கபாலி திரைப்படம் ஒடுக்கப்பட்டவர்களுக்கானது என்றும், அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தின் போராட்டங்களை பதிவுசெய்திருக்கும் ஒரு அரும்பெரும் படைப்பு என்றும் எங்கும் போற்றப்பட்டுவருகிறது. ஒரு சினிமாவாக மட்டுமே கபாலியை முன்னிலைப்படுத்தும் வரையில், அதில் நாம் எந்தவொரு அரசியல் காரணங்களையும் கற்பிக்கத் தேவையில்லை. ஆனால், கபாலி திரைப்படம் இதிலிருந்து வேறுபட்டது. விவேகானந்தர், அம்பேத்கர், சேகுவேரா, கார்ல் மார்க்ஸ் ஏன், பாப் மார்லியின் படத்தைக்கூட வைத்திருக்கிறார்கள் படத்தில். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு அடுத்துவரும் கட்டுரையைப் படியுங்கள்.
1833ஆம் ஆண்டு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்க நாட்டு அடிமைகள் விடுதலை பெற்றனர். ஆனால், ஆப்பிரிக்க அடிமைகள் உதறிச்சென்ற அடிமைச் சங்கிலியில் பூட்டப்படுவதற்குப் பொருத்தமானவர்களாக, உலக வல்லாதிக்கங்கள் தேர்வுசெய்த இனம் தமிழினம். அன்று தொட்டு, ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடுகளின் கரும்பு வயல்கள், ஈயச் சுரங்கங்கள், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் தமிழர்களை நாற்றாக நடும் பணி இருநூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு தமிழர்கள் லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுள் மலேசியாவும் ஒன்று. இரப்பர்த் தோட்டங்களில், கூலிகளாகத் திரிந்த இத்தமிழரின் வரலாறு கண்ணில் நீர் கசிய வைப்பதாகும்.