ஏ.ஜே. கனகரத்தினா, ஓவியர் மாற்குபோன்றோருடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் ; அவர்களைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்!
* 1976 ஆம் ஆண்டிலிருந்து இருவருடனும் பழகத்தொடங்கினேன். மாற்கு மாஸ்ரர் எனது வீட்டுக்கு அண்மையிலும், ஏ.ஜே. எங்கள் ஊருக்கு மிக அண்மையிலும் வசித்தனர்.
ஏ.ஜேயைப் பற்றி ஏற்கெனவே, மனிதனாயிருந்த மனிதன் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எனது வாழ்வில் நான் சந்தித்த மிக முக்கிய மனிதருள் ஒருவர் அவர்! பரந்த வாசிப்பும், எளிமையும், அனைவருக்கும் உதவும் பண்பும், எதற்காகவும் தனது நிலையில் நின்று வழுவிச் சோரம்போகாத ஆளுமையும் கொண்டிருந்தவர். அவருடன் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அக்காலங்களில் பழகியிருக்கிறேன் ; அவரிடமிருந்து நிறையக் கற்றிருக்கிறேன். அன்னா அக்மதோவா, ஃவெடரிக்கோ கார்ஸியா லோர்கா ஆகியோரின் கவிதைகள் கொண்ட சிறிய ஆங்கில நூல்களைத் தந்து, “இனிமேல்ஆங்கிலத்திலும் வாசிக்கவேண்டும், மொழிபெயர்க்கவும் முயலுங்கள்” என்று தூண்டியவரும் அவரே. ஆரம்பத்தில் மல்லிகைக்கும் டொமினிக் ஜீவாவுக்கும் நிறைய உதவியிருக்கிறார். எண்பதாம் ஆண்டுக்காலம் வரை மல்லிகை சிறப்பாக வந்ததென்றால், அதில் அவரின் பங்கு முக்கியமானது; அலை, சமர்முதலிய இதழ்களுக்கும் பின்னர் உதவினார். எழுபதுகளில் நடைபெற்ற, இலக்கியத்தில் கலை அம்சத்தின் முக்கியம் பற்றிய கருத்தாடல்களில், பிரச்சாரப் படைப்புகளுக்கு எதிரானதாக அவரது நிலைப்பாடு இருந்தது.மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் என்ற நூலும், அவர் எழுதிய – மொழிபெயர்த்த ஏராளமான கட்டுரைகளும், அவரது கருத்துநிலைச் சார்பை வெளிப்படுத்துகின்றன. பேராசிரியர் கைலாசபதிதனது இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலைத் தந்து அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி கேட்டதாகவும், ‘இலக்கியம் பற்றிக் கூறப்பட்டுள்ளது; சமூகவியல் பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இரண்டுக்குமுள்ள தொடர்பு கூறப்படவில்லை’ என்ற சுருக்கமான குறிப்பை மட்டும் துண்டொன்றில் எழுதித் தான் கொடுத்ததாகவும், ஒருதடவை என்னிடம்
சொன்னார்.
மாற்கு மாஸ்டர்
ஓவிய அரங்கேற்றம்என்ற பெயரில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் அதனை ஒழுங்குசெய்தார். இக்காட்சியையும் அருந்ததி, சுகுணா, நிர்மலா ஆகிய மாணவியர் மூவருடனும்; மாற்கு மற்றும் சிவப்பிரகாசத்துடனும் ஓவியம் பற்றி நான் நிகழ்த்திய உரையாடல்களையும் இணைத்து, ‘ஓவிய அரங்கேற்றம்’ என்னும் தலைப்பிலான விவரணப் படமொன்று ( 80 நிமிடம்) என்னால் உருவாக்கப்பட்டது ; அந்த நாள்களில் இயங்கிய உள்ளூர்த் தொலைக்காட்சிகள்மூலம் சில தடவைகள் இது ஒளிபரப்பப்பட்டது. இதில் மாற்கு மாஸ்ரருக்குப் பெரும்மகிழ்ச்சி. “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஓவியம் தொங்கவிடப் பட்டிருந்தால், வருஷம்முழுக்க வரும் உறவினர்களிடம் அது பெரிய விளம்பரம் செய்யும்” என்றும், அவர் அடிக்கடி சொல்வார்.
'அலை'யின் ஏழாவது இதழின் அட்டை ஓவியத்தை மாற்கு மாஸ்ரர் வரைந்து தந்தார் ;அவரது மேலும் சில ஓவியங்கள் அலையின் அட்டையை அலங்கரிக்கின்றன. எண்பதாம் ஆண்டுக்குப் பின்னரே அவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. ஓவியர் சிவப்பிரகாசத் துடன் இணைந்து - இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள அவரது வீட்டின் மாடியில் - ஓவிய வகுப்புகளை நடத்திவந்தார். 1986 அளவில் இவரது தனிநபர் ஓவியக் காட்சியை ஒழுங்குசெய்ய, யாழ். பல்கலைக்கழக கலாசாரக் குழு நண்பர்கள் முன்வந்தபோது, முதலில் தனது மாணவியர் மூவரின் காட்சியே முக்கியமென்று கூறி, அவர்களின் ஒத்துழைப்புடன்
அதிகம் அறியப்பட்டிராத ஓவியர்களான அ. இராசையா, கனகசபாபதி, இராசரத்தினம், மு.கனகசபை முதலியவர்களின் வீட்டுக்கு தனது மாணவர்களையும் என்போன்ற ஆர்வலர்களையும் கூட்டிச்சென்று, அவர்களது படைப்புகளையும் அவர்களது சிறப்புகளையும் தெரியப்படுத்தினார். தனது வீட்டில் நடத்திய வகுப்புகளுக்கு அவர்பணம் பெறுவதில்லை; தனது குருவான ஓவியர் பெனடிக்ற்றும் பணம் பெற்றதில்லை என்றும் நினைவூட்டுவார். யாழ். மரியன்னை பேராலயத்தில் பீடத்தின் பின்னுள்ள சுவரிலும், குவிமாடத்தின் உட்புறமும் ஓவியங்கள் தீட்டவேண்டுமென்ற பேராவல் அவரிடம் இருந்தது; தேவையான பொருள்களை மட்டும் தந்தால் போதுமானது – தனக்கோ மற்ற ஓவியர்களுக்கோ பணம் தரத் தேவையில்லை என்றும், அப்போதைய ஆயர் தியோகுப்பிள்ளையிடம் அதனைத் தெரிவித்தபோது, யோசிக்கலாமென அவர் சொன்னதாகவும் பின்னர் இயலாதென்று சொல்லிவிட்டதாகவும், என்னிடம் கூறிக் கவலைப்பட்டுள்ளார். 1995 இல் இடம்பெயர்ந்து, சிதைவடைந்திருந்த மாங்குளம் ரயில் நிலையத்தினருகில் ஒரு கொட்டிலில் வசித்தபோது, அவரைச் சந்தித்தேன். அங்கும் உற்சாகமாக அயலிலுள்ள பிள்ளைகளுக்கு இலவசமாக ஓவிய வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார்! அயலில் வீசப்பட்டுக் கிடந்த வெண்ணிறக் கம்பிகளைக் கொண்டு பல்வேறு உருவங்களைச் செய்து, கேட்டவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்; சிலுவையில் அறையுண்ட யேசுநாதரின் உருவமொன்றை நான் பெற்று,கிராஞ்சியிலுள்ள எனது குடும்பத்தினரிடம் கொடுத்தேன்; எங்கள் கொட்டிலில் அதை நடுமரத்தில் தொங்கவிட் டிருந்தபோது, உறவினர் பலர் ஆச்சரியத்துடன் பார்த்து, அதைப் போல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள விரும்பினர்! 1998 இல் நான் ஊர்திரும்பியபோது, அவர் மன்னாரில் இருந்தார். அவரது யாழ்ப்பாண வீட்டின் ஓவிய அறை சேதமடைந்திருந்தது; நானும் அருட்பணி ரவிச்சந்திரனும், சில இளைஞர்களும் சேர்ந்து அறையைச் சுத்தப்படுத்தி, 400 வரையிலான ஓவியங்களை மீட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளோம்!
நன்றி:ஜீவநதி ஆறாவது ஆண்டு நிறைவுமலர்
- புரட்டாதி 2013 - நேர்காணலில்-
No comments:
Post a Comment