Saturday, September 27, 2014

பறை - தமிழரின் தோலிசைக் கருவி

-மா.அமரேசன் - 
பறை என்னும் இசைக் கருவி இசைப்பதால்  பறையன் என்ற பெயர் வந்த்தா? அல்லது பறையனாய் இருப்பதால் பறை என்ற இசைக் கருவியை இசைக்கின்றானா? இந்த கேள்வி 5 ஆம் வகுப்பு படிக்கும் போதே எனக்குள் உருவானது. விடை தேடியலைகின்றேன்.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் தகவல் சொல்லுவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது. அப்போது அதற்க்கு முரசு என்ற பெயரும் இருந்திருக்கின்றது. போர் குறித்த தகவல் பரிமாற்றத்திற்க்கு முரசு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பொதுவாக நடக்கும் ஊர் திருவிழாக்கள், மற்றும் சடங்குகள் போன்ற நிகழ்ச்சியில் பறை இசையின் சத்தம் ஒரு செய்தியின் அடிப்படையில் இருக்கும். பறை இசைக்கப்பட்டால் அங்கு ஓர் நிகழ்வு நடக்கின்றது, நாம் அணைவரும் அங்கு செல்ல வேண்டும் என்ற புரிதலை உருவாக்குவதற்க்கு பறை பயன்பட்டிருக்கின்றது.
அண்மை காலத்தில் கூட அரசினர், தங்களின் அறிவிப்பை செய்வதற்க்கு கிராமந்தோறும் தண்டோரா போடுவார்கள். அந்த தண்டோராவை வருவாய்துறையின் கடைநிலை ஊழியராக இருக்கும் சிப்பந்தி போடுவார். பெரும்பாலான சிப்பந்திகள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பர். இந்த தொழில் செய்ய மற்ற சாதியினர் விரும்ப மாட்டார்கள் காரணம் அந்த தொழிலில் தண்டோரா என்னும் பறை இசை கருவியை இசைக்க வேண்டியிருக்கும். அரசு பணியில் ஓளிந்திருக்கும் சாதிய மனோபாவம் இது.

Tuesday, September 16, 2014

ஆசிரியர், புத்தக ஆசிரியர் -ஆயிஷா இரா நடராசன்

-கவின் மலர்- 
கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது. அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார்.  இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.

நடராசன் கடலூரில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ஆசிரியப் பணி, எழுத்துப்பணி இரண்டிலுமே மிகச் சிறப்பான முறையில் செயல்படும் நடராசனின் சொந்த ஊர் கரூர். கல்லூரியில் பயிலும்போது இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, தொடர்ந்த தீவிர இலக்கிய ஈடுபாடு என்றிருந்தவரை 20 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த தமிழ்நாடு அறிவியல் இயக்கக் கூட்டம் ஒன்றில் நடந்த சம்பவத்தால் குழந்தைகளுக்காக எழுதத் துவங்கியதாகக் கூறுகிறார். “சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளச் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்போது எழுந்த ஒரு சிறுவன் என்ன புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று கேட்டான். அப்போது பதில் சொல்ல திண்டாடிப்போனோம். இதுவே என்னை குழந்தைகளுக்காக எழுதத் தூண்டியது” என்கிறார்.

இவருடைய முதல் நூல் நாகா. அன்று தொடங்கி இன்று வரை இவர் எழுதிக்குவித்தவைகளில் சிறுகதைகள், நாவல்கள், அறிவியல் புனை கதைகள், அறிவியல் நூல்கள் என்று அனைத்தும் அடக்கம். “குழந்தைகளுக்காக எழுதுவதில் சிரமங்கள் பல உண்டு. மொழி முதலில் கைவரவேண்டும். ஒரு ஊர்ல ஒரு மகாராஜா என்று தொடங்கினால் அடுத்து அவருக்கு இத்தனை மனைவிகள் என்று எழுதினால் அது பெரியவர்களுக்கான எழுத்து. இதையே குழந்தைகளுக்கு எழுதினால் மகாராஜா குண்டானவரா ஒல்லியானவரா என்று எழுதவேண்டும்.” என்கிறார்.

Sunday, September 07, 2014

தெணியானின் குடிமைகள் - ஒரு வாழ்வியலின் ஆவணம்

-முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்-
ஈழத்துத் தமிழ் நாவல்களின் வரிசையில் ஒரு புதிய வரவாக ‘குடிமைகள்’ வெளிவந்துள்ளது. சென்ற ஆண்டு ஜீவநதி வெளியிட்ட இந்த நாவலை எழுதியவர் தெணியான். ஈழத்து ஆக்க இலக்கியப் படைப்பில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். தலித் இலக்கிய முன்னோடியான கே. டானியலின் வழி வந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை நாவல் வடிவில் எழுதி ஆவணப்படுத்தியுள்ளார். தெணியானின் ஐம்பது வருட எழுத்துப் பணியில் குடிமைகள் நாவல் ஒரு மைல் கல்லாக நிற்கிறது. இந்த நாவலை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒரு முறை படிக்கவேண்டும். ‘அப்படி அந்த நாவலில் என்ன சிறப்பு இருக்கிறது?’ என்று கேட்க எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கமாக இந்த நாவல் அறிமுகம் எழுத்துருப்பெற்றுள்ளது.
இந்நாவலின் வெளியீட்டாளர் நாவலின் இன்றியமையாத சிறப்பை மூன்றாகப் பதிவு செய்துள்ளனர். அவை நாவலைப் படிக்கத் தூண்டுவனவாயுள்ளன.
1. தெணியானின் ஐம்பது வருட எழுத்துலகப் பயணமானது இடையறாத தொடர்ச்சியான பயணமாக அமைந்தது என்பதற்கான சான்றாக இப்பயணம் ஐம்பது வருடங்களைக் கடந்த நிலையிலும் இந்நாவல் வெளிவருதல்.

Thursday, September 04, 2014

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.

- வெங்கட் சாமிநாதன்-
இவ்வாரம் காலச்சுவடு வெளியீடாக வெளிவரும் பொ.கருணாகரமூர்த்தின்யின் ‘அனந்தியின் டயறி ’ நாவலுக்கு இலக்கிய ஆசான் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் வழங்கியுள்ள அணியுரை.
நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. “யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணந்தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். “எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள். 
என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, மிதிலா விலாஸ் எனப் பல தொடர்கதைகள். அவ்வளவுதான் என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.
ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது.

Wednesday, September 03, 2014

சாதி குறித்து மாக்ஸ்

-ரங்கநாயகம்மா (ஆங்கிலம்) தமிழில் கொற்றவை-

                 


‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல்   ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரை ஒன்றை எழுதவில்லை தான்;  இருப்பினும், அவரது எழுத்துக்களில்,  இந்தியாவில் உள்ள சாதியமைப்பு    குறித்தும்மற்ற  நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் மார்க்ஸ் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார்.  இந்த அவதானிப்புகள் மூலம்சாதி கருத்தியல்களையும்அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ளவியலும்.

உலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோதெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோமக்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.  இந்தியாவில், அத்தகைய  எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம்ஆனால் இந்தியாவுக்கல்லஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது மேலும் அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.

Monday, September 01, 2014

ஒரு தமிழ்த் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய நினைவுக் குறிப்புகள்.

-கலையரசன்-

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்" - திருக்குறள் 

சிறு வயதில் இந்தக் குறளைச் சொல்லி வளர்த்த எனது தந்தை இப்போது இயற்கை எய்தி விட்டார். சில தினங்களுக்கு முன்னர், கடுமையாக நோய் வாய்பட்டு யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், தனது 79 ஆவது வயதில் காலமான எனது தந்தைக்கு, தமது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும், முதற்கண் எனது நன்றிகள். 

சின்னர் தர்மலிங்கம் ஆகிய எனது தந்தை, யாழ்ப்பாணத்தில் எங்களது கிராமத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாக அறியப் பட்ட ஒரு சமூக ஆர்வலர். அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்வது, ஒரு மகனாக தந்தைக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட எனது அப்பா, கடைசி வரைக்கும் தனது கொள்கையில் இருந்து வழுவாது நின்றவர். அரசியலை வைத்து பிழைப்பு நடத்தாமல், மக்கள் சேவையை தலையாய கடமையாக கொண்டியங்கியவர். இறுதிக் காலங்களில், கடும் சுகயீனமுற்று வருடத்தில் பாதி நாட்கள் மருத்துவமனையில் காலம் கழிக்கும் வரையில், முதுமையிலும் தளராது தனது சமூகக் கடமைகளை நிறைவேற்றியவர். அவரைப் பற்றிய சுருக்கமான நினைவுக் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்