-கரவைதாசன்-
"மனம் கொண்டவர்களின் தந்தை. " எனஉலகறிந்த திச் நாட் ஹான் காலமானார்.

போரும் அமைதியும் வாழ்வாகிப்போன உலகில் சாத்வீகப் போராட்டத்தினால் அமைதியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்புண்டு என்று கற்பித்த மஹாத்மா காந்தி, மாட்டீன் லூதர் கிங்-யூனியர் போன்றவர்கள் வரிசையில் வைக்கப்படும் ஒருவராக திச் நாட் ஹான் (Thich Nhat Hanh) இருந்தார்.
இவர் உலகின் மிகப் பெரிய ஜென் பௌத்தர் ஆவார்,
அவர் பௌத்தத்தைப் பற்றிய கோட்பாட்டுகளில் ஈடுபட்டிருப்பதை விட, பௌத்தத்தை நம் வாழ்விலும், அன்றாட வாழ்விலும் எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அதன் வெளிப்பாடாய் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார், அவை மிகவும் நடைமுறைக்குரியவை என்பது எனது மனக்கணிப்பு.
ஊடகங்கள் அவரை "நினைவின் தந்தை" என்றும் மனம் கொண்டவர்களின் தந்தை என்றும் அழைத்தன மற்றும் மார்ட்டின் லூதர்கிங்-யூனியர் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார்.
1926ல் வியநாமில் பிறந்த திச் நாட் ஹான் தனது பதினாறாவது வயதினில் துறவறம் பூண்டார், 1960களில் அமெரிக்காவுக்குப் பயணம் செய்தார். இங்கே அவர் கொலம்பியா
மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் கற்பித்தார்.
அமெரிக்காவில் வாழ்ந்த காலங்களில் தான் அமெரிக்கா வியட்நாம் மேல் மேற்கொண்ட போருக்கு எதிரான பகிரங்க கடிதத்தினை மார்ட்டின் லூதர் கிங்- யூனியருக்கு எழுதினார். தொடர்ந்து பூமி எங்கள் தாய் எனும் பதாகையின்கீழ் மக்களைச் சேர்த்து உலகின் அமைதி வேண்டி அமைதியான ஊர்வலங்கள் செய்தார். இச்செயற்பாடுகளுக்காக அங்கிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார்.
பிரான்சில் உள்ள கான்வென்ட், பிளம் எனும் குக் கிராமத்தில் வசித்தார். அங்கே வசித்துவந்த வேளையில்த்தான் நூற்றுக்கணக்கான மனமும் பெளத்தமும் சார்ந்த புத்தகங்களை எழுதினார். அவரது 90வது வயதில் 2014 இல் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது,பேச்சுத் தொடர்பற்றிருந்த அவர் செப்டம்பர் 2015 இல் திரும்பவும் தனது முதல் வார்த்தைகளைச் சொன்னார். 2018ல் திரும்பவும் தாயகம் திரும்பினார். அங்கே து ஹியூ கோவிலில் தனது இறுதி நாட்களைக் கழிக்க அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார்.
சனிக்கிழமை மற்றும் கடைசி ஐந்து நாட்களில் ஹியூவில் தொடங்கும் அவரது இறுதி ஊர்வலத்திற்கு அரசாங்கம் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இவரது செய்தி எனது சிந்தையை எனதூரின் பக்கம் இழுத்துச் சென்றது. கடந்த 2012ல் நான் ஊர் சென்றபோது கன்பொல்லை கிராமத்தின் தந்தை அதிபர் க. இராசரத்தினம் அவர்களுடன் சில நாட்களை செலவு செய்தேன். அவ்வேளை அவர் துறவி திச் நாட் ஹான் அவர்களை அவரது பெயரினை குறிப்பிடாது மஹாயானவகையைச் சேர்ந்த இந்த ஜென் பெளத்த துறவிஎன அவரைப் பற்றி குறிப்பிட்டார். யாழ் கரவெட்டி கன்பொல்லையில் அமைந்துள்ள தமிழ் சிங்கள பெளத்த பாடசாலையான ஸ்ரீநாரத வித்தியாலயத்தின் தொடக்கத்துக்கு உறுதுணையாக அமர்ந்த வணக்கத்துக்குரிய நாரத தேரர் அவர்கள் 1966ல் வியட்நாமில் நடைபெற்ற போரை நிறுத்தக் கோரி வியட்நாமுக்கும் அமெரிக்காவுக்கும் சென்று திச் நாட் ஹான் அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து "போர் தவறு" எனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகச் சொன்னார். இப்பேர்ப்பட்ட வரலாறுகளை சுமந்து நிற்கும் கிராமத்தினை நினைத்து மூச்செறிகிறேன்.
No comments:
Post a Comment