தோழர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார் !
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொசாரியோ பெர்னாண்டோ கடந்த 29.03.2014 இல் காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.
ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற திரு. அஸீஸ் அவர்களுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார்.
1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன. அத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தில் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார்.