-கரவைதாசன் -
யாழ் காரைநகர் வடக்கு வலந்தலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆசிரியர் வைரமுத்து இரட்டாய் அவர்கள் சென்ற மாதம் காலமாகிவிட்டதாக செய்தி கிடைத்தது. ஈழமண் தமிழன் வாழும் முறையில் அமாவாசையாகவே துருவப்பட்டிருக்கின்றது. தம் அளவுக்கேனும் கைக்கெட்டியவரை கொள்ளியினை கையில் ஏந்தி சமத்துவத்துக்கான ஒளியினை ஐம்பதுகளில் விளிம்புநிலை மாந்தருக்கு பாச்சியவர்களில் இவர் முனைப்பானவர். காலம் முழுவதும் இடதுசாரியச் சிந்தனையோடு வாழ்ந்தவர். ஜனவேகம் எனும் இடதுசாரிய ஏட்டின் ஆசிரியராக இருந்து செயற்பட்டவர். இப்பத்திரிகை ஜனவேகய என சிங்களத்திலும் வெளி வந்தது. வடபகுதியில் தமிழ்ப் பெளத்தசங்க உருவாக்கத்தினூடு பிற்படுத்தப்பட்ட கிராமங்களில் 1966ம் ஆண்டில் ஐந்து பாடசாலைகளின் உருவாக்கத்துக்கு செயலாளராக இருந்து பணிசெய்தவர். சமூகமேம்பாட்டுக்கான உழைப்பில் பிரமச்சாரியாகவே வாழ்ந்து தன் வாழ்வினை சமூகத்தொண்டுக்கே ஆகுதியாக்கியுள்ளார். சிறந்த கணித ஆசிரியர். ஆங்கில மொழித்திறன் கொண்ட வல்லாளன். எனது தந்தையாரின் நெருக்கத்துக்கு உரிய நண்பர். இவரின் விரல் பிடித்து வலம் வந்த நாட்கள். நீக்கமற நெஞ்சில் நிறைந்தே கிடக்கிறது. மூளைப்பிசிறில் பொறிதட்டும் நினைவுத் தீயில் கண்கள் குளமாகிறது. ஆசிரியருக்கு நிறைவான அஞ்சலிகள்.
No comments:
Post a Comment