Wednesday, August 18, 2010

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை
-கலையரசன் -
போலந்து நாட்டின் தலைநகரம் வார்சொவிற்கு, நான் சென்று வந்தது சில நாட்கள் ஆயினும், எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இது ஒரு பயணக்கட்டுரை மட்டுமல்ல, என்னைப் போன்ற வெளிநாட்டுக் குடியேறிகளின் சமூகப் பின்னணியையும் ஆராய்கின்றது. ஐரோப்பாவில் போலந்து என்ற நாடு குறித்து தமிழ் உலகில் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சோஷலிச நாடுகளின் கூட்டமைப்பில் இருந்ததது. பாடசாலை பாடங்களில் ஓரிரு தடவைகள் போலந்து பற்றிய குறிப்புகள் வருகின்றன. வரலாற்றுப் பாடத்தில் வரும் வார்சோ ஒப்பந்த நாடுகள், விஞ்ஞானப் பாடத்தில் வரும் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த மேரி கியூரி, இதற்கப்பால் போலந்து பற்றிய தகவல்கள் கிடைப்பது அரிது. எண்பதுகளில் தெரிவான பாப்பரசர் ஜான் பால் கத்தோலிக்கர்கள் மத்தியில் போலந்து குறித்த ஆர்வத்தை தூண்டவில்லை. அதற்கு காரணம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல, போலந்து பற்றிய செய்திகளும் மேற்குலகில் பட்டு எதிரொலித்தே எமக்கு கிடைக்கின்றன. வெளிநாடுகளில் குடியேற விரும்புபவர்களும் போலந்தை தவிர்த்தார்கள். அதற்குக் காரணம் அங்கே வேலை வாய்ப்பு இல்லை என்பது தான். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை அந்தக் கூற்றில் நியாயம் இருந்தது. வேலையில்லாப் பிரச்சினையால் போலந்து உழைப்பாளிகள் மேற்குலகிற்கு படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பியக் கண்டத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்டுள்ள பெரிய நாடுகளில் போலந்தும் ஒன்று. அதன் இன்றைய எல்லைகள் இரண்டாம் உலகப்போரின் பின்னர் நிர்ணயிக்கப்பட்டன. போலந்தின் கிழக்குப் பகுதியில் ஒரு துண்டு அன்றைய சோவியத் யூனியன் வசமாகியது. இன்று அது பெலாரஸ் குடியரசின் பகுதி. அந்த நாட்டில் பெலாரஸ் (வெள்ளை ரஷ்யா) என்ற மக்கள் பேசும் மொழி, போலிஷ் மொழி போன்றிருக்கும். போலந்தில் பேசப்படும் போல்ஸ்கி மொழி, ரஷ்ய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. போலந்துக் காரருக்கு ரஷ்யருடன் உள்ள ஜென்மப் பகை காரணமாக இரண்டாம் மொழியாக ரஷ்ய மொழி கற்பதை வெறுக்கிறார்கள். போலந்து சோஷலிச முகாமில் இருந்த காலங்களிலும் பெரும்பான்மை மக்கள் ரஷ்ய மொழி கற்கவில்லை. சரித்திர ரீதியாக போலந்து கத்தோலிக்க நாடு என்பதால், நீண்ட காலமாக மேற்கைரோப்பாவுடன் தொடர்புளை பேணி வந்தனர். சோஷலிச ஆட்சியிலும் கத்தோலிக்க தேவாலயத்தின் அதிகாரங்கள் ஓரளவு மட்டுப்படுத்தப் பட்டாலும், செல்வாக்கு குறையாமல் இருந்தது.

சோஷலிச போலந்தை வீழ்த்துவதற்கு பாப்பரசர் ஜோன் போலும், கத்தோலிக்க மத நிறுவனமும் உதவினார்கள். "கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து விடுதலையடைந்த" போலந்து மீண்டும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்தின் கீழ் வருமென்று கணக்குப் போட்டார்கள். அது தப்புக்கணக்கு என்று பின்னர் தெளிவானது. முதலாளித்துவம் நுகர்பொருள் கலாச்சாரம் என்ற புதிய மதத்திற்குள் மக்களை தள்ளி விட்டது. எங்கெங்கு காணிலும் பாரிய விளம்பரத் தட்டிகளின் ஆதிக்கம். வார்சோ நகரின் மத்திய பகுதியில் உயரமான கட்டிடங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. ஜன்னல்களை திறக்கத் தடையாக இருக்குமென்பதால் மேற்கைரோப்பிய நகரங்களில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். வங்கிகள், சூப்பர் மார்க்கட்கள் என்று பெரிய வணிகக் கழகங்கள் யாவும் மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களுடையவை. எங்காவது ஒன்றிரண்டு போலந்து நிறுவனங்கள் காணப்படுகின்றன.

ஒரு காலத்தில் சோஷலிச முகாம் நாடாக இருந்த போலந்து ஒரு சில வருடங்களிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்று விட்டது. கம்யூனிச காலகட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் யாவரும் அதனை நோக்கமாக கொண்டே செயற்பட்டனர். மேற்குலக சார்பு மக்களும் அதையே எதிர்பார்த்தார்கள். பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, போலந்தின் பொருளாதாரம் வளர்முக நிலையடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததன் பலன்களை அறுவடை செய்வதாகவே தெரிந்தது. நடுத்தர வர்க்க படித்த இளைஞர்கள் மேற்கு-ஐரோப்பிய தரத்திற்கு நிகராக சம்பளம் பெறுகின்றனர். கோடை காலத்தில் தென் ஐரோப்பிய கடற்கரைகளுக்கு உல்லாசப் பயணம் செய்கின்றனர். வசதிபடைத்த குடும்பங்கள் அதிகரித்து வருவதால், அவர்களுக்கு என்று சகல வசதிகளும் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதற்கென பழைய அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன.

வார்சோ நகரம் விரைவாக மாறி வருகின்றது. அது சராசரி ஐரோப்பிய நகரம் போல தோற்றமளிக்கின்றது. புதிதாக எழும்பும் கட்டிடங்கள், செப்பனிடப்படும் வீதிகள், இவற்றில் கட்டுமானப் பணிகள் செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். போலந்து தொழிலாளர்கள், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதால், உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதனால் வெளிநாட்டுத் தொழிலாளரை தருவிக்க வேண்டிய நிலை. போலந்தில் ஒரு தகமையற்ற தொழிலாளியின் சராசரி சம்பளம் 300 - 500 யூரோக்கள். வார்சோ நகரில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுப்பதென்றாலும் அவ்வளவு பணம் தேவை! இதனால் இரண்டுக்கு மேற்பட்டோர் வாடகைப் பணத்தை பங்கு போட்டுக் கொள்கின்றனர். போலந்து நாட்டினரைப் பொறுத்த வரை பலர் சொந்த வீடுகளில் வாழ்வதால், அவர்களுக்கு அந்த செலவில்லை.

போலந்து மக்கள் சொந்த வீட்டில் வாழ்வது, கம்யூனிச அரசு கொடுத்த சீதனம். கம்யூனிஸ்ட்கள் அனைத்து பிரஜைகளுக்கும் கட்டிக் கொடுத்த (பரம்பரையாக கிடைத்த வீடுகள் வேறு) வீடுகளை இப்போதும் சொந்தம் கொண்டாடுகிறார்கள். போலிஷ் மக்கள் சொந்த வீடிருப்பதால் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடிகின்றது. போலந்தில் வாழ்க்கைச் செலவு ஐரோப்பியத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. சூப்பர் மார்க்கட்களில் பிராண்ட் பொருட்கள் யாவும் மேற்கில் விற்கும் அதே விலைக்கு விற்கப்படுகின்றன. ஆங்காங்கே உள்ளூர் தயாரிப்புகள் சீண்டுவாரின்றி கிடக்கின்றன. குறைவாக சம்பாதிக்கும் அடித்தட்டு மக்களுக்கென்றே சில சூப்பர் மார்கட்கள் இருக்கின்றன. போலந்து முதலாளிகளால் நிறுவப்பட்ட சூப்பர் மார்க்கட்களில், முழுக்க முழுக்க உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.

வார்சோ நகரில் பிரமாண்டமான ஸ்டேடியம் ஒன்று கட்டப்படுகின்றது. அடுத்த ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்காக அதனைத் தயார் செய்கின்றனர். இதற்கென சுற்றுவட்டாரத்தில் இருந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. ஸ்டேடியம் கட்டப்படும் இடத்திற்கருகில் ஒரு சந்தை இயங்கி வந்தது. அங்கே கடை விரித்தவர்கள் பெரும்பாலும், வெளிநாட்டு குடியேறிகள். ஒரு சில போலிஷ்காரரை தவிர, வியட்நாமிய, நைஜீரிய, இலங்கைத்தமிழ் சிறு வியாபாரிகள் தமது சிறு தொகை வருமானத்தை அங்கே தான் தேடிக் கொள்கின்றனர். பல வியாபாரிகள் நியாயமாக வாங்கிய சரக்குகளை விற்றாலும், போலிப் பாவனைப் பொருட்களை விற்பவர்களுக்கும் அது தான் புகலிடம்.

குறிப்பாக சட்டவிரோதமாக தங்கியிருப்போர் போலியான பிராண்ட் பொருட்களை விற்பனை செய்கின்றனர். வார்சோ காவல்துறைக்கு இந்த விடயம் தெரியும் என்ற போதிலும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் நிலைமையை தலைகீழாக மாற்றியது. போலிகளை சோதனையிட போலிஸ் வருவதும், பொருட்களைத் தூக்கிக் கொண்டு வியாபாரிகள் ஓடுவதும் அவ்வப்போது நடந்து வந்தது. ஒரு நாள் அப்படியான நடவடிக்கையின் போது, நைஜீரிய வியாபாரி போலிசை எதிர்த்து நின்று வாதாடியுள்ளார். திடீரென ஒரு போலீஸ்காரனின் துப்பாக்கி முழங்கியதில், ஸ்தலத்திலேயே பலியானார். வார்சோவில் ஒரு இனக்கலவரம் உருவாக சிறு பொறி போதுமானதாக இருந்தது. ஆத்திரமடைந்த நைஜீரிய வியாபாரிகள் போலிஸ் வாகனங்களைத் தாக்கி தீயிட்டனர். கலகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போலிஸ் அத்துமீறல் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அறிவிக்கப்பட்டது. அவர்களால் அனுப்பபட்ட விசாரணைக்குழு வந்து பார்த்து விட்டு போலிஸ் மீது குற்றஞ்சாட்டியது. இருப்பினும் போலந்து போலிசின் நோக்கமும் நிறைவேறியது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், சந்தை கலைக்கப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு விமான நிலையம் செல்லும் வழியில் புதிய இடம் ஒதுக்கப்பட்டது. "அமைதியான" போலந்தில் இடம்பெற்ற கலவரம் குறித்து எந்தவொரு சர்வதேச ஊடகமும் அக்கறை கொள்ளவில்லை. சம்பவம் நடந்த இடத்தை சுற்றிக்காட்டிய தமிழ் நண்பர், செய்தியை வெளியிடாத ஊடக மௌனம் குறித்து என்னிடம் கேள்வியெழுப்பினார். தமிழ் ஊடகங்களில் கலையகம் மட்டுமே இணையத்தில் அந்த செய்தியை (பார்க்க :போலந்து போலிஸின் நிறவெறிப் படுகொலை) வெளியிட்டதை சுட்டிக் காட்டினேன். வியப்புடன் என்னை நோக்கினார். கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன, போலந்தில் அகதிகளின் அவல வாழ்க்கை பற்றிய தகவல்களையும் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.

போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை Part 2
போலந்து நாட்டினருக்கு அகதித் தஞ்சம் கோருவது புதிய விடயமல்ல. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஹிட்லர் போலந்தை ஜெர்மனியுடன் இணைத்த பொழுது, போலிஷ் அரசு பிரிட்டனில் அகதியாக தஞ்சம் கோரியது. கம்யூனிஸ்ட்கள் மொஸ்கோவில் தஞ்சம் கோரினார்கள். நாஸிகளின் இன அழிப்புக்கு தப்பிய யூதர்கள் அகதியாக அமெரிக்கா வரை சென்றார்கள். நாஸிப் படைகளை தோற்கடித்த சோவியத் செம்படையுடன் கம்யூனிஸ்ட்கள் திரும்பி வந்து சோஷலிச ஆட்சி அமைத்தார்கள். சோஷலிச போலந்தில் அதிருப்தியடைந்த ஒரு கூட்டம் மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகளாக ஓடினார்கள். கத்தோலிக்க தேவாலயங்கள், தொழிற்சங்கங்களின் இடையறாத போராட்டம் காரணமாக, கம்யூனிஸ்ட்கள் விட்டுக் கொடுத்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன் முதலாக போலந்தில் தான் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. மேற்குலகில் அடைக்கலம் கோரிய போலிஷ் புத்திஜீவிகள் நாடு திரும்பினார்கள். சுபம்.
கதை அத்துடன் முடியவில்லை. அதுவரை அகதிகளை அனுப்பிக் கொண்டிருந்த போலந்து, 20 ம் நூற்றாண்டின் இறுதியில், அகதிகளை பொறுப்பேற்க வேண்டிய கடமைக்குள்ளானது. சோஷலிசத்தின் வீழ்ச்சியில் இரும்புத்திரை கிழிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால் கிழிந்த திரையூடாக வேற்றின அகதிகள் வருகை தந்தார்கள். ரஷ்யர்கள், தெற்காசிய, ஆப்பிரிக்க அகதிகளின் புகலிடமாக போலந்து மாறியது.

போருக்குப் பின்னர், கம்யூனிஸ்ட்கள் எழுத்தறிவற்ற மக்களின் தேசத்தை பொறுப்பேற்றார்கள். அனைத்து பிரஜைகளுக்கும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அளித்தார்கள். இதனால் புதிதாக தோன்றிய நடுத்தர வர்க்கம் ஒன்று, மேலதிக உரிமைகளைக் கோரியது. தொன்னூறுகளில் நான் சந்திந்த போலந்து மாணவி ஒருவர் பின்வருமாறு கூறினார். "கம்யூனிஸ்ட்களின் காலத்தில் ஜனாதிபதியை ...... மகன் என்றெல்லாம் திட்ட முடியாது. பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். இப்போது தாராளமாக திட்டலாம். யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்." நடுத்தர வர்க்கம் போராடிப் பெற்ற பேச்சு சுதந்திரம் அது. இன்று அதே போலந்தில் பாதுகாப்புப் படையினர் அகதிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சிப்பவர்களை விரட்டுகிறார்கள். பொதுவாகவே அகதிகள் எதிர்ப்புப் குரல் கொடுக்க தைரியமற்றவர்கள். அவர்கள் சார்பாக சிறிய இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த போலிஷ்காரரே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் இங்கே எழுதப் போகும் அகதிகளின் நிலை பற்றிய செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. அதிலிருந்து யாருக்கான கருத்துச் சுதந்திரம் குறித்து உலகம் அக்கறை கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப காலங்களில், அதாவது போலந்து முதலாளித்துவ - ஜனநாயக நாடாக மாறிய தொன்னூறுகளில், ஆட்கடத்தல்காரர்களே அகதிகளை போலந்து கூட்டி வந்தார்கள். ஏற்கனவே விசா வழங்கும் நடைமுறையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கியிருந்தன. போலந்துக்கு வருவது அவ்வளவு கஷ்டமல்ல. போலந்து விசா கிடைக்காவிட்டாலும், அருகில் இருக்கும் உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு விசா எடுத்து விட்டு, பின்னர் எல்லை கடக்கலாம். போலந்தின் மேற்கு புற எல்லையில் ஜெர்மனி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையும் கடந்து விட்டால் மேற்கைரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரலாம். மெல்ல மெல்ல போலந்திற்குள் வரும் அகதிகளின் நடமாட்டம் குறித்து எல்லைக்காவல் படை விழிப்புற்றது. இதனால் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பல அகதிகள் எல்லை கடக்கும் பொழுது சிக்கிக் கொண்டார்கள். ஐ.நா.அகதிகள் உயர் ஸ்தானிகராலய நெறிப்படுத்தலின் கீழ், போலந்து அரசு அகதிகளைப் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்படி இருந்தும் பலர் அங்கே தங்கவில்லை. சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் எல்லை கடந்து ஓடினார்கள்.

போலந்தில் பதிந்த அகதிகள் சரிவர பராமரிக்கப்படாதது, அவர்கள் ஓடுவதற்கு ஒரு காரணம். ஒரு ஐரோப்பிய நாட்டில் நுழைந்தால், அங்கே தான் முதலில் அகதித் தஞ்சம் கோர வேண்டும் என்ற சட்டம் அப்போதே வந்து விட்டது. மேற்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரியவர்களிடம், போலந்தில் தஞ்சம் கோராதமைக்கு, அல்லது அங்கே நிரந்தரமாக தங்காமைக்கு காரணம் கேட்கப்பட்டது. அபோதெல்லாம் போலந்து அரசின் குறைபாடுகளை எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷயம் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய தலையிடியாக இருந்தது. ஏனெனில் போலந்து ஊடாக வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜெர்மனி ஒரு வழி கண்டுபிடித்தது.

போலந்தில் அகதிகளைப் பராமரிக்கும் அரச திணைக்களம் ஒன்றை உருவாக்க ஜெர்மனி அழுத்தம் கொடுத்தது. போலந்திற்கு வரும் அகதிகளைப் பதிவது மட்டுமல்ல, உணவு, உறைவிடம் வழங்குவதும் அந்தத் திணைக்களத்தின் பொறுப்பு. விசாரணை நடத்தி தகுதியான அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், அல்லது வதிவிட அனுமதி வழங்க வேண்டும். இதிலே குறிப்பிட வேண்டியது என்னவெனில், எத்தனையோ வருடங்களாக UNHCR எடுத்துக் கூறியும் கேட்காத போலந்து அரசு, ஜெர்மனி சொன்னதும் கேட்டது. அதற்குக் காரணம் அகதிகளை போலந்தில் வைத்து பராமரிக்கும் செலவை ஜெர்மனி பொறுபேற்றுக் கொண்டது. உண்மையில் அதற்காக நிதி ஒதுக்குவதன் மூலம், பல மில்லியன் யூரோக்களை ஜெர்மனி மிச்சம் பிடிக்கின்றது. போலந்தில் இருக்கும் அத்தனை அகதிகளும் ஜெர்மனி வந்தால்? இதைவிட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

போலந்தில் பதியப்பட்ட அகதிகளில் பெரும்பான்மையோனோர் செச்னியர்கள் (ரஷ்யா). அதை விட அல்ஜீரியா, பங்களாதேஷ், சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும், தஞ்சம் கோருகின்றனர். வருடந்தோறும் சில நூறு இலங்கை (தமிழ்) அகதிகள் தஞ்சம் கோரியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் போலந்து முழுவதும் நூறு தமிழ் அகதிகள் இருந்தாலே அதிகம். வார்சோ நகரில் எப்படியும் நாற்பது, ஐம்பது பேர் ஆவது வசிக்கலாம். வார்சோ நகரில் வசிக்கும் தமிழர்களில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்து தங்கி விட்டவர்களும் உண்டு. சிலர் ஆட்கடத்தல் வேளைகளில் ஈடுபட்டவர்கள். சிலர் உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு போலந்துவாசியானவர்கள்.

போலந்தில் அகதியாக பதிவதற்கென்று ஒரேயொரு நிலையம் மட்டுமே உள்ளது. உக்ரைன் நாட்டு எல்லைக்கருகில், Debak எனுமிடத்தில் மட்டுமே புதிய அகதிகளை பதிவார்கள். போலந்தில் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. அனேகமாக எங்கோ தொலைதூர நாட்டுப்புறத்தில், காட்டுக்கு மத்தியில் அந்த முகாம் இருக்கும். சுற்றிவர பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். வெளியார் யாரும் செல்ல முடியாது. மூன்று வேளை சாப்பாடு கொடுத்து, சிறிதளவு பணம் செலவுக்கு கொடுப்பார்கள். போக்குவரத்துக்கு, தொலைபேசுவதற்கு அதெல்லாம் போதாது. முகாமில் வசதிக் குறைபாடுகள் இருப்பதால், பலர் வெளியே வாழ்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. நகரங்களில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் வீடுகளில் வசிக்க முடியும். அப்படி வசிப்பவர்களுக்கு 750 ஸ்லொட்டி (200 யூரோ) வழங்கப்படும். வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாம் அதற்குள் தான் சமாளிக்க வேண்டும். அவர்கள் மாதமொரு தடவை உதவிப்பணம் எடுப்பதற்காக ஒரு காரியாலயம் செல்ல வேண்டும்.

வார்சோ புறநகர்ப் பகுதி ஒன்றில் (விமான நிலையம் அருகில்) அகதிகள் உதவிப்பணம் பெரும் காரியாலயம் அமைந்துள்ளது. விசா காட் புதிப்பிக்க வேண்டுமானாலும் அங்கே செல்ல வேண்டும். வார்சோ மத்தியில் இருந்து மெட்ரோ எடுத்து சென்று, அதன் பிறகு 45 நிமிடம் பஸ்ஸில் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்படியும் சுமார் ஒரு கி.மி. பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும். அகதிகளுக்கான அரசுக் காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி மரங்கள் மறைத்திருக்கின்றன. உள்ளே நுழைய முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஸ்கேன் மெஷின் ஊடாக செல்ல வேண்டும். அதே அலுவலகத்திற்கு மேலே ஒரு சிறைச்சாலை இயங்குகின்றது. அனேகமாக நாடுகடத்தப்பட வேண்டிய அகதிகளை அங்கே அடைத்து வைத்திருக்கலாம். தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட சிலரை, அங்கே விசா புதுக்க வரும் போதே தடுத்து வைத்து விடுவதாக அறிந்தேன். அலுவலகப் பணியாளர்கள், ஆங்கில, ரஷ்ய மொழிகளை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். சுவரில் அகதிகளை திருப்பியனுப்புவதை பொறுபேற்கும் IOM, மற்றும் UNHCR பிரசுரங்கள் சில காணப்பட்டன. அகதிகள் என்றால் நோய்க்காவிகள் என்று கருதினார்களோ என்னவோ, UNHCR பிரசுரம் எய்ட்ஸ் நோயை தடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது.

போலந்தில் அகதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், விதிவிட அனுமதி பத்திரம் அதிகமாக வழங்கப் படுகின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக தஞ்ச வழக்கு நடந்து கொண்டிருந்தால், "Okrana " என்ற வதிவிட அனுமதி வழங்குகிறார்கள். அதன் கால எல்லை ஒரு வருடம், சில நேரம் இரண்டு வருடங்கள். ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியிருப்பதுடன், அதனை நிரந்தர வதிவிட அனுமதியாக வழங்குவது குறைவாகவே உள்ளது. Okrana அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் சட்டப்படி வேலை செய்யலாம். வார்சோ நகரில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் பலதரப் பட்ட வேலைகளை செய்கிறார்கள். உதவிப்பணம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படுவதால், வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம். பல வருடங்களாக போலந்தில் வாழும் தமிழர்கள் சிறு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்றில் ரெஸ்டாரன்ட், அல்லது கடை வைத்துள்ளனர். இவர்ளை விட பலர் தற்போது கல்லூரிகளில் படிப்பதற்கென்று வருகிறார்கள். அவர்களில் சிலர், போலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ளனர்.

1 comment:

மதுரை சரவணன் said...

போலந்து பற்றீ சுவைப்பட கூறியுள்ள விதம் அருமை...வாழ்த்துக்கள். ஆவலுடன் ...