காலை ஒன்பது மணியைத் தாண்டிக் கொண்டிருந்த வேளை டானியல் கராச்சின் முன்பு நண்பர்கள் சிலருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அந்நேரம் ஒருவர் தாண்டித் தாண்டீ உள்ளே வந்து கொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும் “இஞ்சே டானியல!; எனக்கு இண்டைக்கு எப்படியும் இரண்டு சூலமடித்து தரவேண்டும். என்ன செலவு எண்டாலும் பரவாயில்லை எனக்கு இண்டைக்கு வேணும். “ என்றார். “ஐயா இந்தப் பட்டடயிலே வேலை செய்யிறவன், ஒரு குடிகாரப் பரதேசி, அவனுக்கு நேரகாலம் எண்டு ஒண்டும் இஞ்சே இல்லை. நினைச்ச நேரம் வருவான், போவான். வாற நேரம் கண்டு கொள்ள வேண்டியதுதான். அவன் இப்ப எங்கை எண்டாலும் குடிச்சுக் கொண்டு நிற்பான்.” சொல்லிக் கொண்டே மைத்துணரைப் பிடித்து அவனைப்போய் எங்கை நிண்டாலும் பிடிச்சுக் கொண்டு வா என்று சைக்கிளையும் கொடுத்து அனுப்பிவிட அவனும் ஒரு மணி நேரத்துக்குள் ஆளைப் பிடித்து சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்துவிட்டான். “ தம்பி விஷயத்தை ஆருக்கும் சொல்லாதயுங்கோ! மூண்டடியில ஒண்டும், இரண்டடியில ஒண்டுமா ரெண்டு சூலம் அடிச்சாப் போதும். நான் இப்ப அலுவலா ஒருக்கால் நல்லூருக்கு போயிட்டு ரெண்டு, மூண்டு மணிக்கிடையிலே வந்திடுவன்” அவர் சென்று விட்டார். பட்டடடையில் வேலை நடந்து கொண்டிருந்தது. போனவர் திரும்பி வந்து விட்டார். “ ஐயா உங்களின்ர வேலை எல்லாம் முடிஞ்சுது சூலத்தை ஒருக்கா பாருங்கோ!” அவர் கையிலே எடுத்து நீள அகலம் எல்லாம் பார்த்து விட்டார். மனதுக்குள் திருப்தி. “எவ்வளவு தம்பி ரெண்டுக்கும்.” “ஒரு எழுபத்தைந்து ரூபா வரும்.” பொக்ற்றிலிருந்து நூறு ரூபாவை எடுத்து “ தம்பி உன்ர காசை எடுத்துப் போட்டு மிச்சத்தை பட்டடடைப் பொடியனட்டை கொடுங்கோ.” டானியல் சூலங்களை துடைத்து பேப்பரால் சுற்றிக் கொடுத்து விட்டு “ ஐயா இந்த சூலங்கள் ஏதும் புதிசா கோயிலுக்கு கொடுக்க போறியளோ? “தம்பி உனக்கு என்ன விசரோ? நான் ஏன் கோயிலுக்கு செலவு செய்து சூலம் கொடுக்க வேணும். ஒண்டும் இல்லையடா தம்பி, என்ர வீட்டுக்குப் பக்கத்தே ஒரு எட்டுப் பரப்புக் காணித்துண்டு கிடக்குது. அதை வாங்க இப்ப பத்து வருஷமா கேட்டுக்கொண்டுதான் இருக்கிறன். கேட்க கேட்க காணி என்ன குட்டியோ போடப் போகுது. எண்டு சொல்லிச் சொல்லி என்னைப் பேக்காட்டிப்போட்டு இப்ப ஆரோ ஓருத்தன் வெளிநாட்டுக் கப்பலிலே வேலை செய்துபோட்டு வந்தவனுக்கு விக்கப் போறனெண்டு அவன்ர பெண்டில் சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்னைத்தவிர வேறு ஒருத்தனை வாங்க விடுவனே.” “அப்ப நீங்கள் என்ன செய்யப்போறியள்?” “தம்பி அந்தக் காணிகுள்ள ஒரு அரசமரமும் ஒரு புளிய மரமும் ஏழு எட்டு பனையும் தான் நிற்குது. இண்டைக்கு இரவுக்குள்ளே அரசமரத்துக்கு கீழ இந்த ரெண்டு சூலங்களையும் இறுக்கப்போறன். பரியாரி சின்னத்தம்பியைக் கொண்டு இரவிலே அரசிலே பேய், பிசாசு குளறு சத்தம் கண்டதாய், கேட்டதா கதை உலாவவிட்டிட்டன். சூலத்தையும் குத்தி விட்டால், ஆரடா தம்பி இந்தக் காணியை வாங்கப் போறான். இவனுக்கு எப்பிடி இடும்பு கொடுக்கிற தெண்டு இந்த சொத்தி நல்லையனுக்குத் தான்ரா தெரியும்.” அவர் சூலங்களுடன் புறப்பட்டுவிட்டார். டானியலும் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இரண்டு, மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. அவர் டானியலைச் சந்திக்க வந்தார். “தம்பி அடிச்சுத் தந்த சூலம் நல்ல வேலை செய்து போட்டுதடா. அவன் பேசின பேச்சைவிட மூவாயிரம் குறைச்சுத்தான் காணிக்குக் காசு கொடுத்து எழுதினனான். ஒரு நூறு ரூபா சிலவு, ரெண்டு சூலம்,ஒரு இறுக்கு, இப்ப காணி எனக்கு. தம்பி சில இடத்துக்கு ஆண்டவனை பாவிச்சால்த்தான் நாங்க நல்லா இருக்க முடியும். அது தான்ர இந்த சொத்தி நல்லையன்” என்றாராம்.
தகவல் - மு.சி.கந்தசாமி
No comments:
Post a Comment