-மெலிஞ்சி முத்தன் -
ஈழத்துக் கூத்தில் தென்மோடி,வடமோடி,காத்தவராயன், பேய்க்கூத்து, வசந்தன் கூத்து என்று பலவகைக் கூத்துகள் இருந்தாலும். நான் இங்கு பேசுபொருளாகக் கொண்டிருப்பது ‘தென்மோடிக் கூத்து’ என்ற வகையிலான கூத்தையும், அக்கூத்தின் சமூகப் பின்னணி பற்றியுமேயாகும்.
தென்மோடிக் கூத்தினை இன்று பெரும்பாலும் கடலோரப் பகுதிகளிலேயே காணக்கூடியதாக இருக்கின்றது மாதகல், மெலிஞ்சிமுனை, பாசையூர், குருநகர், நாவாந்துறை, சில்லாலை, போன்ற இடங்களில் ஆடப்படும் இக்கூத்து ஒவ்வொரு கிராமத்திலும் வித்தியாசமான பாங்கினைக் கொண்டதாகவே இருக்கின்றது,
தென்மோடிக் கூத்தும், கத்தோலிக்கமும், மீனவ சமூகமும் அவற்றுக்குள்ளான உறவுப் பின்னலும் பல சமூகப் பழக்கவளக்கங்களை வைத்தே இனங்கண்டு கொள்ளலாம். பெரும்பாலும் மீனவசமூகங்களில் ஆலயம் என்பது ஒரு கலாச்சார மையமாகவே இயங்குகின்றது. ஆலயத் திருவிழாக் காலங்களில் அரங்கேற்றப் படுகின்ற கூத்திற்கான பணத்தினை கிராமத்துத் தொழிலாளரின் ஒருநாள் உளைப்பினை எடுத்தோ, அல்லது கோயில் சபையிடம் இருந்தோ எடுத்துக் கொள்வார்கள். மேலதிகமாக ‘பணக்கூத்து’ என்ற பெயரில் கூத்து அரங்கேறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்பான ஒருநாளில் ‘அரைச்சோடினை‘ கட்டி நிகழ்த்துவர். இப் பணக்கூத்தில் செய்யப்பட்டிருக்கும் காசுமாலையை நடிகர்களின் கழுத்துகளில் போடுவதற்காக சபையோருக்கு விற்பர். இக் காசுமாலை சிலருக்கு கல்யாண மாலைக்கான அச்சவாரமாகவும் இருந்திருக்கிறது.
தென்மோடிக் கூத்தின் மிகப் பழய கூத்தாய் ‘புனிதவதி’ கூத்து கருதப்பட்டாலும் நுட்பங்கள் நிறைந்த கூத்தாய் ‘தேவசகாயம்பிள்ளை’ கூத்தினையே காணக்கூடியதாக இருக்கின்றது. தேவசகாயம் பிள்ளை கூத்தினை எழுதிய புலவர் அராலியை சேர்ந்த சைவசமயத்தவர் என்றும், அவருக்கு மிக்கேல்சம்மனசானவர் காட்சிகொடுத்து அவரது நாவில் சிலுவை அடயாளம் வரைந்து இக்கூத்தை புனையவைத்தார் என்று ஒரு வாய்மொழிக் கதையும் இருக்கின்றது. புனிதவதி தேவசகாயம்பிள்ளை போன்ற கூத்துகளுக்கு இதற்கு முந்திய கிறிஸ்தவம் அல்லாத தென்மோடிக் கூத்துக்கள் எவையும் கிடைக்காமல் போனதற்கு அப்போதிருந்த கிறிஸ்தவ ஆதிக்கம் காரணமாகக் கூட இருக்கலாம். கிறிஸ்தவ மதம் பரப்புதலின் முக்கிய ஊடகமாக தென்மோடிக் கூத்து எடுத்துப் பாவிக்கப் பட்டதால் அதன் ஆட்டவகைகள் பல தொலைந்து போயின என்கின்ற குற்றச் சாட்டினையும் மறுப்பதற்கில்லை.
இன்னமும் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் தென்மோடிக் கூத்துக்கள் சிலவற்றை இங்கு தருகிறேன்.
1 தேவசகாயம்பிள்ளை 2 – எஸ்தாக்கியார் 3 – விஜயமனோகரன்
4- தேவதாசன்,மரியதாசன், 5- புனிதவதி 6 – பார்போரம்மாள்
7- ஞானசெளந்தரி, 8- கிறிஸ்தோப்பர், 9 – நல்லதங்காள் 10 – செனகப்பு,
11 – பண்டாரவன்னியன் 12 – கட்டபொம்மன் 13- முத்தா மாணிக்கமா,
14 – அனைத்தும் அவரே 15 – சோழன்மகன் 16 – கருங்குயில்குன்றத்துக் கொலை, 17 – ஜெனோவா, 18- நீயொருபாறை , 19 – கண்டியரசன்,
20 கம்பன்மகன், 21- ஊர்சோன்பாலந்தை, 22- மனம்போல் மாங்கல்யம்,
23- தாவீதுகோலியாத்து, 24- பூதத்தம்பி, 25- பிலோமினா 26 செபஸ்தியார்,
27- பிரளயத்தில் கண்டெடுத்தபாலன், 28- யூடிற், 29- அலசு,
30- மதேசுமகுறம்மா, 31- இருசகோதரர்கள், 32 –ஆனந்தசீலன்
33- திருஞானதீபன் 34 நொண்டிநாடகம், 35 - கொல் ஈன்றகொற்றம்
36 – கற்பலங்காரி 37- கிளியோப்பாற்றா,
ஆகியவை என்னால் இத்தருணத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய 37 கூத்துகள்.
இக்கூத்துகளைவிடவும் பிற்காலத்தில் பலகூத்துக்கள் பல அண்ணாவியர்களால் பாடப்பட்டு மேடையேற்றப்பட்டிருக்கின்றன அவை எல்லாவற்றின் விபரங்களையும் என்னால் சேர்த்துக் கொள்ள முடியவில்லை.
நமது மண்ணில் புலமைமிக்க பல அண்ணாவிமார்கள் பல நுட்பங்களை இம் மெட்டுகளுக்குள் செய்திருக்கின்றனர். தென்மோடியின் கல்வெட்டு சிந்தினை நான்கு வகையாகவும், சில பாடல்களுள் ‘அடசொல்’ ‘அடசீர் ‘ வைத்து பாடல்களை எழுதிப் பயிற்றுவிக்கக் கூடியவர்களகவும் இருந்திருக்கின்றனர்.
கூத்துக்கு முக்கிய பங்காற்றிய இவர்கள் பற்றிய பதிவு முக்கியம் என்றாலும் விடுபடல்களுடன் அதனை நான் செய்ய விரும்பவில்லை . இவர்கள் எல்லோரையும் வரிசைப் படுத்திக் கூற முடியாமையால் இவர்கள் பற்றிய அறிமுகங்களை பிறிதொரு கட்டுரையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்.
தென்மோடிக் கூத்துக்களில் வரக்கூடிய இசைமெட்டுக்களில்.
தனிப்பாடல்கள், வேட்டைத்தருக்கள், அரசவரவுதருக்கள், மந்திரி வரவுதருக்கள், கப்பற்ப்பாட்டு, கட்டியகாரன் தருக்கள், சபைதருக்கள், என்பவற்றோடு – காப்புவிருத்தம், வெண்பா, தோடயம், ,கொச்சகதரு, எண்சீர்விருத்தம், விருத்தம், கவி, சந்தத விருத்தம், சந்ததத் தாழிசை, அகவல், ஆசரியம் 1,2, தீட்டுவாசகம், கலித்துறை, கலிப்பா, இசலி, தாழிசை, பரணித்தரு, இன்னிசை- 1,2, வசனகவி, தேவாரம், ஓரிசம், ஒப்பாரி துக்கராகம், காதல், உலா, கல்வெட்டு சிந்து 1,2,3,4, ஆகிய இசைமெட்டுக்களும் இன்று புளக்கத்தில் உள்ளன.
தேவசகாயம் பிள்ளை கூத்தின் பின்னர் வந்த கூத்துக்களின் மெட்டுகளை தேவசகாயம் பிள்ளை மெட்டுக்களின் குறிப்புகளை வைத்தே கண்டுகொள்வதுண்டு. ஆனால் இன்று ஆய்வு செய்யும் பலரும் கர்நாடக சங்கீதத்தின் அளவீட்டுக் கருவிகள் கொண்டு ஆய்வு செய்வது எந்த அளவுக்கு உகந்தது என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. கர்நாடகசங்கீதம், தென்மோடிக் கூத்து ஆகிய இவ்விரண்டுமே இசைகள்தான் என்ற போதிலும் இரண்டின் பின்னணிகளும் வித்தியாசமானவை என்றே எண்ணுகின்றேன்.
கூத்துக்காரர்களிடமும் ஒடுக்கு முறைகளும், கண்டுகொள்ளாமைகளும், ஒதுக்கிவைத்தல்களும் தாராளமாகவே நடந்திருக்கின்றன. பணம் படைத்தவர்களும், ஓரளவு செல்வாக்குக் கொண்டவர்களுமே இன்றைக்கு பலரால் பேசப் படுபவர்களாக இருக்கின்றனர்.
இன்று ஈழத்தின் நாட்டுக்கூத்துச் சக்கர வர்த்திகள் என்று புகழப் படுகின்ற சிலர் ஒரு தேர்ந்த கிராமத்துக் கலைஞனின் முன்னால் தாளத்தை முறித்துவிட்டு அடுத்த வரியை தொடங்கமுடியாமல் நின்ற வரலாறுகளை பதிவு செய்வதற்கு யாரும் இருக்கவேயில்லை. இன்று கிடைக்கக் கூடிய கூத்தின் குறைந்த பட்ச வரலாறும் அதிகார வர்க்கத்தின் கைகளாலேயே எழுதப் பட்டிருக்கின்றது.
கூத்துக்களை ஆய்வு செய்யமுனையும் ஒருவர் இன்று இருக்கின்ற கூத்தை மேலோட்டமாக அணுகுவது அபத்தமானது. ஏனெனில் இன்று இருக்கின்ற அண்ணாவியர் பலர் நடிகமணி வைரமுத்துவின் பாதிப்புக்கோ, அல்லது தியாகராஜ பாகவதரின் பாதிப்புக்கோ உள்ளானவர்களாக இருப்பது அவதானிக்க வேண்டியிருக்கிறது. கூத்தினை மேன்மைப் படுத்துகின்றோம் என்று செய்யப் பட்ட முயற்சிகள் பலவும் அடுத்த கட்டத்துக்குச் செல்லாமற் போனதற்கான காரணமும் இத்தகையதே.
கூத்து அழிந்து போகின்றது என்று பலர் பேசிக்கொண்டாலும் நான் மேற்குறிப்பிட்ட 37 வகையான கதைகளையும் கொண்ட கூத்துக்களை மாறிமாறி வருடாவருடம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அத்தோடு பழங்கூத்தின் மெட்டுக்களின் தன்மை கெடாமல் பாடிவரும் சில கிராமங்களும் இன்று இருக்கத்தான் செய்கின்றன.
இத்தகைய கிராமமொன்றில் நன்கு அவதானித்தால் கூத்துக்களின் பாத்திரங்களின் பெயர்களோடே மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதையும், அவர்களின் பேச்சு வளக்கு, உடல் மொழிகள் பலவற்றிலும் கூத்தின் எச்சங்கள் பலவும் மறைந்து நிற்பதையும் அவதானிக்கலாம். கூத்துக்களின் பாத்திரங்களும் பேரன் பாடியது, தந்தைக்கும், தந்தைபாடியது மகனுக்கும் என்று சந்ததி, சந்ததியாகத் தொடர்கிறது.
கூத்துப்பற்றிய அக்கறையோடு தொடர்ந்து செயலாற்றிவரும் ஒரு அமைப்பு திருமறைக் கலாமன்றம் ஆகும். அத்தோடு மெற்றாஸ்மெயில் என்பவரும், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் சிலரும் ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தம் பிரச்சாரத்துக்கான ஊடகமாகவும் கூத்தினை கையாண்டிருக்கின்றனர். ஆயினும் இந்த முயற்சிகள் எவையும் அடுத்தகட்டத்திற்கு செல்லாமையின் காரணங்கள் சிந்திக்கப் பட வேண்டியவையே.
கூத்துக்கலைஞர்களை கெளரவிக்கும் முகமாக கலாச்சார அமைச்சினால்கலாபூசணம்,கலைமாமணி, கலைஞானவித்தகன்,
கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வளங்கப்பட்டு வருகின்றன. ஆயினும் இது வெறும் உற்சாக மாத்திரையே.
ஒரு அரசகூத்தை மேடையேற்ற இருபதாயிரம் ரூபாயிலிருந்து-முப்பதாயிரம் ரூபாய்வரை செலவாகின்றது. ஆயினும் அனேகமாக மேடையேற்றப் பட்டு வருகின்ற கூத்துக்கள் பலவற்றின் கதைகளும் கூத்து ரசிகர்களுக்கு தெரிந்தவையே. புதியபல பிரதிகளின் வரவும், ஏற்கனவே இருக்கின்ற பிரதிகளை அச்சேற்றலும், நவீன உத்திகளை கதை அமைப்புகளிலும், தொடர்ந்து ஆடல் முயற்சிகளால் மெட்டுகளுக்குள்ளேயே இருக்கின்ற ஆட்டத்தை செழுமைப்படுத்தல்களும் அவசியமானவை. அதற்குப் பதிலாக கர்நாடக சங்கீதத்தின் கலப்பையோ, பரதநாட்டியத்தின் கலப்பையோ செய்தல் முறையற்றது.
2007 ம் ஆண்டு திருமறைக்கலாமன்றம் தென்மோடிக் கூத்து ஆவணம் என்ற பெயரில் வெளியிட்ட ஒலித்தட்டில் 153 மெட்டுக்களை இனங்கண்டிருக்கின்றார்கள். கூத்துத் தொடர்பான முக்கிய வேலையாக அது இருந்தாலும் 153 மெட்டுகளை விடவும் மேலதிக மெட்டுக்கள் இருக்கின்றன.
அந்த மெட்டுக்களைத் தேடும் முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அத்தோடு அந்த ஒலித்தட்டில் பாடப்பட்டிருக்கும் மெட்டுக்கள் பாசையூர் பாடல் முறையை சார்ந்து நிற்பது. அப்பாடல் முறைக்குள் நான் முன்னர் குறிப்பிட்டதுபோல நடிகமணி வைரமுத்துவும், தியாகராஜ பாகவதரும் சேர்ந்து கும்மியடிக்கின்றனர். அப்பாடல் முறையும், மேதாவித்தனம்போல் வெளியே தெரியும் அசைவுகளும் கூத்தின் கனதியை தொலைத்துவிடக் கூடியன.
நமது பாரம்பரியக் கலையாகிய கூத்தினை நவீன கதை, உத்திகளோடு செழுமைப் படுத்துவதற்கான தேடல்களும், பரிசோதனை முயற்சிகளும் செய்யாமல். பழய அரசகூத்து வகைகளை திரும்பத்திரும்ப அதே பாணியில் மேடையேற்றல் என்பது பின்னடைவுகளையே ஏற்படுத்த வழி கோலும் செயலாகும். பழயனவற்றின் உள்வாங்கலோடு புதிய திசைகளை நோக்கி புறப்படுவோம்.
No comments:
Post a Comment