Saturday, March 24, 2012

இலங்கை வானொலிக் குயில் மறைந்தார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளராகிய திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் தனது 72 ஆவது வயதில் வெள்ளியன்று மாலை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.




மார்ச். 16. 1940 தொடக்கம் மார்ச். 23. 2012 வரை வாழ்நாள் காலத்தைக்கொண்ட இராஜேஸ்வரி சண்முகம், இலங்கையில் புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும் நாடகக் கலைஞரும் ஆவார்.


இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். இனிமையான குரல் வளத்தை இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த இவர், வானொலி நாடகங்களிலும் தனது குரல் வளத்தைப் பயன்படுத்தி சிறந்த நாடகக் கலைஞராகவும் திகழ்ந்தார்.

இலங்கை மற்றும் தமிழக வானொலி நேயர்கள் மத்தியில் வானொலி குயில் என  புகழ்பெற்றிருந்த இவர் .செய்தி வாசிப்பதில் தனக்கென ஒரு பாணியைக் கைக்கொண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனித்துவமிக்கவராகத் திகழ்ந்தார். தொழில் ரீதியில் அறிவிப்பாளர்களுக்கு இவர் ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் நிகரில்லாத ஆசானாகவும் விளங்கினார்.

1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர்.

ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு - அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையில் முதலில் படித்தார். பிறகு நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திற்கு படிக்கும் போது நடித்த "கண்ணகி" நாடகத்தை பார்த்த வானொலி நாடகத்தயாரிப்பாளர் "சானா" இவரை வானொலி நாடகங்களில் நடிக்க அழைத்தார்.

கலைக்குடும்பம் - இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றையும் மேடை நாடகங்களையும் எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி மேடை நாடகங்களில் நடித்தவர்.

 இவரது இழப்பு இலங்கையின் வானொலி துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.

இது  தொடர்பான இன்னொரு பதிவு: தேசம்

மறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் – கலாபூசணம் புன்னியாமீன்


No comments: