தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் அவர்கள் இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருது பெற்றவர் இன்று காலமான செய்தி கிட்டிக் கலங்கி நிற்கிறோம்.
தனது எழுத்துக்களால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வினை வரலாறாக்கிய தெணியான்
1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப்பிரதேசத்திலுள்ள பொலிகண்டி கிராமத்தில் பிறந்தவர். தொழில்ரீதியில் தமிழ் ஆசிரியராக நீண்டகாலம்பணியாற்றி ,யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது தலைமைஆசிரியர்உயர்வுப் பொறுப்புப் பெற்றவர், தொடர்ச்சியில் பகுதித்தலைவர்,கனிஸ்ட அதிபர்,உபஅதிபர்,தொலைக்கல்விப்போதனாசிரியர் போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு ஓய்வு பெற்றவர். முற்போக்கு எழுத்து அணியை சேர்ந்த தெணியான் கலகக்கார எழுத்தாளர்கள் அணியில் முதல் வரிசையினை சேர்ந்த படைப்பாளி .
1964ல்’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப்பிரவேசம் ஆரம்பமானது.
சுமார் 150 சிறுகதைகள் ,10 நாவல்கள்,3. குறுநாவல்கள்,5 வானொலிநாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள்,செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.
இவரது வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கைஅரசு ‘சாகித்யரத்னா’(2013) ,வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’, (2008),இலங்கை இந்து கலாசார அமைச்சு’கலாபூஷணம்’(2003) போன்ற விருதுகளை வழங்கி இவரைக்கௌரவித்துள்ளது.
இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம்’பரிசையும்,’மரக்கொக்கு’ நாவல் இலங்கைஅரசினதும்,வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும் ,’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல் இலங்கைஅரசின் சாகித்திய விருதையும்,’
‘குடிமைகள் ‘நாவல் இலங்கை அரசின் சாகித்தியவிருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல் தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும்,சுபமங்களா பரிசையும் ,சின்னப்பபாரதி
அறக்கட்டளை விருதையும் , ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும் பெற்றுள்ளன.
சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் இளவயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தளகர்த்த அங்கம் வகித்த நாளில் சங்கத்தின் யாழ் கிளைச்செயலாளர் பொறுப்பினை வகித்தவர். சிறுபான்மைத்தமிழர் மகாசபையில் இணைந்து சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப்போராளி.
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது.
எனக்கு தமிழ் கல்வியை புகட்டிய ஆசான். எனது தந்தையாரை அண்ணர் என அழைத்தாலும் அவரது நெருக்கமான தோழர். எனக்கு சிறந்த வழிகாட்டியாகவும் ,ஆதர்சனமாகவும் விளங்கிய
அவரது இழப்பு பேரிழப்பாகும்.
No comments:
Post a Comment