாவலர் உயர் சாதியினரை மட்டுமே சைவர்களாக்க பாடுபட்டார். அதற்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
நாவலர் எழுதிய "சைவ வினா-விடை" என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. "விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது." பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவில் இந்து மதத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் ஆறுமுக நாவலர் நெருங்கிய தொடர்பை பேணினார். பார்ப்பனர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி, வெள்ளாளர்களின் சாதிப் படி நிலையை உயர்த்துவதற்கு பாடுபட்டார். அதன் பயனாக சூத்திரர்களான வெள்ளாளர்கள் பூணூல் அணியும் சடங்கான தீட்சை பெறுதலை இலங்கையில் அறிமுகப் படுத்தினார்.
இவ்வாறு தான் சைவ மதம் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடையாளமாக மாறியது. நாவலர் "சைவத்தையும் தமிழையும் வளர்த்தார்" என்று பாட நூல்களில் எழுதப் பட்டுள்ளது. தென்னிலங்கையில் அநகாரிக தர்மபால எவ்வாறு பௌத்தத்தையும் சிங்கள மொழியையும் வளர்த்தாரோ, அதே பணியை தான் நாவலர் வட இலங்கையில் ஆற்றினார். பௌத்த சிங்கள ஞானத் தந்தையையும், சைவத் தமிழ் ஞானத் தந்தையையும் இலங்கை அரசு முத்திரை வெளியிட்டு கௌரவித்தது. வெள்ளாள-கொவிகம ஆதிக்கம் செலுத்திய இலங்கை அரசு, தனது நாயகர்களுக்கு மரியாதை செலுத்த மறக்கவில்லை. அதற்கு சாட்சியமாக "தமிழினத் தலைவரான" பிரபல சாதியவாதி சேர். பொன் இராமநாதனின் சிலை இன்றைக்கும் கொழும்பு நகரில் பழைய பாராளுமன்ற முன்றலில் காணப்படுகின்றது. சிங்கள-முஸ்லிம் கலவரத்தில், சிங்களவர்கள் பக்கம் வழக்காடிய இராமநாதனுக்கு சிங்களவர்கள் சிலை வைத்ததில் வியப்பில்லை. தமிழர்களும் அவரை தமது தலைவராக ஏற்றுக் கொள்வதற்கு என்ன காரணம்? தமிழகத்தின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போல, இராமநாதனும் தனது சாதியின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒருவர். ஒரு சாதித் தலைவர் காலப்போக்கில் தமிழ் தேசியத் தலைவராக்கப் பட்டார்.
வெள்ளாள- கொவிகம சாதியினர் காலனிய காலகட்டத்தில் உருவான போதிலும், அவர்கள் தமது வேர்களை பண்டைய மன்னராட்சியில் தேடினார்கள். சிங்களவர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் ஆண்ட பரம்பரைக் கதைகள் ஒரே மாதிரித் தான் பேசப் படுகின்றன. பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் எல்லாம் கொவிகம சாதியை சேர்ந்தவர்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை திரித்தார்கள். சங்கிலியன் போன்ற மன்னர்கள் எல்லாம் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்பது போல தமிழர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். பிரிட்டிஷ் காலனியான இலங்கையில் சமூகத்தின் உயர்நிலைக்கு வந்தவர்களுக்கு, நவீன கல்வி பெறும் வசதி கிட்டியது. அன்றிருந்த படித்த மத்தியதர வர்க்கம் வெள்ளாள-கொவிகம சாதியில் இருந்து தான் தோன்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளுக்கு வரலாற்றை தமக்கேற்றவாறு மாற்றி எழுதுவதில் தடையேதும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, இலங்கை அரசியலில் அவர்களின் ஒரு பக்க சார்பான கருத்தியல், தேசியக் கோட்பாடாக கோலோச்சுகின்றது.
(தொடரும்)
No comments:
Post a Comment