Thursday, July 29, 2010

சரமாகோ இறப்பெய்தினார் .

போர்த்துகேய நாட்டின் சிறந்த எழுத்தாளர் யூசே சரமாகோ இறப்பெய்தினார்.
-கரவைதாசன்-

"
பனிக் காலம் தொடங்கும் ஒரு பொழுதில் இரவு பகல் சமமாகும் நாள் நெருங்கு முன் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைத்து இக்காலத்தின் குறியீடாக புது உலகின் அடையாளமாக ஓர் வளைவைப்போல் நீர் வந்தீர். எமக்கு பின் வழிவழித் திரண்டு வரும் எம் மக்கள் அவ்வளைவை பார்த்து விட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும் "

போர்த்துகேய நாட்டின் சிறந்த எழுத்தாளரும், மாக்சிய சிந்தனையாளரும் , இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றவருமான jose de souse saramago அவர்கள் தனது 87 வது வயதில் இறப்பெய்தினார்.
1922 ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ந் திகதி Azinhaga எனும் குக் கிராமம் ஒன்றில் தொடங்கிய அவரின் காலச் சக்கரம் யூன் மாதம் இறுதிப்பகுதியில் 2010ல் நகர்ந்து, ஸ்பெயின் நாட்டில் கனாரியன் தீவில் அவரின் சொந்த இல்லத்தில் நின்றகர்ந்தது.


வறுமையிலும் சுரண்டலிலும் சிக்கித்தவிக்கும் நிலம் அற்ற ஏழைமக்களின் வாரிசாக அதன் தொடர்ச்சியாக ஒரு போக்குவரத்து ஊழியக்கார போலீஸ் கான்ஸ்டபிளின் இரண்டாவது மகனாக இவ் உலகிற்கு வந்தார். இவரின் முன்னோர்கள் எழுத்தறிவு அற்றவர்கள். சிறு வயதிலேயே தனது பேரன், பேத்தியை பராமரிக்கும் பொறுப்பு இவரிடமே விடப்பட்டு இருந்தது. சிறு வயதில் அங்கிருந்த ஒலிவ் மரமும் வேறும் இரண்டொரு மரங்களும் தான் இவரது விளையாட்டுத்துணை. பேரனும் பேத்தியும் இறந்து போகவே தகப்பனாருடன் லிஸ்பனுக்கு இடம்பெயர்ந்து வந்தபோது இவரது 12 வது வயதில் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து கொண்டார். தொழில்ரீதியாக கார் திருத்துபவராக வாழ்வினை தொடங்கியவர் இரண்டுவருடங்களின் பின், மொழி பெயர்ப்பாளராக தொழிலை மாற்றிக் கொண்டார். இடையே கிடைக்கும் வேலை எல்லாவற்றையும் செய்தார். தொடர்ந்து ஊடகவியலாளராக முன்னேறியபோது - Diário de Notícias தினச்செய்தி பத்திரிகையின் ஆசிரியராக வேலையில் அமர்ந்தார். 1975 ல் அவர் தனது அரசியல் கருத்துக் காரணமாக பத்திரா அதிபர் வேலையை இழக்க நேர்ந்தது. இக்காலத்தினை இவரது இருண்ட காலமென விமர்சித்தவர்களுமுண்டு.

இதற்கு இடையே 1947 ல் இவர் தனது "பாவங்களின் தேசம்" என்னும் படைப்பினை கொண்டுவந்திருந்தார். அப்போது அவர் ஒரு நடுநிலை எழுத்தாளர் என்றே இனம் காணப்பட்டார். ஆனாலும் வாலிப வயதிலிருந்தே பொதுவுடைமைக் கருத்துக்களால் ஆட்கொள்ளப்பட்ட இவர் இறுதி வரை ஒரு கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்தார். 1980 ல் இவரால் எழுதப்பட்ட "பூமியிலிருந்து எழுங்கள்" என்னும் நூல் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ச்சியாக "அன்னார்கிசமும் கம்யூனிசமும் " என்று அவரால் எழுதப்பட்ட "உரை" பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கடவுள் மறுப்பாளராகிய இவர் விவிலியத்தினை கேள்விக்குட்படுத்தி சில நூல்களை எழுதினார்.இவற்றின் உச்சமாக O Evangelho segundo Jesus Cristo எனும் நூல் பேசப்பட்டது . இதன் எதிர்வினையாக கத்தோலிக்க வலதுசாரி சர்வாதிகார போர்த்துக்கேய அரசினால் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடவே, லன்சரோட்டுக்கு புலம் பெயர்ந்தார்.
இரண்டு தடவைகள் திருமணமான அவர். முதலில் 1944 ல் இல்டா ரைஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1947 ல் இவர்களுக்கு Violante என்ற பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது தடைவையாக 1988 ல் ஸ்பானிய நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் pilar die reo என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது நாவல்களின் அதிகாரபூர்வ ஸ்பானிய மொழிபெயர்ப்பாளராகிய இரண்டாவது துணைவியாருடன் இறுதிவரை சேர்ந்து வாழ்ந்தார். 1992ல் போர்த்துக்கேய அரசினால் போர்த்துக்கேய தேசிய இலக்கியத்துக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். 1998 ல் இலக்கியத்திற் கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார். இடையே இவரது படைப்புக்காக
உலக தரம் கொண்ட விருதுகள் பல இவரை வந்தடைந்தன.

தாராளவாதப்போக்கில் கோணலாகிப்போய் நலிந்திருக்கும் இவ் உலகின் மீட்புக்கான மந்திர வாளாக தன் இலக்கிய எழுத்துக்களை கைக்கொண்டார். சார்லிஸ கற்பனையும், சாத்தியமும், சாத்தியம் அற்றதுமான பரிமாணத்தில் பாத்திரங்களை நகர்த்திச் செல்வதும் செம்மையும் சீருமான மொழியினை கையாள்வதென்பதும் இவருக்கு கைவந்த கலை. தனக்கேஉரிய திமிரலையும் கட்டுடப்பையும் தொடர்ச்சியாக வகிடு பிரிக்காது இணைத்தே நடத்திச் செல்வார். கனத்த உணச்சிபூர்வமான உள்ளீடுகளைகூட பாத்திரங்களிடையே வைத்துவிட்டு அழகியலால் லாவகமாக போர்த்திவிடுவார். அவை திசை இழந்த மனிதர்கள் ஏறிச்செல்ல சிறந்த இலக்கிய வாகனங்களாய் அமைந்துவிடும்.


நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், பத்திஎழுத்து, உரை, விமர்சனம் என இலக்கியத்தின் எல்லா உருவங்களையும் கையாண்டுள்ளார். இவரது படைப்புக்கள் இருபத்தி ஐந்து பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகில் அதிகமாக விற்பனையான போர்த்துக்கேயப் படைப்புக்கள் இவருடையவைதான்.

இவரின் டெனிஸ் மொழியாக்கம் பெற்ற படைப்புகள்
(Blandt hans værker oversat til dansk er følgende)
  • Døden udebliver indimellem
  • En beretning om klarsyn
  • Den duplikerede mand
  • Hulen
  • Alle navnene
  • En fortælling om blindhed
  • Jesusevangeliet
  • Historien om Lissabons belejring
  • Det år Ricardo Reis døde (1993)
  • Historien om Baltasar og Blimunda og den forunderlige Passarola
  • Stenflåden (1986)

No comments: