Wednesday, May 01, 2013

சபாலிங்கம்

-
-ந.சுசீந்திரன்-
[1994 ஆம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி ச. சபாலிங்கம் அவர்கள் பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிசில் அவரது இல்லத்தில் வைத்து புலிகளின் கொலைப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 12.05.1994 இல் சபாலிங்கத்தின் உடல் எரியூட்டப்பட்டது. அன்றைய தினத்தில் இறுதி அஞ்சலிக்காக மயானதில் சுமார் 500க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். அங்கு நடந்த மயான இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் ந.சுசீந்திரன் ஆற்றிய உரை.] 

காலத்தின் சாட்சிகளை அழித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் எழுதப்போகும் எங்கள் வரலாற்றை வாசிக்க இறுதியில் யார் இருக்கப் போகின்றார்கள்? தொடர்ந்தும் துப்பாக்கிகளின் கீழ்ப்படிவின் முன்னினையில் வரலாற்றைப் படிக்கவும் பாடமாக்கவும் சாம்பல் மேடுகளும் எலும்புத்தோட்டங்களும்…! இன்னும் போதாதா உங்களுக்கு? 

தின்ற மண்ணில் அவன் செத்து, அவன் அழைந்த புழுதியில் அவனது குருதியோடி, அவன் அலம்பியதண்ணீரில் அவன் அஸ்தி கரைந்து போவதை தடுத்துவிட மட்டும் உங்களால் இன்று முடிந்திருக்கின்றது. இவன் பதித்த தடயங்களை உங்கள் துப்பாக்கிகள், துர்ப் பாக்கிகள் ஒன்றும் செய்துவிடமுடியாது. மாற்றுக் கருத்தின் சிறு பொறிகளைக்கூட கண்டு குலை நடுக்கங் கொள்ளும் கோழை எப்போதுமே கொடூரமானவனாகத்தான் இருப்பான். 


சரித்திரங்ளை அழித்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள்! நியாயங் கேட்கவும் அழிப்பின் தடயங்களைத் தேடவும் உங்களால் ஒடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும் ஒரு சிறுபான்மை இருந்துகொண்டே இருக்கும். உண்மை என்பது வெட்ட வெட்டத் தளைவது. நீங்கள் சுடச் சுடத் துலங்குவது. எங்களை அழிக்கும் வரை, எங்கள் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் இவர்கள் வருவார்கள். ஒரு றிடாச் டி சொய்சா வருவான். ராஜனி திராணகம வருவாள்; சபாலிங்கம் வருவான். இன்னும் இன்னும் முகந்தெரியாத சிறுவர்களும் முகவரி இல்லாத மனிதருங்கூட இன்னொன்று சொல்ல வருவார்கள். உங்களைத் தொந்தரவு செய்ய வருவார்கள். உங்களாற் கொல்லப்பட வருவார்கள், வருவார்கள், வருவார்கள்! 

மே மாதம் பத்தாம் நாளில் தான் ஜெர்மனியின் நாசிகள் தமக்கு விரும்பாத அறிவாளிகளின் நூல்களை எரித்தார்கள், தம் பெருங் கருத்துக்கு எதிரான புத்தகங்களை அள்ளித் தீயிலிட்டார்கள். அறிவும் மனிதரும் அழிந்தா போயினர்? இல்லை! இப்படித்தான் இவனைக் கொன்றதால் இன்னொரு பிரதியீடு இல்லாமலா போய்விடும்? சிலவேளை இல்லாமலே போய்விடவுங் கூடும். ஆனால் இந்தப் புகலிட வாழ்வின் அர்த்தமுள்ள காலத்திற்குள் நீ கரைந்திருக்கின்றாய் சபாலிங்கம்! அதற்கொரு பிரதியீடும் தேவையில்லை. புத்தகங்கள் சாட்சி சொல்லும்! புதுக்காலமொன்று நும் இறுதி சொல்லும். 

உங்கள் பயத்தினைக் கண்டு நாம் வலிமை பெறுகின்றோம். அச்சுறுத்துவதற்கும் உயிர் கொல்லும் கோழைகளே – மூளை முழுவதும் வெடிமருந்து அடைத்து வைத்திருக்கும் முட்டாள்களேஇன்று இவன், நாளை நான், அதற்கடுத்து இன்னொருவன் என்று கொன்று விடுவதால்நீங்கள் அதிகமாக ஒன்றும் பெற்றுவிடப் போவதில்லை. உணருங்கள்! உங்கள் பயத்தில் நாம் வலிமை பெறுவோம். மண்ணை , மனிதரை, விடுதலையை, நேசிக்கத் தெரிந்தவர்களிடம் பொறாமை கொள்ளும் உங்கள் போக்கை உலகம் என்றோ கண்டு, உங்கள் இறுதியை ஏற்கனவே எழுதிவைத்து விட்டது! எண்ணப்பட்டுக்கொண்டிருக்கும் நாட்கள் சபாலிங்கம் போன்ற தனிமனிதர்களினதல்ல. உங்கள் துப்பாக்கிக் கலாசாரத்தினதும், அதிகார ஆணவத்தினதும்நாட்களுந்தான். 

என் குழந்தையும் இவன் குழந்தையும் துள்ளி விளையாட ஒரு முற்றம் தேவை.பாலகரைப் போருக்கனுப்பிய வீரமா பேசுகிறாய் என்னருமைத் தமிழே? எவனோ உன்னை அடக்குவதற்காய் பாணந் தின்ற நெஞ்சு கண்டு பரவசமடைந்த தாயே, என் குழந்தையும் இவன் குழந்தையும் துள்ளிவிளையாட ஒரு முற்றந் தேவை; துவக்குகளுடன் ஒருவரை ஒருவர் சுட்டு மடிந்து மானுடத்தை மாய்ப்பதற்கல்ல, மாறாக இளமையின் யவ்வனங்களை இவர்கள் பெறவேண்டும். இன்று கோமதியின் வாழ்வை அழித்தீர்கள்; குழந்தை சேயோனின், அந்த இளங்தளிரின் யவ்வனந்தை அழித்தீர்கள். இவர்கள் மட்டுமா இன்னும் எத்தனை பிஞ்சுகளின்….! 

இந்தத் தளிர்களின், இந்தத் தாய்களின், இந்த மனைவியரின் மௌனங்கள் பேசும் நாளொன்று தோன்றும். ஐரோப்பாவில் வளர்ந்து வரும் நிறவெறியா இவனைக் கொன்றது? புதிய நாசிகளா இவனைக் கொன்றார்கள்? பெரும்பான்மைத் திமிர்வெறியில் தமிழரை அழித்து வரும்இலங்கை அரசா இவனைக் கொன்றார்கள்?

இல்லை! இல்லை! சபாலிங்கம் ஒருகால் அடைக்கலம் கொடுத்த புலிகளே இவனைக் கொன்றார்கள். என்னே அவலம்! இந்த எல்லா அவலத்தின் காயங்களும்நிரந்தரமாக ஆறிவிடவேண்டும்! ஆறிவிடவேண்டும்!

No comments: