Thursday, March 14, 2013

சசிபாரதி என்கிற அற்புத மனிதன்.


வாழ்வது   அர்த்தமுள்ளதாய்  வாழ்தல்  வேண்டும். குறைந்த  பட்சம்  மனிதனாய் வாழவேண்டும். அப்படி  வாழ்கின்றவர்கள்  குறைவு.குறை கூறுதல்,பழி சொல்லல்,இருட்டடிப்பு, மனிதரிடையே புரையோடிய மனிதர்களே அதிகம். மாறாக, மனித நேயம்,அன்பு,பழி கூறாமை,அனைவரையும் அன்புடன் நேசிப்பது,முடிந்தவரை ஊக்கப்படுத்துவது என மதிக்கப்பட்ட அற்புத மனிதர் தான் சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்கள் ஆவார். அமரர்களான சுப்பிரமணியம்,செல்லம்மா தம்பதியர்க்கு மகனாக புங்குடுதீவில் 26/06/1930 இல் பிறந்தவர். எனினும் வாழ்வின் பல நாட்களை யாழ்ப்பாணம்,கொழும்பு என வாழ்ந்ததினால் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் என்றே  கணிக்கப்பட்டார். புங்குடுதீவு விக்னேஸ்வரா வித்தியாசாலை,புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, யாழ்/இந்துக்கல்லூரி, யாழ்/ மத்திய கல்லூரி, ஊர்காவற்துறை/புனித அந்தனீஸ் கல்லூரி ஆகியவ்ற்றில் தன் கல்வியைத் தொடர்ந்து க.பொ.த.தரம் வரை பயின்றார். சிறு வயது முதலே பேச்சாற்றல் நிறைந்தவராகவும்,எழுத்தின் மீது ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார். அதனால் கவிதை, கதைகள், நாடகம், கட்டுரை என தன்னைத் தயார் படுத்திக்கொண்டார். ஈழத்து குறுங்கதைகள் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்க பதிவை ஏற்படுத்தியவர்களுள் ஒருவராக கணிக்கப்படுகிறார்.
புறூப் ரீடராக வீரகேசரி,ஈழநாடு ஆகியவற்றில் கடமை ஆற்றியவர். இ.நாகராஜன், பேராசிரியர்.சு.வித்தியானந்தன் போன்றோரிடம் மதிப்பு வைத்திருந்தவர். இவரின் படைப்புக்கள் யாழ்/ஈழநாடு,விவேகி, ஐக்கியதீபம், வீரகேசரி, சிரித்திரன், மல்லிகை போன்ற ஊடகங்களில் வெளி வந்து பலரின் கவனிப்புக்குமுள்ளானார். சிறப்பான கதை சொல்லும் பாங்கு அவருக்கே உரித்தானது. ஈழநாட்டில் கடமை புரிந்த போது சக நண்பர்களுடனும் அனபாக இருந்ததை அடிக்கடி சொல்வார். நாட்டின் அமைதியின்மை காரணமாக திருச்சியில் வாழ்ந்தாலும் நினைவுகள் ஊரின் நினைவுகளுடனேயே வாழ்ந்தார் என்பது அவருடன் பேசுகையில் சொல்வார். அதிகமாக எழுதாவிட்டாலும் அர்த்தமுள்ள எழுத்துக்களையே தந்திருக்கிறார். இவரின் கதைகளை கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் சங்கம் ஊடாக 1986 இல்வெளி வந்தது. அசுர பசி தொடங்கி கலக்கம் கதைவரை தொகுக்கப்பட்ட அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுதி  சசிபாரதி கதைகள் எனும் தொகுப்பாக 1986 இல் வெளி வந்து பலரின் பாராட்டையும் பெற்றன. பேராசிரியர் சு.வித்தியானந்தன் கூட சிறப்பாக பாராட்டியிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் கூட- லண்டனில் வாழும் ஈழத்து எழுத்தாளர்  உதயணன் அவர்களின் முயற்சியால் அவருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பலரையும் நெசிக்கின்ற ஒருவரை பலரும் கண்டு கொள்லாமல் இருந்தது அவருக்கும் வருத்தம் இருந்தது. இனிய நந்தவனம் சஞ்சிகை சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தது.

இலங்கை சினிமாக் கலைஞர் வி.பி.கணேசன் அவர்களின் திரைப்படம் ஒன்றிற்கு இரண்டாவது கதாநாயகனாக ஹரிதாஸை அறிமுகம் செய்ய சிபார்சு செய்தது குறிப்பிடத்தக்கது.நாடகங்களிலும் அதிக கவனம் செலுத்தியவர். தான் காணும் வாழ்வியல் அனுபவங்களை கதைகளாக்கித் தருவதில் சசிபாரதி அதிக கவனம் செலுத்தியவர். தன்னுள்  எழும் உணர்வுகளை  எழுத  முனையும்  போதும் சமுதாயம் பற்ரிய கரிசனை அதிகம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.எனினும் பல மட்டங்களில் ஏமாற்றங்களையே  சந்தித்தார். சிவன்பண்ணை/ வைத்தீஸ்வரா கல்லூரி சந்தியில் இருக்கும் தேனீர்க்கடையில் தான் அதிகம் சந்தித்துப் பழகியிருக்கிறேன். கம்பீராமான  தோற்றம். அதற்கேற்றாற்போல மீசை.அடிக்கடி மீசையை தடவி விட்டபடி அப்படியா என்று கவனிக்கும் ஆற்றல் முன்னால் இருப்பவரை அப்படியே வாஞ்சையுடன் உள்வாங்கியபடி உட்கார்ந்திருக்கும் போது  நடிகரா,கவிஞரா,என்று நினைப்பேன்.உற்சாகமான  மனிதராகவே அன்று கண்டேன்.
தன் கதைகள் சிறப்புற செழுமை பெறுவற்கு சொக்கன், சாந்தன், யாழ்வாணன், கே.எஸ்.சிவகுமாரன் போன்றோரைக் குறிப்பிடுகிறார். இவரின் கதைகளுள் ஒன்றான பொல்லாத பசிகள் கதையை திரைப்படமாக்க முயன்றார் என்று அமரர் யாழூர்.கே.ஏ.துரையை குறிப்பிட்டுச் சொன்னார். யாழ்ப்பாணத்தில் இருந்த போது யாழ் இலக்கிய வட்டத் தலைவராகவும் இருந்துள்ளார்.பலரை நினைவு வைத்துள்ளது மாதிரி இவரை பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பரோ தெரியாது. அவரது கவலையும் அதுதான். திருச்சியில் இருந்த போது தான் எஸ்.பொ வின் முயற்சியினால் அவரது கதைகளைத் தொகுத்து மனிதர்கள் என்ற தொகுப்பை 2000  ஆம் ஆண்டில் மித்ரா வெளியீடாகக் கொணர்ந்ததை நன்றியுடன் நினைவு கூறினார். சசிபாரதி கதைகளின் இரண்டாம் பதிப்பு எனப்பலரும் கூறிக்கொண்டாலும் சசிபாரதி அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை. சில சமயம் நினைப்பதுண்டு.பல வருடங்கள் மௌனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறாரே...அதிகமாக எழுதக்கூடிய ஆற்றல்,அனுபவம் இருந்தும் எழுதாமலேயே  இருந்துவிட்டது  துர்ப்பாக்கியமே. பேசும் போது உங்கள் அனுபவங்களைக் கொண்டு நாவல் எழுதியிருக்கலாம்.அப்போது நல்லதொரு நாவலை படித்திருக்க முடியும்.அவரிடமிருந்து பதில் இதுவரை இல்லை.
சிரித்திரன், செம்பியன்செல்வன்  ஆகியோர்  சசிபாரதியைக் குறிப்பிடத்தக்க குறுங்கதையாளராகச் சொல்வார். செம்பியன்செல்வனின் குறுங்கதைகளை வாசிக்கும் போது சசிபாரதியின் கதைகளின் தாக்கத்தை உணர்ந்ததுண்டு. பூமிக்கு அனுப்பிய மனிதனின் அன்பைத் தேடும் ஏக்கம்,அவனின் இறைஞ்சுதலைப் பொருட்படுத்தாத கடவுளிடம் உமாதேவி அவனைடம் கருணை காட்டும் படி சொல்ல கடவுளும் பெண்ணைப் படைத்து பூமிக்கு அனுப்ப மனிதனின் ஏக்கமும் தணிந்ததாக கதை ஒன்றில் கூறுகிறார்.கதை சொல்லும் லாவகம் ஈர்ப்பைத் தருகிறது. 29 கதைகள் அடங்கிய மனிதர்கள் குறுங்கதைகள் சிறப்பான கவனத்தைப் பெற்றதை நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.
இன்று அவரின் (12/03/2013) நினைவை மட்டும் செல்ல காலம் பணித்திருக்கிறது. ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன் அவரின் துயர்ச் செய்தியை சொன்ன போது நேற்றுக்கூட அவரின் கதைகளை எடுத்துப் பார்த்தது நினைவுக்கு வர கவலை குடி கொண்டது. நேற்றுப்போல் இருக்கிறது அவருடன் பேசியது.தளர்ந்த உடல்,துன்பம்,துயரம்,உடல் உபாதை இவற்றுக்கு மத்தியிலும்  பலரையும் வரவேற்று உபசரிக்கும் பண்பு சொல்லி மாளாது. அவரது இழப்பு இலக்கிய உலகத்திற்கு மட்டுமல்ல.அவரது நண்பர்களுக்கும் தான். அவரின் மறைவால் துயறுறும் அவரின் குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ள காலம் காட்டி நிற்கிறது.
முல்லைஅமுதன்

No comments: