உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளையில் பாய்ந்தது? ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து ஒவ்வொன்றாகச் செய்தாரா? இந்த நினைப்புகள் அவர் மண்டையில் ஏன் புகுந்தன? திடீரென்று ஒருநாட் காலையில் தூங்கி எழுந்தவுடன் எனக்கு ஒரு உலகம் வேண்டும் என்று காரணமின்றி எண்ணியவுடன் இவ்வுலகம் தோன்றிவிட்டதா? கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்னும் ஆஸ்திகர்கள் இதற்கு விடையளிக்கட்டும்!

பார்ப்பனர் மனிதனுக்கு ஒழுக்கத்தனமே என்பது இல்லை. ஆதலால், ஒழுக்கத்தை நிலை நிறுத்த கடவுள் என்ற எண்ணமும் – நம்பிக்கையும் வேண்டும் என்கிறார்கள். முதலாவது ஒழுக்கம் என்பது என்னவென்று
இவர்கள் சொல்லட்டும். ஒரு மனிதன் ஒழுக்கம் என்று நினைப்பதை மற்றவனும் நினைக்கின்றானா? ஒரு தேசத்தார் கொண்டுள்ள ஒழுக்கத்தை பிறதேசத்தார் ஆதரிக்கிறார்களா? பார்ப்பான் குடியிருக்கும் வீட்டில் தமிழன் குடியிருக்கலாகாது என்ற ஒழுக்கமும், பார்ப்பனன் அக்கிரகாரத்தில் பறையன் நடக்கக் கூடாது என்ற ஒழுக்கமும், சைவன் கும்பிடும் கோயிலில் வள்ளுவன் கும்பிடலாகாதென்ற ஒழுக்கமும், வடகலைக்காரன் கோயிலில் தென்கலைக்காரன் போகக் கூடாதென்ற ஒழுக்கமும், பார்ப்பனச் சிறுவனும் பார்ப்பனரல்லாச் சிறுவனும் சமாக உட்கார்ந்து உண்பதைக் கண்டால் ஒரு மாதம் பட்டினிக் கிடப்பேன் என்ற ஒழுக்கமும், ஒரு ஜாதிப் பெண்களுக்கு மட்டும் பொட்டுக்கட்டி விபசாரிகள் ஆகலாமென்ற ஒழுக்கமும், பத்து வயது பெண்ணை விதவையாக்கி அவளை ஆயுட்பரியந்தம் விதவையாக வைத்திருந்து அவள் கள்ளத்தனமாய் புணர்ந்து ஈன்ற மகவை சாக்கடையிலெறிந்து பன்றிக்கு இரையாக்கி வரும் ஒழுக்கமும், எல்லா தேசத்து மக்களுக்கும் அவசியந்தானா? இவ்வாத்திக ஒழுக்கங்களைக் காப்பாற்ற ஒரு கடவுள் அவசியந்தானா என்றும் கேட்கிறேன்.
இதே மாதிரி ஒரு நாட்டை அடிமைப்படுத்த பிற நாட்டார் கத்திகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், வெடிகுண்டுகளும் செய்து ஆயிரமாயிரமான மக்களை வெட்டி வீழ்த்தி அரசு புரியும் ஒழுக்கமும், அதைக் காப்பாற்ற ஒரு கடவுளும் அவசியந்தானா என்று கேட்கிறேன்.
அப்படியானால் திருடனுடைய “திருட்டு” ஒழுக்கத்திற்கும், பேராசைக்காரனுடைய “செல்வ” ஒழுக்கத்திற்கும், அமெரிக்கருடைய “நீக்ரோ” ஒழுக்கத்திற்கும், பிரிட்டிஷாருடைய “ஏகாதிபத்திய” ஒழுக்கத்திற்கும், பார்ப்பானனுடைய “யாக” ஒழுக்கத்திற்கும், பச்சாக்காரக்கோனுடைய “கொள்ளை” ஒழுக்கத்திற்கும், நம்பூதிரியுடைய “வைப்புச் சம்பந்த” ஒழுக்கத்திற்கும் ஒவ்வொரு கடவுள் வேண்டாமா என்று கேட்கிறேன்.
உண்மையில் ஒரு கடவுள் இருப்பதானால், அக்கடவுள் மெய்யாகவே சர்வ வியாயுமானால் அவர் இருக்கிறதைக் குறித்து உலகத்தில் பலர் ஏன் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டும்? மனிதனுடைய உள்ளத்திலோ, கண்களின் முன்னிலையிலோ, பிரத்தியட்சத்தில் நிலைக்கட்டிக் கொள்ள முடியாத கடவுளும் ஒரு கடவுள்தானா? அக்கடவுக்கு சர்வ சக்தன் என்றொரு பெயரும் கூடவா?
கடவுள் இருப்பது உண்மையானால் அவரைப்பற்றி பலர் பலவிதமாக நம்புவானேன்? “மக்களே என்னைத் தவறுதலாக நம்பி, நீங்கள் வீணாக
மனக் கசப்பும், மதவெறியும், மதப்போரும் ஏற்படுத்தி அதனால் ஒருவரையொருவர் மாய்த்து வீழ்த்த வேண்டாம்! இதோ எனது உண்மை நிலை இது எனது நோக்கங்கள் இவை என்னை நீங்கள் கலக்கமின்றி அறிந்து கொள்ளுங்கள்” என்று அக்கடவுள் சொல்லக்கூடாதா? அவ்விதம் சொல்லி நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தாத கடவுளும் புத்திசாலிதானா?
சில பேர் கடவுள் எங்கே – எப்படி என்று கேட்டு சந்தேகிக்கவும் சில பேர் கடவுள் ஒருவர்தானென்று சொல்லவும், சில பேர் கடவுள் பலவுள என்று பேசவும், மற்றும் சில பேர் 'நானே கடவுள்' என்று வேதாந்தம் பேசவும், வேறு சிலர் கடவுள் இல்லை என்று கூறவும், இவ்விதமாக மக்களுக்குள் சதா மனக் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல கடவுளும் இருக்க முடியுமா?
சில பேர் “கடவுள் குணத்தைப் பற்றியும், அவர் இருப்பது பற்றியும் எவ்விதமான சந்தேக விளக்கங்களும் எமக்குத் தேவையில்லை! எம்முடைய உணர்வினிலே அவரை நாங்கள் உணர்கிறோம் எம்முடைய அகக்கண்ணாலும் – புறக்கண்ணாலும் அவரை நாங்கள் நேரில்
தரிசிக்கிறோம். அவர் எந்த நேரமும் எம் கண்முன் தோன்றி நிற்கிறார்!” என்று ஒரே அடியாய் அடித்துவிடுகிறார்கள்.
“கடவுளை நம்பினால் தான் கடவுள்” என்று சொல்லி வயிறு வளர்க்கும் முட்டாள்களைவிட இவன் படுமோசக்காரன். இவன் கண்முன் தோன்றும் அவருடைய விருத்தாந்தங்கள் எப்படி? உருவம் இருப்பிடம் எல்லாம் எப்படி? அவரது உத்தேசங்கள் என்ன? என்று கேட்டால் அவரை நீ இப்போது எனக்குக் காட்டி என்னையும் நம்பச் செய் என்றால், அவன் அதுவெல்லாம் நான் செய் முடியாது! கடவுளைக் கண்டால் அதைப்பற்றி பிறரிடம் பேசமாட்டார்கள். ஏனெனில் கடவுளைக் கண்டவுடன் உள்ளமெல்லாம் கடவுள் எண்ணமாகவே நிறைந்து போய்விடும். வேறு எண்ணங்கள் அவனிடம் கிடையாது என்று சொல்லிவிடுகிறான்.
தான் புகுந்த இடத்தில் பிறிதொன்றையும் இல்லாமலும் புகவொட்டாமலும் செய்யும் சக்தி கடவுளுக்கு இருப்பது நிச்சயம் என்றால், அவர் சர்வ சக்தி வியாபி என்பது பொருத்தமானால், மனிதனுடைய உள்ளத்தின் மீது கடவுளுக்கு மெய்யாகவே ஆதிக்கமிருக்குமானால் எல்லா மனிதர்களும், கடவுள் எண்ணத்தில் மூழ்கிக் கிடக்க காண்கிறோமே! இவன் சொல்வது வெறும் பிடிவாதமல்லவா? அடவாதமும், மோசடியும் அல்லவா? கடவுளை 'நேரடியாக' நம்ப வேண்டுமாம்! எதன் மூலமாகவும் எதைக் கொண்டும் அதாவது காரண காரிய மூலமாகக் கடவுளை நம்பக் கூடவில்லையே என்றால், அறிந்து கொள்ள முடியாத, தெரியாத ஒன்றை எப்படி 'நேராக' நம்பிவிடுவது?
ஒரு குழந்தை பிறந்தவுடன் எந்தக் கடவுளை நம்புகிறது? அதற்கு ஏதாவது கடவுள் எண்ணமுண்டா? கிருஸ்தவன் வீட்டில் பிறந்த குழந்தை வளர்ந்து பெரியதாகப் பெரியதாக தனது பெற்றோர் நம்பும் கிருஸ்தவக் கடவுளையும், அதேபோல முகம்மதியக் கடவுளையும், சைவக் குழந்தை சைவக் கடவுளையும், வைணவக் குழந்தை வைணவக் கடவுளையும், சென்னை மாநகரில் சந்து பொந்துகளில் பிறந்த குழந்தை வேப்பிலை மாரியையும்
சேரிகளில் பிறந்த குழந்தைகள் காடன், மாடன், கறுப்பனாகிய பயங்கரமான கடவுள்களையும் நம்புகின்றன. சர்வ சக்தனான ஒரு கடவுள் இருக்கும் உலகத்திலே இப்படியும் கடவுள்கள் மாறுபடலாமா?
கடவுள் இருப்பது ஒன்று மெய்யாக இருக்க வேண்டும். அல்லது பொய்யாக இருக்க வேண்டும். மெய்யானதாயிருந்தால் காரண காரியங்களாலே அறியப்படத்தக்கதாயிருக்க வேண்டும். நமது பகுத்தறிவினாலே தாராளமாக ஆராய்ந்து பார்த்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். அன்பான கடவுள் இருக்கும் போது, அன்பான கடவுளால் உலகம் படைக்கப்பட்டிருக்கும்போது, உலகத் தில் நாம் நாள்தோறும் அனுபவித்து வரும் ஏற்றத் தாழ்வுகளும், பூத பெளதிக விசாரத் துன்பங்களும், இன்னல்களும், வறுமையும், பிணியும் போகும். வலியோர் ஆதிக்கமும், எளியோர் அடிமை வாழ்வும், நசுக்கப்படுதலும் எப்படி என்று ஆராய வேண்டும்!
இவற்றையெல்லாம் போக்கி, உலகத்தில் இன்ப நிலையும், அன்பு மயமும் ஏற்படச் செய்ய வேண்டும். கள்ளனைப் போல் ஒளிந்து நிற்கும் கடவுளை வெளியில் இழுத்து என்ன சங்கதி என்று கேட்கவேண்டும். இதற்கு
ஆத்திகர்கள் முன்வர வேண்டும்.
இதற்கெல்லாம் அக்கடவுள் அடங்காதவர் என்றால், அறியப்படாதவர் என்றால், காணப்படாதவர் – தனது குணங்களையும், உத்தேசங்களையும் வெளிப்படுத்த முடியாதவர் என்றால், துன்பங்களைப் போக்க முடியாதவர் என்றால், எரிமலைகளை மூடிவிட முடியாதவர், புயல் காற்றை நிறுத்த முடியாதவர் என்றால், யுத்தங்களை நிறுத்தாதவர் என்றால், விஷக்காற்றுகளை அழிக்க முடியாதவர் என்றால், விஷபேதிகளைக் குழி தோண்டிப் புதைக்க முடியாதவர் என்றால் நல்ல மழையையும், நல்ல பருவத்தையும் தந்து நல்ல தானிய விளைவைச் சதா காலமும் தவறாமல் கொடுத்து மக்களை ஒருவேளை கஞ்சிக்கு தவித்திடாமல் காத்து ரட்சிக்க முடியாதவர் என்றால், காவித் துணியையும், கடுக்காய் கொட்டைகளையும், பருத்தி நூலையும் போட்டுக் கொண்டும், பழைய பஞ்சாங்கத்தையும், காய்ந்த புல்லையும் வைத்துக் கொண்டும், பிறர் உழைப்பால் வயிறு வளர்த்து பிறரை ஏய்த்திடும் மனிதரையும் ஆப்கன் அமீரை நாட்டைவிட்டு துரத்திய கொடிய முல்லாக்களின் குருட்டு மதவெறியையும் அடக்க முடியாதவர் என்றால், மாதம் ஆயிரமாயிரமாய் பணம் பெற்றுக் கொண்டு கடவுள் பெயரைச் சொல்லி அரசர்களையும் ஏய்த்திடும் பெரிய பெரிய மகந்துக்களையும், போப்புகளின் ஏமாற்றும் குணத்தையும், கண்டிக்க முடியாதவர் என்றால், கண்டிப்பாய் அக்கடவுளுடைய எண்ணத்தை மனித வர்க்கம் என்று கைவிடுகிறதோ அன்றே அது மேன்மையுறும் நாளாகும். அன்றே மனிதனது அறிவு தனது உச்சத்தில் பிரகாசிக்கும்.
அறிவு என்ற பொன்னை கடவுள் என்ற களிம்பு மூடி நிற்கிறது. அக்களிம்பைப் போக்கி பொன்னறிவு கொண்ட மனித வர்க்கம் அறிவுச் சுடர் வீசி ஆனந்தத்தில் மூழ்கும் நாள் எந்நாளோ?
* 07/07/1929- “குடிஅரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.