Saturday, June 13, 2020

பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

-தமயந்தி-

காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.
தேசத்தின் வான்பரப்பெங்கும் வியாபித்து ஒலிக்கும் எக்காளத்தொனிகளை அள்ளி முகங்களில் அப்பியபடி, வண்ணத்துப் பூச்சிகள்போல் சிறகடிக்கும் சிறுவர் பட்டாளங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பாடசாலை ஊர்வலங்கள், அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், படையணிகளின் அணிவகுப்புக்கள், இயல், இசை, நாடகப் பள்ளிகளின் வீதிநிகழ்வுகள்..... இப்படி குடிகள்பூராவும் தெருவில் இறங்கிக் கொண்டாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வர். ஆண்கள் பெண்கள் சிறுவர் முதியோர்களென தமது தேசிய உடைகளில் தெருக்களை நிறைத்து வலம்வருவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். நோர்வேயின் தேசியதினம் இன்று. எங்களுக்கென்றொரு நாட்டின் விடுதலைக்காகவும் யுத்தம் செய்தோம். மிக நீளமான யுத்தம். சுதந்திரமான எங்கள் தெருக்களிலும் இப்படி எமது சிறுவர்கள் கைகளில் தாங்கிய கொடிகளை அசைத்தபடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியபடியும் கொண்டாடித் திரிவர் என்ற கனவும் இருந்தது. தோற்றுப் போனவர்கள் ஆனோம். கைகள் வைத்துத் தைத்த சட்டைகளை, கைகளை இழந்த சிறுவர்களுக்கு அணிவித்து அழுபவரானோம்.
ஆனால், இன்று தூக்கம் கலையாதவோர் பட்சியைப்போல நள்ளிரவுச் சூரியதேசம் அடங்கிக் கிடக்கிறது.
-------------------
கொரோனா உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி, நிலவறையில் சுயமுடக்கமாகி இன்றோடு எனக்கு எழுபத்தைந்தாவது நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பூக்கடைக்காரக் கிழவி மார்கிரத்தா என்ற எனது பூவாத்தாவின் தோட்டத்துக்குப் போகவேண்டும். பல வாரங்களாகப் பூக்கடை திறக்கவில்லை. இனியும் எப்போ திறக்கப்படும் என்பது கிழவிக்கும் தெளிவில்லை. நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேராகவே தோட்டத்துக்கு இன்று பன்னிரண்டு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தாள் பூவாத்தா. இரண்டு கிலோமீற்றர் நடந்துதான் போக வேண்டும். ஒருவாறகப் படுக்கையை விட்டு எழுந்தாயிற்று.

------------------
பூவாத்தாவின் தோட்டத்தின் நீட்சியாகத்தான் அவளின் அழகிய சிறிய பழைமையான வீடு. எனது வரவைப் பார்த்தாபடி வீட்டு வாசலிலேயே நின்றிருந்தாள் பூவாத்தா. தேசிய உடையில் மிகவும் அழகாக இருந்தாள். என்னைக் கண்டதும் தேசியதின வாழ்த்துக்களைச் சொன்னாள். பதிலுக்கு நானும் சொன்னேன். "இந்தவருடத்தின் தேசிய தினத்தைக் கொரோனா பாழாக்கி விட்டது, சிறுவர்களையிட்டுத் துக்கமாக இருக்கிறது" என்றாள். "உண்மைதான்" என்றேன். வேறென்ன சொல்ல முடியும்? நோர்வேயின் தேசிய தினத்தை மட்டுமா பாழாக்கினார் திருவாளர் கொரோனப்பர், உலகத்தையே பந்தாடிக் கொண்டிருக்கிறார். உலகம் பந்து வடிவமானது என்பதை குரோனப்பர் இதை உருட்டி விளையாடுவதிலிருந்து நம்பித்தானாக வேண்டும்.
தோட்டத்துக்குள் அழைத்துச் சென்ற மார்கிரத்தா தோட்டக் குடிசையின் வாசல்வளையில் கட்டித் தொங்கிய பூவாளிக்குள் இருந்து அந்த மலர்ச்செண்டை எடுத்துத் தந்தாள். பன்னிரு இளநீல ரோஜாக்களைக் கொண்டு அழகாகக் கட்டிய செண்டு.
"மிகவும் அழகாக இருக்கிறது மார்கிரத்தா, மிகவும் நன்றி" என்றேன்.
"நன்றி, நன்றி. இது நிச்சயம் உனது கரோலின் இசபெல்லாவுக்குப் பிடிக்கும். அவள் இதை விரும்புவாள். இதில் உனது காதலும் நிரவிக் கிடக்கிறதல்லவா. அவள் இதைத் தன்னோடு எடுத்துச் செல்வாள். நான் நம்புகிறேன்" என்றாள் கிழவி.
பணம் கொடுப்பதற்காக காற்சட்டைப் பொக்கற்றுக்குள் கையை விடும்போது கேட்டாள் "பணம் தரப் போகிறாயா நண்பா?"
"ஆமாம்"
"வேண்டாம். இது உனக்காகவும் அவளுக்காகவும் எனது பரிசாக இருக்கட்டும்" என்றாள். சற்றுத் தயங்கினேன். "நல்லது நண்பா. அதிகம் யோசிக்காதே. நடந்தா வந்தாய்?"
"ஆமாம்"
"மலர்களில் வெய்யில் படாமல் எடுத்துச் செல்" எனச் சொன்னபடி, தோட்டக் குடிசைக்குள் சென்று ஒரு அலுமீனியப் பையை எடுத்துவந்து தந்தாள். இருவரும் விடை பெற்றுக் கொண்டோம்.
--------------------------
ஊடகவியல் பயிலும் மாணவர்களில் பத்திரிகைத்துறையைத் தேர்வு செய்து கற்பவர்கள் தமது இறுதியாண்டுப் பரீட்சைக்கு முன்னதாக நான்கு அல்லது எட்டு வாரங்கள் களப் பயிற்சிக்காக எமது பத்திரிகை நிறுவனத்துக்கும் வருவார்கள். அப்படி வரும் மாணவர்களில் சிலர் என்னிடமும் அனுப்பி வைக்கப் படுவார்கள். அப்படி 2004ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் செய்திப்பிரிவு இயக்குநர் அழைத்துவந்து என்னிடம் அறிமுகப் படுத்தப் பட்ட மாணவிதான் கரோலின் இசபெல்லா. வயது22. நான் வாழும் தீவுதான் இவளது வதிவிடமும். எட்டு வாரங்கள் களப்பயிற்சி.
செய்திகள் சேகரிக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், இவர்கள் எழுதும் செய்திகளுக்கான படங்களை எடுக்க வேண்டும். அதேவேளை செய்திகள் சேகரிக்கும்போது இவர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கவும் வேண்டும், எழுதப்படும் செய்திகளுக்கான தலைப்பை இருவருமாகத் தீர்மானித்து, அந்தத் தலைப்பை உள்ளடக்கியதாகப் பொருத்தமான படத்தையும் எடுத்துத் தேர்வு செய்யவும் வேண்டும்.
ஒரு வாரத்திலேயே கரோலின் இசபெல்லாவிடம் தேர்ந்த நிருபருக்குரிய ஆளுமையை உணர முடிந்தது. செய்திகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதனை எழுத்துருவாக்குவதிலும், வாசகர்களைச் சட்டெனப் படித்துப் பார்க்கத் தூண்டும் தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதற்கான பொருத்தமான படங்களை என்னிடம் கேட்டு வாங்குவதிலும் மிகுந்த நேர்த்தியாகச் செயற்பட்டாள்.
எட்டு வாரங்களிலும் செய்திகள் சேகரிப்பதற்காகவும், நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காகவும் இருவரும் கிட்டத்தட்ட பதினைந்து தீவுகளுக்குப் பயணித்திருப்போம். களப்பயிற்சி முடித்து அவள் செல்லும் இறுதி நாளன்று J.P.Chenet Pays சிவப்பு வைன் போத்தல் ஒன்றையும், இளநீல ரோஜாமலருடன் கூடிய நன்றி மடலொன்றையும் பரிசளித்திருந்தாள்.
அதன்பின் அவளை நான் பார்த்தது 2007 கோடையில்தான். தனது ஊடகவியல் கல்வியை முடித்தபின் இரண்டு வருடங்கள் தலைநகர் பட்டினத்தில் வார இதழ் ஒன்றில் பணியாற்றினாள். தனது தாயைத் தீவில் தனியனாய் விட்டுவிட்டு தலைநகரில் தான் தனியனாய் இருந்து வேலை பார்ப்பதை அவள் தொடர்ந்தும் விரும்பவில்லை. பணிவிடை பெற்றுக்கொண்டு தீவுக்கே வந்து விட்டாள்.
நான் பணியாற்றும் நாளேட்டில் தற்போதுதான் கோடைகாலச் செய்தியாளராக இரண்டு மாதங்கள் நிருபராக நியமிக்கப் பட்டிருந்தாள். கோடைகால இரண்டு மாதங்களும் இருவரும் இணைந்து பணியாற்றினோம். அநேகமாக எங்கள் பிரதேசத்தின் அத்தனை தீவுகளுக்கும் பயணித்தோம். கோடைகாலக் கலை நிகழ்வுகள் பலவற்றைச் செய்திகளாக்கினாள், நான் படங்களாக்கினேன். புகைப்படக்கலை தொடர்பாக நிறையவே என்னிடமிருந்து அறிந்துகொண்டாள். தெரிந்தவற்றைச் சொல்லிக் கொடுத்தேன். எனது கமெராக்களிலொன்று அவளுடனேயே இருந்தது. வியந்துகொள்ளும் வகையில் பல படங்களை எடுத்தாள். அவற்றிற் சில பிரசுரங்களுக்காகவும் தேர்வு செய்து கொடுத்தேன். அவள் எடுத்த படங்கள் பிரசுரமாகும்போது மகிழ்ந்தாள். தனது எழுத்துக்களைவிடவும் தான் எடுத்த படங்களையிட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்.
கரோலின் இசபெல்லாவின் கோடைப் பணிக்காலம் முடிந்த அன்று அவளது தாயைச் சந்திக்க வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். தாய் இசபெல்லா மரியாவை அறிமுகஞ் செய்து வைத்தாள். இசபெல்லா மரியா வரவேற்றாள். உரையாடினோம். இசபெல்லா மரியா என்னை விடவும் இரண்டு வயது இளையவள். தாயையும் மகளையும் பார்த்தால் இரட்டையர்கள் போலவே இருக்கும். "துணைப் பெயர்களாக உங்கள் இருவருக்கும் ஆண் பெயர்கள் இல்லையே ஏன்?" என்ற எனது கேள்வியை இருவரிடமுமே கேட்டேன். தனது தாயின் பெயர் மரியா மார்கிரெத் என்றாள் தாய்.
"தாயுடமைச் சாமுதாயத்தின் எஞ்சியிருக்கும் அந்த மீதம் நீங்கள்தானா?" என்றேன். இருவருமே பெரிதாகச் சிரித்தார்கள். ஆனால் இருவரும் எந்த விடையும் சொல்லவுமில்லை.
மூவரும் வெள்ளைவைன் அருந்தினோம். போர்த்துகேய உணவான மீன் கருவாட்டில் சமைக்கப்பட்ட "பக்கலாவோ (Bacalhau)" பரிமாறினாள் இசபெல்லா மரியா. ஒலிவம் பழங்களையும், உள்ளிப்பூண்டையும் அதிகமாகவே சேர்த்திருந்தாள். மிகவும் சுவையாக இருந்தது.
------------------
"உனக்குத் தெரிந்த புகைப்படக் கலையை எனக்கும் சொல்லித் தந்தமைக்காக அன்போடும் நன்றியோடும் என் அன்பே..." என்றபடி ஒரு மலர்ச்செண்டைக் கொடுத்தாள் கரோலின் இசபெல்லா. மிகவும் அழகான பன்னிரண்டு இளநீல ரோஜா மலர்களால் மிளிர்ந்தது அந்தச் செண்டு. கூடவே ஒரு நன்றிமடல். அந்த நீல ஒற்றை மடலில் பன்னிரண்டு பொன் நட்சத்திரங்கள் வட்டமாக. அந்த வட்டத்துக்குள் நன்றி சொல்லி நாலு வார்த்தைகள்.
பதிலுக்கு நானும் நன்றி சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்து அந்த நன்றி மடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். "அதில் நான்கு வரிகள்தானே இருக்கிறது?" என்றாள் கரோலின் இசபெல்லா.
"ஒன்றுமில்லைக் கரோலின், இதில் அச்சிட்டிருக்கும் நட்சத்திரவட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முத்திரைபோல் இருக்கிறது அதுதான் பார்த்தேன்" "சர்வதேசக் கொள்ளையர்கள்தானா உனது கண்களுக்குத் தெரிகிறார்கள்?, Woman of the Apocalypse பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா நீ?"
"இல்லை"
"நீ மரியாளின் பல்வேறு சொரூபங்களைப் பார்த்திருப்பாய்தானே?"
"ஆமாம், பார்த்திருக்கிறேன்"
"அவளது சிரசைச் சுற்றிப் பன்னிரண்டு நட்சத்திரங்கள் வட்டமாக இருப்பதைக் கவனித்ததுண்டா?"
"ஆம்"
"Woman of the Apocalypse என்பதன் குறியீடுதான் பன்னிரண்டு நட்சத்திரங்கள். ஆனாலும் ஏராளமான இன்னும் பல கதைகளைச் சொல்கிறார்கள், இஸ்ராயேலரின் பன்னிரண்டு கோத்திரங்கள் அவை என்கிறது ஒரு கூட்டம், கன்னிமரியாளுக்கு பரலோக இராக்கினியாக அரசாசனமேற்றி மகுடம் தரித்தபோது அந்த மகுடத்தில் வீற்றிருந்தவை இந்தப் பன்னிரு தாரகை என்கிறது இன்னொரு கூட்டம். இப்போ நீ சொன்ன ஐரோப்பிய ஒன்றிய முத்திரை என்பதுபோல்."
"அப்படியா, புதிதாக ஒரு தகவலை அறிந்து கொண்டேன். நன்றி கரோலின்"
சிரித்தபடி குறுக்கிட்ட மரியா மார்கிரெத் "அப்படியெல்லாம் இல்லை நண்பா. இவள் தானே ஒரு வியாக்கியானத்தை வைத்திருக்கிறாள். இவள் சொல்வது பொருந்திக்கூடப் போகலாம். ஆனால் இவற்றைவிடவும் இதற்கென்றொரு கதை உண்டு. எனது பாட்டிக்கு பன்னிரண்டு பெண்பிள்ளைகள். அதில் கடைசிப் பெண்தான் எனது தாய். எனது பாட்டி இந்தத் தீவின் ஒரேயொரு தையல்த் தொழிலாளியாக இருந்தாள். அப்போ இங்கே ஒரு கடற்படை முகாம் இருந்தது. அன்றைய காலத்தில் கடற்படையினர் அணிந்துகொள்ளும் சீருடையின் மேற்சட்டை இளநீலமாக இருந்தது. கடற்படைக்கப்பித்தான் தனது சகாக்களுக்கான சீருடைகளைத் தயாரிக்க பாட்டியிடம்தான் கொடுப்பார். சீருடைகள் தைத்தது போக மீதத் துணிகளைப் பாட்டியிடமே விட்டுவிடுவார். அப்படி ஒருமுறை எஞ்சிய துணியில் எனது பாட்டி தனது பன்னிரண்டு மகள்களுக்கும் உடைகள் தயாரித்து அணிவித்து நத்தார் திருப்பலிக்கு அழைத்துச் சென்றார். "பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்" எனது தாயாரையும் பெரியதாய்மாரையும் இந்தத் தீவின் மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டார்கள். அதுவே வழிவழியாக எம்மிடமும் ஏதோவோர் வடிவத்தில் தொடர்கிறது"
மூவரின் சிரிப்பினாலும் அவர்கள் வீடு நிறைந்தது.
--------------------------------
"இங்கு கோடைகாலப் பணி முடித்து என்ன செய்யப் போகிறாய் கரோலின்? இங்கேயே நிரந்தர வேலைக்கு விண்ணப்பிக்கும் நோக்கம் ஏதும் இல்லையா?"
"இல்லை நண்பா. நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்"
"என்ன?"
"என்னோடு உயர்தரக்கல்வியும், ஊடகவியலும் படித்த நண்பன் ஒருவன் இருக்கிறான். அசிஸ் இப்ராஹிம் அவன் பெயர். அவன் அப்போதே தனது தாயகத்துக்குத் திரும்பிச் சென்று விட்டான். அவனிடம் போகிறேன்.
"எந்த நாடு?"
"பாக்தாத்"
"ஈராக்...?"
"ஆமாம், பாக்தாத் ஈராக்கில் தானே அமைந்திருக்கிறது"
"......................"
"என்ன நண்பா குரலடங்கிப் போனாய்?"
"அங்கு யுத்தம் அல்லவா"
"ஆமாம். அங்கு மனிதர்களும் வாழ்கிறார்கள்"
"இப்போ யுத்தம் உச்சநிலை கரோலின்"
"அதனால்தான் இந்தப் பயணத்தைத் தேர்வு செய்தேன் தோழா. ஒரு யுத்த தேசத்திலிருந்து வந்தவன் இப்படி யுத்தத்தையிட்டு அச்சப்படுகிறாய்?"
"அதனால்தான் அச்சப் படுகிறேன் கரோலின். அதுசரி நீ பயணம் செய்ய அனுமதி கிடைக்காதே?"
"கிடைத்துவிட்டது. ஆறு மாதங்கள். இது போதும்"
" எனக்குச் சொல்லவில்லையே நீ?"
"அதுதான் இப்போது சொல்கிறேனே. விரைவில் பயணிக்கவுள்ளேன்."
".............................."

கரோலின் இசபெல்லா ஈராக் பயணித்து மூன்று மாதங்களின் பின்னொருநாள் அதிகாலையில் இசபெல்லா மரியா தொலைபேசியில் அழைத்தாள். அதுவொரு குளிர் உலவும் முன்பனிக் காலமாக இருந்தது. மகள் தாயகம் திரும்பிவிட்டதாகவும், இன்று மாலையில் தலைநகரிலிருந்து தீவுக்கு வருவதாகவும் தகவல் சொன்னாள். அவளது குரல் மிகவும் தளர்வாக இருந்தது. மேலதிக தகவல் எதையும் அவள் சொல்லவில்லை. நானும் கேட்கவில்லை.
பலத்த காயங்களுடன்தான் மீண்டு வந்திருந்தாள் கரோலின் இசபெல்லா. இங்கு வந்து சேர்ந்ததும் ஒரு வாரமாக உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த பின்பே வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும்படி விட்டிருந்தார்கள். தினமும் காலையில் அல்லது மாலையில் அவளது வீட்டுக்குச் சென்று சந்தித்து வந்தேன்.
தாங்கள் தாக்குதலுக்குள்ளான அந்த நாட்களை கரோலின் இசபெல்லா விபரித்தாள்.
"பாக்தாத்திற்கு மேற்குத் திசையில் சுமார் நூறு கிலோமீட்டரில் உள்ள ஒரு வர்த்தக நகரம் ருமடியா. அதிகமான பழங்குடி மக்களையும், புராதன கலாசார அடையாளங்களையும், கட்டிடக் கலையின் உச்சங்களையும் ஏராளமாக உள்ளடக்கிய நகரம். ருமடியா நகரின் எல்லைப் புறங்களில் உள்ள கிராமங்கள் புராதனக் கலைச் சொத்துக்களால் நிரம்பப் பெற்றவை. அந்த நகர்ப்புரத்துக் கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களையும், போரின் காயங்களையும் பதிவு செய்வதற்காக அசிஸ் இப்ராஹிமும் நானும் சென்றிருந்தோம். மிகமிக அழகான கிராமங்கள். உலக மனுநீதியை நிலை நாட்டவெனப் படையெடுத்த பல்தேசிய இராணுவங்கள் நீதியை நிலை நாட்டினவோ இல்லையோ, இப்படியான புராதன, பொருளாதார நகரங்களையும், பழங்குடி இனங்களையும் குறிவைத்து அழிக்கும் கைங்கரியத்தைத் திட்டமிட்டுத் திறம்படச் செய்து வந்தன. சதாம் அணுவாயுதங்களைச் செய்து ஈச்சை மரத்தடியில் மறைத்து வைத்திருப்பதுபோலக் கதைகள் சொன்ன வல்லரசுகள், எதையும் கண்டடைந்ததாகவும் ஒருசேதி இல்லை. அமெரிக்காவினதும், அதன் வளர்ப்புப் பிராணிகளினதும் குழியுறைந்த விழிகளில் எப்போதும் எண்ணை வழிந்தோடிக் கொண்டிருந்தது. மக்களையும் வேட்டையாடினார்கள். அன்றும் அப்படித்தான். அன்றைய அதிகாலை இவர்களது இலக்குகள் நாமிருந்த ருமடியா நகரத்தின் புறநகர்க் கிராமங்கள் மீதானதாக இருந்தன. அந்தத் தாக்குதலுக்குள் இருவருமே அகப்பட்டுக் கொண்டோம். அதிகாலையிலேயே நாங்கள் விழித்திருந்து எமது அன்றைய பணிக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தோம். ஆதலால்தான் தாக்குதல்கள் தொடங்கியபோதே எம்மைப் பாதுகாக்க தகுந்த, இடிந்த கட்டிடக் கருங்கற் சுவர்களுக்குள் பதுங்கிக் கொண்டோம். அதனாலேயே தப்பித்தோம்.
கற்பாறைச் சுவர்களின் பின்னால் எம்மைத் தற்காத்துக்கொண்ட நாம் இருவரும் வெளியே வந்து காலையில் அந்த அநியாயப் பேரிடர்களின் அவலங்களையும், இடிபாடுகளையும் பதிவு செய்து கொண்டிருந்தோம். அங்கேதான், அப்போதுதான் அந்த அவலம் நிறைவேறலாயிற்று. திடீரென ஏற்பட்ட பல்தேசியப் படைகளின் வான்வெளித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க எம்மால் முடிந்தவரை போராடினோம். முடியவில்லை. வானிலிருந்து அவர்கள் எம்மைக் குறி வைத்தே சுட்டார்கள். என்னைப் பாதுகாப்பதிலேயே அசிஸ் குறியாயிருந்தான். அவன் வீழ்த்தப்பட்ட பின்பே நானும் காயம் பட்டேன். பாக்தாத் எடுத்துச் செல்லும்வரை அசிஸ் இப்ராஹிம் உயிருடன் தான் இருந்தான்" மிகவும் பிரயத்தனப் பட்டுச் சொல்லி முடித்த கரோலின் அப்படியே உறங்கிப் போனாள்.
பாக்தாத் நகரின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்றாம் நாள் அசிஸ் இப்ராஹிம் உயிர் துறந்தான். கரோலின் இசபெல்லாவின் வலது தோள்ப்பட்டை எலும்பும், வலது மார்பகமும் கலிஃபர் குண்டினால் சிதறடிக்கப்பட்டனவாயிற்று. இத்தகைய படுகாயம் அடைந்தும் உயிர் எஞ்சினாள் என்பதை நம்ப முடியாதிருந்தது. சர்வதேசங்களின் இன்னொரு பெரும் கள்வர்களான சிவப்புச் சிலுவையினரின் கைகளில் கரோலின் இசபெல்லா ஒப்புக் கொடுக்கப் பட்டாள். அவளது மடிக்கணினி, புகைப்படக்கருவிகள், படச்சேகரிப்புக்கள் என அனைத்து உடமைகளும் இழந்தவளானாள். இல்லை, அவையெல்லாமே பல்தேசியப் படைகளால் களவாடப்பட்டன.
"உனது நினைவுப்பரிசாக என்னிடமிருந்த கமெராவையும் பறிகொடுத்துவிட்டேன் அன்பே, என்னால் அதைக் காப்பாற்ற முடியாமல்ப் போய்விட்டது மன்னித்துக்கொள்" என மீண்டும் மீண்டும் சொல்லிக் கலங்கினாள்.
"எங்கள் எல்லாருக்குமான தேவதை நீ மீண்டும் கிடைத்துவிட்டாய். பன்னிரு தேவதைகளின் வம்சத்தின் இளவரசி நீ. கலங்காதிரு என் சின்னப்பெண்ணே"
-----------------------------------
கரோலின் இசபெல்லா இங்கு உள்ளூர் வைதியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தபின் ஒரு நாள் என்னை அவசரமாக அழைத்திருந்தாள். சென்றேன். அப்போதுதான் நிறைய விடையங்கள் சொன்னாள். காட்டினாள், நிறைய நிறையவே எடுத்துக் காண்பித்தாள். வார்த்தைகளில் சொல்லவே பதறடிக்கும் படியான, வஞ்சிக்கப்பட்ட வார்த்தைகளால்கூட சொல்லிக்கொள்ள முடியாத படிக்குத்தானே அட்டூழியங்களைப் புகைப்படங்களாகக் காட்டினாள். உலக மனுநீதியை நிலைநாட்டச் சென்ற படைகளின் பரிநிர்வாணம் பச்சை பச்சையாய் அந்த படங்களில் பல்லிழித்தபடி மல்லாந்து கிடந்தது.
கரோலின் இசபெல்லாவின் விருப்பப்படியே ஐந்து ஊடகவியல் இளைஞர்கள் கொண்ட ஒரு "சுயாதீன சாட்சியக்குழு" அமைக்கப் பட்டது. மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும். மூவாயிரத்துக்கும் அதிகமான படங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. அத்தனையும் அசிஸ் இப்ராஹிம் பதிவு செய்த புகைப்படங்கள். எல்லாமே பறிகொடுத்த நிலையில், அசிஸ் இப்ராஹிம் பதிவு செய்து பவுத்திரப் படுத்தி வைத்திருந்த இருபதுக்கும் மேற்பட்ட camera memory cardகளைத் தனது வலது மார்பகக் காயத்தின் கட்டுத்துணிகளுக்குள், பஞ்சுச் சுருள்களாகச் சுற்றி மறைத்துக் கொண்டுவந்து சேர்த்திருந்தாள். இனி வரப்போகிற அடுத்தடுத்த கணங்களில் உயிர் இருக்குமா இல்லாமற் போகுமா என்பதுவே கேள்வியாக இருக்கையில், தனது காயங்களுக்குள் இவற்றை மறைத்தெடுத்து வரவேண்டும் என்ற மனத்துணிவு எப்படி வந்தது இவளுக்கு?
"நண்பன் அசிஸ் இப்ராஹிம் தனது தெளிந்த பயணத்தின் தொடரை என்னிடம் ஒப்படைத்து விட்டுப் போனதாகவே நான் நம்புகிறேன். அந்த மீதிப் பயணத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கைதான் பாதி சிதறிப் போனபின்னும் உயிர்ப்போடு என்னை வைத்திருக்கிறது. இந்த ஒவ்வொரு படங்களிலும் அவனது இரத்தத் துளிகளில் குழைத்த சத்தியம் நிறைந்துள்ளது. இந்த அழிவற்ற சத்தியத்தின் சட்டகங்கள் மண்ணுக்குள் புதைக்கப்படாதபடிக்குப் பவுத்திரப் படுத்தும் படியான பெட்டகமாய் அமைந்ததற்காக, சிதைந்தக்கப்பட எனது வலது மார்பகம் பெருமை கொள்கிறது. அசிஸ் இப்ராஹிம் விட்டுச் சென்ற இந்தச் சட்டகங்கள் வெறும் படங்களல்ல, அவனுடையதும், அவனது தேசத்தாரினதும் போராயுதங்கள். அசிஸின் இந்த ஆயுதங்களை மக்கள் கைகளில் ஒப்படைக்கவென்றே உயிரின் சில துணிக்கைகள் எனக்குக் கிடைத்திருக்கிறது" வலியின் வதைபாடுகள் ஏற்படுத்தும் முனகல்களையும் மீறி இந்த வார்த்தைகளை சொல்லி முடித்தாள் கரோலின். இவற்றைக் கூறும்போது அவள் கலங்காத கண்களோடே காணப்பட்டாள்.
"இந்த சுயாதீன சாட்சியக்குழுவிடமிருந்து படங்களைப் பெற்றுப் பிரசுரிக்கும் எல்லா ஊடக நிறுவனங்களும் அசிஸ் இப்ராஹிம்இன் பெயரிலேயே படங்களைப் பிரசுரிக்க வேண்டும். அதற்கான பணத்தை நோர்வேயில் ஏதிலிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கும் ஈராக் ஈரான் மக்களின் உதவிநிதியத்தில் முழுவதும் வழங்கவேண்டும். தொன்ஸ்பேர்க் ஆவணக் காப்பகத்தில் இந்த சாட்சியங்கள் அசிஸ் இப்ராஹிம்இன் பூரண உரித்துடையனவாக ஆவணப் படுத்தப் பட வேண்டும்" என இன்னும் சில பிரதான சட்ட விதிகளை சுயாதீன சாட்சியக்குழு மூலமாகப் பதிவு செய்தாள்.
சில வாரங்களிலேயே பல லட்சம் குரோனர்களை சுயாதீன சாட்சியக்குழுவானது ஈரக், ஈரான் ஏதிலிகள் உதவி நிதியத்துக்கு வழங்கியது.
கரோலின் இசபெல்லா தனது பயண அனுபவங்கள் பற்றியும், பல்தேசியப் படைகளின் அட்டூழியங்கள் பற்றியும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கு எழுதினாள். இவற்றை எழுதுவதற்கான சரீர உதவிகளைத் தாயும், நண்பர்களும் செய்தார்கள். தனது எழுத்துக்களின் எல்லாச் சந்திகளிலும் தனது கோபத்தையும், கண்டனங்களையும் நிமிர்த்தி வைக்கத் தயங்கவில்லை. இந்தப் படைகளுக்குச் சொந்தமான எல்லா நாடுகளையும் விமர்சித்தாள். சபித்தாள். அதிகாரங்களுக்கு அச்சப்படாத பத்திரிகைகள் மட்டுமே இவளது கோபங்களைச் சிறகினுள் அள்ளியெடுத்துச் சனங்களிடம் கொண்டு சேர்த்தன.
------------------------
நேரம் பிற்பகல் மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக மூன்று மணிக்கு என்னை அழைத்துச்செல்ல வருவதாகச் சொல்லியிருந்தாள் இசபெல்லா மரியா. இருபது நபர்கள் மட்டுமே நிகழ்வில் கலந்து கொள்ளலாம். குரோனாவின் பெயரால் காவல்த்துறை போட்ட விதி இது. அந்த இருபது நபர்களில் என்னை முதலாம் மனிதனாகக் குறித்திருந்தாள் கரோலின் இசபெல்லா என்பதைத் தாய் சொல்லியிருந்தாள்.
வாசலில் காத்து நிற்கிறேன். கையில் பன்னிரு இளநீல ரோஜாக்கூட்டம் முகைவாடாமல் இன்னமும் சிரித்தபடியே இருந்தது.
"இது நிச்சயம் உனது கரோலின் இசபெல்லாவுக்குப் பிடிக்கும். அவள் இதை விரும்புவாள். இதில் உனது காதலும் நிரவிக் கிடக்கிறதல்லவா. அவள் இதைத் தன்னோடு எடுத்துச் செல்வாள். நான் நம்புகிறேன்" மார்கிரத்தா என்ற எனது பூவாத்தா சொன்ன அந்த வார்த்தைகளைக் கோர்த்தபடி எனதிரு விழிகளிருந்து கொண்டுண்ட திவலைகளும் பன்னிரண்டு இளநீல ரோஜாக்களிலும் ஈரமாகத்தானே ததும்பி நின்றன.
அந்தப் பன்னிரண்டு இளநீல ரோஜாக்களையும் பற்றியிருந்த எனது வலக்கரம் பாரம் தாங்கமுடியாது வலித்தது. அந்த வலியானது தப்பிப்பிழைத்தல் என்பதைக் குத்திக் கிழித்தது. தப்பியோடி வந்ததையிட்டு முதன் முறையாக வெட்கித்தேன் எல்லாவித நியாயத் தாராசுகளுக்கும் அப்பால்.
மே. 12, 2020. தனது காயங்களோடும் வலிகளோடும், கோபங்களோடும் மட்டுமே பதின்மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்த கரோலின் இசபெல்லா தனது முப்பத்தியெட்டாவது வயதில் விடை பெற்றுக் கொண்டாள். அவள் ஒவ்வொரு கணமும் தனது இறுதிப் பயணத்தின் நொடிகளை வரவேற்றபடியேதான் வாழ்ந்து முடித்தாள். எதையோ சாதித்த கர்வத்தோடு அவள் போகிறாள்.
இன்று பிற்பகல் நான்கு மணிக்கு எனது தேவதையின் நல்லடக்கம்.
முற்றும்.
நன்றி: தாயகம்

No comments: