எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியேறிச் சென்று விட்டார். பின்னர் அவர் தான் எழுதுவதை நிறுத்தப்போவதாகவும் தனது நாவல்களை திரும்ப போவதாகவும் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் இறந்து விட்டதாகவும் மனம் நொந்து அறிவிப்பு வெளியிட்டார். ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட முறையில் நிர்பந்திக்கப்பட்டு எழுதுவதையே நிறுத்தும்படி செய்வதும் ஊரைவிட்டு விரட்டியடிப்பதற்கும் தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தன.
இது தொடர்பாக பெருமாள்முருகன் மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தச்சென்றபோது அவரது வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன் நடந்த விஷயங்களை அறிக்கையாக பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ளார்.. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது; 12ம்தேதியன்று மாவட்ட ஆட்சித்தலைவருடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல என் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றோம். நாமக்கல் செல்லும் வழியிலேயே அப்பகுதி போலீசார்,
மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டாம் எனறும் வீட்டில் இருங்கள் நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்று கூறினர். செல்லும்வழியில் போலீசார் மிரட்டினார்களாக என்று தொடர்ந்து கேள்விகேட்டதற்கு அவர் மிகுந்த தயக்கத்திற்கு பின்னர் தான் ஊரை விட்டு வெளியேறி இருப்பது நல்லது என்று போலீசார் கூறியதாக பெருமாள் முருகன் கூறினார். அதன்படி அவர்வீட்டில் இருந்தபோது அவரை போலீசார் அழைத்துச் செல்வதாக இருந்தது. ஆனால் பெருமாள் முருகனுடன் நானும் வருவேன் என்று வற்புறுத்தியதால் வேறுவழியின்றி என்னையும் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அவருடைய மாணவர்களும் வருவதாக இருந்தது ஆனால் இவ்விவகாரத்தில மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று பெருமாள் முருகன் தவிர்த்து விட்டார். மாலை 5 மணிக்கு நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு போய்ச் சேர்ந்தோம் நாங்கள் பின்வழியாக அலுவலகத்திற்குள் வரவேண்டும் என்று கூறப்பட்டது. அங்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் உதவியாளர் அறைக்கு கூட்டிச் செல்லப்பட்டோம். அந்த அறையில் பெருமாள் முருகனை போலீஸ் காவலர்கள் சூழ்ந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
.பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வருவாய்த்துறை பெண் அதிகாரி பெருமாள் முருகனை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுடன் நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்திருக்கவில்லை. அவர்களை தனியே சந்தித்து அந்த அதிகாரி பேசினார். பெருமாள் முருகன் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்று விரும்பியதால் அவர் ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை விட்டிருந்தார். அந்த அறிக்கைகளை சுருக்கி என்னுடைய கையெழுத்தில் எழுதி தந்தேன் அதில் பெருமாள் முருகன் கையெழுத்திட்டிருந்தார். அதில் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அந்த வருவாய்த்துறை அதிகாரி அது போதாது என்று கூறி அதை நிபந்தனையற்ற மன்னிப்பு என்று மாற்றச்செய்தார். அதை பெருமாள் முருகனும் நானும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர் மிகுந்த வேதனைக்குள்ளானார்.
பின்னர் அதையும் அவர் ஏற்றுக்கொண்டு அதன் படி நிபந்தனையற்ற மன்னிப்பு என்று மாற்றி கொடுத்தார். பிரச்சனை அத்தோடு முடிந்துவிடும் என்றிருந்தோம் அந்த அதிகாரி அடுத்த அறையில் காத்திருக்க கூறினார் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் நாங்கள் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்த அதிகாரி பெருமாள் முருகன் முன்னதாக அளித்த அறிக்கையின் நகலை வைத்துக் கொண்டு நாவலிலுள்ள சில பகுதிகளை நீக்கச் சொன்னார் விற்கப்படாத பிரதிகளை மீண்டும் எழுத்தாளரை திரும்பி எடுத்து கொள்ளக் கூறினார்.
அப்போது பெருமாள் முருகன் அவருக்கு எதிராக நடைபெற்ற முழுஅடைப்பின் நிர்பந்தத்தின் காரணமாக அவ்வாறு அந்த அறிக்கையில் கூறிடுவதற்கு தள்ளப்பட்டார் என்று நான்கூறினேன். ஆனால் அதையெல்லாம் யாரும் அங்கு பொருட்படுத்தவில்லை.மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் அவர்கள் கூறிய நிபந்தனைகளில் உறுதியாக இருந்தனர். இதனால் மிகவும் மனம் நொந்த பெருமாள் முருகன் எதையும் எழுதிக் கொள்ளுங்கள் எதையும் செய்து கொள்ளுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று மனமுடைந்த நிலையில் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில் நான் அந்த அதிகாரியிடம் எழுத்தாளரின் படைப்புச்சுதந்திரம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அதற்கு அந்த அதிகாரி நீங்கள் ஒரு வழக்கறிஞர் நீங்கள் பாட்டுக்குகூறி விட்டு போய் விடுவீர்கள் அதற்கு பின்னர் இந்த ஊரில்தான் பெருமாள் முருகன் இருக்க வேண்டும் என்று குரலை உயர்த்திக் கூறினார். நான் அவரிடம் எதற்கு குரலை உயர்த்தி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு என்னை வெளியே போங்கள் என்று கூறி விட்டார். இந்த நிகழ்வுகள் முழுவதும் பெருமாள் முருகனுக்கு போலீசார் எந்த ஆதரவும் காட்டவில்லை. மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அவரை கைவிட்டுவிட்டது. அவர்களை பொருத்தவரை இது சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டுமே. அரசியல் சட்டத்திலுள்ள பிரிவு 19(1)(ஏ) வலியுறுத்தும் படைப்புச் சுதந்திரம் என்பது அவர்கள் பொருட்படுத்தப் படக்கூடியதாகவே இல்லை. போலீசாரே அவரை ஊரை விட்டு வெளியேறச் சொல்வதும் மாவட்ட நிர்வாகம் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பதும் ஒரு வேதனை தரக்கூடிய விசயமாக உள்ளது. இவ்வாறு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
No comments:
Post a Comment