Tuesday, July 06, 2010

மக்கள் கவிக்கென் வணக்கம்

புது உலகம் - பசுபதி
-கரவைதாசன்-


(மக்கள் கவிஞன் பசுபதியின் 45வது (05 07 1965)ஆண்டு நினைவை முன் நிறுத்தி மீள் பதிவிடுகின்றோம்.
)


யாழ்ப்பாணக் கவிஞர் என்று - புரட்சி
யாப்புக்குள் கவிசெய்த தோழா!
வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் - நீ
வைத்திங்கு சென்றகவி வாழும்!
- சுபத்திரன் -


05.07.2009இன்று கவிஞரும், சமூகப் போராளியும், கம்யூனிஸவாதியுமான புதுஉலகம் - யாழ்ப்பாணக் கவிராயர் கவிஞர் க.பசுபதி அவர்களின் 44வது ஆண்டு நினைவுநாள். 14.7.1925ல் பிறந்த கவிஞர் 05.7.1965ல் இறப்பெய்தினார். யாழ்ப்பாண நிலவுடைமைச் சமூக அமைப்பில் சாதி, மதம், குடும்பம், சுரண்டல், கூடவே தீண்டாமை என அனைத்து வடிவங்களிலும் மைய மனிதர்களால் விளிம்புநிலை மனிதர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அச்சமூகத்தில் அசைவியகத்தினை ஏற்படுத்திய கருத்துப் பொறிகளில் மார்க்சிய வழியில் 1950ம் ஆண்டுகாலப்பகுதிகளில் தோன்றிய போராளிகள் வரிசையில் கவிஞர் நினைவு கொள்ளத்தக்கவர்.

புது உலகம்யாழ்ப்பாணக் கவிராயர் என அடையாளம் கொள்ளப்பட்ட கவிஞர் க.பசுபதி அவர்களின் ஆவணப்படுத்தப்பட்ட ஒரே ஒரு கவிதைத்தொகுப்பு நூல் ஆகும். 1965-இல் முதலாவது பதிப்பும், 2000ம் ஆண்டில் இரண்டாவது பதிப்பும், இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையும், சென்னை சவுத் விசன் நிறுவனமும் இணைந்து இந்த செயற்கரிய காரியத்தினை செய்துள்ளன. கவிஞர் அவர்களால் எழுதப்பட்டு மேடைகளில் வாசிக்கப்பட்டும் பத்திரிகைகளில் பதிவுசெய்யப்பட்டதுமான பல நூற்றுக்கணக்கான கவிதைகளில் தெலைந்ததுபோக எஞ்சிய கவிதைகளில் புது உலகம் என்ற தலைப்பின் கீழ் ஏழு கவிதைகளும், தொளிலாளர் என்ற தலைப்பின் கீழ் பத்துக் கவிதைகளும், தாழ்த்தப்பட்டோர் என்ற தலைப்பின் கீழ் ஆறு கவிதைகளும், இயற்கை என்ற தலைப்பின் கீழ் பதினொரு கவிதைகளும், பல்சுவை என்ற தலைப்பின் கீழ் எட்டுக் கவிதைகளும்; மொத்தம் நாற்பத்திரண்டு கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அட்டைப்படத்துடன் சேர்த்தால் மொத்தம் நூற்றி ஐந்து பக்கங்களைக் கொண்டுள்ளது இந்நூல். இக்கவிதைகளை சேகரித்து நூலுருவில் ஒழுங்குபடுத்தி உதவியவர் எழுத்தாளர், ஆசிரியர் என்.கே.இரகுநாதன் அவர்கள் என தொகுப்பின் முன்னுரையில் காணக்கிடக்கின்றது.

உண்மையில் என்னால் எழுதப்படுவது “புது உலகம்” கவிதை நூலுக்கான விமர்சனமல்ல. குளத்து நீரினிலே மழைத்துளிகள் வீழ்வதனால் அவை கரைந்து போவதில்லை, மாறாக குளத்து நீரின் மட்டம் உயர்ந்து கொள்ளும். இவற்றை விளங்கிக்கொள்ள முடியா மூடர்களாய் சிலர், ஒரு நாட்டின் அல்லது ஒரு பிரதேசத்தின் சரித்திரத்தில் தம்மால் ஜீரணிக்க முடியாத பகுதிகளை மூடிமறைத்து விட்டால் புதிய சரித்திரம் படைத்துவிடலாம் என்று எண்ணுவது மூடத்தனமாகும். ஈழத்து, குறிப்பாக யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூக அமைப்பில் நிகழ்ந்த கொடுமைகளை, நிகழத்துடித்து உறங்கும் கொடுமைகளை எடுத்துக் கூறினால்த்தான் எதிர்கால தமிழ் சமூகத்தில் இக் கொடுமைகைள் இடம்பெறாது பார்த்துக்கொள்ளலாம், என்ற புத்தி சுவாதினத்தில் எழுபவை இவ்வகை எழுத்துக்கள். சென்ற இதழில் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையைச் சேர்ந்த அமரர் சின்னத்தம்பி செல்லையா அவர்களை நினைவு கூர்ந்து ஓர் நினைவுக் கட்டுரை எழுதியிருந்தேன்;. அதன் தொடர்ச்சியாக அவரை ஒத்த தோழர்களை நினைவு கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி தோழமையுடன் நண்பர்களும் வாசகர்களும் கேட்டுக்கொண்டார்கள். பல ஆயிரம் வருடங்களாக தீண்டாமையின் பெயராலும் சாதியத்தின் பெயராலும் அடக்கி ஒடுக்கப்பட்டபோது கிளர்ந்தெழுந்த போராட்டக் குணம்மிக்க பலரின் வரலாறு அவ் விளிம்புநிலைக் குழுக்களின் எழுத்து வாசிப்பு அன்று மறுக்கப்பட்ட நிலையில் வரலாற்றில் பதிவுசெய்யப்படாமலே மறைந்துவிட்டன. இதற்கு நல்ல உதாரணம் தென்இலங்கையில் இடம் பெற்ற பல தலித்தியப் போராட்டங்கள் இன்றுவரை பதிவில்லாமலே செவிவழிச் செய்திகளாக இருக்கின்றன. இந்தப் பிரக்ஞையின் தொடர்ச்சியே இவ்வகை எழுத்துக்கள், அன்றி வேறொன்றுமல்ல.

“வர்க்க பேதத்தினால் ஏற்றத் தாழ்வுற்று ஒரு சிலருக்கு எல்லாவற்றையும் மிகப் பலருக்கு இல்லாமையையும் திணித்து கிடந்த சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வற்ற வர்க்க பேதமற்ற புதிய உலகை தோற்றுவிக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையினால் உந்தப்பட்டு ஐம்பதுகளில் மக்கள் இலக்கியம் படைக்க முனைந்த பலரில் முதன்மைக் கவிஞனாகத் திகழ்ந்தவர் யாழ்ப்பாணக் கவிராயர் க.பசுபதி அவர்கள்” என எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் அவர்கள் கூற என் காதாரக் கேட்டிருக்கிறேன். கார்க்கி நம்பிய தத்துவத்தின் வாரிசுகளாய் இவர்களும் இன்னும் பலரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும், சிங்கள தோழமை எழுத்தாளர்களைக் கொண்ட மக்கள் எழுத்தாளர் முன்னணியிலும் இருந்தார்கள். இலங்கைத்தீவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் மேலும் சூல் கொண்டு வளரும் பொழுதும் மக்கள் வரலாறுகள் பதிவிடும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வளரும்பொழுதும், இவர்களின் வாரிசுகளாய் இன்னும் பலர் வருவார்கள் இருப்பார்கள்......

யாழ்ப்பாணக் கவிராயர் என அடையாளம் கொள்ளப்பட்ட கவிஞர் க.பசுபதி அவர்கள் ஈழத்து பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சுமார் இருபது மனைகளைக் கொண்ட சிறிய கிராமத்தில் கந்தையா அன்னம் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியினை சந்தாதோட்டம் புலோலி கிழக்கு கற்கோவளம் தமிழ்க்கலவன் பாடசாலையில் தொடங்கிய இவர், தொடர்ந்து ஈ.வே.ரா.பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்iயினை ஈழத்திலே முதல்முதலாகப் பரப்பி வந்த பேராசான் கந்தமுருகேசனாரிடம் தமிழறிவினையும் பகுத்தறிவுக் கொள்கையினையும் கற்றுக்கொண்டார். சமகாலத்தில் லண்டன் கேம்பிறிட்ஜில் பல மாக்சியவாதிகளோடு கல்வி கற்றுத் திரும்பிய மதிப்பிற்குரிய திரு சிவபாதசுந்தரம் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் அதிபர் பொறுப்பில் இருந்தபோது பரமேஸ்வராக் கல்லூரியில் முதலில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மாணவன் பிரபல எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை (எஸ்.போ) அவர்கள். இரண்டாவது தாழ்த்தப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மாணவன் எழுத்தளர் என். கே. இரகுநாதன் அவர்கள். அதன் தொடர்ச்சியாக இடைநிலைக்கல்வியினை கவிஞர் பசுபதி அவர்களும் அங்கே கற்றார். அதன் பின் யாழ்ப்பாணம் நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியத் தகைமையையும் கவிஞர் அவர்கள் அடைந்தார்.
கவிஞர் அவர்கள் தொழில்ரீதியாக முதலில் இரத்மலானையிலும் பின்னர் கைதடியிலுள்ள செவிப்புலன் கட்புலனற்றோர்க்கான கல்வி நிலையங்களில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
தனது கிராமத்தினைச் சேர்ந்த பாய்க்கியம் என்னும் பெண்ணைத் துணைவியாகக் கொண்டு மூன்று ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் தம் காதலின் பேறாகப் பெற்று மகன் அசோகன் (எம்.பி.பி.எஸ்) மருத்துவர், பெண் பிள்ளைகள் பட்டதாரி ஆசிரியைகளாகவும் உருவாக்கியுள்ளார்கள்.

கல்விகற்கச் சென்ற காலங்களிலே பின் வாங்கில்களிலோ அல்லது தரையிலோ இருந்து கல்வி கற்க வேண்டிய பாரபட்சமான சூழல். பாடசாலைக் காலம் முழுவதும் சாதிக்கொடுமையை எதிர்நோக்க வேண்டி வந்தமையால் சாதிவெறியை எதிர்த்த போராட்ட உணர்வும் சமூகசேவையில் நாட்டமும் சிறு வயதிருந்தே இவரிடம் காணப்பட்டது.
விளிம்புநிலை மக்களின் சமூகமேம்பாட்டிற்காக யாழ்ப்பாணம் பகுதியில் எம்.சி.சுப்பிரமணியம், கணபதி இராசையா, ஆழ்வார் சிவகுரு(மாணிக்கம்) ஆகியோர் இணைந்து ஆரியர் குளத்தடியில் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் ஒன்றினை தொடங்கியபோது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். இவற்றின் தொடர்ச்சியாக பருத்தித்துறை சந்தாதோட்டத்தில் நல்வழி ஐக்கிய சேவா சங்கம் ஒன்றினை என். கே. இரகுநாதன் ஆசிரியர் அவர்களுடன் சேர்ந்து தொடங்கி இயங்கினார். இவை தவிர யாழ்ப்பாணம் தி.மு.கவின் ஆரம்பகால உறுப்பினராகவும் இணைந்து அவர்களுடனும் செயற்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக தன்னோடொத்த இளைஞர்களுடன் சேர்ந்து கவிஞரின் சொந்த ஊரான வராத்துப்பளையில் திராவிடர் கலைமன்றம் என்ற பெயரில் வாசிகசாலை ஒன்றை நிறுவி இயங்கி வந்தார்கள.; இப்படியாக ஒவ்வொரு கிராமங்களிலும் உதிரியாக அமைந்த நிறுவனங்கள்தான் பின்னாளில் எம்.சி. சுப்பிரமணியம் அவர்கள் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை என்னும் பெயரில் வீறு கொண்டெழுந்த ஸ்தாபனத்தினை உருவாக்க பலமாக அமைந்தது. எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராக இருந்து செயற்பட்டபோது கவிஞர் பசுபதி அவர்கள் (1956-இருந்து 1963-வரை) இணைச் செயலாளராகவும், நிர்வாகச் செயலாளராகவும் இருந்து பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அந்த விளிம்புநிலை மனிதர்களுடைய பிரச்சினைகள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வளர்ச்சி பூர்வமாக விளக்கி 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் திகதி வெளியிடப்பட்ட “மகாசபை மலர்” எனும் கணக்கெடுப்பு ஏட்டிற்கு பொறுப்பாசிரியராக இருந்து பணி செய்தார்.

இவ் அசைவியக்கங்களுக் கெல்லாம் யாழ்ப்பாணம் கரையூரில்(குருநகர்) திரு யோவேல் போல் அவர்கள் 1925-ல் தொடங்கப்பட்ட ஷஷஒடுக்கப்பட்டோர் சங்கம்” ஒரு உந்துசக்தியாக இருந்தது.

கவிஞர் பசுபதி அவர்கள் இருபது வயதினையுடைய இளைஞராக இருக்கும் காலத்தில் 1945ம் ஆண்டளவில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வடபுலத்து கொம்யூனிச இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை பொறுப்பேற்று வந்து சேர்ந்தார். அப்போது எம்.ஏ.காதர், அ.வைத்திலிங்கம், பொன்.கந்தையா, நா.சண்முகதாசன், எஸ்.இராமசாமிஐயர், எம்.சி.சுப்பிரமணியம், ஆர்.ஆர்.பூபாலசிங்கம், க.மகாலிங்கம் ஆகியோர் முனைப்புடன் கொம்யூனிச கட்சியில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.

உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கு முன் நிபந்தனையாக சாதியொழிப்பையும் தீண்டாமையொழிப்பையும் மேற்கொள்ள வேண்டும். இலங்கைத்தீவுனிலே சோசலிசப் புரட்சி ஏற்பட வேண்டுமெனில், முதலில் சாதி ஒழிக்கப்பட வேண்டும். ஏனெனில் புரட்சி இரண்டு கட்டங்களைக் கொண்டது. சாதி ஒழிப்பு என்ற ஜனநாயகப் போராட்டம் முதற்கட்டம், சோசலிசத்திற்கான போராட்டம் இரண்டாவது கட்டம் என வடபுலத்து கொம்யூனிசக் கட்சி பரிந்துரை செய்தது.

இப்பரிந்துரையால் ஆதர்சிக்கப்பட்டு தன்னையும் கம்யூனிசக் கட்சியில் இணைத்துக் கொண்டு ஒவ்வொரு பொதுமேடைகளிலும் கட்சியின் கருத்துக்கு தனது கவிதை வரிகளினால் கவிஞர் அவர்கள் வலுச்சேர்த்து வந்தார். இக்காலகட்டத்தில்த்தான் 1940களில் மலேசியவிடுதலைக்காக போராடிய மலேய தேசிய விடுதலை இராணுவத்தின் முன்னணிக் கெரில்லாப் படைப்பிரிவின் தளபதியாக முன் நின்று போராடி இரண்டாம் உலகப்போரின்போது பர்மா ஊடாக இந்தியாவுக்கு தப்பி வந்து இந்தியாவில் பிரிட்டிஸ் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பீற்றர் கெனமன், கொல்வின் ஆர்.டி. சில்வா, என்.எம்.பெரேரா ஆகியோருடன் சிறையிலிருந்து பின் இலங்கை வந்து கட்சியின் பிரச்சாரங்களில் முனைப்போடு ஈடுபட்ட மலேசிய கனகசிங்கம் (அண்மைக்காலங்களில் தான் நான் அறிந்து கொண்டேன். மலேசிய கனகசிங்கம் அவர்கள், உயிர் நிழல் சஞ்சிகையின் ஆசிரியர் கலைச்செல்வன் அவர்களின் தந்தையார் என்பதை) தலைமறைவாகவே இலங்கை வந்திருந்த இந்திய கம்யூனிசத் தலைவர் ப. ஜீவானந்தம் ஆகியோர் தலைமறைவில் வாழ்ந்தாலும், மேடைகளில் திடீர்திடீரெனத் தோன்றி முழக்கமிட, கவிஞர் பசுபதி அவர்கள் தன் வீறு குன்றாத பாரம்பரியக் கவிதை வார்ப்பால் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை வலியுறுத்தி மேடைதோறும் கவிதை படிப்பார். அதுவன்றி ப.ஜீவானந்தம், கனகசிங்கம் போன்ற தோழர்களை கன்பொல்லை போன்ற சிறிய கிராமங்களுக்கு சயிக்கிளில் அழைத்து வந்து கட்சி வகுப்புக்களை நடத்த என்.கே.இரகுநாதன் மாஸ்டர், கவிஞர் பசுபதி, கிளாக்கர் செல்லத்தம்பி போன்றவர்கள் ஒத்துழைப்பாக இருந்தார்கள் என என் தந்தையார் மு.தவராசா (தவம்) எனது பெரிய தகப்பனார் அதிபர் க.இராசரத்தினம் ஆகியோரிடமிருந்து அறிந்து கொண்டேன். அப்போது ஆண்டார்வளவு வெட்டையில் கனுவில் சனசமூக நிலையம் என்ற பெயரில் கன்பொல்லைக் கிராமத்திற்கான வாசிகசாலை இருந்து இயங்கியதாகவும் அறிந்துகொண்டேன்.

ப.ஜீவானந்தம் அவர்கள் இலங்கையில் தலைமறைவாக இருந்த வேளை கவிஞரின் கவிதை வரிகளினால் ஆதர்சிக்கப்பட்டு இந்தியப் பத்திரிகைகளிலும், சரஸ்வதி போன்ற சஞ்சிகைகளிலும் யாழ்ப்பாணக் கவிராயரின் கவிதைகளை எடுத்துச் சென்று பிரசுரித்தார்.
வல்வெட்டித்துறை நகரசபையில் இடதுசாரிக்கட்சியினைச்சேர்ந்த தோழர் திருப்பதி அவர்கள் நகரசபைத் தலைவராக இருந்தபோது தலைவர் ப.ஜீவானந்தம் அவர்கள் பவித்திரமாக கடல்மார்க்கமாக திரும்பவும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது வரலாறு. அவரது பயண முன்னேற்பாடுகளைச் செய்த தோழர்கள் மு.கார்த்திகேசன், பொன் கந்தiயா, டாக்டர் சு.வே.சீனிவாசன், எம்.சி.சுப்பிரமணியம் ஆகியோருடன் அந்நாளிலில் இளம் கவிஞனாகவிருந்த க.பசுபதி அவர்களும் இருந்தார்.

சங்கானையில் நிச்சாமம் கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமைக் கெதிராக போராட்டத்தினை நடாத்திக் கொண்டிருந்த வேளை, சிங்களத்தோழர் சரத்முத்தெட்டுவ கம அவர்களது ஊரிலிருந்து பருத்தித்துiறைக்கு வந்திருந்த தோழர்களை கவிஞரின் சொந்த வீட்டினிலேயே தங்க வைத்து அவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டையும், கன்பொல்லை கிராமத்து தோழர்களால் பால்ரின் பேணிக்குள் அடைத்து தயாரிக்கப்பட்ட வெடிகுண்டையும் போலிஸ் கெடுபிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள இலங்கைப் போக்குவரத்துச்சபை பஸ் வண்டியிலே கொண்டு சென்று சங்கானையில் சேர்த்ததாகவும் இதன் பின்னணியில் கவிஞர் அவர்களும், கன்பொல்லையைச் சேர்ந்த மு.தவராசா(தவம்) அவர்களும், வராத்துப்பளையைச் சேர்ந்த மு.சி.கந்தசாமி அவர்களும் இருந்து செயற்பட்டதாக டென்மார்க்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிச்சாமம் கிராமத்தினை சேர்ந்த விக்கி அவர்கள் மூலமாக அறிந்து கொண்டேன். தோழர் விக்கி அவர்கள் அந்நாட்களின் தீண்டாமைக்கெதிரான போராளி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியான போராட்டத்தினிடையே இளம்வயதினிலேயே கவிஞர் அவர்கள் புற்று நோயினால் பாதிக்கப்ட்டார். இவரது இறுதித் தருணத்திலே இவருடன் கூட இருந்த தோழர் கே.டானியலைப்பார்த்து “டானி, என்ர பாட்டுக்களைப் புத்தகமாக போட முடியாமல்ப் போச்சு நீயும், ரகுநாதனுமாகச் சேர்ந்து யோசிச்சு சொஞ்சப் பாட்டுக்களையாவது போடப் பாருங்கோ இதனாலை வாற கஷ்டத்தைப் பற்றி எனக்குத் தெரியும் இப்ப பிரயோசனப்படாட்டாலும் பின்னடிக்கு-எங்கட அதிகாரம் வாற காலத்திலையாவது எல்லாருக்கும் அது பிரயோசனப்படும். இது எனக்கு நல்லாத் தெரியும்.” என மரணம் தன்னை நெருங்கி வருவதை அறிபூர்வமாக அறிந்து கொண்ட இறுதித் தருணத்திலும் “நாளை நமதே” என்ற நம்பிக்கையினை கோடான கோடி தோழர்களிடையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளார்.


வையகம் பணிந்தது!

புதியதோர் உலகம் காணப்
புறப்படு புரட்சி நோக்கி!
நிதியினால் தம்மை ஆட்டி
நெடுந்துயர் தந்த பேர்தம்
சதியினால் வீழ்ந்து நிற்பர்,
சாவினைத் தேடித் தத்தம்
விதியினால் வந்த தென்று
விரைந்த நாம் வெற்றி என்றார்!
இனத்தினால் மதத்தி னாலே
இரண்டுபட் டென்றும் வாழோம்!
சனத்தினால் நாங்கள் ஒன்று
சச்சர விதனால் ஏனோ?
தனத்தினால் வேறு காணும்
தரித்திரம் ஒழிந்து போக
மனத்தினால் மகிழ்ச்சி பூக்கும்
மணங்கமழ் வாழ்வு என்றார்!
போலிகள் பதுக்கந் தேட,
பொய்யவிழ் சூதர் தங்கைக்
கூலிகள் குழம்பித் தம்முள்
குந்தகம் விளைக்கத் தூய
பாலியர் மகிழ்ச்சி பொங்க
பாவையர் உணர்ச்சி ஊட்ட
வாலிபப் படைக ளெல்லாம்
வளைந்தது களத்து மேட்டில்
செங்கொடி கையில் ஏந்தி
செம்படை விரைதல் கண்டு
எங்கணும் முரசம் ஆர்க்க
எழுந்தது புரட்சி இன்றே!
கங்குலில் கரந்தி ருந்த
கவினுறு உலகம் மீட்க
பொங்கின உணர்ச்சி வெள்ளம்!
பொதுமையில் புதுமை காண.

போர்த் தொழில் விந்தை யாவும்
புரிந்திட வந்து சேர்ந்தார்!
ஆர்த்தனர் அகம கிழ்ந்து
அணிநடை பயின்ற போதே
பார்த்தவர் பார்த்த காலை
படைகளே அவரும் ஆனார்.
வார்த்தடந் தோளர் நம்முன்
வையகம் பணிந்த தம்மா!
யாழ்ப்பாணக் கவிராயர்
-க.பசுபதி-
------------------------------------


-------------------------------------

மிடுக்கோடு தொடங்கவேண்டும் மீண்டும் இலக்கியம்....

ரூபன்

நாளை கடக்கிறது ஒரு - மக்கள் கவிஞனின் - மறைவின் 45 ஆண்டுகள்! (05 07 1965)

சாகாத 'மக்கள் கவிஞர்' பேசும் காலம்.... இது!

'யாழ்ப்பாணக் கவிராயர்'

இவர்தான் 'மக்கள் கவிஞன்!' - பசுபதி -

இக்கவிஞன் இறந்து 3மாதங்களும் 6 நாட்களும் கழியும்வேளை...

வெளிவந்ததுதான், இந்த மக்கள் கவிஞனின் கவிதைத் தொகுப்பு - "புது உலகம்".

இந்தக் கவிதைத் தொகுப்பு அவரின் கவிதையின் தலைப்புமாகும். அதன் முதற் சிலவரிகள்....

"காணுகின்ற புதுவுலகம் கற்பனைக்கே யெட்டாக்
கதையல்ல கடலல்ல: கன்னியுந்தான் அல்ல!
பேணுகின்ற பொருளெல்லாம் தனியுடமை யாகா:
பொதுவுடமை: பொதுமக்கள் பொதுச்சொத்து ஆகும்...

இந்தக் கவிதையின் தலையங்கமே கவிதைத் தொகுப்பின் கதையங்கம்!

இப் புது உலகத் தேரில் மீண்டும் சில வரிகள்....

"அதிகார அரசொன்று ஆளுவது மில்லை!
அயல்நாட்டை அடிமை கொள்ளும் அவலநிலை இல்லை
அதிகாரம் அந்நாட்டு மக்களவர் கையில்:
அடிமைத்தனம் அன்றொழிந்து அன்புநெறி தோயும்:
சதிராடு தேவடியாள் போலோடு பணமோ
சண்டாளர் கையிலிருந்து சாரமற்றுப் போகும்!
துதிபாடித் தொந்திவளர் தூபமிட்ட தீயர்
தொலைந்திட்டார்! துன்பமில்லை இன்பஞ்சூழ் வையம்!......"

இந்தியா பற்றி இந்த (மக்கள் கவிஞனின்)மிடுக்கு...

"எந்தாயாம் எழிலான ஈழ நாட்டில்
இருக்கின்ற என்சகத்துத் தமிழர் சில்லோர்:
என்தாயின் அணைப்பினிலே இனிமை பெற்றும்
என்நாடு இந்தியநா டென்று சொல்வர்..."

இந்தக் கவிஞன் அன்றே, 'தேசியம்' என்றால் என்ன என்பதை: அன்றே பாடியும் தீர்த்தான்.

"தேசத்தின் பண்புதனைத் தெரியக் காட்டும்
தரமுள்ள இலக்கியங்கள் தாரும் என்றால்
தேசீயம் இதிலுமா வேண்டும் என்பார்
தேசத்தின் வாசனை தெரியா தோர்கள்.."

சில எடுத்துக்காட்டு!!!

'தான்தோன்றிக் கவிராயன்' (''தணியாததாகம்'' புகழ: - 'சில்லையூர் செல்வராசன்'- )
''சிந்தையால் வாக்கால் செம்மைச்
செய்கையால் புரட்சி உய்க்க,
செந்தமிழ் செங்கொடிச்
சேவகம் செய்ய வைக்க
மாமனிதனான
பசுபதிக் கவிஞன்'' என்று பாடினான்.....

'தீண்டாண்மை ஒழிப்பு யுத்தத்தின் போது'.... இக் கவிஞனின் பாடல்....

'' ஊன் தின்னும் உத்தமரே உம்மைத்தானே
உடல் தீண்டல் தீ தென்பீர் தீண்டாச் சாதி
மான் விழியாள் ஒருத்தி வந்து மயக்கமேற்ற
மறுப்பில்லை ''......

'பசுபதி'யை கவிஞனாக மறுத்த இந்த உலகத்தில்...

இலங்கைத் தமிழ் உலகத்தில் மீண்டும் 'பசுபதி'யை, இந்தத் தமிழ் உலக வரலாற்றில் முதலாவது 'மக்கள் கவிஞனாக' பிரகடணப்படுத்தும் கோரிக்கையை முன்வைக்கிறோம்...

''புதிய தோர் உலகம் செய்யப்
புறப்படு புரட்சி நோக்கி''
என்று பாடிய இரும்புக் கவிஞன் பசுபதிக்காக:

அவரின் பிரிவைத்தாங்காத 'சுபத்திரன்' அன்று எழுதியது...

'' யாழ்ப்பாணக் கவிராயர் என்று - புரட்சி
யாப்புக்குள் கவி செய்த தோழா!
வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் - நுி
வைத்திங்கு சென்ற கவி வாழும்!'' ...

சாரம்: நன்றி _'மக்கள் இலக்கியம்' ,மலர்-3: 1983.

ரூபன்
04 07 ௨0௧0
உயிர்மெய் Aug 18, ௨00௯ இதழில் வெளிவந்தது


No comments: