Sunday, May 12, 2013

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்?

-சி.மெளனகுரு-

(70 களில் ஈழத்து நாடக அரங்கின் போக்குகள் பற்றியும் கந்தன்
கருணை நாடகப் பங்கேற்பு பற்றியுமான சிவ அனுபவப்
பதிவுகள்)


அரங்கு அரசியல் பேசியது

1969ஆம் ஆண்டு ஈழத்து தமிழ் அரங்க வரலாற்றில் மிக முக்கியமானதொரு ஆண்டாகும். அக்காலகட்டத்தில் அரங்கு அரசியல் பேசியது மாத்திரமன்றி சமூக விடுதலைக்கான காத்திரமிக்கதொரு கருவியாகவும் செயற்பட்டது.

இவ்வாண்டிலேதான் யாழ்ப்பாணத்து இந்துக் கோயில்களை தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கும் திறந்து விட வேண்டுமென்ற போராட்டம் தீவிரம் பெற்றது. சாதி அடக்கு முறைக்கு எதிரான இப்போரைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னின்று நடத்தியது. இப்போர் இந்து ஆகமக் கோயில்களின் கதவுகளைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திறந்து விடுதல் என்ற நடவடிக்கையினை மையம் கொண்டபோது மட்டுவில் பன்றித் தலைச்சியம்மன் கோயிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும் போராட்டக் களங்களாயின. குறிப்பாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் நுழைவுப் போராட்டம் இலங்கை எங்ஙனும் பேசப்பட்டது.
தமிழருக்காகத் தனிநாடு கேட்டவரும், அடங்காத் தமிழர் என அழைக்கப்பட்டவருமான திரு. சி. சுந்தரலிங்கம் அவர்களே தமிழருள் ஒரு பிரிவினரான தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் கோயிலினுள் நுழைவதை மூர்க்கமாக எதிர்த்தமையையும் அன்றைய பிரபல தமிழ்த் தலைவர்கள் எனக் கருதப்பட்டோர் பலர் இப்போராட்டம் பற்றி மௌனம் சாதித்தமையையும் தமிழ் கூறும் நல்லுலகம் வியப்போடு பார்த்த காலம் அது.

போராட்டமும் போராளிகளும்

அப்போராட்டம் ஈழம் எங்ஙணும் பரந்து வாழ்ந்த முற்போக்குச் சிந்தனகள் கொண்ட மனிதாபிமான அறிஞர்களதும், கலைஞர்களதும், எழுத்தாளர்களதும் மனச்சாட்சியை உலுப்பி விட்டிருந்தது. இவர்கள் தம் எழுத்தாலும், செயலாலும் சத்தியம் மிகுந்த அப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர்.அப்போராட்டத்தில் இளம் போராளிகள் பலர் உருவாகினர். அவ்வுரிமைப் போரில் பங்கு கொண்ட பலருக்கு அன்று பிரபலியமாகியிருந்த மாசே - துங் சிந்தனைகளும் மாபெரும் சீனக் கலாச்சாரப் புரட்சியும் ஆதர்சங்களாயிருந்தன.
தமிழர் மத்தியிலே காணப்பட்ட தீண்டாமைக்கும் சாதிக் கொடுமைக்கும் எதிராக கலைஞர்களும் எழுத்தாளர்களும் அன்று ஒன்று திரண்டனர் தம் பேனாக்களைத் தூக்கினர்..
போராடிய மக்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் இரத்தக் கடன் என்ற தலைப்பில் சாதி எதிர்ப்பு போராட்டக் கவிதைத் தொகுதி ஒன்றினை மட்டக்களப்பிலிருந்து கவிஞர் சுபத்திரன் வெளியிட்டார்.

சாதித் திமிருடன் வாழும் தமிழன் - ஓர்
பாதித் தமிழனடா
;. என்று அவன் பாடினான்

சங்கானைக் கென் வணக்கம்
சரித்திரத்தில் உன் நாமம்
மங்காது யாழகத்து மண்ணிப் பலகாலம்
சங்கையிலே நீ யானை சங்கானை
என்ற அவனது பாடலும்

எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்

என்ற வரிகளும் அன்று இப்போராட்டத்தில் ஈடுபட்டோர் நாவெல்லாம் ஒலித்தன.

சாதி பேத எதிர்ப்புக் கவிதைகள் நாவல்கள், கதைகள,; நாடகங்கள், ஓவியங்கள், ஓவியப் புத்தகக் கண்காட்சிகள், கருத்தரங்குகள் எனப் பல புரட்சிகர கலைப் படைப்புக்கள் வெளிவந்தன. புரட்சிகரச் சூழல், புரட்சிகர கலைகளை வெளிக்கொணரும் என விமர்சகர்கள் எழுதினர். இலக்கியப் பிரசாரம் செய்யலாமா? என்ற காரசாரமான விவாதங்கள் நடந்தேறின. எல்லா விவாதங்களுக்கும் அப்பால் இக்கலை இலக்கியங்கள் அன்று களத்தில் நின்று போராடிய போராளிகளுக்கு உற்சாகம் ஊட்டின. பலம் தந்தன. போராட்ட உறவுகளை இறுக்கமாக்கின.

அந்த போராட்ட வரலாற்றையும் போராட்ட வீரர்களையும் அக்காலத்தில் அப்போராட்டத்திற்குச் சார்பாக எழுந்த கலை இலக்கியங்களையும் இன்றைய தலைமுறையினர் அறியார். தமிழர் வரலாறு தமிழ்க் கலை இலக்கிய வரலாறு அவை பற்றிக் குறிப்பிடுவதில்லை

மானிட விடுதலையின் பூபாள ராகம்

இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய்விடும்? ஆம். அந்த ராகம் மானிட விடுதலையின் பூபாள ராகம் காலை வேளை ராகம் மத்தியான பின்னேர இரவு ராகங்களின் முன்னோடி

ஐந்து முக்கிய நாடகங்கள்

இக்கால கட்டத்தில் ஈழத்துத்தமிழர் இடையே ஐந்து முக்கிய நாடகங்கள் எழுந்தன. அவையாவன.
சங்காரம்,
குடிநிலம்,
கந்தன் கருணை,
கோபுர வாசல்,
கோடை

இவ் ஐந்தும் ஈழத்தமிழர் இடையே காணப்பட்ட சாதிக் கொடுமைகளைச் சாடி எழுந்த நாடகங்களாகும்.

1969 இல் கொழுப்பிலே லும்பினி அரங்கிலே நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மகாநாட்டில் சங்காரமும் குடிநிலமும் மேடையேறின. சங்காரம் நாடகத்தைத் தயாரித்தது மட்டக்களப்பு நாடக சபா. அந்நாடகத்தை எழுதி நெறியாக்கம் செய்தவர் சி. மௌனகுரு ஆவார். மட்டக்களப்பு சபாவின் இயக்கு சக்திகளாக கவிஞர் சுபத்திரனும், வடிவேலுவும், இன்பமும், சிவராஜாவும் செயற்பட்டார்கள். ராஜர் ராணிக் கதைகளையும் மகாபாரதக் கதைகளையும் கருப்பொருளாகக் கொண்டிருந்த மட்டக்களப்பு வடமோடி நாடக மரபுக்குள் சாதிபேத எதிர்ப்பு, மானுடத்தின் விடுதலை என்பவற்றை உள்ளடக்கமாக வைத்து நெய்யப்பட்ட நாடகம் அது. சாதி அரக்கனைச் சாய்த்த கதை என்ற இந்நாடகத்திற்கு சங்காரம் என்று நாமகரணம் சூட்டியவர் கவிஞர் முருகையன்; ஆவார். முதன் முதலில் பழைய நாடக வடிவம் ஒன்றுக்குள் புதிய கருத்து பாவிக்கப்பட்டது.
சமூகப் பிரச்சனைகளும் நாடகக் கலைஞர்களும்
லும்பினி அரங்கிலே நடைபெற்ற இந்நாடகம் அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களிடையே உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. அவர்களை ஊக்குவித்தது.

லும்பினி அரங்கில் இதனோடு குடிநிலம் என்னும் நாடகமும் அரங்கேறியது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்த வழமையான பாணியில் அமைந்த ஆனால் கருத்துச் செறிவுமிக்க நாடகம் அது. குடிநிலம் இல்லாமையே தீண்டாமைக்கான காரணம் என்பதனையும் சாதிமான்களின் அடக்கு முறையையும் அம்பலப்படுத்திய நாடகம் அது.

இவற்றுள் சங்காரம் தந்த அருட்டுணர்வு அன்று பலரையும் தாக்கியது என்பது பின்னர் தெரியவந்தது. அந்நாடகம் பற்றி சிறந்த விமர்சனங்கள் வெளியாயின. அந்நாடகத்தை கொழும்பில் இலக்கிய நாடகக் குழுவான எங்கள் குழு இலவசமாக லும்பினி அரங்கில் மீண்டும் மேடையேற்றி பிரபலியப்படுத்தியது.

சங்காரமும் கந்தன் கருணையும்
1969 இன் பிற்பகுதியில மாவிட்டபுரத்தில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டத்தினை மக்களுக்கு உறைக்கக் கூறும் முகமாக கந்தன் கருணை தயாரிக்கப்பட்டது. இந்நாடகத்தை எழுதியவர்கள் நெல்லியடி அம்பலத்தடிகள். இதன் மூலக்கதை என்.கே ரகு.நாதனுடையது. இதனைத் தயாரிப்பதில் நெல்லியடி முற்போக்குக் கலைஞர்களும், இளையபத்மநாதனும் பெரும் பங்கு வகித்தனர் .இதில் கன்பொல்லை கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பங்களிப்பு கணிசமானது. கூத்தைத்தமது உயிர்மூச்சாகக் கொண்ட அவர்கள் கந்தன் கருணைக்கு உயிர் மூச்சளித்தனர் .தமிழர் மத்தியில் புற்று நோயாகப் புரையோடிப் போயிருக்கும் சாதி ஏற்றத் தாழ்வு எனும் பெரு நோயைத் துடைக்க கன்பொல்லைக் கிராமக் கலைஞர்களும் நெல்லியடிக் கலைஞர்களும் சாதி பேதமின்றித் திரண்டனர்.சாதி அமைப்பின் கொடுமைகளக் காட்ட நாடகத்தை ஓர் ஊடகமாகக் கொண்டனர்.

தன் கோயிலுக்குள் புக கோயிலுக்கு வெளியே நின்று போராடும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கந்தனே தன் சக்தி வாய்ந்த வேலைக் கொடுத்துப் போராடத் தூண்டுவதைக் கருவாகக் கொண்டது. இந்நாடகம் சங்காரம் மட்டக்களப்பு வடமோடி நாடக மரபைக் கையாண்டது போல கந்தன் கருணை யாழ்ப்பாணத்துச் சிந்துநடைக் கூத்தான காத்தான் கூத்தினைக் கையாண்டது. யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்பை முன்னெடுத்தோரிடம் இந்நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமது கூத்து மரபில் புதிய கருத்துக்களை மக்கள் கண்டனர். பிற்போக்கு வாதிகளில் பலத்த எதிர்ப்புக்கும் பயமுறுத்தலுக்கும் மத்தியில் யாழ்ப்பாணம் எங்ஙணும் இந்நாடகம் மேடையேறியது. (இத்தகைய மேடையேற்றத்தை 1985களில் மண்சுமந்த மேனியர் கண்டுத. ஆனால் அதன் கரு வேறு,)

1969 இல் பழைய நந்தன் சரித்திரக் கதையை ஆலய நுழைவுப் போருக்குப் பொருத்தமாக மாற்றி கந்தனின் ஆலயப் பிரவேசத்தை புதிய முறையில் நாடகமாக்கினார் கவிஞர் முருகையன். அந்நாடகத்தின் பெயர் கோபுரவாசல். நந்தனார் தில்லையில் ஜோதியிற் கலந்தார் எனற மரபுச் செய்தியை

மறுவாசிப்பிற்குட்படுத்தினார் முருகையன். தில்லைவாழந்தணர்கள் திட்டமிட்டு பக்தி எனும பேரால் பறையராகிய நந்தனை நெருப்பில் இறக்கிக் கொன்றனர் என்பது முருகையனின் வாசிப்பு. மிக நீண்ட காலத்திலன் பின் இத்தகைய வாசிப்பின் அடிப்படையில் தமிழ் நாட்டில் ஒரு நாடகம் எழுதினார் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி. அந்நாடகத்தின் பெயர் நந்தன் கதை

மஉறாகவியின் கோடை

1969 இல் சாதிப் பிரச்சினையை நேரடியாகத் தொடாவிடினும் அப்பிரச்சினை சார்பாக மஹாகவியும் ஒரு நாடகம் எழுதினார். அந்நாடகத்தின் பெயர் கோடை. அந்நாடகத்தைக் கொழும்பில் இயங்கிய நாடோடிகள், நாடகக் குழுவினர் தயாரித்தனர். இதிலே அ.தாசிசியஸ், ஸ்ரீநிவாசன், சிவபாலன், சக்தி முத்துலிங்கம் போன்றோர் இருந்தனர். இந்நாடகத்தை நெறியாள்;கை செய்தவர் அ.தாசிசியஸ். மேளகாரர் வீட்டில் பிராமணர் இட்லி சாப்பிடுவதாக அதில் ஒரு காட்சியை மகாகவி எழுதியிருந்தார். அதனை எதிர்த்த சனாதனிகள் (சென்சாhர்) அக்காட்சியை எடுத்துவிட்டு நாடகத்தை நடத்தும்படி உத்தரவிட்டனர். அக்காட்சிதான் முக்கியமானது. அதை எடுப்பதாயின் நாடகம் நடத்தமாட்டேன் என்று மறுத்து நின்றார் அ.தாசிசியஸ். முற்போக்கு எண்ணம் கொண்டோர் தாசிசியஸ் பக்கம் நின்றனர்.

1969களில் எங்கள் குழு என்றதொரு நாடகக் குழுவும் கொழும்பில் இயங்கியது. விடிவை நோக்கி, அபசுரம், இருதயரம் போன்ற மானுடவிடுதலை நாடகங்களை மேடையிட்ட இந்நாடகக் குழுவில் நா. சுந்தரலிங்கம், இ.சிவானந்தன், முருகையன், கந்தசுவாமி போன்றோர் முக்கியஸ்தர்களாயிருந்தனர்.

கலைஞர்களின் ஒன்றிணைவும் நடிகர் ;ஒன்றியமும்
இவ்வண்ணம் அன்றைய இளம் நாடகக்காரர்களான மௌனகுரு, தாசிசியஸ், சுந்தரலிங்கம், இளையபத்மநாதன், இ.சிவானந்தன், முருகையன், சத்தியநாதன், பாலேந்திரா, சிவபாலன், ஸ்ரீனிவாசன், கந்தசுவாமி என்று பலர் ஒன்றிணைந்தனர்.

நாடகத்தை - அரங்கியலை மானுட விடுதலைக்குப் பாவிக்கும் இக்குழுவினருக்குள் ஒரு புரிந்துணர்வும், ஒருமைப்பாடும் ஏற்பட்டது.

சங்காரம் தயாரித்த மட்டக்களப்பு நாடக சபாவும், கந்தன் கருணை தயாரித்த நெல்லியடி அம்பலத்தடிகளும், கோடை தயாரித்த கொழும்பு நாடோடிகளும், அபசுரம், கடூழியம், விடிவை நோக்கி நாடகங்களைத் தயாரித்த கொழும்பு எங்கள் குழுவும் 1972 ஆம் ஆண்டு கொழும்பிலே நாடகத்திற்காக ஒன்றிணைந்தனர். இவ்வொன்றிணைப்பு 1972 இல் கொழும்பில் நடிகர் ஒன்றியத்தைத் தோற்றுவித்தது.

யாழ்ப்பாண நடிகரும் மட்டக்களப்பு நடிகரும், கொழும்பு நடிகரும் ஒன்றிணைந்து நடிகர் ஒன்றியத்திற்கு ஊடாக பல திட்டங்களைத் தீட்டினர், செயற்பட்டனர்.

நடிகர் ஒன்றியத்தின் முதன் முயற்சியாக கந்தன் கருணையை மீண்டும் நடிகர் ஒன்றியம் தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. நவீன நாடக நெறிமுறைகளுக்கமைய அதனைத் தயாரிக்கும் பொறுப்பு அ.தாசிசியஸ்யிடம் விடப்பட்டது.

நடிகர் ஒன்றியத்தில் அ.தாசிசியஸ், இ.சிவானந்தன், ந.சுந்தரலிங்கம் ஆகியோருடன் இன்னும் பலரும் தீவிர செயற்பாட்டாளர்களாகச் செயற்ப்பட்டனர்.
ஈழத்தின் பெரும்பாலான முற்போக்கு நாடக சக்திகள் கொழும்பில் சங்கமித்தன, 1972, 1973,1974, 1975 களில் இவர்களில் பெரும்பாலோனோர் கொழும்பிலே உத்தியோகம் நிமித்தம் வாழவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டமையும் இதற்கு வாய்ப்பாயிற்று. இந்த சக்திகளின் சங்கமிப்பில் அ.தாசிசியஸ்யின் நெறியாள்கையில் 1973 இல் நடிகர் ஒன்றியத்தின் முதல் தயாரிப்பாக கந்தன் கருணை கொழும்பில் மேடையேறியது. பத்திரிகைகள் நாடகத்தை வெகுவாக வரவேற்றன. நாடக ஆர்வலர்கள் நடிகர் ஒன்றியத்தின் வளர்ச்சியில் பெரும் உற்சாகம் காட்டினர்

கந்தன் கருணை உருவாக்கம்

இந்த நாடக உருவாக்கம் அற்புதமான ஒரு அனுபவம். மறக்க முடியாத காலங்கள் அவை. அதிலே கந்தனாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஏறத்தாழ 30 வருடகாலத்திற்கு முந்திய அந்த இளவயது நிகழ்வுகளை மீண்டும் அசைபோடுவது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயல் மாத்திரமன்றி உளத்திற்கு உற்சாகமும் வலிமையும் தரும் செயலுமாகும். அத்தோடு இளம் தலைமுறை நாடகக் கலை நடிகர்கட்கு பழைய செய்திகள் பலவற்றைத் தரும் முயற்சியுமாகும்.

கந்தன் கருணைக்கு ஏற்கனவே இரு நாடக எழுத்துரு;கள் இருந்தன. ஒன்று என்.கே. ரகுநாதன் எழுதிய உரையாடலில் அமைந்த ஒரு நாடக எழுத்துரு. மற்றது நெல்லியடி அம்பலத்தடிகள் தாம் நடிப்பதற்கு என்.கே.ரகுநாதனின் எழுத்துருவை அடிப்படையாகக் கொண்டு காத்தான் கூத்துப் பாணியில் உருவாகிய பாடல்களில் அமைந்த எழுத்துரு. தாசிசியஸ் இரண்டாவது பிரதியை அடிப்படையாக வைத்தே அதற்கு மேடை வடிவம் கொடுத்தார்.

ஆற்றல் வாய்ந்த நெறியாளன் எழுத்துருவை அப்படியே ஒப்புவிப்பவன் அல்ல. எழுத்துரு ஒரு சிருஷ்டியாயின் எழுத்துருவின் அவைக்காற்று வடிவம் இன்னுமொரு சிருஷ்டியாகும். ஆற்றல் வாய்ந்த நெறியாளனான தாசிசியஸ்யின் நெறியாள்;கையில் கந்தன் கருணை எழுத்துரு இன்னொரு வடிவம் பெற்றது.

தாசிசியஸ்

தாசிசியஸ் நவீன நாடக நெறிமுறைகளை நன்கு அறிந்த ஓர் நெறியாளன். மக்கின் ரடயரிடமும் ஜராங்கனி சேரசிங்காவிடமும் பயிற்சி பெற்றவர். நவீன சிங்கள நாடகக் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டவர். ஆங்கிலநாடக ஈடுபாடுமிக்கவர். மரபுவழிக்கூத்தில் சிறப்பாக யாழ்ப்பாணக்கூத்தில் அபிமானமும், காதலும், பாண்டித்தியமும் உடையவர். நாடகஉலகில் நல்ல பல நாடகங்களை மேடையேற்றி நல்ல பெயர் பெற்றிருந்தார். மரபுவழிக் காத்தான் கூத்தினுக்குள் புதியகருவை நெல்லியடி அம்பலத்தடிகள் புகுத்தி கந்தன்

கருணையை உருவாக்க அதனை நவீன நாடகவடிவத்துக்குள் கொண்டு வந்தார். தாசிசியஸ அவர் பழைய நாடகத்தை விடபல மாற்றங்களைச் செய்தார்
.
பழைய கந்தன் கருணை சுண்;டிப்பாக ஆட்களை இனம் காட்டியது. தாசிசியஸ் அதை மாற்றி மனிதப்பொதுமைப்படுத்தினார். கோயிற்போராட்டத்தை அசுரர்களுக்கும் பக்தர்களுக்கும் நடக்கும் போராட்டமாக்கினார். கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை மறித்து அடாவடித்தனமும், பலாத்காரமும், அடக்குமுறையும் பாவிப்போர் அசுரர்கள். கோயிலுக்குள் நுழையப் போராடும் மக்கள் பக்தர்கள். முருகன் பக்தர்களிடம் தான் இறுதியில் தனது சக்தி வேலைக் கொடுக்கிறார்.

மேடை அசைவுகள்

மேடை அசைவுகளில் அவர் செய்த மாற்றங்கள் பிரமாதமானவை. முருகனும் நாரதரும் ருஉ யிலிருந்து னுஉக்கு அசையும் முறைமை, பக்தர்களும் அசுரர்களம் மோதும் இடங்கள் ஆட்டக் கோலங்கள் கந்தன் நாரதர் அசுரர்களின் மேடை அசைவுகள் என்பன கணக்காகத் திட்டமிடப்பட்டன.

திரையை அடிக்கடி திறந்து மூடாது ஒரே காட்சியில் அனைத்து நிகழ்வுகளையும் மேடைக்குள் கொணர்ந்தார். (பழைய கந்தன் கருணை அடிக்கடி திரை திறந்து மூடிய நாடகமாகும்.) நெல்லியடி அம்பலத்தடிகளின் கூத்து காத்தான்கூத்து மெட்டில் மாத்திரமே அமைந்திருந்தது. தனது புதிய கந்தன் கருணையில் அவர் ஏனைய இசைகளையும் இணைத்தார். பழைய கந்தன் கருணை துள்ளு நடையில் மாத்திரம் அமைய தாசிசியஸ் தாம் தயாரித்த கந்தன் கருணையில் மட்டக்களப்பில் வடமோடி ஆட்ட முறைகள், கண்டிய நடன அசைவுகள் யாழ்ப்பாண கிறிஸ்தவக் கூத்து அபிநங்கள் என்பவற்றைப் புகத்தி அதனை ஈழத்துத் தமிழ்க் கூத்துச் சாயலுடையதாக்கினார்
.
கந்தனாக நான், பக்தர் தலைவனாக பத்தண்ணா
அனைத்துத் திறமைகளையும் ஒன்றிணைத்தமை தாசிசியஸ்யின் தனித் திறமை. கந்தன் கருணையில் கந்தனாக என்னை நடிக்கம் படி தாசிசியஸ் கேட்டுக் கொண்டார். அது தாசிசியஸ்யின் தனி முடிவானாலும் அதில் சுந்தரலிங்கம் சிவானந்தன், இளையபத்மநாதன், கந்தசுவாமி ஆகியோரின் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன

. இளைய பத்மநாதன் பக்தர்களின் தலைவர். நாடகத்தில் அவரொரு முக்கிய போராளி. மறைந்த ந.சிவராஜா அசுரர்களுள் முக்கிய தலைவர். திவ்வியராஜா (இன்று கனடாவில் இருக்கிறார்.) பக்தர்களில் ஒருவர். பாலேந்திரா (அவைக்காற்றுக் கலைக்கழக ஸ்தாபகர் லண்டன்) பக்தர்களுள் ஒருவர் மறைந்த இ.சிவானந்தன். பக்தர்களில் ஒருவர் முத்துலிங்கம். (ஆங்கில ஆசிரியர் மாலைதீவு) நாரதர்.
இவர்கள் தான் இப்போதைக்க ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

நாடக ஒத்திகைகள்

நாடக ஒத்திகை வெள்ளவத்தை சீ. அவனியூவிலுள்ள ஒரு வீட்டிலும், நான் வெள்ளவத்தை பாமன் கடையில் தங்கியிருந்து பி.பி.வி. சுந்தரலிங்கத்து வீட்டு மொட்டை மாடியிலும் நடைபெறும். ஒத்திகைக்கு அனைவரையும் கூடுவோம். தாசிசியஸ் மேடை அசைவுகள் படம் கீறி விளக்குவார். அவர் கற்பனைக்குள் இருக்கும் கந்தன் கருனையை நாம் புரிந்து கொள்வோம். சுந்தரலிங்கம், சிவானந்தன், இளையபத்மநாதன், முத்துலிங்கம் நான் கூறும் ஆலொசனைகளை தாசிசியஸ் உள்வாங்கிக் கொள்வார். தாசிசியஸ் தலைமை தாங்க ஒரு கூட்டுப் பொறுப்புடன் கூட்டுத் தயாரிப்பாக கந்தன் கருணை உருவாகிக் கொண்டு வந்தது.

நடிகர்கட்கு வடமோடி ஆட்டங்கள் பழக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது. காத்தான் கூத்துப் பாடல் பழக்கும் பொறுப்பு இளைய பத்மநாதனிடம் தான் கற்ற ஓரிரு கண்டிய நடன அசைவுகளை முத்துலிங்கமும், தாசிசியரும் பயிற்றுவித்தார்கள். ஒரு மாத காலத்திற்கு மேல் கடுமையான பயிற்சி தனிப்பட்ட முறையில் சிவானந்தனும் பாலேந்திராவும் இளையபத்மநாதனும் இன்னும் சில இளைஞர்களும் வெள்ளவத்தையில் பாமன் கடையில் நான் வசித்த வீட்டில் வந்து ஆட்டம் பழகினர். தாசிசியஸும் என்னிடம் பழகியதாக ஞாபகம்
.
பெண்களின் பங்களிப்பு

அற்புதமான காலங்கள் அவை. கொள்கை ஒருமையும் முற்போக்கு எண்ணமும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் துணிவும் கொண்ட திறன் மிகுந்த ஓர் இளைய குழாம் ஒன்றிணைந்து ஈழத்துத்தமிழ் நாடக உலகை தம் தோள்களிலே சுமந்தகாலம் அது.

தாசிசியஸின் மனைவி விமலா (இப்போது லண்டனில்) கந்தசுவாமியின் மனைவி பார்வதி (இப்போது கனடாவில்;) சிவாநந்தத்தின் மனைவி முத்தாச்சி.(இப்போது வன்னியில்) எனது துனைவியார் சித்திரலேகா. (இப்போது மட்டக்களப்பில்) இன்னும் ஜெஸி, (தாசிசியஸின் தங்கை) பெயர் ஞாபகம் வராத பல பெண்கள். இந்நாடக இயக்கத்தில் இணைந்திருந்தனர்.

ஆலோசனைகள் வழங்கினார். பக்கபலமாக நின்றனர். விமர்சனம் செய்தனர். உற்சாகம் ஊட்டினர். நாடகக் கொம்யூனாக நாம் வாழ்ந்த காலமது.

அப்போது அனைவரும் இளம் வயதினர். அனைவரும் மணமான புதுத் தம்பதிகள். பார்வதியும் முத்தாச்சியும் விமலாவும் கொண்டுவரும் பலகாரங்கள், சாப்பாடுகள், குளிர்பானங்கள் நடிகர்கட்கு பெரும் உற்சாகம் அளிக்கும்

வடமோடிக் ;கூத்தாட்ட்திற்கு ஒத்துழைக்காத உடம்புகள்
வடமோடிக் கூத்தினை நடிகர்கள் அனைவருக்கும் பழக்க நான் எடுத்த கடும் முயற்சிகள் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றன.

ஆடுவதற்கு உடம்பு ஒத்துழைக்காத சிலருக்கு ஆட்டம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஆட்டத்தை தன் வயப்படுத்த சிவானந்தன் எடுத்த அரும் முயற்சிகளை பகிடியுடனும் வியப்புடனும் நாம் பார்த்தோம். நா. சுந்தரலிங்கத்தின் கிண்டல்களும் பகிடிகளும் சிரிப்பொலி கிளப்பும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் நாடகம் உருவாகியது. கந்தன் தெய்வயானையும் தேவ உலகில் இருத்தல் நாரதர் வருகை பின்னர் நாரதர் கந்தனுடன் வானவீதி வழியாக இலங்கை வரல் மாவிட்டபுரக் கோயிலுக்கு முன் பக்தர்கள் நிற்றல். காவடியாட்டம்.

பக்தர்கள் அசுரர்கள் போர், கந்தன் நாரதர் உரையாடல், கந்தனை அசுரர்கள் தடுத்தனர். பின் கந்தன் உக்கிரமான ஓர் ஊழித் தாண்டவம் ஆடி சக்தி வேலை பக்தர்களிடம் தருதல் என்ற வகையில் தாசிசியஸ் நாடகத்தை அமைத்திருந்தார்.

தாசிசியஸுடன் வேலை செய்வது நல்ல அனுபவமாகவிருந்தது.

ஏற்கனவே பேராசிரியர்களான வித்தியானந்தன், சிவத்தம்பி, கைலாசபதி ஆகியோரின் கீழ் நாடகப் பயிற்சிகளைப் பெற்றும் இணைந்தும் தனியாகவும் நாடகங்களைத் தயாரித்த எனக்கு தாசிசியஸியின் முறைமை புதமையாகவும் வித்தியாசமாகவும் தெரிந்தது.

மரபுவழி நாடகமொன்றை எவ்வாறு நவீனமாக மேடையில் அளிக்கை செய்யலாம் என்பதை நான் தாசிசியிடம் கற்றுக் கொண்டேன். நான் தாசிசியிடம் கற்றவை அதிகம்

அபாரமான கற்பனைத்திறன் வாய்ந்தவர். தாசிசியஸ் படீர் படீர் என கற்பனை பண்ணுவார். மாற்றி மாற்றி அசைவுகளை அமைப்பார். அது அவருடன் கூட வேலை செய்பவர்களுக்குச் சிரமம் தரினும் ஒரு கலைஞனின் குணாம்சம் அது. ஒன்றை உருவாக்கும் போது எழுதி அழித்து எழுதி அழித்து திருப்தி வரும்வரை எழுதி அழித்து முழுமை காணும் வரை உழைப்பதுதான் உண்மைக் கலைஞனின் இயல்பு.
அக்கலைஞனின் முயற்சியினை நான் தாசிசியஸ்யிடம் கண்டேன்.

இளைய பதமநாதனின் பாடல்

இளையபத்மநாதன் அழகாகப் பாடுவார். உச்சக் குரல் அவரது வடமோடி ஆட்டத்தை நான் பழக்குகையில் அதனை உள்வாங்கி அவர் அசைந்து வருவதும் தாசிசியஸ் வடிமோடி ஆட்டத்தை உள்வாங்கி ஆடி வருவதும்மிக அழகாக இருக்கும். பத்மண்ணாவின் குரலை நாம் அனைவரும் ரசிப்போம். எனது ஆட்டத்தை அவர்கள் வியப்பார்கள். இவ்வண்ணம் அனைவரும் தம்மிடம் இருந்த திறமைகளை ஆளுக்கு ஆள் முழு நிறைவோடும், மகிழ்வோடும் பகிர்ந்தும் மற்றவரிடமிருந்து எடுத்தும் வளர்ந்த காலங்கள் அவை.

தாசிசியஸ் என்னிடம்
"மௌனகுரு நாடகம் படிப்படியாக உச்சம் நோக்கிச் செல்கிறது. உச்சத்தின் உச்சமாக கந்தனின் ஊழியத் தாண்டவம் அமைய வேண்டும். ஊழித் தாண்டவத்தின் உச்சத்தில் வேலாயுதத்தை போராடும் பக்தர்களின் கையில் கந்தன் கொடுத்து அவர்களைப் போராட்டம் பண்ணவேண்டும் அதன் உச்சமாக ஆயுதம் கையில் ஏந்திய மக்கள் மக்கள் முழு உணர்வுடன் கொடுமைகளின் குறியீடாக அடைத்துக் கிடக்கும் கோயிற் கதவுகளை உடைத்து ஆயுதபாணியாகச் செல்ல வேண்டு" மென்று நாடகத்தினுடைய தனது நோக்கத்தையும் நாடகக் கட்டமைப்பையும் எனக்கு விளக்கி அந்த நடன அமைப்பை உருவாக்கும் பொறுப்பை என் சுதந்திரத்திற்கே விட்டிருந்தார்.

கந்தனின் உக்கிர தாண்டவம்

இரண்டு நாள் சிந்தனை - இரண்டு நாள் பயிற்சி எடுத்த பின்னர் தத்தகிட தத்தகிட தத்தகிட தீம் தீம் என்ற தாளக் கட்டுடன் அமைந்த பொடியடி, நாலடி, எட்டடி, பாய்ச்சல் என்ற வடமோடி ஆட்டமுறைகளைத் தொகுத்து நான் உருவாக்கிய கந்தனின் ஊழித் தாண்டவ ஆட்டத்தை நான் தாசிசியஸுக்கு ஆடிக் காட்டிய போது தாசிசியஸ் என்னைப் பார்த்த அந்த திருப்தியான பார்வை, தாசிக்கேயுரிய ஒரு சிரிப்பு. அந்த ஆட்டத்தில் தாசிசியஸ் தோய்ந்து நின்ற விதம் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

நாடகம் மேடையேறிய போதெல்லாம் இக்கடைசிக் காட்சி கரகோஷம் பெற்றது. நாடகத்தில் அக்கடைசிக் காட்சி மிக உச்சமாகயிருந்ததாக நாடகம் பார்த்த பலர் அபிப்பிராயப்பட்டனர்.

நாம் உருவாக்கிய அந்த ஆட்டம் நாடகத்தின் உச்சத்திற்கு உதவியதாயினும் தாசிசியஸியின் திட்டமும் கற்பனையும் தான் அந்த ஆட்டத்திற்கு அடித்தளமாகும். தாசிசியஸியிடம் நிறைந்த கற்பனை இருந்தது. ஆனால் அதனை வெளிக்கொணரத் திறன் வாய்ந்த கலைஞர்கள் இன்மைதான் அன்றைய துயரம். தாசிசியஸுக்கு மாத்திரமல்ல பிரச்சினை. அன்றைய சிறந்த தமிழ் நாடகத் தயாரிப்பாளர் அனைவரும் இப்பிரச்சினையை முகம் கொண்டனர். தொழிற் தேர்ச்சியும் திறமை மிக்கதாக நமது சிங்களச் சகோதரக் கலைஞர் இருக்க நாமோ அமெச்சூராக அன்றியிருந்தோம். இதனாலேதான் தமக்கு ஒரு மாத கடும் பயிற்சி தேவைப்பட்டது.

விக்கிரகம் இல்லாத கோயில்
கோயில் இல்லாத விக்கிரகம்

பயிற்சி அற்றேராகவும் கருத்து மிக்கோராகவும் நாமிருந்தோம். கருத்துச் செழுமை இல்லாதவராகவும் பயிற்சி உடையராயும் சிங்கள நாடக உலகினர் இருந்தனர் பேராசிரியர் சிவத்தம்பி கூறியபோல

எமது நாடகம் கோயில் இல்லாத விக்கிரகம் போலிருந்தது. அவர்கது நாடகம் விக்கிரகம் இல்லாத கோயில் போலிருந்தது

எங்களிடம் விக்கிரகம் இருந்தமைக்குக் காரணம் நாடகத்தை நாம் சமூக மாற்றத்திற்குரியதொரு சக்தியாக வளர்த்து எடுத்தமைதான்.

நவீன நாடகம் என்ற வகையில் நவீன ஒளியமைப்பு, இசையமைப்பு, ஒப்பனை என்பனவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அசுரர்கள் பக்தர்கள் மோதலில் பறையும் உடுக்கும் மாறிமாறிப் பயன்படுத்தப்பட்டன. மிருதங்கம,; வயலின், ஆர்மோனியம், டோல்சி என்பன பயன்படுத்தப்பட்டன.

ஒளியமைக்கும் பொறுப்பினை நா.சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றிருந்தார்கள் நாடக ஓட்டத்திற்கு இயைய ஒளியமைப்பு இணைந்திருந்தது. உணர்வுகளைத் துலக்கமாக காட்ட நிழலொளிகள் பயன்படுத்தப்பட்டன. பாத்திரங்களையும் நிகழ்வுகளையும் துல்லியமாகக் காட்ட ஒளி மெட்டுக்கள் பயன் படுத்தப்பட்டன.

தாசிசியஸ் நெறியாள்கை

தாசிசியஸ் நாடகத்தையும் நிகழ்வுகளையும் அமைத்த விதம் அற்புதமாகவிருந்தது. (அவை தனியாக எழுதப்பட வேண்டியவை.)

கந்தனும் நாரதரும் தேவயுலகில் இருந்து புறப்பட்டு வான வீதி வழியாக

யாழ்ப்பாணம் நோக்கிச் செல்வோமே - நாங்கள்
யாருக்கும் அஞ்சமாட்டோமே
என்று பாடியபடி செல்லும் பாடலும்

அசுரர்கள் சூழ்ந்து கொண்டு நின்று

கந்தனாம் கந்தன் - இவன்
எங்கத்தைக் கந்தன்

என்று பாடிப் பாடி ஆடும் காட்சியும் இறுதிக் காட்சியில் மேடை முழுவதும் சூழன்று ஆடியபடி அதே வேகத்தில் வந்து கந்தன்

தந்துவிட்டேன் நான் தந்துவிட்டேன் - அன்
தந்த சக்தி வேலைத் தந்துவிட்டேன்.

என்று உச்சாடனத் தொனியில் கூறி வேலை பக்தரிடம் கொடுப்பதும் தாசிசிஸிய காட்சிகளைச் சுவைபட அமைத்தமைக்குச் சில உதாரணங்கள் இப்பாடல்களும் காட்சிகளும் இந்நாடகத்தை பார்த்தவர்களின் வாயிலும் மனதிலும் நீண்ட நாட்கள் இருந்ததாக பின்னர் அறிய முடிந்தது.

கந்தன் கருணை மேடையேற்றங்கள்

இக்கந்தன் கருணையை நடிகர் ஒன்றியம் பம்பலப்பிட்டி சரஸ்வதி அரங்கிலும் பேராதனைப் பல்கலைக்கழக திறந்த வெளியரங்கிலும் மேடையிட்டது. அங்கெல்லாம் பலத்த வரவேற்பை பொது மக்களிடம் இந்நாடகம் பெற்றது. புதிய பல நண்பர்கள் அறிமுகமாகினர்
.
நடிகர் ஒன்றியத்தின் கந்தன் கருணையை பார்க்க நெல்லியடி யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்து பலர் கொழும்பு வந்திருந்தனர். நாடகத்தை ரசித்த அவர்கள் இக்கந்தன் கருணையில் அழகியற் தன்மை அதிகம் இருந்ததாக விமர்சனம் வைத்தனர். கலை என்பதில் அழகு இருப்பது மிக அவசியமான ஒன்றுதானே.

1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி கந்தன் கருணையை மீண்டும் தயாரித்தது. தாசிசியஸ்ஸே அதனை நெறியாக்கம் செய்தார். றேமன் கந்தனுக்கு நடித்தார். றேமனுக்குச் சில அபிநயங்களைப் பழக்கும்படி தாசிசியஸ் என்னிடம் வேண்டிக் கொண்டார். அப்போது நான் யாழ் பல்கலைக்கழகத்தில் புதியதொரு வீடு பழக்கிக் கொண்டிருந்தேன். தாசிசியஸ்ஸை அங்கு வந்து எமது மாணவர்களுக்குப் பல பயிற்சிகள் கொடுக்குமாறு நாம் வேண்டிக் கொண்டோம். அதற்கிணங்க தாசி வந்து உதவி புரிந்தார்.

மாணவர் நிறைந்த பயன் பெற்றனர். பிரான்சிஸ் ஜெனம், லோகேஸ்வரன், வஜயன் போன்ற சிறந்த கலைஞர்கள் நாடக அரங்கக் கல்லூரியில் கந்தன் கருணைத் தயாரிப்பில் பங்கு கொண்டனர். (இந்நாடக அரங்கக் கல்லூரி சங்காரத்தையும் 1983 இல் மேடையேற்றியது. அதை நெறியாள்கை செய்யும் பொறுப்பையும் ஆட்பலத்தையும் எமக்கு அளித்தது. யாழ்ப்பாணத்தில் அம்மேடையேற்றம் பெருவெற்றி கண்டது
.
பேசப்படக் காரணம்

சங்காரமும்,கந்தன்கருணையும ஈழத்துத் தமிழ் நாடக மரபில் தூக்கியெறிய முடியாத கேள்விக் குறிகளாக நிற்கும் இரண்டு நாடகங்கள் அவற்றை நெறியாண்ட நெறியாளர்களின் திறமை, அந்நாடகங்களின் அவைக்காற்று முறைமை அழகியற் திறமை என்பனவற்றிக்கெல்லாம் அப்பால்

அவை சமூகம் பற்றி எழுப்பும் வினாக்களும் விமர்சனமும் உன்னதமான உலகை நோக்கிய அவற்றின் தூர நோக்குதலுமே இவ்விரண்டு நாடகங்களும் இன்னும் பேசப்பட்டு வருவதற்கான காரணங்களாகும்.

No comments: