- சுனந்த தேசப்பிரிய-
யுத்தத்தின் பின்னர் ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இலங்கையின் வடக்கின் யுத்த களத்தின் தற்போதைய நிலைகள் என்ன என்பது குறித்து தேசிய ரீதியாக மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாகவும் உன்னிப்பான அவதானத்திற்கு உள்ளாகியிருப்பதை கடந்த மாதத்தில் காண முடிந்தது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் அடிப்படை நோக்கமும் யுத்தத்தின் பின்னர் இலங்கையின் நிலைமை சம்பந்தமாகவே அமைந்திருந்தது. அண்மையில் சர்வதேச தூதுக்குழுவினர் பலர் இலங்கைக்கு வந்தனர். யுத்தத்தின் பின்னர் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் தொடர்பாக புதுடில்லி முதல் ஐரோப்பா வரை பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும், இலங்கையில் சகல தரப்பினரும் கலந்துகொள்ளும் அவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதுவும் இடம்பெறவில்லை. இப்படியான பேச்சுக்கு மேடையாக அமைய வேண்டிய ஊடகங்களும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
சர்வதேச ரீதியில் பகிரங்கமாகவும், இலங்கையில் ஓரளவு ஆங்கில மொழி ஊடாக இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எனினும், இவை அதிகார ஊடகங்களுக்குள் இடம்பெறவில்லை. இணையத்தள ஊடகங்களிலேயே இந்தக் கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டன. வடக்கின் யுத்த பூமியில் தற்போது காணக்கூடிய சுவிசேசமான அடையாளங்கள் என்ன? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் யுத்தம் புரிந்த இரு தரப்பினராலும் பொதுமக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் என்ன? முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் என்ன? அந்த மக்கள் எவ்வாறு தற்போது வாழ்ந்து வருகின்றனர்? அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்ன? அமைதி மற்றும் சகவாழ்வை ஏற்படுத்த இலங்கை மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை என்ன? போன்ற விடயங்கள் இந்தக் கலந்துரையாடல்களில் முக்கியத்துவம் பெற்றன. கவலைக்குரிய விடயம் என்னவெனில், இலங்கை மக்களுக்கு இந்தக் கலந்துரையாடல்கள் முற்றாக மறைக்கப்பட்டதாகும்.
உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொண்டால், ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த ஐ.நா.வின் விசேட பிரதிநிதிகள் இலங்கையில் பாரதூரமான மனித உரிமைகள் ஏற்பட்டுள்ளதாக கூறினர். அரசாங்கத்தின் சார்பில் பதிலளித்த சட்டமா அதிபர் அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார். இந்த நிராகரிப்பு கதைகள் அனைத்தும் இலங்கை மக்களுக்கு சிங்கள மொழியில் அறிந்துகொள்ள முடிந்தது.
தற்போதைய சட்டமா அதிபருக்கு முன்னர் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் சட்டமா அதிபர் தற்போது யுத்தத்திற்கு அடிப்படையாக அமைந்த விடயங்களை ஆராயும் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் அப்போது மனித உரிமை ஆணைக்குழுவின் முன் இலங்கையில் எவ்வித மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை எனவும் அதற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டியதில்லை எனவும் கூறியிருந்தார். மனித உரிமைகள் குற்றச்சாட்டுக்களிலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் தொழில் ரீதியான அதிகாரி ஒருவரின் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு மூலம் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான உண்மை வெளிவரும் என்பதை நம்பமுடியாது என்ற கேள்வி மனித உரிமை ஆணைக்குழுவில் ஏற்பட்டது.
யுத்தம் முடிவடைந்து ஒருவருடத்தின் முன்னர் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத் தொடரில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மாத்திரமல்லாது சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கைகளையும், இலங்கை மக்கள் வாசிக்கவோ அதனை கேட்கவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு அறிக்கைகள் அல்லது விமர்சனங்கள் இருக்கின்றது என்பதை அரசாங்கம் அவற்றுக்கெதிராக தெரிவிக்கும் கருத்துக்கள் மூலமே அறிந்துகொள்ள முடிகிறது. இலங்கை ஊடகங்கள் இப்படியான அறிக்கைகளைத் தற்போது வெளியிடுவதில்லை. இது மியன்மார் மற்றும் ஈரான் ஊடகங்கள் கைகொள்ளும் நடைமுறையாகும். அந்த நாடுகளின் மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் அந்நாட்டு அரசாங்கம் அதனை முற்றும் முழுதான பொய்யென அரச ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மூலமே அறிந்துகொள்ள முடியும்.
ஜனநாயக சமூகத்தில் முக்கியமான நபர் நாட்டின் குடிமகனாவார். சமூக ஜனநாயகம் நாட்டு குடிமக்கள் தெளிவுபடுத்தப்பட்டால் மாத்திரமே பாதுகாக்கப்படும். தகவல் அறிந்துகொள்ளும் உரிமை மிகமுக்கியமான உரிமை என மனித உரிமை சாசனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதால் தமது நாட்டின் அரசாங்கம், எதிர்க்கட்சி, இராணுவம், ஆயுத அமைப்புகள் போன்ற எந்த தரப்பினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அல்லது கெட்ட செய்திகளை ஆராய்வதும், அதனை அறிந்துகொள்வதும் மக்களுக்கு இருக்கவேண்டிய உரிமைகளாகும். அதுகுறித்து தெளிவான தீர்மானமொன்றை எடுக்க அந்த மக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே இந்த உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒருநாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் விடயமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டறிந்து அச்சமின்றி அதனை விமர்சிப்பதன் மூலமே அறிந்துகொள்ள முடியும். இதற்கு ஊடகங்கள் தயாரா? அதற்கான அவகாசம் இருக்கின்றதா? என்பதன் அடிப்படையில் இந்த விடயம் தீர்மானிக்கப்படுகிறது. அரசாங்கம் அல்லது ஆயுத அமைப்பொன்றின் தவறான செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தளமொன்றை வழங்க ஊடகங்கள் எந்தளவில் தயாராக இருக்கின்றன என்பதும் முக்கியமாகும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான ஆணையாளர், இலங்கை தொடர்பாக இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம் இலங்கையின் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஒருவருடம் கழிந்துள்ளது. அந்நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பாரதூரமான விடயங்கள் சம்பந்தமாக மனித உரிமைப் பேரவையில் நடைபெற்ற விசேடக் கூட்டத்தொடரில் இலங்கையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீளாய்வு செய்யுமாறு நான் மனித உரிமைப் பேரவையிடம் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கூட்டத்தொடரின் பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளை மீள்குடியேற்றுதல், அவசரகாலச் சட்டவிதிகளில் தளர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிறைவேற்றி நிவாரணங்களை வழங்குதல் போன்ற விடயங்களில் பொதுவான சகவாழ்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அண்மையில், சில விடயங்களை ஆராய்வதற்காக அரசாங்கம் அனுபவங்கள் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழுவை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வாறாயினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், புதிய தகவல்களின் அடிப்படையில், இந்த நோக்கத்தை சிறந்த முறையில் அடைய இலங்கைக்குள்ளும், சர்வதேச ரீதியிலும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக சுயாதீன, சர்வதேச விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்|| என ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத கொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன், யுத்த மோதல்களின் இறுதி மாதங்களில் சுமார் 30,000 மக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்கள் பாரதூரமான வகையில் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்ச சர்வதேச விசாரணையொன்றை அவசியமெனத் தெரிவித்தார். இவ்வாறான விசாரணை அத்தியாவசியமானது என்பதற்கான புதிய பல தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஊடக சுதந்திரம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தபோது, இலங்கையில் செயற்படும் மனித உரிமை அமைப்பு, மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள், சட்டவிரோதமாக்கப்படும் கவலைக்குரிய நிலைமை அதிகரிகத்து வருவதைக் காணமுடிவதாகக் கூறினார்.
இரகசிய சிறைவைப்புக்கள் தொடர்பாக மனித உரிமை பேரவை முன்வைத்த அறிக்கை இலங்கை குறித்து இவ்வாறு தெரிவித்தது. ஷஷஇலங்கை தொடர்பான இறுதி கண்காணிப்பில் கடத்தல்கள், இரகசிய சிறைவைப்புகள் போன்றவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பாக கவலை வெளியிடப்பட்டது. கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் மாத்திரமல்லாது சித்திரவதைக்கு உட்படுத்துவது தொடர்பாக ஆயுதப் படையினருக்கெதிராக தாக்கல் செய்யப்படும் வழக்குகள் முழுமைபெறுவதில்லை எனவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.||
மனித உரிமை ஆணைக்குழுவில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், சுயாதீனமாக பிரச்சினைகளை கண்டறியும் விசாரணை மூலம் மாத்திரமே தேசிய ஐக்கியத்திற்கான வழி ஏற்படும் என்பது ஒன்றியத்தின் நம்பிக்கையாகும். இதன்முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அமைக்கவுள்ள நிபுணர்கள் குழு நியமனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனக்கும் தெரிந்த வகையில் இந்த அறிக்கைகள் அனைத்தும் திரிபுபடுத்தப்படாத வகையில் இலங்கை ஊடகங்களில் வெளியிடப்படவில்லை. யுத்தத்தின் முடிவில் இலங்கை ஊடகங்கள் எதிர்நோக்கும் நிலைமைகளை அறிந்துகொள்ள இந்த விடயம் மோதுமானதாகும். இலங்கை சம்பந்தமாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிகள் குழு, யுத்தத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நீண்ட அறிக்கைகளை வெளியிட்டன. இந்த அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது. இந்த அறிக்கைகளில் என்ன உள்ளக்கப்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் அறியவில்லை. அரசாங்கத்தின் விமர்சனம் மூலமே அந்த அறிக்கைகள் குறித்து மக்கள் தீர்மானிப்பதற்கான ஒரே வாய்ப்பாக அமைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு பக்கசார்பாக ஆரம்பிக்கப்பட்ட போதும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சில முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட ஊடக வலையமைப்பொன்று அண்மையில் மூடப்பட்டதுடன் அதன் தலைவர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். மற்றுமொரு ஆங்கிலப் பத்திரிகையை மூடப்போவதாக அசராங்கத்தின் அதிகாரமிக்க ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். லங்காநியூஸ்வெப் இணையத்தளம் இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது. லங்காஈநியூஸ் அமைந்துள்ள கட்டிடத்திலிருந்து அவர்களை வெளியேறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. சிரச ஊடக வலையமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அதன் செய்திப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றிய சுசில் கிந்தல்பிட்டிய பிணை மறுக்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டெய்லிமிரர் ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 6ம் திகதி மஹரகமயில் வைத்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டார். லங்கா பத்திரிகையின் பெண் ஊடகவியலாளர் மே மாதம் 30ம் திகதி தாக்கப்பட்டார். இந்த ஊடகவியலாளர்கள் தாக்கிய எவருக்கு எதிராகவும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையில் ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட வன்னியில் சுதந்திரமான ஆய்வொன்றில் ஈடுபட இதுவரை ஊடகவியலாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. யுத்தம் முடிந்து ஒருவருடம் கடந்த பின்னரும் நாம் ஒரே இடத்திலேயே இன்னும் இருக்கிறோம்.
No comments:
Post a Comment