Sunday, June 14, 2020

யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்

-கரவைதாசன்-
இலங்கைக் கொடியின் கீழ் "யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அதிபரும் காணாமல் ஆக்கப்பட்டவரும்" எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை டென்மார்க் காலாண்டிதலில் இந்த மாதம் வந்த அனே லீ லண்ட்ஸ்ரெத் Anne lea Landsted அவர்களின் கட்டுரை படிக்க கிடைத்தது. நடந்து முடிந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் வடபகுதியில் 90.000க்கு மேற்பட்ட விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள், 100.000 அதிகமாக காணமல்ஆக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட மனிதர்கள், மஞ்சள் தபால் உறைகளில் பிள்ளைகளின் புகைப்படங்களுடன் பிள்ளைகளைத் தேடும் அன்னையர்கள் அல்லது மனைவிமார் உட்பட Inform அமைப்பினைச் சேர்ந்த நண்பர் றூக்கி பெர்ணான்டோவின் விபரம், கருத்துக்கள், ஊடகவியலாளர்களின் களவிபரம் போன்ற விசயதானங்கள் கட்டுரை எங்கும் பரவிக்கிடந்தன. கட்டுரையின் மையப் புள்ளியாக கூறப்படுவது. இலங்கை நாட்டின் அதிபர் கோதபாய ராஜபக்ச சொல்கிறார் காணமல் போனவர் யாவரும் இறந்துவிட்டார்கள். அவர்களின் பெயரில் அவர்களின் குடுபங்களுக்கு இலங்கை ரூபா.6000 ஜீவனாம்சப் பணமாக மாதமாதம் தருகிறோம். பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே. ஆனால் அன்னையர்களில் கேள்வி கேட்போரின் கோரிக்கை எங்களுக்கு பணம் வேண்டாம் காணமல் ஆக்கப்பட்டவர்கள் நிலவரத்தினை உறுதிப்படுத்துங்கள் என்பதே. உறுதிப்படுத்துங்கள் எனக் கேட்பது கருத்துச் சுதந்திரம். நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வாருங்கள் அபிவிருத்தியினை நோக்கிப் போவோம் என்பது மறுபக்க நியாயம். கட்டுரையை படித்து முடித்ததும் எனக்குள் சிந்தனைச் சிதறல் யாழ்ப்பாணம் நூலகத்தை எரிச்சுப்போட்டு எரிச்சதுக்கான எந்த தடயமும் இல்லாமல் புதிதாக ஒரு கட்டடத்தினைக் கட்டித்தந்ததும் அதனை யார் திறப்பது என சண்டை பிடியுங்கள் எனவிட்டதுக்கும் இந்த பொறிமுறைக்கும் சம்மந்தம் ஏதாவது இருக்குமோ?
-கரவைதாசன்-

Saturday, June 13, 2020

பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

-தமயந்தி-

காலை பத்து மணி. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது. கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன். பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.
தேசத்தின் வான்பரப்பெங்கும் வியாபித்து ஒலிக்கும் எக்காளத்தொனிகளை அள்ளி முகங்களில் அப்பியபடி, வண்ணத்துப் பூச்சிகள்போல் சிறகடிக்கும் சிறுவர் பட்டாளங்கள் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியபடி பாடசாலை ஊர்வலங்கள், அமைப்புக்கள், அரசியற்கட்சிகள், படையணிகளின் அணிவகுப்புக்கள், இயல், இசை, நாடகப் பள்ளிகளின் வீதிநிகழ்வுகள்..... இப்படி குடிகள்பூராவும் தெருவில் இறங்கிக் கொண்டாடி மகிழ்வர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வர். ஆண்கள் பெண்கள் சிறுவர் முதியோர்களென தமது தேசிய உடைகளில் தெருக்களை நிறைத்து வலம்வருவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். நோர்வேயின் தேசியதினம் இன்று. எங்களுக்கென்றொரு நாட்டின் விடுதலைக்காகவும் யுத்தம் செய்தோம். மிக நீளமான யுத்தம். சுதந்திரமான எங்கள் தெருக்களிலும் இப்படி எமது சிறுவர்கள் கைகளில் தாங்கிய கொடிகளை அசைத்தபடியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் சொல்லியபடியும் கொண்டாடித் திரிவர் என்ற கனவும் இருந்தது. தோற்றுப் போனவர்கள் ஆனோம். கைகள் வைத்துத் தைத்த சட்டைகளை, கைகளை இழந்த சிறுவர்களுக்கு அணிவித்து அழுபவரானோம்.
ஆனால், இன்று தூக்கம் கலையாதவோர் பட்சியைப்போல நள்ளிரவுச் சூரியதேசம் அடங்கிக் கிடக்கிறது.
-------------------
கொரோனா உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கி, நிலவறையில் சுயமுடக்கமாகி இன்றோடு எனக்கு எழுபத்தைந்தாவது நாள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பூக்கடைக்காரக் கிழவி மார்கிரத்தா என்ற எனது பூவாத்தாவின் தோட்டத்துக்குப் போகவேண்டும். பல வாரங்களாகப் பூக்கடை திறக்கவில்லை. இனியும் எப்போ திறக்கப்படும் என்பது கிழவிக்கும் தெளிவில்லை. நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, நேராகவே தோட்டத்துக்கு இன்று பன்னிரண்டு மணிக்கு வரும்படி சொல்லியிருந்தாள் பூவாத்தா. இரண்டு கிலோமீற்றர் நடந்துதான் போக வேண்டும். ஒருவாறகப் படுக்கையை விட்டு எழுந்தாயிற்று.