யாழ்ப்பாணத்து சாதியம்: காலனித்துவ சமரசம்
-மு.நித்தியானந்தன்-
"மப்பின்றிக் கால மழை காணா மண்ணிலே
சப்பாதி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது காளை இழுக்காது
எனினுமந்தப்
பாறைபிளந்து பயன் விளைப்பான் என்னூரான்"
என்று மகாகவி பாறை பிளந்து பயன் விளைவிக்கும் யாழ்ப்பாணத்து விவசாயியை வியந்து கவிதை வடித்தது உண்மைதான். ஆனால் கடும் பாறையை விட யாழ்மண்ணில் இறுகி வேரோடிப்போன சாதிய உணர்வினை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக ஆட்சி நடாத்திய ஐரோப்பிய அரசுகளாலும்கூட அசைக்கமுடியவில்லை. மாறாக யாழ்ப்பாண சமூகத்தில் மேலாண்மை செலுத்திய சாதியினர் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியைப் பயன்படுத்தி மேலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை சரித்திரம் சொல்கிறது.
பிரித்தானியப் பேரரசின் இலங்கையின் முதல் ஆளுநராகப் பதவியேற்ற பிறெடறிக் நோர்த், யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பினை தங்களின் நிர்வாகத்திற்கு வசதியானதெனக் கருதி சாதியமைப்பினை அனுசரித்துச் செல்லும் போக்கினைக் காண்கிறோம்.
யாழ்ப்பாணத்தின் கிராமிய மட்ட சமூகத் தலைமைத்துவம் சாதி வெள்ளாளர்களின் கைகளிலேயே இருந்தது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சாதியமைப்பினை ஆதாரமாகக் கொண்டுதான் இப்பிரதேசத்தின் சமூகப் பொருளாதர நடவடிக்கைகளும் சமூக உற்பத்தி உறவுகளும் அமைந்தன. சாதி, சமூகஅமைப்பின் மேற்கட்டுமானமாக அல்ல, அதுவே அடித்தளமாகவும் செயற்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரச் சமூகத்தளம் சாதியினால் வடிவமைக்கப்பட்டு, வெள்ளாள மேலாண்மையால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. உயர் குடிப்பிறப்பும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இழிவுபடுத்தப்படுதலும் யாழ்மண்ணில் தோய்ந்துபோனவை. யாழ்ப்பாணத்தின் அரும்பெரும் சுதந்திரவீரனாக போற்றப்படும் சங்கிலி தனக்கேற்பட்ட ‚வைப்பாட்டி மகன்’ என்ற இழிவினை நீக்க, தன் மூத்த சகோதரர்களை அழித்துத்தான் அரசகட்டிலேறுகிறான். இந்தச் சாதியப் பெருமைகளும் இழிவுகளும் பிரித்தானியர் ஆட்சியிலும் தொடர்ந்தன.
1806ஆம் ஆண்டு அரசு நிறைவேற்றிய 10ஆவது இலக்கக் கட்டளைச்சட்டம் உயர்சாதியினருக்கு வழங்கப்படவேண்டிய மரியாதைகள் தொடர்ந்து வழங்கப்படவேண்டும் என்பதைச் சட்டபூர்வமாக அறிக்கையிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பக்கட்டத்திலேயே சாதியமைப்புப் பாரம்பரியத்தை வலியுறுத்திப்பேண முயன்றிருப்பதை இது குறித்து நிற்கிறது.
அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடந்த நாடுகளிடையே அறிவியக்க ஒளிபாய்ச்ச வந்ததாகக்கூறும் ஆங்கிலேய அரசு வலியுறுத்திய சமூக ஒழுங்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு மற்றும் நீதி போன்ற அம்சங்களும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிய அமைப்பு, பழமையான சமூக ஒழுங்கு முறைமை, சமூகத்தின் மீதான அதிகாரக் கட்டமைப்பு, சமூக ஸ்திரப்பாடு என்பவற்றுக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்தபோது இவர்களால் சமூக நீதியின் பேரில் தீர்க்கமான நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளமுடியவில்லை.
யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பின் தளத்தில் இருந்து சிக்கல்கள் தோன்றியபோதெல்லாம் சமூக நீதியின் அடிப்படையில் அல்லாமல் சமூகத்தில் நிலவும் ‚அமைதிக்கு’க் குந்தகம் ஏற்படாதவகையில் யாழ்ப்பாணத்தில் வேரூன்றி நின்ற பழைய அதிகாரப் படிமுறையைத் தக்க வைத்துக்கொள்ளுதலே உகந்தது என்ற ரீதியிலேயே ஆங்கிலேயரின் கொள்கை உருவாக்கம் அமைந்தது.
குடியேற்ற நாட்டுச் செயலாளரும் வரலாற்றாசிரியருமான எமர்சன் டெனண்ட்(Emerson Tennen) யாழ்ப்பாணச் சாதியமைப்பின் கொடூரத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் என்றாலும் அரசின் கடந்த கால அநுபவங்களைக் கொண்டு பார்க்கின்றபொழுது சாதியமைப்பின் மீது நேரடியாகத் தலையிடுவதைத் தவிர்த்துக் கொள்வதே உசிதமானது என்று கருதினார். ஆங்கிலேய அரசு கைக்கொண்ட தலையிடாக் கொள்கையை யாழ்ப்பாணத்தின் சாதியமைப்பைப்பொறுத்தும் உறுதியாகக் கடைப்பிடிப்பது அவர்களுக்கு வசதியாயிற்று. இந்தச் சாதியமைப்பின் கோரத்தாண்டவத்தைக் காலம்தான் மாற்றியமைக்கும் என்றும் பகுத்தறிவு படிப்படியாக வளரும் போது இது தணிந்து போகும் என்றும் டெனண்ட் எழுதினார்.
நிலமானிய அமைப்பில் போல அரசுக்கு நேரடியாகச் சரீர ஊழியம் போன்ற கடமைப்பாடுகள் தாழ்த்தப்பட்ட சாதியினர் செலுத்தத் தேவையில்லை என்று 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு கொணர்ந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. எனினும் சாதியமைப்பின் வேரோட்டத்தை அதனால் எதுவும் செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணத்தின் முதல் ஆங்கிலேயக் கலெக்டராகவும் பின் அரசாங்க அதிபராகவும் கிட்டத்தட்ட நாற்பதுஆண்டுகள் (1829-1867) வடமாகாணத்தில் பணிபுரிந்த பெர்சிவல் ஏக்லண்ட் டைக்(Percival Ackand Dyke) வகுத்ததுதான் யாழ்ப்பாணத்தில் சட்டமாய் இருந்தது.
யாழ்ப்பாணத்தின் தனிக்காட்டு ராஜாவாக (‚Raja of the North’) டைக் திகழ்ந்தார். கொழும்பில்லிருந்து பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தொலைதூர எல்லையில் தனது ராஜாங்கத்தை எந்தத் தடையுமின்றி நடத்தி வந்தார். கடுமையான கண்டிப்புமிக்க பெர்சிவல் டைக், தன் காலத்திலும் யாழ் சாதியமைப்பிலிருந்து எழுந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததது.
1830இல் நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் காதிலே தோடு அணிந்ததை வெள்ளாளர்கள் எதிர்த்தனர். கிராமியத் தலமைப்பீடம் வெள்ளாளர் கைகளிலே இருந்ததால் இம்மாதிரி நகை அணிகளை இனிமேல் நளவர்கள் யாரும் அணியக்கூடாதென்று அறிவுறுத்தப்பட்டதோடு, பாரம்பரியப் பழக்கவழக்கத்தை மீறியதற்குத் தண்டமும் விதித்தார்கள். சமத்துவத்தைப் போதிக்கும் அரசு, சாதிரீதியான இந்தப் பாரபட்சத்தையும் கொடுமையையும் அனுமதிப்பது சாத்தியமாயிருந்தது. அதேசமயத்தில் இத்தகைய சாதியமைப்புச் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகாணவும் முயலவில்லை. காதில் காதணிகளை அணிந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையை டைக் நீக்கினார். பாரம்பரிய மரபுகளில் தலையிடுவதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற ஆட்சிநடத்தும் ஜாக்கிரதை உணர்வில் இது போன்ற பிரச்சினைகளை இனிமேல் ஏற்படுத்தவேண்டாம் என்று தனது கீழ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கூறியதோடு நின்றுவிட்டார்.
மீண்டும் ஒரு சாதி அடிப்படையிலான பிரச்சினைய டைக் எதிர்கொள்ள நேர்ந்தது. யானை ஏற்றுமதி செய்வதற்கான துறை மேடையை அமைப்பதற்காக பனை மரத்தைக் காவிச் செல்லுமாறு திமிலர் இனத்தவர்களைக் கிராம மணியகாறர் பணித்திருக்கிறார்.
திமிலர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணியகாறர் கட்டளைக்குப் பணிய மறுத்திருக்கிறார்கள். இத்தகைய பொதுப்பணிகளின்போது இவ்வாறு தாழ்த்தப்பட்ட சமூகத்திடமிருந்து சேவைகளைப் பெறுவது, பாரம்பரியமாக நடந்துவருவதுதானென்று மணியகாரர் தெரிவித்தார். திமிலர் இனத்தவர்களின் முறைப்பாடு தம்முன்வந்தபோது அதனைப்பரிசீலனை செய்த டைக் மணியகாரரின் நடவடிக்கை அரசாங்கத்தின் கட்டளையை மீறும் செயலே என்று கருதி பனைமரம் காவிச்சென்றதற்கான கூலியை அவர்களுக்கு மணியகாரர் தனது சொந்தப்பணத்திலிருந்தே செலுத்தவேண்டும் என்று கட்டளையிட்டார். யாழ்ப்பாணதில் கடமைக்காகத் தான் வெளியிடங்களுக்குப் போகும்போது சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களின் ஊழியத்தை இலவசமாகப் பெற்றுத் தங்குமிடங்கள் அமைத்தல் மற்றும் ஏனைய பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளுக்கு டைக் முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் யாழ்ப்பாண சமூகத்தில் வேரோடிப்போன சாதியமைப்பின் அகங்காரம் அவ்வளவு லேசாக அடங்கிவிடுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பரம்பரைபரம்பரையாக வழங்கிவந்த மரியாதைகளையும் கௌரவங்களையும் தங்களுக்கு வழங்குகிறார்களில்லை என்று 1831இல் அப்போது கலெக்டராக இருந்த டைக்குக்கு பெட்டிசன் அனுப்பியிருந்தார்கள். சாதியடிப்படையிலான இந்தக் கோரிக்கையை பெர்சிவல் டைக் கோட்பாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அந்த நிலைப்பாட்டை அவர் பூரணமாக நிராகரித்து விடவில்லை. நிர்வாகத்தைக் கொண்டு நடத்த சாதிவெள்ளாளர்களின் மணியகாரர் தலைமைத்துவம் அரசுக்கு அவசியமாயிருந்தது. எனவே டைக் இந்த வெள்ளாளத் தலைமையினரின் முறைப்பாட்டை நேரே கவர்னருக்குத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
ஆட்சி நிர்வாகத்தில் தங்களுத் துணையாயிருக்கும் கிராமிய வெள்ளாளத் தலைமைத்துவம் உரிய மரியாதையோடும் தனித்துவத்தோடும் பேணப்படவேண்டுமென்பதில் அரசு அக்கறைகாட்டியிருக்கின்றது. பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் யாழ்ப்பாணத்துக் கச்சேரிகளின் வராந்தாவில் தரையில்தான் வெள்ளாள மணியகாரர்கள் உட்கார்ந்திருக்கவேண்டியதாயிற்று. இது ஏனைய தாழ்த்தப்பட்ட மக்களின்முன் தங்களுக்கு அவமரியாதையானது என்று சாதிவெள்ளாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை டைக் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க அனுமதித்திருக்கிறார்.
பொதுக் கிணறுகளில் எல்லா சாதியினரும் தண்ணீர் அள்ளுவதால் கிணறு ‚தீட்டுப்பட்டு’ தாங்கள் அத் தண்ணீரைக் குடிக்கமுடியாதென்று வெள்ளாளர்கள் கோரியதையேற்று அவர்களது அந்தஸ்தை நிலைநிறுத்த அவர்களுக்கென்று தனியே கிணறு வெட்டிக்கொடுக்கவும் டைக் ஏற்பாடுசெய்தார். அரசாங்க ஊழியர்களின் சுய கௌரவத்தை உயர்த்துவது அரசின் தொடர்ந்த ஆசை என்று கூறிய டைக் அவர்கள் விசேடமாகவும் தனி மரியாதையுடனும் நடத்தப்படவேண்டுமென்று கோருவது நியாயமென்று கருதினார்.
1849 மார்ச் மாதம் பருத்தித்துறை-புலோலியில் தட்டார் சமூகத்தவர்கள் சாதிவெள்ளாளர்களுக்கு எதிரான முறைப்பாட்டை அரசிடம் கையளித்தபோது கவர்னர் இப்பிரச்சினையை விசாரித்து அதனைத் தீர்த்து வைக்குமாறு யாழ்ப்பாண அரசாங்க அதிபரான டைக்கைக் கேட்டிருந்தபோது அவர் அந்த விசாரணையைச் சாதுரியமாகத் தவிர்த்துக்கொள்ளவே விரும்பினார். சாதியைப் பகிரங்கமாக அங்கீகரிக்கும் நிலையைக் கவனமாகத் தவிர்க்குமாறு விதிக்கப்படிருக்கும் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த முறைப்பாடும் சாதியடிப்படையில் எழுந்திருந்ததால் இதனை விசாரிக்க முற்படுவது அவசியந்தானா என்ற பாணியில் டைக்கின் பதில் அமைந்தது. தட்டார் சமூகத்தவர்கள் தங்களின் மணியகாரரான வெள்ளாளர் தமக்கு அநீதியாக நடப்பதால் தமது சொந்தச்சாதியிலிருந்தே தலைமைக்காரரைத் தெரிவுசெய்யுமாறு கோரியிருந்தனர். வண்ணார் மற்றும் முடிதிருத்துவோரிடமிருந்தும் வெள்ளாளருக்கெதிரான முறைப்பாடுகள் அரசாங்க அதிபரிடம் வந்தவண்ணம் இருந்தன.
யாழ்ப்பாணத்தில் சாதிச்சண்டைகள் தொடர்ச்சியாக சகல இடங்களிலும் நடந்துகொண்டிருந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களில் சமூக நீதி காக்கவேண்டிய நிர்வாகம் சாதுர்யமாக ஒதுங்கிக் கொண்டது. சாதிப்பிரச்சனைகள் வன்முறையில் முடிந்தபோது அவை குற்றவியல் பிரச்சனைகளாகி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டன. ஊர்காவற்துறையில் ஒரு பிணத்தைப் புதைப்பது தொடர்பாக கத்தோலிக்கர்களின் மத்தியில் சாதிசார்ந்து பிரச்சினை எழுந்தபோது உள்ளூர்வாசிகளின் சடங்காசாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லையென்று அரசு பிரச்சனையைக் கைகழுவி விட்டது. நீதிமன்றத்திற்தான் நியாயம் கோரவேண்டுமென்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Entrance to old Dutch Fort at Jaffna, Ceylon. Feb. 20, 1924. W.A.Sawyer in rickshaw
தச்சுத்தொழிலாளி ஒருவர் தனது மகளுடைய திருமணத்திற்குப் பந்தல் போட்டு வெள்ளைத்துணியால் அலங்காரம் செய்திருந்தார். வெள்ளாளர்கள் அதை எதிர்த்துப் பந்தலைக் கலைத்து திருமணத்தைக் குலைக்க முயன்றனர் . அரசிற்கு இது முறைப்பாடு செய்யப்பட்டபோது அரசின் உதவி அதிகாரி திருமணத்திற்கு நேரேசென்று அங்கு குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியதாயிற்று.
கொள்கை ரீதியாக அரசாங்கம் சாதிப்பாகுபாடை அங்கீகரிக்கவில்லையென்றாலும் அதனை உறுதியாக நடைமுறையில் எதிர்க்கவில்லை. சாதி ஒடுக்குமுறையோடு அது சமரசம் செய்து கொண்டது. பிரஸ்தாப இந்த நிகழ்ச்சியிலும் இதற்குப் பின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பந்தல்களில் வெள்ளைத் துணியால் அலங்காரஞ் செய்ய விசேட பத்திரங்களில் வெள்ளாளத் தலைமைக்காரர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டியிருந்தது. வெள்ளார்கள் அனுமதி பெறவேண்டாத அர்களுக்கே உரித்தான விசேட உரிமையாக அது அமைந்தது.
1864 இல் நல்லூரில் நொத்தாரிஸாக தட்டார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்த போதும் வெள்ளாளர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு உருவானது.
அரசாங்க அதிபர் பெர்சிவல் டைக் தன் ஆட்சிக்காலத்தில் தனது அதிகாரத்திற்குச் சிறிய அச்சுறுத்தலாக எது வந்தாலும் அதனை நிர்த்தாட்சண்ணியமாக எதிர்த்து வந்திருக்கிறார். ‚பிரமச்சாரியாக’ அவர் கூறப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்குத் ‚தொடுப்பு’ இருந்திருக்கிறது. கோப்பாயில் மரணமான டைக் யாழ்ப்பாணத்தை விரும்பி அங்கு பதவி வகித்துவந்திருக்கிறார் என்பதைக் குறிப்பிடவே வேண்டும்.
கிறிஸ்தவ மிஷனரிகள் கல்விப் போதனைகளில் ஈடுபடுவதையும் யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்புகளைத் தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் டைக் விரும்பவில்லை. இந்த மிஷனரிகளைத் தனது அதிகாரத்துக்குச் சவாலாக டைக் கருதினார். அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் அனாவசியத் தலையீடு மேற்கொள்பவர்களாக அவர்களை நினைத்தார். சென். ஜோண்ஸ் கல்லூரியினைக்கூட அவர் ஒரு இடையூறாகவே கருதினார். சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபரை அவர் பலமுறை சந்திக்க மறுத்திருக்கிறார். வேலை காலி இடங்களுக்கு தங்கள் கல்லூரி மாணவர்களை சென். ஜோண்ஸ் கல்லூரி அதிபர் டைக்குக்குச் சிபாரிசு செய்தபோது அவர் அதனை ஒருபோதுமே கருத்தில் கொண்டதில்லை.
19ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளும் அங்கு ஆழ வேரோடியிருந்த சாதி அமைப்பினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்னையில் வெஸ்லியன் மெதடிஸ்ற் கல்லூரியில் வண்ணார் இனத்தைச் சேர்ந்த பையனை அனுமதித்ததற்காக வெள்ளாளர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அப் பையனைப் பாடசலையிலிருந்து வெளியேற்றவேண்டியதாயிற்று. மீண்டும் 1847இல் இப்பாடசாலையில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையன் அனுமதிக்கப்பட்டபோது வெள்ளாளர்கள் எதிர்த்தபோது பள்ளிநிர்வாகம் அதற்கு இணங்கவில்லை. இதனைச் சகிக்கமுடியாத வெள்ளாளப் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிக்கொண்டனர்.
இந்தப் பாடசாலை அனுமதிப் பிரச்சினைகள் பற்றி ஆறுமுகநாவலர் பின்வருமாறு எழுதுகிறார்: வண்ணார்பண்ணையிலுள்ள வெஸ்லியன் மிஷன் இங்கிலீசுப்பள்ளிக்கூடத்தில் ஒரு வண்ணாரப்பையன் மூன்று நான்கு வருஷம் படித்தவன். இவ்வருஷத்திலே மற்றப் பிள்ளைகள் ‚இவ்வண்ணானை எங்களோடிருத்திப் படிப்பிக்கின் நாங்கள் இப்பள்ளிக்கூடத்தை விட்டுவிடுவோம்’ என்றார்கள். அதுபற்றி முதலுபாத்தியார் தாங் கிறிஸ்தவராயிருந்தும், வண்ணானைத் தள்ளிவிட்டார். வண்ணான் பறங்கித் தெருவில் இருக்கிற வெஸ்லியன் பாதிரியிடத்தே போய், தனக்கு கிறிஸ்து மதமே சம்மதமென்றும், தனக்கு ஞானஸ்நானம் செய்து தன்னை அங்குள்ள வெஸ்லியன் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டான். பாதிரியார் தாம் அதற்கு உடன்பட்டும், அவனைச் சேர்த்துக்கொள்ளுமபடி தமக்குக் கவர்மெண்ட் ஏசண்டு எழுதிய கடிதம் பெற்றும், அப்பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் சுதேச குருமாரும் உபாத்தியாயர்களும் உடன்படாமையால், வண்ணானைச் சிலகாலம் அடிக்கடி அலைத்துப் பின் ஓட்டிவிட்டார். அவன் இப்போது நெடுந்தூரத்திலுள்ள கத்தோலிக்கப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறான்.
‚அப்பள்ளிக்கூடத்திற்றானே 1847ஆம் வருடம் ஒரு நளப்பையன் படித்தலைக்கண்டு ஏறக்குறைய ஐம்பது பிள்ளைகள் ஓட்டமெடுக்கவும் அந் நளப்பையனைத் தள்ளாத பாதிரியாரைப் பித்தரென்று நினைத்தரோ! நளவனிலும் தாழ்ந்தசாதி வண்ணானென்று கொண்டாரோ! சாதி வேற்றுமை பாராட்டுதல் கிறிஸ்து நாதருக்குஞ் சம்மதமென்று விவிலிய நூலில் எங்கேயாயினும் இப்போது கண்டாரோ? வண்ணானுடைய ஆன்மா பரமண்டலத்தில் இடம்பெறாதென்று தேவதூதன் சொப்பனத்தில் வந்து சொல்லக்கேட்டாரோ! தேவவாக்கினும் பெரிது தம்மைச் சேவிக்குஞ் சுதேச குருமார், உபாத்தியாயர்கள் வாக்கென்று தெளிந்தாரோ! வண்ணானைப் பற்றி மற்றப் பிள்ளைகளெல்லாம் ஓடிவிட்டால், அவர்கள் இருக்குஞ் சம்பளத்தினாலும் அவர்கள் பொருட்டுக் கவர்மெண்டார் உதவும் பணத்தினாலும் தமது பை நிரம்பாதேயென்று பயந்து விட்டாரோ! யாழ்ப்பாணத்திலே சாதி வேற்றுமை அறுத்துக் கிறிஸ்து மதத்தை நிலைநாட்ட வல்லவர்கள் பொருள்வாஞ்சைப் பிசாசா வேசிகளாகிய இந்தப் பாதிரிமாரும் சுதேச குருமாரும் தானோ! சபாசு! சபாசு!’
ஆறுமுகநாவலரின் இந்த நீண்ட குறிப்பு யாழ்ப்பாணத்தில் அன்று ஆழ்ந்து வேரூன்றி நின்ற சாதிவெறித் தனத்திற்கு அச்சொட்டான சாட்சியாக அமைகிறது. இவ்வளவு அழுத்தந் திருத்தமான – இறுகிப்போன சாதி அமைப்பின் பின்னணியிலே கிறிஸ்தவ மிஷனரிகள் இயங்க நேர்ந்தன. இருப்பினும் மிஷனரிமாரின் கல்வித் திட்டம் யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியமைப்பின் கோட்டைகளில் பெரும் துளைகளை ஏற்படுத்தவே செய்தது. சாதியமைப்பினால் வட்டுக்கோட்டை செமினரியில் ஆரம்பகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றி டெனன்ட் தனது ‚Christinanity in Ceylon’ என்ற நூலிலே குறிப்பிடுகிறார்.
மிஷனரிமார் தமது மதப்பரம்பலுக்குத் தடையாகச் சாதியமைப்பு நிலவுவதாகவே அதனை நோக்கினர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பணிபுரிந்த மிஷன்ரிமாரின் கடிதங்களிலும் அவர்கள் வெளியிட்ட சஞ்சிகைகளிலும் சாதி பற்றிய குறிப்புக்கள் வரும்போதெல்லாம் அது மதமாற்றத்திற்கு எவ்வாறு தடையாக அமைகிறது என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சாதியமைப்பிற்கு எதிராக சமயம்பரப்பலில் ஈடுபட்ட கிறிஸ்தவசமயமும் யாழ்ப்பாணத்தின் சாதியக்கொடூரத்தின் முன் சரணாகதியடைய நேர்ந்தமை இந்தச் சோக நாடகத்தின் மற்றுமொரு விரிவான கதை.
1871இல் மிஷனரிமாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆறுமுகநாவலர் சைவபரிபாலனசபையை நிறுவினார். அவர் நிறுவிய பாடசலையிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனுமதிக்கப்படவேயில்லை. சைவ பரிலபாலனசபை ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டில்தான் 1871இல் மாவிட்டபுரத்தில் சாதிக்கலவரங்கள் வெடித்தன. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், ஆகியோருக்கிடையில் சாதிமோதல்கள் எழுந்தன. அம்பட்டர்களின் உடுப்புக்களைத் தோய்க்கமுடியாது என்று வண்ணார்கள் மறுத்ததன் பின்னணியில் வெள்ளாளர்களே இருந்திருக்கிறர்கள்.
இந்தச் சாதிக் கிளர்ச்சிகள் டைக்கிற்குப் பின் பதவியேற்ற அரசாங்க அதிபர் டுவைநாம்(Twynam) காலத்திலும் தொடரவே செய்தன. இவர்களுக்கெல்லாம் பின்னால் ‚Village in the jungle’ என்ற அற்புதமான ஆங்கில நாவலை எழுதிய சிறந்த எழுத்தாளரான லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) யாழ்ப்பாணஹ்தில் அரசாங்க அதிபராகப் பணியாற்றினாரெனினும் அவர் யாழ்ப்பாண வெள்ளாள எதிர்ப்பின்பேரில் வெளியேறவே நேர்ந்தது. யாழ்ப்பாணக் கச்சேரியில் லெனார்ட் வூல்வ் (Leonard Woolf) பணியாற்றியபோது பிராமண வகுப்பைச் சேர்ந்த கிளாக்கர் தரையில் எச்சில் துப்பி அசுத்தப் படுத்திவிட்டதைப் பார்த்ததும் அவரையே தரையைச் சுத்தப்படுத்துமாறு பணித்துவிட்டார். தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அவரே தரையைச் சுத்தப்படுத்தவேண்டிய நிலை அவருக்குப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்படுகின்றது. வூல்பின் இத்தகைய கண்டிப்பான நடவடிக்கைகளால் அவர் யாழ்ப்பாணத்தில் நிலைக்க முடியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றி நல்லபடியாக ஒன்றும் தனது குறிப்புக்களில் எழுதவில்லை.
யாழ்குடாநாட்டில் வேரூன்றி நின்ற சாதியபிமானம் யாழ்ப்பாணத்தவர்கள் 19ஆம் நூற்றாண்டில் மலாயாவை நோக்கிக் குடிபெயர்ந்தபோது அதுவும் அவர்களோடு சேர்ந்து வெளிநாடுகளிலும் செழித்தது. 1861இல் கோலாலம்பூரில் ஸ்ரீபரஞ்சோதி விநாயகர் ஆலயத்தைக் கட்ட முன்நின்ற ஊரெழுவைச் சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் விஸ்வலிங்கம் தான் உயர் வெள்ளாளப் பழங்குடியில் வந்தவராகக் கல்வெட்டிலே பொறித்துச் சென்றிருக்கிறார்.
இந்தச் சாதிவெறி இருபதாம் நூற்றாண்டிலும் இன்னும் கோரமாகத் தலைவிரித்தாடியது. 1907இல் பொன். அருணாசலம்கூட சாதியமைப்பு அவசியமானது, நலம் பயப்பது என்று எழுதினார். 1921இல் யாழ்ப்பாணத்தில் ‚தமிழர் நாகரிகம்’ பற்றியுரையாற்றிய மறைமலை அடிகள் தமதுரையில் வெள்ளாளரின் நாகரிகம் குறித்தே பேசினார்.
1930இல் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதல்முறை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது அவர்களுடன் வெள்ளாள மாணவர்களுக்கும் சமபோசனம் வழங்குவதை எதிர்த்து சேர் பொன். இராமநாதன் கவர்னரிடம் முறையிட்டார்.
1929ஆம் ஆண்டு பாடசாலைகளில் இன, மத, சாதி, தேசிய வேறுபாடு காட்டாமல் எல்லாப் பிள்ளைகளுக்கும் சரியாசனம் கொடுக்கவேண்டுமென அரசு அறிவித்தபோது வெகுண்டெழுந்த வெள்ளாளர்கள் பதினைந்து பாடசாலைகளைத் தீக்கிரையாக்கினார்கள்.
தம் சொந்தச் சகோதரர்களையே அடக்கியும் ஒடுக்கியும் இழிவுபடுத்திய யாழ்ப்பாணச் சமூகத்தின் கொடூரத்தின் கதை அவலம் நிறைந்த, கறை படிந்த கதையாகும்.
கட்டுரையாசிரியர் மு.நித்தியானந்தன், அறியப்பட்ட இலக்கிய விமர்சகர், லண்டனில் வசிக்கின்றார் .
2002 ஆண்டு கரவைதாசன், கொக்குவில் கோபாலன் இருவராலும் தொகுக்கப்பட்ட "வான்பதி" தொகுப்பிலிருந்து