-கலாநிதி சி.ஜெயசங்கர்-
நுண்கலைத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.ஏகலைவன் தொன்மோடிக் கூத்துப் பிரதிக்கு வழங்கிய முன்னுரை.
எனது சிறுபராயத்தில் ஏகலைவன் எனக்கு அறிமுகமாகின்றான். அந்த அறிமுகம் எனக்கு துயரத்தைத் தந்தது. அத்துடன் தர்மம், அதர்மம் பற்றிய வகுப்பறைக் கற்பித்தல்கள், கதாப்பிரசங்கிகளின் கதையாடல்கள், நியாயப் படுத்தல்கள் எல்லாவற்றிலும் சந்தேகம் இழையோடத் தொடங்கிவிட்டிருந்தது.
சத்திரியருக்குச் சேவகம் செய்யும் பார்ப்பனத் துரோணரிடம் வேடர் குலத்தவனான ஏகலைவன் ஏன் வந்தான்? கட்டை விரலை வெட்டிக் குருதட்சணையாகத் துரோணரிடம் கொடுத்த கதை ஏன் பாடப் புத்தகங்களுள் உள்ளடக்கப்பட்டது? குருபக்தியின் பெயரில் ஏகலைவன் ஏன் பெருமைப் படுத்தப்படுகிறான்? என்ற கேள்விகள் என்னுடன் வளரத்தொடங்கிற்று.
ஆயினும் ஏகலைவனின் குருபக்தி பற்றிய அதே கதைகள் எங்கும் எதிலும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன. ஆங்காங்கே இந்தப் போக்கிரித்தனம் பற்றிய கேள்விகளும், பார்வைகளும் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவற்றில் எல்லாம் கடவுளும் கலந்திருப்பதால் பக்தியும், பயமும், சேர்ந்து இக்கேள்விகளை மழுங்கடித்து வருவதாகவும் இருக்கின்றது. பொதுப்புத்திக்கும் பயபக்திக்குமான போராட்டத்தில் பயபத்தியின் ஆதிக்கம் எதிர்கொள்ளப்பட வேண்டியது.