சாதி தேசம் பண்பாடு
-ந.ரவீந்திரன் -
சாதியத் தேசம் சாத்தியமாவது குறித்துப் பேசும்போது அதன் சுயநிர்ணயம் எத்தகையது என்பதை தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இந்தியா - இலங்கை எனும் நாட்டுத் தேசியங்களினுள் (குறிப்பாக இங்கே இலங் கையை முன்னிறுத்தி) தமிழ் இனத் தேசியமும் அதனுள் இந்த சாதித் தேசியம் பெறத்தக்க இடம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இன்றைய மாறி வரும் சர்வதேச உறவுச் செல்நெறிகளில் இவை குறித்த வரையறைகள் செயற் படும் இயக்கங்களுக்கு அவசியமானதாகின்றது. வர்க்கச் சக்திகளிடையிலும் தேசங்களிடையேயும் இடம்பெறும் சமநிலை மாற்றங்களை எவ்வளவு விரைவில் கணிப் பிட்டு ஏற்ற தந்திரோபாயங்களை வகுத்து செயற்படமுடி கிறதோ அதிலேதான் பாட்டாளி வர்க்க இயக்கமொன் றின் முன்னேறித் தாக்குதலுடனான வெற்றிகள் சாத்திய மாக முடியும். அந்த வகையில், சாதியத் தேச இருப்பும் அதன் மீதான பண்பாட்டின் தாக்கமும் குறித்து இக்கட்டுரை அலசும்.
-ந.ரவீந்திரன் -
சாதியத் தேசம் சாத்தியமாவது குறித்துப் பேசும்போது அதன் சுயநிர்ணயம் எத்தகையது என்பதை தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இந்தியா - இலங்கை எனும் நாட்டுத் தேசியங்களினுள் (குறிப்பாக இங்கே இலங் கையை முன்னிறுத்தி) தமிழ் இனத் தேசியமும் அதனுள் இந்த சாதித் தேசியம் பெறத்தக்க இடம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இன்றைய மாறி வரும் சர்வதேச உறவுச் செல்நெறிகளில் இவை குறித்த வரையறைகள் செயற் படும் இயக்கங்களுக்கு அவசியமானதாகின்றது. வர்க்கச் சக்திகளிடையிலும் தேசங்களிடையேயும் இடம்பெறும் சமநிலை மாற்றங்களை எவ்வளவு விரைவில் கணிப் பிட்டு ஏற்ற தந்திரோபாயங்களை வகுத்து செயற்படமுடி கிறதோ அதிலேதான் பாட்டாளி வர்க்க இயக்கமொன் றின் முன்னேறித் தாக்குதலுடனான வெற்றிகள் சாத்திய மாக முடியும். அந்த வகையில், சாதியத் தேச இருப்பும் அதன் மீதான பண்பாட்டின் தாக்கமும் குறித்து இக்கட்டுரை அலசும்.
I
இந்தியா, இலங்கை எனும் நாட்டுத் தேசியம் கட்டமைக்கப்பட்ட போது கூடவே பாகிஸ்தான் உருவாகி ஏற்பட்ட பிரி வினையோடு இணைந்து இனங்களிடையே இடம்பெற்ற வன் முறைக் கொலைத் தாண்டவம் கேடான அனுபவமாய் அமைந் தது. அதன் பேறாக எமது மார்க்சிய அமைப்புகள் இனத் தேசி யங்களின் சுயநிர்ணயத்தையே ஏற்க விருப்பமற்ற சூழலைத் தோற்றுவித்தது. இலங்கையில் 70களில் தமிழினத் தேசிய எழுச்சியோடு சுயநிர்ணயம் குறித்த தேடல் தொடங்கிய போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தமிழினம் ஒரு தேசிய இனமே யில்லை என வாதிட்டு, சுயநிர்ணயத்தை மறுக்க முயன்றது. பிரிவினையானது ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக் கும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்த வரலாற்றுப்போக்கு தமிழினத்தை தனியான தேசிய இனம் என்பதை வலுவாகக் காட்டியதுடன், பிரிவினை மோகம் எத்தனை மோசமான கேடுகளை ஏற்படுத்தும் என்பதையும் காட்டிச் சென்றுள்ளது. இத்தகைய வளர்ச்சியோடு சுயநிர்ணயம் என்பதைப் பிரிவினை யிலிருந்து வேறுபடுத்தும் அதேவேளை முன்னர்போல இறுக்க மாகவன்றி பரந்த தளங்களில் விரிவுபடுத்தி மார்க்சிய அமைப்புகள் பிரயோகிக்க முன்வந்துள்ளன. இது தொடர்பில் நேபாள அனுபவம் கவனத்திற்கொள்ளத்தக்கது. சாதிக்கட்சி கள் யதார்த்தமாகியுள்ள சூழலில் சாதித் தேசத்துக்கான சுய நிர்ணயத்தை நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் நடைமுறையாக் கும் முயற்சிக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை கவனிப் புக்குரியது. சாதியத்தேசமும் அதன் சுயநிர்ணயமும் எனும் வகையில் இல்லாதபோதிலும், அ.மார்க்ஸ் நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சியில் இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பிரயோகிப்பது பற்றி கூறுவது உண்மையில் சாதித் தேசத்துக் கான சுயநிர்ணயத்தையே காட்டுகிறது (அதன் பொருளில் இன்னமும் விரிவாக்கம் பெற இடமுள்ளது.)
நேபாள அரசியல் இதற்கு இன்னொரு சான்று. அங்கே 12 ஆண்டுகளாக ஆயுதப்போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் அங்கு புதிதாக உருவாகியிருந்த அடையாள உறுதியாக்கங்களைப் (மிபீமீஸீவீஹ் கியீயீவீக்ஷீனீணீவீஷீஸீ) புரிந்து, உள் வாங்கி ஏற்றுக்கொண்டனர். அதற்கேற்பத் தம் கட்சித் திட்டத் தையும் மாற்றியமைத்தனர். இருபதாண்டுகளுக்கு முன் அங்கே மாதேசி, ஜனஜாதி, தலித் முதலான அடையாள உருவாக்கங்கள் வலுவாகச் செயற்பட்டதில்லை. ஜனஜாதி, தலித் முதலான சொற்கள் நேபாளி மொழியிலில்லாதவை. முன்னது வங்க மொழிச் சொல். பின்னது மராத்தி. மாதேசி இந்திய வம்சாவழி யினரைக் குறிப்பது. ஆயுதப்போராட்டத்தின் மூலம் சுமார் 9 மாவட்டங்களை மாவோயிஸ்டுகள் விடுதலைப் பிரதேசங்க ளாக அறிவித்தபோது. ஒன்று தலித் தலைமையில் உருவாக்கப் பட்டது. மேலும் ஐந்திற்கு முற்குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் தலைமைகள் உருவாக்கப்பட்டன. புரட்சி யிலும் இட ஒதுக்கீடு என் கிற புதுமை அங்கே ஏற்றுக்கொள்ளப் பட்டது (அ.மார்க்ஸ். 2009. அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள், புலம், சென்னை. பக்- 24 ) என்பார் அ.மார்க்ஸ்.
மாதேசி, ஜனஜாதி, தலித் போன்ற தேசியப்பிரச்சனையின் வடி வத்தை அடையாளங்களாகக் குறுக்கிப் பார்ப்பதில் உள்ள தவறு இங்கு நாம் தொடர்ந்து விவாதித்துச் செல்லும்போது தீர்வுக்குள் ளாகவல்லது. அவ்வாறே, சிறு அடையாளங்களையே முழு தாகக் கவனங்கொண்டு சமூக மாற்றத்துக்கான அக்கறையைப் பெருங்கதையாடலாக நிராகரிப்பது (அல்லது குறைத்து மதிப் பிடுவது) எவ்வகைக் கேடு என்பதையும் பின்னாலே பேசிக் கொள்வோம். ஏனைய தேச வடிவங்களை விடுத்து இங்கே சாதித் தேசம் குறித்து விவாதிப்பது உடனடித் தேவையாக உள்ளது. சாதி எவ் வாறு தேசத்துக்கான பண்பைப் பெறமுடிகின்றது? சாதிகளின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய இயங்காற்றல் என்பனவற்றிலி ருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும். பலதளங்களில் இவை குறித்து ஆரோக்கியமான ஆய்வுகள் வெளிப்பட்டுள் ளன. அதிலும் தமிழகத்தில் மிகக் காத்திரமான பங்களிப்புகன் இது தொடர்பில் உண்டு. பிராமணியத்துக்கு எதிரான திராவிடரி யக்க எழுச்சி அதற்கான களம் அமைத்துக் கொடுப்பதாக அமைந்தது. தவிர, திணைகளாக இயங்கிய தமிழக வரலாற்றுத் தொடக்கத்தில் மருதத்திணை ஏனைய திணைகளை வென்ற டக்கி அரசுருவாக்கத்தை ஏற்படுத்தியதை அறிவோம். இது சாதித் தோற்றத்தை விளங்குவதற்கான கோட்பாட்டுருவாக் கத்தை வழங்க ஏற்றதாக அமைந்துள்ளமையும் கவனிப்புக்குரி யது. திணைக்கோட்பாடு சார்ந்து சிவத்தம்பி முன்வைத்த கருத் துகள் சாதி குறித்த ஆய்வில் ஏற்கனவே தாக்கம் செலுத்தியுள் ளன. ஆயினும் இலக்கிய- இலக்கண பயன்பாடுகள் சார்ந்து திணைக்கோட்பாடு கவனங்கொள்ளப்பட்ட அளவோடு ஒப்பி டும் போது சமூக உருவாக்கத் தளம் சார்ந்து அதன் பரிமாணங் கள் வெறும் ஆரம்பமட்டத்திலேயே இருக்கிறது. இங்கும் நமது பேசுபொருள் சார்ந்து சில அடிப்படை அம்சங்களைக் கவனத் திலெடுத்து மேற்கொண்டு ஏனையவற்றையே பேச வேண்டியி ருக்கும் (ஆழமான ஆய்வுக்கான அவசியத்தை ஏற்கும்பட்சத் தில் இனிவரும் காலம் அதனைத்தானே வெளிக் கொணரும்.)
சங்க காலம் என அறியப்படும் வீரயுகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றச் செல்நெறியை ராஜ் கௌதமன் தனிநூலாகத் தந்துள் ளார். அது முற்றிலும் இலக்கிய ஆதாரங்களை மட்டும் கவனங் கொண்டு எழுதப்பட்டது. அந்த வகையில் அதன் போதாமை குறித்து விமரிசிக்கப்பட்டதுண்டு. ஏனைய வரலாற்று மூலங் களை கவனங்கொள்ளாத போதிலும் அவரது இலக்கிய வழி வெளிப்பாடு ஏனைய ஆதாரங்க ளால் நிராகரிக்கப்படவல்ல தான பலவீனப்பட்ட நிலையில் இல்லை என்பதே நிதர்சனம். ராஜ் கௌதமனன் வெளிப்பாட்டிலுள்ள இடைவெளியை நிறைவு செய்வதாக இலங்கையில் தமிழினத்துவ உருவாக்கம் சார்ந்த இந்திரபாலாவின் நூல் அமைந்துள்ளது. இந்திரபாலா தமிழக வரலாற்றுத் தொடக்கத்தை பல்வேறு வரலாற்று மூலங் கள் வழி வெளிப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் வரலாற்றுத் தொடக்கம் உலகின் ஏனைய பகுதிகள் போல விவசாய எழுச்சியைத் தொடர்ந்த வணிக எழுச்சியைக் காட்டுவதில்லை. விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிகம் சாத்தியப்பட்ட வரலாற்றுத் தொடக்கம் தமிழின் பல தனித்துவங் களுக்கு வழி வகுத்துள்ளது. ஐந்து திணைகள் ஆளுமையோடு அடையாளங் காணப்படுவதற்கு அதுவே வாய்ப்பளிப்பதாக அமைந்தது. விவசாயத்துக்கு முந்திய வணிக சாத்தியம் சுமே ரிய வணிகக்குழுக்களின் குடியேற்றத்தினாலாக இருக்கும் வாய்ப்பை இந்திரபாலா காட்டியுள்ளார். அதேவேளை ஏனைய இடங்கள் போல விவசாய எழுச்சியுடன் வணிக எழுச்சி பற்றி யும் பேசும்போது முந்திய வணிக எழுச்சி விவசாயம் சாராமல் இருக்க முடிந்ததன் வரலாற்று முக்கியத்துவத்தை போதியளவு புரிந்து கொள்ளாதவராகிறார். பிந்திய வணிக எழுச்சி சங்க மருவிய காலத்துக்குரியது. இதற்கு நெடுங்காலம் முன்னதாக, சுமேரிய வணிகக்குழுக்களின் வருகைக்குக் காரணமான குறிஞ்சி, நீலமணிக்கல் மற்றும் நெய்தலின் முத்து வணிகம் சார்ந்து அந்தத் திணைகள் பெற்ற ஆளுமை பிரத்தியேக கவனிப்புக்குரியது. இவை விவசாய எழுச்சிக்கு முந்தியவை. இக்காரணத்தினாலேயே வீரயுக இலக்கியத்தில் வணிகக் கருத்தியலுக்கான சமண, பௌத்த, ஆசீவக கவிதைகள் இடம் பெற முடிந்துள்ளன.
சேர அரசுருவாக்கத்தின்போது அதன் சின்னமாக உள்ள அம்பு, வில் முல்லையைக் குறிப்பதாக சொல்வாருளர். அது உண்மையில் குறிஞ்சியைக் குறிக்கும் சின்னங்கள். சேர அரசு ருவாக்க நகர்கள் குறிஞ்சித்திணையோடு தொடர்புபட்டிருக்கக் காணலாம். பாண்டிய அரசுருவாக்கத்தில் மீன்கொடி நெய்தல் திணையை நினைவுபடுத்துவது.அதன் முத்து வணிகம் கவனிப் புக்குரியது. அது தொடர்பில் ஒரு யவன அரசர் தனது மகளை மணமுடித்துக் கொடுத்ததுடன் சீதனமாக பாண்டிய அரசை வழங்கியதான குறிப்பு கவனிப்புக்குரியது (இதுபற்றி கங்காதரன் தனது நூலில் கூறியுள்ளதை பார்ப்பது அவசியம்)
ஆயினும் குறிஞ்சி, நெய்தல் திணைகள் நேரடியாக அரசுரு வாக்கத்தை சாதித்தன எனக் கொள்ள முடியாது. படை நடத்த வும் குடியோம்பவும் ஏற்ற நெல் உற்பத்தி சாத்தியமான மருதத் திணைப் பண்பு வாய்த்த பின்னரே அரசுருவாக்கம் சாத்திய மாகியிருக்க முடியும். குறிஞ்சி, நெய்தல் ஆகிய திணைகளின் வணிக முன்னேற்றத்துடன் ஆற்றுநீர்ப்பாசன வாய்ப்புள்ள மருதத்திணைக்கு மாறி வளர்ந்த இனக்குழுக்களிடம் முந்திய தொன்மங்களின் நீடிப்பாக அம்பு, வில், மீன் ஆகிய கொடிகள் தொடர்வதாகவே இதனை விளக்கங் கொள்ள வேண்டும். படை நடத்தவல்லதாக மருதத் திணை ஏற்படுத்தித் தந்த வாய்ப் புடன் குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை ஆகிய திணைகள் வென்றடக்கப்பட்டு சாதிகளாக்கப்பட்டமை தொடர் வரலாறு. இந்தளவில் திணைக் கோட்பாட்டின் சமூக உருவாக்க - விரிவாக்க தேடல் இங்கு போதும்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் வீரயுகப் பிரகடனத்தை அறிவோம். தனித்திருந்த இனக்குழு வாழ்முறை பேரரசு எல் லைக்குள் வேறு இனக்குழுக்களுடன் உறவுகொள்ளும் நிர்ப்பந் தத்தின் வெளிப்பாடு இது. பல்வேறு தொழில்சார் கிராமிய வாழ் வின் உறவுக்கு ஏற்புடையதாக இவ்வகையில் மாற்றப்பட்ட இனக்குழுக்கள் சாதிகளாக்கப்பட்டன. விவசாய உற்பத்திக்கு அமைவாக வென்றடக்கப்பட்டு இவ்வாறு சாதிகளாக்கப்பட்ட இனக்குழுக்கள் தாம் இருந்த இடத்துக்கு அமைவான தொழிலைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர நிர்ப்பந்திக்கப் பட்டதன் பேறுதான் சாதி. மேலாதிக்கம் பெற்ற இனக்குழு ஆளும் சாதியாகவும் ஏனையவை இறங்குவரிசைப் படிநிலைக் குரிய சாதிகளாகவும் கட்டமைக்கப்பட்டன. இவ்வகையில் குறித்த தொழில் வம்சாவழியாக நீடிப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அகமணமுறை கட்டாயமாக்கப்பட்டது. இனக்குழு வாழ்முறையிலிருந்த தீட்டு கோட்பாடு சாதிகள் சார்ந்த வகை யில் படிவரிசை இறக்கங்களுக்குரியதாக மாற்றிப் பிரயோகிக்கப்பட்டது.
இத்தகைய இனக்குழு மேலாதிக்கம் சார்ந்த சுரண்டல் அமைப்பு சாதிமுறையாக ஆகியமை சில நூறாண்டுகள் முன்னதாக வட இந்தியாவில் ஏற்பட்டிருந்தது. அதற்கமைவாக சாதியக் கருத்தி யலைப் பிராமணியம் வழங்கியிருந்தது. இத்தகைய இனக்குழு மேலாதிக்கம் ஆரியர் வருகைக்கு முன்னரே சிந்து வெளிப் பண்பாட்டுக்குரியோரிடம் ஏற்பட்டதாக கூறுவோர் உளர், ஆரி யரின் வர்ணாசிரமக் கருத்தியலே சாதியத்தை தோற்றுவித்தது என்பர் வேறு சிலர். இனக்குழு வாழ்முறையுடைய ஆரியர்கள தும் முன்னேறிய சுரண்டல் சமூகத்துக்கான மேலாதிக்க இனக் குழு வாழ்முறை சாத்தியமான சிந்துவெளிப் பண்பாட்டுச் சுதேசிகளதும் பண் பாட்டுக்கலப்பில் உருவான புதுவகைப் பிராமணர்கள் இரு வழிமுறைகளதும் இணைப்பில் கண்டு வெளிப்படுத்திய கருத்தியலே சாதியம். ஆக, ஏற்கனவே சாத்தியமான சாதி வாழ்முறையின் வெளிப்பாடே பிராமணியம் முன்வைத்த சாதியக் கருத்தியல்.
சாதியம் தொடர்பான பல்வேறு சிந்தனைப்போக்குகளைத் தொகுத்து வழங்கி இனக்குழு மேலாதிக்க வாழ்முறையின் வெளிப்பாடே சாதியம் என்பதை கோ.கேசவன் தனது சாதி யம் எனும் நூலில் காட்டியுள்ளார். சரியாகவே அதனை இனங் கண்ட போதிலும் தீண்டாமையுடன் கூடிய நிலவுடமைக் கருத்தி யலாக மட்டுமே சாதியத்தை அவர் காணும் தவறையும் அங்கே வெளிப்படுத்தினார். நிலவுடைமைக்கு முந்திய சாதியத்தை உருவாகிவரும் முன்தேவைப்பாடாகவும், நவீன சமூகத்தில் அதன் நீடிப்பை அரை நிலப்பிரபுத்துவம் இன்னமும் இருப்ப தன் பேறான கருத்தியல் எச்சமாகவும் கேசவன் காண்கிறார்.
உண்மையில் மேலாதிக்க இனக்குழுச் சுரண்டலுக்கான அரசுரு வாக்கத்தின் உடன் விளைவான பிராமணியத்தோடு வருணக் கருத்தியல் முன்வைக்கப்பட்டபோதே சாதியக் கருத்தியல் தோற்றம் பெற்றுவிட்டது. வர்க்கப் பிளவடைந்த அடிமைச் சமூ கத்தை உடைய கிரேக்கம், ரோம் போலத் தனிமனிதர்களாயல் லாமல் ஒடுக்கப்படுகிற உழைக்கும் இனக்குழுக்கள் எனும் சமூக வகை அடிமைப்பாட்டுக்கு ஏற்ப புனிதம் மற்றும் இரத்தக் கலப்பற்ற இனக்குழுத் தூய்மை சார்பான தீட்டு கருத்தியலாக ஆரம்பகாலச் சாதியக் கருத்தியல் அமைந்தது. அதுவே நிலவு டைமைச் சமூகத்தில் நிலத்துடன் பிணைக்கப்பட்ட உழைப் போர் தீண்டாமைக்கொடுமைக்கு ஆட்படுவதான தீண் டாமைக் கருத்தியலாகப் பரிணமித்தது. தீட்டு கோட்பாட்டின் இன்னொரு முகமே தீண்டாமை. நிலவுடைமை வாழ்முறையு டன் பெற்ற பொருளியல் தேவைப் பரிணமிப்பும் அதற்கேற் புடைய தீண்டாமைக் கருத்தியலும் புதிய சமூக முறைமையின் வெளிப்பாடு. முந்திய தீட்டுக் கருத்தியல் சாதியத்தின் தொடக்க கால வாழ்முறைக்கானது. இதனைப் புரிந்துகொள்ளாத தால் தீண்டாமையே- அவ்வகையில் நிலவுடைமைக்குரியதே - சாதியம் எனப் பலரும் மயங்க நேர்கிறது.
நவீன முதலாளித்துவ உற்பத்திமுறையில் ஸ்தாபனமயப்படல் பிரதான அம்சம். முதலாளித்துவ சமூகத்துக்கான தேவை களுக்கு ஏற்ப வர்க்க சக்திகளுக்கானதாக கட்சிகள் அமையும். வர்க்கப் பிளவுபடாத சாதியச் சமூகத்தில் ஒரே சாதியினர் கிராம எல்லைகள் கடந்து ஸ்தாபனமயப்படுவதும் சாதிக்கட்சிகள் சாத்தியப்படுவதுமாக இங்கே சாதியக் கருத்தியல் பரந்த தளத் தில் ஸ்தாபனமயப்படுத்தல் என்பதாக மாற்றம் பெற்றுள்ளது. நிலவுடைமைச் சமூகத்தில் ஒரு கிராமத்தினுள் விவசாய உற்பத் திக்கு அமைவாக பல்வேறு சாதிகளின் உறவு அமைந்தது. வெவ்வேறு கிராமங்களின் ஒரே சாதியினர் இன்றுபோல் அப் போது ஒன்றுபடுவதைவிட ஒரு கிராமத்துக்குரிய வெவ்வேறு சாதியினரது தொடர்பாடல் அதிக வலுவுடையது. இன்றைய தேவை கிராம எல்லை கடந்து சாதி உறவை கட்டமைக்க வலி யுறுத்துகிறது. இவ்வகையில் ஸ்தாபனமயப்பட்ட கட்சி அமைப் புக்குச் சாத்தியப்படும் முதலாளித்துவக் கருத்தியலை இன்று சாதியம் பெற்றதன் பேறுதான் சாதிக்கட்சிகள்.
ஏதோ சாதிக்கட்சிகள் என அண்மைக்காலங்களில் இனங் காணப்பட்ட சிலகட்சிகள் தாம் சாதித் தேசியத்துக்குரியன என் றில்லை, எந்தவொரு கட்சியும் அடிப்படையில் ஏதோவொரு சாதி நலனை முதன்மைப்படுத்தி அதன் தலைமையில் ஏனைய சாதிகளை ஐக்கியப்படுத்துவனவாயே இருந்துள்ளன, யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனத் தமிழகம் முடிவேந்தர்கள் மூவ ரது பேரரசு எல்லைக்குள் கொணரப்பட்டபோது, வெள்ளாளர் ஆதிக்கத்துக்குள் அனைத்துச் சாதிகளும் கொண்டுவரப்பட்ட னர் இரண்டாயிரம் வருடங்களின் முன்னர். வெறும் அரசு இயந் திர அடக்குமுறையால் மட்டும் இதனைச் சாதித்துவிட முடியாது (அதுவும் ஒருபகுதியாக அமையவேண்டியிருந்ததா லேயே வீரயுக யுத்தப் பேரிகை - அதற்கு உணர்வூட்டும் வீர யுகப்பாடல்கள்.) மூவேந்தர்கள் இவ்வகையில் பேரரசுகளாக எழுச்சி பெற்றபோது வென்றெடுத்த நிலங்களைப் பிராமணர் களுக்கு வழங்கி ஏற்றத்தாழ்வை வலியுறுத்தும் சாதியக் கருத்தி யலையுடைய பிராமணியத்தை இந்த மண்ணுக்குரியதாக்கினர். இவ்வாறு கருத்தியல் ஏற்பை சாத்தியமாக்கியதன் வாயிலாகவே வெற்றிபெற்ற சாதி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முடிந்தது.
அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்தபோது வெள்ளாளர் - முதலியார் - நாயக்கர் எனும் ஆளும் கூட்டணிச் சாதிகளது தேசியத்தின் தலைமையில் ஏனைய தமிழ்ச்சாதிகள் ஐக்கியப் படுத்தப்பட்டனர். 20ம் நூற்றாண்டின் 70களின் பிற்கூறிலும் 80ம் ஆண்டுகளிலும் கள்ளர்-மறவர்-அகம்படியார் எனும் முக்குலத் தோர் தேசியத் தலைமையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழகத்தை வெற்றிகொள்ள முடிந்தது. இந்தப் பின்னணியிலேயே வன்னியர் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய (சாதிக்கட்சியென இங்கே முதன்முத லில் வெளிப்படையாக இனங்காணப்பட்ட) பாட்டாளி மக்கள் கட்சி தோற்றம் பெற்றது. தொடர்ந்து புதிய தமிழகம், விடு தலைச்சிறுத்தைகள் போன்ற தலித் கட்சிகள் தோற்றம் பெற்றன. முன்னதாக 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா முழு மையும் ஒன்றுபடுத்த முடிந்தது பிராமணத் தேசியத்தினால் என் பது கவனிப்புக்குரியது. கோகலே,திலகர் போன்றோர் தலைமை யில் காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னிலைப்படுத்த முடிந்தபோது, அந்தப் பிராமணர் சாதி மட்டுமே முழு இந்தியா வுக்குரியது என்ற வகையில் இந்தியத் தேசியம் பிராமணத் தேசியமாக (பிராமணத் தேசியத் தலைமையில்) ஒன்றுபடுத்தப் பட் டது. கோகலே, திலகர் போன்றோரது பிராமணத் தேசியமே தொடர்ந்திருப்பின் இந்திய சுதந்திரத்தை சாத்தியப்படுத்தும் வெகுஜன எழுச்சி சாத்தியப்பட்டிராது. ஏனைய சாதித் தேசிய நலன்களையும் உள்வாங்கிய தாராளவாத அரைப்பிராமணத் தேசியத்தை முன்னிலைப்படுத்திய காந்தி - நேரு தலைமையி னாலான காங்கிரஸ் கட்சியே அனைத்து மக்களையும் தலைமை தாங்கி வெகுஜனக் கிளர்ச்சிகளை முன்னெடுத்தது என்பது கவனிப்புக்குரியது (காந்தி - நேரு தலைமையில் காங்கிரசில் தொடர்ந்ததும் பிராமணத் தேசியம் எனக் குறிப்பிட்டபோது, இதனை அவ்வாறன்றி தாராளவாத அரைப் பிராமணியத் தேசி யமாக வேறுபடுத்திக் காணவேண்டுமென வலியுறுத்தியவர் போத்துரெட்டி. அவர் முதலில் சாதித் தேசியம் என்ற கருத்தி யலை ஏற்கவில்லை. தொடர்ந்த விவாதத்தில் அவர் ஏற்றுக் கொண்டவகையில் இதனை வலியுறுத்தினார். அவருக்கு நன்றி)
காங்கிரசின் பிராமணத் தேசியத்தை இனங்கண்டு, சாதிகளாய்ப் பிளவுபடுத்தித் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் பிராமண ரால் இந்தியாவை ஒரு தேசமாக ஒன்றிணைக்க முடியாது என ஜோதிராவ் புலே, அம்பேத்கர் போன்றோர் குறிப்பிட்டிருந்த னர். ஜோதிராவ்புலே சொன்ன காலத்தில் அது சரியாக இருக்கத் தக்கவகையில் பிராமணத்தேசியம் தனது மேலாண்மைக் குணத்தை முனைப்பாகக் கொண்டிருந்தது, பின்னாலே அம்பேத்கர் காலத்தில் காந்தி - நேரு தலைமையில் தாராளவாத அரைப் பிராமணியம் ஏனைய சாதித் தேசியங்களது நலன் களையும் ஓரளவிலாயினும் வெளிப்படுத்தி, பிராமணத் தேசத் தலைமையில் அனைத்துச் சாதிகளது தேசங்களையும் ஒன்று படுத்தியிருந்தது. சமகால இயக்கச் செல்நெறியின் மாற்றப் போக்கை உடனடியாக அம்பேத்கரால் இனங்காண முடிய வில்லை. அக்காரணத்தாலேயே தலித்துகளுக்கான வீரியமிக்க தலைமையை வழங்கிக் காத்திரமான பணிகளை அம்பேத்கர் முன்னெடுத்த போதிலும் பெரும்பாலான தலித்துகள் காங்கிர சில் அணிதிரண்டு சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
அம்பேத்கர் காங்கிரசின் பிராமணத்தேசியத்துக்கு எதிராக தலித் மக்களின் எதிர்த் தேசியத்தை முன்வைத்து இயங்கினார். பொதுவாக இந்தியத் தேசியம் சாதிகளின் தேசமாகப் பிள வுண்ட தேசியங்களாகவே உள்ளது. இவற்றில் பிராமணத் தேசி யம் ஆதிக்க தேசப்பண்பைக் கொண்டுள்ளபோது, அதிகார எதிர்ப்புணர்வுடன் தலித் தேசியம் எதிர்த்தேசியமாக உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் முனைப்படைந்தது போன்ற சில சந்தர்ப்பங்களில் ஆங்கில அரசுடன் அம்பேத்கர் இணங்கி இயங்க முன்வந்தது இந்த எதிர்த் தேசியப் பண்பினா லேயே. அடிப்படையில் தலித் விடுதலைக்கு ஏகாதிபத்தியம் வலுவான பங்களிப்பை நல்கவில்லையென வலியுறுத்திய அதேவேளை பிராமணத் தேசியத்துடனான முரண்பாட்டின் பேறாக அவர் இவ்வகையிலான உடன்பாட்டை ஆங்கில அரசுக்கு வழங்கினார். முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக் களின் தலித் தேசியமே இவ்வாறு முழுமையான எதிர்த் தேசிய மாக அமையமுடியும். ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதிகளது தேசிய உணர்வுகள், குறித்த சில அம்சங்களில் எதிர்த் தேசிய மாக முடிந்தாலும் அவை ஆதிக்கசாதித் தேசியத்துடன் சமரசங் கொள்ள ஏற்ற பண்புகளையும் கொண்டுள்ளன. அவ்வகை யில் ஒருவகை எதிர்த் தேசியப் பண்புடையனவென்றே கூற முடியும்.
சென்ற நூற்றாண்டின் 20ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வீறு கொள்ளத் தொடங்கிய திராவிடத் தேசியம் இவ்வகையிலான ஒருவகை எதிர்த்தேசியமே. திராவிடர் இயக்கம் பிராமணத் தேசியத்துக்கு எதிரான மிகக் காத்திரமான எதிர்த் தேசியப் பண்பைக் கொண்டிருந்தபோதிலும், வெள்ளாளர் - முதலியார் - நாயக்கர் ஆகிய ஆளும் சாதிகளது கூட்டுத் தேசியம் தலைமை தாங்கிய வகையில் அது தலித் தேசியம்போல முழுமையான எதிர்த் தேசியமாக அமையவில்லை. திராவிடத் தேசியத்தின் ஆளும் சாதிகளது தேசியப் பண்பு அதன் உடன்பிறப்பான தமிழ்த்தேசியத்திலும் வெளிப்பட்டது. தமிழ்தேசியம் ஆட்சிய திகாரத்தைப் பெற்ற 1967இன் பின்னர் வெண்மணியில் தொடங் கிய தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்கவெறி இன்றுவரை நீடிப்பதில் திராவிடக் கட்சிகள் எத்தகைய பங்களிப்பை வழங் கியன என்பது உலகறிந்த விடயம். அந்தவகையில் திராவிடர் இயக்க (தமிழ்த் தேசிய) பிராமண எதிர்ப்பானது ஒருவகை எதிர்த் தேசியமாகவே அமைகின்றது (மதமும் மார்க்சியமும் நூலுக்கு மார்க்சிஸ்ட் இதழில் குணா காத்திரமான ஒரு விமரிச னம் எழுதியிருந்தார். அதில் ஒருவகை எதிர்த்தேசியம் என்பது போதிய விளக்கமற்று இருப்பதாகக் குணா குறிப்பிட்டிருந்தார். இப்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் எனக் கருதுகிறேன்)
ஆக, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என விவசாய வாய்ப்பைப் பெற்ற இனக்குழு ஏனையவற்றை வென்றடக்கி ஆட்சிப்படுத்தி உறவு கொண்டாடியபோது வர்க்கப் பிளவ டைந்த தனிமனிதர்களாயல்லாமல் இனக்குழுக்களே உழைக் கும் தொகுதியாகும் சுரண்டல்முறை நமக்குரியதாக ஏற்பட்டுள் ளது. இத்தகைய தான பிரத்தியேகச் சூழல் அதிக கவனிப்புக் குரியதாகிறது. இனக்குழுப் பண்பு இவ்வகையில் நீடிக்கும் போது தேசிய உணர்வைக் கிளர்த்தும் முதலாளித்துவத்தில் தமக்குள் வலுவான இரத்த உறவைப் பேணும் சாதிகளாக்கப் பட்ட இனக்குழு முறை வாழ்வுடையோர் தம்மை தேசம் போலக் கருதுதல் தவிர்க்கவியலாததாகியது. அந்த புறநிலை யதார்த்தம் நிலவுவதால் கிராம எல்லைகள் கடந்து ஒரேசாதி யினர் சாதிச்சங்கங்களாக ஸ்தாபனமயப்பட்டு தமது (தேசிய) நலன்களை முன்னிறுத்திப் போராட வேண்டியவர்களாயினர். வாய்ப்புள்ள பெரும்பான்மைச் சாத்தியமுள்ளவர்கள் தமது சாதிக்கட்சியையும் கட்டியெழுப்பினர். இவ்வாறு பிளவுபட்ட தேசியங்கள் நமது யதார்த்தமாயினும், ஒரு தேசத்தை வடிவு படுத்தித் தலைமையேற்க வாய்ப்புள்ள ஆதிக்க சாதித் தேசியம் - ஒடுக்கப்பட்டு உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்ட தலித் தேசியம் எனும் இரட்டைத் தேசியம் எதிரும் புதிருமாக இங்கு வலுவாயுள்ளமை கவனிப்புக்குரியது. இந்த இரட்டைத் தேசி யத்தை தெளிவுபடுத்திய இலங்கையின் தேசிய இனப் பிரச்சி னையிலிருந்து இதனைப் புரிந்து கொள்ள முயற்சிக்க முடியும்.
II
அம்பேத்கரின் தலித் இயக்கம், பெரியாரின் திராவிடரியக்கம் என்பவை காங்கிரசின் பிராமணத்தேசியத்தை நிராகரித்து முன் னெடுக்கப்பட்ட எதிர்த்தேசியங்களாகும். இந்த வரலாற்றுச் செல்நெறி இரட்டைத்தேசியக் கோட்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்ளப்படவில்லை. சுதந்திரப் போரட்டத்தை அப்ப டியே ஆதரித்தவர்கள் ஏதோவொரு வகையில் பிராமணத் தேசியத்தை ஏற்பவர்களாய் இருந்தனர். அவர்கள் அம்பேத்க ரது தலித் தேசியத்தையோ பெரியாரின் திராவிடத் தேசியத்தையோ விளங்கிக் கொள்ளாமல் அவர்களை வகுப்பு வாதிகளாய்க் கணித்தனர். ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறும் ஆதிக்கசாதித் தேசியத்துக்கு எந்தளவு நியாயப்பாடு உள்ளதோ அதேயளவு பண்ணையடிமைத்தனத்தைத் தகர்க் கும் சாதிய எதிர்ப்புச் சார்ந்த அம்பேத்கர், பெரியார் போன்றோ ரது எதிர்த்தேசியமும் அவசியமானது. அன்று சுதந்திரப் போராட்டத்தின் பேரால் எதிர்த்தேசியத்தை வகுப்புவாதமாயும், ஏகாதிபத்திய சார்புடையதாயும் பார்த்ததில் தவறுண்டு. அதே போல எதிர்த்தேசிய நிலைப்பாட்டை தவறற்ற முழுச்சரியான ஒரே நிலைப்பாடெனக் கொண்டாடும் இன்றைய தலித் இயக்கங் கள் சுதந்திரப்போராட்டம் முற்றிலும் பிராமண ஆதிக்கத்துக்கே யுரியது எனக்கூறி அதன் வரலாற்றுப் பங்களிப்பை மறுதலிப்பதும் தவறானதாகும்.
ஆயினும் இன்றுவரை இந்திய இயக்கங்களில் பல இரட்டைத் தேசியப் பிளவுடன் கூடிய இரண்டகநிலையுடையனவாயே உள்ளன. அம்பேத்கரோ, பெரியாரோ ஏகாதிபத்திய சக்திகளி டம் விலை போனவர்களல்ல, தாம் பிரதிநித்துவப்படுத்திய மக்களுக்காக எதிர்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்கள். இன்று உலகமயமாதலின் கையூட்டில் தொண்டுநிறுவனமாக இயங்கித் தீவிர தலித்தியம் பேசும் சிலரோ மக்கள் விடுதலைக்கு விரோதமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி என்றென்றும் இழிவுபடுத்தல் களுக்குள் உழல்வதற்கே வழிகோலுகிறார்கள். தலித் மக்களின் விடுதலை இவர்களுக்கு அவசியமில்லை. ஆண்டாண்டுகால அவமதிப்புகளைப் பேசியே இவர்கள் பிழைப்புவாதத்தை முன் னெடுக்க முயல்கிறார்கள். பிராமணியம் மக்களை சாதிகளாய்ப் பிளவுபடுத்திச் சுரண்டலைப் பேண எந்தளவுக்கு முயல்கி றதோ, அதேயளவுக்கு தலித்தியமும் எதிர்த்தளத்தில் இயங்கிய வாறு அதே சாதியவாதப் பிளவுபடுத்தல் தவறையே இழைக் கிறது. இது உலகமயமாதலுக்கு ஆட்படும் அம்சமாகும்.
உண்மையில் மார்க்சியம் மட்டுமே சாதியவாதப் பிளவுபடுத்த லுக்கு இடமற்ற வகையில் தலித் விடுதலைக்கு ஏற்றதாக அனைத்து சக்திகளையும் அணிதிரட்ட உதவமுடியும். மார்க்சி யர்கள் ஏகாதிபத்தியத் தகர்ப்பை அவசியப்படுத்தும் அதே வேளை, பண்ணையடிமைத் தகர்ப்பையும் வலியுறுத்துபவர் களாயே இருப்பர். கம்யூனிசம் இங்கு வேரூன்ற முன்னரே பாரதியிடம் இரட்டைத்தேசியப் பிளவின்றி இரண்டு விடு தலைக்கூறுகளையும் இணைத்துப் பார்க்க முடிந்தது. முதல் கம்யூனிஸ்ட்டாக விளங்கிய சிங்காரவேலர் தொடர்ந்தும் சாதியத் தகர்ப்பு - ஏகாதிபத்திய ஒழிப்பு - முதலாளித்துவ எதிர்ப்பு என்பவற்றுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.
இந்தப் பண்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த இயக்கச் செல்நெறியில் ஆரம்பம் முதலாகவே இருந்துவந்தது. அதன் வெளிப்பாடாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைமையில் 60களின் பிற்கூறில் சாதியத் தகர்ப்புப் போராட் டம் முனைப்படைந்தபோது ஒடுக்கப்பட்ட மக்கள் தனிமைப் பட்டிருக்கவில்லை. அனைத்து சாதியினரையும் (பிராமணர் களைவிடவும் எல்லா அதிகாரங்களையும் கையகப்படுத்தியி ருந்த வெள்ளாளர்களில் முற்போக்கு ஜனநாயகப் பண்புடை யோரையும்) ஐக்கியப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சாதிய இழிவுகளுக்கு எதிரான அந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி யால் வழிநடத்தப்பட்ட காரணத்தால் இரட்டைத் தேசியப் பிளவற்று வெற்றிகளையீட்ட முடிந்தது.
இத்தகைய பரந்துபட்ட ஐக்கிய முன்னணியானது போராட்டக் களமாகிய யாழ்ப்பாணத்தைக் கடந்து முழு இலங்கை சார்ந்த சாத்தியப்பாடுள்ள பல்வேறு சக்திகளையும் அணிதிரட்டுவ தாக அமைந்தது. அதேவேளை சர்வதேசத் தள விரிவாக்கத்து டன் உலகளாவிய ஆதரவுப்பலமும் வாய்த்திருந்தது. பீக்கிங் வானொலி வாயிலாக சீனப் பாட்டாளி வர்க்கம் வழங்கிய ஆத் மார்த்த ஆதரவு முதல் பல்வேறு ஊடகங்கள் ஊடாக சர்வதேச விடுதலை சக்திகளது ஆதரவு பெறப்பட்டது. அதேபோல சாதியத் தகர்ப்பு போராட்ட முன்னெடுப்பானது வியட்னாம் மக்களது விடுதலைப் போராட்டம் உட்பட பல்வேறு நாடுகளின் உழைக்கும் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் பலதரப் பட்ட ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாயும் அமைந்தது. வெறும் சாதியவாத முடக்கம் இல்லாத இத்தகைய பரந்த தள விரிவாக்கமுடைய போர்க்குணாம்சம், பிளவுபடாத தேசிய மனப்பாங்கு சார்ந்ததாக அமைந்தது. அப்படியிருக்க இரட்டைத் தேசியப் பண்பு எங்கே வெளிப்பட் டது? இந்தியாவில் ஆளும் சாதித்தேசியம் பிரதான வர லாற்றுப் போக்காக அமைந்தபோது அம்பேத்கர், பெரியார் போன்றோரது எதிர்த்தேசியம் உடன்விளைவாக வெளிப்பட் டன. மாறாக இலங்கையில் ஆளும் சாதியத் தேசியமே பிரதான செல்நெறிக்கு எதிரான உடன்விளைவாக வெளிப்பட்டமை கவ னிப்புக்குரியது. மேலே குறித்தவாறு யாழ்ப்பாணத்தில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்தபோது முழு இலங்கை சார்ந்த பரந்துபட்ட ஐக்கியம் அவசியப்பட்ட வகையில் இலங் கைத் தேசியத்தின் பகுதியாகவே அது அமைவது இயல்பாயி ருந்தது. எதிர்த்தேசியத்தை முன்னெடுத்த அம்பேத்கர் இந்தியா முழுமையிலுமுள்ள தலித் மக்களின் ஒன்றுபட்ட பலத்தை முன்னிட்டு இந்தியா பிளவுபடும் பிரிவினைவாதத்தை நிராகரித் தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. அப்போது தீவிரம் பெறத் தொடங்கிய தமிழ்த்தேசியம் முற்போக்குக் குணாம்சமு டையதாயின் அந்த சாதியத் தகர்ப்புப் போராட்டத்தை ஆதரித் திருக்க வேண்டும். மாறாக யாழ்ப்பாண வெள்ளாளத் தேசிய மாயே தமிழ்த் தேசியம் முடக்குவாதமுற்றிருந்தமையினால் அவ்வாறு ஆதரவு வழங்க முடியாமல் போயிற்று. சாதியத் தகர்ப்பை உள்வாங்கி இலங்கை முழுமையிலுமான உழைக்கும் மக்களது முற்போக்கான போராட்டங்களுடன் கைகோர்க்கும் பரந்துபட்ட சக்திகளுக்கான ஈழத்தமிழ்த் தேசியமாயின் இத்தனை பேரழிவுகளுடன் கழித்தல் பெறுபேறிலான அவை முடிவு நேர்ந்திராது. யாழ் வெள்ளாளத் தேசியம் பிராமணி யத்தை விடவும் கேடான அகம்பாவங்களுடன் ஆண்ட பரம் பரைத் திமிர் மேவியதாய் ஆரம்பம் முதலாகவே மக்கள் விடு தலைக்கு விரோதமான போக்குகளுடன் விளங்கியிருந்தது.
மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய வெறியுடனான, மக்கள் விடு தலைப் பண்பற்ற ஈழத் தமிழ்த் தேசியத்தை நிராகரித்து இலங்கைத் தேசியம் பற்றியே தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் பேசுவதற்கும் இது காரணமாயிற்று. பௌத்த சிங்களப் பேரின வாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் - பொருளாதார நடவடிக் கைகளும், புறக்கணிப்புகளும், இராணுவ அழித்தொழிப்பு களும் ஈழத்தமிழ்த் தேசியத்தை யாழ் வெள்ளாளத் தேசியத் தலைமையில் அணிதிரட்டும் துர்ப்பாக்கியம் வீறுபெற்ற பின்னரே கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இனப்பிரச்சனை குறித்து அக்கறை கொள்ள நேர்ந்தது.
என்னதான் எதிரியால் ஒன்று குவிக்கப்பட்ட போதிலும், மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சிகள் எட்டப்பட்டபோதிலும் ஆதிக்க சாதித் தேசியம் என்கிற வகையில் ஐக்கியப்படுத்தும் சக்திகள் பற்றிய அக்கறையின்றி அகங்காரத்தோடு முன்னெடுக்கப் பட்ட முப்பது வருட யுத்தம் அவல முடிவை எய்தியுள்ளது. இப்போதும் கடந்தகால அனுபவங்களைக் கற்று முன்னேறும் அக்கறை ஈழத்தமிழ்த் தேசியத்திடம் இல்லை என்பதே பெரும் துன்பியல். ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற புலம் பெயர் தேசங்களில் இருந்தபடி அதே ஏகாதிபத்திய ஒட்டுறவும் ஆண்ட பரம்பரைக் கனவுகளும் மேவியபடி யாழ் வெள் ளாளத் தேசியத் தவறுகளுடனேயே ஈழத்தமிழ்த் தேசியம்.
அதேவேளை ஒடுக்கப்பட்ட மக்களது சாதியத் தகர்ப்பு போராட்ட சக்திகளும் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தேசிய நிலைப்பாட்டை மேற்கொள்ளாது தமிழினத் தேசியப் போராட் டத்தின் நியாயங்களை ஏற்க முன்வந்தமை கவனிப்புக்குரியது. தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினை குறித்த கற்றலை விரிவு படுத்தி சுயநிர்ணய உரிமை குறித்த ஆழ்ந்த அக்கறையை கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்தனர். இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அதன் பன்மைப் பரிமாணத் தளங் கள் அனைத்தையும் கவனத்திலெடுத்து தீர்வுத்திட்டம் ஒன்றை புதிய ஜனநாயக கட்சியே (முன்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி - சீன சார்பு - இடது) முன்வைத்துள்ளது. இனியும் மாறி வரும் சர்வதேச- தேசிய நிலைகளை உள்வாங்கி சுய நிர்ணய உரிமையைப் பிரயோகிப்பது அவசியமானது. அந்த வகையில் தலித் பிரச்சனை இன்று ஈழத்தமிழ்த் தேசியப் பிரச்சனையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. சாதியத் தகர்ப்புப் போராட் டத்தினூடாக ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட காரணத்தால் இலங்கையில் தலித்திய வாதம் காலூன்ற முடியவில்லை. 30 வருடங்கள் நீடித்த யுத்தம் மற்றும் புலம்பெயர் சூழல் காரணமாக தலித்தியவாதம் பேசு பொருளாகியுள்ளது. அதன் பிளவுபடுத்தல் பண்பால் பாதிப் புற்றுவிடாத வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்ண யத்துக்கான வடிவம் கண்டறியப்படுவது அவசியம்.
இன்று இலங்கையின் யுத்த வெற்றியுடன் ஏற்பட்டுள்ள சர்வ தேச உறவுநிலை மாற்றம் கவனிப்புக்குரியது. நாட்டின் அரசி யல் சூழல் அண்மைக்காலமாக புதிய மாற்றம் ஒன்றை நோக்கி நகர்ந்தேவிட்டுள்ளது. அதாவது அரசியல் கட்டுமானங்களில் ராணுவ ஆதிக்கம் பலமடைந்து வருகிறது. ராணுவ உயர் அதிகாரிகள் அரசியல் பேசும் அளவுக்கு மாற்றங்கள் காணப் படுகின்றன. அத்துடன் ராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரி களின் பதவிகளை நிரப்பி வருகின்றனர். பாதுகாப்பு என்ற அடிப்படையில் சிங்கள பேரினவாத அரசியல் நிகழ்ச்சி நிரல் அரங்கேறி வருகிறது. இதனால் நாட்டின் சிறுபான்மைக் குழுக் கள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தது இலங்கை ராணுவம் எனக் குறிப்பிடுவதை விடுத்து சிங்கள பௌத்த இளைஞர்களின் தியாகங்களே நாட்டைக் காப்பாற்றியதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படு வது தேசியவாதத்தின் புதிய பரிமாணத்தை உணர்த்துகிறது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் மூலம் நாட்டிற்குப் புதிய சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள் ளதாக விபரிக்கப்படுகிறது. இப்போக்குகள் உள்நாட்டு அரசிய லில் மட்டுமல்ல வெளிநாட்டு அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து விலகிச் செல்வதாகக் காட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. மேற்குலக நாடுகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தமை, ஐரோப்பிய யூனியன் சந்தை வசதிகளை சலுகை அடிப்படை யில் பயன்படுத்தும் ஏற்பாடுகளுக்கு தடையாக இருந்தமை, உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிகளைத் தாமதப்படுத்தல் என்பன இலங்கையின் மேற்குலக போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை உறுதி செய்கின்றன. அது மட்டுமல்லாது சமீபகாலமாக இலங்கை அரசு நட்பு பாராட்டும் அரசுகள் மனித உரிமை மீறல்களுக்கு மிகவும் பேர்போன அரசுகளாகும். ஈரான், லிபியா, பாகிஸ்தான், சீனா, பர்மா போன்ற நாடுகளோடு இலங்கையின் உறவுகளும், கூட்டுகளும் ஓர் ஆரோக்கியமான உறவுகளாக கருதமுடியவில்லை என்பார் வி.சிவலிங்கம் (வி.சிவலிங்கம் இலங்கை அரசியல், தேசியவாதங்களும் அதன் தோல்விகளும் எதுவரை, செப்டம்பர்-அக்டோபர் 2009, பக்-58) இங்கு காட்டப்பட்டுள்ள நீண்ட பகுதியில் மட்டுமன்றி கட்டுரை முழுமையிலும் இலங்கையின் ஈழத்தமிழினத் தேசியப் பிரச்ச னையில் இந்தியாவின் பங்குபற்றி எதுவுமே பேசப்படவில்லை. இலங்கையினுள் முஸ்லிம், மலையக மக்கள் உள்ளிட்ட பிரச்ச னைகளின் பன்மைத்துவத்தைக் கவனத்திலெடுத்துப் பேசும் கட்டுரை அதன் இன்னொரு பரிமாணமாகிய இந்தியாவின் தொடர்பைக் காணத்தவறுவது தற்செயலானதல்ல. பெரும்பா லும் பலரும் இதுபோல முக்கிய அம்சங்களைத் தவறவிட்டு வேறுவிடயங்களில் மிக ஆழமாகவே சென்று நுண்ணாய்வுகள் நிகழ்த்துகின்றனர். இலங்கையினுள் என்னதான் நுட்பமான புரிதலுடன் தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் இயலாவகை யில் தடையேற்படுத்தும் அம்சமாக சர்வதேச உறவுத்தளம் அமைந்துள்ளது. மேலைத்தேச ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து இலங்கை மீள்வதும், ஜனநாயகப் பண்பற்ற நாடுகளோடான அதன் உறவாடல் என்பதும் வெறும் மாயத்தோற்றமே. இலங் கையைத் தன் வழிக்குக் கொண்டுவர மேலைநாடுகளின் ஏகாதி பத்திய சக்திகள் மனித உரிமை ஆயுதத்தை கையாள்கிறபோது இலங்கையின் நாட்டம் இவ்வகையில் அமைகிறது. அதற்காக மிகுந்த சுயாதிபத்தியத்துடன் அது இயங்குவதாகப் பொரு ளில்லை. ஈழத் தமிழ்த் தேசியம் இன்று மேலைத்தேச ஏகாதிபத் தியத்தின் செல்லப்பிள்ளையாகக் குழைகிறது. இந்தச் செல்லப் பிள்ளையை வைத்து ஊடுருவுவதற்கு உள்ள பலவழிகளில் ஒன்றே மனித உரிமை மீதான அக்கறை.
இலங்கை அரசு முழு இறைமையுடன் மனித உரிமை மீறல் களையுடைய நாடுகளுடன் உறவாடவில்லை. அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் பூரணமாகக் கொண்டுவந்துவிட்ட இந்தியா வின் ஆணைகளுக்குப் பணிந்தபடியே இலங்கையின் எத்த கைய தொடர்பாடலும் அமையமுடியும். யுத்தத்தை இந்தி யாவே வெற்றியீட்டித் தந்தது, அக்காரணத்தால் இந்தியா சொல் கிற எதையும் செய்ய வேண்டியேயுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளமை கவனிப்புக்குரியது. இத்த கைய நிலைக்கு இலங்கையை ஆட்படுத்த இந்தியா மிகப் பெரும் விலைகொடுக்க வேண்டியிருந்தது. பல்வேறு தந்திரோ பாயங்களைப் பொறுமையாக முன்னெடுக்க வேண்டியிருந் தது. பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்படுவது குறித்துக் கவலை கொள்ளாமல் காந்தீயத்தை கடைவீதியில் விட்டு வைத்துக் கடைகோடி இராஜதந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்கா - ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய சக்திகளின் வேட் டைக்காடாக இலங்கையை மாற்றுவதற்கு 1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முனைந்தபோது இந்தியாவின் எடுப்பார் கைப்பிள்ளையாக ஈழத்தமிழ்த்தேசியம் இருந்தது. எங்கள் பையன்கள் வாயிலாக (இப்படியாக அன்றைய பிரத மர் ராஜீவ் காந்தி பாராளுமன்றத்தில் சொன்னபோது ஈழப் பத்திரிகைகள் எல்லாம் என்னமாய் புளகாங்கிதமடைந்தன) இலங்கை அரசு வழிக்குக் கொண்டுவரப்பட்டபோது ஈழப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் வைக்கப்படவில்லை. இலங்கை - இந்தியா (ராஜீவ் - ஜே.ஆர்) ஒப்பந்தம் வாயிலாக இலங்கை பூரணமாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் 1987இல் கொண்டுவரப்பட்டது. ஆயினும் சிங்கள மக்களிடம் இந்திய ஆதிக்கத்துக்கு எதிரான உணர்வுகள் இருந்தன. இனி இரண் டாவது காண்டம். பிந்திய 20 வருட யுத்தத்தில் புலி மிகமிகப் பிரமாண்டமான சக்தியாக வளர்வதை இந்தியா கண்டுகொள் ளாமல் விட்டது. சிங்களக் கிராமங்களில் புகுந்து தாக்குவது, நகரங்களில் குண்டுவெடிப்பு, தொடர் யுத்தத்தில் சிங்கள இளை ஞர் பல நூற்றுக்கணக்கில் மடிந்து கொண்டிருத்தல், இவை சார்ந்து நீடிக்கும் சிங்களப் பண்பாட்டு சிதைவுகள் எனத் தாங்க முடியாத வேதனையின் உச்சத்தில் சிங்களப் பேரினவாதம் இந்தியாவிடம் தனது இறைமையைத் தாரைவார்த்து இன்று யுத்தத்தில் வெற்றியீட்டியுள்ளது.
இன்று இந்திய எதிர்ப்புப் பேச சிங்கள மக்கள் மத்தியில் சின்னஞ்சிறிய சக்திகூட எதுவுமில்லை. அப்படியொரு பூரண சரணாகதி. ஜனாதிபதி இனப்பிரச்சினைத் தீர்வுக்கு 13வது திருத்தச்சட்டம் என்று எதற்கும் உதவாத ஒரு சரக்கைப்பற்றி பேசியபோது, முன்னர் (1987-1989இல்) தீவிர இந்திய எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திய ஜே.வி.பி. ஒரு சுவரொட்டி இயக் கத்தை செய்துவிட்டு மௌனங்காத்தது. இந்தியாவின் ஆணைக்குப் பணிந்து 13வது திருத்தத்தை அமுல்படுத்தாதே என்ற வீரவசனம் மட்டும் சுவரொட்டியில் இருந்தது. மற்ற எல்லாவற்றிலும் இந்திய ஆணைக்கு இலங்கை கட்டுப்பட்டுக் கிடப்பதைத் தீவிர அரசியல் ஞானம் பெற்ற அவர்கள் காண வில்லையாம் (இப்படிக் கண்டுகொள்ளாமல் இருந்தபடி அற்ப விடயமொன்றை பூதாகாரப்படுத்திப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு வாங்கியிருப்பார்களோ) ஆக, ஈழத்தமிழ்த் தேசியத்தை முறியடித்துக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்களின் இறைமையைத் தாரைவார்த்துவிட வேண்டிய கையறுநிலை.
III
என்ன நடந்துவிட்டது? நாம் சிறிய அடையாளங்களுக்குமான கவன ஈர்ப்பை அக்கறையோடு விவாதித்துக் கொண்டிருக்க, பெருங்கதையாடலுக்கான அரங்கு உலக மேலாதிக்க- பிராந் திய மேலாதிக்க சக்திகளால் புரட்டிப் போடப்பட்டுள்ளது. வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்று இருந்துவிட முடியாது. இருபக்கங்கள் மீதுமான அக்கறை அவசியம்.
எந்தவொரு போக்கிலும் விடயத்திலும் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்றைக் கவனித்துமற்றதைத் தவிர்ப்பின் நாம் காண விரும்பிய பெறுபேறன்றித் தீமையே வந்தமையும். தலித் பிரச்சனையில் பின்நவீனத்துவ நிலைப்பாட்டுடன் கவன யீர்ப்பை மேற்கொண்டபோது சோஷலிஸத்துக்கான பெருங் கதையாடல் வேண்டியதில்லை எனப்பட்டது. தலித்திய வாதத்தை உலகமயமாதல் பிளவுபடுத்தல் தந்திரோபாயப்படி மக்கள் விரோத நிலைப்பாட்டிலேயே கையாண்டுள்ளது. அவ்வாறே இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையும் மேலாதிக்க சக்திகள் உத்தரவின்றி உள்வரக் கையாளப்படும் அற்ப விவகாரம் ஆக்கப்பட்டுள்ளது.
மகத்தான ஒக்ரோபர் 1917 புரட்சி வாயிலாக சோவியத் ருஷ்யா உருவானபோது தேசியப் பிரச்சனை சோஷலிஸத்தின் பகுதி யாக ஆனது, இன்று அவ்வாறில்லை. மேலாதிக்க சக்திகள் விளையாடும் வேட்டைக்காடாக தேசிய இனப்பிரச்சனை மாறியுள்ளது.
இத்தகைய மாற்றச் சூழலில் பின்நவீனத்துவக் கேடுகெட்ட பெருங்கதையாடல் - அடையாள அரசியல் என்பனவல்ல பேசு பொருட்கள். மக்கள் விடுதலையை நாடும் சக்திகள் சமூக மாற்றத்துக்கான வடிவங்களைத் தேடுகின்ற அதேவேளை ஒவ்வொரு பிரிவினரது சுயநிர்ணயத்தைப் பேண ஏற்ற வழி முறைகளைக் கண்டடைவதும் அவசியம். மார்க்சிய உலக நோக்கு வழி - இயங்கியல் பொருள் முதல்வாத அணுகுமுறை யில்-இவை குறித்த தேடலுக்கான அக்கறை வளர்க்கப்படாமல் இன்னமும் அற்ப விவகாரங்களையே பூதாகாரப்படுத்திக் கொண்டிருப்போமாயின், ஆதிக்கச்சக்திகளே ஆதாயங்களைப் பெருக்கிக் கொண்டு போவர்.
இயக்கப்போக்கொன்றில் சரியான இயங்கியல் அணுகுமுறை யைக் கையாளும் போது தீய அம்சத்தையும் நல்ல அம்சமாக மாற்றமுடியும். பின்நவீனத்துவம் பலகேடுகளை விளைத்த போதிலும் சாதிமுறை குறித்த ஆழமான கற்றலுக்கு அதுவே வழிவகுத்துத் தந்தது. இதன் பேறாக நாம் வந்தடைந்துள்ள ஒரு முடிவு மிகமிக அடிப் படைப் பண்பு வேறுபாடு சார்ந்த ஒன்று. இதனைக் கவனத்திற் கொள்ளாமல் நமது சமூக மாற்றத்துக்கான மார்க்கத்தையோ வழிமுறைக்கான தந்திரோபாயங்கயையோ கண்டடைய முடி யாது. ஆம், நமது சமூக அடிப்படை வர்க்கப் பிளவடைந்த ஏற்றத்தாழ்வைப் பெற்றில்லை, இனக்குழு மேலாதிக்க ஒடுக்கு முறையுடைய சாதியச் சமூகம் எனும் அடிப்படைப் பண்பு வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
ஐரோப்பிய வர்க்கமுறையை அப்படியே பிரயோகிக்க முனைந் தது தோல்வியடைந்ததைப் போன்றே, சாதிச்சமூகம் என்பதற் காக தலித்தியவாதத்தைப் பிரயோகித்தமையும் தோல்வியையே தழுவியுள்ளது. மார்க்ஸ், லெனின் ஆகியோரது எழுத்துக்க ளுள் முடங்கிவிடாமல் அவற்றினூடே மார்க்சிய-லெனினியச் சிந்தனை முறையைக் கற்றுக்கொண்டு நமது சாதியச் சமூகத் துக்கு அமைவாகப் பிரயோகிப்பது அவசியம். அந்தவகையி லும், சாதியத்தகர்ப்பின் பொருட்டும், உழைக்கும் மக்களாகவே மிகப்பெரும்பான்மையினரான தலித் மக்கள் உள்ளமையாலும் மார்க்சிய அடிப்படையில் தலித் பிரச்சனை அணுகப்படுவது அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாகியுள்ளது. அதேவேளை பல்வேறு சாதிப்பிரிவினரும் பாட்டாளிவர்க்கமாக உள்ள கார ணத்தாலும், ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சமத்துவ சமூகம் படைப் பதும் சாதிபேதங்களை ஒழிப்பதும் அதனூடாக மட்டுமே சாத்தியப்படும் என்பதாலும் மார்க்சிய-லெனினியக் கற்றலை புதிய நோக்கில் ஆழப்படுத்துவது அவசியமாகும்.
முதலாளித்துவம் அனைத்து சாதிகளுக்குள்ளும் பல்வேறு வர்க்கப்பிரிவைச் சாத்தியப்படுத்திவிட்டது என்பது முழு உண்மையில்லை என்பது இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் டாலர் பில்லியனர்களில் 5 அல்லது 6 பேரைத் தவிர ஏனைய அனைவரும் பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதியி னர். அதாவது மக்கட்தொகையில் 10%க்கும் குறைவாகவுள்ள பார்ப்பன, பனியா, தாக்கூர் இந்திய ஆளும் வர்க்கத்தின் 90%. மக்கட்தொகையில் 90% ஆன தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மதச்சிறுபான்மையினரும் 10%க்கும் குறைவு எனக் கூறும் ப.கு.ராஜன், தொடர்ந்து இப்படிச் சொல்வார்: இந்தப் புள்ளி விவரங்களைத் தொடரலாம், காவல்துறை, நீதி மன்றங்கள், ஊடகங்கள், உயர்கல்வி ஆசிரியர்கள் என எல்லா வற்றிலும் இதுதான் நிலை. இத்தோடு மதம் மற்றும் மதத் தலைமை என்பதையும் கணக்கில் கொண்டால் சித்திரம் முழு மையடையும். அது என்ன? இந்தியாவின் ஆளும் வர்க்கமும் ஆதிக்கசாதியும் ஒன்றுதான், வேறுவேறு அல்ல. ஒரே கட்ட மைப்பின் இருவேறு பக்கவாட்டுத் தோற்றம்தான். ஒன்றுக்கெதிரான போராட்டம்தான். உயர்சாதிகளைச் சேர்ந்த வர்களும் இந்தப் போராட்டத்தில் வருகிறார்களே, அவர் களுக்கு என்ன பதில்? அவர்கள் புரிந்துகொள்வார்கள். பாட் டாளி வர்க்க விடுதலைக்கு மார்க்சும் ஏங்கெல்சும் லெனினும் போராடியது அவர்கள்பால் கொண்ட அனுதாபத்தால் அல்ல. பாட்டாளி வர்க்க விடுதலையில்தான் சகல பிறவர்க்கங்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதால்தான். இதனைப் புரிந்துகொண்டு நம்மோடு இருந்து பணிபுரியும் பிறவர்க்கத்து தோழர்கள் இல்லையா? அதேபோல எல்லா சாதிகளையும் சேர்ந்த எல்லா மக்களின் விடுதலையும் சாதி அடுக்கின் அடி மட்டத்தில் உள்ள தலித்களின் விடுதலையில்தான் உள்ளது என்பதை அவர்களில் பெரும்பகுதி புரிந்துகொள்வார்கள். பிற் படுத்தப்பட்ட மக்கள் பகுதியிலும் பெரும்பகுதி புரிந்து கொள் வார்கள். புரியச் செய்யவேண்டியது பெரும்பணிதான். ஆனால் ஒரு சிறுபகுதி புரிந்து கொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களை உத்தேசித்து சொல்ல வேண்டி யதைச் சொல்லாது மென்று விழுங்கினால் பெரும்பகுதி தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுவது இயலாது (ப.கு.ராஜன், சாதியும் வர்க்கமும், புதுவிசை இதழ் 21, ஜூலை- செப்டம்பர் 2008. பக்.43 மற்றும் 49).
அந்தக் கட்டுரை முழுமையும் மிகுந்த முக்கியத்துவம் மிக்க விடயங்களைப் பேசுகிற வகையில் ஆழ்ந்த கற்றலுக்குரியது. ஆயினும் இங்கு காட்டப்பட்டுள்ள பகுதியில் வெளிப்படுமாறு உள்ள ஒரு விடயம் குறித்து எச்சரிக்கை உணர்வு அவசியமா கும். தலித் + பிற்படுத்தப்பட்ட மக்கள் = பாட்டாளி வர்க்கம் என்ற தொனி இங்கு மேலோங்குவதைக் காணலாம். இந்த மக்கள் பிரிவினரே பாட்டாளிவர்க்கத்தை மிகமிகப் பெரும் பான்மையினராய்க் கொண்டுள்ளனர் என்றபோதிலும், சாதித் தளம் சார்ந்ததாகப்புரட்சிகரச் சக்தியை இனங்காண்பது சரி யல்ல. மார்க்சியவடிவிலான பாட்டாளிவர்க்கச் சிந்தனை முறை என்பது மனிதகுலம் ஏற்றத்தாழ்வைத் தகர்த்தெறியக் கண்ட றிந்த உன்னதமான சிந்தனை முறையாகும். இன்று உலகமய மாதல் பாட்டாளிவர்க்கத்தை இழப்பதற்கு எதுவுமற்ற வர்க்கம் எனும் நிலையிலிருந்து சிதைத்துப் போர்க்குணத்தை மழுங் கடிக்க சதிகள் பல செய்திருக்கலாம். உழைக்கும் மக்களும் சமூக மாற்றத்தை விரும்புவோரும் பாட்டாளிவர்க்கச் சிந்தனை முறையை வரிப்பதனால் மட்டுமே சமத்துவ சமூகத்தை வென் றெடுக்க முடியும் என்பது கவனிப்புக்குரியது. மாறாக சாதித் தளத்தை புரட்சிக்குரியதாக கருதும்போது, சமூக மாற்றத்தை எட்ட முடியாத தடை அங்கே இருப்பதைக் காணலாம். வெற்றி பெறும் சாதி தனது நோக்கிலான மாற்றத்தை எட்ட முனையும் பட்சத்தில் பழிவாங்கல்களுக்கான வாய்ப்பும் தமது நலன் களைக் பெருக்க முனையும் என்பதும் நிராகரிக்க முடியாதது. பாட்டாளிவர்க்க நிலைப்பாடு என்பது பாட்டாளிவர்க்கம் எந்தச் சொத்தும் அற்றது என்கிற வகையில் வர்க்க ஒழிப்பில் மட்டுமே தனது விமோசனத்தை எட்டக்கூடிய வாழ்முறை உடையது என்ற வகையிலே புரட்சிகரச் சக்தியாய்க் கணிக்கப் பட்டது. மாற்றத்தை விரும்பும் வாழ்முறையுடைய தலித் - பிற்படுத்தப்பட்ட சாதியினர் தமது சாதியுணர்வையும் களைந் தெறியும் பண்பாட்டுப்புரட்சியை முதலில் தமக்குள் நிகழ்த்தி யாக வேண்டும். எமக்கான சமூக மாற்ற வடிவமே சாதியம் காரணமாய் பண்பாட்டுப் புரட்சிதான் என்பதும் கவனிப்புக்குரி யது. அனைத்துச் சாதியினரதும் சாதியபிமானங்களை விட் டொழிப்பதற்கான பண்பாட்டுப்புரட்சி வடிவம் கண்டடையப் படவேண்டும்.
IV
இனக்குழு வாழ்முறை தகர்வுறாமலே சுரண்டல் அமைப்புக் குரிய வகையில் சாதிகளாக்கப்பட்டுள்ளது என்கிற வகையில் நமது சிந்தனைகள் - வழக்காறுகள் - பண்பாட்டுக் கோலங்க ளில் இனக்குழுப் பண்புகள் விரவிக் காணப்படுகின்றன. இதன் பேறாக புதிய வர்க்க உறவு சார்ந்த சமூக மாற்றத்தை எட்டு வதற்கு முன்தேவையாக பண்பாட்டுப்புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. கிரேக்க - ரோம் அடிமைப்புரட்சி, பிரான்சிய முதலாளித்துவப் புரட்சிபோல இங்கு ஏற்படவில்லை என்பதால் சமூக மாற்றங்களே இங்கு ஏற்படவில்லை என்பது பொரு ளல்ல. பௌத்தத்தினூடாக நிகழ்ந்தேறிய பண்பாட்டுப் புரட்சி யின் பேறான வணிக எழுச்சி குறித்து எம்.என்.ராய் பேசியுள் ளார். பக்தி பேரியக்கம் நிலவுடமை அதிகாரத்துக்கு வழிகோலி யதை கைலாசபதி காட்டியுள்ளார். சுதந்திரப்போராட்டத்தில் காந்தி அரசியல் அதனிலும் அறம் ஓங்கும் வகையில் ஆன் மீகப் புரட்சியை இணைத்தது குறித்துப் பலரும் பேசியுள்ளனர்.
ஆக, நமது சமத்துவ சமூகத்தை வெற்றிகொள்ளும் புரட்சியின் வடிவத்தில் பண்பாட்டு இயக்க வேலைமுறையொன்றை வகுப் பது இயங்காற்றல்மிக்க சக்திகளது தேடலுக்குரியதாகும். ஏற்கனவே சமூக மாற்றத்தில் நமக்கான பாதை பண்பாட்டுப் புரட்சி சார்ந்தது என்பது குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது, தவிர நடைமுறைப் பிரயோகம் வாயிலாக கண்டறியும்போது மட்டுமே எதுவும் முழுமைபெற முடியும். சும்மா பேசிப் பேசிப் பயனேதும் இல்லை. செய்தாக வேண்டும், இல்லையெனில் செத்தொழிந்து போவோம்.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (திருக்குறள் - 466)
பின்குறிப்பு:
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கிறபோது அடிப்படையான சில விடயங்கள் போதியளவுக்கு விவாதிக்கப்படவில்லை என்ற குறைபாடு எழுவதற்கு இடமுண்டு. இன்றைய சூழலில் சுயநிர்ணயத்தை எவ்வாறு வரையறை செய்வது? இலங்கையில் முப்பது வருடங்களாக ஆயுதமேந்திப் போராடிய ஈழத்தமி ழினத் தேசியத்தின் தீர்வுடன் முஸ்லிம் - மலையகத் தமிழ் மக்களது தீர்வுக்கான வடிவம் எது, எவ்வாறு அதனை வென்றெடுப்பது? சாதித் தேசியம் தனது சுயநிர்ணயத்தை எவ் வகையில் வடிவப்படுத்தவும் வென்றெடுக்கவும் இயலும்? பண் பாட்டுப் புரட்சிக்கான வேலைத்திட்டம் எத்தகையது?
இவை விவாதிக்கப்படவேண்டியன எனும் அருட்டுணர்வை ஏற்படுத்த முடிந்திருந்தாலே இக்கட்டுரை தனது பணியைப் பெரும்பகுதி நிறைவு செய்துள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நீட்டி முழக்கவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன், இத்தகைய ஒரு களத்திலேயே எல்லாத் தீர்வுகளையும் கண்ட டைந்துவிட முடியாது என்ற எல்லைப்பாட்டையும் புரிந்து கொண்டதால் இவ்வகையாக அமைந்துள்ளது கட்டுரை. இயங் கும் பலதரப்பட்ட சக்திகளும், தலைமைப்பாத்திரத்தை வழங்க வேண்டிய பாட்டாளிவர்க்கக் கட்சிகளும் பரந்த மனப்பாங்கு டன் கூட்டுவிவாதங்களை நடாத்தி இவற்றை வடிவப்படுத்த வேண்டும்.
தமிழீழ மக்கள் தமக்கான நேச சக்திகளை தமிழகத்திலும் கொஸோவோவிலும் தேடுவதற்கு முன் சிங்கள, முஸ்லிம் உழைக்கும் மக்களிடையே தேட முயலவேண்டும் ஒடுக்கப் படும் விடுதலைக்கான குறுக்கு வழி ஏதும் இல்லை. பெரிய அண்ணன்களை நாடுவது அடிமைத்தனத்துக்கு கொண்டு சென்றுவிடும்என்பார் எஸ்.வி.ராஜதுரை, (எஸ்.வி.ராஜதுரை, ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும். எதுவரை? செப்-அக்டோபர் 2009 பக்.40) பெரிய அண்ணன்களுக்கு உதவி யாக இருந்து ஐந்தாம் படை நிலைப்பாட்டிலே காட்டிக்கொடுப்பு வேலையைச் செய்வதனூடாக வெற்றி பெறலாம் எனும் நினைப்போடு ஈழத் தமிழ்த்தேசியம் ஆரம்பம் முதல் முழுத் தோல்வியைக் கண்டவரையில் இருந்தமையைக் காட்டி யிருந்தோம், இன்றும் அதே வாய்ப்புகளை நாடியபடிதான்.
இந்த இருப்பினை சிங்கள மக்கள் புரிந்துகொண்டு தீர்வின் அவசியத்தை வலியுறுத்துவதாயும் இல்லை, அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டவல்ல சக்திகள் சிங்களப் பேரின வாதத்தால் அழித்தொழிக்கப்பட்டுவிட்டார்கள். அந்நியர்களா ய் நாட்டினுள் வந்து குடியேறி, இன்றும் அந்நிய ஊடுருவல் களுக்கு வழிகோலுபவர்கள் என்று சிறு தேசிய இனங்களைச் சிங்கள மக்கள் பார்க்கும் வகையில் ஊடகங்கள் செயற்படுகின் றன. உண்மையில் எதிர்நோக்கும் தேசிய இனப் பிரச்சனை அவர்களுக்குப் போதியளவு புரிய வைக்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை வடிவப்படுத்தப்பட்ட தீர்வுத் திட்டங்களை விட அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் விரிந்த தளத்திலான விவாதங்கள் ஊடாகவே சரியான தீர்வுத் திட்டத்தை கண்டடையவும் செயற் படுத்தவும் முடியும்.
இலங்கையில் முஸ்லிம் மக்களும் மலையகத் தமிழர்களும் சிங்கள-இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் சிதறி வாழ்கின் றனர். அவ்வகையில் அவர்களுக்கான சுய நிர்ணயம் உள் - சுயாட்சி அமைப்பு முறைவாயிலாக தீர்க்கப்படவேண்டும். இது பற்றிய விவாதங்கள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. ஏற்கப் படும் வகையில் சரியான வரையறை எட்டப்படவில்லை.
பொதுப்பிரச்சனைகள், ஒத்தபண்பாட்டுக் கூறுகள், வரலாற்றுச் செல்நெறி, ஒடுக்குமுறைக்கு உள்ளாதல் எனும் அம்சங்களையு டையவை தேசம் என வரையறுக்கப்பட்டு, அவை தமக்கான சுயநிர்ணயத்தை தாமே வரையறுப்பதற்கு உரிமையுடையவன என்பது இன்று சர்வதேச அளவில் ஏற்கப்படுகின்றது. அந்த வகையில் ஒரே நிலத்தொடர்பு இல்லாதபோதிலும் உள் - சுயாட்சி வடிவில் தீர்வை அவர்கள் பெற இயலுமாகியுள்ளது. பலநாடுகளில் செயற்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்குவத னையும் காண முடிகிறது.
சாதித்தேசம் என்பதும் இலங்கையின் முஸ்லிம் - மலையகத் தமிழர் அளவுக்கு இல்லையெனினும், தமக்கான சுயநிர்ண யத்தை வரையறுக்க அவசியமுள்ள மக்கள் பிரிவினர் என்பதை இனியும் மறுக்க முடியாது. அம்பேத்கர் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கைக்காகப் போராடியது முதல் இன்று பல்வேறு சக்திகள் வரையும் சாதித்தேசத்தின் சுயநிர்ணயத்தைக் கண்டடையும் முயற்சிகளையே மேற்கொண்டுவருகின்றனர். இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஆளுமையுடன் புத்துலகத்துக்கு தலைமையேற்கும் வீறுடன் போராடியதால் சாதிசார்ந்த தனியான தீர்வுத் திட்டம் எதுவும் அன்று முன் வைக்கப்பட்டதில்லை. அந்த மக்களது தலைமைப் பண்பு குறித்த புரிதல் இல்லாமல் உயர்சாதிச் சதியென அதனைக் கொச்சைப்படுத்துவது புலம்பெயர் தலித்திய சிந்தனையாளர் களது அறியாமைதான். இன்று அவர்கள் விவாதத்துக்கு உள் ளாக்கும் அனைத்து விடயங்களையும் அதற்காக நிராகரித்து விட முடியாது. இன்று யதார்த்தமாகியுள்ள மேலாதிக்க சக்தி களின் ஊடுருவல்களுக்குக் காட்டிக்கொடுப்பதாக அல்லாமல், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் தீர்வுக்கான தேடல் எனும் அடிப்படையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம். விவாதக் களங்களைக் கண்டடைவது, தீர்வு முயற்சிக்கு ஏற்ற வகையில் மக்களை வீதிக்கு கொண்டுவருவது, தோல்வி களால் முடங்கிய உளச்சிக்கல்களை நிவர்த்திப்பதற்கான வெகு ஜனப் பங்கேற்பு களங்களை ஏற்படுத்துவது என்பவை வாயி லாக பண்பாட்டு இயக்கக் களங்கள் சாத்தியமாகும். பண் பாட்டுப் புரட்சி வடிவம் அதன் செல்நெறி மூலமாகவே கண்ட டையப்படும். இன்னமும் இவைகுறித்து உரையாட நிறையவே உண்டு, நீங்களும் பேசுங்கள்.
புதுவிசை இதழ் 28
No comments:
Post a Comment