-பொன்னிலா-
(இகட்டுரை எழுதி முடிக்கப்பட்ட பின் மேற்குவங்கத்தின் மிட்னாபூரில் இருந்தும் ஜார்கண்டில் கிகுந்தி மாவட்ட காடுகளில் இருந்தும் வருகிற செய்திகள் இந்தியா தன் சொந்த்க் குடிகள் மீதான் போரை துவங்கி விட்டதை முன்னறிவிக்கின்றன. வன்னி மக்கள் மீது வீசக் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை இப்போது தன் சொந்தக் குடிகள் மீதே பயன்படுத்தத் துவங்கியிருகிறது இந்தியா. இனி வரும் மாதங்களில் பெரும் ரத்தக்களரியை நடத்தி முடிப்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள் அவர்கள்)
சிதம்பரம் வாயில் தவழும் சைவத் தமிழைக் கேட்கக் கேட்க இனிக்கும். பிசகில்லாத மொழி நடையில் தூய தமிழாய் வந்து விழுகிற வார்த்தைகளும் அவர் தும்பைப் பூ நிறத்தில் உடுத்தியிருக்கும் கதர்ச் சட்டையின் வெண்மை போனறதுதான்.ஆனால் ஈழப் படுகொலைகளில் அவர் பேசிய வார்த்தைகளின் எச்சில் ஈரம் காய்வதற்குள் நடத்தி முடித்த கொலை பாதகம் நினைவிலிருந்து அகல்வதற்குள், காஷ்மீரிலும் மத்திய இந்தியாவிலும் ரத்த தாண்டவத்தைத் துவங்கும் வேட்டையை துவங்கி விட்டார்கள். ஒரு பக்கம் போரையும் இன்னொரு பக்கம் வெள்ளை முகத்தையும் காட்டும் இந்த மனிதர். இப்போது பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தப் போவதாகப் பேசுகிறார். அச்சமாக இருக்கிறது.அவர்கள் எப்போதெல்லாம் முன்னேற்ற, என்ற சொல்லை பிரயோகிக்கிறார்களோ அப்போதெல்லாம் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படும் அனுபவத்தை நாம் காண்கிற நிலையில் மத்திய இந்தியாவின் லால்கர் முதல் சர்ஜாகர் வரை பழங்குடிகளை அமைதியான முறையில் கொன்றொழித்து விடுவார்களோ என்று நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.மாவோயிஸ்டுகளின் சமாதான முன்னெடுப்புகளை இவர்கள் நடத்திய இரண்டு கொலைகள் சீர்குலைத்திருக்கிறது. இந்த மனிதரின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டினார் சுவாமியும் சமூக சேவகருமான அக்னிவேஷ். இந்திய புரட்சிகர இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சிக்குரி ராஜ்குமாரையும் பத்திரிகையாளர் ஹேமச் சந்திர பாண்டேயையும் போலி என்கவுண்டரில் கொன்றதன் மூலம் தண்டகாரண்யா போரில் உறுதியாக இருக்கிறோம் என்பதை இந்தியா மீண்டும் ஒரு முறை நீருபித்திருக்கிறது.
சுவாமி அக்னிவேஷின் வாக்குமூலம்.
…………………………………………………………………………
சுவாமி அக்னிவேஷ் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் கேட்டுக் கொண்டதன் பேரில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய அரசுக்குமிடையில் நல்லெண்ணத் தூதராகச் செயல்பட்டவர். சிக்குரி ராஜ்குமாரும், ஹேமச்சந்திர பாண்டேயும் கொல்லப்பட்ட பின்னர், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான அவரின் நம்பிக்கைகள் பெருமளவு குலைந்து விட்டது. அவர் சிதம்பரத்தின் வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். சுவாமியின் நீண்ட நேர்காணலை zee news.com வெளியிட்டுள்ளது. தோழர்கள் கொல்லப்பட்டது, அமைதி முயர்ச்சி தொடர்பாக அவரது நேர்காணலின் சுருக்கம்.
சிக்குரி ராஜ்குமாரும், ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டேவும் கொல்லப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?
இதில் என்னவிதமான கருத்தை நான் சொல்லி விட முடியும். மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்குமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைக்கான மீடியேட்டராக நான் இருந்தேன். அமைதி முயர்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்குமாரையும் பாண்டேயையும், கொன்று விட்டார்கள். மக்களும் சரி மாவோயிஸ்டுகளும் சரி இந்த இருவரும் ஆந்திர போலீசால் கொல்லப்பட்டதாகத்தான் சொல்கிறார்கள். இக்கொலைகள் போலி என்கவுண்டர் என்று மக்கள் திடமாக நம்புகிறார்கள். நானும் இதை கொலை என்றே நினைக்கிறேன். இது தொடர்பாக நான் சமீபத்தில் ப. சிதம்பரத்தைச் சந்தித்தேன். ஏன் இப்படிச் செய்து விட்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் ”எனக்கு எதுவுமே தெரியாது. நீங்கள் ஆந்திர அரசைப் போய் கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு எதுவுமே தெரியாது. என்றார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதல் நடவடிக்கையாகவும் முன்னணி நடவடிக்கையாகவும் உள்ள நகசல் ஒழிப்புப் போர் பற்றி கவனம் கொள்ளும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் அந்த பதில் என்னை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது.
சமாதானம் தொடர்பாக என்ன மாதிரியான உரையாடல் நடந்தது. மாவோயிஸ்டுகள் அமைதி முயர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?
இந்த வருடம் (2010) மே&11&ஆம் தியதி சிதம்பரம் ஒரு கடிதம் கொடுத்தார். அதை நான் மாவோயிஸ்டுகளுக்குக் கொடுத்தேன். மே மாதம் 31&ஆம் தியதி மாவோயிஸ்டுகளிடமிருந்து பதில் கடிதம் வந்தது. அக்கடிதத்தில் நாங்களும் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கொள்கிறோம். அதற்கு வசதியாக எங்கள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தில் நீடிக்க விரும்புகிறோம் என்று மாவோயிஸ்டுகள் கொடுத்தனுப்பிய இரண்டரை பக்க கடிதம் மிகுந்த நம்பிக்கையளிக்கும் படி இருந்தது. நான் அக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சிதம்பரத்தைப் பார்க்கச் சென்றேன். கடிதத்தைப் பார்த்து விட்டு இதில் பேச்சுவார்த்தைக்கான தேதியோ யுத்த நிறுத்தத்திற்கான தேதியோ குறிப்பிடப்பட வில்லையே, நான் உயரதிகாரிகளுடன் பேச தேதி இருந்தால்தான் வசதியாக இருக்கும் என்றார். அவரே மூன்று தியதிகளைக் குறித்துக் கொடுக்க தையும் நான் மாவோயிஸ்டுகளிடம் தெரிவித்தேன். அது தொடர்பாக ஆலோசித்து விட்டுச் சொல்வதாக அவர்கள் சொல்ல அதற்குள்தான் இருவரைக் கொன்று சூழலை மோசமாக்கி விட்டார்கள்.
ஜனநாயகத்தில் பங்கேற்போம் என்று மாவோயிஸ்டுகள் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு வர சம்மதித்து விட்டார்களா?
தேர்தல் அரசியலுக்கு வருவதாக அவர்கள் சொல்லவில்லை. அவர்களின் கஷ்டங்களையும், மக்களின் கஷ்டங்களையும் சமாதானமான வழியில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.
அவர்கள் இராணுவத்தினரையும் மக்களையும் கொன்றிருக்கிறார்களே?
அவர்கள் கடைசியாக எழுதியிருக்கும் கடிதத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். யாரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்படவில்லை. எங்களைத் தேடி வந்து எங்களுடைய பகுதிகளுக்குள் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் போது மட்டுமே நாங்கள் பாதுகாப்பிற்காக சுடுகிறோம். ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்றும் அந்த மக்களுக்காக நாங்கள் வருந்துகிறோம் அவர்களுக்கு முறையான நட்ட ஈட்டைக் கொடுங்கள் என்கிறார்கள். மேலும் சட்டீஸ்கர் தாக்குதலில் கொல்லபப்ட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்கள் தொடர்பாக வருத்தம் தெரிவித்து தோழர் உசந்தி மத்திய அரசுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். என்னைப் பொறுத்தவரையில் வன்முறையை யார் செய்தாலும் நான் ஆதரிக்க மாட்டேன். துப்பாக்கி முனையில் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் மனப்பூர்வமாகவே இவைகளைப் பேசுகிறார்கள். நல்லெண்ண நடவடிக்கையாத்தான் இவைகளைப் பார்க்க வேண்டும்.
மாவோயிஸ்டுகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
பழங்குடி மக்களின் நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்பாக்கிறார்கள்.
அரசு நிஜமாகவே பிரச்சனையைத் தீர்க்குமா? அல்லது நாடகம் ஆடுகிறதா?
நீங்கள் சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள். எனக்கே அந்த சந்தேகம் இருக்கிறது. ராஜ்குமார் கொலை தொடர்பாக சிதம்பரத்திடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலும் சரி சமாதானம் ஒன்றை உருவாக்கும் முயர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதே ராஜ்குமார், பாண்டேவைக் கொன்றதும் சரி நான் குழம்பிப் போயிருக்கிறேன்.
மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா?
ஒரு பகுதியில் முன்னேற்றத்தைக் கொண்டு வர அப்பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி விட்டுதான் அப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்றில்லை. அப்படி மக்களை வெளியேற்றி வளர்ச்சியைக் கொண்டு வரவும் முடியாது. மாறாக மக்களின் வளர்ச்சிதான் அந்தப் பகுதியின் வளர்ச்சி. மக்களின் முன்னேற்றம்தான் அந்தப் பகுதியின் முன்னேற்றம். அவர்களின் பூர்வீக நிலங்களின் உரிமை அவர்களுக்கு வேண்டுமென்று நினைக்கிறார்கள் இதில் என்ன தவறு? அவர்களின் நிலங்களை அபகரித்து மக்களை அப்புறப்படுத்தி விட்டு எப்படி வளர்ச்சியைக் கொண்டு வரமுடியும் அந்த வளர்ச்சி யாருக்கானது? 1948 – ல் -பக்காரா அணையைக் கடிட்னார்கள். அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பல்லாயிரம் ப்ழங்குடி மக்களின் வாரிசுகளும் சந்ததிகளும் இன்னமும் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது போல தெஹ்ரி டேம் , நர்மதா டேம் எல்லாம் வளர்ச்சிக்காக வந்தவைதான் அந்த மக்கள் என்ன ஆனார்கள்? ரூர்கேலா, பெக்காரோ, ஆகியவை எலலாமே வளர்ச்சியின் பெயரால் வந்தவைதான் இவைகள் மக்களை வஞ்சிக்கவில்லையா? ஆகவே மக்களை அப்புறப்படுத்தி விட்டு வளர்ச்சியைக் கொண்டு வருவது என்பதை நான் ஆதரிக்கவில்லை.
மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை வைத்திருக்கும் போது அரசும் ஆயுதம் கொண்டுதானே தாக்கும்?
நீங்கள் ஒரு பொதுப் புத்தியில் இருந்து கொண்டு பொது ஜன மன நிலையில் இருந்து பேசுகிறீர்கள். பாதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலையில் இருந்து இந்தப் பிரச்சனையைப் பார்க்க வேண்டும். மாவோயிஸ்டுகளை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். அது மக்களின் கோபத்தை அதிகரிக்கிறது. அதனால்தான் மக்கள் அதிகளவில் மாவோயிஸ்டுகளோடு சேர்கிறார்கள். மற்றபடி நான் காந்தியின் சீடன் அமைதி வழியில்தான் இதைத் தீர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உடையவன். பிரச்சனையில் வேரைக் கண்டு பிடித்து அமைதி வழியில் அதைச் சரிசெய்ய வேண்டுமே தவிற சுட்டுக் கொல்வதோ வன்முறை செய்வதோ பிரச்சனைக்குத் தீர்வாகாது.
மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு என்ன தீர்வு?
சமாதானம் வரவேண்டும். இருவருமே பேச வேண்டும். இதற்கு மேலும் உயிர்களை நாம் இழக்கக் கூடாது.
ஆஸாத் (ராஜ்குமார்) இறந்த பிறகு மாவோயிஸ்ட்டுகளுடனான உங்கள் பேச்சுவார்த்தை எப்படி இருக்கிறது?
ஆசாத்தின் மரணம் சமாதான முயர்ச்சிகளைக் குழப்பி விட்டது. ஆசாத்தின் கொலையைக் கண்டித்து மாவோயிஸ்டுகள் பந்த் அறிவித்தார்கள். பந்தின் போது மிகக் குறைந்த அளவில்தான் வன்முறை நடந்தது. ஆக அவர்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்கு வர விரும்புவதைத்தான் இது காட்டுகிறது என்கிறார் சுவாமி அக்னிவேஷ்.
அமைதி என்பது புதை குழியா?
…………………………………………………..
மாப்பிளாவில், பூம்கல்லில், தெபக்காவில், தெலுங்கானா கிளர்ச்சியில் என்று நூற்றாண்டுகால போராட்ட வரலாறுகளாலும் ஏராளமான விவசாயிகளின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டங்களாலும் இந்தியச் சமூகங்கள் பெயரளவுக்கேனும் ஒரு சில உரிமைகளைப் பெற்றிருக்கின்றன. பெரிய ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஆளும் வர்க்கங்கள் இழப்புகளை கணக்கில் கொண்டும் தாங்கள் விரும்புகிற சமூக அமைப்பிற்கு பங்கம் வராமல் இருக்கவும் நிலப்பகிர்வு, ஆரம்பக் கல்வி, மானியங்கள், போன்றவற்றை மிக மிகக் குறைந்த அளவில் கொடுத்து வருகின்றன. தனியார் மூலதனங்களின் குவியல், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், இவர்களின் தேவைகளுக்காக வடிவமைக்கப்படும் இன்றைய இந்தியாவில் இந்த உரிமைகளை இந்தியச் சமூகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை நாம் காண்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேஷன் அட்டைகளைக் கூட பறித்து விடும் திட்டங்களை வித விதமான தந்திரங்களோடு அரசுகள் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். முப்போக விளைச்சலையும் இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் நட்ட ஈடு கேட்கிறார்கள். பத்தாயிரம் கேட்டால் ஐந்தாயிரமாவது கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். ஒட்டு மொத்த இந்திய வளமும் ஏகாதிபத்திய கொள்ளை லாப வெறிக்கு பலியாக்கப்படுகிற சூழலில் அதற்கு எதிரான பரந்த மக்கள் திரள் எதிர்ப்பு வடிவமாகவே நாம் மத்திய இந்திய பழங்குடி மக்களின் போராட்டங்களைக் காண்கிறோம்.
சிகப்புத் தீவீரவாதம், அவர்கள் மக்களைக் கொல்கிறவர்கள், அப்பாவிகளை வேட்டையாடுகிறவர்கள் என்று தொடர்ந்து பல மாதங்களாக இந்திய ஊடகங்கள் கூச்சலிட்டு வந்தன. நாம் நமது தலைவர்கள் என்று பார்த்தவர்கள் எல்லாம் மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டும் கடமையை தேசீய வெறியாக கட்டமைக்க முயன்றார்கள்.ஒரு வேளை கார்கில் போருக்கு நிதி திரட்டி தடித்தனமாக இந்திய,பாகிஸ்தான் மக்கள் மீது திணிக்கப்பட்ட போர் ஒன்றிர்கு நிதி திரட்டி மக்களை தேசிய வெறியில் திரட்டியது போல மாவோயிஸ்ட் அழிப்பு என்னும் பெயரில் மக்களை அணி திரட்டும் ஆபத்தும் அதனூடாக ஊடகங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாயை அடைத்து பெரும் ரத்தக் களரியை தேசியப் பெருமிதமாக கட்டி எழுப்பி விடும் ஆபத்தும் இதில் இருக்கிறது. ஆக முழு அளவிலான விமானத் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சுழலை பின்தளத்தில் உருவாக்கிக் கொண்டு சி.ஆர்.பி.எப்ஃ, ஸ்பெஷல் கமாண்டோ போர்ஸ், ஆந்திர சிறப்பு அதிரடிப்படை, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, என பல படைகளையும் ஒருங்கிணைத்து இஸ்ரேலின் மொசாட்டிடம் பயிற்சி பெற வைத்து நவீன போர் முறைக்கு தயார் படுத்தி களமிரக்கி இருக்கிறது இந்திய அரசு.
பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கான சமூக நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டே அடர்ந்த காடுகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படை முகாம்களை விலக்கிக் கொள்வதும் அவர்களை நகரங்களை நோக்கி பின் வாங்கச் செய்வதும் முழு அளவிலான போர் ஒத்திகை போலத் தெரிகிறது. இன்றைய தேதியில் பல பத்தாயிரம் போர் வீரர்களையோ, ஆளணிப்படைகளையோ களமிரக்கத் தேவையில்லை மக்களையும் மரங்களையும் சேர்த்து எரிய விடும் பாஸ்பரஸ் குண்டுகளும், ஆக்சிஜனைக் கொன்று விடும் க்ளஸ்டர் குண்டுகளுமே போதுமானது. ஆளில்லா உளவு விமானத்தின் துணையோடு மிக நவீன முறையிலான கொடூர உத்திகளைக் கொண்ட வன்னிப் போரின் முன்னுதாரணங்களோடு தண்டகாரண்யா மீது பாயக் காத்திருக்கிறது மன்மோகன், சோனியா, சிதம்பரம் படைகள், தண்டகாரண்யாவில் படர்ந்துள்ள சிகப்புத் தீவீரவாதத்தை ஒழித்துக் கட்ட மேக்சிமம் நான்கு ஆண்டுகள்…… என்கிறார்கள். நண்பர்களே நான்காண்டுகள் கூட பேரழிவு ஆயுதங்களுக்குத் தேவைப்படுமா? என்று தெரியவில்லை.
வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு விடுவார்கள் என்றே தோன்றுகிறது.லால்கர் இயக்கத்தை ஒட்டி அதன் பின்னர் உருவாக்கப்பட்ட முகாம்களே இன்னும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் ஒவ்வொரு பழங்குடி கிராமங்களையுமே ஒரு முகாமாக மாற்றி அதை சல்வார்ஜூடும் படைகளிடம் ஒப்படைக்கிறார் சிதம்பரம். புலிகளின் இராணுவத் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட மாவோயிஸ்டுகள் நிரந்தர மோதல் போக்கும் , முழு அளவிலான இராணுவ நடவடிக்கையும் பாரிய பின்னடைவுகளை உருவாக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தோழர் கணபதி ஊடகவியலாளர் ஜேன் மிர்தாலுக்கு வழங்கிய நேர்காணலில் ” பொதுவாக மக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் யருடனும் ஆயுத மோதலோ வன்முறையோ தேவையில்லை. அவர்கள் எதிரிகளைத் தற்காத்துக் கொள்வதற்கும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவுமே போராடுகிறோம். இன்றைய போராட்டத்தோடு ஒப்பிடும் போது குறைவான நிலப்பரப்பில் நடத்திய தெலுங்கானா கிளர்ச்சியில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தோடு இந்தப் போரை சந்திக்கிறோம். அனைத்து சாத்தியங்களையும் கொண்ட இந்த யுத்தத்தில் சிறிய இடை அமைதியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது கொஞ்சம் நீண்டகால அமைதியாக இருந்தாலும் மக்களுக்கு நல்லதுதான்” என்கிறார் தோழர் கணபதி. ஆக வாசல் வரை வந்து ஏவக் காத்திருக்கும் வேட்டைக்காரர்களின் அனுபவங்களை அவர்கள் மக்கள் நலனில் இருந்து யோசிக்கிறார்கள். ஆனால் ஜிண்டாலுக்கும், எஸ்ஸாருக்கும் தேவையான கனிம வளங்கள் புதைந்திருக்கும் நிலங்களைக் காக்க சமாதானமாகவோ, வன்முறை வழியிலோ முயன்றால் அதை எப்படி சிதம்பரம் அனுமதிப்பார். ஆக அமைதியை புதை குழியாக்கும் எல்லா சாத்தியங்களையும் இவர்களே உருவாக்குகிறார்கள். அதன் முன்னுதாரணம்தான் தோழர் சிக்குரி ராஜ்குமார் கொலை.
தோழர் ஆசாத் என்னும் சிக்குரி ராஜ்குமார்.
…………………………………………………………………..
தோழர் ஆசாத் என்றழைக்கப்படுகிற சிக்குரி ராஜேந்திரன் இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தோழர். ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் மிக வசதியான குடும்பத்தில் பிறந்து கல்லூரி நாட்களில் புரட்சிகர இயக்கத்திற்கு வந்தவர். கெமிக்கல் என்ஜினியரிங் முடித்தவர். ஆந்திராவின் மாணவர் இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்த தோழர் ராஜ்குமார் பின்னர் மக்கள் யுத்தக் குழுவில் இணைந்தார். கட்சியின் விசாகப்பட்டின மாவட்ட கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்தியா முழுக்க பல்வேறு முக்கிய கருத்தரங்குகளில் பேசியிருக்கிறார். 1981& ல் சென்னையில் நடந்த தேசியம் குறித்த கருத்தரங்கில் தோழரின் பங்கு குறிப்பிடத் தக்கது. 1982&ல் கட்சியால் கர்நாடகாவிற்கு அனுப்பப் பட்டார். இந்திய புரட்சிகர இயக்கத்திற்காக தன் வாழ்வை அர்பணித்துக் கொண்ட தோழர் ஆசாத் கடின உழைப்பாளி. அறிவை மேன்மையான ஒன்றாகக் கருதாத தோழர் ராஜ்குமார் மக்களிடம் உறையாடுவதையும் மக்களுக்காக வாழ்வதையுமே பெருமையாகக் கருதியவர். ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட்டு இலக்கியம், எழுத்து தொடர்பாக ஆழமான விமர்சனங்களை முன் வைத்தவர். இப்போது அவர் இந்திய அரசுப்படைகளின் ஒரு அங்கமான ஆந்திரப் போலிசால் வீழ்த்தப்பட்டிருக்கிறார். இந்திய புரட்சிகர இயக்கத்தில் 35 ஆண்டுகளாக தன்னை இணைத்து இடைவிடாது மக்கள் பணி செய்த தோழரின் இழப்பு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புரட்சிகர முற்போக்கு சக்திகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் ராஜ்குமார் கொல்லப்பட்டுள்ள நிலையில் தோழர் சீத்தாக்காவும் காணாமல் போயுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
தோழர் சிக்குரி ராஜ்குமாரின் தலைக்கு அரசு 12 லட்சம் விலை நிர்ணயம் செய்திருந்தது. தேடப்படும் பயங்கரவாதியாக அவர் அறிவிக்கப்பட்டிருந்தார். கட்சிப் பணி தொடர்பாக தண்டகாரண்யா நோக்கிச் சென்றவரை நாக்பூர் ரயில் நிலையத்தில் பிடித்து மகாராஷ்டிராவில் உள்ள அடிலாபாத் காட்டிற்குக் கொண்டு சென்று அவரோடு கூடவே கடத்தப்பட்ட பத்திரிகையாளர் ஹேமச்சந்திர பாண்டேயையும் சுட்டுக் கொன்று விட்டு துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. தோழர் ஆசாத்( ராஜ்குமார்) கொல்லப்பட்டது தொடர்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தண்டகாரண்யா பேச்சாளர் தோழர் உசேந்தி பல உண்மைகளை வெளியிட்டுள்ளார். ” நான் ஏற்கனவே ஆசாத்தை ஆந்திரப் போலீசார் குறிவைத்து விட்டதை ஊடகங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஜூன் ஒன்றாம் தியதி ஆசாத் தண்டகாரண்யாவுக்கு வர வேண்டும் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாதம் இங்கே தங்கியிருந்து தோழர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க வேண்டும் என்பது கட்சி அவருக்கு வழங்கிய வேலை. ஹிந்தி மொழியில் ஒலிபரப்பாகும் பி.பி.சி ரேடியோவுக்கு ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும் என்பது தோழர் ராஜ்குமாரின் எண்ணம். ஆனால் இது பி.பி.சி வானொலிக்குத் தெரியாது இந்த திட்டத்தின் படி தோழர் ஆசாத் முப்பதாம் தியதியே நாக்பூர் வந்து விடுகிறார். அவர் வந்து விட்ட செய்தி ஜூன் 30&ஆம் தியதி எனக்குக் கிடைத்தது. மறு நாள் ஜூலை ஒன்றாம் தியதி காலை சாதேவ் என்ற தோழரை நாக்பூரில் இருக்கும் சீதாப்ருதி என்ற இடத்தில் சந்தித்து விட்டு அன்றே காலை 11 மணியில் இருந்து ஒரு மணிக்குள் தண்டகாரண்யா வந்து விடுவேன் என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார் தோழர் ராஜ்குமார். ஆனால் அதுதான் அவரிடம் இருந்து வந்த கடைசிச் செய்தி.
ஜுலை இரண்டாம் தியதி இரண்டு மாவோயிஸ்டுகளைக் கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அடிலாபாத் காட்டில் வைத்து இரண்டு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியும், பிஸ்டலும் கிடந்ததாகவும் கதை சொல்கிறார்கள் அடிலாபாத்தில் எங்கள் கட்சியோ எங்களுக்கான வேலைத்திட்டங்களோ எதுவும் இல்லாத போது தோழர்கள் ஏன் அடிலாபாத்திற்கு செல்ல வேண்டும். முதலில் நாங்கள் அவர் சந்திக்கச் சென்ற தோழர் சாதேவையும் கொன்று விட்டார்கள் என்றுதான் நினைத்தோம். சாதேவ் என்று நம்பியதால்தான் அவர் பெயரை முதலில் சொன்னோம். ஆனால் தோழர் சாதேவ் எங்கள் பகுதிக்கு வந்து விட்டார். தோழர் ராஜ்குமாருடன் சென்ற தோழர் சீத்தாக்க்காவைக் காணவில்லை இப்போது வரை சீத்தாக்கா என்னவானார் என்கிற தகவல்கள் இல்லை.” என்கிறார் தோழர் உசேந்தி. தோழர் சீத்தாக்க குறித்து உசேந்தி சொன்னதாக வெளியாகியுள்ள இத்தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துவதற்குள் தோழர் ராஜ்குமாரை கான்பூரில் பிடித்துச் சென்றதாகச் சொல்கிறார்கள்.
ஊடகவியளார் ஹேமச்சந்திர பாண்டே
……………………………………………………………..
உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முற்போக்கு ஊடகவியளாரான ஹேமச்சந்திர பாண்டேவுக்கு வயது 30. உத்தர்காண்டின் பிட்டோகார் நகரில் பிறந்து நைனிடால் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு முடித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக பதிவும் செய்து வைத்திருந்தவர். கல்லூரி நாட்களில் மாணவர் அமைப்பில் இருந்தாலும் அதன் புரட்சிகர நடைமுறையில் முரண்பட்டு விலகியவர் பின்னர் மாவோயிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக செயல்படுகிறார். மாவோயிஸ்டுகள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர் ஹேமச்சந்திர பாண்டே. ஹைதராபாத்தில் பாண்டேயின் உடல் வைக்கப்பட்டிருந்த போது தோழர் கத்தார், வரவரராவ் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் பெருந்திரளான ஊடகவியலாளர்கள் திரண்டு பாண்டேவுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பவில்லை ஆந்திர மாநில அரசு. நெஹ்துனியா என்ற இந்தி பத்திரிகையின் ஆசிரியர் அலோக் மேத்தாவோ இவர் எங்கள் ஊடகத்தில் எதுவுமே எழுதியதில்லை என்று ஹேமச்சந்திர பாண்டேயின் அடையாளத்தை கைகழுவினார். ஆனால் பாண்டேயின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த ஊடகவியளார்களோ அவர் பத்திரிகைப் பணியில் தங்களுக்குச் செய்த உதவிகளை பட்டியலிட்டனர். இங்குதான் ஹேமச்சந்திர பாண்டேயின் மனைவி பாபிதாவின் மன உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் நினைக்கிறேன் ஹேமச்சந்திர பாண்டே மாவோயிஸ்டுகளோடு தனக்குள்ள தொடர்பை தன் மனைவி பாபிதாவிடம் மறைத்திருக்க வேண்டும்.
அவர் தனது புரட்சிகர செயல்பாடுகளுக்கு தடையாக இருப்பார் என்று ஹேமந்த் நினைத்திருக்கக் கூடும். பாபிதா இப்படிச் சொல்கிறார் ” பாண்டேவுக்கு மாவோயிஸ்டுகள் மீது கரிசனம் இருக்கலாம் ஆனால் அவர் எப்போதும் ஒரு மாவோயிஸ்டாக இருந்ததில்லை. பலர் அவரை மாவோயிஸ்டு என்கிறார்கள். சிலர் அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்கள். பாண்டே ஒரு பத்திரிகையாளர் எங்களுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால் அவர் சுதந்திர ஊடகவியலாளராக இருந்தார். அதற்கான சான்றுகள் என்னிடம் இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தியதி நாக்பூரில் ஒரு பத்திரிகைப் பணிக்காகச் ( Assignmend) செல்கிறேன் என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்” என்கிறார் பாபிதா.
ஆனால் மாவோயிஸ்ட் கட்சியினரோ கட்சியின் வடக்கு மண்டலத்தில் ஹேமச்சந்திர பாண்டேவுக்கு நாங்களே சில வேலைகளைக் கொடுத்திருக்கிறோம். மண்டலப் பொறுப்பாளராகவும் அவரை சமீபத்தில் நியமித்திருந்தோம் என்கிறார்கள்.
ஹேமச்சந்திர பாண்டே கட்சியோடும் மக்களோடும் நெருக்கமாக இருந்திருக்கிறார். ஒரு ஊடகவியளாராக இருந்து முழுப் பொழுதையும் மாத ஊதியக்காரனாக கழிக்காமல் மக்களோடு இணைந்த பத்திரிகையாளராக பணியாற்றியும் வந்திருக்கிறார். இதில் கட்சியோடு கொண்டிருந்த தொடர்புகளை அவர் பாபிதாவிடம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். தனது கணவரின் கொலைக்காக பாபிதா ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியைச் சந்தித்து ஹேமந்தின் சம்பளப்பட்டுவாடா ரசீதுகளைக் காண்பித்து ஹேமச்சந்திர பாண்டே ஒரு ஊடகவியளர் அவரை ஏன் ஆந்திர சிறப்பு அதிரடிப்படைக் கொன்றது என்று விசாரணைக் கோரிக்கை வைக்க அவரோ, ‘ஹேமச்சந்திர பாண்டே கட்சியின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார் இது தொடர்பாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். ரெட்டியோ, சிதம்பரமோ அவர்களுக்கு பாபிதாக்களின் கண்ணீருக்கு என்ன முக்கியத்துவம் கொடுப்பார்கள். பாராளுமன்றத் தாக்குதலில், தாஜ் ஹோட்டல் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளின் கண்ணீருக்கே இந்த செல்வந்தவர்களிடம் ஒரு மதிப்பும் கிடையாது. மும்பை தாஜ் ஹோட்டலில் கொல்லப்பட்ட கோடீஸ்வரர்களின் கண்ணீருக்கு வேண்டு மென்றால் ஆளும் வர்க்கங்களிடம் மதிப்பிருக்கலாம்.
மாவோயிஸ்டுகள் கடத்திக் கொன்ற காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் இந்துவாரின் மனைவியின் கண்ணீருக்கோ, அல்லது தாந்தேவாடாவில் கொல்லப்பட்ட சி.ஆர்.பி.எப்ஃ வீரர்களின் மனைவிகளின் கண்ணீருகோ என்ன மதிப்பிருக்கும்? காஷ்மீரில், மத்திய இந்தியாவில் போராடும் சக்திகளுக்கு எதிராக இந்திய கூட்டு மனச்சாட்சியில் ஒரு தேசிய வெறியை கட்டமைக்க மட்டுமே இந்தப் பிணங்களை பயன்படுத்துகிறார்கள். ராஜீவ்காந்தியைப் புதைக்காமல் இன்னமும் தமிழகத்தையே ஒரு எமர்ஜென்சிக் கோட்டையாக நடத்திக் கொண்டிருக்கிறார்களே அது போன்ற ஒரு நிரந்தர ஒடுக்குமுறைக்காக இந்தப் பிணங்கள் தேவைப்படுகின்றன. ஆக பாபிதா யாரிடம் போய் நியாயம் கேட்க முடியும்?
கூடவே அவர்கள் அமைதியையும் கொன்று விட்டார்கள்.
………………………………………………………………………………………….
பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கைகள் இன்னமும் மீதமிருப்பதாக சுவாமி அக்னிவேஷ் சொல்லியிருக்கிறார். மாவோயிஸ்டுகளிடமிருந்து வந்த கடிதத்தில் தேதி குறிப்பிடாதிருந்த நிலையில் சிதம்பரம் மூன்று தேதிகளை அதாவது ஜூலை 10, ஜூலை 15, ஜூலை 20 இந்த மூன்று நாட்களும் அரசுப் படைகள் யுத்த நிறுத்தம் செய்யும். அதே நாட்களில் மாவோயிஸ்டுகளும் யுத்த நிறுத்தத்திற்கு தயாரா என்று சிதம்பரம் அகினிவேஷிடம் கடிதம் மூலம் கேட்க அரசின் கோரிக்கையை அக்னிவேஷ் மாவோயிஸ்டுகளிடம் தெரிவிக்கிறார். அந்த கோரிக்கை தொடர்பான ஆலோசனைக்குத்தான் தோழர்கள் சிக்குரி ராஜ்குமாரும், சீத்தாக்காவும், தோழர் ஹேமச்சந்திர பாண்டேவும், சாதேவும் நாக்பூரில் சந்திக்கும் திட்டத்தோடு சென்றிருக்கிறார்கள். இப்போது சாதேசைத் தவிற யாருமே இல்லை. ராஜேந்திரனும், பாண்டேவும் கொல்லப்பட்டு விட்டார்கள். சீத்தாக்கா என்னவானார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அமைதிக்கான நாட்களாக குறிக்கப்பட்ட ஜூலை முடியப் போகிறது ராஜ்குமாரின் ரத்தக் கறைகளோடு நிற்கும் அவர்களிடம் நாங்கள் பேச வெண்டுமா? என்று ஆவேசமாக மாவோயிஸ்டுகள் கேட்கிறார்கள். இக்கட்டுரை எழுதி முடிக்கப்பட்ட நிலையில் இன்று 26&07&2010 அன்று ஆறு மாவோயிஸ்டுகளைக் நேரடி மோதலில் கொன்று விட்டதாக செய்திகள் வருகின்றன. மாவோயிஸ்டுகளை இவர்கள் கொலைகளைச் செய்யத் தூண்டுகிறார்கள். இவர்கள் செய்யும் கொலைகளுக்கு பதிலடியாக அவர்கள் செய்யும் அரசியல் படுகொலைகளை பூதாகரப்படுத்திக் காட்டுகிற ஊடகங்கள் விலங்களைப் போல கொன்று கம்புகளின் காவிச்செல்லப்படும் மாவோயிஸ்டுகளின் உடல்கள் பற்றி குறைந்த பட்ச கவலையைக் கூட வெளிப்படுத்துவதில்லை.
தண்டகாரண்யாவின் இன்றைய அமைதி இழந்த் நிலைக்கு சோனியா, மன்மோகன், சிதம்பரம்தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த பல வருடங்களாக அமைதி இழந்து விட்ட தண்டகாரண்யா மக்களுக்கு குறைந்த பட்சம் சிவில் வாழ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானால் நமக்கும் சந்தோஷம் தான். ஆனால் இவர்கள் மாவோயிஸ்டுகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். பழங்குடிகளிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைதிக்கான சாத்தியங்கள் குறித்துப் பேச முடியும்.
இந்திய அரசோ மாவோயிஸ்டுகள் பாராளுமன்ற அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
அதாவது சி,பி.எம் கட்சியைப் போல அவர்களும் தேர்தல் அரசியலில் பேரம் பேசும் சக்திகளாக வலுப்பெறுவதை இந்தியா விரும்புகிறது. ஆனால் மாவோயிஸ்டுகள் ஒரு போதும் தேர்தல் அரசியலுக்குள் வர விரும்பவில்லை. வரவிரும்பவில்லை என்பதை விட அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவ அமைப்பை தூக்கி எரிந்து விட்டு புதிய ஜனநாயக புரட்சியை மாவோ சிந்தனையில் வன்முறை வழியில் நிறுவப் போராடும் அமைப்பு எப்படி தேர்தல் அரசியலுக்குள் வரும் என்பதே அடிப்படை முரண். அடுத்து மாவோயிஸ்டுகள் வைக்கும் அடுத்த கோரிக்கை, நிலத்தின் மீதான உரிமை பழங்குடி மக்களுக்கே என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை. ஆயுதப் போராட்டம் தேர்தல் அரசியல் என்பதை எல்லாம் விட சிதம்பரம் அன் கோவுக்கு உறுத்துகிற மிகப்பெரிய அச்சுறுத்தலே இதுதான். அவர்கள் எஸ்ஸார், ஜிண்டால் உள்ளிட்ட ஏராளமான சுரங்க, கனிம நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டு வைத்துக் கொண்டு நிலங்களை குறிவைத்து களமிறங்குகிறார்கள். மக்களை வெளியேற்றி விட்டு முழுமையாக வளங்களை கொள்ளையடிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் சிதம்பரத்தின் திட்டம். மாவோயிஸ்டுகளோ மக்களையும் நிலங்களையும் காப்பாற்றியாக வேண்டும். ஒன்றிலோ புரட்சியை மாவோயிஸ்டுகள் கொண்டு வர வேண்டும் அல்லது போராட வேண்டும். அல்லது தனியார் முதலாளிகளுக்காக தனிப்பட்ட விருப்பங்களோடு படைகளைக் குவிக்கும் சிதம்பரம் வெற்றி பெற வேண்டும். எழுத்தாளர் அருந்ததிராய் தோழர்களுடன் ஒரு பயணம் என்னும் நூலில் முக்கியமான பிரதானமான அந்தக் கேள்வியை முன்வைக்கிறார் தண்டகாரண்யா காடுகளில் உள்ள வளங்களை இந்தியா எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மாவோயிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். ஒரு வேளை மாவோ சிந்தனையின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளின் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அந்த கனிமங்களை தோண்டி எடுக்காமல் விட்டு விடுவார்களா ? என்று கேட்டிருக்கிறார். தமிழகத்தின் நாமக்கல் பகுதியில் கண்டறியப்பட்டிருக்கும் பிளாட்டினப்படிமங்கள் என்பது எடுத்து பயன்படுத்தத்தான்.
ஆனால் அது யாருடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் அதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்பது உருவாகிறது. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு மரபான விவசாய முறைகளை நவீனப்படுத்தி காடுகளைப் பாதுகாத்துக் கொண்டே இவைகளைச் செய்ய முடியும். மற்றபடி வளர்ச்சியின் பெயரால் சட்லஜ் நதியின் கட்டப்பட்டிருக்கும் பக்காரா அணையின் பெயராலோ நர்மதாவின் பெயராலோ வெளியேற்றப்படும் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது என்பது அவர்களை தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தவேயன்றி வேறொன்றும் இல்லை. ஆக இங்கே எஸ்ஸாரும்….ஜிண்டாலும்…..ரத்தம் கேட்கிறார்கள். பெரும் ரத்தக்களறியை ஏற்படுத்துவதின்றும் இந்தியப் படைகளுக்கு தயக்காமான ஒன்றல்ல. இப்போதே நவீன போர் ஒன்றை தன் சொந்தக் குடிகள் மீதே தொடுப்பதற்கு தயாராகி விட்டது.
No comments:
Post a Comment