-ந.சுசீந்திரன்-
முற்கற்பிதங்களையும், விசமப் பிரச்சார உள்நோக்கங் கொண்ட வதந்திகளையும், தனித்த வெறுப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டும் நிகழ்வுகள் புரிந்து கொள்ளப்படுகின்றன.
அப்படித்தான் ஜம்பவான்கள் போன்று தோரணைதரும் பலரது புரிதல்களும் காணப்படுகின்றன. அவ்வாறான புரிதல்களில் இருந்தே ஒரு கருத்துருவாக்கத்தை, அக் கருத்துருவாக்கம் நியாயமற்றது, எல்லாப் பரிமாணங்களில் நோக்கினாலும் தலைகீழானது, இயங்கா நிலைதேடிச் செயலிழக்கச் செய்வது என்பதை தெரிந்து வைத்திருந்தும், அக் கருத்துருவாக்கத்தைச் சிருஷ்டித்து விடுகின்றனர். பின்னர் அதனை நிலைநிறுத்த, மிகவும் மலினமான தர்க்கங்களை, அவசர அவசரமாக இறைத்து விடுகின்றனர்.
நாம் செயற்படுவதென்பது மற்றவர்கள் எதை விரும்புவார்கள், எவ்வாறு பொருள் கோடல் செய்வார்கள் என்பதைப் பொறுத்ததல்ல. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல, இப்படிப்பட்டவர்களது புறநிலைப் பார்வை சகிக்கமுடியாதபடி முற்றிலும் அபத்தமானதாக இருக்கின்றது, நாம் சற்றே குலைந்துவிடும்போது, எமக்கு பெரிய மனச் சோர்வினையையும் அவை தந்துவிடுகின்றன.
ஆனால் கிசுகிசுச் சமாச்சாரங்களில், கள்ளச் சந்தோஷமடைகின்ற பேர்வழிகள், பேரில்வழிகளுக்கு இவை உற்சாகத்தைக் கொடுக்கின்றன போலும்.
போருக்குப் பின்னர் புகலிடத்தில் இடம்பெற்ற பல சிறு-, பெருவிடயங்கள் குறித்து இலங்கை அரசுக்கு உளவுச் செய்தியாகச் சென்றுவிடச் சாத்தியங்கள் உள்ளதால் பலவற்றைச் சிலகாலங்கள் வரை எழுதமுடியாது. அப்படி எழுதுவது பொறுப்பற்றது. பல நண்பர்களின் பெயரைச் சொல்லமுடியாது.
முஸ்லிம் பெண்ணொருவர், இலங்கையின் வடபகுதியில் தமிழ்ப் பெண்கள், தமிழ் பெண் போராளிகள், போராளிகளின் விதவை மனைவிகள் எதிர்கொள்ளும் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க, வெளிக்கொணர, அவர்களுக்கு வாழும் துணிவை ஏற்படுத்தத் தன்னால் முடிந்ததைச் செய்துகொண்டிருக்கின்றார். அவரது வழங்கும் தகவல்கள் எங்களை உறைய வைத்து விடுகின்றன.
இலங்கை அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்துள்ளதா என்பதைக் கண்டறிய போர் நடந்த சில இடத்து மண் பரிசீலிக்கப்பட்டிருகின்றது.
நான் இலங்கை அரசினதோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளினதோ ஆதரவாளானாக ஒரு போதும் இருந்ததில்லை. இலங்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சிறுபான்மை இனங்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடக்கம் அண்மைய, சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலை வரை, அது எள்ளின் அளவேயாயினும், எமது சக்திக்கேற்பச் செய்து கொண்டிருகின்றோம். வண. நந்தன அவர்கள் கண்டியில் இருந்து சிறைக் கைதிகளுக்காக ஆற்றும் பணிக்கு நான் தலை வணங்குகின்றேன். எக்னாலிகொட காணாமற் போகச் செய்ததன் பின்னர், சந்தியாவின் போராட்டம் தொடர்கின்றதல்லவா, அவர் சந்திக்கும் அவதூறுகள், குழிபறிப்புக்கள் சொல்லி மாளாது. போர்க் குற்றவாளி ஜெனரல் டயஸ் ஜெர்மனியின் தூதுவராகச் சிலகாலம் இருந்தபோது அவரைக் கைது செய்து சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பங்களிப்புக்கள் எப்படி இருந்திருக்கும்!
அண்மையில் றுக்கி பெர்னாண்டோ ஒரு கருத்தினைத் தெரிவித்திருந்தார். இனி, “ஐ.நா வை நம்பிப் பிரயோசனமில்லை.” அவரது அனுபவத்தில் சொல்கின்றார். இது எமக்கு எப்பவோ தெரியும் என்று இலகுவாகக் கூறிவிட எம்மால் முடியாது. இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்த மேற்கொண்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் பலவகை அச்சுறுத்தல்கள் இலங்கையில் இருந்தபோதும் நிமல்கா பெர்னாண்டோ, சுனந்த தேசப்பிரிய, போன்ற சிங்கள இனத்தவர்களும் தான் என்பதை எத்தனை தமிழ்ப் புத்திஜீவிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர் எனபது கேள்வியாகவே இருக்கின்றது. இவர்கள் செய்யும் எதிர்ப்பு அரசியலின் மதிபீட்டுக்காக எங்கள் அன்றாட வாழ்வும் இல்லை. சமூகமும் இல்லை.
இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கான ஒரு அரசியல் தீர்வை எப்பொழுதும் வலியுறுத்தி, அதிகாரப் பரவலாக்கம், சமஷ்டி என்று சொல்லப்படுகின்ற மாநிலங்களின் சுயாட்சி போன்ற தீர்வுகளைப் பற்றி தென்னிலங்கை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல முயற்சித்தவர்கள், இலங்கையின் அரசியல் யாப்புக்கள் அதிலும் 1972, 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள், எப்படி ஒரு சர்வாதிகார அரசினை உருவாக்கி நிற்கின்றது என்பது பற்றியெல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்தியியவர்கள், இவற்றில் உரை நிகழ்த்தியுள்ள வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உதாரணமாக வெலியமுன, எஸ்.ஜி.புஞ்சிஹேவா, ஜயம்பதி விக்கிரமரட்ன, வி.ரி.தமிழ்மாறன் போன்றவர்கள் எவ்வகைப் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று நோக்குகின்றோமா?